காலை 10 மணிக் காட்சி பக்கா அனுபவங்கள்.



'மன்மத லீலை' கமலின் காமக் குதிரை போல் 70-களின் பக்கம் திரும்பி மனம் ரிவர்ஸ் அடிக்கிறது. என்ன பொன்னான தருணங்கள்! குடும்ப பாரமறியா குதூகல வாழ்க்கை. நல்லது கெட்டது அவ்வளவாகத் தெரியாத வயது. 'சினிமாவுக்குக் கூட்டிப் போ' என்றால் அப்போது அவன்தான் கெட்ட பையன். கோலி, கிட்டி விளையாண்டு, சோர்வுக்கு கோலி சோடா உடைத்து, காலி பண்ணின ஜாலி காலமது.

விஷயத்திற்கு வருகிறேன். காலைக் காட்சி என்று தனியே அப்போது போடுவார்கள். நான் எட்டாவது படிக்கும் போதே 'சனி, ஞாயிறு காலை பத்து மணி காட்சிக்கு மட்டும்' என்று நீலக்கலர் பவுடரில் பிரஷ்ஷால் தோய்த்து எழுதிய எழுத்துக்கள் ஒரு வால் போன்ற நீள்பேப்பரில் போஸ்டரின் மேல் எழுதி கிராஸாக ஒட்டப்பட்டிருக்கும். தனியாகவே அது நன்றாகத் தெரியும்.

காலை பத்துமணிக் காட்சி என்றாலே தெலுங்கு டப்பிங் படங்கள்தாம் கோலோச்சும். காந்தாராவ், என்.டி.ஆர் இந்த இரண்டு ஹீரோக்களின் படங்கள் வாராவாரம் எங்கள் கடலூர் கமரில் 10.00 மணிக் காட்சிக்கு திரையிடப்படும். படம் ஒரு வாரத்திற்கு முன் மெயின் பிக்சரின் இடைவேளையின் போது டிரைலராக காட்டப்படும்.

விட்டலாச்சார்யாவின்

'மன்னனைக் காத்த மாவீரன்'

என்று பழுப்புக் கலர் ப்ரின்ட்டில் டிரைலர் போடுவார்கள். இடைவேளையில் வெளியே 10 பைசா டீயை அரை ஜான் அளவு கிளாசில் முழுக்கப் பார்த்து 'நிறைய கொடுத்திருக்கான் டோய்' என்று மனசில் சந்தோஷப்பட்டு குடித்தால் ஐந்தாறு முனரில் கிளாஸ் காலியாயிடும். (ஆமா! முனருக்கு பெரிய ' று' வா சின்ன 'ரு' வா?... பேச்சு வழக்கு வார்த்தைதானே அது?) டீ குடித்து முடிப்பதற்குள் 'திடு'மென பத்து மணிக்காட்சி படம் டிரைலராக ஓட, 'டங்.. டங்' என்ற கத்திச் சத்தம் கேட்க, வேகவேகமாக இருட்டில் ஓடி, அனைவர் கால்களையும் மிதித்து, திட்டு வாங்கி இருக்கையை தேடித் பிடித்து அமர்ந்து, முன்னாடி இருக்கையில் அமர எத்தனிப்பவர்களை 'மறைக்கிறான் பார்'' என முறைத்து, மனதுக்குள் வசை பாடி, என்.டி. ஆரைக் கண்டவுடன் எக்காளக் குதூகலமிட்டது அந்தக் காலம்.



ஒரு நான்கைந்து நட்சத்திர ஷேப் வடிவங்கள் சிறிதும், பெரியதுமாய் லாங் ஷாட்டிலும், ஷார்ட் ஷார்ட்டிலும் தூர தூர போய், கிட்ட கிட்ட வந்து ஒளிர, அதன் நடுவே 'மாயா ஜாலங்கள் நிறைந்தது' என்று எழுத்துக்கள் 360 டிகிரி ஆங்கிளில் சுற்றி வரும். பார்க்கும் போது மனம் பரவசமடையும். பெரும்பாலும் ராஜநாளா தான் ஹீரோவிடம் கத்திச் சண்டை செய்து 'லெக்கின்ஸ்' கிழிந்து நிற்பார் பரிதாபமாக. அப்படியே அடுத்த காட்சியாக ராஜஸ்ரீயோ இல்லை விஜயலலிதாவோ ஸ்டுடியோ செட்டில் வெட்டப்பட்ட சின்ன குளத்தில் அழுக்குத் தண்ணியில் வெள்ளை உடை தரித்து 'ஓ...என் மதன ராஜா' என்று டிராக் பாடுபவர்களின் பின்னணயில் பாடுவார்கள். அப்போது அரங்கு திடீரென்று நிசப்தமாகி விடும். உச்சக்கட்ட மாணவப் பருவமாதலால் நம்மையறியாமல் இருக்கையில் நாம் உயருவோம். பின்னால் இருப்பவர் நம் தலையில் தட்டி 'மறைக்குது....குனிந்து உட்கார்' என்று மிரட்டுவார்.

திடீரென்று குளியல் காட்சி மறைந்து அகோர உருவம் ஒன்று ராட்சஸனாக வந்து அவதாரம் எடுத்த ஆண்டவன் போல வந்து நின்று தடித்த குரலில் வசனம் பேசும். அப்படியே நாயகனை 'அலேக்'காகத் தூக்கி வீசும் போது நம் நெஞ்சமெல்லாம் நடுங்கும்.

'பயங்கரக் காட்சிகள் நிறைந்தது' என்று எழுத்துக்கள் மின்னியவாறு வந்து போகும்.

உடனே ஒரு டூயட்.



'ஏ... பெண்ணே! அழகுப் பெண்ணே!' என்று ஆலமர விழுதைப் பிடித்து காந்தாராவ் தொங்கி வருவார். சம்பந்தமே இல்லாமல் படுகவர்ச்சியாக காபரே உடை அணிந்து ஜோதிலஷ்மி இடுப்பை கிரைண்டராக மாற்றுவார். கொட்டாயில் சும்மா விசில் பிச்சி உதறும்.

'கவர்ச்சி நடனங்கள் நிறைந்தது' என்று எழுத்துக்கள் ஓடியாரும்.

அடுத்து காட்சி மாறி கண் தெரியாத நாயகனின் அம்மா சென்டிமெண்ட் வசனம் பேசுவார்கள். வசனம் பேசி முடித்தவுடன்தான் நம் காதுகளில் அது கேட்கும். 'ச்சூடம்மா' என்பது வசனகர்த்தாவின் சாதுர்யத்தால் 'பாரம்மா' என்று கேட்கும். 'பாடல்கள் புரட்சிதாசன்' என்று டைட்டில் வரும்.

ஒன்றா.... இரண்டா.. இப்படி மாயாஜாலப்படங்கள் வரிசயாக. தியேட்டர் கண்டிப்பாக நிரம்பி விடும். பெண்கள் யாருமே வரமாட்டார்கள். போஸ்டரில் கூட்டத்தை இழுக்க 'தெலுங்கு எம்.ஜி.ஆர்' காந்தாராவ் நடித்தது' என்று பட்டமெல்லாம் புத்திசாலித்தனமாக கொடுத்திருப்பார்கள்.

மன்னனைக் காத்த மாவீரன்,

வீரவாள்,

மாயத்தீவு ரகசியம்,

பட்டி விக்கிரமாத்தன்,

காவேரி மன்னன்,

மாய மோதிரம்,



இந்த மாதிரி ராஜ மந்திரக் கதைகள் நிறைந்த படமே ஆரமபத்தில் காலைக் காட்சிப் படங்களாக வெற்றிநடை போட்டு ஆந்திரக் கதாநாயகர்களை ஈஸியாக தமிழ் பாமர ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி நெஞ்சில் பதிய வைத்தன.

இதில் இன்றுவரை அதிசயக்கும் விஷயம் என்னவென்றால் காந்தாராவ், ராமாராவ் அணியும் அன்றைய உடலின் நிறத்தை அப்படியே காட்டும் 'லெக்கின்ஸ்' உடைகள்தான். இதுபற்றி எங்களிடம் விவாதமே நடக்கும். அது 'எலாஸ்டிக் டிரஸ்' என்று ஒருவன் சாதிப்பான். 'போடா முண்டம்... பின்னால 'ஜிப்' இருக்கும்டா... நம் கண்ணுக்கு அது தெரியாம மறைச்சி காண்பிப்பாங்க'.... என்று இன்னொருவன் புத்திசாலியாவான்.

எப்படியோ இப்படி ஒரு டைட்டான உடை அணிந்த தெலுங்கு நாயகரின் கஷ்டத்தை நாம் பாராட்டத்தான் வேண்டும். எப்படித்தான் அதை அணிந்து நடித்தார்களோ!

பின் ஒரு கட்டத்தில் ரசிப்பு முன்னேற்றத்தின் காரணமாக நவீன சமூக படங்கள் மாயாஜாலப்படங்களை தள்ளி ஓரம் கட்டிவிட்டு அவைகளின் இடத்தைப் பிடித்தன.



இப்போது கிருஷ்ணாதான் 74,75 களின் காலைக்காட்சி ஹீரோ. போஸ்டரில் துப்பாக்கி பிடித்தபடி கிருஷ்ணா வீரமாக போஸ் கொடுக்க, கீழே விஜயலலிதா டைட் பேன்ட் போட்டு, மேலே ஷர்ட் போட்டு அதை முடிச்சியும் போட்டு இடுப்பில் கைவைத்தபடி டான்ஸ் போஸ் கொடுப்பார். அப்புறம் கிருஷ்ணா வில்லனுடன் மோதுவது போல ஒரு காட்சியும் அதில் இருக்கும். கத்திச் சண்டைகளையும், மாய வேஷங்களையும் பார்த்து சலித்து, புளித்துப் போன போது புது தீபாவளி துப்பாக்கி 'டுமீல்...டுமீல்' சப்தம் காதுகளுக்குள் இனிமையாக விழுந்தது.

நாகேஸ்வரராவ் 'சோகராவ்' என்பதால் காலைக் காட்சிகளில் அவருக்கு இடம் இல்லை.



இந்தப் படங்களில் பழைய வில்லன்கள் இருக்க மாட்டார்கள். சத்யநாராயணா, பிரபாகர் ரெட்டி என்று வில்லன்கள் 'கௌபாய்' ரேஞ்சில் துப்பாக்கி பிடித்து ஓரிரு பெண்களை கற்பழித்து, 'கேம்ப்ளிங்' விடுதி நடத்தி, அதில் காபரே ஆடவிட்டு, பல கொலைகள் செய்து, நம்பிக்கை துரோகம் செய்து காட்டிக் கொடுத்த தன் கூட்டத்து ஆளை முதலை வாயில் தள்ளி, மற்றவர்களுக்கும் அதே நிலைமைதான் என எச்சரித்து எக்காளமும், கும்மாளமும் இடுவார்கள்.

வெட்டவெளி சென்னை மகாபலிபுரம் தார் ரோட்டில், சவுக்குத் தோப்புகள் சரமாரியாய் சைடில் வளர்ந்து கிடக்க, ஒப்பன் ஜீப்பில் வில்லன் ஜீப்பை துரத்துவார் ஹீரோ. ஜீப்களின் டயர் திரும்பும்போது 'குளோஸ்-அப்' ஷாட் அதம் பறக்கும். வெத்து ரோடு 'விர்'ரென்று பறக்கும் வளைவுகளில் வந்த ஷாட்களே திரும்பத் திரும்ப வரும். அதைக் கண்டு பிடித்து பெயர் வாங்கி விடுவேனாக்கும். ஹ.. ஹ. ஹீரோ' கிருஷ்ணா வந்து (இவர் தெலுங்கு 'ஜேம்ஸ் பாண்ட்') வில்லன்களுடன் படம் முழுக்க பத்து சண்டைகள் போட்டு, இறுதியில் போலிசிடம் பிடித்துக் கொடுத்து படத்தின் முதல் டூயட் பாடலை இறுதியில் மீண்டும் நாயகியுடன் சேர்ந்து நான்கு வரி பாடி நம்மை மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு அனுப்புவார்.

இப்படி

மோசக்காரனுக்கு மோசக்காரன்,

கில்லாடிக்குக் கில்லாடி;

துடிக்கும் துப்பாக்கி,

கத்திக்குத்து கந்தன்

சென்னையில் சி.ஐ.டி 77

(இந்தப் படத்தில் கிருஷ்ணாவுக்கும், வில்லனுக்கும் கைபலப் பரிசை போட்டி ஒன்று நடக்கும் சூதாட்ட விடுதியில். இருவரும் அவரவர்கள் கைகளை டேபிள் மீது வைத்து கோர்த்து வலது பக்கமும் இடதுபக்கமும் ஒருவரை ஒருவர் சாய்த்து மிஞ்சப் பார்ப்பார்கள். இதில் என்ன விசேஷம் என்றால் வலது பக்கம், இடது பக்கம் இரு பக்கங்களிலும் பெரிய கொடுக்கு கொண்ட தேள்கள் சில நகர்ந்து கொண்டிருக்கும். வில்லன் கிருஷ்ணாவின் கைகளை பிடித்து சாய்த்து அப்படியே ஜெயிப்பது போலக் கொண்டு போகும் போது தேள்கள் கொடூரமாய் கிருஷ்ணாவின் கையைக் கொட்ட எக்கும். பார்க்கும் நாங்கள் படுடென்ஷனாக நகம் கடிப்போம். பின் பதிலுக்கு கிருஷ்ணா வில்லனின் கைகளை சாய்த்து இறுதியில் தேள் வில்லன் கைகளைக் கொட்டும்போது நம் முகத்தில் சின்னா தமன்னாவைப் பார்த்தால் எவ்வளவு சந்தோஷப்படுவாரோ அதைவிட சந்தோஷ ரேகைகள் எங்கள் முகத்தில் படர்ந்த காலம் அது.

அடுத்த நாள் திங்களன்று ஸ்கூலில் பத்து மணிக் காட்சி பார்த்த கதை நடக்கும். சுற்றி அனைத்து நண்பர்களும் காதில் ஈ புகுவதைக் கூட கவனியாமல் கதை கேட்பார்கள். இதில் நண்பர்கள் கேட்கும் முதல் கேள்வி என்ன தெரியுமா?

'படத்துல எத்தனை சண்டைடா?'



ஏன்னா அத்தனை பசங்களுக்கும் சண்டைக் காட்சின்னா அவ்வளவு உயிர். எட்டு சண்டைகளாவது ஒரு படத்தில் இருக்க வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு சண்டைக் காட்சிகள் அதிகமாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு பசங்களுக்குப் பிடிக்கும்.

அப்புறம் ஹீரோக்கள் டாமினேஷன் போரடிச்சுப் போய் ஹீரோயின்கள் கட்டிப் பிடித்து ஸ்டன்ட் பண்ணி, ரிவால்வார் பிடித்து 'டுமீல்' பண்ணி எதிரிகளை துவம்சம் செய்தார்கள். குறிப்பாக ஜோதிலஷ்மி, விஜயலலிதா. இந்தப் படங்களுக்கு கூட்டம் எக்ஸ்ட்ராவாக வரும். இடம் கிடைக்காமல் நின்று கொண்டே பார்ப்போம். கவர்ச்சிக் காட்சிகள் வேறு அதிகம்.



ரிவால்வார் ரீட்டா,

கன் பைட் காஞ்சனா

இப்படி படங்கள் வந்து சக்கைப் போடு போடும்.

இதுவல்லாமல் கன்னட ராஜ்குமார் தமிழ் பேசுவார். அவர் படங்களுக்குத் தக்கவாறு' கோவாவில் சி.ஐ.டி, பெங்களூரில் சி.ஐ.டி, காட்டுக்கு ஒரு தோட்டக்காரன்' என்று சாமர்த்தியமாக வியாபாரத் தந்திரப் பெயர் சூட்டிவிடுவார்கள்.

பக்த ஆஞ்சநேயா, ஸ்ரீ ராம ஹனுமான் யுத்தம், லட்சுமி கடாட்சம் என்று பக்திப் படங்களும் அவ்வப்போது காலைக் காட்சியில் மிளிருவதுண்டு.

பத்துமணிக் காட்சி முடிந்து ஞாயிறு அன்று மதியம் ஒரு மணிக்கு வீட்டுக்குப் போனால் பாட்டி 'எங்கேடா போயிட்டு வர்றே?' என்று தன் அதிகாரத்தைக் காட்டும்.

'இன்னைக்கி ஸ்கூல்ல்ல 'ஸ்பெஷல் கிளாஸ்' பாட்டி' என்று கூசாம பொய் சொல்லிட்டு, மீன் நடுமுள்ளை மட்டும் விட்டுவிட்டு, 'முதல் மரியாதை' தலைவர் கணக்காய் இழுத்து இழுத்து உறிஞ்சி ருசித்து சாப்பிட்டது மறந்து போகுமா?



அப்புறம் இதெல்லாம் போரடிச்சுப் போய் இங்கிலிபீஷ் படங்கள் தமிழ்ப்படுத்தப்பட்டன. காட்ஜில்லா, கிங்காங் என்று இப்படி படங்கள். 'இன்னா சொல்லு... இங்கிலிஷ்காரன் இங்கிலிஷ்காரன்தான்... அவனை மாதிரி எடுக்க முடியாது... என்று காந்தாராவை புகழ்ந்து பேசிய வாய் அப்படியே தடம் புரளும்.

இதன் நடுவில் நாகேஷ் இங்கு பிரபலம் என்பதால் அவர் நடித்த தெலுங்குப் படங்கள் தமிழாக்கம் செய்து வெளியிடப்படும். 'நகைச்சுவை நாயகன்' நாகேஷ் என்று போஸ்டர் அடித்து வந்த 'நியூவேவ்' பாணி படம் ஒன்றை நான் அப்போது ரசித்துப் பார்த்திருக்கிறேன். கீழே 'இது ஒரு நியூவேவ் படம்' என்று போஸ்டரில் படித்தது நினைவிருக்கிறது. ஆனால் படத்தின் பெயர் நினைவில்லை. ஆனால் நிறைய கவர்ச்சி நாயகிகள்.

அப்புறம் பேய்ப்பட வரிசையில் டப்பிங்கில் பேயோட்டம் ஓடியது 'கதவைத் தட்டிய மோகினிப் பேய்'.

காந்தாராவ், ராமாராவ் இவர்களெல்லாம் அரச கதைகளிலிருந்து மீண்டு வந்து கால மாற்றம் காரணமாக 'பாண்ட்' பாணியில் துப்பாக்கி பிடித்து தோற்றுப் போனார்கள். காந்தாராவ் பேன்ட் சூட் அணிந்தால் யார் பா ர்ப்பார்கள்? அவருக்கு விட்டலாச்சார்யா பாணி டிரஸ்தான் பொருத்தம். பின்னாளில் நரசிம்மராஜு அதைத் தக்க வைத்துக் கொண்டார்.

ஆனால் கிருஷ்ணாவை வெல்ல வேறு எந்த நாயகர்களின் துப்பாக்கிகளும் இல்லை. அவர் இளமை மாறா தனிக்காட்டு 'சுடு'ராஜா.

'மெக்கனாஸ் கோல்ட்' தாக்கத்தில் மனைவி விஜயநிர்மலா எடுத்த 'மோசக்காரனுக்கு மோசக்காரன்' படம் தெலுங்கிலும், தமிழிலும் சக்கை போடு போட்டது.

இதற்கு மேல் எழுதினால் கோபால் 'கொல்டி...அவன் வேலையைக் காட்டிவிட்டான் என்று 'அறம்' பாடுவார்.

இத்தோடு விட்டு விடுகிறேன் என் காலை காட்சி அனுபவங்களை.

நீங்களும் மல்லாந்து படுத்து பழசை அசை போட்டு, உங்க காலைக் காட்சி அனுபவங்களை எழுதுங்களேன்.

நம்ம கிருஷ்ணா சாருக்கு இப்படிப்பட்ட பதிவுன்னா ரொம்ப பிடிக்கும். மனுஷர் சிக்க மாட்டேன் என்கிறார்.