Results 1 to 10 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

Hybrid View

  1. #1
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Dinamani


    பானுமதி: 10. டாக்டர் பானுமதி!

    பானுமதிக்கு மீண்டும் வசந்தம்! 1973ல் பிரமிளா, லதா, ஜெயசித்ரா, ஜெயசுதா, ஸ்ரீபிரியா போன்ற புதுமுகங்கள் படையெடுத்த பின்னும் அரை டஜன் படங்கள் அணி வகுத்தன.

    1974 தைத் திருநாளில் வெளி வந்தது பத்து மாத பந்தம் வண்ணச் சித்திரம். கிருஷ்ணன் - பஞ்சு டைரக்ட் செய்தனர். மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்திருந்தது. சரோஜாதேவியும் அவர்களில் ஒருவர்.

    அத்தனை பேரையும் மீறி வழக்கம் போல் கொடி கட்டிப் பறந்தவர் பானுமதி.

    அதிலும் அவர் உஷா உதூப் ஆகி பாடிய லெட் மீ சிங்... லெட் மீ சிங்... முழு நீள மேற்கத்திய சங்கீதம் சகலரையும் சபாஷ் போட வைத்தது. அந்த ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல்! கல்யாண வீடுகளிலும், பிள்ளையார் கோயில் கச்சேரிகளிலும் தவறாமல் பாடப்பட்டது.

    கர்நாடக சங்கீதத்துக்குத் தலையையும் உடம்பையும் அவ்வளவு அலட்டிக் கொள்ளாதிருக்கலாம் என்ற கடுகுக் குறை, பாப் மியூசிக் பாடும் பானுமதியின் லாகவத்திலும் இனிமையிலும் மறைந்து விடுகிறது. சபாஷ் பானுமதி அய்யர்!

    நிர்மலாவிடம் உனக்கும் அந்தத் தொற்று நோய் பற்றிக் கொண்டு விட்டதா? என்று காதலைப் பற்றி அவர் செய்யும் கண்டனமும், விமர்சனமும் க்ளாஸாக இருக்கிறதல்லவா?



    பத்துப் பவுன் தாலிக் கயிற்றைத் தொட்டுக் காட்டி,

    கொடுமைக்காரனாக இருப்பது கணவனது கர்மம். அவன் கட்டிய தாலியைத் தூக்கிப் போடாமல் இருப்பது இந்த மண்ணின் தர்மம்! என்று சொல்லுகிறாரே, அந்தத் தோரணை, அந்த முக பாவம் - பானுமதிக்குத் தவிர வேறு யாருக்கு வரும்?

    பானுமதியை இனிக்க இனிக்கப் பாராட்டி ஒரு பாரா முழுக்க எழுதியது குமுதம்.

    கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் சுவாதி நட்சத்திரம் சினிமாவில் பானுமதிக்கு முதிய கன்னியாஸ்திரி வேடம். மாறுபட்ட கதையம்சம் இருந்தாலும் மக்களின் கவனம் பெறாமல் போனது.

    தாய் பிறந்தாள் படத்தில் பானுமதியுடன், நடிப்புக்காக மூன்று முறை ஊர்வசி பட்டம் பெற்ற சாரதா மருமகள் வேடத்தில் நடித்திருந்தார். பேரக் குழந்தைகளுக்காக ஏங்கும் பாட்டி வேடம் பானுமதிக்கு.

    1. முருகா எனக்கொரு வரம் வேண்டும்

    என் பேரனாக நீ வந்து பிறந்திட வேண்டும்

    2. மாதுளை முத்துக்கள் மல்லிகை மொட்டுக்கள் சிந்திக் கிடப்பதென்னவோ...

    இந்த மாளிகை வாசலில் ஆடிடும் செல்வங்கள் வாடிக் கிடப்பதென்னவோ...

    என்று இரு பாடல்களையும் பாடினார் பானுமதி.

    அந்த மூன்று சினிமாக்களும் 1974 முழுவதும் பரவலாகத் தமிழகமெங்கும் ஓடின. யுவதிகள் மத்தியில் பானுமதிக்கு மவுசு கூடியது.

    1975 உலக மகளிர் ஆண்டு. வர்த்தக சூழல் சரி இல்லை என்று ஏவி.எம். போன்ற நிறுவனங்கள் படத்தொழிலில் இருந்து விலகிய நேரம்.

    ஒரு தலைமுறை இடைவெளிக்குப் பின்னர், கோலிவுட்டில் பானுமதி மீண்டும் மிகத் தைரியமாக சினிமாத் தயாரிப்பில் ஈடுபட்டார். தன் புதிய படைப்புக்கு அவர் வைத்த டைட்டில் இப்படியும் ஒரு பெண்!



    சிவகுமார், ஸ்ரீகாந்த் போன்ற இளைய தலைமுறை நடிகர்கள் பானுமதியின் இயக்கத்தில் நடித்தார்கள். கழக அரசின் ஊழல்கள் பற்றி மீடியா பரபரப்பாக எழுதிய சமயம்.

    எம்.ஜி.ஆரின் கொள்கை கீதங்கள் ஸ்டைலில் பானுமதி ஒரு பாடலை மனோரமாவுடன் இணைந்து முதலும் கடைசியுமாகப் பாடினார். இருவரும் ஜெயிலில் அதைப் பாடுவதாகக் காட்சி.

    அகப்பட்ட வரையில் சுருட்டிட்ட யாரும் சுகப்பட்டதில்ல என்று அதன் பல்லவி ஆரம்பமானது.

    தியேட்டர்களில் விசில் பறந்தது. கை தட்டல்கள் அடங்க நேரமானது.

    க்ளைமாக்சில் ஸ்ரீகாந்தை மடக்கி, துரோகம் செய்த பெண்ணுக்கு தாலி கட்டப் போறியா இல்லையான்னு சவுக்கை எடுத்துச் சொடேர் சொடேர்னு அடித்த சினிமா - பானுமதியின் இப்படியும் ஒரு பெண்!

    தாய்க்குலங்கள் திரண்டு வந்து முழு ஆதரவு தந்தனர். எல்லா ஊர்களிலும் பல வாரங்கள் ஓடி நன்றாக வசூலித்தது.

    சட்டம் என் கையில் படத்தை நீங்கள் எல்லாரும் பார்த்திருப்பீர்கள். அது பானுமதி நடித்த எடுப்பார் கைப்பிள்ளை கலர் சினிமாவின் அப்பட்டமான காப்பி!

    தனக்குத் தண்டனை வாங்கித் தந்ததால் வக்கீல் பானுமதியின் குழந்தையைத் திருடி, எம்.ஆர். ஆர். வாசு திருடனாக வளர்ப்பார். அவரது பிள்ளையான ஸ்ரீகாந்த்தை பானுமதியின் காணாமல் போன மகனாக நடிக்க அனுப்பி வைப்பார்.

    ஸ்ரீகாந்தை சுற்றத்துக்கு அறிமுகப்படுத்தும் விழாவில்

    மீட் மை சன்! வனவாசம் போய் திரும்பி வந்தான் என் மகன் மீட் மை சன்!

    என்று பாடி வரவேற்பார் பானுமதி.

    ஜெய்சங்கர் நிஜ வாரிசாக, ஹீரோவாக பானுமதியுடன் இணைந்து நடித்த ஒரே படம் எடுப்பார் கைப்பிள்ளை. எமர்ஜென்சி காலத்திலும் மக்கள் கலைஞரின் வெற்றிச் சித்திரமாக அமைந்தது.



    இப்படியும் ஒரு பெண் ஓடிய ஓட்டத்தில், வாங்க சம்பந்தி வாங்க சினிமாவை 1976 மார்ச்சில் வெளியிட்டார் பானுமதி. அதில் ஹீரோயின் இளம் நாயகி பிரமீளா. தெலுங்கில் பெற்ற வெற்றி தமிழில் கிடைக்கவில்லை.

    கர்நாடக கீர்த்தனையை அச்சு அசலாக மகளிர் ஆண்டு உதயமான புது வருடம் என்கிற பாடலில் கையாண்டு நேயர் விருப்பத்தில் இடம் பெறச் செய்தார் பானுமதி.

    பாரதிராஜாவின் வருகைக்குப் பிறகு தமிழ் சினிமாவில் இளமை ஊஞ்சலாடியது. பானுமதி முழு ஓய்வில் இருந்தார்.

    முழுக்க முழுக்க குழந்தைகள் நடித்த பக்த துருவ மார்க்கண்டேயா பக்திச் சித்திரத்தை உருவாக்கினார். 1983 ஆகஸ்டு 12ல் வெளியானது. அவரது அரிய சாதனைக்காக எம்.ஜி.ஆர்.அரசு வரிவிலக்கு அளித்தது.

    மிகக் குறைந்த கட்டணத்தில் எல்லாரும் பார்த்ததில் பானுமதிக்கு லாபம் ரெட்டிப்பானது.

    1986 தீபாவளிக்கு ரிலிசான கண்ணுக்கு மை எழுது படத்தில் மீண்டும் பானுமதியை மக்கள் திரையில் பார்த்தனர். நாயகி சுஜாதாவோடு பானுமதி நடித்த ஒரே படம்.



    அதில் என்ன விசேஷம் தெரியுமா? இசை ஞானி போட்ட ட்யூனில் முதன் முதலாக பானுமதி பாடினார்.

    1992 தமிழ்ப் புத்தாண்டு வெளியீடு செம்பருத்தி. இளையராஜா இசையில் பாபி ஸ்டைல் கதை. பிரசாந்தின் பாட்டியாக தொடக்கத்தில் மூர்க்கமாகவும், பிறகு உருக்கமாகவும் பானுமதியின் நடிப்பு இருபத்தியோராம் நூற்றாண்டிலும் ஜீவித்திருக்கிறது!

    பானுமதி நடித்து வெள்ளி விழா கொண்டாடிய கடைசித் தமிழ்ப்படம்

    என்கிற பெருமை செம்பருத்திக்குக் கிடைத்தது. செம்பருத்தி பூ என்று தொடங்கும் கோஷ்டி கானத்தில் பானுமதியின் குரலும் நிறைவாக இணைந்து ஒலித்தது.

    என் ராசாவின் மனசிலே, பாட்டி சொல்லைத் தட்டாதே ஆகிய வெற்றிச் சித்திரங்கள் தெலுங்கில் ரீமேக் ஆனது. முறையே ஸ்ரீவித்யா, மனோரமா ஏற்ற வேடங்களில் பானுமதி நடித்திருந்தார்.

    பாட்டி சொல்லைத் தட்டாதேவில் மனோரமாவின் நடிப்பு பானுமதியை மலைக்க வைத்தது.

    மனோரமா இந்த ரோலை கிரியேட் பண்ணிட்டாங்க. நான் அந்த ரோலில் ஆக்ட் பண்றேன். அவ்வளவுதான்.

    ஐ டு நாட் நோ ஹவ் ஃபார் ஐ வில் ரீச் மனோரமா என்றார் பானுமதி.

    மனோரமாவுக்கு வழங்கியதை விடவும் பல மடங்கு அதிகமான சம்பளத்தைக் கேட்டார். அவரது விருப்பத்தைப் பூர்த்தி செய்து உள்ளம் குளிரச் செய்தது ஏவி. எம். நிறுவனம்.

    பானுமதி திரை வாழ்வினில் பெற்ற உச்சக்கட்ட ஊதியமாக அது இருந்திருக்கலாம்!

    பானுமதியுடன் புதுமுகங்கள் நடிக்க, 1993ல் பெரியம்மா என்ற பெயரில் பரணி பிக்சர்ஸ் புதிய சினிமாவைத் தயாரித்தது. பானுமதிக்கு அதில் மிகவும் வித்தியாசமாக பால்காரி வேடம் என்பதாக நினைவு.

    வாங்க ஆளில்லாமல் 22 ஆண்டுகளாகப் பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கிறது.

    1973ல் ஸ்டார் அன்ட் ஸ்டைல் பானுமதியைக் கேட்டது.

    நீங்கள் இன்னமும் எவ்வளவு காலம் நடிப்பீர்கள்?

    எனக்கே அது தெரியாது. நான் விதி மீது அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவள். வருவதை அப்படியே ஏற்றுக் கொள்பவள். ரசிகர்கள் விரும்பும் வரையில் நான் நடிப்பேன்.

    பெரியம்மா--- பானுமதி நடித்த கடைசித் தமிழ்ப் படம்!

    சொல்லும் செயலும் ஒன்றெனக் கொண்டவரா... ஸ்வர்க்க சீமா பானுமதி!

    தென்னக சினிமாவில் நடிப்புக்காகப் பத்மஸ்ரீ பட்டம் பெற்ற முதல் நட்சத்திரம்! அதற்காகப் பாராட்டு விழாவை நடிகர் சங்கம் 1966 பிப்ரவரி 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நடத்தியது.

    1958க்குப் பின்னர் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் கழிந்து, எம்.ஜி.ஆரும் -சிவாஜியும் ஒன்றாக, ஒரே மேடையில் ஒற்றுமையாக வீற்றிருந்து பானுமதியைப் போற்றினார்கள்.

    2003ல் தேசிய சர்க்கார் பானுமதிக்கு பத்மபூஷண் விருது வழங்கியது.

    ஆசியாவிலேயே முதன் முதலாக மூன்று மொழிகளில் சண்டிராணி படத்தைத் தயாரித்து நடித்து இயக்கிய முதல் பெண்மணி பானுமதி!

    பேரறிஞர் அண்ணா கதை வசனம் எழுதிய முதல் டாக்கி நல்லதம்பி, தமிழில் முதல் வண்ணப்படம் அலிபாபாவும் நாற்பது திருடர்களும், முதல் தேசிய விருது பெற்ற மலைக்கள்ளன், பறக்கும் தட்டை திரைக்கதையில் இணைத்த முதல் விஞ்ஞானச் சித்திரம் கலையரசி, வட்டார வழக்கு மொழியில் முதலில் வெளியான மக்களைப் பெற்ற மகராசி இவை யாவிலும் பானுமதியே கதாநாயகி என்பது கூடுதல் சிறப்பு!

    கோடம்பாக்கத்தில் 1950களிலேயே சொந்தமாக பரணி ஸ்டுடியோவை உருவாக்கியவர். அங்கு தமிழிலும், தெலுங்கிலும் என்.டி.ராமாராவ், ஏ. நாகேஸ்வர ராவ், சிவாஜி கணேசன் நடிக்க சினிமாக்களைத் தொடர்ந்து தயாரித்தவர். தன் படைப்புகள் யாவற்றிலும் நாயகியாக நடித்தவர்.

    1939 தொடங்கி 1992 வரையில் இடை விடாமல் ஏறக்குறைய 53 ஆண்டுகள் சொந்தக்குரலில் பாடல்களையும் பாடியவர்.

    எம்.கே. தியாகராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா, எம்.ஜி.ஆர்., டி.ஆர். மகாலிங்கம், ஜெமினி கணேசன், சிவாஜி கணேசன் என்று தமிழகத்தின் முதல் ஆறு சூப்பர் ஸ்டார்களுடனும் நாயகியாக நடித்த ஒரே நட்சத்திரம்!

    கதை, திரைக்கதை எழுதி, ஏறக்குறைய 20 படங்களை சுயமாக இயக்கியவர். அவற்றில் சில படங்களுக்கு இசை அமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

    அவரது இலக்கிய மேன்மையைப் பாராட்டி பானுமதி எழுதிய அத்தை காரு நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கியிருக்கிறது.

    தமிழில் அவை மாமியார் கதைகள் என்ற பெயரில் பிரபல வார இதழ்கள் அனைத்திலும் பிரசுரமாயின. எல்லாமே ஏறக்குறைய பானுமதியின் சொந்த அனுபவங்கள். ஆபாசமற்ற மிக மிக சுவாரஸ்யமான ஹாஸ்ய நிகழ்வுகள்.

    நடிப்பின் சர்வ கலாசாலையாக நடமாடிய சிவாஜி, புரட்சி நடிகர் ஆகியோருக்கு வழங்கப்படும் முன்னமே முனைவர் கவுரவம் பெற்றவர் பானுமதி.

    மகளிர் ஆண்டையொட்டி 1975ல் ஆந்திரா யுனிவர்சிடி பானுமதிக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. மீண்டும் 1984 மார்ச்சில் அவருக்கு திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம் கிடைத்தது.

    இரு டாக்டர் பட்டங்கள் பெற்ற முதல் மற்றும் ஒரே திரைத் தாரகை - பானுமதி! இது என் யூகம்.

    அதற்காக ஒரு பாராட்டு விழாவை தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் என்று பல்வேறு மொழிகளின் சினிமாப் பத்திரிகையாளர்கள் மயிலாப்பூர் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நடத்தினார்கள்.

    அவர்களுக்கு நன்றி தெரிவித்து பானுமதி ஆற்றிய உரை -

    நான் என் முதல் படமான வரவிக்ரயத்தில் நடிக்கவே இல்லை. வீட்டில் எப்படி இருந்தேனோ அப்படியே தோன்றினேன்.

    என் ஆசையெல்லாம் சட்டம் படிக்க வேண்டும் என்பதே. எடுப்பார் கைப்பிள்ளை படத்தில் எனது வக்கீல் நடிப்பை என் தந்தைக்குப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை.

    மாலதி மாதவம் தெலுங்கு சினிமாவின் டைரக்டர் பி. புல்லையா. அவருடைய மாப்பிள்ளை தான் படத்தின் ஹீரோ. நான் நெருங்கினால் அவரும், அவர் கிட்டே வந்தால் நானும் விலகி விலகிச் சென்று ஷூட்டிங்கில் கண்ணாமூச்சி காட்டினோம். கடைசியில் மாலதி மாதவம் படு தோல்வி அடைந்தது.

    காதல் கல்யாணம் முடிந்ததும் பதினைந்து ரூபாய் வாடகை வீட்டில் தனிக்குடித்தனம் நடத்தினோம். பஸ்ஸில் போய் சினிமா பார்ப்போம். அந்த மகிழ்ச்சி, இன்பம் இப்போது இம்பாலா காரில் துளியும் கிடைக்கவில்லை.

    நடிப்பு இயற்கையாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் விழிப்புடன் இருப்பேன். என் சொந்தப் படம் என்றாலும் சரி, மற்ற சினிமாக்கள் ஆனாலும் சரி, கதாபாத்திரத்தைப் பொறுத்த வரையில் கவனத்தோடு செயல்படுவேன்.



    யாராவது இப்படி நடி, அப்படிப் பாடு...என்றால் என்னால் சரி வர ஒன்றும் செய்ய இயலாது.

    தமிழ்நாட்டில் எனக்கு டாக்டர் பட்டம் வழங்கவில்லை. அதற்காக வருத்தப்படமாட்டேன். அதை விட வாயாடி, கர்வம் பிடித்தவள் போன்றப் பட்டங்களை வாங்கி இருக்கிறேன்.

    சத்யஜித்ரேயின் படங்கள் எனக்குப் பிடிக்கும். ஆனால் பிடித்த டைரக்டர் சாந்தாராம். அவர் உருவாக்கிய ஆத்மி சினிமா மிகவும் பிடிக்கும்.

    காலம் முழுவதும் அரிதாரம் பூசி காஞ்சித் தலைவன் அண்ணா பாராட்டிய கலையரசியாக, அறிவாளியாக, இப்படியும் ஒரு பெண்ணாக வலம் வந்த போதும், பானுமதியை மிகவும் கவர்ந்தது ஆன்மிகம்.

    பட்டத்து ராணி படத்தில் நடித்துக் கொண்டிருந்த சமயம். ஸ்ரீ சிருங்கேரி சுவாமிகளிடம் நவாக்ஷர உபதேசம் பெற்றவர்.

    பானுமதி வீட்டில் நவராத்திரி கொலு பிரசித்தமானது. அதில் பொம்மைகள் மாத்திரம் அல்லாமல் பானுமதி வரைந்த ஓவியங்களும் காட்சி தரும்.

    பானுமதியின் தூரிகைச் சித்திரங்கள் ஜனாதிபதி சர்வ பள்ளி ராதாகிருஷ்ணனின் மாளிகையில் முக்கிய இடம் பிடித்தன.

    நடிப்பில் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் எழுத்தில் தீவிரம் காட்டுவார். ஜார்ஜெட் ஹேரின் நாவல்களுக்கு தீவிர வாசகி.

    பானுமதிக்கு ஒரே மகன் டாக்டர் பரணிகுமார். சென்னை பொது மருத்துவமனையில் பிரபல மருத்துவர் அண்ணாமலையிடம் பயிற்சி பெற்றவர்.



    அமெரிக்காவிலும் சில ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமும் பரணிக்கு உண்டு. மகனைக் காண அமெரிக்கா சென்ற பானுமதியின் கணவர் ராமகிருஷ்ணா, எதிர்பாராத விதமாக அங்கேயே காலமானார்.

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Tamil Hindu

    சூழல் ஒன்று பார்வை இரண்டு: தேவனின் கருணை இன்றே கைகளிலே...


    இந்திய மொழிகள் எல்லாவற்றை விடவும் பரப்பிலும் தளத்திலும் இணையற்றது என பலர் கருதும் இந்தி மொழித் திரைப் பாடல்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்குக்கூட கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடும் பாடல்களோ கிறிஸ்துவைப் பற்றிய பாடல்களோ இல்லை. இந்த நிலைக்கு முற்றிலும் மாறாக, கருத்து, இசை மற்றும் குரல் வளம் போன்ற அனைத்து அம்சங்களிலும் ஒன்றை ஒன்று விஞ்சக்கூடிய, ஏராளமான இனிமையான கிறிஸ்துமஸ் / கிறிஸ்து பற்றிய தமிழ்த் திரைப்படப் பாடல்கள் உள்ளன.

    வியக்க வைக்கும் அளவு எளிமையும் இனிமையும் கூடிய சொற்களில் கிறிஸ்துமஸ் உணர்வை நமக்குள் ஏற்படுத்தும் கண்ணதாசன் பாடல் ஒன்றையும் அந்தச் சூழலின் வெகு தொலைவில் மங்கலாகத் தெரியும் பார்வையாக விளங்கும் இந்திப் பாடல் ஒன்றையும் பார்ப்போம்.

    இந்திப் பாடல்:

    படம்: ஷாந்தார் (பேரழகு)

    பாடலாசிரியர்: ராஜேந்திர கிஷன்

    பாடியவர்: கிஷோர் குமார்

    இசை: லட்சுமிகாந்த் பியாரிலால்.

    பாடல்:

    ஆத்தா ஹை ஆத்தா ஹை

    சாண்டா கிளாஸ் ஆத்தா ஹை

    ஏக் ஹிரன் கி பக்கி பர்

    கீத் சுனாத்தா ஆத்தா ஹை

    மெர்ரி கிறிஸ்துமஸ் மெர்ரி கிறிஸ்துமஸ்





    பொருள்.

    வருகிறார் வருகிறார் சாண்டாகிளாஸ் வருகிறார்

    மான் பூட்டிய வண்டியில் அமர்ந்து கொண்டு

    தேன் இசைப் பாடல் பாடிக்கொண்டு

    வருகிறார் வருகிறார் சாண்டாகிளாஸ் வருகிறார்

    மெர்ரி கிறிஸ்துமஸ் மெர்ரி கிறிஸ்துமஸ்

    உலகத்தில் உள்ள உன்னத பொம்மைகளை

    உங்களுக்காகக் கொண்டுவந்திருக்கிறேன்

    நீலம், மஞ்சள் மெஜந்தா நிறங்களில்

    உங்களுக்காகக் கொண்டுவந்திருக்கிறேன்

    குண்டு மாப்பிள்ளை, ரப்பர் மனைவி

    தொண்டு கிழவன் துவண்ட கிழவி

    டுக் டுக் ஆடும் குரங்கு

    டக் டக் வாசிக்கும் கரடி

    என்றைய தினம் கண்மணிக் குழந்தைகள்

    எழுந்து காலையில் தங்கள்

    தலையணை கீழே இருக்கும்

    பொம்மையை எடுத்துக்கொண்டு

    வெளியே ஓடுவார்கள்

    அன்றைய தினம் அதை அனைவருக்கும் காட்டி

    ஆடிப் பாடி அவர்கள் சொல்வார்கள் - என்ன தெரியுமா

    மெர்ரி மெர்ரி கிறிஸ்துமஸ் மெர்ரி மெர்ரி கிறிஸ்துமஸ்

    போகிறார் போகிறார் சாண்டாகிளாஸ் போகிறார்

    அடுத்த ஆண்டு விரைந்து மறுபடி வருவார்

    இந்த இந்திப் பாடலின் வரிகளுடன் எந்த வகையிலும் ஒப்பிட முடியாத உயரத்தில் நாம் பார்க்கும் தமிழ்த் திரைப் பாடல் எழுதப்பட்டுள்ளது.

    படம்: கண்ணே பாப்பா

    பாடலாசிரியர்: கண்ணதாசன்

    பாடியவர்: பி. சுசீலா

    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

    பாடல்:

    சத்திய முத்திரை கட்டளை இட்டது

    நாயகன் ஏசுவின் வேதம்

    கட்டளை கேட்டவர் தொட்டிலில் கேட்பது

    பாலகன் ஏசுவின் கீதம்

    அது வானகம் பாடிய முதல் பாடல்

    அந்தத் தூதுவன் ஆடிய விளையாடல்

    மெர்ரி மெர்ரி கிறிஸ்துமஸ்

    ஹேப்பி ஹேப்பி கிறிஸ்துமஸ்

    மேய்ப்பன் அவனே ஆடுகள் எல்லாம் குழந்தை வடிவத்தில்

    மன்னவன் அவனே மக்கள் எல்லாம் மழலை வடிவத்தில்

    மேரி மாதா தேவ மகனைக் காப்பது எப்படியோ

    தேவ தூதன் நம்மை எல்லாம் காப்பது அப்படியே

    அவன் ஆலயம் என்பது நம் வீடு

    மணி ஓசையைக் கேட்பது பண்பாடு

    மெர்ரி மெர்ரி கிறிஸ்துமஸ்

    ஹேப்பி ஹேப்பி கிறிஸ்துமஸ்

    வாசல் கதவை மூடுவதில்லை தேவன் அரசாங்கம்

    வந்தவர் வீட்டில் கண்டவர் நெஞ்சில் கருணை ஒளி பொங்கும்

    ராஜ வாழ்வு தேவ அமைதி தோன்றும் சிலுவையிலே

    நாளை அல்ல தேவனின் கருணை இன்றே கைகளிலே

    அவன் பாதங்கள் கண்டால் அன்போடு

    ஒரு பாவமும் நம்மை அணுகாது

    மெர்ரி மெர்ரி கிறிஸ்துமஸ்

    ஹேப்பி ஹேப்பி கிறிஸ்துமஸ்

  5. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •