நடிகர் திலகத்தின் "வசந்த மாளிகை" ஒரு காவியம்!

தெய்வமாக மதிக்கவேண்டிய அம்மா ஒரு தாய்ப்பாசம் இல்லாத ஒரு ஜமீந்தாரிணி, கொலைகாரி என்று அறிந்து குடிக்க ஆரம்பித்து குடிகாரனாக வளர்ந்தவிட்ட நல்ல இதயம்கொண்ட இளைய ஜமீந்தார், ஆனந்த் என்கிற சின்னதுரை தான் சிவாஜி. இவரை ஏன் நடிகர் திலகம் னு சொல்றாங்க னு யாருக்கும் இன்னும் சந்தேகம் இருந்தால் இந்த டி வி டி பார்க்கவும்!

குடிகாரராக இருக்கும் இளைய ஜமீன் இடம் பர்சனல் செக்ரட்டரியாக வேலைக்கு சேரும் அழகான கவர்ச்சியான, நேர்மையான அகம்பாவம் பிடித்த, சுயமரியாதையை ஒரு போதும் விட்டுக்கொடுக்காத லதாவாக நடித்துள்ளார் வாணிஸ்ரீ.

லதா, குடிகாரராக, பெண்பொறுக்கியாக இருக்கும் சின்னதுரை ஆனந்தை நற்பாதைக்கு கொண்டு வருகிறார், ஆனந்த் தன் மனதை லதாவின் அழகுக்கும், அன்புக்கும் பறிகொடுக்கிறார். தன்னை நல் வழிப்படுத்திய லதாவுக்கு தன் இதயத்தை அளிக்கிறார். லதா ஆசையுடன் அந்த அன்பு இதயத்தை பெற்றுக் கொள்கிறார்.

ஜமீந்தார் ஏழைப்பெண்ணை மணப்பதா? அவ்வளவு சீக்கிரம் ஜமீன் விட்டுவிடுமா? இதுதான் படம்! தெலுங்கு படத்தை ரி-மேக் செய்த படம் இது. தமிழில் சுமூகமாக முடிகிறது.


இந்தப்படத்தில் சிவாஜி பேசும் சில வசனங்கள்!

* தன்னிடம் புதிதாக வேலைக்கு வரும் பெண்ணிடம்:

இதுதான் அழகாபுரி ஜமீன். இங்கே இருக்கிற ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் எங்களுக்குத்தான் சொந்தம்னு எல்லோரும் சொல்லிக்கிறாங்க ஆனால் கடைசியில் மனுஷனுக்கு தேவை ஆறடிமண்!

* தன்னைப்பெற்ற தாய்ப்பாசமில்லா அம்மாவிடம்:

பாசமா? அது ஏதும்மா இந்த வீட்டிலே?

*லதாவை கற்பழிக்க முயலும் கெட்டவனிடம்:

இடியட்! சரினா யாரா இருந்தாலும் விடக்கூடாது. வேண்டாம்னா விலைமாதா இருந்தாலும் தொடக்கூடாது. அதுதான் நம்ம ப்ரின்சிப்பிள்.

* தன்னை தன் சுற்றத்தார் அவமானப்படுத்தும்போது, லதாவிடம்:

குடிகாரன்கூட வருத்தப்படுமளவுக்கு பேசுவதுதான் இவர்களுக்கு தெரிந்த மரியாதை.

* நன்றியுள்ள வேலைக்காரனிடம்:

பொறந்தநாளா? எனக்கா? நான் பிறந்தது எப்போ என்று என்னைப்பெத்த தாய்க்கும் தெரியாது, என்னை படச்ச ஆண்டவனுக்கும் தெரியாது, ஏன் எனக்கே தெரியாது. ஆனால் என் பொறந்த நாளை நீ மட்டும் ஞாபகம் வச்சிருக்கியே? இதை பாசம்னு சொல்வதா? இல்லை விஸ்வாசம்னு சொல்வதா? இதுதான் தூய்மையான அன்பு! அதான் அன்பை கடவுளுக்கு சமமா சொல்றாங்க இல்லையா? நான் யாருக்காக் பிறந்தேனோ, தெரியலை? ஆனால் நீ பிறந்தது மட்டும் எனக்காகத்தான்!


பாடல்கள்:

கண்ணதாசன் பாடல்வரிகள் எழுத கே வி மஹாதேவன் இசையமைக்க டி எம் சவுந்தர்ராஜன், பி சுசீலா, எல் ஆர் ஈஸ்வரி பாடியவை.

* மானிட ஜாதியே * ஏன் ஏன் ஏன் * குடிமகனே * கலைமகள் கைப்பொருளே * மயக்கமென்ன
* இரண்டு மனம் வேண்டும் * யாருக்காக! எல்லாமே நல்ல பாடல்கள்!


இந்தப்படத்தில் காதல் கட்டமா இருக்கட்டும், வசனமா இருக்கட்டும், ஸ்டயிலாக இருக்கட்டும், சிவாஜி பின்னி இருப்பார்.

வாணிஸ்ரீ இவருக்கு ஈடுகொடுத்து நடித்து இருப்பார். கவர்ச்சியிலும், காதலிலும், தன் சுயமரியாதயை காப்பாற்றும் சீன்களிலும் கிளப்பி இருப்பார் வாணிஸ்ரீ.

பாலாஜி, மேஜர் சுந்தர் ராஜன், ஸ்ரீகாந்த், நாகேஷ், வி கே ராமசாமி, ரமாபிரபா, சுகுமாரி, பேபி ஸ்ரீதேவி எல்லோரும் நடித்துள்ளார்கள்

வசந்த மாளிகை, 1972 வில் வந்த ஒரு காவியம்தான்!