மருதவாணர்: கிளம்பும் போதே சொன்னேன் அம்சா.. நீ தான் கேட்கவில்லை

அம்சவேணி: (தலை துவட்டியபடியே) நீங்கள் ஆயிரம் சொன்னீர்கள்...எதை நான் கேட்கவில்லை..

மருதவாணர்: ஒரேயடியாய் இருட்டி வருகிறது..மழை பெய்து ஓய்ந்த பிறகு செல்லலாம் என்றேனல்லவா..

அம்சவேணி: அது சரி.. இப்போதே சென்றால் தான் ஒரு ஜாமத்தில் அடுத்த ஊர் செல்ல முடியும்.. இன்னும் கொஞ்சம் இருந்திருந்தோமானால் நாம் நமது பெண்ணின் ஊருக்குச் சென்றாற்போலத் தான்..

சுந்தரன்: அப்பா..அப்பா.. நான் வெளியில் சென்று ஓலைப் படகு விடட்டுமா..

மருதவாணர்: சும்மா இருடா.. ஏற்கெனவே நனைந்து விட்டாய்..(அம்சவேணியிடம்) ஏன் அம்சா....குழந்தைக்குத் துவட்டி விட வேண்டியது தானே..

சுந்தரன்: போப்பா.. இதுவே நல்லா இருக்கு.. நான் மாட்டேன்..

அம்சவேணி: விடுங்கள் குழந்தையை..அதுவாகக் காய்ந்து விடும்..(கலாராணியிடம்) நீங்கள் இந்த ஊரா..பார்த்ததேயில்லையே..

கலாராணி: இல்லை.. நாங்கள் தஞ்சையிலிருந்து வருகிறோம்.. நீங்கள்..

அம்சவேணி: நாங்கள் இந்த ஊர் தான்.. ராஜ கிரி..ம்ம். இங்கு இருக்கிறது தஞ்சை.. இன்னும் பார்த்ததில்லை..இவர் தான் வியாபார விஷயமாக அடிக்கடி சென்று வருவார்..

கலாராணி: என்ன வியாபாரம் ?

அம்சவேணி: எல்லாம் மளிகை வியாபாரம் தான்.. திருவிழா சமயங்களில் கொஞ்சம் புடவை, துண்டெல்லாம் விற்பார்..ஆமாம் இந்த நகை எங்கே வாங்கினாய்..தஞ்சையிலா..

கலாராணி: என்னுடைய தந்தையின் கடையில் இருந்தது..அவர் எனக்குக் கொடுத்தார்..

அம்சவேணி: இது யாரு...உன்னோட அகமுடையானா..

விஜயன்: இல்லை..வந்து..

கலாராணிஇடைமறித்து) ஆமாம்..

அம்சவேணி: இப்போ எங்கே போறீங்க...

(வலதுபக்க மூலைத் தூணிலிருந்து ஒரு முனகல் கேட்கிறது..)

மருதவாணர்: யார்..யாரது..

(அங்கே ஒரு கிழட்டுப் பிச்சைக்காரனும் பிச்சைக்காரியும் அமர்ந்தவண்ணம் இருக்கிறார்கள்.. மருதவாணர் முகஞ்சுளிக்கிறார்)

மருத: ஏய்.. இங்கே எதுக்கு வந்தே..

கிழவன்: உங்களை மாதிரித் தான் சாமி..மழைக்கு ஒதுங்கினோம்...ஏதாவது தருமம் போடுங்க சாமி..

மருத: சே.. ராசேந்திரரின் ஆட்சியில் ஒழிக்க முடியாதது இந்தப் பிச்சைக் காரர்களைத் தான்..எங்கு போனாலும் வந்து விடுகிறார்கள்.. ஏம்ம்ப்பா...ஊர்க் கோயில்பக்கத்துல அன்ன சத்திரம் இருக்குல்ல.. அங்க தான் தினசரி சாப்பாடு போடறாங்களே..

கிழவன்: என்ன செய்யறது சாமி..போக முடியலை...மூணு நாளா எனக்கும் இவளுக்கும் ஜீரம்..ஆனாலும் எங்க சாமி அதை ஒழுங்கா போடறாங்க..எப்பவாவது அமைச்சர்,அரசர் வந்தா தடபுடல் பண்ணி பந்தி போடறாங்க.. அவங்க இந்தப் பக்கம் போனா அவ்வளவு தான்...சுரைக்காய் சாம்பார்..பூசணிக்காய் ரசம்..

கலாராணி: பூசணிக்காய் ரசமா..கேள்விப் படாததா இருக்கே..எப்படி இருக்கும்..

விஜயன்: நாம வேணும்னா ஊர்க்குள்ள போய் சாப்பிட்டுப் பார்க்கலாம்.. நீ கண்ட கண்ட ஆட்கள் கிட்ட எப்படிப் பண்றதுன்னு கேட்டுக்கிட்டிருக்காதே..

(மழைச் சத்தம் கொஞ்சம் வலுக்கிறது..ஒரு மின்னல் வர அரங்கம் முழுதும் ஒளி வந்து மறைகிறது)

விஜயன்: ராணி..இருக்கற இருப்பப் பாத்தா போக முடியாது போல இருக்கே...

கலாராணி: அதனால் என்ன துணைக்குத் தான் ஆட்கள் இருக்கிறார்களே...