லேடி ஷிவ்காமீஸ் லவர்ஸ்

Thread started by chinnakkannan on 16th January 2015 10:55 PM***********************

லேடி ஷிவ்காமீஸ் லவ்வர்ஸ்...

**********************

சின்னக் கண்ணன்

****************************

இந்த நாஸ்டால்ஜியா எனத் தமிழில் அழைக்கப் படும் மலரும் நினைவுகள் இருக்கிறதே...அது ஒருவகையில் மனிதனுக்குக் கிடைத்த வரப் பிரசாதம் தான்...

பாருங்கள்.. 39வது வருடப் பாட்டில் இருக்கும் மன எம் பி3 ப்ளேயரை படக்கென்று 20 வருடத்திற்கு முன்னால் கொண்டு சென்றால்...

அட யார் இந்தப் பையன்.. இளமையாய், காதுவரை நீண்ட கிருதாவுடன், தலைகீழ்ப் ப மீசையுடனும்,கொஞ்சம் நல்ல சுமாரான அழகாவே இருக்கிறான்.. இன்னும் கொஞ்சம் உற்றுப் பார்த்தால்..அட அது சுந்தரா என்றும், சுந்து என்றும்
எருமைமாடே என்றும்(அப்பா) அழைக்கப்படும் சுந்தர்ராஜனாகிய அடியேன் தான்..அருகில் இருப்பது எனது அத்யந்த சினேகிதன் ராஜாராமன்..

நாங்கள் இருவரும் அப்போது மதுரை பழங்கானத்தத்தில் ராஜாராமன் வீட்டு மொட்டை மாடியில் நின்று கொண்டு"குபு குபு குபுகுபு நான் இன் ஜின் அக..டக டகடக டக நீ டிரைவர்" என்ற படியே சிறு தம் அடித்துக் கொண்டிருந்தோம்..

இந்த சமயத்தில் ராஜாராமனைப் பற்றிச் சொல்லியே தீரவேண்டும்.. ராஜாராமன் நல்ல உயரம்.. திடகாத்திரமான உருவம்..கொஞ்சம் நிறையவே கரிய உடல்..குறு குறு கண்கள்.. எதைச் செய்தாலும் ஒரு வித பெர்பெக்ஷன் இருக்கும் அவனிடம்.. அவனது இந்த குணங்களே கல்லூரி சேர்ந்த மூன்று மாதத்தில் என்னை அவனிடம்
நெருங்க வைத்திருந்தது..

அதுவும் ப்ளஸ்டூ முதல் செட்டாய் இருந்து, ஜம்மென்று காலேஜ் சேர்ந்தவுடன் தலைகால் புரியாமல் இருந்ததெனக்கு.
ராஜாராமன் தான் என்னைத் தடுத்தாட் கொண்டான்.."ஹேய் சுந்தரா..காலேஜ் சேர்ந்துட்டா மட்டும் பத்தாது..கொஞ்சம் நல்லா உழைச்சுப் படிக்கணும்.." எனக் கிருஷ்ணனாக மாறி உபதேசம் செய்தான்.. அதிலிருந்து அவனுடன் தான் எல்லாம்.. கட் அடிப்பதா, தம் அடிப்பதா,கலர் பார்ப்பதா..பாடம் கற்பதா..எல்லாம்
ராஜா தான்..

அன்று கல்லூரியிலிருந்து சீக்கிரமாக வந்துவிட்டோம் என நினைக்கிறேன்.. "வாடா என் வீட்டுக்கு.." என்ற ராஜாராமனைத் தட்ட முடியாமல் அவன் வீட்டிற்கு வந்து மத்தியானச் சாப்பாடு உண்டு-அவன் அம்மா கொல்லைப்புறம் சென்றிருக்கையில் மொ.மா சென்று தி.த அடிக்கையில் அழைப்புமணி எஸ்.ஜானகி குரலில் ( அந்தக் காலம் சார்..)ம்ம்ம் எனச் சிணுங்கியது.. பாதி தம்மை மனசில்லாமல் கொன்று கிடுகிடுவென ஓடிச் சென்று வாசற்கதவைத் திறந்த ராஜாராமன் முகத்தில் எதிர்பாராமல் ஆஸ்கார் அவார்ட் வாங்கிய நடிகையைப் போல பலதரப்பட்ட உணர்ச்சிகள்..

பின்னால் வந்த எனது கண்களுக்கு அந்த வனிதை தட்டுப் பட்டாள்.. அழகாய் ஹாப் சாரி என்றழைக்கப் படும் தாவணி (சிகப்பு நிறம்..)அணிந்திருந்தாள்..நல்ல சிகப்பு நிறம். கொஞ்சம் குள்ளம் தான். முகத்தில் காம்பஸினால் நடு
மூக்கில் குத்தினால் வட்டம் வரைந்து விடலாம்.. வட்ட முகம்.. கண்கள்- கோல்கேட் பற்பசை உபயோகப் படுத்திய பற்களைப் போல மின்னின.

ராஜாராமனுக்கு நா கொஞ்சம் வறண்டு போக - என்னிடம்.."சுந்தரா..இது இது..ஷிவகாமி...என்னோட ப்ளஸ்டூ கிளாஸ்மேட்.. இப்போ தியாகராஜால இஞ்சினியரிங்க் பண்றாள்.. வா..ராணி" என்றான்.. நான்சிவகாமியின் பின்னால் பார்த்தேன்.. யாரும் இல்லை..எனது குழப்பத்தைப் புரிந்து கொண்டவனாக
சிரித்தான்,."ராணிங்கறது அவளது செல்லப் பெயர்ப்பா.."

சிவகாமி சற்றே மெல்லிய புன்சிரித்து "ஸோ யூ ஆர் தெ பேமஸ்
சுந்தரா..கவிஞர்..இல்லையா.." எனச் சொல்லிக் கை நீட்ட எனக்கு அச்சம்,மடம் நாணம் எல்லாம் வந்தன..

"சே..சே.. கவிஞர் எல்லாம் ஒன்றும் இல்லைங்க.. ஏதோ கிறுக்குவேன்..அவ்ளோ தான்....' எனச் சொல்லிய படியே கைகுலுக்கி ராஜாராமனை முறைத்தேன்..

"ம்ம் எனக்குத் தெரியுமே..அதுவும் எழுதற லெட்டர்ல எல்லாம் உங்களைப் பத்தி இவர் எழுதாம இருக்கறதில்லை..." என சிவகாமி பதிலிறுத்ததும் - என் மனத்தில் யாரோ பெரிய குத்து விளக்கை ஏற்றி ஒளியேற்றினார்கள்.."என்ன இவள் இவர்..என்று இவனைச் சொல்கிறாள்.."

இதற்குள் பேசிய வண்ணம் ரா.ரா வும் ஷிவராணியும்..உள்ளே சென்றிருக்க அவர்களை என் கண்களால் ஒற்றிப் பார்த்ததில்...பளீரென ராஜாராமன் கிரீடமெல்லாம் தரித்து கறுப்பு ராமனாகவும், ஷிவகாமியும் கிரீடம்,
பட்டுச்சேலை எல்லாம் அணிந்து சற்றே குள்ள சீதையாகவும் தென்பட்டாள்..இதில் என் ரோல் என்ன..அனுமனா லஷ்மணனா...என யோசித்துப் பின் பி.எஸ். வீரப்பாவைப் போல 'சபாஷ் சரியான ஜோடி" என மனதிற்குள் ஒரு சபாஷ் போட்டேன்..

"என்னடா அங்கேயே நின்னுட்டே" என்றான் ராஜாராமன்..உள்சென்றால் சிவகாமி அவன் அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தாள்..அவ்வப்போது ராஜாராமனை நோக்கி அழகிய மைவிழிப்பார்வைகள் விட்டுக் கொண்டிருந்தாள்.. ரா.ராவும் தர்மரின் தேர் போல தரையை விட்டு ஓரடி மேலேயே மிதந்து கொண்டிருந்தான்.

ஒருவழியாய் சில நேரம் இருந்து விட்டு (சுமார் இரண்டுமணி நேரம்) மூன்று மணிவாக்கில் ஷிவகாமி கிளம்பிப் போக, நான் ராஜாராமனைக் கொக்கி போட்டுப் பிடித்தேன்..

'என்னடா..லவ்வரா.."Responses:
Want to post a response?

(Hello Guest, you need to login to post a response. Are you a New User? Register first.)