******

கோளாறு பதிகம்..

முதற்பாடல்

***

”ஹாய்”

“ஹாய் மனசாட்சி..எப்படி இருக்கே”

“நான் நல்லாத்தான் இருக்கேன்.. நீ தான் அப்பப்ப என்னை மறந்துடற..”

“ஏன் உனக்கு என்ன குறை..”

நேத்திக்கு யாரைப் பார்த்த..யாரோட பேசிக்கிட்டிருந்த..உன்னோட வொய்ஃபுக்குத்தெரியுமா..

நேத்திக்கா.. என்ன மனசாட்சி..உனக்குத்தெரியாதா.. எங்க மதுரைல பக்கத்துத் தெருல இருந்தாளே பத்மா மாமி அவங்க பொண் தான்.. சுகந்தியோ என்னவோ பேர்.. ஏய் அவங்க வயசானவங்கன்னா..ஆனா அழகாத்தான் இருந்தாங்க.. அப்படியே சின்ன வயசுல பார்த்த மாதிரி யானைத் துதிக்கை போலத் தோள்கள்..”

“இதானே வேணாங்கறது.. யானைத்துதிக்கைன்னு ஜெண்ட்ஸ்க்குன்னா சொல்வா.. பெண்கள்னா மூங்கில் தோள்கள்..அட.. வேயுறுக்காகவா இப்படிச் சொன்னே..”

“அதே.. மன்ச்சு.. வேயுறு அப்படின்னு ஆரம்பிக்கறார் ஞானசம்பந்தர்.. அதாவது மூங்கில் மாதிரி தோள்கள்..யாருக்கு.. லார்ட் சிவா இருக்காரோன்னோ அவரோட சம்சாரத்துக்கு..இளமூங்கில் மாதிரி ஒல்லியாகவும் மென்மையாகவும் அழகுடனும் கொண்ட தோள்கள்..”
“சரி..அப்புறம்..”
“இந்த தேவ அசுர யுத்தம் தெரியுமோ..ஒரு சுபயோக சுபதினத்தில தேவாஸ்க்கும் அசுராஸ்க்கும் சண்டை வந்தது.. அப்போ பாற்கடலைக் கடைந்தாங்க.. முதல்ல விஷம் அதுவும் எப்படி காத்துப் பட்டாலே உலகமே அழிஞ்சுடும்..அப்படிப் பட்ட ஆலகால விஷம்..அதை உலகத்தைக் காக்கறதுக்காக சிவன் என்ன பண்ணார்னா.. டபக்குன்னு ஃப்ரேக்ஃபாஸ்ட் பொங்கல் வடை சாம்பார் முழுங்கறாமாதிரி முழுங்கிடறார்..

பார்த்தாங்க மிஸஸ் உமாதேவி .. இந்தாளு இப்படி முழுங்கிட்டார்னா நம்ம பாடு என்ன ஆறது.. ஸோ சட்டுன்னு போய் சிவனோட கழுத்தைப் பிடிச்சு அந்த விஷத்தை நிறுத்திடறாங்க.. அது அவரது தொண்டைக் குழிக்குள்ளயெ தங்கிடுது.. எனில் அவர் விடமுண்ட கண்டன்” ஏன் சிரிக்கற மனசாட்சி..

“வீட்காரிங்க வீட்காரன் கழுத்தப் பிடிக்கறது அப்பவே ஆரம்பிச்சுடுத்தா..”

“ஷ்.. நான் தான் ஒரு ஃப்ளோல்ல சொல்லிக்கிட்டு வர்றேன்ல..அழகிய ஸ்ருதி சேர்க்கப்பட்ட நரம்புகள் கொண்ட வீணையோட இருக்கறார் ஈசன்.. அதுவுமெப்படி தலையில் பிறைச்சந்திரன்.. சந்திரன்னாலே அவனிடம் கொஞ்சம் களங்கம் இருக்கும்.. ஆனா அதே சந்திரனை எடுத்து ஈசன் தலையில் வைத்துக் கொண்டதால அந்தக் களங்கமும் மறைஞ்சுபோய்டுதாம்.. ஸோ மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்துங்கறார்..”

“அப்புறம் பார்த்தியா. கோள்னா ஒன்பதுல்ல நாம அஸ்ட்ரானமில்லல்லாம் படிச்சுருக்கோம்.. ஒன்னோட ஜாதகத்துல கூட ஒன்பது கட்ட்ம் இருக்குமே.. இங்க ஏழுல்ல இருக்கு..”

“ஸ்ட்ரெய்ட்டாப் பார்த்தா அப்படித்தான் தெரியும் வீக்டேஸ் வீக் எண்ட் எல்லாம் சேர்த்து ஏழு வருது அப்புறம் தான் பாம்பிரண்டும் கறாரே.. ராகு கேது.. “

“அப்புறம்”

” நன்னா அப்புறம் சொல்ற மன்ச்சு.. இந்தக் கோள்கள் எல்லாமே குட்திங்க்ஸாம்.. ஆசறு நல்ல நல்ல.. அவை எல்லாம் நல்லவங்கறப்ப நாமெல்லாம் யார்..சிவனுக்கு அடியவர்கள். சிவனடியார்கள்..அவர்களுக்கும் அவை நல்லதே செய்யும்கறார்..”

“இப்போ பாடலுக்கும் அர்த்தத்துக்குப் போவோமா”

***

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என்
உளமே புகுந்தவதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே!


இளமூங்கில் குருத்தினைப் போலத் தோள்களை உடையவள் உமையன்னை. அவளுக்கு ஒருபாதியைக் கொடுத்திருப்பவர் நம் ஈசன்..
உலக நல்வாழ்விற்காக ஆலகால விஷத்தையே பொருட்படுத்தாமல் உண்டு, உமையம்மை தடுத்ததனால் அதைத் தொண்டையிலேயே நிறுத்தி அதனால் கறுத்த கண்டத்தை உடையவர் அவர்..

அழகிய நரம்புகளால் கட்டப்பட்டு சுருதி பிசகாமல் இன்னிசை ஒலிக்கும் வீணையைக் கையிலேந்தியிருக்கும் அவர் விருப்பப்பட்டு அந்தப் பிறைச்சந்திரனைத் தன் தலையில் அணிந்ததால் அந்தச் சந்திரனிடம் இருந்த க் குட்டிக் களங்கமும் போய் வெண்முத்தாய் பிரகாசிக்கிறான்.. கூடவே அவர் கங்கையையும் அணிந்தவர்..அப்படிப் பட்ட நம் ஈசன் என் உள்ளத்தில் புகுந்துவிட்டார்..

அதனால் என்ன ஆயிற்றா.. ஞாயிறு, திங்கள்,செவ்வாய், புதன் வியாழன் வெள்ளி, ராகு கேது என்ற ஒன்பது நல்ல கோள்களும் என்னைப்போன்ற அடியார்களுக்கு எப்போதும் நல்லவையே செய்யும்..


***