இனி, மேற்கண்ட நண்பு என்னும் சொல்லமைப்பை, நள் > நண் > நண்பு
என்று காட்டினும் அதில் தவறில்லை. "பு" என்னும் ஈற்றைக் கொண்டு புணர்த்துதலாலன்றி, இயல்பாகவே அங்ஙனம் ள்>ண் திரிபு நிகழ்ந்துள்ளதாகவும் ஆசிரியர்சிலர் காட்டக்கூடும்.

இவற்றுள் பெரிய வேறுபாடுகள் இருப்பதாகக் கருதுவதற்கில்லை

இது நிற்க இன்னொரு சொல்லை இங்கு ஒப்பிடுவோம்.

அது "வெள்" என்ற அடிச்சொல்.

வெள் > வெள்ளை. (வெள்+ஐ)

வெள்+பா = வெண்பா.
வெள் > வெண்> வெண்பா எனினுமாம்.

வெண் > வெண்பு (வெள்+பு)

இதுபோலவே,

அள் > அள்ளு > அள்ளுதல்.

அள் > அண்புதல் > அண்முதல்..

கை நெருங்கினால்தான் அள்ளமுடியும். அள் என்பது நெருங்குதல்
கருத்துடைய பண்டைத் தமிழ் அடிச்சொல்.

ளகரம் ணகரமாதலும் பகரம் மகரமாதலும் தெளியலாம்.

இங்கு கூறப்பட்ட விதிகளை அறிந்துகொண்டு, கொண்டபின் "பண்" என்ற சொல் எங்ஙனம் அமைந்திருக்கும் என்று நீங்கள் கூறலாமே!