Results 1 to 10 of 4004

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20

Hybrid View

  1. #1
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி பாட்டு - 43
    --------------------------------



    உணர்ந்திருக்கிறீர்களா?

    நமக்கு மிகவும் இஷ்டமான விஷயமாக இருக்கும். அதில் நம்மைத் தீவிரமாக ஈடுபடுத்திக்
    கொண்டிருக்கும் போது, ஏதோ ஒரு தவிர்க்க முடியாத சங்கடம் வந்து அந்த இஷ்டமான விஷயத்தின் மீதான நம் ரசிப்பை,
    ஒட்டுதலை அடியோடு தகர்த்து விட்டுப் போகும்.

    உணர்ந்திருக்கிறீர்களா?

    நான் உணர்ந்ததுண்டு.

    வெகுதூர, ஜன்னலோரப் பேருந்துப் பயணம் எனக்குப் பிடிக்கும். அப்படியொரு பயணம் அமைந்து, பேருந்து அருமையாகப்
    போய்க் கொண்டிருக்கும் போது, பேருந்தில் பழுது ஏற்பட்டு, நடுவழியில் நிறுத்தப்பட்டு, இப்போதைக்கு சரியாகாது எனும் நிலையாகி, நிரம்பி வழிந்து செல்லும் மற்றொரு பேருந்துக்குள் மாற்றி விடப்பட்டு,
    இரண்டு பேர்களுக்கிடையில் நசுங்கும் நிலையில் ஒரு இருக்கை கிடைத்து...

    நான் உணர்ந்ததுண்டு.

    ஆனால்...

    நசுங்கிக் கொண்டே பயணப்படும்
    அந்த வேளையில் கூட, சற்றுமுன் ஆனந்தமாய்க் கிடைத்த ஜன்னலோரப் பயணத்தை எண்ணிக் கிடைக்கும் பெருமிதமான ஆறுதலிருக்கிறதே... அது பெரிய விஷயம்.

    இந்த "பூ மணக்கும் பூங்குழலி" பாடல் போல.

    எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்... அப்போது. அப்பா இருந்தார்.

    சிவகங்கையில் "அமுதா" எனும்
    டூரிங் திரையரங்கம் இருந்தது.
    " ரத்த பாசம்" போட்டிருந்தார்கள்.
    போக வாய்ப்பில்லாத பள்ளி நாட்கள்.

    வீட்டில் யாரும் போகிற மாதிரி தெரியவில்லை. அப்பா யாருடனும் கூட்டணி வைத்துப் போக மாட்டார். சுயேச்சை.

    அப்பாவிடம் அனுமதி கேட்டுப் போகப் பயம்.

    ஆபத்பாந்தவனாய் நண்பன் ரகு
    ஒரு நாள் மாலை வந்தான். கையில் பாடப் புத்தகம். அப்பா வேலை முடிந்து வரவில்லை.
    தன் வீட்டில் யாருமில்லை என்றும்,
    என்னை அனுப்பி வைத்தால் இருவரும் அவன் வீட்டில் படிப்போம் என்றும் அம்மாவிடம் அனுமதி கேட்டு அழைத்துப் போனான்.

    தெருமுனை தாண்டினதும் கண்ணடித்தான். புரிந்து கொண்டேன்... அன்றைய படிப்பு
    அமுதா திரையரங்கிலென்றும்,
    பாடம், ரத்த பாசம் என்றும்!

    தெருமுனை திரும்பினதும் வலது
    பக்கம் கொஞ்ச நேரம் போனால்
    அவன் வீடு. அவன் வீட்டு வாசலில்
    புத்தகத்தோடு நின்ற போது, அப்பா வேலை முடிந்து வீட்டுக்குப்
    போய்க் கொண்டிருந்தார்.

    "என்ன இங்கே?" என்பது போல் ஒரு முறைப்பான ஒரு பார்வை.
    வேகமாய் அவர் முன்னே ஓடிப் போய் " ரகுவோட படிக்க" என்றதும், ஒரு மெலிசான தலையாட்டலுடன் போய் விட்டார்.
    நல்லவேளை... இனி பயமில்லை.
    ------------

    வில்லன்களைப் பந்தாடி, ரசிகர்களை உற்சாகமாக்கிய தலைவரின் திருநாமத்தில் துவங்கி தலைப்பெழுத்துகள் ஓடிக் கொண்டிருந்த போது, இருட்டுக்குள் இருக்கை தேடுபவர்கள் வசதிக்காக பின்வரிசையில் ஒளிர்ந்த விளக்கொளியில், பெஞ்ச் டிக்கெட் வரிசையிலிருந்த நான் பார்த்து
    மகா அதிர்ச்சியானேன். முன் வழுக்கை மின்ன காலி இருக்கை
    தேடியவர் சாட்சாத் அப்பாவேதான்.

    பெஞ்சிலிருந்து அப்படியே நண்பனையும் இழுத்துக் கொண்டு சரிந்து தரை டிக்கெட் ஜனங்களோடு கலந்துதான் மிச்சப் படமெல்லாம் பார்த்தேன்...
    ஒரு பய முள் உறுத்த,உறுத்த..
    ரசனை தகர்த்த அந்த நசுங்கல் பேருந்துப் பயணம் போல்.

    ஆனால்... "ரத்தபாசம்" என்று நினைத்தாலே நான் சொன்ன மேற்படி சங்கடங்களையெல்லாம் தகர்ந்து எறிந்து விட்டு முன்னுக்கு
    வருவது.. இந்தப் பாடல். ஒரு நாலரை நிமிஷம் என்னை வேறெதையும் சிந்திக்க விடாத அழகுப் பாடல்.

    பஞ்சகச்சம் போல அணிந்து நடக்க சிரமமான ஒரு ஆடையை
    நடிகர் திலகம் லாவகமாகக் கையாளும் சமயோசிதம், என்
    சின்ன வயசின் பெரிய பிரமிப்பு.

    "சிவந்த மண்" ராஜாவும், ராணியும் காதல் பாடிய அதே அயல்நாட்டு அழகுப் பிரதேசத்தில்
    இந்தப் பாடல்.

    ஸ்ரீப்ரியா மிக அழகாக இருப்பார்.
    மிக அழகாக நடிப்பார். நீலமும், வெள்ளையுமாய் அழகழகாய் வந்து நம்மாள் கைதூக்கிச் செய்கிற அழகிய அழிச்சாட்டியங்களில் அந்த அம்மா ...பாவம் கவனிக்கப்படவே
    மாட்டார்.

    "உயர் காமன் மந்திரம் நீ" - கவியரசர். மரியாதையாய் " உயர்"
    போட்ட கவிச் சக்ரவர்த்தியின் சேட்டை.

    சாதனைக் காடுகளில் தேடியலைந்து நம் ஏக்க வியாதிகளுக்கான இசை மூலிகைகள் கொணர்ந்த மெல்லிசை மாமன்னரின் ராக வேட்டை.

    நடிகர் திலகத்திற்குப் பாடினாலே,
    ஒரு மாமேதைக்குப் பாடுகிறோம்
    எனும் அர்த்தமுள்ள கர்வம் தொனிக்கும் ஒரு குரலால்( இந்தப் பாடலில் அந்த " ஒன்று போலத் தோன்றுதம்மா")
    "பாடும் நிலா "போடும் ராஜபாட்டை.

    எப்போதும் போல் எங்கள், உங்கள், நம் நடிகர் திலகம் எளிதாய்க் கைப்பற்றும் நம் இதயக் கோட்டை.
    ---------

    படம் முடியப் பத்து நிமிஷம் முன்பே தலைதெறிக்க ஓடி வந்து,
    அப்பா வருவதற்கு முன்பே வீட்டில்
    நல்ல பிள்ளையாய் உட்கார்ந்து கொண்ட என்னை அப்பா நம்பி விட்டார் என்பதுவே இன்று வரை
    என் நம்பிக்கை. ஒருவேளை நான்
    படம் பார்த்தது தெரிந்தும், என்னிடம் காட்டிக் கொள்ளாமல் என்னை மன்னித்திருப்பாரேயானால்...
    அது.. "ரத்த பாசம்" தான்.
    ----------

    எண்ணற்ற முறைகள் " பூ முடிக்கும் பூங்குழலி" பார்த்தாயிற்று. அத்தனை தடவையும் அந்தப் பாடல் அள்ளித் தெளித்தவை.. ஆனந்தத் துளிகள்.

    அன்று எனக்குப் பின்னால் இருந்து எனக்குப் பாடங்கள் தந்த என் சொந்தத் தந்தை, எனக்கு முன்னால் திரை வழியே எனக்குப் பாடமெடுத்த என் கலைத் தந்தை இருவருமே இன்றில்லை என்றெண்ணுகிற
    போது முந்துபவை... கண்ணீர்த்
    துளிகள்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •