வர்ணம் - சல்லாபம் - ஆதி
மதுரை ஆர் முரளிதர்


முக வண்ணம் கண்டேன்!
கண்ணா! கண்ணா! கண்ணா!
முக வண்ணம் கண்டேன்!
மனம் முகிலாய் அலையுதடி!
முரளிதரனின் முக வண்ணம் கண்டேன்!

அக வண்ணம் எல்லாம்,
அவன் வண்ணமாய் ஆனதே!
அல்லலும் மீறுதே!
இதை அவன் அறியானோ!

இக பர சுகம் எல்லாம்!
இனி வாழ்வில் இனிமையோ!
ஈடில்லா கீதை தன்னை அருளிய,
கண்ணனை கண்ட பின்னே!

ஜகம் இயங்கிடவே ஈரேழு உலகையும்,
திருவாய் திறந்து காட்டினான்!
அம் மாயவனைக் காண,
மனம் துடிக்குதடி!

முக வண்ணம் கண்டேன்
மனம் முகிலாய் அலையுதடி!

நோக்கும் இடம் எங்கும் அவனே!
நீக்கமற நிறைந்து விட்டான்!
ஊக்கம் இழந்தேனடி!
ஈர்க்கும் மதி முகம் தனை!
பார்த்த நாளாகவே!
தூக்கம் தொலைத்தேனடி!
ஆக்கம் இழந்தேன்,
நோக்கம் மறந்தேன்,
ஏக்கம் மிகுந்தேன்!
பேச்சினில்,பேதை என் மூச்சினில்
கலந்தவனை, என் அகம் மலர்ந்தவனை,
கோகுலம் வளர்ந்த வாசுதேவனை!

முக வண்ணம் கண்டேன்!
மனம் முகிலாய் அலையுதடி!

மடல் விடுத்தேனடி!
கண்ணன் செவி மடுத்தானில்லை! தோழி!
மடல் விடுத்தேனடி!

வேணு கானம் தன்னில்
உளமும், உயிரும், உருக!

மடல் விடுத்தேனடி!
கண்ணன் செவி மடுத்தானில்லை! தோழி!

இள மாமயில் நடமாடிடும்
ஒரு மாலையில்!
இதமாய் வரும் தென்றலில் மகிழ்ந்து!
பதமாய், பல விதமாய், என் உளமாய்!
அவன் முக மாமலர் காண விழைந்தேன்!

மடல் விடுத்தேனடி!
கண்ணன் செவி மடுத்தானில்லை! தோழி!

வட்ட நிலவொளியில்,
வண்ண ஒளி மீறும்,
நட்ட நடு நிசியில்,
நான் அவளை நோக்க!
கட்டழகன் என் மனம் கவர்ந்தானடி!
தொட்டணைத்தானடி தோழி!
சுற்றி என் வளைக்கரம் பற்றி இழுக்கையிலே!
நெற்றித் திலகம் இதழ்ப் பட்டு இழைந்ததடி!
என்றும் அவன் நினைவு சகியே மறக்கவில்லை!
முற்றும் மறந்தானோ முகுந்தனவன் எனையே!

மடல் விடுத்தேனடி!
கண்ணன் செவி மடுத்தானில்லை! தோழி!