சீரியல்களில் சீரியஸாக தோன்றும் காயத்ரி ப்ரியா, நேரில் நேர்மாறாய் ஜாலியாக இருக்கிறார். கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் இனிக்க... இனிக்க சிரித்துக் கொண்டே பதில் கூறுகிறார்! காம்பியரிங், சீரியல் என்று கலந்துகட்டி கலக்கும் இவருடன் ஒரு கலகல பேட்டி...

நீங்க சென்னைவாசி தானா?

ஆமாம்...நான் சென்னையிலேயே பிறந்து வளர்ந்த பொண்ணு. எங்க அப்பா பெரிய பாடகர். நிறைய கச்சேரிகள் பண்ணியிருக்கார். அம்மா டீச்சர். ஒரே அண்ணன், தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார். நான் எம்.காம்., படிச்சிருக்கேன்.

டிவிக்குள் எப்போது நுழைந்தீர்கள்?

பத்தாவது படிக்கும் போது என்னுடைய பரதநாட்டிய அரங்கேற்றத்தைப் பார்த்து மாடலிங் வாய்ப்பு கிடைச்சது. அப்புறம் காம்பியர் வாய்ப்பு...அதில் பிஸியாக இருந்தபோது `நாகபந்தம்' சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இதுவரை 50 சீரியல்கள் தாண்டி விட்டேன். இப்போ...`செல்லமடி நீ எனக்கு' சீரியலில் நடித்து வருகிறேன்.

சினிமாவில் வாய்ப்புகள் வரவில்லையா?

வந்தது...அப்போது டிவியில் பிஸியாக இருந்ததால் சினிமா மிஸ் ஆயிடுச்சு! இப்போ ஒரு தமிழ்ப் படத்தில் நடித்து வருகிறேன். ஏற்கனவே ஒரு தெலுங்கு படத்தில் ஹீரோயினா நடிச்சிருக்கேன்.

சினிமாவில் எந்தமாதிரி கேரக்டரில் நடிக்க ஆசை?

எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. கேரக்டர் ரோல் கிடைத்தால் நல்லது!

டிவியில் நீங்கள் நடித்த சீரியலைப் பார்ப்பது உண்டா? அப்போது என்ன நினைப்பீர்கள்?

நான் நடித்த சீரியல் மட்டுமல்ல, நான் பங்கு பெற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் வீட்டில் ரெக்கார்டு செய்து வைத்திருப்பார்கள். அவற்றைப் பார்த்து எப்படி இன்னும் பெட்டராக, செய்யலாம் என்று யோசிப்பேன்.

சீரியல் என்றாலே அழுகைதானே அடையாளம்? உங்களுக்கு அழுவது பிடிக்குமா?

இல்லை...எனக்கு அழுவது பிடிக்காது. இப்போதெல்லாம் டிவியில் அனைத்து உணர்வுகளும் காட்சிகளாக வருகின்றன. அழுது புலம்பும் சீன்கள் குறைந்து விட்டன.

தோழிகளும், வீட்டிலும் உங்களை எப்படி கூப்பிடுவார்கள்?

வீட்டில் காயத்ரி...இல்லாவிட்டால் ப்ரியா என்று கூப்பிடுவார்கள். தோழிகளுக்கு நான் `ஜி.பி'!

காம்பியரிங், சீரியல் நடிப்பு இதில் உங்களுக்கு பிடித்தது எது?

இரண்டுமே பிடிக்கும் என்றாலும் காம்பியரிங் செய்வது கொஞ்சம் த்ரில்லானது!


நீங்கள் நடித்த சீரியல்களில் உங்களுக்குப் பிடித்தமான சீரியல் எது? பிடித்த கேரக்டர்?

நான் நடித்ததில் பிடித்த சீரியல் `ஆடுகிறான் கண்ணன்'. இதில் வரும் `ருக்கு' கேரக்டர் ரொம்பப் பிடிக்கும்.

நீங்கள் காம்பியரிங், சீரியல் பண்ணுவதை பார்த்துவிட்டு, கல்லூரி மற்றும் வீட்டில் என்ன விமர்சனம் செய்வார்கள்?

கல்லூரியில் எல்லாருமே நல்லா என் கரேஜ் செய்வார்கள். வீட்டில் அண்ணன் மட்டும் ஏதாவது கிண்டலடிப்பார். மற்றபடி பெற்றோர் எப்பவுமே நம்ம பக்கம்தான்!

உங்களுடைய பொழுதுபோக்கு?

தோழிகளுடன் நல்லா ஊர் சுத்துவேன்...பர்ச்சேஸ் பண்ணுவேன். எப்பவும் செல்போனில் பேசிக்கிட்டே... இருப்பேன்.

என்ன மாதிரியான கேரக்டர்கள் செய்ய விருப்பம்?

டபுள் ஆக்ஷன் கேரக்டர் செய்ய விருப்பம். அதாவது ஒன்று அப்பாவி...மற்றொன்று ஆக்ஷன்னு கலக்கணும்!

காயத்ரி ப்ரியா வீட்டில் எப்படி?

இதோ...பார்க்கிறீர்களே...! இப்படித்தான் எப்போதும் வீட்டில் ஜாலியாக இருப்பேன்! சீரியல்களில் மட்டுமே சீரியஸ் நடிப்பு!

எதிர்கால ஆசை?

சினிமாவோ...சீரியலோ எதில் நடித்தாலும் நல்ல நடிகை என்று பெயர் வாங்கவேண்டும். அதைவிட முக்கியம் எல்லாரிடமும் நல்ல பொண்ணுன்னு பெயர் எடுக்கணும் இதுதான் என்னோட கனவு..ஆசை...லட்சியம் எல்லாம்!