பிரசவம்

Thread started by Muralidharan S on 19th March 2015 11:15 AM“என்ன சீதா? இப்போ எப்படி இருக்கு வலி? தேவலையா? டாக்டர் வந்து பார்த்தாரா? என்ன சொல்றார்?”-அம்மா என் தலையை ஆதூரமாக கோதினாள்.

“இப்போ பரவாயில்லேம்மா! டாக்டர் ஊசி போட்டார். வலி ரொம்ப குறைந்திருக்கு. ஆனால், எப்ப வேணாலும் திரும்ப வலி வரலாமாம். அப்போ உடனே வந்து என்னை அட்மிட் ஆயிடச்சொல்லி இருக்கார்.”

“ஐயையோ! இப்போ என்ன பண்றது?”

“பயப்படாதே! நானே தைரியமாயிருக்கேன். ஒன்னும் பிரச்னையில்லேம்மா.”

“என்ன பண்றது, பெத்த மனசு,! சரி , சீதா, வாட்டமா இருக்கியே!நான் வேணா கொஞ்சம் ஹார்லிக்ஸ் சூடா கொண்டுவரவா?”

“வேணாம்! நீ போ! லேசா கண்ணை அழுத்தறது. ஊசியாயிருக்கும். ”

“கிரகச்சாரம்! எனக்கு கையும் ஓடலே காலும் ஓடலே! என்ன பண்ணப் போறோம்னே புரியலையே!”

“சரி, புலம்பாதே! இப்போ என்ன விஷயம், அதை சொல்லு!”

“இல்லே சீதா! இன்னும் நாலு நாள் தானே இருக்கு! சிவா கிட்டே பேசிட்டியா ? எல்லா ஏற்பாடும் தயார் தானே? ”

“ஏம்மா எல்லாத்துக்கும் இப்படி கையை பிசையறே? பிரச்னை இல்லாமே எந்த பிரசவமும் இல்லைம்மா! எல்லாம் சிவாவுக்கும் நல்லாத் தெரியும். எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு. எதுக்கும் தயாராத்தான் இருக்கோம். நீ சும்மா குட்டைய குழப்பாதே!”

“என்னமோ எல்லாம் நல்லபடியா ஆனா சரி. எல்லாம் அந்த பகவான் கையிலே தான் ! .”- அம்மா புலம்பிக் கொண்டே நகர்ந்தாள். அது அவள் சுபாவம்.

கண்ணை மூடிக் கொண்டேன். திரும்பவும் எனக்கு மெதுவாக வலி தெரிய ஆரம்பித்தது. வாந்தி வேறு வரும் போலிருந்தது. கொடுமைடா சாமி! கொஞ்சம் சாய்வாக படுத்துக் கொண்டேன்.

****

அன்று இரவே எனக்கு பயங்கர வலி. இடுப்பு பகுதியிலே கொஞ்சம் கீழே , ஏதோ தேள் கொட்டினா மாதிரி. நோவு தாங்க முடியவில்லை. ஹோ வென அலறினேன். கெட்டியாக இடுப்பை பிடித்துக் கொண்டேன்.

நான் போட்ட கூச்சலில், அம்மாவும் அப்பாவும் அரண்டு போய், உடனே என்னை நர்சிங் ஹோமில் சேர்த்து விட்டார்கள்.

எங்க பாமிலி டாக்டர் வந்தார். ஊசி போட்டார். அவ்வளவு தான் எனக்கு நினைவு. மெதுவாக கண்ணை இருட்டிக் கொண்டே வந்தது.

அப்புறம் எனக்கு என்ன நடந்ததென்றே எனக்கு தெரியாது.

****

மெதுவாக கண் விழித்தேன். விண்டோ ஏ.ஸி மெல்லிதாக சத்தம் போட்டுக் கொண்டிருந்தது. இதமாக குளுகுளுவென இருந்தது. இடுப்பு வலி போன இடம் தெரியவில்லை. யாரோ வருவது போல இருந்தது. திரும்பினேன்.

ஒரு நர்ஸ் டக் டக் என மெல்லிய சத்தத்தோடு என்னருகே வந்தாள். அவள் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை. என் கையை பிடித்து ஊசி போட இடம் பார்த்து பஞ்சினால் ஈரமாக தடவினாள். மெதுவாக சிரித்தேன்.

நர்ஸ் கேட்டாள் “ ஊசி போடணும், கையை லூசா விடுங்க. ! இப்போ உடம்பு எப்படி இருக்கு?”

“வலியே இல்லை. ரொம்ப இதமா இருக்கு. எனக்கு என்ன ஆச்சு?”.

“தெரியாதா? உங்களுக்கு அப்பெண்டிசைடிஸ் அறுவை சிகிச்சை ஆயிடுச்சு. கொஞ்சம் மேஜர் தான். நீங்க இப்போ ரெஸ்ட்லே இருக்கணும்”

“ஓ! எனக்கு ஆபெறேஷன் ஆயிடுச்சா? ”

“இன்னும் நாலு நாளிலே டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க. அப்புறம், வாழ்த்துக்கள், உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு.”

கேட்டவுடன் எனது மனம் காற்றில் பறந்தது. எவ்வளவு சந்தோஷமான விஷயம். சிரித்தேன். எழுந்து குதிக்க வேண்டும் போல இருந்தது. ஆனால், இந்த அம்மா எங்கே?

“ரொம்ப நன்றி சிஸ்டர். அது சரி, எங்கே என் அப்பா அம்மா ? யாரையும் காணோம்?”

“இங்கே தான் இருந்தாங்க! கொஞ்ச நேரம் முன்னாடி தான் , முதல் மாடியிலே குழந்தையை கேர் யூனிட்லே பார்க்க போயிருக்காங்க. இப்போ வந்துடுவாங்க! ”

அறை வாசலில் அரவம். என் அம்மா, அப்பா , மெதுவாக எட்டிப் பார்த்தார்கள். அடேடே, அவங்க பின்னாலேயே என் மாமனார், மாமியார். எல்லோர் முகத்திலும் புன்சிரிப்பு.

எழுந்துக்கொள்ள முயற்சி செய்தேன். “அசையாதீங்க! அப்படியே படுத்துகிட்டு இருங்க!“ நர்ஸ் ஆணை.

அம்மா நேரே என் அருகில் வந்தாள் “சீதா! முழிச்சிகிட்டியா? நாங்க பயந்தே போய் விட்டோம். இப்போ உன் வலி எப்படிஇருக்கு?” பக்கத்தில் வந்து என் கையை பிடித்துக் கொண்டாள்.

“எனக்கு ஒண்ணுமே இல்லைம்மா. எல்லாம் சரியா போச்சு. என் வலியை விடு. எனக்கு குழந்தையை பாக்கணும். எங்கே அவன்? இப்பவே பாக்கணும்.”

“கொஞ்சம் பொறு. நேத்து நீ இருந்த இருப்பென்ன? எல்லோரையும் கலங்கடிச்சிட்டே ! இப்போ இந்த துள்ளாட்டம் போடறே!“ – என் ஆவலைப் புரிந்து கொள்ளாமல் அம்மா சத்தம் போட்டாள்.

நான் அப்பாவை பார்த்தேன். அவர் என் உதவிக்கு வந்தார்.

“கொஞ்சம் வெயிட் பண்ணு சீதா ! குழந்தை ஸ்பெஷல் கேர் வார்ட்லே இருக்கு. சிஸ்டர், சீதாவை இப்போ அழைச்சுகிட்டு போலாமா?”

அப்பா கேட்டதும் நர்ஸ் முதலில் விழித்தார். பின்னர் சுதாரித்து கொண்டார். “டாக்டர் வரட்டும், கேட்டு சொல்லறேன்”

அப்போது, அறை வாசலில் ஆளரவம். நிமிர்ந்து பார்த்தேன். எங்க பாமிலி டாக்டர்.

“டாக்டர், சீதாவுக்கு குழந்தையை பாக்கணுமாம்” – அப்பா எனக்காக டாக்டரிடம் பெர்மிஷன் கேட்டார்.

“தாராளமா ! போய்ப் பாக்கலாமே. மத்தியானம் போய் பாருங்க. கொஞ்சம் மெதுவா வீல் சேர்லே போங்க”

“அப்புறம், என்ன சீதாராமன்! உங்க அப்பெண்டிக்ஸ் வலி இப்போ என்ன சொல்றது?” டாக்டர் என் கை நாடியை பார்த்துக் கொண்டே கேட்டார்.

“தேங்க்ஸ் டாக்டர். இப்போ வலி மாயமா போச்சு” – நான் எழுந்து கொள்ள முயற்சி செய்தேன்.

“குட், எழுந்துக்காதீங்க ! தையல் பிரிந்திடும். வாழ்த்துக்கள். உங்க மனைவி சிவரஞ்சனி அழகான பையனை பெத்து கொடுத்திருக்காங்க. சந்தோஷம் தானே?”

“ரொம்ப ஹாப்பி டாக்டர். சிவாக்கு ஏதோ பிரசவ சிக்கல்னு சொன்னீங்களே! எல்லாம் சுகப் பிரசவம் தானே? ”

எனது இடுப்பை பிடித்து தையலை பார்த்துக் கொண்டே டாக்டர் சொன்னார் : “அதெல்லாம், நாங்க சமாளிச்சுட்டோம். நீங்க ஒன்னும் கவலைப் படாதீங்க! தாயும் சேயும் நலம். நீங்க அப்புறமா போய் பாருங்க, மாடியிலே தான் இருக்காங்க !”


****முற்றும்Responses:
Want to post a response?

(Hello Guest, you need to login to post a response. Are you a New User? Register first.)