பண்ணைபுரமும் பக்திமார்க்கமும்

Thread started by venkkiram on 21st November 2014 07:18 AMஇசைஞானியின் மந்திர இசையில் பக்தி உணர்வை வெளிப்படுத்தும் இசைப்பாடல்கள் ஏராளம். பக்திமார்க்கத்தில் ராஜாவின் இசைப்பணி 63 நாயன்மார்களின் வரிசையில் 64-ஆவது பக்தராக அவரை இணைக்கிறது என்பேன். பக்தி உணர்வுக்கு தனது மேன்மையான இசையால் அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் மனிதர். அவரது சொந்தக் குரலாக இருக்கட்டும், மற்ற பின்னணிப் பாடகர்களைக் கொண்டு பாடப்பட்ட பாடலாகட்டும், ஒவ்வொன்றுமே புறக்கணித்து செல்லமுடியாதவை. பல்வேறு மனித உணர்வுகளிலேயே பக்தி நிலை முற்றிலும் வேறுபட்டது எனலாம். தன்னை முழுவதுமாக ஒப்படைக்கும், குவியப்படுத்தும் அது ஒருவித மயக்கநிலை. ஹிப்னாடிசம் என்பார்களே! இசைஞானியின் இசையில் மயிலிறகு கொண்டு வருடும்படியான பக்திப் பாடல்களும் உண்டு, தன்னிலை இழந்து நரப்பு புடைக்க ஆட்டம்போட வைக்கும் ஒருவித பித்துப் பாடல்களும் உண்டு, தன்னிலையிலேயே இருக்கவைத்து கண்களில் நீர்வரவைக்கும் பாடல்களும் உண்டு. ரோமங்கள் சிலிர்த்து நம் சரீரமே அந்தரத்தில் பறப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் பாடல்களும் உண்டு. பொதுவாக ராஜா இசையில் பாடல் என வந்துவிட்டால் குரல் மட்டுமே பிரதானம் என்றில்லாமல் ஒவ்வொரு வாத்திய இசையுமே அதற்கான தனியுலகத்தில் இயங்கிக்கொண்டே கூட்டாக சேர்ந்து சேர்ந்து பலவண்ணப் பூக்களாக அலங்கரிக்கும் தன்மை கொண்டவை. பல ஊர்களில் அமைந்திருந்தாலும் ஒரு சில தளங்களில் அமைந்துள்ள திருக்கோயில்(கள்) நமக்கு ரொம்பவும் நெருக்கத்தை ஏற்படுத்தும் அல்லவா.. அதுபோல இத்திரியில் உங்களுக்குப் பிடித்த பக்திரசப் பாடல்களை பதியுங்கள். ஆனால் ஒரு வேண்டுகோள். பாடல் உங்களிடம் என்னென்ன வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்துகிறது, எவ்வளவு நெருக்கமான ஒன்று என்பதையும் அனுபவப் பூர்வமாக உணர்ந்து எழுதுங்கள். இணையத்தில் அதுபோல காணப்படும் கட்டுரைகளையும் இங்கே பகிரலாம். திரையிசைப் பாடல்கள், தனியிசைத் தொகுப்புகள் என பரவியிருக்கும் இசைச்சித்தரின் பக்திப் பாடல்களை பலதரப்பட்ட மக்களுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சி. இறைநம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே இங்கே பங்குபெறனும் என்ற விதிகிடையாது. இறைநம்பிக்கை இல்லாவிட்டாலும் ராஜாவின் பக்திப் பாடல்கள் உங்கள் மனதை எதோ செய்கிறது என உணர்ந்தாலோ, வேறொரு தளத்திற்கு பயணிக்கச் செய்கிறது என்பதை உணர்வுப் பூர்வமாக உணர்ந்தாலோ நீங்களும் இங்கே பங்குபெற்று உங்கள் எண்ணங்களை பதியலாம்.

இசைஜோதியில் ஒன்றாக கலப்போம்!

http://1.bp.blogspot.com/-fIrwgtJ2vO...Illayaraja.JPG

http://4.bp.blogspot.com/_nSPvsgb1MP...ilaiyaraja.jpgResponses:
Want to post a response?

(Hello Guest, you need to login to post a response. Are you a New User? Register first.)