சிவாஜி பாட்டு-20
-------------------

கரும்பு தின்னக் கசப்பதில்லை.

'எனக்குப் பிடித்த இந்தப்
பாடலைப் பற்றி எழுதுங்கள்'
என்று என்னிடம் அன்பு
வேண்டுகோள் விடுத்திருந்த
அன்புமிகு திரு.பொன்.
இரவிச்சந்திரன் அவர்களின்
வேண்டுகோளுங்கிணங்கி
எழுதும் பொருட்டு,
"என் தம்பி"யில் வரும்
"முத்துநகையே" எனும்
இசைக் கரும்பை இரண்டு,
மூன்று முறை தின்றேன்.
--------

நான்கைந்து நிமிடங்களே
போதுமானதாயிருக்கிறது-
நடிகர் திலகத்துக்கு.. நம்மை
உணர்வுப் பிழம்பாய்
மாற்றுவதற்கு.

நான்கைந்து நிமிடங்களே
போதுமானதாயிருக்கிறது-
மெல்லிசை மாமன்னருக்கு..
ஒரு பாசக் கதையே பாட்டுவழி
சொல்வதற்கு.

நான்கைந்து நிமிடங்களே
போதுமானதாயிருக்கிறது-
தெய்வீகப் பாடகருக்கு..
காலமெல்லாம் நிலைத்து
நிற்கும் தன் குரலினிமையை,
இந்த கானத்தோடு
கரைப்பதற்கு.
---------

கவியரசரைக் கையெடுத்துக்
கும்பிடத் தோன்றுகிறது...
எளிமை சரித்திரமாய் நம்
முன்னே இந்தப் பாடல்
விரியும் பொழுது.

"தென்மதுரை மீனாள்
தேன் கொடுத்தாள்.
சித்திரத்தைப் போலே
சீர் கொடுத்தாள்.
என் மனதில் ஆட
இடம் கொடுத்தாள்.
இதுதான் சுகமென
வரம் கொடுத்தாள்."
ஒரு பாடலை நமக்குப் புரிகிற
மாதிரி அருமையாய் எழுதியது
மட்டுமல்ல.. அந்தக்
குழந்தைக்கே புரிகிற
மாதிரி எழுதிய கவியரசரை கும்பிடத்தானே வேண்டும்?

தென்மதுரை மீனாள்,நமக்குக்
கவியரசரையும்தான்
கொடுத்துப்
போயிருக்கிறாள்.
----------

தமிழ்த் திரைப்பாடல்களில்
ஒரு விஷயம்
கவனித்திருக்கிறேன்.

ஒலி வடிவிலே நாம் கேட்டு
மிகவும் ரசித்தவொரு
திரைப்பாடலைக் காட்சி
வடிவிலே காண நேர்கிற
போது, அந்தப் பாடல் மீதான நமது மதிப்பான அபிப்ராயம்
அப்படியே நீடிப்பது கிடையாது.

ஒலி வடிவிலே நாம் ரசித்த
அதே பாடலைக் காட்சி
வடிவிலே பார்க்கப்
பிடிக்காமல்கூட போவதுண்டு.

இந்தக் குறை வைக்காத
பாடல்கள்,நடிகர் திலகத்தின்
பாடல்களே.

இந்தப் பாடலையே எடுத்துக்
கொள்ளலாம்...

போற்றி வளர்த்த,தன் மீது மிகப்
பாசம் கொண்ட
பெண்குழந்தையைப் பார்த்து
அவளது உடன்பிறவாச்
சகோதரன் பாடுவதாய் அமைந்த பாசப் பாடல்.. இது.

கவித்துவம் மிகுந்த
எளிமையான பாடல் வரிகள்,
கனிவான இசை,இதமான குரல்
என்று ஒலி வடிவிலே நம்
நெஞ்சள்ளிப் போன இந்தப்
பாடலையே, காட்சி
வடிவிலே பார்க்கிற போது,
பாடல் மீதான நம் பெருமதிப்பு
நடிகர் திலகத்தால் அதிகமாகிறது.

திரைப்படத்தின் காட்சி
வரிசைப்படி படப்பிடிப்பு
செய்யப்படுவதில்லை என்பது
நாமறிந்ததே. ஊனமுற்ற அந்த
சிறுமி இளம்பிள்ளைவாதத்தால்
அவதியுறும்போது, அவளுக்குத்
தாய்க்குத் தாயாய் இருந்து
காத்தவன் கதாநாயகன்தான்
என்பது விளக்கப்படும்
பாடலுக்கு முந்தைய
காட்சியும், பாடற் காட்சியும்
அடுத்தடுத்து படம்
பிடிக்கப்பட்ட காட்சிகளல்ல.

இருப்பினும், தொடர்ச்சியாய்
எடுக்கப்பட்டது போல் ஒரு
தோற்றத்தை அழுத்தமாக
உருவாக்கி விடுவது, நம்
நடிகர் திலகத்தின் சிறப்பு.
---------

ஓடி,ஒளிந்து விளையாட்டுக்
காட்டும் குழந்தையோடு,
இதழ்களோடு சேர்ந்து
கண்களும் புன்னகைக்க
நம் திலகம் பாடும் அழகு,
கோடி பெறும்.

அவர் 'ஆஹா,ஓஹோ' சொல்லும் அழகு பார்த்தாலே..
நம் வருத்தங்கள் ஒடி விடும்.
-----------

கண்ணழகையும்,
கையழகையும் புன்னகையோடு
பாடிக் கொண்டிருப்பவர்,
அன்பின் வேகத்தில் "காலழகு"
என்று தவறிச் சொல்லி விட்டு,
சூம்பிய குழந்தைக் கால்கள்
பார்த்த முகத்தில் புன்னகை
துரத்தி, சோகம் சூடி..

நடிகர் திலகம்- எவராலும்
புறக்கணிக்க முடியாத
புனிதம்.
----------

"மலர்ந்தும் மலராத" போன்றே
மறக்க முடியாத வெற்றியைப்
பெற வேண்டிய இந்தப்
பாடல், அந்தளவுக்கு
பேசப்படாதது குறித்து
என்னிடம் வருந்திப் பேசினார்..
திரு.பொன்.இரவிச்சந்திரன்.

அன்பின் பொன்.இரவி...
இந்த இனிமைப்பாடல் வந்த
சமயத்தில்,நீங்கள் சிறு
குழந்தையாயிருந்திருப்பீர்கள்.
நான், கைக்குழந்தையாய்
இருந்திருப்பேன்.

நம்மைச் சூழ்ந்த காற்றோடு
கரைந்த இலட்சக் கணக்கான
பாடல்களில், இதைத் தேர்ந்து
நீங்கள் சொல்ல..நான் எழுத..
இந்தத் தலைமுறைக்கும்
இனிக்க,இனிக்கப் போய்ச்
சேர்கிற இந்தப் பாடல் -
எப்போதும்..எந்நாளும்
தோற்காது..நண்பரே!