சிவாஜி பாட்டு-32
-------------------------------

கண்ணம்மாள் என்று பெயர் என் பாட்டிக்கு. என் அம்மாவின் அம்மா. கண்ணுப் பாட்டி என்போம் நாங்கள். பாசக்காரி.

பள்ளி விடுமுறையில் அவளிருந்த கிராமத்துக்குப் போனால் சற்றே பருமனாக்காமல் ஊர் திருப்ப
மாட்டாள். வயிற்றுக்கோ, பிற மனிதர்களுக்கோ வஞ்சகம் நினைக்காத நல்ல மனசுக்காரி.

காது சுத்தமாகக் கேட்காது. வாய்ப் பேச்சும் வராது.
மிகச் சிரமப்பட்டுப் பேசினாலும் வார்த்தைகள் சரியாக வந்து விழாது.

ரொம்பவும் கஷ்டப்பட்டவள். அவள் கணவர், என் தாத்தா.. எங்கள் காலத்தில் என்னவோ கண்ணுப் பாட்டியை சீரும், சிறப்புமாய் வைத்துக் காப்பாற்றினார்தான். ஆனால், என் அம்மா,சித்தி, மாமாக்கள்எல்லோரும் வளர்ந்து கொண்டிருந்த காலத்தில்,சொல்லாமல், கொள்ளாமல் சில
வருடங்கள் தன் பிழைப்பைப் பார்த்துக் கொள்ள
ஒடி விட்டாராம். அந்தக் காலகட்டத்தில் அவள் பட்ட வேதனையும், அவமானங்களும் தந்த நெருப்பு
கடைசி வரை அவளிடமிருந்தது.

அந்த நெருப்பில், தன்னிடம் எந்தக் குறைபாடுமில்லாமல், கணவன் என்ன தவறிழைத்தாலும் பொறுத்துப் போகும் சராசரிப் பெண்களுக்கான சூடு இருக்கும்.

மூன்று ஆண்பிள்ளைகள், இரண்டு பெண் பிள்ளைகளோடு அவள் வாழ்க்கையை ஜெயித்த
கதையை, அவளது தத்துப் பித்துப் பேச்சிலேயே நான் புரிந்து கொண்டிருக்கிறேன்.

"ச", "ர".. இப்படி என்ன எழுத்தானாலும் அவள் உச்சரிப்பில் "க" என்றே ஒலிக்கும்.

நான் கூட வேடிக்கையாகச் சொல்வதுண்டு. " நான் இப்பகொஞ்ச நாளாத்தான் கவிதைல்லாம் எழுதுறேன்.ஆனா..நான் பொறந்ததுல இருந்தே என்னை "கவி"ன்னு சொல்றது (ரவி -கவி) கண்ணுப்பாட்டிதான்".

அம்மா கண்ணில் நீர் வரச் சிரிப்பாள்.

உடலில் ஏதோ ஒன்று குறைந்து மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தினாலும்,
செயலால் மற்றவர்களை விட உயர்ந்து நிற்பவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.
******

ஒரு அலுவலகத்தில், ஒரு விண்ணப்பம் எழுத வேண்டிய சூழலில் ஒரு வெள்ளைக் காகிதம் தேவையாயிருந்தது.

அருகிலிருந்த மேஜைக்குப் பின்னே இருந்தவரிடம் கேட்டேன். இரண்டு காகிதங்கள் இணைந்த ஷீட் ஆகக் கொடுத்தார்.

"ஒரு பேப்பர் போதும் சார்" என்றவுடன் அவர் சிரித்த போதுதான் கவனித்தேன்... அவரது இடது தோளுக்குக் கீழ் கையே இல்லை என்பதை. ஒரு
கையே இல்லாதவர் காகிதத்தை எப்படி ஒற்றையாகக் கிழிப்பார்?

கேள்வியோடு நான் தவித்தேன். அவர் ஷீட்டை எடுத்து மேஜை மீது வைத்து, வலது கை விரல்களால் அதன் மடிப்பில் கூராக நீவிய பின், வெள்ளை ஷீட்டை விரித்து, கூராக நீவியதின் முனையில் லேசாக கிழித்து விட்டுக் கொண்ட பின், இரண்டு விரல்களால் காகிதத்தை அழுத்தி நகர்த்திக் கொண்டே வந்தார்... தையல் இயந்திரத்தில் ஒரு துணி நகர்வதைப் போல.

மிகச் சில நொடிகள்...

அவர் என்னிடம் தந்த ஒற்றை வெள்ளைத்தாளில் கிழிக்கப்பட்ட ஓரம் எது என தேடுகிற மாதிரி அந்தக் காகிதக் கிழிப்பில் ஒரு இயந்திர நேர்த்தி.

இரண்டு கைகள் கொண்ட நாமெல்லாம் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு கவனமாய் காகிதம் கிழித்தாலும் ஏதோ ஒரு இடத்தில் கோணலாய்க் கிழிகிறது.

இவரால் எப்படி முடிகிறது என்கிற என் அன்றைய ஆச்சரிய விழி விரிப்பு இன்னமும் நீடிக்கிறது.

உடலில் ஏதோ ஒன்று குறைந்து மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தினாலும்,
செயலால் மற்றவர்களை விட உயர்ந்து நிற்பவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.
******

கன்னையனை எனக்கு மிகவும் பிடிக்கும்.

சிவகங்கையில் அமுதா என்றொரு திரையரங்கம் இருந்தது. மனித வாழ்க்கையை, அதன் இன்ப, துன்பங்களை கண்ணாடியில் பார்த்துக் கொள்வது போல எல்லோரையும் பார்த்துக் கொள்ள வைத்த நடிகர் திலகத்தின் படங்களையும் அந்த திரையரங்கம் காட்டியது.

அந்த வரிசையில் அது "பாகப்பிரிவினை"யைக் காட்டிய போதுதான் கன்னையன் என் கண்களின் வழியாக மனசுக்குள் வந்தான்.

நடிகர் திலகம் என்கிற மகாகலைஞனிடமிருந்து வெளிப்பட்டு, தனது தனித்தன்மையை இழந்து விடாமல் ரங்கனாய், ராமனாய் நம் மனதில் சிரஞ்சீவியாய் வாழ்பவர்களில் இதோ.. இந்த
கன்னையனும் ஒருவன்.

திறமையாளர்களால் கற்பிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம், காலத்தை மீறி ஏதோ நம் நெருக்கமான சொந்தக்காரன் போல் வாழ்நாள் முழுதும் நம்முடன் வரும் அதிசயம், நடிகர் திலகத்தால் மட்டுமே நிகழ்வது.

கன்னையன் தன் ஊனத்தை நினைத்து வெகுவாக வருந்துகிற போதும், சூடான பானம் தரப்பட்ட ஒற்றைக் கையின் சூடு தாங்காமல் தவிக்கிற போதும், அவனுடைய வேகத்திற்கு அவனது ஊனமே தடை போட்டாலும், அதையெல்லாம் தாண்டி அவனது நம்பிக்கை அவனை வேகமாக செலுத்துவதும், "நம்பிக்கையோடு இருங்கள். ஜெயிக்கலாம்" என்று கன்னையன் உணர்த்துவதும் அந்தச் சின்ன வயதிலிருந்தே எனக்கு புரிதலானது. பிடித்தமானது.

திருவிழா என்று ஆட்டமும்,பாட்டமுமாய் ஊர் ரெண்டுபட, இயலாமையை முன்னிறுத்தி
வீட்டோடு முடங்கி விடாது,மடங்கிப் போன இடது கையும், இயங்காமல் விறைத்துப் போன
இடது காலும் ஒரு புது வித நடனம் உண்டு பண்ண, தானும் களமிறங்குவதோடு மட்டுமல்லாமல், வழக்கம் போல் இந்தக் களத்தையும் தனதாக்கிக் கொள்கிற என் கன்னையனை மிகவும் பிடிக்கும்.

உடலில் ஏதோ ஒன்று குறைந்து மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தினாலும்,
செயலால் மற்றவர்களை விட உயர்ந்து நிற்பவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.



Sent from my P01Y using Tapatalk