தூண்டிலில் சிக்கிய மீன்கள்

Thread started by Muralidharan S on 3rd April 2015 12:06 PMதங்கமணி : வயது 61

தங்கமணி ஒரு தனியார் கம்பனி வேலையிலிருந்து ஒய்வு பெற்றவர். பென்ஷன் இல்லை.

“என்னங்க! இப்படி இடிச்ச புளி மாதிரி உட்கார்ந்திருக்கீங்களே? வயசு வந்த ரெண்டு பெண்களை கரை எத்தறதை பத்தி ஏதாவது யோசனை பண்ணீங்களா?” – மனைவி வனஜாவின் அலம்பல். கொஞ்ச நாளாக, தினமும் காலையில் தங்கமணி பேப்பர் படிக்க உட்காரும்போது இதுதான் நடக்கிறது.

“கவலைப் படாதே வனஜா. பாக்கலாம், என் பி. எப் பணத்தை வெச்சு, இந்த வீட்டை அடமானம் வெச்சு பெண்களுக்கு கல்யாணம் பண்ணிடலாம். அப்புறம், எதாவது கணக்கு எழுதற வேலை கிடைச்சா கூட போதும். நம்ப வயத்தை கழுவிக்கலாம்.”

“இதேதான் எப்பவும் சொல்றீங்க! உங்களுக்கு எங்கே வேலை கிடைக்கப் போவுது? ஏதாவது உருப்படியா சொல்லுங்க.”

“நான் என்ன பண்ணட்டும் வனஜா? நானுந்தான் எங்கெங்கேயோ முயற்சி பண்றேன். எவன் வேலை கொடுக்கறேன்கிறான்? அறுபது வயசு, ரிடையர்ட் அப்படின்னாலே, ஜகா வாங்கறான். என் படிப்பு, அனுபவம் ஒண்ணும் வேலைக்காவலை”.

தங்கமணி செய்தித்தாளை பிரித்தார். உள்ளே இருந்து விழுந்த ஒரு துண்டு பிரசுரம் அவரைக் கவர்ந்தது.

“ஒய்வு பெற்ற அதிகாரிகளுக்கு மட்டும். நீங்கள் உன்னதமாக வாழ ஒரு கடைசி சந்தர்ப்பம். உங்களுக்கு என்றே, புதுமையான யாரும் நினைத்துப் பார்க்க முடியாத சிறந்த ஒரு வாய்ப்பு.

அள்ளுங்கள் கைநிறைய. சொந்தக் காலில் நில்லுங்கள். நிம்மதியாக வாழுங்கள். வயது வரம்பு இல்லை. இன்றே அணுகுங்கள் அலை பேசி எண் : “தங்கமணி போனை கையிலெடுத்தார்.

“ஹலோ! நான் சென்னை அம்பத்தூரிலிருந்து பேசறேன். ஒய்வு பெற்ற அதிகாரிகளுக்குன்னு உங்க விளம்பரம் பார்த்தேன். அதைப் பத்தி சொல்ல முடியுமா?”

“கட்டாயம் சார், உங்க பேரு கொஞ்சம் சொல்லுங்க”

“தங்கமணி”

“தங்கமணி சார், நீங்க வர்ற ஞாயிறு பதினொரு மணிக்கு கிண்டிலே இருக்கிற மாருதம் ஹோட்டலுக்கு வந்துடுங்க. அங்கே வெச்சி எல்லா விஷயமும் சொல்றோம். வெல்கம் ட்ரின்க், மதியம் சாப்பாடு, கிப்ட் எல்லாம் உண்டு.”

“சரி வரேன். இப்போ கோடி மட்டும் காட்ட முடியமா? வேலை வாய்ப்பு தானே?”

“கட்டாயம் அதுவும் இருக்கு சார். நேரே வாங்க, கோடி கோடியா நீங்க சம்பாதிக்க வழி சொல்றோம்”


****
ஞாயிறு பனிரெண்டு மணி

மாருதம் ஹோட்டல். தமிழ்நாட்டில் பத்து பதினைந்து கிளைகள் உள்ள ஒரு பைனான்ஸ் கம்பெனி கூட்டம்.

ஒரு இருவது பேர் அமர்ந்திருந்தனர். எல்லாம் பெருசுகள். எதிர்பார்ப்புடன் உட்கார்ந்திருந்தனர். தங்கமணி முதல் வரிசையில்.

டிப் டாப் உடையணிந்த ஒரு நடுத்தர வயதுகாரர் , ஆணித்தரமாக பேசிக்கொண்டிருந்தார். அவர் பின்னாடி திரையில் ஒரு பிரசன்டேஷன் ஓடிக்கொண்டிருந்தது. இடையிடையே சில சீனியர் சிட்டிசன்கள், முந்திரிக் கொட்டைகளாய், கேள்விகள் கேட்டு கொண்டிருந்தனர். அதற்கு அவர் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

“சார்! ஏதோ வேலை வாய்ப்பு இருக்குன்னு நினைச்சேன். நீங்க அதைப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே? ஏதோ பணம் போடுன்னு தானே சொல்றீங்க?” – தங்கமணி

“இருக்கு சார். எப்படின்னு ஒண்ணொண்ணா சொல்றேன்!. இப்போ உங்க பி.எப் பணத்தை வங்கியிலே போட்டா மிஞ்சிப் போனா ஒரு பத்து சதவீதம் வட்டி கிடைக்குமா? அதாவது ஒரு லட்சத்துக்கு, வருடத்துக்கு பத்தாயிரம். ஆனால், எங்ககிட்டே அதே ஒரு லட்சத்துக்கு மாதம் ஐயாயிரம் கிடைக்கும். அதாவது, வட்டி மட்டும் வருஷத்துக்கு அறுபதாயிரம். அதாவது அறுபது சதவீத வட்டி. வட்டி உங்க வீட்டுக்கு , பென்ஷன் மாதிரி மாதா மாதம் ஐந்தாந் தேதி வந்திடும். எப்போ வேணுமோ, அப்போ உங்க அசலை திருப்பி வாங்கிக்கலாம்.”

“அது அப்படி சாத்தியம்?” – தங்கமணிக்கு சந்தேகம்.

“நல்ல கேள்வி! நாங்க ஒரு பெரிய நிதி நிறுவனம். பங்கு சந்தை, அயல் நாட்டு செலாவணி அப்புறம் தங்கம் வெள்ளி வர்த்தகம் இதிலே முதலீடு பண்ணி நிறைய லாபம் பண்ணிக்கிட்டு இருக்கோம். உங்க பணத்தை அதிலே போடுவோம். பங்கு சந்தையில் கை தேர்ந்த எக்ஸ்பெர்ட் எங்ககிட்டே இருக்காங்க. லாபம் கட்டாயம். நம்ம ஊர் எம்.பி, எம்.எல்.ஏ எல்லாம் இந்த கம்பனிலே பணம் போட்டிருக்காங்க. ”

“ இது ஒரு இன்வெஸ்ட்மென்ட் தானே. இதிலே வேலை வாய்ப்பு எங்கே இருக்கு?” –தங்கமணி விடவில்லை.

“இதோ சொல்றேன். இந்த திட்டத்திலே நீங்க சேர்ந்தவுடனே, நீங்க இந்த கம்பனியின் விற்பனைப் பிரதிநிதி ஆகிடறீங்க. அதிகார பூர்வமா சம்பளம் கிடையாது. ஆனால், அதை விட அதிகமா, உங்களது திறமையை பொறுத்து கமிஷன் அடிப்படையில, நீங்க பணம் அள்ளலாம்.” நிறுத்தினார்.

எல்லோரும் ஆர்வமாக கேட்க ஆரம்பித்தார்கள்.

“இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா?” கூட்டத்தில் ஒரு குரல்.

“கட்டாயம். நாங்க ஏன் இந்த திட்டத்தை ஒய்வு பெற்ற அதிகாரிகளுக்கு மட்டும்னு சொன்னோம் தெரியுமா? உங்க அனுபவம், பேச்சு சாதுரியத்தினாலே, கமிஷன் அடிப்படையிலே புது உறுப்பினரை நீங்க எளிதிலே சேர்க்கலாம். அதுக்கு நாங்க 15% கமிஷன் தறோம். உங்க அனுபவம், முதிர்வு எல்லாம் உங்களுக்கு கை கொடுக்கும். உங்களிடம் செலவிட நேரமும் இருக்கு. உங்க ஒய்வு நேரத்திலே, அலை பேசி மூலமாகவோ, இ மெயில் மூலமாகவோ உங்க நண்பர், உறவினரை சேர்க்கலாம்..”

“மாசம் சுமாரா எவ்வளவு கிடைக்கும்?” – தங்கமணி.

“உங்க திறமையை பொறுத்தது. உங்கள் சிபாரிசினாலே, ஒரு புது உறுப்பினர் ஒரு லட்சம் முதலீடு செய்தால், உங்களுக்கு ரூபாய் 15000/- உங்க வீடு தேடி செக் வந்துடும். உங்க உறுப்பினர் எண்ணை மட்டும் மறக்காம புது உறுப்பினர் சேரும் படிவத்திலே குறிப்பிட மறக்காதீங்க. மறந்தால், பணம் உங்களுக்குக் கிடையாது. லம்பா எனக்குத்தான்.”

கூடியிருந்தவர் மெலிதாக சிரித்தனர்.

“மாசம் நீங்க ரெண்டு புது கஸ்டமர் கொண்டுவந்தாலும், குறைந்த பட்சம் முப்பதாயிரம் கிடைக்கும். உங்களுக்கு விசிடிங் கார்ட் கொடுப்போம். மெம்பர்ஷிப் அட்டையும் கொடுப்போம். ..நீங்க வீட்டிலிருந்தே காசு அள்ள ஒரு அருமையான சந்தர்பம். நழுவ விட்டுடாதீங்க. அதைத்தவிர, நல்லா பண்றவங்களுக்கு, வெளிநாடு சுற்றுலா, போனஸ் எல்லாம் உண்டு.“

“இந்த ஒரு லட்சம் முதலீடு பண்ணாமல், நான் விற்பனை பிரதிநிதியாக முடியாதா?” –தங்கமணிக்கு முதலீடு செய்ய பயம். உள்ளதும் போயிட்டா?

“முடியாதுங்க ஐயா. நம்ம கம்பெனி ரூல் இடம் கொடுக்காது. உங்க பணத்தை உங்க வேலைக்கான உறுதிப் பணமா நினைச்சிக்கோங்க”

கூட்டம் கலைந்தது. ஒரு பத்து பேர் உடனடியாக தங்களை உறுப்பினராக சேர்க்க படிவம் நிரப்பிக் கொண்டிருந்தனர். தங்கமணிக்கு ஏனோ தயக்கம்?

சேரவும் பயமாக இருந்தது. விடவும் மனமில்லை. கடைசியில், பயம் வென்றது. தங்கமணி எதுவும் பேசாமல், வீட்டிற்கு வந்து விட்டார்.

****


.. To Continue ....Responses:
Want to post a response?

(Hello Guest, you need to login to post a response. Are you a New User? Register first.)