உயிர் தமிழுக்கு,உடல் தமிழர்க்கு!

பாதசாரி.

GENRE:கட்டுரை

முகவுரை:

உலகிலேயே விசித்திரமானவற்றின் பெயர் சொல்லுங்கள் பார்ப்போம்?என்ன யோசிக்கிறீர்களா,தெரியவில்லையா?'பெயர்' தான் அது.கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் : தலையில் சூடியிருக்கும் ரோஜாவுக்கோ,அண்டை வீட்டு ஜிம்மிக்கோ,ஏன் படைத்தவன் என்று கருதப்படும் பூசையறை கடவுள் படத்துக்கோ தெரியுமா இன்னது தான் அவர்களுக்கு இடுகுறியாகவோ காரணமாகவோ வந்த பெயரென்று?!!பெயர்க்காரணத்திற்கான பீடிகைதான்,அதனை பின் காண்போம்,முதலில் இயற்றுபவன்?ஒரு பள்ளி மாணவன்,இறுதியாண்டு.ஊர்சுற்றி.சுமாராகப்படிப்பேன்.கே ள்விக்குறிகள் அவ்வளவுதான்,இனி அறிமுகம்.நண்பர்களே,நான் கடந்து வந்த பாதை மிகவும் சிறியது,எளியது.ஆனாலும் பகிர்தல் நோக்கோடு வந்துள்ளேன்,மையமெனும் கலங்கரை விளக்கொளியில்.

"கரைவரும் நேரம் பார்த்து
கப்பலில் காத்திருப்போம்
எரிமலை வந்தால்கூட
ஏறிநின்று போர் தொடுப்போம்"
(நா.முத்துக்குமார்)

இக்கவி என்னை மிகவும் கவர்ந்தது.இது ஒத்தே அனுதினமும் பல பிரச்சனைகளை தாண்டி ஒற்றை நாள் கடந்து காலண்டரிலிருந்து பறக்கிறது.அதனால் ஈட்டிய பட்டறிவின் மூலம் தினமொரு பிரம்மாஸ்திரத்தை துணையாய் அழைத்துக்கொண்டு மறுநாள்போருக்கு புறப்படுகிறோம்.உதாரணங்கள் தேவையில்லை.நான் பார்த்த முகங்களும் புத்தகங்களும் ஒருசேர என்னை உந்துதலளித்து எழுத வைத்தது.அவற்றின் மறுபரிமாணமாம் கட்டுரையை எழுதக்கிட்டிய முதற்பக்கங்கள் இவை.காதினின்று ரத்தம் வழிந்தால் என் பள்ளியில் கட்டுரைப்போட்டி முதற்பரிசளித்தோரை சபியுங்கள்.சரி என்ன எழுதப்போகிறாய் நீ? என்ன தெரியுமுனக்கு? என்று வினவினால்,அதற்கு விடை- என்னை பாதித்த இடங்களையும் மனிதர்களையும் பற்றி,என் பாதையைப்பற்றி.வரலாறு எனக்கு பிடிக்கும்,அதையும் குழைத்து.மனதில் பதிந்த சுவடுகளை,வானத்துக்கு மேலேயுள்ள மனிதாபிமானமாம் 'fictuos' வஸ்துவைப்பற்றியோ சுவிஷேசச் சொற்பொழிவைப் போலவோ,சித்த மருத்துவன் போலவோ அரசியல் உரையன்னவோ இது இருக்காது.
"எனக்கு அம்மாவைப் பிடிக்கும்,அம்மாவுக்கு அப்பாவைப் பிடிக்கும்,அப்பாவுக்கு தம்பியைப் பிடிக்கும்,எங்கள் எல்லோருக்கும் சோறு பிடிக்கும்":இந்த ஈழப்பிஞ்சின் குரலைப்போன்ற ஒரு ஆழ்ந்த நிதர்சனத்தை தர விழைகிறேன்.எறும்பளவோ,எறும்பின் வாயளவோ,அதன் ஆகாரமளவோ,ஆகாரத்தின் அணுவளவோ மிகையோடு.இம்முயற்சி எனக்கு வெற்றிமுரசாகவும்,வெற்றிமுகடாகவும் அமைய வாழ்த்தக்கேட்கும் வாசகயாசகன்,

நெறியன்,
இரா.கு. வெங்கடேஷ்.