அந்த நாள் ஞாபகம்

1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்


கடந்த பதிவின் இறுதி பகுதி

வசந்த மாளிகை முதல் நாள் மதியக் காட்சி பார்த்த அனுபவத்தை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

படத்தின் காட்சிகளுக்கு கிடைத்த வரவேற்பு பற்றி என்னவென்று சொல்வது? ஒரு முறை 2007-ல் இங்கே சென்னை அபிராமியில் வசந்த மாளிகை பார்த்தபோது ஒவ்வொரு காட்சிக்கும் ரசிகர்களின் கொண்டாட்டத்தை ஆரவாரத்தை விவரித்தது நினைவிற்கு வருகிறது. அது போன்றே முதன் முதலில் பார்த்தபோதும் நிகழ்ந்தது.

பட டைட்டில் போடும்போது வசந்த மாளிகை என்று பெயர் காண்பிக்கப்படும்போது அது பல வண்ணங்களில் மின்னும். அந்த நாளிலும் சரி வரப்போகும் காலங்களிலும் சரி என்றுமே இந்த படம் மின்னும் என்பதைத்தான் அன்றே அது உணர்த்தியது என தோன்றும்.

ஒரு படத்தை பல முறை பார்த்து ரசிக்கும்போது பல் புதிய ரசிக்கத்தகுந்த நுணுக்கங்கள் தென்படும். அது வாடிக்கை. ஆனால் ஒரு சில காட்சிகளோ அல்லது வசனங்களோ முதல் முறை பார்க்கும்போதே மனதிற்கு மிகவும் பிடித்து ரசிகர்களின் ஆமோதிப்பை பெற்று விடும். அந்த வகையில் வசந்த மாளிகை படத்தில் முதல்முறை பார்த்தபோதே பல காட்சிகளும் வசனங்களும் ஆரவாரத்தோடு வரவேற்கப்பட்டது.

ஒ மானிட ஜாதியே பாடல் காட்சி, நடிகர் திலகத்தின் பிறந்தநாளுக்கு விஎஸ் ராகவன் மாலையிட்டு வாழ்த்துவது, ஏன் ஏன் பாடல்காட்சி முழுக்கவும் குறிப்பாக அதில் நான் சக்கரவர்த்தியடா என்ற அந்த கம்பீர போஸ், வண்டி ரெடியா இருக்கு எஜமான், ஆனா இந்த வண்டி ஸ்டெடியா இல்லையேடா, ஒரு கார்பரேஷன் லாரியை கூட்டிட்டு வந்து எல்லாரையும் அள்ளி போட்டுட்டு போடா போன்ற வசனங்கள், ராமதாசோடு சண்டை போடும்போதே கண்ணாடி பார்த்து ஹேர் ஸ்டைலை சரி செய்வது, நீச்சல் குளத்திலிருந்து ப்ளூ அண்ட் ப்ளூ ஷர்ட்,ஷார்ட்ஸ் கோகோ கிளாஸ் போட்டு வருவது,

இப்படி சொல்ல ஆரம்பித்தால் நான் முதலில் சொன்ன மாதிரி ஒவ்வொரு காட்சியையும் சொல்லிக் கொண்டே போக வேண்டியதுதான். எத்தனை வருடங்கள் ஆனாலும் அன்று முதல் இன்று வரை பட ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரே சுரத்தில் ஒரே அலைவரிசையில் ரசிகர்களால் ரசிக்கப்பட்ட படங்களில் முதலிடம் என்றுமே வசந்த மாளிகைக்குதான்.

படம் முடிந்து வெளியே வருகிறோம். வெளியே கடலலை போல் கூட்டம் அந்த தெருவையே ஆக்ரமித்து நிற்கிறது. இது போன்ற முதல் நாளில் படம் பார்த்துவிட்டு வரும்போது அடுத்த காட்சிக்கு வரிசை எந்தளவிற்கு நிற்கிறது என்பதை பார்ப்பதில் எனக்கு ஒரு curiosity உண்டு.

நியூசினிமாவைப் பொறுத்தவரை நான் முன்பே குறிப்பிட்டது போல் நீளம் கூடுதலாகவும் அகலம் குறைவாகவும் இருக்கும் ஒரு சின்ன தெருவில் அமைந்திருக்கும் தியேட்டர். மேற்கு பார்த்து அமைந்திருக்கும் தியேட்டர் வாசல். அந்த தெருவிற்கு இரண்டு பக்கமும் பாரலல் [Parallel] தெருக்களாக திண்டுக்கல் ரோடு/ நேதாஜி ரோடு ஒரு பக்கமும் மேங்காட்டுபொட்டலிலிருந்து ஆரம்பித்து நீளமாக செல்லும் தெற்காவணி மூலவீதி என்ற நகைகடை பஜார் மற்றொரு பக்கமுமாக அமைந்திருக்கும். ஆண்களுக்கான இரண்டு கீழ் வகுப்பு டிக்கெட் வரிசையும் மாடி என்று அழைக்கப்படும் பால்கனி டிக்கெட் வரிசையும் எப்போதும் தியேட்டர் வாசலிலிருந்து ஆரம்பித்து திண்டுக்கல் ரோடு பக்கம் நிற்க வைக்கப்படும். பெண்களுக்கான கேட் [நான் முன்பே குறிப்பிட்டது] இயல்பாகவே அரங்கத்தின் வலது பக்கம் அமைந்திருந்ததனால் அந்த வரிசை தெற்காவணி மூலவீதி பக்கமே நிற்க வைக்கப்படும்.

அன்றைய தினம் ஆண்களுக்கான மூன்று வரிசையில் கீழ் வகுப்பு டிக்கெட்டுக்களுக்கான வரிசை தியேட்டர் அமைந்திருக்கும் தெரு முழுக்க கடந்து திண்டுக்கல் ரோட்டில் வலது புறம் திரும்பி மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு கோபுர வாசலுக்கு செல்லும் வழியெல்லாம் நீண்டு தியேட்டர் அமைந்திருக்கும் தெருவிற்கு பின்புறமாக அமைந்திருக்கும் ம்தார்கான் டபேதார் சந்து வரை நீண்டு நின்றது. பால்கனி வரிசையோ திண்டுக்கல் ரோட்டில் இடது புறம் திரும்பி அந்த பிளாட்பாரத்தின் முடிவில் அமைந்திருந்த மாநகராட்சி அலுவலகம் வரை நின்றது. மிக பெரிய கூட்டம் என்பது சாதாரண வார்த்தை. அசாதாரண கூட்டம் என்பதே சரியாக இருக்கும்.

(தொடரும்)

அன்புடன்