Results 1 to 10 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

Hybrid View

  1. #1
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    தில்லானா மோகனாம்பாள்

    தில்லானா மோகனாம்பாள் - 27.07.1968 அன்று வெளியாகி இன்றுடன் (27.07.2018) 50 வருடங்களை நிறைவு செய்து பொன்விழா கொண்டாடும் இந்நன்னாளில் அந்த நாளை பற்றிய ஓர் மலரும் நினைவு.(A trip down the memory lane). இது புது பதிவு. 1968 ஜூலை 27 சனிக்கிழமை. அன்று ஸ்கூல் அரை நேரம் உண்டு. மதுரை ஆரப்பாளையத்திலிருந்து மஹால் பக்கத்தில் (சரியாக சொல்ல வேண்டுமென்றால் குயவர்பாளையம் ரோட்டில்) அமைந்திருக்கக்கூடிய பள்ளிக்கூடத்திற்கு (St Joseph's). செல்லும் வழியான கீழ்வெளி வீதியில்தான் சிந்தாமணி டாக்கீஸ். அங்கேதான் படம் ரிலீஸ். சைக்கிள் ரிக்ஷா பயணம். அன்று காலை படம் ரிலீஸ் முழுப்பக்க விளம்பரம் தந்தியில் பார்த்துவிட்டுத்தான் ஸ்கூலுக்கு கிளம்பினேன். மனதில் படம் பற்றிய எண்ணங்கள். எனக்கு எட்டு வயது என்றபோதிலும் அப்போதே அந்த நாவலை படித்து விட்டிருந்தேன்.(வீட்டில் இரண்டு பாகங்களும் பைண்ட் செய்தது இருந்தது). 1950களில் ஆனதை விகடனில் தொடர்கதையாக வந்தது என்பதும் தெரியும். இதை, இவ்வளவு பெரிய நாவலை எப்படி படமாக எடுப்பார்கள் என்ற கேள்வி மனதில் ஓடிக் கொண்டேயிருந்தது. திருவருட்செல்வர் வெளியாகி சிறிது காலத்திலேயே இந்த படம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. இதை தவிர ஏபிஎன், திருமால் பெருமை படத்தையும் எடுத்துக் கொண்டிருக்கிறார். எங்கள் மதுரையை சேர்ந்த NPN சேதுராமன் பொன்னுச்சாமி சகோதர்கள்தான் படத்திற்கு நாதஸ்வரம் பின்னணி வாசிக்கிறார்கள் என்ற செய்தி வேறு எங்களுக்கு உற்சாகத்தை கொடுத்திருந்தது.(நாதஸ்வர இசை பற்றி ஒன்றும் தெரியாது என்பது வேறு விஷயம்) இந்த படத்தின் ஸ்டில்கள் வெளியாகின. அசல் நாதஸ்வர வித்வான் போல முடியலங்காரம், நெற்றியில் பைசா அளவு சந்தன ஜவ்வாது பொட்டு. மீசை இல்லை. மேல் சட்டை இல்லை. ஆரம்பித்தது மாற்று முகாமின் கிண்டல். பலதரப்பட்ட வகையில். அதை சுருக்கமாக ஒரே வரியில் சொல்வதென்றால் "படம் பீப்பீன்னு ஊத்திக்கிட்டு போகப்போவுது". இது மனதின் ஓரத்தில் ஒரு உறுத்தலாக இருந்தது.
    காலை எட்டரை அல்லது எட்டே முக்கால் இருக்கலாம். ரிக்ஷா நெல்பேட்டை தாண்டி முனிச்சாலை திரும்பும் தெரு தாண்டி அம்சவல்லி பவன் வாசலில் வர மேற்கொண்டு நகர முடியாமல் ஊர்கிறது. சாதாரணமாக இரண்டு மூன்று நிமிடங்களில் கடந்துபோய் விடக்கூடிய தூரத்தை இன்ச் இன்சாக கடக்கிறோம். தியேட்டர் வாசலில் திருவிழா கூட்டம். ஒரே நேரத்தில் சுமார் நூற்றுக்கணக்கானோர் தியேட்டர் வாசலில் இருக்கும் சின்ன கேட் வழியாக உள்ளே நுழைய முயற்சிக்க, அதை சமாளிக்க முடியாமல் அரங்க ஊழியர்களும் போலீஸும் கம்பும் லாத்தியும் வீச, கூட்டத்தினர் நாலாபக்கமும் சிதற, கீழவாசல் பகுதியிலிருந்து வரும் டவுன் பஸ்களும் சரி, நெல்பேட்டையிலிருந்து செல்லும் பஸ்களும் சரி ரோட்டை கடக்க முடியாமல் (அப்போது டிவிஎஸ் நிறுவனம் பஸ்களை நடத்திக் கொண்டிருந்ததால் நிதானமாகதான் ஓட்டுவார்கள்) திணற, எனக்கோ மனம் கொள்ளா சந்தோசம். எனக்கே ஏதோ கிடைத்து விட்டது போன்ற பெருமை. ஸ்கூலில் மனம் இருப்பு கொள்ளவில்லை.
    மதியம் ஒன்றரை மணி இருக்கும். திரும்பி வருகிறோம். தியேட்டர் வாசல் கதவுகள் மூடியிருக்கின்றன. ஏகப்பட்ட போலீஸ். அரங்கத்தின் இரண்டு பக்கமும் இரண்டு சந்துகள், அந்த இரண்டிலும் மக்கள் க்யூ கண்ணுக்கெட்டிய தூரம் வரை நிற்கிறது. இப்போது ஒரு கட்டுப்பாடு தெரிகிறது. இதெல்லாம் ஒரு சில நொடிகள்தான். சட்டென்று ஒரு பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. என்னவென்று புரிவதற்குள் வாசல் கதவுகள் திறக்கப்படுகிறது. திபுதிபுவென்று ஒரு இருபது முப்பது பேர் உள்ளேயிருந்து ஓடி வருகிறார்கள். அதில் ஒருவர் நடுரோட்டில் வந்து குனிந்து ஏதோ செய்ய ( ரிக்ஷாவின் உள்ளே இருந்து பார்ப்பதால் சரியாக தெரியவில்லை) படபடவென்று ஆயிரம் வாலா வெடிக்க ஒரே கைதட்டல் கூச்சல், ஒரே ஆரவாரம். முதலில் புரியவில்லை. பிறகு படம் நன்றாக இருக்கிறது என்பதற்காகத்தான் அந்த கொண்டாட்டம் என்பது புரிந்து போனது. பயங்கர சந்தோசம். ஆனால் ரிக்ஷா ஓட்டுநர் வேக வேகமாக ஒட்டிக் கொண்டு வந்துவிட்டார். ஏங்க என்று கேட்டதற்கு "அந்த கூட்டத்திலே மாட்டிக்கிட்டோமுன்னா நகர முடியாது. அதான் போயிருவோம்". எனக்கு ஏமாற்றம். அந்த கொண்டாட்டத்தையெல்லாம் பார்க்க முடியவில்லையே என்று. அதையே நினைத்துக் கொண்டிருந்தேன்.
    படம் வெளியான 8-ம் நாள் சனிக்கிழமைதான் படம் பார்க்க முடிந்தது. மாலைக் காட்சி. நானும் என் கஸினும் (மாமா மகன்) தாத்தா வீட்டிலிருந்து போகிறோம். அதற்கே permission வாங்க தாவு தீர்ந்து விட்டது. காரணம் எனக்கு எட்டு அவனுக்கு 14 வயதுதான். ஆகவே எங்கள் இருவரையும் தனியாக அனுப்ப யோசிக்கிறார்கள். கொஞ்சம் பொறு சில நாட்கள் கழித்து நாங்களே கூட்டிப் போகிறோம் என்கிறார்கள். போயே ஆகவேண்டும் என்று நான் பிடிவாதம் பிடிக்கிறேன்.ஒரு வழியாக சரி என்று அனுப்பி விட்டார்கள். சீக்கிரமே போய் விட்டோம். வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி உள்ளே போய் அமர்ந்தாகி விட்டது. ஆட்கள் வந்து கொண்டேயிருக்கிறார்கள். என் வலப்பக்கம் சீட்டில் ஒருவர் அமர்கிறார். சிறுது நேரம் சென்று ஒரு சிகரெட் பற்ற வைத்து குடிக்கிறார். இடது புறம் அமர்ந்திருக்கும் கஸினுடன் பேசிக் கொண்டே வலது கையை திரும்புகிறேன். சுளீர் என்ற உணர்வு. எனது வலது கை மோதிர விரலில் பக்கத்து சீட்காரின் கையில் புகைந்துக் கொண்டிருக்கும் சிகரெட்டின் நுனி சுட்டுவிட பயங்கர எரிச்சல். அவர் சாரி சொல்கிறார். எங்களை விட பெரியவர். சண்டையா போட முடியும்? பரவாயில்லை என்று சொல்லிக் கொண்டே விரலை ஊதிக் கொண்டே இருக்கிறேன். படம் ஆரம்பித்தவுடன் எரிச்சல் மறந்து விட்டது. அந்த வயதில் முழுமையான ரசனைகள் மனதில் உருக் கொள்ளவில்லை என்றபோதிலும் படத்தை ரசிக்கிறேன். "எனக்கு கெடுதல் நினைக்கிறவன் எல்லோருக்கும் இதுதான் கதி" என்ற நடிகர் திலகத்தின் வசனத்திற்கு மட்டும் தியேட்டரோடு சேர்ந்து கைதட்டியது (எரிச்சலையும் பொறுத்துக் கொண்டு) இன்றும் நினைவிருக்கிறது. படம் முடிந்து பேசிக் கொண்டே வீட்டிற்கு வருகிறோம். வீட்டிற்கு வந்து சாப்பிட உட்கார்ந்து சாதத்தில் கைவைத்தால் எரிச்சல் தாங்காமல் நான் கத்தி விட அனைவருக்கும் தெரிந்து விட்டது. பாவம் என் கஸினுக்கு சரியான திட்டு(சின்ன பையனை கூட்டிட்டு போகும்போது கவனம் வேண்டாம்?). என்னை சமாதானப்படுத்தும்விதமாக அப்போது நைட் ஷோ கிளம்பிக் கொண்டிருந்த என் மாமா, சித்திகள் தேவி டாக்கீஸிற்கு சோப்பு சீப்பு கண்ணாடி படத்திற்கு என்னையும் கூட்டிக் கொண்டு போனது மற்றொரு மறக்க முடியாத நினைவு. (வேறொருன்றுமில்லை, வாழ்க்கையில் முதல் தடவையாக தொடர்ந்து இரண்டு காட்சிகள் இரண்டு சினிமா பார்த்தது அப்போதுதான்). மறுநாள் முழுவதும் என் கசின் என்னிடம் பேசவில்லை.(திட்டு வாங்கி கொடுத்ததை விட நான் இரண்டு படம் பார்த்து விட்டேன். ஆனால் அவனை விட்டு விட்டு போய் விட்டோம் என்ற கோபம்). பின்னாட்களில் ரசனை மேம்பட்டு படம் பார்த்து பார்த்து ரசித்தது மகிழ்ந்தது தனி கதை.
    பீப்பினு ஊத்திக்கும் என்று சொன்னவர்கள் வாயடைத்து போக படம் பெற்ற வெற்றி, அதுவும் ரிலீஸ் ஆகும்போது என் தம்பி,,பின்னாட்களில் ஓடிக் கொண்டிருக்கும்போது எங்க ஊர் ராஜா, லட்சுமி கல்யாணம், உயர்ந்த மனிதன் என்று வழக்கம் போல் தன் படங்களின் போட்டியையே சமாளித்து தமிழகத்திலேயே அதிகபட்சமாக (சென்னை சாந்தியோடு இணைந்து) 132 நாட்கள் சிந்தாமணியில் வெற்றி முரசு கொட்டி மொத்த வசூலாக Rs 3,47,000/- சொச்சம் ரூபாயை பெற்று எங்களையெல்லாம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய படத்தின் அந்த நாள் ஞாபகம் எந்த நாளும் மறக்காது. .
    அன்புடன்


    courtesy net
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •