Results 101 to 110 of 138

Thread: Sivaji Ganesan School of Acting

Threaded View

  1. #11
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-50

    நடிகர்திலகம் ஏற்கெனெவே சிறிது மேற்கத்திய பாணியில் திரும்பி பார்,மணமகள் தேவை,அன்னையின் ஆணை படங்களில் ,நடித்திருந்தாலும் ,இந்த படம் நம் கலாச்சார மதிப்பீடுகளை சமரசம் செய்யாமல் மேலை நாட்டு பாணியில் அமைந்த திருப்பு முனை படம்.

    ஒரு பணக்கார வாழ்க்கையை முழுவதும் சுவைத்து அதனுடன் தோய விரும்பும் (ஆங்கிலம்,பியானோ ) ராஜசேகரனை ரத்தமும் சதையுமாக காணலாம்.அடர்த்தி புருவம், ஒழுங்கான சிகை அலங்காரம், உடைகள் என்று ஏழ்மையை உதறி கனவான் போர்வையை உடல்,மனம்,எண்ணம்,எல்லாவற்றிலும் சுமக்கும் ஒருவனை , அந்த உணர்வுகளையும்,எண்ணங்களையும் மற்றோர் மனநிலைக்கேற்ப வெளியிடும் அந்த மென்மையாய் உறுதி காட்டும் குரல் ஜாலம் , நடிப்பை நடைமுறையுடன் இணைக்கும் ஒரு முனை படாமல் பல செயல்களை மனநிலைக்கேற்ப இணைவாகவோ, பேதமாகவோ காட்டி meisner பாணிக்கு இலக்கணம் தருவார்.இந்த படம் அவரின் உலக அளவு தரத்தில் உயர்நடிப்பின் ஒரு சாதனை திறவுகோல் .

    ஆனந்தன் வேலை கேட்டு வரும் இடம், தங்கையின் தலையில் பூ வைக்கும் நண்பனை கண்டு வரும் ஆத்திரம், தொழிற்சாலையில் ஆனந்தன் கூட்டாளிகளுடன் வாக்குவாதம்,தங்கை தோட்டத்தில் ஆனந்தனுடன் பேசி கொண்டிருப்பதை கேள்வி பட்டு ஆத்திரமுற்று பிறகு நடைமுறைக்கு வரும் காட்சி,தங்கையின் வாட்டத்தை அவள் ஆசையை நிறைவேற்றி போக்கும் காட்சி, வீட்டில் செங்கல்வரயனின் அட்டகாசங்களை கண்டிக்கும் போது ஆனந்தன் பரிந்து வருவதால் நிலைமை எல்லை மீறுவதை புரிந்து தணிவது,மீனாக்ஷியம்மாளின் சூழ்ச்சியால் மோதல் போக்கு எல்லை மீறி ஆனந்தனை வேண்டுவது,நண்பர்களுடன் தேர்தலுக்கு நிற்பதை பற்றி பேசுவது,தங்கை வீட்டிற்கு வரும் போது தன்னிலையை சொல்ல மனைவிக்கு தரும் இடம்,பாஸ்கருடனான உரசல் ,பிறகு இதமான அனுசரணை என்று அவர் புதுமை நிறைந்த நடிப்பின் கொடி கதாபாத்திர இணைவுடன்,மற்ற பாத்திரங்களுடன் எதிர்-உடன்-குழப்ப நிலைகளில் ஒரு அதிசய பயணம் நிகழ்த்தும்.

    ஆனந்தன் வருகையை எதிர்பார்த்திருந்தாலும் ,வந்தவுடன் நீ ஒரு பொருட்டில்லை என்று பல பொருள்களில் கவனம் குவிக்கும் அலட்சியம், ஆத்திரம் கலந்த அகந்தை, பென்சில் சீவி கொண்டு பார்க்கும் வன்மம் குரூரம் கொண்ட பார்வை என்ற இந்த தொழிற்சாலை மோதல் காட்சி improvisation என்ற meisner பள்ளி நடிப்புக்கு ஒரு நடைமுறை உதாரணம்.

    தன் விசுவாச ஊழியனின் கழுத்தை நெரித்து தள்ளி ,துப்பாக்கியுடன் கொலை வெறியுடன் சென்று தன் தங்கை தனக்காக காதலை துறக்க செல்லும் பாசத்தில் அந்த கொலை கருவியினாலேயே தன் கண்ணீரை துடைத்து, அதை தூக்கி எறியும் கவிதாபூர்வ நடிப்பு.

    வாராயென் தோழி பாடலில் மலராத பெண்மை மலரும் வரிகளில் ஒரு திருமணமாகாத ஆணின் வெட்கம் (embarassment கலந்த),தன் தங்கை அடைய போகும் இன்ப வாழ்வை நினைந்த நெகிழ்ச்சி,அங்கிருந்து அகல விரும்பும் அவசரம் எல்லாவற்றையும் பத்து நொடிகளில் காட்டும் மேதைமை.

    தங்கை தன் முறிந்த திருமணத்தை பேசும் போது சங்கடத்துடன் சிகரெட்டை பார்த்து (ஒருமுறை வாய் வரை சென்று தவறும்),தங்கையை குற்றம் சாட்டுவது போல அமையாமல் அவர் பேசும் விதம்.

    செங்கல்வரயனை இந்த வீட்டில் இருந்து மரியாதையை குலைக்கும் விதத்தில் நடக்காதே என்று சொல்லும் போது ,ஆனந்தன் குறுக்கிட்டு இதில் தவறில்லை ,வேறு ஏதோ நோக்கத்தில் குத்துவதாக சொல்ல விருப்பமின்றி தணியும் விதம்.

    தங்கையை அவள் கணவன் அடித்தவுடன் நிலைமை மறந்து ஆத்திரத்துடன் பாயும் உணர்ச்சி வேகம் ,பின் தன்னிலை உணர்ந்து ஆனந்தனை சமாதான படுத்தும் பாங்கு (பாசம்,கெளரவம் கலந்த உணர்வுடன் தனித்து பேசும் நேர்த்தி),என் கணவன் கௌரவத்தில் ,உயர்வில் எனக்கு அக்கறை உண்டு ,உங்கள் தங்கை அவள் கணவனுக்காய் பேசுவது போல எனக்கும் உரிமை உண்டு என்று கோரும் மனைவியின் நியாயம் உணர்ந்து ,பாசத்தில் துடித்தாலும் விலகி நின்று மனைவிக்கு உரிமை தரும் கண்ணியம்,தனக்கு நியாயம் சொல்லும் மனைவியின் அண்ணனை , தன் நிலை படி தங்கைக்கு உதவ சொல்லி சீறும் கட்டம்,பிறகு சற்று சோர்வாக வரும் பாஸ்கருடன் குற்ற உணர்வுடன் நியாயத்தை உணர்ந்து அவர் கோரிக்கைக்கு பணிவது, மனைவியுடன் ஓட்ட ஆரம்பிக்கும் கட்டத்தில் நடைபிணமாய் வழியனுப்பும் வேதனை .

    இந்த படத்தில் அவர் நடிப்பை அணு அணுவாக கூறு போட்டு எழுத எத்தனை பக்கங்கள் கொடுத்தாலும் போதாது .ஒவ்வொரு முறை காணும் போதும் புதுமையாய் உணரும் ஒரு புத்துணர்வு கலந்த பிரமை.

    இந்த பாசமலருடன் , இந்த தொடருக்கு தற்காலிக விடை கொடுக்கிறேன். அவர் நடித்த பாத்திர ,பட உதாரணங்களுடன் அனைத்து பொருட்படுத்த தக்க பள்ளிகளின் தாக்கத்தில் ,அனைத்து வகை நடிப்பையும் தந்த ஒரே உலகநடிகர் அவர் மட்டுமே என்று ஓங்கி உரைத்து ,அவர் வாழ்நாள் ஆஸ்கார் பெரும் நாளுக்காக ஆவலுடன் காத்திருப்பேன்.

    முற்றும்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •