CONTINUATION
வடமொழிச் சொற்களின் இன்னொரு வகை தற்பவம் என்று அழைக்கப்படுகிறது. தமிழின் ஒலிக்கேற்பத் திரிந்து ஒலிக்கும் சொற்கள் தற்பவம் என்று சொல்வர். உதாரணமாக, ஹரன் பிரசன்னா என்பதைத் தமிழில் அரன் பிரசன்னா என்று எழுதுவது, ஹரி என்பதைத் தமிழில் அரி என்று எழுதுவது என்று சொல்லலாம். எனவே, இதனுள் ஆழமாகச் செல்லாமல், மேலோட்டமாகக் கிரந்த எழுத்துகளைத் தவிர்த்து எழுதுவது என்று பொருள் கொள்ளலாம். அதாவது, இச்சொற்களைத் தமிழ் என்று ஏற்றுக் கொள்ள முடியும் ஆனால் எழுதும்போது கிரந்த எழுத்துகளை நீக்கியும் எழுதக்கூடிய சொற்கள் எனலாம். கிரந்த எழுத்துகளை நீக்கி எழுதுவதுதான் சரியா? அதைப் பின்வரும் பகுதியில் பார்ப்போம்.
கிரந்த எழுத்துகளும் தமிழ் எழுத்துகளே:
கல்வெட்டுகளின் மூலம் கிடைத்திருக்கும் வரலாற்றுப் பூர்வமானச் சான்றுகளைக் கொண்டு ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் பின்வரும் உண்மைகளை வெளிக்கொணருகின்றனர்:
1. தமிழ் பிராமி எழுத்துகள் அசோகன் காலத்தையொட்டிய பிராமி எழுத்துகள்தான். தமிழ் பிராமி எழுத்துகள் எழுத்தாணியால் ஓலைச்சுவடியில் எழுதப்பட்டபோது வளைவு சுழிவுகள் பெற்று பரிணாம வளர்ச்சியில் வட்டெழுத்தாக ஆனது.
2. பிராமி எழுத்துகளிலும் தமிழ் முற்காலத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அதியமான் நெடுமான் அஞ்சியைப் பாடிய ஔவையார் தமிழ் பிராமி எழுத்துகளில்தான் எழுதியிருப்பார் என்ற முடிவுக்கு வரலாம்.
3. தமிழ் எழுத்துகள் வடநாட்டிலிருந்து வந்த (பிராமி) எழுத்துகளிலிருந்துதான் உருவானவை என்கிற உண்மை சிலத் தமிழறிஞர்களுக்குக் கசப்பாக இருப்பதால், இதை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
4. தமிழ் எழுத்துகளிலிருந்து பிராமி எழுத்துகள் உருவானதற்குச் சான்றுகள் இல்லை. ஆனால், பிராமி எழுத்திலிருந்து தமிழ் வட்டெழுத்து உருவானதற்குச் சான்றுகள் இருக்கின்றன.
5. இப்போது இருக்கும் தமிழ் எழுத்துகள் கிரந்தத்தோடு தொடர்புடையன. கிரந்த எழுத்துகள் ஆறாம் நூற்றாண்டிற்குப் பின்பட்டவை. தென்பிராமியிலிருந்து கிரந்தம் மூலமாக வட்டெழுத்துகள் வந்தன. பிறகு வட்டெழுத்து தமிழ்நாடு முழுவதும் விநியோகிக்கப் பட்டது. ஆனால், பத்தாம் நூற்றாண்டிற்குப் பின் வட்டெழுத்து அழிந்து, கிரந்த எழுத்து பல்லவர் காலத்திலிருந்து அண்மைக் காலம் வரைக்கும் இருந்துள்ளது.
மேற்கண்ட வரலாற்று உண்மைகளை ஆராயவும் பொருள் காணவும் நாமும் கல்வெட்டியலாளராகவோ அறிஞராகவோ இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. மேற்கண்டவற்றிலிருந்து, குன்சாக, தமிழ் எழுத்துகள் பிராமி எழுத்துகளிலிருந்து (வடமொழி எழுத்து) உருவானவை என்றும் கிரந்தத்துடன் ஏறக்குறைய ஆறாம் நூற்றாண்டு காலம் முதல் தொடர்புடையவை என்றும் சாதாரண I.Q. உள்ள எவரும் கூடப் புரிந்து கொள்ள முடியும். எனவே, கிரந்த எழுத்தைத் தமிழ் இல்லையென்று ஒதுக்கினால், மற்றெல்லா தமிழ் எழுத்துகளையும் கூட தென்பிராமி மற்றும் கிரந்தம் ஆகியவற்றின் வழியே வந்தவை என்று சொல்லித் தூக்கி எறிந்துவிட முடியும். ஆனால், தனித்தமிழ்ப் பிரியர்கள் அதைச் செய்யாமல், கிரந்த எழுத்துகளை மட்டும் வடமொழி என்று சொல்லி நீக்கிச் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கிரந்த எழுத்துகளை ஒதுக்கி எழுதுவதுதான் சரியான தமிழ் என்பதற்கு வரலாற்றுபூர்வமாக உண்மையும் இல்லை என்று இதன்மூலம் விளங்குகிறது. எனவே, எதற்காக கிரந்த எழுத்துகளை ஒதுக்க வேண்டும்.
தொல்காப்பியத்திற்குப் பிறகு பல இலக்கண நூல்கள் தமிழில் வந்திருக்கின்றன. அவற்றுள் திவாகரம் (9ஆம் நூற்றாண்டு), பிங்கலம் (10ஆம் நூற்றாண்டு), நன்னூல் (13ஆம் நூற்றாண்டு), உரிச்சொல் நிகண்டு (14ஆம் நூற்றாண்டு), சூடாமணி நிகண்டு (16ஆம் நூற்றாண்டு) ஆகியன குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் பவணந்தி முனிவர் (பவணநந்தி என்ற பெயர் திரிந்து பவணந்தி ஆகியது என்பர்) என்னும் சமணத்துறவியால் பதிமூன்றாம் நூற்றாண்டின் முன்பகுதியில் எழுதப்பட்டதாக கணிக்கப்படும் நன்னூல் மிகவும் புகழ் பெற்றது. "முன்னோர் ஒழியப் பின்னோர் பலரினுள் நன்னூலார் தமக்கு எந்நூலாரும் இணையோ" என்கிற புகழ் பெற்றது நன்னூல். அதாவது, நன்னூல் எழுதப்படுவதற்கு முன்னிருந்த இலக்கண நூல்கள் நன்னூல் வந்தவுடன் முக்கியத்துவம் இழந்துவிட்டன என்னும் அளவிற்கும், நன்னூல் எழுதப்பட்டதற்குப் பின் வந்த இலக்கண நூல்கள் எதுவும் நன்னூலுக்கு இணையாக மாட்டா என்றும் சொல்லும் அளவிற்கும் நன்னூல் சிறப்பு மிக்கது என்று போற்றப்படுகிறது. அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஏ, ஐ, ஒ, ஔ என்பன வடமொழிக்கும் தமிழிக்கும் பொது உயிர் எழுத்துகள். வடமொழியில் மெய்யெழுத்து முப்பத்தேழு. அவற்றுள் க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப, ம, ய, ர, ல, வ, ள என்ற பதினைந்து மெய்கள் வடமொழிக்கும் தமிழுக்கும் பொது எழுத்துகள் என்று நன்னூல் சொல்கிறது. கிரந்த எழுத்துகளை வடமொழி என்று நாம் ஒதுக்குவது சரியென்றால், இருமொழிகளுக்கும் பொதுவான இந்த எழுத்துகளையும் வடமொழி என்று ஒதுக்கிப் புதிதாக ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும். அதுதான் சரியான "தனித்தமிழாக" இருக்க முடியும்.
அதுமட்டுமில்லை, சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி உட்படத் தமிழின் அகராதிகள் கிரந்த எழுத்துகள் கலந்த வார்த்தைகளைத் தமிழ் வார்த்தைகளாகவே கருதி, அவற்றைக் கிரந்த எழுத்துகளைக் கொண்டே பாவித்து, பொருள் தந்திருக்கின்றன. எனவே, கிரந்த எழுத்துகள் தமிழர் வாழ்வில் பின்னிப் பிணைந்தன என்று நாம் அறிய முடிகிறது.
தொகுப்புரை:
"தனித்தமிழ் என்பது தமிழ் இலக்கண நூல்கள் சொல்லுவது; அதுதான் சரியான தமிழ்" என்கிற மாயை நம்மில் பெரும்பாலோரிடையே நிலவுகிறது. எனவே, இக்கட்டுரையில் தமிழ்மொழியின் வரலாற்றுப் படியும், மரபுப் படியும், இலக்கணப்படியும், தனித்தமிழ் தமிழ் அல்ல என்று சான்றுகளுடன் நிறுவ முயன்றிருக்கிறேன். எனவே, இப்போது நமக்கு நல்ல தமிழ் என்பது திசைச்சொற்களும் வடசொற்களும் கலந்து வரக்கூடியதுதான் என்று புரிகிறது. தனித்தமிழ் என்பது வரலாற்று ரீதியாகவும், இலக்கண ரீதியாகவும் எங்கும் பயன்படுத்தப்படவில்லை என்பதும் புரிகிறது. சமஸ்கிருதம்- தமிழில் சொற்றொகுதியை (vocabulary) அதிகப்படுத்த உதவியது என்று சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி சொல்வது போலவே, பிற மொழி திசைச்சொற்களும் சொற்றொகுதியை அதிகப்படுத்த உதவும் என்று நாம் புரிந்து கொண்டால், இத்தகைய வசதிகள் (more than one way to describe a word) மொழிக்கு எவ்வளவு செழுமை சேர்க்கும் என்பதைச் சுலபமாக உணர இயலும். அதுமட்டுமல்ல, சங்ககாலத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டில் தனித்தமிழ் இயக்கம் தோன்றுகிற வரை, தமிழர்கள் எல்லா மொழிகளிலும் உள்ள, வாழ்க்கைக்கு உதவுகிற வார்த்தைகளை வரவேற்கிற ஏற்றுக் கொள்கிற பெருந்தன்மையாளர்களாக இருந்து வந்திருப்பதைப் பார்க்கிறோம். தமிழ் இவ்வளவு காலம் உயிரோடு இருப்பதற்கும், தழைப்பதற்கும் தமிழ் பிறமொழி வார்த்தைகளை இப்படி ஏற்று அரவணைத்துக் கொள்வது ஒரு பெரிய காரணம் எனலாம்.
மேற்கண்டவாறு- இலக்கண ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும்தான் தனித்தமிழ் எவ்வளவு போலியானது என்று பார்த்தோம். நவீன வாழ்வில் வாழுகின்ற நாம், நடைமுறை வாழ்வில் பயன்படுத்துகிற பிற மதிப்பீடுகளின் சார்பில் தனித்தமிழை ஏற்றுக் கொள்ள முடியுமா என்று சுருக்கமாகப் பார்ப்போம். இதுபற்றி நெத்தியடியாக ஏற்கனவே பலர் எழுதியுள்ளனர். நாம் இரண்டு ஜாதிகளின் கலப்பு மணத்தை ஆதரிக்கிறோம். இரண்டு பொருளாதாரங்களின் கலப்பை (முதலாளித்துவம் + பொதுவுடைமை = சோஷலிஸம்) ஆதரிக்கிறோம். இரண்டு விதைகளைச் சேர்த்து அமோக விளைச்சலுக்கு வீரியமிக்க கலப்பு விதைகளைக் கண்டுபிடிக்கிறோம். கலப்பு உரங்கள் நமக்கு மகசூலில் சாதனை செய்ய உதவுகின்றன. பல கலாசாரங்கள் பயில்வோரிடமும், பல மொழிகள் பேசுவோரிடையேயும் புழங்குகிறோம். இப்படி நவீனத்துடன் தொடர்பு கொண்டு, தன்னை மாற்றிக் கொள்ளாத எதையும் பத்தாம் பசலி என்றும், வாழ்க்கைக்குதவாத பழமையானது என்றும் கூறுகிறோம். ஆனால் தமிழுடன் மட்டும் பிறமொழிச் சொற்கள் கலக்கக்கூடாது என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம். தனித்தமிழ் பேசிக் கொண்டிருந்தால், தமிழையும் விரைவில் வாழ்க்கைக்குதவாதது என்று தூக்கி எறிந்துவிட வேண்டி வரலாம்.
இலக்கியத்திற்குத் தனித்தமிழ் உதவுமா? ஜெயகாந்தன் இதை ஏற்கனவே தன்னுடைய "தமிழும் தனித்தமிழும்" கட்டுரையில் "தனித்தமிழ்தான் தமிழ் எனில் இலக்கியம் படைக்க லாயக்கற்ற மொழி தமிழ் என்றாகும்" என்று சொல்லி விளக்கியுள்ளார். சில மாதங்களுக்கு முன் இங்கே NPR-வில் (National Public Radio) ஓர் எழுத்தாளரின் நேர்காணல் கேட்கிற வாய்ப்புக் கிடைத்தது. அந்த எழுத்தாளர் "Spanglish" (Spanish + English) என்கிற மொழியில் ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். இப்படி நவீன வாழ்வில் மொழியானது கருத்துப் பரிமாற்றத்திற்கான ஓர் ஊடகம் என்கிற அளவிலேயே மதிக்கப்படுகிறது. இனத்தூய்மை பேசுபவர்களை இனவெறியர்கள் (racist) என்று அழைக்கிற மானுட மதீப்பீடுகளை நாம் பின்பற்றுகிறோம். மொழித்தூய்மையைப் பின்பற்ற வேண்டும் என்று சொன்னால், வரலாறு நம்மை மொழிவெறியர்கள் என்று பின்னாளில் அழைக்கக் கூடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நல்ல தமிழ் (திசைச்சொற்களும் வடமொழிச் சொற்களும் கலந்த தமிழ்) பேச, எழுத சொல்வதுதான் நடைமுறைக்கு உகந்ததாக இருக்க முடியுமே தவிர தனித்தமிழ் பயில வேண்டும் என்று சொல்வது எதற்கும் உதவாது.
எனவே, அறிவுபூர்வமாக சிந்திப்போர், எதன் அடிப்படையிலும் தனித்தமிழ் பேசுவோர் முன்வைக்கிற கூற்றுகளை ஏற்றுக் கொள்ளவும் பின்பற்றவும் நிறைய யோசிக்க வேண்டும்.
இக்கட்டுரையை எழுதப் பயன்பட்ட நூல்கள்:
1. ஐராவதம் மகாதேவன் நேர்காணல் - செப்டம்பர் 2003 குமுதம் தீராநதி இதழ்
2. Tamil Lexicon Volumes - University of Madras Publication
3. பிழையின்றி நல்ல தமிழ் எழுதுவது எப்படி - ஜெ.ஸ்ரீசந்திரன் - வர்த்தமானன் பதிப்பகம், சென்னை - 17
4. நன்னூல் காண்டிகையுரை - அ.மாணிக்கம் - பூம்புகார் பதிப்பகம், சென்னை - 18.
5. தமிழும் தனித்தமிழும் - ஜெயகாந்தன் ---> (In TAB encoding)
http://www.tamil.net/people/pksivakumar/tamil.htm
6. தமிழ்ப்படுத்துதலும் தமிழ் மனமும் - நாகூர் ரூமி -->
http://www.tamiloviam.com/html/Exclusive50.asp
7. பொருந்தாக் காமம் - பி.கே.சிவகுமார் -->
http://www.thinnai.com/pl07030310.html
8. தமிழ் இலக்கிய வரலாறு - டாக்டர் மு.வ. - சாகித்திய அக்காதெமி வெளியீடு
9. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி - க்ரியா வெளியீடு
10. மண்டல புருடர் வழங்கிய சூடாமணி நிகண்டு (பதினொன்றாம் தொகுதி) - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு.