பாடல் : நினைத்ததை நடத்தியே முடிப்பவன்
படம் : நம்நாடு (1969)
பாடியவர்கள் : டி.எம். சௌந்தர்ராஜன், எல்.ஆர். ஈஸ்வரி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர்: வாலி

எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதிக்கும் வேற்றுமைகள் துளிர்விடத் துவங்கியிருந்த காலம் அது. தன்னுடைய திரைப்படங்களில் கறுப்பு-சிவப்பு சட்டைகள், உதயசூரியன், கழகம் என்ற வார்த்தைகள் வரும்படியாக வெளிப்படையாக வசனங்கள் அமைத்து, பாடல் வரிகள் அமைத்து திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வலு சேர்த்துக் கொண்டிருந்த எம்.ஜி.ராமச்சந்திரன், அதே ஆயுதத்தை தி.மு.கவிற்கு எதிராக வெளிப்படையாக முதன் முதலில் பயன்படுத்திய படம் இது. இதன் அரசியல் பிண்ணனிகள் ஒருபுறமிருக்க அற்புதமான பாடல்களால் படத்திற்கு வலு சேர்த்தார் மெல்லிசை மன்ன்ர் எம்.எஸ்.வி. பட்டிதொட்டியெங்கும் ஒலிபெருக்கிகளில் "நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான்.. நான்..." என்று முழங்கிக்கொண்டிருந்த காலம் அது.

பெரும்பாலும் அதன் வரிகளுக்காக அறியப்படும் இந்தப் பாடல் தமிழ்த் திரையிசை உலகில் ஜாஸ் பயன்பாட்டில் ஒரு மைல்கல். பெருங்குழு ஜாஸ் (Big Band Jazz)வடிவத்தை முழுமையாக அடியொற்றி அமைந்த பாடல் இது. துவக்கத்திலேயே ஜாஸின் அற்புத சாத்தியங்களை எம்.எஸ்.வி தெளிவாக எட்டியிருப்பார். முன்னீடு முடிந்து சௌந்தர்ராஜன் துவங்குமுன் ஒரு நொடிக்கு ஒரு சிறிய கிடார் ஒலி வந்துவிட்டுப் போகும். கிட்டத்தட்ட நானும் இருக்கிறேன் என்று ஆரம்பத்திலேயே அறிவித்துவிடுவதைப்போல. இதற்காகவே நான் பல தடவைகள் முன்னீட்டை மாத்திரம் பல தடவைகள் கேட்டிருப்பேன். நினைத்ததை... நடத்தியே... முடிப்பவன் - என்று ஒருவகையில் நீட்டி முழக்கிப்பாடுவது பெரும்பாலான செவ்வியல் இசைவடிவங்களில் வராது. அவை ஒற்றைத்தாளகதியில் சீரான ஒட்டத்தில்தான் வரும். ஜாஸில் இந்தக் கட்டுப்படற்ற தன்மை அதன் தனித்துவத்திற்கு முக்கிய காரணம். 'என்னிடம் மயக்கம்" என்று சொன்னவுடன் அதைத் தொடர்ந்துவரும் ட்ரம்பெட்டின் இசை ஸ்விங் வடிவத்தின் அமைப்பு.

கொஞ்சம் நீளமான பாடல் இது. கிட்டத்தட்ட ஏழு நிமிடங்களுக்கு வரும். இதில் டி.எம்.எஸ் குரலுக்குப் பதிலாக ஒரு ட்ரம்பெட்டையும், ஈஸ்வரி குரலுக்குப் பதிலாக ஒரு சாக்ஸஃபோனையும் மாற்றிப்போட்டிருந்தால் எப்படியிருக்கும் என்று பலநாட்கள் நான் கற்பனை செய்துபார்த்திருக்கிறேன். முதல் இடையீட்டில் வரும் கிட்டாரின் இசைவும் அதனுடன் இணைந்துவரும் பெண்களின் சேர்குரலிசையும் அற்புதமாகக் கையாளப்பட்டிருக்கும். இந்தவகை பெண்களின் சேர்குரலிசை ஒருவகையில் எம்.எஸ்.வியின் முத்திரையாக மாறிப்போனது. உலகம் சுற்றும் வாலிபன் (பச்சைக்கிளி), ரிக்ஷாக்காரன் (அழகிய தமிழ் மகள்), போன்ற பல படங்களில் இந்தவகை பெண்களின் சேர்குரலிசையை எம்.எஸ்.வி அற்புதமாகக் கையாண்டிருப்பார். முதலாவது இடையீடு அற்புதமான இசைக்கலவைகளால் ஆனது.

பெரும்பாலான பெருங்குழு ஜாஸ்களில் வரும் வடிவத்தைப்போல பாடல் முழுவதும் சௌந்தர்ராஜன் அல்லது எல்.ஆர். ஈஸ்வரி பாடும் இடங்களில் ஒரே வகையான தாளத்தை (மிகவும் எளிமையானது)க் கையாண்டு முழுக்கவனமும் பாடுபவரின் குரலின்மீது படியும்படி இசை ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும். இதன் இறுதியில் தாளகதி மாறி, பிற வாத்தியங்கள் சேரும்பொழுது ஒருவித துள்ளலுடன் ட்ரம்ஸ் அந்த மாற்றத்தை வழிநடத்தும். இதுபோன்ற வடிவத்தை பல ஜாஸ் இசைகளில் கேட்கமுடியும். இந்த முறைதான் தனித்தனியாக ஒவ்வொரு வாத்தியக் கலைஞர்களும் தங்களின் விசேடத்திறனைக் காட்டினாலும் இசை ஒருவித சீரற்ற (ஆனால் நியதியான) ஒட்டத்தில் இருக்க உதவுகிறது.

பாடலின் இன்னொரு முக்கியமான இடம் இரண்டாவது இடையீட்டிற்கு முன் வருவது. வழக்கமாக பல்லவி ஒருமுறைதான் நம் திரைப்படங்களில் இடையில் வந்துபோகும். ஆனால் இதில் சற்றும் எதிர்பாராத விதமாக "நினைத்ததை நடத்தியே..." என்று மூன்று முறை மாறிமாறி வந்துவிட்டுப் போகும். இது ஜாஸின் சுயகற்பனை வடிவம். (ஆனால் டி.எம்.எஸ். இதிலெல்லாம் விசேடமாக எதையும் செய்யாமல் ஒரே மாதிரி திரும்பத்திரும்பப் பாடிக்கொண்டிருப்பது கொஞ்சம் அபத்தமாக இருக்கும். வேறு சுய கற்பனையுள்ள பாடகர் இந்த இடத்தில் வைரமாக ஜொலித்திருக்க முடியும். டி.எம்.எஸ்ஸிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது என்றுதான் தோன்றுகிறது).

முதல் இடையிட்டில் கிட்டார், ட்ரம்பெட், சேர்குரலிசை என்று கலவையாக வரும். ஆனால் இரண்டாவது இடையீட்டில் இதற்குச் சற்றும் மாறாக பெரும்பாலும் ட்ரம்ஸ் மாத்திரமேயாக, பின்னர் தனியாக சேர்குரலிசை என்று வேறு வடிவத்தில் வரும். திரும்பவும் மூன்றாவது இடையீட்டில் பழைய வடிவம் திரும்ப வரும். அந்தக் காலங்களில் பாடல் முழுவதும் ஒரே சீரான ஒட்டத்தில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். (உதாரணமாக கே.வி.மகாதேவனின் பல பாடல்களில் ஒரே வகையான இடையீட்டு இசைதான் இருக்கும் அதேதான் திரும்பத்திரும்ப வந்து போகும்). இப்படிப்பழக்கப்படிருந்த காதுகளுக்கு இந்தப் பாடல் ஒரு வித்தியாசமான, புரியாத புதிராகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

எல்.ஆர். ஈஸ்வரி குரலைப்பற்றி இந்தத் தொடரில் நிறையவே சொல்ல வேண்டியிருப்பதால் இங்கே எதுவும் சொல்லப்போவதில்லை. விசேடம் என்ன என்று புரியவேண்டுமென்றால் "முதல் நாள்..." என்று வரும் இரண்டாவது சரணத்தில் அவரது குரலின் சிக்கலான வடிவத்தை உன்னிப்பாகக் கேட்டுப்பாருங்கள்.

மொத்தத்தில் எம்.எஸ்.வி தமிழ்த் திரையிசையின் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு ஒரு அற்புதமான பெருங்குழு ஜாஸ் பாடலைத் தந்திருக்கிறார். அந்தக் காலத்தின் தமிழ்த் திரையிசைப் பாடல்களுடன் ஒப்பிட்டுப்பார்க்க இது ஒரு அசுர சாதனைதான். இதில் வரும் கிடார், ட்ரம்ஸ், ட்ரம்பெட் இசைகளைத் தனித்த்னியாக நிறுத்தி நிதானித்துக் கேட்டுப்பார்ப்பவர்களுக்கு எம்.எஸ்.வியின் அற்புதக் கற்பனை பிரமிப்பூட்டும் என்பது நிச்சயம்.