சிவாஜி பாட்டு-26
------------------------------

"என் மகன்" படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி ஒன்று உண்டு.

படத்தின் கடைசியில், திரையை உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கும் நமக்கெல்லாம் நடிகர் திலகம் அழகாய் "டாட்டா" காட்டிக்
கொண்டிருக்கையில், "வணக்கம்" என்ற வார்த்தை
வண்ணமாய் வந்து குறுக்கே நிற்கும்.

ஜெயிக்கிற விஷயத்தில் எனக்கு வணக்கமே கிடையாது என்கிற கருத்தில் நடிகர் திலகம்
அந்த வணக்கத்தை நிறுத்திப் பிடித்து வந்த வழியே தள்ளி விடுவார்.

ஆம்.

ஜெயிக்கிற விஷயத்தில் அவருக்கு வணக்கமே கிடையாது என்பதை இந்த "உத்தமன்'பாடலும் ஒரு முறை நிரூபிக்கிறது.

ஒடுங்கிய வாசலோடு உசரத்தில் இருக்கும் கோயிலின் படிகளில் இருந்து அழகுத் துணையோடு இறங்குவதில் துவங்கி, இன்னொரு அழகான இடத்தின் படிகளில் ஏறுவதோடு முடியும்
இந்தப் பாடலும் முடியும் நிமிஷத்தை வெறுக்க வைக்கும்.

பின்னங்கை கட்டிக் கொண்டு எந்தப் பிடிப்புமில்லாமல் அந்தரத்தில் ஒரு கால் உயர்த்தி நிற்பது அழகு.

கேமராவை நோக்கி சிரித்தபடி திரும்புகையில் கொஞ்சம் கூட செயற்கை சேர்க்காத அந்தப்
புன்னகை முகம் அழகு.

கொஞ்சம் பின் நகர்ந்தால் பாதாளம் காட்டுகிற உயரமான அந்த சதுரப் பரப்பில் காதலி
வெட்கத்தால் ஓடுகையில் குறுக்கே கால் நீட்டி மறித்து அவள் வேகம் மட்டுப்படுத்துகிற குறும்பு அழகு.

"பூமியெங்கும் பச்சைச் சேலை"பாடத் துவங்கும் போது தலை சிலுப்புவது அழகு.

கழுத்து சுற்றிய வெளிர் நீல நீள் துண்டு அழகுக்கு அழகு சேர்க்க, ஒயிலாய் உடல் வளைத்துக் குனிந்து காதலியின் கால், கையென தாளம் இசைப்பது அழகு.

வளைந்து, நெளிந்து நடந்து வந்து, தலை ஒருபுறமாய்ச் சாய்த்து, ஆளை அப்படியே
தூக்கிக் கொண்டு போகிற ஒரு சிரிப்பைத் தனது இதழ்களிலே தவழ விடுவதும்...

கழுத்துத் துண்டின் நீளமான ஒற்றை முனையைப் பற்றிச் சுழற்றிக் கொண்டு வேக நடை
நடப்பதும் அழகு.

அழகென்ற சொல்லுக்கு இலக்கணமாக அய்யன் நடிகர் திலகத்தை ஆண்டவன் படைத்தது அழகு.

அந்த அழகு முகத்தை ஆயுசுக்கும் ரசிப்பதற்கு அந்த ஆண்டவனே நம்மைப் படைத்ததும் அழகு.



Sent from my P01Y using Tapatalk