இளமையே போ ! போ !

Thread started by Muralidharan S on 17th February 2015 02:26 PMவருடம் 2013
சென்னை : பருவா ஆராய்ச்சி மையம்


டீன் செல்வம் கனைத்தார். “ என்ன டாக்டர் யயாதி? எல்லாம் தயார் தானே? மிஸ்டர். பருவா! ஆரம்பிக்கலாமா?”

தலைமை விருந்தினர் பருவா தலையசைத்தார். டாக்டர் யயாதி சைகை காட்ட, அந்த மரபணு ஆராய்ச்சி நிலையத்தின் அறையின் விளக்குகள் கொஞ்சம் கொஞ்சமாக உயிரை விட்டன. திரை உயிர்பெற்றது.

அதிலிருந்து ஒரு நோயாளியின் சோர்ந்த முகம் ஒன்று மெதுவாக தெரிந்தது.


“இதோ இந்த திரையில் தெரிகிறானே இந்த நோயாளியின் பெயர் சாமிநாதன். இவனுக்கு வந்திருப்பது ஒரு மரபணு நோய். பத்து லட்சத்தில் ஒருவருக்கே இந்த நோய் தாக்கும்” – நிறுத்தினார் டாக்டர் யயாதி. எல்லோரும் திரையையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

யயாதி தொடர்ந்தார் “ இவனது தலைமுடி அனைத்தும் கொட்டிவிட்டது. இத்தனைக்கும் கீமோ தெரபி எதுவும் கொடுக்கவில்லை. இதோ பாருங்க, இவனது தோல் சுருங்கி விட்டது. கண் பார்வை மங்கி விட்டது. காது கேட்காது. வாய் குழறும். நினைவு அடிக்கடி தப்பும். இவனது தமனிகளும் சிரைகளும் இறுகி விட்டன. இதய நோயும் , மூட்டு நோயும் இவனை தாக்கிவிட்டன.”

முக்கிய விருந்தாளி பருவா குறுக்கிட்டார் “ இது மூப்பு. எல்லா வயதானவருக்கும் வருவது தானே? “

“ஆமாம் சார், இது மூப்பு தான், வயதானால் வருவது தான் .ஆனால், இந்த சாமிநாதன் ஒரு சிறுவன். வயது இன்னும் பனிரண்டு கூட முடியவில்லை.”
“என்னது?” ஆச்சரியபட்டார் பருவா. “இது நிஜமா ? ”

“எஸ் சார், இங்கே சாமிநாதனை தாக்கியிருப்பது ப்ரோஜெரியா என்னும் மரபு நோய். ‘ஹச்சிகன் கில்போர்ட் ப்ரோஜெரியா’. இந்த நோய் வந்தால், முதுமை பத்து மடங்கு வேகத்தில் நோயாளியை தாக்கும் . அமிதா பச்சன் கூட ‘பா’ படத்திலே இப்படி நடிச்சிருக்கார் சார் ! ”- பருவா பக்கத்திலிருந்த மருத்துவமனை டீன் டாக்டர் செல்வம் எடுத்துக் கொடுத்தார்.

“இந்த நோயை குணப்படுத்த முடியாதா?” பருவா ஆதங்கத்தோட கேட்டார்.

“இன்னி வரைக்கும் முடியலே சார். ஆனா, ஒரு குட் நியூஸ். இந்த விஷயத்திலே நாங்க இந்த பரிசோதனை கூடத்திலே, கிட்ட தட்ட ஒரு தீர்வு கண்டு பிடிச்சிருக்கோம் சார் . ஒரு அரிய மருந்து எங்களாலே தயாரிக்க முடியும் !” மரபணு விஞ்ஞானி டாக்டர் யயாதி மெதுவாக

“ம். இப்போ எனக்கு புரியுது. இந்த பரிசோதனைக்கு தேவையான நிதியுதவி வேணும். நான் காபிடல் கொடுப்பெனான்னு கூப்பிட்டிருக்கீங்க. சரியா?”- பருவா சிரித்துக் கொண்டே கேட்டார்.

அப்போது, டீன் டாக்டர் செல்வம் சொன்னார். ”அதிலே பாருங்க பருவா, இந்த ப்ரோஜெரியா நோய்க்கு வரும் உடல் மாற்றங்கள், அவதிகள் , கிட்ட தட்ட எல்லாமே முதுமைக்கும் பொருந்தும். அதனாலே, இந்த நோய்க்கு மாற்று மருந்து கண்டுபிடித்தால், அதை வைத்து வயோதிகத்தை தவிர்க்கலாமே! எல்லோரும் இளமையாகவே இருக்க வழி செய்யலாமே? இயற்கை மரணத்தை தள்ளிப் போடலாமே? எல்லோரும் 150-200 வயது வாழலாம்."

பருவா நெற்றியை சுருக்கினார் . ஒன்றும் சொல்லாமல் யோசனையில் ஆழ்ந்தார்.

டீன் டாக்டர் செல்வம் தொடர்ந்தார் "என்ன சொல்றீங்க பருவா? உங்களுக்கும் இது பெரிய லாபமான முதலீடாக இருக்கும்!. உங்களுக்கு நல்ல பேர் கிடைக்கும் . நிச்சயமாக , இந்த நூற்றாண்டிலேயே இது ஒரு அரிய கண்டுபிடிப்பாக இருக்கும். நீங்க மனது வைத்தால், உங்களாலே முடியாத காரியம் இல்லை மிஸ்டர். பருவா ! உங்க அரசியல் பலத்தாலே எங்களுக்கு அரசு அனுமதிகளையும் வாங்கி கொடுக்க முடியும்!”

“நீங்க சொல்றது சரிதான்!. ஆனால், இது நடக்குமா? நான் என்னவோ, வயதாவது என்பது இயற்கை, தவிர்க்க முடியாதுன்னு எண்ணிக்கிட்டிருந்தேன். ஒரு மோட்டார் வாகனம் தேயறது மாதிரிதான் நம்ம உடம்பும்னு படிச்சிருக்கேன். நீங்க வேற மாதிரி சொல்றீங்க?“ கொஞ்சம் நம்பிக்கையில்லாமல் கேட்டார் பருவா. முதலீடு அவருடையதாயிற்றே!

“சரியாக சொன்னீர்கள் பருவா. ஆனால், அந்த கூற்று மாறிகிட்டே வருது. தேய்மானம் என்பது நமது உடலுக்கு பொருந்தாது என கண்டு பிடித்திருக்கிறார்கள். நமது உடல் தன்னைத்தானே சீர் செய்து கொள்ளும் ஆற்றல் வாய்ந்தது. நம்ம உடல்லே கோடிக்கணக்கான செல்கள் பிறக்கிறது, இறக்கிறது மீண்டும் பிறக்கிறது. வயசானவங்களுக்கு இந்த செல் மீண்டும் மீண்டும் பிறப்பது குறையுது. இதற்கு , ஹெப்ளிக் லிமிட் , டோலேமேர்ஸ் இவை தான் காரணம். இவைகளை நாம் கண்ட்ரோல் பண்ண முடியும் என்பது டாக்டர் யயாதியின் கருத்து. எனக்கு அதிலே நூறு சதவீதம் நம்பிக்கை இருக்கு:” அடித்து சொன்னார் டீன் செல்வம்.

“நீங்க சொல்றது எனக்கு புரியுது. இந்த உலகத்தை புரட்டி போடறா மாதிரி ஒரு மருந்து தயார் பண்ணப் போறீங்க.! இன்னொரு வயக்ரா மாதிரி, பெனிசிலின், எக்ஸ்ரே மாதிரி. ஓகே ! ஐடியா எனக்கு பிடிச்சிருக்கு . எனக்கு இதில் பங்கு கொள்ள சம்மதம்.. எனக்கு ஒரு ரிப்போர்ட் அனுப்புங்க. தேவையான உதவி செய்யறேன். ஆமாம், என்ன பெயர் வைக்கப் போறீங்க?”- பருவா

“ஸ்டாபேஜ்- பேர் நல்லாயிருக்கா? ” கோரசாக யயாதியும் செல்வமும் சொன்னார்கள்
“வெரி குட் டாக்டர் யயாதி. வெற்றி பெற வாழ்த்துக்கள்” பருவா விடைபெற்றார்.


வருடம் 2014


‘ஸ்டாபேஜ்’ மருந்து ஒரு காய கல்பமாக இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் விற்பனைக்கு வந்து விட்டது. டாக்டர் யயாதி, டாக்டர் செல்வம் மற்றும் பருவா மூவருக்கும் ‘ஸ்டாபேஜ்’ சிறந்த பெயர் பெற்று கொடுத்து விட்டது. கோடிக்கணக்கில் பணம் புரள ஆரமபித்து விட்டது.
யயாதி “பத்மபூஷன்” பட்டம் பெற்றார்.

இந்த ‘ஸ்டாபேஜ்’ ஊசி ஒரு தடவை போட்டுக் கொண்டால், வயதாவதை தடுத்து விடலாம். “என்றும் இளமை இளமை” என வாழ்க்கையை அணு அணுவாக அனுபவிக்கலாம். இந்தியாவில் மட்டும் சுமார் அறுபது லட்சம் பேர் 2014ல் இந்த ஊசியை போட்டுக் கொண்டார்கள்.

***


நாற்பது வருடங்களுக்கு பிறகு : வருடம் 2054
டெல்லி அரசு ஆராய்ச்சி மனை
டீன் டான்டேகர் கனைத்தார். “ என்ன டாக்டர் நாஞ்சே? எல்லாம் தயார் தானே? ப்ரொபசர் கிஷன் சந்த், ஆரம்பிக்கலாமா?”

கிஷன் சந்த் தலையசைத்தார். அவர் அரசு திட்ட கமிஷன் மற்றும் பிரதம மந்திரியின் ஆலோசகர். அவர் தலைமையில், அந்த ஆராய்ச்சி மையத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் ஆரம்பித்தது.


... தொடரும்Responses:
Want to post a response?

(Hello Guest, you need to login to post a response. Are you a New User? Register first.)