[tscii]துவேஷம் தொடர்கிறது !
"ராமன் குடிகாரன் என்று வால்மீகி தனது ராமாயணத்தில் எழுதியிருக்கிறார்' – இது தமிழக முதல்வரின், ஹிந்து மத துவேஷப் பேச்சுக்களின் சமீபத்திய வெளியீடு.

ராமன் குடிகாரன் என்று வால்மீகி ராமாயணத்தில் எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை – என்பதை அவருக்கு யார் சுட்டிக்காட்டினார்களோ, தெரியாது; டெலிவிஷன் சேனல்களினால் பதிவு செய்யப்பட்டு, ஒளிபரப்பப்பட்டு விட்ட இந்த அட்டூழியமான பேச்சை, கொஞ்சம் மாற்றி, பத்திரிகைகளுக்கு அனுப்பினார். அதில், "ராமர் சோமபானம் என்ற மதுபானம் அருந்துகிறவர் என்று வால்மீகி எழுதியிருக்கிறார்' என்று மட்டுமே முதல்வர் கூறியதாக, அவருடைய
பேச்சு "திருத்தி' அமைக்கப்பட்டது.

இந்த திருத்தமும், பிதற்றலே. வால்மீகி ராமாயணத்தில், எந்த இடத்திலும் ராமர் ஸோமபானம் அருந்துகிறவர் என்று எழுதப்படவில்லை.

ஸோமபானமும் அருந்தவில்லை !

ஸோமபானம் என்பது போதை ஏற்றுவது அல்ல. "ஸுரா பானம்' என்பதுதான் அப்படிப்பட்ட பானம்; இதுவே "பானம்' என்றும் இலக்கியங்களில் குறிப்பிடப்படுவதுண்டு.

ஸோம என்பது ஒரு கொடி – ஸோமலதை; அதன் ரஸம் ஸோம ரஸம்; இது தேவர்களுக்கு உரியதாகவும், அமிர்தத்திற்கு ஒப்பானதாகவும் குறிப்பிடப்படுகிறது. இது யாகங்களில் முக்கிய இடம் பெறுகிறது. இது போதை தருகிற விஷயம் அல்ல.

ஆகையால் ஸோமபானம் அருந்துவது என்பது சடங்குகளுடன் கூடிய, புனிதமுடைய ரஸத்தை அருந்துவதே தவிர – போதை ஏற்றிக்கொள்கிற விஷயம் அல்ல. ஸுராபானம் என்பதுதான், குடி; போதை பானம்.

ஆனால், மேலே கூறியுள்ளபடி, "ராமர் ஸோமபானம் அருந்தினார்' என்று கூட, வால்மீகி தனது இராமாயணத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.

அதாவது "ராமன் குடிகாரன் என்று வால்மீகி கூறியிருக்கிறார்' என்ற முதல்வரின் பேச்சும் பிதற்றல்; "ராமர் ஸோமபானம் என்கிற மதுபானம் அருந்துகிறவர்' என்று வால்மீகி எழுதியிருப்பதாக, முதல்வர் கூறியிருப்பதும் அபத்தம்.

சரி, ஏன் இப்படி முதல்வர், தப்பும் தவறுமாக பேசியிருக்கிறார்? "பட்டாபிஷேகத்திற்கு வஸிஷ்டர் குறித்த தினம் மட்டமான தினமாகி விட்டது, ஏன்?' என்றும்; "ஸீதை மீது ராமர் மரவுரியை கட்டாயமாகத் திணித்தார்' என்றும் ஏற்கெனவே கலைஞர் கூறியது நினைவுக்கு வருகிறது. அந்தத் தவறுகளை அப்போதே நாம் சுட்டிக்காட்டினோம். ராமாயணத்தைப் பற்றி பேச ஆரம்பித்தாலே, பிதற்றியே தீருவது என்று, அவருக்கு என்ன வைராக்கியமோ தெரியவில்லை – இப்போது மீண்டும் அந்த வேலையைச் செய்திருக்கிறார்.

இருந்தாலும் கூட, முதல்வர் ஆயிற்றே! அதனால், அவருடைய பதவியை நினைத்தாவது – அவர் ஏன் இப்படி பேசியிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள, கொஞ்சமாவது நாம் முனைய வேண்டாமா?

"மது' என்றால் "குடி'தானா ?

திரைப்பட காமெடி சீன்களில், காமெடியன் ஆஃப்ரிக்காவிலிருந்து வந்திருப்பதாகச் சொல்லிக் கொண்டு, "கெக்கே... புக்கே... மக்ர டொக்கே... ஜிக்ல மக்கோ... திங்கன கும்பாரே... அஜாகினி பஜோகினி...' என்று ஏதாவது பேசுவார்; அவர் பக்கத்தில் இருப்பவர், இந்த உளறலுக்கு ஒரு அர்த்தம் சொல்வார். அந்த மாதிரி, முதல்வரின் பேச்சுக்கு, நாம் ஒரு பொருள் காண்போம்.

ராமாயணத்திலிருந்து, ராமர் "மது' உண்டதாக தெரிய வருகிறது என்று யாரோ முதல்வரிடம் சொல்ல, அதை வைத்துக் கொண்டு, "ஆஹா! மது! மதுபானம்! சாராயம்!' என்று அவர் முடிவுகட்டி விட்டார் போலிருக்கிறது. ஸம்ஸ்க்ருதத்தில் மது என்றால் "போதை தருகிற பானமே' என்பதல்ல பொருள். கள், சாராயம், இவற்றின் அயல்நாட்டு வகைகள் போன்றவற்றை அருந்துவது, தமிழில் மது அருந்துவது என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் ஸம்ஸ்க்ருதத்தில் "மது' என்பதற்கு, பல அர்த்தங்கள் உண்டு. "மது உண்ணும் வண்டு' என்கிறோமே, அந்த "மது'தான், ஸம்ஸ்க்ருத "மது'; அதாவது மலர்களிலிருந்து பெறப்படுவது; தேன். இதைத் தவிர, சுவையுள்ள தித்திப்பு ருசியுள்ள பழரஸங்களும் "மது' என்று குறிப்பிடப்படுகின்றன.

"மதுர' (மதுரம்) என்றால் சுவையுள்ளது, இனிமையானது. நல்ல இசையை "அந்த சங்கீதம் கேட்பதற்கே மதுரமாக இருந்தது' என்று கூறுவது இதனால்தான். பூஜைகள் செய்யும்போது, "மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி' – "மதுபர்க்கம் சமர்ப்பிக்கிறேன்' என்று கூறப்படுகிறது. மதுபர்க்கம் என்பது தேன், பால், வெண்ணெய், தயிர் போன்றவை கலந்தது. "மதுபானம்' என்பதற்கு ஸம்ஸ்க்ருத அகராதி "சுவையுள்ள பழரஸங்கள்' என்று பொருள் கூறுகிறது.

ஆகையால் மது என்றால், உடனே கள், சாராய வகையைச் சார்ந்தது மட்டுமே என்ற எண்ணம் தவறானது. தமிழிலேயே கூட அகராதிகள், "மது' என்பதற்கு பல அர்த்தங்களைக் கூறுகின்றன. மகரந்தம், தேன், அமிர்தம் போன்றவற்றுடன் "கள்' என்பதும், தமிழ் "மது'விற்கு ஒரு அர்த்தம். ஸம்ஸ்க்ருதத்திலும், தமிழிலும் மது என்ற சொல்லிற்கு உள்ள நல்ல அர்த்தங்களை கொள்ள முடியாது என்ற வைராக்கியத்துடன், "கள்' என்ற அர்த்தத்தைத்தான் எடுத்துக்கொள்வேன் என்று சொன்னால், அதில் வறட்டுப்பிடிவாதம் இருக்குமே தவிர, விஷயஞானம் இருக்காது.

குடிப்பழக்கத்திற்கு, ராமர் கண்டனம் !

இன்னமும் சொல்லப்போனால், போதை தருகிற பானங்களை அருந்துவதை ராமர் வெறுத்தார் என்பது வால்மீகி ராமாயணத்தில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. வாலி வதத்திற்குப் பிறகு, ஸுக்ரீவன், தான் ராமருக்கு அளித்த வாக்குறுதியை மறந்து, கேளிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்; இப்படி யுத்த முஸ்தீபுகள் செய்யப்படாமல், இருப்பதைப் பார்த்த ராமர் கோபம் அடைகிறார். ஸுக்ரீவன் கேளிக்கைகளிலும், போதை பானங்கள் அருந்துவதிலும் நேரம் கழித்துக் கொண்டிருப்பதை சாடி, அவர் லக்ஷ்மணனிடம் பேசுகிறார்.

அந்த இடத்தில் ராமர் கண்டிக்கிற பழக்கம் "பானம் அருந்துவது'; "பானமேவோபஸேவதே' – "பானம் அருந்துவதிலேயே குறியாக இருக்கிறான்' என்று ராமர் கூறுகிறார். அந்தப் பழக்கத்தைக் கண்டிக்கிறார். ஆனால், குடிப் பழக்கத்தை, "மது அருந்துவது என்றோ, ஸோமபானம் அருந்துவது' என்றோ சொல்லவில்லை;

லக்ஷ்மணன் சுக்ரீவனை சந்திக்கச் செல்கிறான்; முதலில் தாரை (வாலியின் மனைவியாக இருந்தவள்; பின்னர் சுக்ரீவனோடு இணைந்தவள்) வந்து வரவேற்கிறாள். "பானம் அருந்தியதால் லஜ்ஜை விலகியவளாக' என்று அவள் வர்ணிக்கப் படுகிறாள். "பானயோகாச்ச நிவ்ருத்தலஜ்ஜா' என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது; "மது அருந்தியதால் வெட்கத்தை விட்டாள்' என்றோ, "ஸோமபானம் அருந்தியதால் லஜ்ஜையை விட்டாள்' என்றோ, சொல்லப்படவில்லை.

ராமர் சுக்ரீவனுக்கு விடுத்த எச்சரிக்கையையும், அவர் கூறியதையும் தாரையிடம் எடுத்துரைக்கிற லக்ஷ்மணன், "வாழ்வில் நலம் பெறவும், தர்ம நெறிப்படி நடக்கவும் விரும்புகிறவர்களுக்கு இம்மாதிரி குடிப்பது தகாது; அறம் பொருள் இன்பம்
மூன்றையும் குடி அழிக்க வல்லது' என்கிறான். அதாவது ராமரும், அவர் சொல்படி பேசிய லக்ஷ்மணனும் குடியை நிந்தித்தனர். இந்த இடத்திலும் குடிப்பழக்கம் "மது அருந்துவது' என்று குறிப்பிடப்படவில்லை. "பானம்' என்றுதான் கூறப்படுகிறது.

மீண்டும், ஸுக்ரீவனை சந்திக்கிறபோது, பசுவதை செய்பவன், திருடன், விரதத்தை மீறுபவன், ஆகியோருக்கு இணையாக குடிப்பவனைப் பேசுகிறான் லக்ஷ்மணன். அப்போதும் "மது, ஸோமபானம்' என்றெல்லாம் சொல்லவில்லை. "கோக்னே சைவ ஸுராபேச சௌரே பக்னவ்ரதே ததா' – என்று சொல்லி, குடிப் பழக்கத்தை "ஸுராபே' – ஸுராபானம் அருந்துவது, என்றுதான் லக்ஷ்மணன் கூறுகிறான்.

ராமரும், லக்ஷ்மணனும், குடிப்பழக்கத்தை இவ்வாறு கண்டனம் செய்திருக்க, ராமர் குடிகாரர் என்றோ, குடிப்பழக்கம் உடையவர் என்றோ கருத வால்மீகி ராமாயணத்தில் இடமே இல்லை.

மீண்டும் ஒருமுறை கவனத்தில் கொள்வது தகும் என்பதால், "ஸோமபானம் என்பது போதை தருகிற பானம் அல்ல' என்பதையும், அதையும் ராமர் அருந்தியதாக வால்மீகி கூறவில்லை என்பதையும் நினைவுபடுத்திக் கொள்வோம்.

நேருஜி – தவறான விலாசம் !

"நேரு சொன்னார், சொன்னார்...' என்று மீண்டும் மீண்டும் முதல்வர் பேசி வருகிறார். மேலைநாட்டு விமர்சனங்களை அப்படியே ஏற்ற நேருஜியின் கருத்துகளைப் படித்து, ஹிந்து மதம் பற்றி தெளிவுபெற முடியாது. பார்லிமென்டின் நடைமுறைகள், சோஷலிஸ நம்பிக்கைகள் போன்ற விஷயங்கள் பற்றி
தெரிந்துகொள்ள, நேருவின் கருத்துகளும் உதவும். ஆன்மீகம் பற்றியோ, தெய்வ நம்பிக்கை பற்றியோ தெரிந்துகொள்ள வேண்டுமானால், அனந்தராம தீக்ஷிதர், கிருபானந்த வாரியர், புலவர் கீரன் போன்றவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றுதான் பார்க்க வேண்டும்; அல்லது தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள், கிருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகள் ஆகியோரை அணுக வேண்டும். முதல்வர் விலாசம் தெரியாமல், நேருவிடம் போனது அவருடைய தவறு. உதாரணமாக – ரம்ஜான் நோன்பு பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால் – முதல்வரிடம் போனால், அந்த நோன்பு பற்றிய அடிப்படை நம்பிக்கைகள் பற்றி விவரம் இல்லாவிட்டாலும் – "குல்லாய் அணிவது, கஞ்சி குடிப்பது' என்ற விவரங்களாவது தெரியவரும். ஆனால் விநாயகர் சதுர்த்தி பற்றி கேட்டால், "கொழுக்கட்டையை வாயில் திணிப்பேன்' – என்பார். கிருத்திகை விரதம் பற்றி அவரிடம் கேட்பதில் என்ன பயன் இருக்கும்? "அன்று நான் நிறைய சாப்பிடுவேன்' என்று அவரே சொல்லியிருக்கிறார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. அதற்கு மேல் அவருக்குத் தெரியாது.

ஆகையால் விலாசம் தவறி அவரிடம் போய் இந்த மாதிரி விஷயங்கள் பற்றி கேட்டால், அது நம் தவறு. இவ்விஷயத்தில், நேருஜி சமாச்சாரமும் அப்படித்தான். இருந்தாலும், அவர் மனித நாகரிகத்தை மதித்தவர் என்பதால், "கொழுக்கட்டை திணிப்பேன்' என்றெல்லாம் சொல்லாமல், "எனக்கு அது பற்றியெல்லாம் நம்பிக்கையும் இல்லை; தெரியவும் தெரியாது' என்று சொல்லியிருப்பார்.

இதையெல்லாம், முதல்வரின் கவனத்திற்காக நாம் சொல்லவில்லை. கலைஞர் "ராமன் குடிகாரன்... ஸோம பானம் அருந்தும் பழக்கமுடையவர்' என்றெல்லாம் பேசியதற்கு மறுதினமே, திரு. சரத்குமார், திரு.குருமூர்த்தி ஆகியோர் என்னிடம் இதுபற்றி அபிப்ராயம் கேட்டபோது, வால்மீகி ராமாயணத்தில் உள்ள மேற்கண்ட விவரங்களை எல்லாம், நான் அவர்களிடம் விரிவாக எடுத்துச் சொன்னேன். அவர்களைப் போல நம்பிக்கை கொண்டவர்களிடம் கூறினால், ஓரளவாவது உண்மைகள் பலரிடையே பரவும்; கலைஞர் போல துவேஷ மனம் கொண்டவர்களின் கவனத்திற்கு இதை எடுத்துச் சென்று என்ன பயன்? துவேஷத்தில் மூழ்கியிருக்கிற அவரால், உண்மையை கேட்கவோ, பார்க்கவோ, பேசவோ முடியாமற் போய்விட்டது என்பதை நாம் உணர்கிறோம். ஆனால், வாசகர்களில் யாராவது, முதல்வரின் பேச்சைப் பற்றிய செய்தியைப் படித்து, சற்று மனம் குழம்பியிருந்தால், அவர்கள் "தெளிவுபெற வேண்டும்' என்கிற எண்ணத்தில்தான், இவ்வளவு விவரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

அரசியல் சட்டம் !

"ராமர் பற்றி பேசக்கூடாது என்று அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா?' என்று ரொம்ப புத்திசாலித்தனமாக முதல்வர் கேட்டிருக்கிறார். "ஹிந்து மதம் நீங்கலாக மற்ற மதத்தவர்கள் வழிபடுகிற தெய்வங்கள் பற்றியோ, இறைத் தூதர்கள் பற்றியோ எதுவும் பேசக் கூடாது' என்று அரசியல் சட்டம் கூறுகிறதா? அப்போது அவை பற்றியெல்லாம், யாராவது தாறுமாறாகப் பேசினால், அதில் தவறு இல்லை என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டுமா? அதுதான் முதல்வரின் வாதமா? அதை விடுவோம்.

"அரசு மேற்கொள்ளும் திட்டம் பற்றி யாரும் எதுவும் பேசினால் அது சதி' என்று அரசியல் சட்டம் சொல்கிறதா? இல்லையே! பின் ஏன், சேது சமுத்திர திட்டம் பற்றி பேசுகிறவர்கள் செய்வது சதி என்று முதல்வர் சாடுகிறார்? சில ஆண்டுகளுக்கு முன்பு "என்னை கருணாநிதி' என்று குறிப்பிடுகிறார்களே? தமிழக அரசியல் அவ்வளவு தாழ்ந்துவிட்டது!' என்று முதல்வர் வேதனைப்பட்டாரே? ஏன்? அரசியல் சட்டத்தில் "கருணாநிதியை, கருணாநிதி என்று சொல்லக் கூடாது' என்று கூறப்பட்டிருக்கிறதா? சமீபத்தில், "என் குடும்பத்தினர் பற்றி விமர்சனம் செய்கிறார்களே' என்று வருத்தப்பட்டாரே – "கருணாநிதி குடும்பத்தினர் அரசியலுக்கு வந்தாலும், அவர்களை பற்றி யாரும் எதுவும் பேசக்கூடாது' என்று அரசியல் சட்டம் கூறுகிறதா?

அரசியல் சட்டம், எல்லா மதத்தினருக்கும் இடர்பாடு, குறுக்கீடு இன்றி தங்கள் நம்பிக்கையைத் தொடர்கிற உரிமையைத் தந்திருக்கிறது; வழிபாட்டு உரிமை உறுதியாக்கப்பட்டிருக்கிறது. அதை மதிக்காமல் ஒரு ஆட்சியாளர் பேசுவது அரசியல் சட்டத்திற்கு விரோதமானதே!

கிரிமினல் குற்றம் !

இது ஒருபுறமிருக்க – முதல்வர் தொடர்ந்து ஹிந்து மத நம்பிக்கைகளை கொண்டவர்கள் மனம் புண்படுகிறபடியும், ஹிந்து மத தெய்வங்களை இகழ்ந்தும் பேசி வருவது – அரசியல் சட்டம் கூறுகிற மதச்சார்பின்மைக்கு விரோதமானது மட்டுமல்ல; இந்திய தண்டனைச் சட்டம் (இந்தியன் பீனல் கோட்) பிரிவுகள் 295ஏ, 298 ஆகியவற்றின்படி கிரிமினல் குற்றம். இந்த குற்றத்திற்கு, அந்த இருபிரிவுகளில், தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இச்சட்டத்தின் பிடியிலிருந்து தப்புவதற்காக, "யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை' என்று முதல்வர் கூறலாம்.

ஆனால், மனம் புண்படுகிறது என்று ஹிந்துக்களில் பலர், மேடைகளிலும், பத்திரிகைகளுக்கு எழுதும் கடிதங்களிலும் மீண்டும் மீண்டும் கூறிய பிறகும், இதுபற்றி ஒரு வழக்கு வந்த பிறகும், முதல்வர் இப்படி தொடர்ந்து பேசுவதால், "மனதை புண்படுத்துகிற நோக்கம்' அவருக்கு இருப்பது, தெளிவாகிறது.

இப்படி சட்டப்படி கிரிமினல் குற்றமாகிற ஒரு செயலை மீண்டும் மீண்டும் செய்து வ&#299