கதாநாயகனின் கதை - 2

தினமலர் வாரமலர் - 12.10.2014




என் பள்ளிக்கூடப் படிப்பு, ஒரு முடிவுக்கு வந்தது. என் தந்தையார் பார்த்து வந்த ரயில்வே வேலை போய்விட்டதால், ஒரு பஸ் கம்பெனியில், குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்து வந்தார்.
அந்தக் குறைந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்த, என் தாயார் மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. எனக்கும், அப்போதுதான் குடும்ப கஷ்டங்கள் ஓரளவுக்கு தெரிய ஆரம்பித்தன. அதனால், சீக்கிரம் பெரியவனாகி, கை நிறைய சம்பாதித்து, என் தாயாரின் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்று மனதில் எழுந்த எண்ணம், வெறியாகமாறி சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன்.
அதுவும், 'கட்ட பொம்மன்' நாடக உருவில் வந்தது.
ஒரு நாள், நான் தங்கியிருந்த தெருவிலேயே, 'கட்டபொம்மன்' கூத்து நடைபெற்றது. இதைக் கூத்திலும் சேர்க்க முடியாது; நாடகம் என்றும் சொல்ல முடியாது. இரண்டும் கலந்த ஒரு ஆட்டம்.
இந்த கட்ட பொம்மனைப் பார்த்ததும் தான், என் மனதில், நாமும் இம்மாதிரி நடித்தால் என்ன என்ற எண்ணம் துளிர்விட ஆரம்பித்தது.
சக்கரபாணி என்ற தோழனின் உதவியால், பொன்னுசாமி பிள்ளை நடத்தி வந்த மதுரை ஸ்ரீ பால கான சபையில் சேர்ந்தேன்.
இதில், பல நாடகங்களில், பல்வேறு வேடங்களை ஏற்று நடித்தேன். ராமாயண நாடகத்தில், முற்பகுதியில், அழகு சுந்தரியான சீதையின் கதாபாத்திரத்திலும், பிற்பகுதியில், சூர்ப்பனையாகவும், கடைசி நாட்களில், இந்திரஜித்தாகவும் தோன்றுவேன்.
நான் நாடகக் கம்பெனியில் சேர்ந்து ஆறு ஆண்டுகளுக்கு பின், ஒரு சமயம் பொள்ளாச்சியில், 'இழந்த காதல்' நாடகம் நடந்து கொண்டிருந்தது. என்னைப் பார்க்க, யாரோ ஒருவர் வந்திருப்பதாக கூறினர். யாரோ, என்னவோ என்று பதற்றத்துடன் போனேன். என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை.
என் தாயார், ஒரு கையில் பையும், மறுகையில் ஒரு சிறு பையனையும் பிடித்தபடி நின்று கொண்டிருந்தார். என் தாயாரை, ஆறு ஆண்டுகளுக்குப் பின் பார்த்த மகிழ்ச்சியில், 'அம்மா' என்று கூவி, அவரை ஓடிப்போய் அணைத்துக் கொண்டேன். தன் கூட வந்த பையனை சுட்டிக்காட்டி, 'உன் தம்பிடா... சண்முகம்ன்னு பேர்; நீ வந்ததுக்கப்பறம் பிறந்தவன்டா...' என்றார்.
'அடேய் தம்பி...' என்று அவனைத் தூக்கி, ஒரு சுற்றுச் சுற்றினேன், அவன் பயந்து விட்டான்.
என் தாயார், முறுக்கு, சீடை, பலகாரங்கள் எல்லாம் கொண்டு வந்திருந்தார். தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருந்ததால், முதலாளியிடம் சொல்லி பண்டிகைக்காக, என்னை கையோடு ஊருக்கு அழைத்து வந்துவிட்டார். நான் சம்பாதித்த பணத்திலிருந்து வெடி வாங்கி வெடித்தேன். இன்றும் தீபாவளி பண்டிகை வரும்போதெல்லாம், இந்தச் சம்பவம் நினைவுக்கு வரும்.
அந்தக் காலத்தில், கம்பெனி வாழ்க்கை என்பது குருகுல வாசம் போன்றது.
ஒவ்வொரு பையனுக்கும் ஒரு பெட்டி, படுக்கை இருக்கும். காலையில் எழுந்ததும் படுக்கையைக் சுருட்டி, பெட்டியின் மேல் வைத்து, பின், குளித்துவிட்டு வர வேண்டும். அதன்பிறகு, சிற்றுண்டி, காபி தருவர். எல்லாம் முடிந்த பின், நாடக பாடங்களைப் கேட்பர்.
எல்லாருக்கும் எல்லா நாடகங்களின் பாடமும் சொல்லித் தரப்படும்.
பகல் மணி, 12:30 க்கு பூஜை நடக்கும்; இதில், எல்லாரும் கலந்து கொள்வோம். ஒரு மணிக்கு சாப்பாடு. பின்னர் தூங்கப் போக வேண்டும். வலுக்கட்டாயமாக தூங்க வைத்து விடுவர்.
மாலை, 4:00 அல்லது 4:30 மணிக்கு காபி, பலகாரம் தருவர். கொஞ்ச நேரம் பாடம் கேட்பர். பின் கொஞ்சம் ஓய்வு இருக்கும். இரவு மணி, 7:30க்கு சாப்பாடு, உடனே, நாடகம் நடிக்க தியேட்டருக்குப் போய் விடுவோம். நாடகம் இரவு, 10:00 மணிக்கு ஆரம்பமாகும்; முடிய இரவு இரண்டாகும். சில சமயம், அதற்கு மேலும் ஆகும்; இதுதான் கம்பெனி வாழ்க்கை.
கம்பெனியில் எல்லாரும் ஒன்றாகப் பழகுவோம். ஒரே குடும்பத்தில் இருப்பதைப் போலவே நினைத்து வந்தோம். பாடம் சரியாகச் சொல்லாவிட்டாலோ, ஏதாவது தப்புத்தண்டா செய்து விட்டாலோ, அடி, உதை நிச்சயம்! கம்பெனியில், என்னை மாதிரி உதை வாங்கியவர்கள் யாரும் கிடையாது. ஏன், பெரியவனாகியும், அதாவது, 1944ல் கூட, கே. சந்தானத்திடம் உதை வாங்கியிருக்கிறேன். அவர், என்னை அடித்த அடியில், பிரம்பு இரண்டாக உடைந்து விட்டது என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.
ஆனால், இம்மாதிரி வாங்கிய அடிகளெல்லாம் பின்னால் நான் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு உதவியாக இருந்தன. பெரியவர்களிடம் இம்மாதிரி அடி, உதை வாங்கியதெல்லாம் எனக்கு நிரம்பவும் பயனளித்தன. அப்படி அடி வாங்கிய சம்பவங்களை நினைக்கும் போது, நான் தவறை செய்யாமலிருக்க, அவை எச்சரிக்கையாக நிற்கின்றன.
தெரியாமலா பெரியவர்கள் சொன்னார்கள், 'அடி உதவுவதைப் போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள்...' என்று!
ஆனால், எனக்கு அடியும் உதவியிருக்கிறது, என் அண்ணனும், தம்பியும் கூட இப்போது பேருதவியாக இருந்து வருகின்றனர். இதுவும் நான் பெருமைப் பட வேண்டிய விஷயம் தான்!
கட்டபொம்மனைப் பற்றியோ, ஆங்கிலேயர் ஆட்சி பற்றியோ, சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியோ அதிகமாக புரிந்து கொள்ள முடியாத சிறு வயது எனக்கு. ஆனாலும், நாடகம் நடக்கிறது அதைப் பார்க்கப் போகிறோம் என்ற பொதுவான ஆவலினால், இந்த நாடகத்தைப் பார்த்தேன். இந்த நாடகம்தான், என் மனதில் ஒரு புதிய எண்ணத்தை எழுப்பி, நடிப்பு துறையில் என் வாழ்க்கையை அமைக்க அஸ்திவாரமாக அமைந்தது.
ஆம்... அந்த நாடகத்தைப் பார்த்ததும் தான் என்னுள்ளத்தில், நானும் ஒரு நடிகனாக வேண்டும் என்ற ஆவல் மொட்டு விட்டது.
சாதாரணமாக சொல்வதுண்டு... ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமை உள்ளுக்குள் மறைந்து இருக்கிறது; அதை, தூண்டி விடக் கூடிய சம்பவமோ, சந்தர்ப்பமோ கிடைக்கும்போது, அந்தத் திறமை வெளிப்பட்டு விடுகிறது என்று சொல்வர்.
என்னைப் பொறுத்தவரை என்னிடம் திறமை இருக்கிறதோ இல்லையோ, நடிப்புத் துறைக்கு என்னை இழுத்து வர, நடிப்புத் துறையில் என்னை ஈடுபடச் செய்ய, அன்று நான் பார்த்த கட்டபொம்மன் நாடகம் தான் தூண்டுகோலாக அமைந்தது. அந்நாடகம், என் மனதில் பசுமையாகப் பதிந்து விட்டதுடன், அந்நாடகத்தின் மீது ஒரு தனிப்பற்றுதலை உண்டாக்கி, தேசிய உணர்வையும் ஏற்படுத்திவிட்டது.
பல ஆண்டுகளுக்குப் பின், நான் திரையுலகில் அறிமுகமாகி, ஓரளவுக்கு நடிகனாக வந்தபோது, அந்தப் பழைய நினைவிலிருந்து மீள முடியாத காரணத்தினாலும், அதன் பேரில் ஏற்பட்ட தணியாத ஆர்வத்தாலும் தான், கட்டபொம்மன் சரித்திர நாடகத்திலும், திரைப் படத்திலும் நடித்தேன்.
என் குடும்பத்தில், எனக்கு முன் யாருமே நடிப்புத் துறையில் ஈடுபட்டிருக்கவில்லை. என் தந்தையார், ரயில்வேயில் பணி புரிந்தார்; என் பாட்டனார் இன்ஜினியராக இருந்தவர். நான் பிறந்த அன்றே, என் தந்தையார், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக, கைது செய்யப்பட்டு, சிறைக்கு அழைத்துச் செல்லப் பட்டுவிட்டார்.
எங்கள் குடும்பம் விழுப்புரத்திலிருந்து, திருச்சிக்கு இடம் பெயர்ந்தது. திருச்சியிலும் நாங்கள் நிரந்தரமாகத் தங்க முடியவில்லை. தஞ்சாவூர் திருச்சி என்று மாறி மாறி குடித்தனத்தை நடத்த வேண்டி வந்தது. இதனால், எந்த ஒரு பள்ளிக் கூடத்திலும் தொடர்ந்து படிக்க முடியாத நிலை எனக்கு ஏற்பட்டது. தவிர, குடும்பத்தில் சிரமமான நிலையும் வளர ஆரம்பிக்கவே, ஏதாவது, தொழில் செய்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற நிலைக்கு நானும் விரட்டப்பட்டேன்.
அந்த வயதில், நான் படித்திருந்த அரை குறைப் படிப்புக்கு என்ன வேலை கிடைக்கும்?
— தொடரும்.

தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை'
விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.

தினமலர் இணையதளத்தில் இப்பக்கத்திற்கான இணைப்பு

http://www.dinamalar.com/supplementa...d=22265&ncat=2