தல புராணம்

Thread started by geno on 6th February 2013 03:50 PMஇந்தக் கவிதையை இதற்கு முன்பே ஒருமுறை இங்கே இட்டிருக்கிறேன். எங்கே எனத் தெரியக் கிடைக்கவில்லை..எனவே...


தல புராணம்
=============

சாக்கடையோர மூத்திரச் சுவரில்
'கர்ப்பக்கிரகம்' அமைந்த பிள்ளையார்
மூக்கு நீளம் முழுதும் நாற்றமேறி...
அவஸ்தையாய் 'நெளிந்தருளி'க் கொண்டிருக்கிறார்

மேலே கூரையில்லா விநாயகருக்கு
தினசரி பால்பழ தேனாபிஷேகம்
இல்லாவிட்டாலும்...
காக்கை எச்சம் கட்டாயம் உண்டு

'மெயின் ரோட்டோரக்' கணேசருக்கு
கம்பிக் கதவில்லை உண்டியலுக்குப் பூட்டுண்டு
பிள்ளையார் ஆண்டியாய்
உண்டியார் பத்திரமாய்

அர்த்தராத்திரியில் 'மன்மத' தேவர்களோடு
காட்சி அரங்கேற்றும் 'பத்து ரூபாய்' இரவுராணிகளின்
இலவச தரிசனம் கண்டுகளிக்கும்
அரசமரத்தடி 'பிரும்மச்சாரி'ப் பிள்ளையார்

கொழுக்கட்டையே பார்த்திராத
'பீ சந்து' முனைப் பிள்ளையாருக்கு
தினசரி இரவில் 'சாராய சதுர்த்தி'
கொண்டாடும் குடிமக்கள்

பரீட்சை மார்க்குகளின் விகிதாசாரப்படி
வேண்டுதலில் கூட்டியோ குறைத்தோ
தேங்காய் உடைக்கப்படும்
பள்ளி(க்கூட)வாசல் பிள்ளையார்

விடலைக்குமரிகள் குளிப்பதை
பார்க்க முடியாதபடி ஆலமர விழுதுகள்
மறைத்திருக்கும்... குளக்கரைக் கணபதி...
உடைமாற்றும்போது சாட்சியாக

கரையுடைத்து வெள்ளம்பெருகி
'அவல் பொரி எலி' யோடு
அடித்துச் செல்லப்பட்ட
ஆற்றங்கரை ஓரப் பிள்ளையார்

தொலைபேசி இணைப்புக்காக வெட்டப்பட்ட
'தூங்கு மூஞ்சி' மரக்கிளை விழுந்து
மூக்குடைந்து போன விநாயகர்
'வலம்புரியா?'...'இடம்புரியா?'

'பொன்னரைஞானும் பூந்துகிலாடையும்'
களவாடப்பட்டு...
காட்சி தரும் - பிளாட்பாரக்
'கோவண' கணேசர்

அழுகல் தேங்காயும் கூழான பழமும்
வாடிப்போன சாமந்தியுமே
விதிக்கப்பட்ட...
'சேரி'ப் பிள்ளையார்

புதுவருஷ உற்சவத் திருவிழாவின்
'வரவு செலவு' கணக்குக்கான அடிதடியில்
இழுத்துப் பூட்டப்பட்டு..
கோயிலில் சிறையிருக்கும்
'காலனி'ப் பிள்ளையார்

பக்தகோடிகளால் கட்டியிழுத்துவரப்பட்டு
பூரண அலங்காரத்தோடும் ஆத்திக கோஷங்களோடும்
'அடி உதை மிதி குத்து வெட்டு' பெற்று
'ஜல சமாதி' - செய்யப்படும்
கடற்கரை விநாயகர்

இப்படியாகத்தானே பல புண்ணியத் தலங்களில்
எழுந்து அருளியிருந்தாலும்...
அழும் குழந்தையை சிரிக்க வைக்கும்
யானை முகத் தொந்திக் 'காலண்டர் பிள்ளையார்'
எனக்குப் பிடித்தது.Responses:
Want to post a response?

(Hello Guest, you need to login to post a response. Are you a New User? Register first.)