தெய்வங்களும் தலங்களும் பக்தர்களும்..

Thread started by venkkiram on 16th December 2014 09:13 AMஅந்த பீடபூமியில் பல தெய்வங்கள் நிரம்பி இருந்தன.. அதுபோக புதிது புதிதாக தெய்வங்கள் ஒவ்வொரு தலைமுறை இடைவெளியிலும் தோன்றிக் கொண்டே இருந்தன. மக்கள் ஒவ்வொருவரும் தத்தம் வயது, ஞானம், பக்திக்கு ஏற்ப தெய்வங்களை தேர்ந்தெடுத்துக் கொண்டு மார்க்கத்தை பரப்பிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு தெய்வத்திற்கும் கதைகள் உண்டு. அதை அப்படியே உண்மை என அந்தந்த பக்தர்கள் நம்பிக்கொண்டார்கள். பக்தர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். மிதவாதிகள். தீவிரவாதிகள். மிதவாதிகள் சில பல நேரங்களில் மற்ற தெய்வத் தளங்களுக்கும் சென்று வழிபடுவார்கள். மற்ற தெய்வங்களின் தன்மையையும் புரிந்துகொண்டு அத்தெய்வங்களின் மிதவாத பக்தகோடிகளிடம் நல்லுறவு பூணுவார்கள். தீவிர பக்தர்கள் தனது தெய்வம் மற்றும் தலங்களே சிறந்தது, தங்களது தலங்களை தினமும் இத்தனை மக்கள் வருகை தந்து பூஜித்து செல்கிறார்கள் என்ற சிறப்பம்ச பட்டியல்களை தயார் செய்து அதன் அடிப்படையில் தகவல்களை எங்கு சென்றாலும் பரப்புவார்கள். ஒரு சில மக்கள் மட்டுமே எல்லாத் தெய்வங்களையும் வழிபட்டு எல்லோரிடமும் சகஜமாக பழகும் தன்மை கொண்டவர்கள்.

பக்தர்களிடம் செல்வாக்கு, அதிகாரத் தளத்தில் நிறைய தகிடுத் தத்தங்கள் நடக்கும். சிலர் தான் இல்லையென்றால் வழிபாடே நடக்காமல் ஸ்தம்பித்துப் போய்விடும் என்ற அதீத தன்னம்பிக்கை கலந்த செருக்கோடு தலங்களில் திரிவதை கண்கூடாகவே பார்க்கலாம். சில தீவிர பக்தர்களின் நடவடிக்கை வேடிக்கையாக இருக்கும். தனது தெய்வத்தை சிலாகித்து பண் பாடுவார்கள். அதோடு நிறுத்திக் கொள்ளாமல் அவ்வாசகங்களை தன் உடம்பில் பச்சைக் குத்திக் கொள்வார்கள். அந்த பச்சை எல்லோருக்கும் தெரியும் வண்ணம் எதிர் குலதெய்வத் தளங்களிடம் சென்று வம்பு பேசி வருவார்கள். அப்படிப்பட்ட ஒரு தீவிரவாதி பக்தன்தான் இன்றையத் தலைமுறை மனோ.

ஆரம்பத்திலிருந்தே மனோவின் எடுத்தெறிந்து பேசும், அநாகரிகமான வார்த்தை உபயோகங்கள் பிற தெய்வங்களை வழிபடும் பக்தகோடிகளை நிறையவே கோபம் கொள்ளச் செய்திருக்கிறது. தான் ஆராதிக்கும் தெய்வத்தின் பக்தர்களே கூனி குறுகும் அளவுக்கு தர்மசங்கடமான சந்தர்ப்பங்கள் பல வந்து போயிருக்கின்றன. தினமும் காலையில் நன்றாகவே பேசுவான். இரவு என வந்துவிட்டால் குடி. போதை அவனை உண்டுவிடும். அப்புறம் யாருமே அவனை கட்டுப்படுத்த முடியாது. அவனது நடவடிக்கை வன்முறையைத் தூண்டும் வகையில் அமையும். எதிராளி யார், எப்படிப் பட்டவர், அவர்களது வயது, அனுபவம் என்ன எதையுமே எடுத்துக் கொள்ளமல் ரணகளம் செய்துவிடுவான். தலமே ரத்தக் களரியாகிவிடும். நிறைய முறை திருத்தலங்க்களிலிருந்து மாகாண தர்மகர்த்தாவினால் ஒதுக்கிவைக்கப் பட்டிருக்கிறான். அப்புறம் ஒரு மாதம் நல்லவனாக காட்டிக் கொண்டு முற்றிலும் யாரும் எதிர்பார்க்காத அணுகுமுறையில் வருவான். போகப் போக கழுத தேய்ந்து கட்டெறும்பு கதையாய் வேதாளம் முருங்கை மரமேறிவிடும்.. அதுவும் பண்டிகைக் காலங்களில் அவனது போக்கு மிகமோசமாக போய்விடும். தான் வழிபடும் தெய்வம் மட்டுமே தலங்களேசிறந்தது மற்றதெல்லாம் குப்பை என விஷவிதைகளை போறப்போக்கில் விதைத்துக் கொண்டே வருவான். தெய்வங்களோடு நின்றுவிடாமல் பக்தர்களையும் தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சனம் செய்வான். மாகாணமே சரியான சந்தர்ப்பம் ஒன்றிற்காக காத்திருந்தது.. எங்கே அவனை வீழ்த்தலாம் என திட்டங்கள் போடப்பட்டது. பலவாறு யோசித்து அவன் கும்பிடும் தெய்வத் திருவிழா அன்றே அவனுக்கு ஒரு முடிவு கட்டிவிடலாம், தனது சொந்த இடத்திலேயே ஒருவன் ரத்தம் கக்கும் அளவுக்கு துன்பப்பட்டால் அதன் அழுத்தம் பலமாக இருக்கும், அவனுடைய ஈகோவிற்கு நிரந்தரமாக சமாதி கட்டிவிடலாம் என யோசித்து அதுவே சரியான ஒன்று என எல்லோராலும் ஒருமனதாக ஒத்துக்கொள்ளப் பட்டு அதற்கான பணிகளை முடுக்கிவிட்டார்கள்.

மனோவின் தரப்பில் மிதவாத பக்தகோடிகள் தங்கள் நட்பு எல்லைகளை எதிர்தரப்பு பக்த உள்ளங்களோடு நீட்டிக்கும் வகையில் இருந்ததால் அந்த நட்பு பாலத்தின் வழியாகவே சக்ரவியூகம் திட்டமைக்கப் பட்டது. ஊர்த் திருவிழாவில் எங்கே மனோவை தாக்கலாம், எப்படி ஒவ்வொருவரும் வினையாற்றுவது என முன்கூட்டியே பேசிக் கொண்டார்கள். சொன்னது போலவே திருவிழா மாதமும் வந்தது.. மனோ குலத்தினர் ஒவ்வொருவரும் பூரிப்போடு வேலை பார்த்தார்கள். தோரணம் கட்டினார்கள். தனது தெய்வத்தின் அருமை பெருமைகளை எட்டுத் திசையிலும் பரப்பிக் கொண்டிருந்தார்கள். மனோ இதுபோன்ற வேளைகளில் தீர்த்தம் நிறையவே அருந்துவான். அருந்திவிட்டு குலதெய்வப் பாடல்களை, புராணங்களை கேட்பான், வாசிப்பான்... ஒவ்வொரு ரத்த நாளங்களும் வீரியம் கொண்டு அவனை ருத்ர தாண்டவம் ஆடச் செய்யும். வேண்டுமென்றே எதிரணி குலத் தெய்வங்களையும் பக்தர்களையும் அவர்களது திருத் தலங்களுக்குச் சென்றே வம்புக்கு இழுப்பான். இந்த முறையும் அப்படியே செய்தான்.. பக்தர்கள் கோபம் கொண்டார்கள்.. ஆனால் பெரியத் திட்டம் நிறைவேறும் தருணத்திற்காக காத்திருப்பதால் பொறுத்துக் கொண்டார்கள்.

தீமிதிக்கும் நாள். பிற தெய்வபக்தர்கள் மாறுவேஷத்தில் மனோ வந்துபோகும் இடங்களுக்கு வந்து சென்றார்கள்.. இந்தமுறையும் அவர்களை தகாத சொற்களில் திட்டினான் மனோ. உடனே எதிர்கொண்டு தாக்க ஆரம்பித்தார்கள்... இவனும் பதிலுக்கு பதில் தாக்கிக் கொண்டே இருந்தான்.. ஒருகட்டத்தில் மனோ வழுவிழந்து காணப்பட்டான். தனது அணி பக்தர்கள் கைகொடுப்பார்கள் என்ற தைரியத்திலேயே இன்னும் கொஞ்ச நேரம் மல்லுக்கு நின்று முற்றிலும் வழுவிழந்தான். ஆனால் யாருமே அவனுக்கு கைகொடுக்கவில்லை. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். உதவி செய்யவந்த ஒருசில தீவிரவாத பக்தர்களையும் மற்ற மிதவாதி பக்தர்கள் சாதுர்யமாகப் பேசி கட்டுப்படுத்திவிட்டார்கள். தனது கோயில் முன்பாகவே திருவிழா அன்றே தன்னை எதிராளிகள் இப்படி தாக்குவதை அதையும் தனது தரப்பு பக்தர்கள் கைகட்டி பார்த்து நிற்பதை அவனால் பொறுக்கமுடியவில்லை. பெருத்த அவமானமாக போய்விட்டது. இவர்களை ரொம்பவும் நம்பிவிட்டோமோ என மனதளவில் தலைகுனிந்தான். தலைக்கு ஏறிய போதை அவன் தன்மானத்தோடு சேர்த்து கால் வாழியே மண்ணில் இறங்கிவிட்டது. ஊர்கூடி தேரிழுத்தது போல, ஊர் கூடி மனோவின் மனோபலத்தை சுக்குநூறாக சிதைத்துவிட்டார்கள். இனி குழுவாக இயங்குவதில் பயனில்லை என உணர்ந்து தனது தெய்வத்தின் புகழ்பரப்பும் வேறொரு மாகாணத்தை நோக்கி நடந்தான். அங்கே இதுபோலவே இன்னொரு சம்பவம் அமைவதற்கு எல்லாக் காரணிகளும், சூழ்நிலைகளும் கூடி வந்தன இவனது வருகைக்கு முன்பாகவே.Responses:
Want to post a response?

(Hello Guest, you need to login to post a response. Are you a New User? Register first.)