பெரியதிரைப் பாடல்களை விட சின்னத்திரைப் பாடல்கள் பல நேரங்களில் அழுத்தமாய் இருப்பது ஏன்?

கதை.

கேளிக்கையைப் புறந்தள்ளிக் கருத்து பெறும் முன்னுரிமை.

பாடலின் உள்ளடக்கத்தைத் தீர்மானித்துக் கொள்ள கவிஞனுக்குள்ள சுதந்திரம்.

சாய்மீராவின் ‘சிம்ரன் சின்னத்திரை’க்காக நேற்றொரு பாடல் எழுதினேன்.

‘‘மாறும் யுகங்கள் மாறுகின்றன

மாறிடு பெண்ணே மாறிவிடு

உடையும் பிம்பங்கள் உடைகின்றன

உன்னை நீயும் மாற்றிவிடு!

சிற்றுண்டி செய்தவளும் பெண்தான் _ இன்று

செயற்கைக் கோள் செய்பவளும் பெண்தான்

அரசமரம் சுற்றியதும் பெண்தான் _ இன்று

அண்டவெளி சுற்றுவதும் பெண்தான்’’

என்று தொடங்குகிறது பாடல்

“ஆண்மகன் ஒருவன் கல்விகொண்டால் அது

அவனுக்கான தனியுடைமை

பெண்மகள் ஒருத்தி கல்விகொண்டால் அது

பெற்றவர்க்கெல்லாம் பொதுவுடைமை’’

_என்று வளர்கிறது.

இன்னொன்று, சின்னத்திரையில் பெரும்பாலும் மெட்டுக்கு எழுதுவதில்லை; எழுதித்தந்தே இசையமைக்கச் சொல்கிறேன். கனத்திற்கு, அதுவும் ஒரு காரணமாகலாம்.