Results 1 to 10 of 157

Thread: Padalgal Palavidham - பாடல்கள் பலவிதம்

Hybrid View

  1. #1
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி பாட்டு- 24
    -------------------

    பாடலென்கிற பேரில் வந்த ஒரு
    கவிதைக்கு, நடிகர் திலகம்
    என்கிற கவிதை வாயசைத்து
    நடித்த அதிசயம் 1987-ல்
    நடந்தது.

    தந்தைக்கும்,மகளுக்குமான
    அதீத பாச உணர்வுகளை
    மையமாகக் கொண்ட படங்கள்
    ஜெயிக்கிற காலத்தில்
    இருக்கிறோம். ஒரே ஒரு
    பாடலுக்குள்ளேயே அத்தகைய
    உணர்வுகளை உள்ளடக்கி
    நம் இதயம் வென்ற இப்பாடல்
    வியப்புக்குரியது.
    ------------

    நடிகர் திலகத்தின் மனத்தின்
    நிறம் கொண்ட தூய வெள்ளைக் கால்சட்டை, அடர்சந்தன நிறத்தில் அதனுள்
    நுழைத்த மேல்சட்டை, நடிகர்
    திலகத்தின் துணையோடு
    நடக்கும் அவரது வாக்கிங்
    ஸ்டிக்...

    மாறிக் கொண்டேயிருக்கிற
    காலத்திற்கேற்றாற் போல்
    தன்னைப் புதுப்பித்துக்
    கொண்டேயிருந்திருக்கிறார்..
    நடிகர் திலகம்.

    அதனால்தான் கடினமான தமிழ்
    மற்றும் இசை இலக்கணத்திற்கு உட்பட்ட
    பழங்கால நாடக,திரைப்படப்
    பாடல்களுக்கு வாயசைத்து
    நடித்த அவரால், இந்தப்
    புதுக்கவிதைக்கும் கூட
    அழகூட்ட முடிந்திருக்கிறது.
    --------------

    இறந்த காலத்தில் இருந்ததாய்
    கதையில் சொல்லப்படும் ஒரு
    இறக்காத இல்லற வாழ்வின்
    அன்பை ஒரு அழகான
    கவிதைக்குள் சுருக்கி விட்ட
    கவிப்பேரரசு வைரமுத்து,

    இனிமையாய் இசையூட்டிய
    சங்கர்-கணேஷ்,

    அப்பாவும், பெண்ணுமாகவே மாறி விட்ட எஸ்.பி.பி-ஷைலஜா...

    மகளாக நடித்த நதியா..

    எல்லோரும் வியப்புடன்
    வாழ்த்துவதற்குரியவர்கள்.
    -----------

    "அன்புள்ள அப்பா..
    உங்கள் காதல் கதையைக்
    கேட்டால் தப்பா?"

    -தந்தையென்றாலும்
    பண்போடு அனுமதி கோரும்
    மகளை, கேட்பது காதல் குறித்து
    என்பதால் "பொல்லாத
    பெண்ணப்பா" என்று
    செல்லமாகக் கடிந்து கொள்வது
    ஒரு அழகு.
    --------------

    மகள் கேட்கிறாள்..

    "அப்பா..
    நீங்கள் அம்மாவைப் பார்த்தது
    எப்போது?
    ஞாபகம் உண்டா இப்போது?"

    ஆர்வமாய் பதில் சொல்கிறார்
    தந்தை...

    "முதல் முத்தத்தையும்
    முதல் காதலையும்
    மறக்க முடியாது மகளே..
    அவளை நான் பார்த்தது
    மலர்கள், வண்டுகளுக்குப்
    பேட்டி கொடுக்கும்
    ஊட்டியில்."

    "அவளை நான் பார்த்தது.."
    என்று துவங்கி, "ஊட்டியில்"
    என்று முடிக்கும் வரைக்கும்
    இடைவிடாமல் பாடல்
    பாடப்படுகிறது.. ஆனால்..
    அதிலும் 'எங்கே முதன்முதலில் பார்த்தோம்?'
    என்று யோசிப்பதாய் அவர்
    காட்டும் பாவனை ஒரு அழகு.
    --------------

    "அந்த மலர்க்காட்சியில்
    அழகான பூவே
    அவள் மட்டுந்தானே"
    எனும் போது காட்டும்
    பெருமிதம் ஒரு அழகு.
    --------------

    "பூக்களெல்லாம்
    அவள் கனிந்த முகம் காண
    நாணிக் கோணி
    குனிந்து கொண்டன."

    -எனப் பாடுகையில்
    நாணியும்,
    கோணியும் இவர் செய்யும்
    அசைவுகள் அழகு.
    -------------

    "உங்கள் மணவாழ்க்கையில்
    மலரும் நினைவுகள் உண்டா?"
    -மகள், பழைய நினைவுகளைத்
    தட்டி எழுப்பி விடுகிறாள்.

    "நான் தாயிடம் கூட
    பார்த்ததில்லை அந்தப் பாசம்.
    அவள் நினைவுகளே
    என் சுவாசம்."
    -எனும் போது தனக்குள்
    தானே கரைந்து போய்..
    "அன்புள்ள அப்பா" எனும்
    மகளின் குறும்புக் குரல்
    கேட்டு சோகத்திலிருந்து உடனே தன்னை விடுவித்துக்
    கொள்வது ஒரு அழகு.
    ----------------
    "அப்பா..
    அம்மா உங்களை
    நல்லா கவனிச்சுக்கிட்டாங்களா?"
    -மகளின் ஆசைக் கேள்வி.

    துள்ளிக் குதித்து வரும்
    பதில்..

    "சேலையில் எனது
    முகம் துடைப்பாள்
    நான் சிணுங்கினால்
    செல்ல அடி கொடுப்பாள்.
    விரல்களுக்கெல்லாம்
    சுளுக்கெடுப்பாள்.
    என் நகக்கண்ணில் கூட
    அழுக்கெடுப்பாள்."

    -சுளுக்கெடுப்பதையும்,
    அழுக்கெடுப்பதையும் கூட
    அந்தந்த வரிகளைப்
    பாடுகையில் மகளிடம்
    ஆர்வமாகச் செய்து
    காட்டுவார்.

    எப்படி சுளுக்கெடுப்பது,
    எப்படி அழுக்கெடுப்பது
    என்றெல்லாம் தெரியாத
    வயதில்லை..மகளுக்கு.

    இருப்பினும், மனைவியால்
    தான் பெற்ற மகிழ்வான
    அனுபவங்களை மகளுக்கு
    விளங்கச் செய்வதில் இருக்கும்
    குழந்தைத்தனமான வேகம்
    ஒரு அழகு.
    ---------------

    இரண்டே கண்கள்.

    "தாயாய் அவளைப்
    பார்த்ததுண்டு" -என்று
    பாடினால், அவற்றில் தாய்மை
    ததும்புகிறது.

    "ஒரு தாதியாய் அவளைப்
    பார்த்ததுண்டு"- என்று
    பாடினால், அவற்றில் கருணை
    கசிகிறது.

    "ஒரு தேன் குடமாய்
    அவளைப் பார்த்ததுண்டு"
    -என்று பாடினால் அவற்றில்
    இனிமை வழிகிறது.

    ஆச்சரியத்துக்குரிய அந்தக்
    கண்கள் அழகு.
    ---------------

    அன்பான மனைவியைப்
    பிரிந்த வேதனை தாங்காமல்
    அவர் அழுதுகொண்டே பாடும்
    பாடலின் கடைசி வரிகள்..

    "என் வானத்தில்
    விடிவெள்ளி எழுந்தது..
    வெண்ணிலவு மறைந்தது."

    இறைவா...!

    நடிகர் திலகமென்கிற
    வெண்ணிலவையும்
    பறிகொடுத்து விட்டு
    பரிதாபமாய் இருண்டிருக்கும்
    எங்கள் வானத்தில்
    எப்போது விடியல் தருவாய்?


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •