சரியா டீச்சர் !

Thread started by Muralidharan S on 6th February 2015 08:18 AMநான்காம் வகுப்பு ஏ பிரிவு. வனிதா வகுப்பறையில் நுழைந்தார். அன்று தான் பள்ளியில் ஆசிரியையாக அவர் வேலைக்கு சேர்ந்திருந்தார்.

வகுப்பில் ஒரே சத்தம். இளஞ்சிறார்கள் அமர்க்களம்.


“சைலன்ஸ்! சைலன்ஸ்! அமைதியாஇருங்க. நான்தான் இனிமேல் உங்கள் வகுப்பாசிரியை. என்பேரு வனிதா . சரியா!”

வகுப்பறை அமைதியானது.

வனிதா தொடர்ந்தார் “முதல்லே எல்லாரும் வரிசையாக அவங்க அவங்க பேரு, அப்பா பேரு , அம்மா பேரு , அப்பா என்ன பண்றாங்கன்னு ஒவ்வொருத்தரா சொல்லுங்கள்.”

ஒவ்வொருவராக மாணவர்கள் தங்களை பற்றி சொல்லி முடித்தனர். வனிதா ஒவ்வொருவர் பற்றியும் மிகுந்த கவனத்துடன் கேட்டுக்கொண்டார். அவர்களது பெயரை தனது மனதில் பதிய வைத்துக் கொண்டார்.

“ டியர் சில்ட்ரன் ! நீங்க எல்லாரும் எனக்கு செல்லம். சரியா! உங்க எல்லார்கிட்டேயும் எப்போதும் அன்பா இருப்பேன். நிறைய கதை சொல்லுவேன். நிறைய விளையாட்டு சொல்லி கொடுப்பேன். நீங்க ஒவ்வொருவரும் சிறந்த மாணவர் என பேர் வாங்க வைப்பேன். ஒருத்தரை கூட அடிக்கவோ திட்டவோ மாட்டேன் . சரியா?..... கிருஷ்ணா, வகுப்பை கவனிக்காமல் அங்கே என்ன பண்றே ? கீதாவோட சடையை பிடிச்சி ஏன் இழுக்கறே ? !”

வனிதா முடிக்குமுன்பே, வகுப்பு கொல்லென்று சிரித்தது. கிருஷ்ணனும் கீதாவும் பேந்த பேந்த விழித்தனர். டீச்சருக்கு அதுக்குள்ளே எப்படி எங்க பேர் தெரிந்தது?

டீச்சர் “சரி ! இப்போ எல்லாரும் ஒண்ணா கை தட்டுங்க. ஆனால் சத்தமே வரக்கூடாது! ”.

சில மாணவ மாணவிகள் சிரித்தனர். ஒரு பையன் “அதெப்படி டீச்சர் சத்தம் வராமல் கை தட்டறது?” டீச்சர் தன் இரு கைகளை மேலே தூக்கி ஆட்டினார். “இப்படித்தான். நம்மாலே மத்த வகுப்பிற்கு இடைஞ்சல் கூடாது. சரியா?”.

எல்லா குட்டிகளுமே கைகளை மேலே தூக்கி ஆட்டினர், களுக் களுக்கென்று சிரித்துக்கொண்டே.

“சரி ! இப்போ எல்லோரும் ஒரு தடவை “ஓ” போடுங்க, சத்தம் வராமல்!.” பசங்களுக்கு இந்த விளையாட்டு பிடித்து விட்டது. “உஷ்” என்ற சத்தத்துடன் ‘ஓ’ போட்டார்கள். வகுப்பு களை கட்டிவிட்டது.

அந்த நிமிடமே, அந்த நொடிமுதல் , ஆசிரியை மாணவர் இடையில் ஒரு பிடிப்பு , ஒரு ஒட்டுதல் ஏற்பட்டு விட்டது. “இந்த டீச்சர் ரொம்ப நல்லவங்க. ஜாலியாக இருப்பாங்க. அடிக்க மாட்டாங்க. நிறைய கதை சொல்வாங்க”. நம்பிக்கை வந்து விட்டது, குட்டிகளுக்கு.

பாடத்தில் கேள்வி கேட்காத வரை, எந்த டீச்சர் சொல்வதையும் அவர்கள் கேட்க தயார்.

அப்போது , வாசலில் நிழலாடியது. ஆளரவம். டீச்சர் திரும்பினார். அழுத முகத்துடன் ஒரு பையன். 8 அல்லது 9 வயது இருக்கும். அழுக்கு சட்டை, பரட்டை தலை, பட்டன் சரியாக போடாத அரை டிராயர். மாணவர்கள் எல்லோரும் “ஹோ” என்று சத்தம் போட்டனர்.

“சைலன்ஸ்! யார் நீ? என்ன வேணும்”என்று வாசலில் நின்ற சிறுவனை கேட்டார் வனிதா .

அதற்குள், ஒரு முந்திரிக் கொட்டை பையன் சொன்னான் “அது மணி டீச்சர்!. எப்போவுமே லேட்டாதான் வருவான். எதற்கெடுத்தாலும் அழுவான்.!” கோள் மூட்ட, சொல்லியா கொடுக்கணும் பசங்களுக்கு?

அதை சட்டை பண்ணாமல், “ஏன் லேட்?” டீச்சர் மணியை வினவினார்.

“லேட்டாயிடுச்சு டீச்சர்!.” நிமிராமல் மணி பதில்.
“அதான் ஏன்னு கேக்கிறேன்?” மணி பதில் சொல்லவில்லை.
“கேக்கிறேன் இல்லே! பதில் சொல்லு!”

ஒரு தடவை நிமிர்ந்து பார்த்து விட்டு, மணி மீண்டும் தலை குனிந்து கொண்டான். கண்களில் கண்ணீர். உதடு அழுது விடுவேன் என துடித்தது.

“சரி சரி வந்து உட்கார். இனிமே லேட்டா வரக்கூடாது,என்ன?”

வனிதாவுக்கு ஏதோ உறுத்தியது. எல்லோரும் சமம் என்றாலும், இந்த பையன் கொஞ்சம் சரியில்லை என்றே தோன்றியது அவருக்கு.

****

இரண்டு மூன்று நாட்களிலேயே அவரது கணிப்பு உறுதியாகிவிட்டது. மணி தினமும் பள்ளிக்கு நேரம் கழித்தே வந்தான். பாடம் படிக்க மறுத்தான். எந்த கேள்விக்கும் பதில் தெரியவில்லை. யாருடனும் பேச விரும்பவில்லை. விளையாட்டில் ஆர்வம் காட்ட வில்லை. எப்படி இந்த பையன் நான்காம் வகுப்பு வரை வந்தான்? இந்த வருடம் நிச்சயம் பெயில் தான்.

வனிதா மற்ற சக ஆசிரியர்களிடம், மாணவர்களிடம் மணி பற்றி விசாரித்தார்.

எஸ்தர் டீச்சர் சொன்னார் “அந்த பையனை எனக்கு ஒன்னாம் கிளாஸ்லேருந்து தெரியும் வனிதா டீச்சர் ! அப்போவெல்லாம் மணி ரொம்ப புத்திசாலி. கிளாஸ்ல முதல் மாணவன். ஆனால், பாவம் டீச்சர் , அவன்மூணாம் கிளாஸ் படிக்கிறப்போ அவங்கம்மா தவறிட்டாங்க. அப்போலேருந்து கொஞ்சம் கொஞ்சமா மந்தமாயிட்டான்.யாரோடும் பேச மாட்டான். பிரமை பிடித்தா மாதிரி இருப்பான். அடிக்கடி அழுவான் ! இதிலே, திக்கு வாய் வேறே ஆரம்பிச்சுதா, பசங்க கேலி பண்ண பண்ண, இந்த மாதிரியாயிட்டான். ! ”

வனிதா வுக்கு ரொம்ப வேதனையாகிவிட்டது. “இந்த சின்ன குழந்தைக்கு இவ்வளவு கொடுமையா? அம்மா இல்லாதது, யார் பண்ணின பாவம்? சே ! இந்த பையனை போய் தப்பா நினைச்சோமே!” வருந்தினார்.

“சரி, அவங்கப்பா இவனைப் பத்தி கவலைப் படறதில்லையா?” வனிதா வினவினார்.

சூள் கொட்டினார் எஸ்தர். “எங்க! அவங்கப்பா கவலையை மறக்க குடிக்க ஆரம்பிச்சிட்டார். குழந்தையை மறந்திட்டார். அவரோட கூட இருக்கிற வயசான தாத்தா பாட்டிதான் பையனையும் பேரனையும் சேத்து பாத்துக்கிறாங்க.”

“ஐயோ பாவமே!” வருந்தினார் வனிதா .
இனிமேல் மணியை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள, படிப்பு சொல்லி கொடுக்க முடிவெடுத்தார்.

****

அடுத்த நாள். மதிய உணவு நேரம். எல்லா குழந்தைகளும், ஒன்றாக உட்கார்ந்து டிபன் டப்பா திறக்க, மணி மட்டும் தனது டப்பாவுடன் தனியாக போவதை பார்த்தார் வனிதா . நேராக வந்து மணியின் பக்கத்தில் அமர்ந்தார்.

“நீ என்ன கொண்டு வந்திருக்கே மணி! டப்பாவைக் காட்டு.” கேட்டவுடன், மணி அழ ஆரம்பித்து விட்டான்.

“பாட்டிக்கு உடம்பு சரியில்லே டீச்சர். வெறும் பிரட் ஜாம் தான்”

“அழாதே மணி, நான் 5 இட்லி கொண்டுவந்திருக்கேன். வா. சேந்து சாப்பிடலாம். நீ 2 இட்லி ! சரியா?”

“வேண்டாம் டீச்சர்! அப்ப உங்களுக்கு? ”

“நான் கொஞ்சம் குண்டு இல்லையா! இளைக்கணும். 3 போறும்”

மணி முதல் தடவையாக சிரித்தான். கள்ளமற்ற சிரிப்பு. டீச்சர் கூட சேர்ந்து சாப்பிட ரொம்ப பெருமை..

அன்றிலிருந்து வனிதா வும் அவனும் சேர்ந்தே சாப்பிட ஆரம்பித்தார்கள். மணி தன் பாட்டி கிட்டே சொல்லி , அடம் பிடித்து, , புதிது புதிதாக டிபன் கொண்டு வர ஆரம்பித்தான். வனிதாவுடன் பகிர்ந்து கொண்டான் ! டீச்சர் கிட்டே மெது மெதுவா பேசவும் ஆரம்பித்தான். அதுவும் பகிருதல் தானே! பேச்சு எப்போதும், இறந்து போன அவனது அம்மாவை பற்றிதான் . எப்போதாவது ,அப்பாவை பற்றி.

மணியின் பிரச்னை , மன வலி , வனிதாவுக்கு புரிந்தது. அம்மாவின் மறைவு அவனுக்குள் ஏற்படுத்தியிருந்த ஏக்கத்தின் தாக்கம் தெரிந்தது. தான் என்ன செய்யலாம் , என்ன செய்ய முடியும் என யோசித்தார்.

அவர் மணியின் அப்பாவுடன், தாத்தா பாட்டியுடன் தனித்தனியே மணியின் பிரச்சனை பற்றி பேசினார். மணியின் வளர்ப்பு பற்றி கேட்டுக் கொண்டார். வீட்டில் அவனிடம் பெரியவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென விவாதித்தார். அவர்கள் , அவனுடன் வீட்டில் சேர்ந்து சாப்பிட, பேச, அவனுடன் கூடவே இருந்து விளையாட வலியுறித்தினார். அவனது தந்தையிடம், அவனுடன் தினமும் கொஞ்சம் நேரத்தை கழிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

ஒரு மாத காலத்திலேயே நல்ல முன்னேற்றம், மணியிடம். அவனது நடை, உடை பாவனையில். திக்குவதும் படிப்படியாக குறைந்து விட்டது. மணி, மற்ற மாணவர்களுடன் சேர, விளையாட ஆரம்பித்து விட்டான். டீச்சருக்கு வேண்டியவன் என்பதாலோ என்னவோ, மற்ற பசங்களும் இவனை கோட்டா பண்ணுவதை குறைத்துக் கொண்டனர்.

வருட கடைசி வர வர, மணி வகுப்பில் முதல் மாணவனாக மாறி விட்டான். வனிதா விடம் கொள்ளை பிரியம். டீச்சர் தான் எதற்கும் காரணம் என எண்ண ஆரம்பித்து விட்டான். மற்ற மாணவர்களுக்கும், வனிதா ஆசிரியையிடம் மிகுந்த அபிமானம்.

இவருக்கு மாணவர்கள் சேர்ந்து ‘சரியா டீச்சர்’ என்றே பேர் வைத்து விட்டார்கள். ஆகு பெயர்.

ஒரு நாள், வனிதா மணியின் வீட்டு கணக்கு நோட்டை திருத்தும் போது, நோட்டில் மணியின் முத்து முத்து கையெழுத்தில் “வனிதா டீச்சர் என்னோட பெஸ்ட் டீச்சர்” எழுதியிருந்ததை பார்த்தார்.

முழு வருட பரிட்சைக்கப்புறம், மணி வனிதா விடம் தனியாக வந்து, “அடுத்த வருஷம் எங்க கிளாஸ் நீங்க வர மாட்டிங்களா டீச்சர்? ”உருக்கமாக கேட்டான். “தெரியாது மணி, அதனாலென்ன, நான் உன்னை அடிக்கடி வந்து பாப்பேன்! நீ எப்போ வேணாலும் என்னை வந்து பாக்கலாம்! சரியா? நல்லா படிக்கணும் சரியா? ”

கண்கள் குளமாக, மணி கையை நீட்டினான். ஒரு பிளாஸ்டிக் மோதிரம். “இந்தாங்க டீச்சர், என்னோட ப்ரெசென்ட்”.

“இதைவிட எனக்கு வெகுமதி என்ன வேண்டும்?” கண்கள் பணித்தன வனிதா விற்கு. மோதிரத்தை வாங்கி கொண்டு மணியை கட்டி கொண்டார்.

***

அடுத்த வருடம். மணி 5ம் வகுப்பில் முதல் மாணவன். விளையாட்டிலும் முதல். கோப்பை வாங்கியவுடன் வனிதா விடம் ஓடி வந்தான். “வெரி குட்”- டீச்சர் பெருமையாக.

“ஆனாலும் நீங்கள் தான் என்னோட பெஸ்ட் டீச்சர்!” சொல்லிவிட்டு ஓடி விட்டான்.

வருடங்கள் ஓடின. மணி மேல் படிப்பு, கல்லூரி என்று சென்று விட்டான். ஆனால், வருடம் தவறாமல் அவனது கடிதம் வரும். நிச்சயமாக அதில், “நீங்க தான் என்னோட பெஸ்ட் டீச்சர்” எனும் வாக்கியம் இருக்கும். வனிதா ரொம்ப சந்தோஷப்படுவார்.

ஒரு நாள், மணியிடமிருந்து ஒரு கடிதம். “டீச்சர், நான் டாக்டர் பட்டம் பெற்று விட்டேன். உங்கள் ஆசியால். நான் பட்டம் பெறும் போது உங்களை தான் நினைத்து கொண்டேன். ”

வனிதாவுக்கு சிரிப்பு தான் வந்தது. ‘நான் அப்படி என்ன பண்ணி விட்டேன்!’ . இருந்தாலும் மனதுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

****

காலம் உருண்டோடியது. ஒரு நாள், மணியிடமிருந்து ஒரு கல்யாண பத்திரிகை. கூடவே ஒரு சிறு கடிதம் . “ டீச்சர், எனக்கு கல்யாணம். மும்பையில் நடக்க இருக்கிறது. நீங்கள் கட்டாயம் வந்து எங்களை ஆசிர்வதிக்க வேண்டும். இத்துடன், விமான டிக்கெட் இணைத்துள்ளேன். உங்களை உங்கள் கணவருடன் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். டீச்சர்! ”


*****

மும்பை. கல்யாண வரவேற்பு மண்டபத்தில், வனிதா , அவரது கணவருடன், 4ம் வகுப்பில் மணி கொடுத்த பிளாஸ்டிக் மோதிரத்தை அணிந்து முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். கல்யாணம் முடிந்த கைகையேடு , மணி தனது மனைவியுடன் மேடையிலிருந்து இறங்கி வனிதா விடம் வந்தான். அவரது காலில் விழுந்து வணங்கினான்.

“எங்களை ஆசிர்வதியுங்கள் அம்மா! உங்கள் அன்பு மட்டும் இல்லையென்றால் என்னால் இவ்வளவு உயர்ந்திருக்க முடியுமா?” மணி தன் மனைவியிடம் திரும்பி “என் அம்மா எனக்கு நினைவில்லை . இவங்க தான் என்னோட அம்மா போல் என்னிடம் பாசம் காட்டினாங்க. என்னோட பெஸ்ட் டீச்சர்!”

வனிதா வின் கண் கலங்கியது. மனதார மணியை வாழ்த்தினார்.

வாழ்க்கையில் இதை விட பரிசு, பதக்கம், மரியாதை வேறு என்ன வேண்டும் அவருக்கு.?***முற்றும்......

** எப்போதோ வலையில் படித்த ஒரு உண்மை சம்பவத்தின் தாக்கம்....Picutre Courtesy : google
Responses:
Want to post a response?

(Hello Guest, you need to login to post a response. Are you a New User? Register first.)