ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

ராகம்:- மோகனம்

உம்பர்தரு தேனுமணிக் கசிவாகி
ஒண்கடலில் தேனமுதத் துணர்வூறி
இன்பரசத்தே பருகி பலகாலும்
என்றனுயிர்க் காதரவுற் றருள்வாயே
தம்பி தனக்காக வனத்தணைவோனே
தந்தை வலத்தா லருள்கை கனியோனே
அன்பர் தமக்கான நிலைப் பொருளோனே
ஐந்து கரத் தானை முகப் பெருமாளே.

ராகம்:- ஆனந்த பைரவி

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.