Results 81 to 88 of 88

Thread: TAMILAR' GOD RAMA

Threaded View

  1. #39
    Member Junior Hubber
    Join Date
    May 2007
    Posts
    35
    Post Thanks / Like
    அகநானூறு
    சங்கத் தமிழர்களின் அக வாழ்க்கையை (Family) அக-நானூறும், புற வாழ்க்கையை (Social) புற-நானூறும் காட்டுகின்றன!
    அகப் பொருள் பாடல்களாக 400 பாட்டுக்களின் தொகுப்பு=அக-நானூறு!
    145 புலவர்கள் பல்வேறு காலங்களில் (சங்க காலங்களில்) பாடியது!

    அகநானூறுக்கு நெடுந்தொகை என்ற ஒரு பெயரும் உண்டு! குறுந்தொகைக்கு எதிர்ச்சொல்!
    நீண்ட கவிதையாக இருக்கும்! 13-31 அடிகள்! அதனால் இந்தப் பெயர்!

    பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதி வேண்டிக் கொள்ள, இதை உருத்திரசன்மன் என்ற கவிஞர், அதே சங்க காலத்திலேயே தொகுத்தார்!

    சங்கத் தமிழ் மக்களின் காதல் வாழ்க்கை, தலைவன்-தலைவி குணங்கள், காதல் உரையாடல்-ன்னு, அகநானூறு இதமா குளுகுளு-ன்னு இருக்கும்!

    மூன்று துறைகளாக வரும் அத்தனை பாடல்களும்!
    1. களிற்றி யானை நிரை = யானைக் கூட்டம் நடந்து வருவது போல் மிடுக்கு நடை
    2. மணிமிடை பவளம் = மணியும் பவளமும் கோர்த்தாற் போல் கருத்துக்கள்
    3. நித்திலக் கோவை = முத்து போல் ஒரே மையக் கருத்து!

    அப்பவே...கஞ்சி போட்டு, சட்டைகளை Iron பண்ணிப் போடும் வழக்கம் காதலனுக்கு இருந்ததையெல்லாம் காட்டும்!
    காதலிக்கோ நிழல்-காண்-மண்டிலம் (அதாங்க பாக்கெட் கண்ணாடி)!

    தலைவன்-தலைவி மட்டுமில்லாமல், தோழி, செவிலித் தாய், நற்றாய், பாணன் போன்றோர் சொல்வதெல்லாம் கூடக் கூற்றாக வரும்! பரத்தையர் கூற்று கூட உண்டு!
    அகநானூறு அகப் பொருள் மட்டுமே பேசினாலும், அதில் கூட திருமால் என்னும் பண்டைத் தமிழ்க் கடவுள் பேசப்படுகிறான்! பார்ப்போமா?

    இது திருமால்-முருகன் சேர்த்திப் பாட்டு! ஒருமைப் பாட்டு!
    இரண்டு தமிழ்க் கடவுளர்களும்,
    அகநானூறில் ஒரு சேர வருகிறார்கள்!


    அது மட்டுமா? தன் ஆருயிர்த் தோழனாகிய இன்னொரு புலவரையும் இந்தப் பாடலில் வாய் விட்டு வாழ்த்துகிறார் கவிஞர்!

    தான் மட்டுமே தன் படைப்புகளில் தொனிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், தன் தோழனையும் அவன் படைப்புகளையும், ஒவ்வொரு இடத்திலும் நினைத்துப் பார்த்து....இன்புறும் இனிமை!
    * இவர் பெயர் = மருதன் இளநாகன் = திருமால் அன்பன்
    * இவர் தோழன் பெயர் = நல்லந்துவன் = முருக அன்பன்

    (அகம் 59: தலைமகன் பிரிவின் கண் வேறுபட்ட தலைவிக்கு, தோழி சொல்லியது! மரத்தை வளைத்துக் கீழே சாய்த்தானே, அந்தத் திருமால்! அதைப் போல் இந்த யானை மரத்தை வளைத்து தன் பிடிக்கு ஊட்டுவது பார்)


    துறை: களிற்றியானைநிரை
    திணை: பாலைத் திணை
    பாடல்: 59
    பாடியவர்: மதுரை, மருதன் இளநாகனார்!
    (திருமாலைப் பாடிய பல சங்கக் கவிஞர்கள் மதுரைக்காரவுங்களாவே இருக்காங்களேப்பா! ஆகா!)

    தண் கயத்து அமன்ற வண்டு படு துணை மலர்ப்
    பெருந் தகை இழந்த கண்ணினை, பெரிதும்
    வருந்தினை, வாழியர், நீயே! வடாஅது

    வண்டு வந்து உட்காரும் அழகான பூப்போன்ற உன் கண்கள், இப்படி அழுது அழுது, பொலிவு போய் விட்டதே! வருந்தாதே டீ!

    வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை,
    அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர்
    மரம் செல மிதித்த "மாஅல்" போல,

    ஆற்று மணல் துறையில், ஆயர் பெண்கள், குளித்து விட்டு வரும் போது...
    அவர்களின் மெல்லிய புடைவைகள் ஒளித்து வைத்திருந்தானே...
    அந்தப் புடைவைகளை எல்லாம் குருந்த மரத்தின் கிளையில் தொங்க விட்டிருந்தானே...

    அவர்கள் கெஞ்ச, கொஞ்ச...அவர்கள் மீண்டும் உடுத்திக் கொள்ளுமாறு...
    இந்தக் கண்ணன் (மாஅல்=மால்),
    மரத்தை வளைத்துக் கிளையை அவர்களிடம் சாய்த்தான் அல்லவா!

    புன் தலை மடப் பிடி உணீஇயர், அம் குழை,
    நெடு நிலை யாஅம் ஒற்றி, நனை கவுள்
    படி ஞிமிறு கடியும் களிறே தோழி!

    மரம் செல மிதித்த மாஅல் போல, இந்தக் களிற்று யானை, தன் பிடி யானைக்கு, மரம் வளைத்து, உண்ணக் கொடுப்பதைப் பாருடீ! அதே போல், பிரிந்து சென்ற தலைவனும் திரும்ப வந்து, உனக்கு உண்ணக் கொடுப்பானடீ!

    சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல்,
    சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து,
    அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை

    சூரனை அழித்த சுடர் வேல் முருகன்! சினம் மிகு முருகன்! அவன் இருக்கும் பரங்குன்றம்! அதைப் பரிபாடலில், அந்துவன் (நல்லந்துவனார்) பாடினான் அல்லவா! சந்தன மரங்கள் ஓங்கும் அந்த மலையில்...

    இன் தீம் பைஞ் சுனை ஈரணிப் பொலிந்த
    தண் நறுங் கழுநீர்ச் செண் இயற் சிறுபுறம்
    15 தாம் பாராட்டிய காலையும் உள்ளார்
    வீங்கு இறைப் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டு
    அருஞ் செயற் பொருட்பிணி முன்னி, நப்
    பிரிந்து, சேண் உறைநர் சென்ற ஆறே.

    அந்த மலையில் உள்ள சுனை! அதில் உள்ள குவளைப் பூப் போல அழகான தலைவன், உன்னை எண்ணிக் கொண்டு இருக்கான்! பொருளீட்டத் தானே பிரிந்து சென்றுள்ளான்? வந்து விடுவான்!
    மரக்கிளை வளைத்துக் கொடுத்த திருமால் போல்,
    பெண் யானைக்கு வளைத்துக் கொடுத்த ஆண் யானை போல்,
    இதோ வந்து விடுவான்! இதோ வந்து விடுவான்!!

    அகநானூறு 137: திருவரங்கம் பங்குனித் திருநாள் விழா! அதற்குக் கூடும் மக்கள் கூட்டம்!


    தலைவன் பிரிவானோ என்று கருதி வேறுபட்ட தலைவிக்கு, தோழி சொல்லியது
    திணை: பாலைத் திணை
    பாடியவர்: உறையூர் முதுகூத்தனார்

    ஆறுசெல் வம்பலர் சேறுகிளைத்து உண்ட
    சிறும்பல் கேணிப் பிடியடி நசைஇச்,
    களிறுதொடூஉக் கடக்குங் கான்யாற்று அத்தம்
    சென்றுசேர்பு ஒல்லார் ஆயினும், நினக்கே-

    சேறு கிண்டி அதில் ஊறும் நீரை உண்டவாறே செல்லும் பிடியின் (பெண் யானையின்) சுவடுகளைப் பார்த்தவாறு தான் களிறும் (ஆண் யானையும்) செல்லும்!
    அவ்வாறு உன் தலைவன் செல்ல மாட்டான், ஆனாலும்...

    வென்றெறி முரசின் விறற்போர்ச் சோழர் 5
    இன்கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண்,
    வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று
    உருவ வெண்மணல் முருகுநாறு தண்பொழிற்

    வெற்றியைப் பற்றி வீரமுரசு கொட்டும் சோழர்களின் ஊர் உறையூர் (உறந்தை)! அங்கு இன்-கடுங்-கள், இனிமையாகவும் கடுமையாகவும் இருக்கும் சுவை கொண்ட கள் மிகவும் புகழ் பெற்றது! காவிரியின் தண்ணீர் கரையை அலைக்க, வெண்மணலை ஒட்டிய சோலைகள் உண்டு!

    பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்
    வீஇலை அமன்ற மரம்பயில் இறும்பில் 10
    தீஇல் அடுப்பின் அரங்கம் போலப்,
    பெரும்பாழ் கொண்டன்று, நுதலே, தோளும்,

    அங்கு அரங்க இறைவனின் பங்குனித் திருநாளில் பெருத்த கூட்டம் கூடும்! ஆனால் அதற்கு அடுத்த நாள், கூட்டம் குறைந்து வெறிச்சோடி இருக்கும்!
    அந்தச் சோலைகளில், முந்தைய நாள், மக்கள் தாங்கள் உண்ணுவதற்காகச் செய்த அடுப்பில், தீயே இருக்காது! வெறும் அடுப்பு தான் இருக்கும்! அது போல நன்றாக விழாக் கோலம் போல் இருந்த உன் நெற்றி, இப்படிப் பொலிவு இழந்து போனதே!

    தோளா முத்தின் தெண்கடற் பொருநன்
    திண்தேர்ச் செழியன் பொருப்பிற் கவாஅன்
    நல்லெழில் நெடுவேய் புரையும்
    தொல்கவின் தொலைந்தன: நோகோ யானே

    உன் தோள், துளையிடாத முத்துக்கள் கொண்ட செழியனது (பாண்டியன்) பொதிகை மலையில் உள்ள மூங்கில் போல் இருக்கும்! அந்த அழகும் இன்று கெட்டது! உன் நிலை கண்டு உன் தோழியான எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளதே!

    அகநானூறு 9: தமிழக எல்லையான நெடுமால் குன்றம் என்னும் வேங்கட மலையும் தாண்டித் தலைவன் பொருளீட்டச் சென்று, தலைவியைக் காணத் திரும்பி வேகமாக வருவது!


    திணை: பாலைத் திணை
    பாடியவர்: கல்லாடனார்
    வினை முற்றி மீண்ட தலைமகன், தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது

    கொல்வினைப் பொலிந்த, கூர்ங்குறு புழுகின்,
    வில்லோர் தூணி வீங்கப் பெய்த
    அம்புநுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை
    செய்படர் அன்ன செங்குழை அகந்தோறு,
    இழுதின் அன்ன தீம்புழல் துய்வாய் 5
    ...
    ...
    கொடுநுண் ஓதி மகளிர் ஓக்கிய
    தொடிமாண் உலக்கைத் தூண்டுரல் பாணி
    நெடுமால் வரைய குடிஞையோடு இரட்டும்
    குன்றுபின் ஒழியப் போகி, உரந்துரந்து,
    ஞாயிறு படினும், 'ஊர் சேய்த்து' எனாது, 15

    (நெடியோனான திருமால் குன்றம் கடந்து, அக்குன்றிலே ஆந்தைகள் மாறி மாறி ஒலிக்க, அதுவும் பின் போகி, ஞாயிறு மறைந்தும், இன்னும் ஊர் வரவில்லையே! அவளைப் பார்க்க ஆவலாய் உள்ளதே!
    எம்மினும் எம் நெஞ்சு விரைந்து சென்று அவளை எய்திக் குறுகித் தோய்ந்தன்று கொல் - என்று தலைவன் தேர்ப்பாகனுக்குச் சொல்கிறான்)

    துனைபரி துரக்கும் துஞ்சா செலவின்
    எம்மினும், விரைந்து வல்எய்திப் பல்மாண்
    ...
    ...

    தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ-
    நாணொடு மிடைந்த கற்பின், வாணுதல்,
    அம் தீம் கிளவிக் குறுமகள்
    மென்தோள் பெறநசைஇச் சென்றவென் நெஞ்சே? 26
    Last edited by lathaji; 26th August 2011 at 07:47 AM.

Similar Threads

  1. Shri Rama Jaya Mangalam - Lyrics of this PS Song
    By Sundar Krishnan in forum Indian Classical Music
    Replies: 3
    Last Post: 18th January 2012, 10:38 AM
  2. Replies: 2497
    Last Post: 2nd January 2012, 02:13 PM
  3. Padmashree Dr. Kamal Haasan's Rama Shyama Bhama
    By alwarpet_andavan in forum Indian Films
    Replies: 38
    Last Post: 2nd February 2006, 09:07 AM
  4. Bombay Jayashree's RAMA album
    By Umesh in forum Indian Classical Music
    Replies: 0
    Last Post: 13th March 2005, 07:58 AM
  5. SIVAN + RAMA = SEEVA HAREE
    By kandiban in forum Current Topics
    Replies: 1
    Last Post: 30th January 2005, 04:11 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •