முன்கோபி

Thread started by Muralidharan S on 19th March 2016 11:36 AM
கோபி ஒரு முன்கோபி.

கோபிக்கு கோபம் வரும் போது, அவனது நாசி விடைக்கும்! முகம் சிவக்கும்! பற்கள் நரநரக்கும் ! உடல் தசை இறுக்கமாகும் ! அவனது மனமானது, தர்க்கம் , காரணங்களை இழக்கும். தன்னை அவமதிக்கிறார்கள் என்று மட்டுமே எண்ணும். அவன் மூளையை விட அவன் நாக்கு வேகமாக வேலை செய்யும். அதை அடக்க மாட்டான் ! அடக்க முயற்சிக்கவும் மாட்டான்.

அதை விட கேவலம், அவன் அதையே மனத்தில் நினைத்து நினைத்து, பிறரிடம் சொல்லிச் சொல்லி, மேலும் மேலும் கோபம் கொண்டு துள்ளிக் குதித்து ஆர்ப்பாட்டம் செய்வான். அது அவன் வளர்த்துக் கொண்ட குணம்!

அவனது அப்பா அவனை ஒரு நாள் கேட்டார். ”ஏன் கோபி, இப்படி எடுத்ததுக்கெல்லாம் கோபப் படறியே? ஒரு வேளை, ரத்த கொதிப்பு, கித்த கொதிப்பு இருக்குமோ? டாக்டரை வேணா பாரேன்?”.

“நானா? நானா? லூசாப்பா நீ? நானா கோபப்படறேன்?”

“ஆமா கோபி! நீயேதான் ! நான் சொல்லலே ! உன் பிரண்ட்ஸ் எல்லாம் சொல்றாங்களே! ” என்றார் அப்பா தயங்கிய படியே.


“அவங்க கிடக்கறாங்க. தண்டங்க. அது சரி! உன்னை யாரு இதெல்லாம் அவங்க கிட்டே கேக்க சொன்னது? உனக்கு வேறே வேலை இல்லே?”

“கோபிக்காதே கோபி ! உன் பிரண்டு மது தான் நேத்திக்கு சொன்னான். நீ சின்ன விஷயத்துக்கெல்லாம், ஆபீஸ்ல காட்டு கூச்சல் போடறியாமே?”

“சொன்ன பேச்சு கேக்கலன்னா, பின்னே என்ன அவனுங்களை கொஞ்சுவாங்களாமா?”- கோபிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

“அப்புறம், உன் அத்தை கூட சொல்றா, நீ அவளோட, அநியாயத்துக்கு சண்டை போடறியாம்! ரொம்ப வருத்தம் அவளுக்கு!” அப்பா.

“நீ சும்மா இருப்பா! அவ என்ன சொன்னான்னு உனக்கு தெரியுமா?”

“இருக்கட்டும்டா! எதுக்கும் நீ டாக்டரை போய் பாத்துட்டு வாயேன்!”

“நான் எதுக்கு டாக்டரை பார்க்கணும்? எனக்கு ஒண்ணுமில்லை!”

“இல்லேடா! எதுக்கும் செக் பண்ணிகிட்டா, நல்லது தானேடா? சொன்னாக் கேளு கோபி !.”

“சரி சரி, போய் பாத்து தொலைக்கறேன்! இல்லேன்னா விடவா போறீங்க?”

***
கோபி தனது குடும்ப டாக்டர் அறையில் .

“குட் மார்னிங் டாக்டர்”

“வாங்க கோபி! என்ன விஷயம்?”

“ஒண்ணுமில்லே டாக்டர், அப்பா தான் என்னை உங்க கிட்ட செக் அப் பண்ணிக்க சொன்னார்.”

“அப்ப சரி, செக் பண்ணிடலாம். உக்காருங்க ! உங்களுக்கு என்ன ப்ராப்ளம்?”

கோபி உட்கார்ந்தான். “ ஒன்னும் பெருசாயில்ல டாக்டர்! சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபம் வரது. அடக்க முடியலே! அதான்..”

“ஓகே. செக் பண்ணிடலாம்”

செக்கிங் முடிந்தது.

“கோபி, உங்களுக்கு ரத்த அழுத்தம் கொஞ்சம் அதிகமாக இருக்கு. இன்னும் சில டெஸ்ட் எடுக்கணும். எழுதி கொடுக்கறேன். உப்பு நிறைய சாப்பிடுவீங்களா?”

“ இல்லே டாக்டர்!”

“சிகரட், மது இதெல்லாம்?”

“எப்பவாவது மது உண்டு டாக்டர்! ”

“சரி, எவ்வளவு நாளா உங்களுக்கு இந்த பிரச்சனை?”

“தெரியலே டாக்டர். அடிக்கடி கோபம் வரும், அவ்வளவுதான்”

“கோபம் வந்தால் என்ன பண்ணுவீங்க?”

“வாய்க்கு வந்த படி திட்டுவேன்”

“ஆபீஸ்லே கோவம் வருமா? அதனாலே தலைவலி, படபடப்பு அது மாதிரி ஏதாவது?”

“ஆமா. ரொம்ப பிரச்னைகள் வருது டாக்டர். வாயே குழறுது!”

“ஏன் கோபி ! ஆபீஸ் கோபத்தையெல்லாம் வீட்டில் காட்டுவீங்களா?”

“ஆமா டாக்டர், காட்டுவேன். அது எப்படி உங்களுக்கு தெரியும்?” . கோபி தலையை தாழ்த்திக் கொண்டான். அவன் முகம் சிவக்க ஆரம்பித்து விட்டது.

“அது இருக்கட்டும் ! அப்போ வீட்டிலே அடிக்கடி சண்டை வருமா என்ன?”

“வரும். அப்பா சொன்னாரா?” கோபியின் குரலில் ஒரு கோபம் தெரிந்தது.

“இல்லியே. சும்மா கேட்டேன் ! சண்டை யாரோட வரும்?”

“யாரோட இருந்தா உங்களுக்கு என்ன டாக்டர், நீங்க எதுக்கு எங்க வீட்டு பிரச்சனைகள் பத்தி அனாவசியமா கேக்கறீங்க?” கோபி டக்கென்று எழுந்து கொண்டான்.

“அதுவும் சரிதான்! எனக்கெதுக்கு உங்க வீட்டு பிரச்னை ? நீங்க உக்காருங்க ! போகட்டும், கோபி, உங்களுக்கு ஹைபர் டென்ஷன் இருக்கு. இது சைகோ சொமாடிக் பிரச்னை மாதிரி இருக்கு. மனம் சம்பந்த பட்ட உடல் வியாதி. இந்த மருந்து எழுதி தரேன். சாப்பிடுங்க. இரவிலே இந்த மன உளைச்சலை குறைக்க, தூங்க மாத்திரை தரேன். ஓகே வா ! தூங்கினாலே பாதி பிரஷர் குறையும். உப்பை குறையுங்க. ஓகே வா? அதை விட ரொம்ப அவசியம், கோபம் வந்தால், அதை ரொம்ப குறைச்சுக்கோங்க..”

கோபி பதில் பேசாமல் திரும்பி விட்டான்.

*****

வருடங்கள் ஓடின. கோபிக்கு இப்போது வயது 60.


கோபிக்கு காசு பணத்தில் குறைவில்லை. நல்ல வசதி. கோபிக்கு இரண்டு மகள்கள். இருவருக்கும் கல்யாணம் ஆகி மூத்தவளுக்கு குழந்தைகளும் உண்டு.

ஆனால் அவன் குணம்? அது மாறவில்லை. அவன் கோபம் குறையவில்லை. கோபிக்கு இப்போது ரத்தக் கொதிப்பு, தூக்கமின்மை, அல்சர், கூடவே போனசாக கொஞ்சம் இதய நோய்.

ஒருநாள், ஒரு வாடிக்கையாளரிடம், கோபி வாய்க்கு வந்த படி பேச, அவர் இவனை ஏக வசனத்தில் ஏச, எல்லாம் சேர்ந்து, அவனுக்கு மயக்கம் வந்து, அப்படியே விழுந்து விட்டான். மூக்கில் ரத்தம் கசிந்தது. .பக்கவாதம் அவனைத் தாக்கியது.

‘தன்னைத்தான் காக்கின் சினம் காக்க: காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்’ – வள்ளுவர் கூற்று கிட்டதட்ட இவனை பொருத்தவரை உண்மையாயிற்று.

அவனது மனைவியும் இரண்டு மகள்களும் சேர்ந்து அவனை ஒரு பெரிய தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள்.

பத்து நாள் கழித்து:

இன்னும் கோபிக்கு பேச்சு வரவில்லை. கை கால் அசைக்க முடியவில்லை. கொஞ்சம் அரை மயக்கம். ஆஸ்பத்திரி அறையில் கண்மூடி படுத்திருந்தான்.

அவனது பெண்கள் அவனை பார்க்க ஆஸ்பத்திரியில் வந்திருந்தார்கள். அவனது . படுக்கைக்கு அருகில் நின்று அவனை கூப்பிட்டார்கள்.

“அப்பா! அப்பா! உடம்பு இப்போ எப்படிப்பா இருக்கு?- பெரிய பெண் ஊர்வசி.

“அப்பா! நாந்தான் மாலா வந்திருக்கேன். தேவலையா இப்போ?”- இரண்டாம் பெண் மாலா

கோபியின் முகத்தில் எந்த மாற்றமுமில்லை. அவனது மூடிய கண்கள் மூடியே இருந்தன.

“பாவம்பா நீ! உடம்பு இப்படி இளைச்சு போச்சே!” ஊர்வசி

“என்ன பண்ணுவார்டீ! இவருக்கு இப்போ டியுப் வழியாத்தான் எல்லாமே”- மாலா. அவள் இதழ் ஓரம் ஒரு நக்கல் புன்னகை.

சிறிது நேரம் கழித்து, அப்பாவை விட்டு, சகோதரிகள் இருவரும் வேறு கதை பேச ஆரம்பித்தனர். அசைய முடியவில்லையே தவிர, கோபிக்கு இதெல்லாம் காதில் விழுந்து கொண்டிருந்தது.

மகள்கள் பேச்சு அப்பாவை பற்றி திரும்பியது. இதுவரை அவர்கள் அப்பா எதிரில் பேசியதே இல்லை. அவ்வளவு பயம். கோபி இவர்கள் சிரித்து பேசினாலே சத்தம் போடுவார்.

இப்போது, அப்பா மயக்கமாக இருக்கும் தைரியத்தில், மகள்கள் இருவரும் பேச ஆரம்பித்தனர்.

“ஏய், மாலா, பாரு அப்பாவை. முன்னெல்லாம் எப்படி நம்மை பாடாய் படுத்தினார்?. இப்போ பாரு கைகாலெல்லாம் இழுத்துகிட்டு கிழிந்த நாராய் இருக்கிறார் ! ” - ஊர்வசி

“கிழத்துக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்டி” – மாலா

“ஆமாண்டி ! இவரை பார்த்தால் எனக்கு பாவமே வரலை. பத்திக்கினுதான் வருது”- ஊர்வசிக்கு கோபம் இன்னும் கூடியது.

“ஆமாமா, அதுவும் நம்ம அம்மாவை என்ன பாடு படுத்தியிருக்கிறார் இவர். இப்போ நல்லா படட்டும்.”- ஒத்து ஊதினாள் சின்னவள்.

“நம்ம அம்மா அழாத நாளே இல்லே தெரியுமா?”

“அது மட்டும் இல்ல ஊர்வசி ! இந்த அப்பாக்கு கோபத்திலே என்ன பன்றார்ன்னே தெரியாது. சின்ன வயசிலே என்னை கூட கண்ணு மண்ணு தெரியாம அடிப்பார். பாவி மனுஷன், தள்ளி விட்டுடுவார். வசவு தாங்கவே முடியாது.”

“ஆமாமா ! என்னக் கூட சின்ன விஷயத்துக்கெல்லாம், முடிய பிடிச்சு உலுக்குவார். சே! இவரெல்லாம் ஒரு அப்பான்னு சொல்லிக்கவே வெக்கமாயிருக்கு”- ஊர்வசி

மகள்களின் அடக்கி வைத்திருந்த கோபம் பேச பேச வெடித்தது.

அப்போது அவர்களது அம்மா உள்ளே வந்தாள். கொஞ்சம் தூரத்திலிருந்தே கோபியை பார்த்தாள். கோபியின் படுக்கை கிட்டேயே வரவில்லை.

“ஏம்மா ! அப்பா கண் விழிச்சாரா? பேசினாரா? ஸ்மரணை வந்துதா?”- அம்மா

“இல்லேம்மா. அப்படியே தான் அசையாம இருக்கார்”- மாலா

“இருக்கட்டும் கொஞ்ச நாள் ஆஸ்பத்திரியிலே. என்னை என்ன பாடு படுத்தியிருக்கிறார்? கிடக்கட்டும் இங்கேயே. நர்ஸ் பாத்துப்பாங்க. நாம வீட்டுக்கு போகலாம் வாங்க!”

கேட்டுக்கொண்டிருந்த கோபிக்கு மிகுந்த வருத்தம். அவனால் தாங்க முடியவில்லை. கண்ணில் நீர் வழிய ஆரம்பித்தது.

‘இந்த குடும்பத்திற்கா நேரம் காலம் பாக்காமல் உழைத்தோம்? இவ்வளவு சொத்து சேர்த்தோம்? எல்லாம் இவங்களுக்கு தானே! என்னை இப்படி உதறிவிட்டு போறாங்களே! நம்ம கோபத்தினாலே, எல்லாரையும் இழந்துட்டோமே!. எனக்கு இப்போ யாருமே இல்லியே.”

காசு பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை. அன்பு வேண்டும். அரவணைப்பு , ஆதரவு வேண்டும். உறவுகள் வேண்டும் என்பது இப்போது கோபிக்கு புரிந்தது. இனிமேலாவது நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் என முடிவெடுத்தான்(ர்).

*****

ஒரு மாதம் கழித்து.

தனது வீட்டில் கோபி. உடல் தேறிவிட்டது. அவரால் இப்போது மெதுவாக நடமாட முடிந்தது.

டாக்டர் சொல்லி விட்டார், “ கோபி, இங்கே பாருங்க , நீங்க சண்டகோழியா இருந்தா, உங்க உயிருக்குதான் ஆபத்து. நீங்க கோபமே பட கூடாது. இன்னொரு முறை, ஸ்ட்ரோக் வந்தால் ரொம்ப கடுமையாயிருக்கும். பாத்துக்கோங்க!"

கோபி கோபத்தை இப்போது மிகவும் குறைத்து கொண்டார். மனைவியிடம் மிக அன்பாக இருந்தார். மகள்களிடம் மிக கனிவோடு பழகினார்.

கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரும் அவருடன் நேசமாக ஆரம்பித்தனர். சுற்றம் கூடியது. பெரிய மகள் ஊர்வசியின் குழந்தைகளுடன் அவர் ஒரே விளையாட்டு தான்.

நரகமாக இருந்த வாழ்க்கை சொர்கமானது. நரகமும் சொர்கமும் நமக்குள் தானே !

வாழ்க்கை என்பது என்ன என்பதை கோபி இப்போது தெரிந்து கொண்டார். சந்தோஷத்திற்கு முக்கிய தேவை வெற்றியல்ல. வாழ்க்கையின் வெற்றிக்கு முக்கிய தேவை சந்தோஷம்.

அவர் இப்போது தான் என்ன என்ன இழந்தோ மென்று நன்கு புரிந்து கொண்டார். ஆனால் கொஞ்சம் தாமதமாக. அன்பும் ,அரவணைப்பும் இதுவரை இழந்தது இழந்தது தானே!

நேசமும் பாசமும் இல்லாமல் இதுவரை வெட்டியாய் வாழ்ந்தது வாழ்ந்தது தானே ! காலம் என்ன மீண்டும் வரவா போகிறது?

***
முற்றும்.வெகுளாமை (திருக்குறள்)

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற?

நன்றி : கூகிள், விக்கிபீடியா, திருக்குறள், ஈஷா (Tag : Motivational )Responses:
Want to post a response?

(Hello Guest, you need to login to post a response. Are you a New User? Register first.)