Page 7 of 7 FirstFirst ... 567
Results 61 to 68 of 68

Thread: படித்ததில் பிடித்தது..

  1. #61
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    மார்கழி மஹா உற்சவம் - இசை விழா என்று சென்னை டிசம்பர் மற்றும் ஜனவரியில் அல்லோலகபடும் . இப்போதும் அப்படித்தான் அல்லகோலபட்டு கொண்டு இருக்கிறது .எந்த கச்சேரிக்கு செல்ல என்று தெரியவில்லை. அத்துனை சபாக்கள் .அத்துனை கச்சேரிகள் . மேட்டு குடியினருக்கு மட்டுமே சொந்தம் என்று சொல்ல பட்டு வந்த கர்நாடக இசையை மற்றவர்களும் அறிய வேண்டும்,ரசிக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் திரு டி எம் கிருஷ்ணா அவர்கள் பெசன்ட் நகர் பீச் அருகில் உள்ள குப்பத்தில் இரண்டு தினங்கள் இசை விழா நடத்த ஏற்பாடு செய்து இருக்கிறார்கள் . இந்த நேரத்தில் திரு வாலி அவர்கள் விகடன் பத்திரிகையில் எழுதிய நினைவு நாடாக்கள் நினைவிற்கு வந்தது .அதில் இருந்து சில பகுதிகள்



    முரசொலியில் ஒரு செய்திக் கட்டுரை. 'சங்கீத வித்வான்கள் சபையில் பாட - எத்துணையோ தமிழ்ப் பாடல்கள் இருக்கின்றன; இன்ன இன்னார் இயற்றிஇருக்கிறார்களே! என்று -

    தமிழ்ப் பாடல்கள் யாத்துளோர் பட்டியலில் அடியேன் பேரும் இருந்தது!

    கட்டுரையை எழுதிய பெரியவர் பெயர் திரு.திருவாரூர் தியாகராஜன். 'சின்னக் குத்தூசி என்றால் சகமறியும்!

    இந்தக் கட்டுரை வெளியான இதழை நான் படித்துக்கொண்டிருக்கையில் -

    ஓராண்டு என்னிலும் மூத்த ஒரு சங்கீத வித்வான் - என் பால்ய நண்பர் - என் வீட்டுக்கு வந்தார். என்னைப்பற்றிய தகவலை, அவரிடம் படிக்கக் கொடுத்தேன்.
    'ஓய்! நீர் கீர்த்தனங்கள் எழுதுவீரா என்ன? என்று சற்று நமட்டுச் சிரிப்புடன் வினவினார்.
    சங்கீத பூஷணம் தாராபுரம் திரு.சுந்தரராஜனின் ஸ்வரக் குறிப்புகளோடு - என் கீர்த்தனங்களை -
    கலைஞன் பதிப்பகம் வெளியிட்டு இருப்பதை அவரிடம் காட்டினேன்.
    அதைப் புரட்டிக்கொண்டே வந்த என் நண்பர் -
    ''ஓய்! உம்ம பாட்டா இது? நான் அந்தக் காலத்துல மதுரை சோமு; எம்.எல்.வசந்தகுமாரி; கல்யாணராமன்; சுதா ரகுநாதன்; பாம்பே ஜெயஸ்ரீ - இப்படி இந்தக் காலம் வரைக்கும் இந்தப் பாட்டைக் கேட்டு இருக்கேன்! அவ்வளவு ஏன்? நானே என் கச்சேரீல இதை ரொம்ப நாளா 'வலஜியில பாடிண்டிருக்கேன்; உம்ம பாட்டூன்னு - இப்பதான் தெரிஞ்சுண்டேன்; கிண்டலாப் பேசிட்டேன்; க்ஷமிக்கணும்!'' என்று கைகளைக் கூப்பினார்.
    நண்பர் குறிப்பிட்ட என்னுடைய பாட்டு இதுதான்...

    'கூவியழைத்தால்
    குரல் கொடுப்பான்; பரங்-
    குன்றமேறி நின்று
    குமரா வென்று... ( 1)


    வெகு காலமாக ஒரு வெகுஜன அபிப்பிராயம் இருக்கிறது - கோடம்பாக்கத்திற்கும் திருவையாறுக்கும் ஏழாம் பொருத்தம் என்று.
    அது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.

    கோவையில் 'வாணி பிலிம்ஸ் என்று ஒரு படக் கம்பெனி. அதன் பாகஸ்தர்கள் யார் தெரியுமா?
    வயலின் வித்வான் டி.சௌடய்யா;
    புல்லாங்குழல் வித்வான் டி.ஆர். மகாலிங்கம்;
    மற்றும்
    மஹா வித்வான் செம்பை திரு.வைத்யநாத பாகவதர்!

    திருமதி. கே.பி.சுந்தராம்பாளும், மகாராஜபுரம் திரு.விஸ்வநாதய்யரும் நடித்த படம் 'நந்தனார்!.

    திருமதி. எம்.எஸ். சுப்புலட்சுமியும் திரு.ஜி.என்.பாலசுப்ரமணியமும் சேர்ந்து நடித்த படம் 'சகுந்தலை!.

    திருமதி. என்.ஸி.வசந்தகோகிலம் கதாநாயகியாக நடித்த படம் 'ஹரிதாஸ்!.

    திரு.பாபநாசம் சிவன் நடித்த படங்கள் 'தியாக பூமி; 'பக்த குசேலா; திரு.எம்.எம். தண்டபாணி தேசிகர் நடித்த படம் 'நந்தனார்.

    திருமதி. எம்.எல்.வசந்தகுமாரியும், திரு. பி.யூ.சின்னப்பாவும் சேர்ந்து நடித்து, சிறிது தூரம் வளர்ந்து நின்று போன படம் 'சுதர்ஸன்.

    திரு.பாலமுரளி கிருஷ்ணா நாரதராக நடித்தது மட்டுமன்றி பல படங்களில் பாடிஇருக்கிறார்!

    திரு.மதுரை டி.என்.சேஷகோபாலன், திரு.குன்னக்குடி படத்தில் கதாநாயகன்!

    நாதஸ்வர மேதை திரு.டி.என்.ராஜரத்தினம் பிள்ளை கதாநாயகனாக நடித்த படம் 'கவிராஜ காளமேகம்.

    திருமதி. டி.கே.பட்டம்மாள் நிறைய படங்களில் பாடியிருக்கிறார்.

    திரு.வி.வி.சடகோபன் கதாநாயகனாக நடித்த படம் 'மதன காமராஜன்.

    இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். சின்ன வயதிலிருந்தே எனக்கு சங்கீத வித்வான்களோடு, நிறையப் பரிச்சயம் உண்டு!
    ஸ்ரீரங்கத்தில்தான் இருந்தார், மகாவித்வான் வயலின் திரு. மருங்காபுரி கோபால கிருஷ்ணய்யர்.
    வருஷா வருஷம் தன் வீட்டில், தியாகராஜ உற்சவம் நடத்துவார். வந்து பாடாத வித்வான்களே இல்லை!
    நான்தான் அங்கு எல்லாருக்கும் எடுபிடி.
    சித்தூர் சுப்பிரமணியப் பிள்ளையைக் காவேரிக்கு அழைத்துப் போய், ஸ்நானம் செய்விப்பது; மதுரை மணி அய்யரின் துணிகளை இஸ்திரி போட்டுவைப்பது; ஜி.என்.பி-யின் பொடி டப்பாவில் - நாசிகா சூர்ணத்தை, அவ்வப்போது நிரப்புவது; கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளைக்கு 'டிகிரி காபி ஏற்பாடு செய்வது...
    இத்யாதி; இத்யாதி!
    ஒரு சங்கீத வித்வான் மீது எனக்கும், என் ஸ்ரீரங்கத்து நண்பன் விட்டலுக்கும் பயங்கரப் பிரியம்.
    அவர், திருச்சிப் பக்கம் கச்சேரிக்கு வந்தால் எனக்குக் கடிதம் போடுவார். நானும் நண்பன் விட்டலும், திருச்சி அசோகா ஹோட்டலுக்குச் சென்று அவரோடு அக்கம்பக்கத்து ஊர்க் கச்சேரிகளுக்குச் செல்வோம்.
    என்னுடைய எத்துணையோ பாடல்களை அவர் இசையமைத்து விஸ்தாரமாகக் கச்சேரியில் பாடுவதுண்டு.
    நான், நாளாவட்டத்தில் அவருக்குத் தம்புரா போடலானேன்.
    ஒருமுறை விடியற்காலை வரை அவரது கச்சேரி, திருக்காட்டுப்பள்ளி என்னும் ஊரில் நடந்தது. ஜே ஜே என்று கூட்டம்.
    ஒரு கட்டத்தில், நான் லேசாகக் கண்ணயர்ந்து - தம்புராவோடு அவர்மீது சாய்ந்து விட்டேன்.
    அப்போதுதான், அவர் அனுபவித்து 'ராகம் தானம் பல்லவி பாடிக்கொண்டிருந்தார். என் செயலால், சுதி கலைய...
    'பளீர் என்று என் கன்னத்தில் ஓர் அறை விட்டார். எனக்குப் பொறி கலங்கியது. அந்த வித்வான் குஸ்தி பழகியவர்!
    நாள்கள் நகர்ந்தன. நான், சினிமாவில் பிரபலமாகிவிட்டேன்; நண்பன் விட்டல், எம்.ஜி.ஆர். மந்திரி சபையில் மந்திரியாகி விட்டான். திருச்சி சௌந்தரராஜனின் செல்லப் பெயர்தான் விட்டல்!

    பல்லாண்டுகளுக்குப் பின் - அந்த சங்கீத வித்வான் -
    'சஷ்டி விரதம் என்னும் தேவர் பிலிம்ஸ் படத்துக்காகப் பாட வந்திருந்தார். என் பாட்டுதான் அது.
    என்னைப் பார்த்ததும் - என் கன்னத்தில் அவர் அறைந்தது நினைவுக்கு வந்து - மிகவும் கூச்சப்பட்டார். நான், அவரது கைகளைப்பற்றிக் கொண்டு சொன்னேன்.

    'அண்ணே! நீங்க மஹாவித்வான்; சங்கீத சாகரம். இன்றும் நீங்கள் விடிய விடியப் பாடினால் - கூட்டம், கொட்டகை பிதுங்க நிற்கிறது. உங்கள் பேர் சொன்னாலே, சென்னை சபாக்கள் சந்தோஷித்துச் சிலிர்க்கின்றன!
    உங்கள் கையால், பல ஆண்டுகளுக்கு முன் வாங்கிய ஓர் அறைதான் -
    நான் பாட்டுத் துறையில் இவ்வளவு பிரபலமாகக் காரணம்!
    - என்று அவர் பாதங்களைத் தொட்டு வணங்கினேன்.
    உடனே, என்னை அள்ளி எடுத்து உச்சி முகர்ந்தார் -
    மகா மகா வித்வான்
    திரு. மதுரை சோமு அவர்கள்!

    [ நன்றி : விகடன் ]
    gkrishna

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #62
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    krishna: It will be very informative if you can search the internet and post articles from the Hindu of early 50s that asserted
    that Tamil waas unfit for carnatic concerts ! What a change in 60 years?
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  4. #63
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajraj View Post
    krishna: It will be very informative if you can search the internet and post articles from the Hindu of early 50s that asserted
    that Tamil waas unfit for carnatic concerts ! What a change in 60 years?
    yes professor sir .will try my level best

    rgds

    Gk
    gkrishna

  5. #64
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    இன்றைய மின் அஞ்சலில் எழுத்தாளர் ,விமர்சகர்,வங்கி ஊழியர் என்ற பன்முக திறமை கொண்ட திரு எஸ்வி என்ற எஸ் வேணுகோபாலன் அவர்கள் அனுப்பிய அஞ்சல் . நல்லதொரு தகவல் என்பதால் பகிர்ந்து கொள்ள ஆவல்

    அன்பானவர்களுக்கு


    மிகவும் தற்செயலாக சனிக்கிழமை மாலை அழைத்துப் பேசுகையில், மறுமுனையில் எழுத்தாளர் சமஸ், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை தமது நூல் வெளியீடு நிகழ்வு நடக்க இருப்பதைத் தெரிவித்து அழைக்கவும் செய்தார்.

    நல்லவேளையாக, தமுஎகச கே கே நகர் கிளையில் நிகழ்ந்த ஒரு கூட்டத்திற்குப் பிறகு அருகேயே டிஸ்கவரி புத்தக நிலைய அரங்கில் நடந்து கொண்டிருந்த நூல் வெளியீட்டுக்குச் சற்று தாமதமாகப் போய்ச் சேர்ந்துவிட முடிந்தது.

    யாருடைய எலிகள் நாம் என்கிற தலைப்பில் 384 பக்கங்கள், துளி வெளியீடு என்ற முறையில் அவரது வாழ்க்கை இணை ரேகா அவர்கள் முயற்சியில் வெளிவந்திருக்கும் நூலின் ரூ 300/-

    நான் உள்ளே நுழைகையில், தி இந்து தமிழ் சிறப்புப் பகுதிகளின் பொறுப்பாசிரியர் அரவிந்தன் பேசி நிறைவு செய்திருந்தார். ஞாநி அவர்களது பேச்சை முழுமையாகக் கேட்டேன்.

    ஞாநி பேசியவற்றிலிருந்து:

    என் வயது 61. எனக்கும் சமஸ் அவர்களுக்கும் வயது வித்தியாசம் 26. நான் இதழியலுக்கு வந்த ஆண்டு 1974. எனக்கு அப்போதைய வயது 20. இந்த விஷயங்களை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தேன். எங்களுக்கு அப்போது இத்தகைய ஸ்பேஸ் கிடையாது. இப்போது சூழல் உதவுவதில்எழுத ஆட்கள் கிடையாது. அதில் வாராது போல வந்த மாமணி என்பதால், சமஸ் பங்களிப்பு போற்றவேண்டியது. அது இன்னும் தழைக்கவேண்டும்.

    படைப்பாளி வேறு, செய்தியாளன் வேறு என்கிற சாதியம் இதழியல் உலகில் நிலவுகிறது. படைப்பாளிகளுக்குள்ளேயே கூட சிறுகதை, கவிதை, நாவல் என்கிற வகைக்கேற்ப சாதிப் பிரிவினைகள். ஆனால், புனைவு படைப்பாளியைப் போலவே செய்திக்கட்டுரை அளிப்பவரும் மதிக்கத் தக்கவர்.

    ஆனால் நடைமுறையில் அது நிகழ்வதில்லை. நானே தொலைகாட்சி விவாதங்களுக்குப் போகையில் ஒரு சிறுகதையாளரும் கூட இடம்பெற்றால் அவருக்கு எழுத்தாளர் என்றும், எனக்கு பத்திரிகையாளர் என்றும்தான் பெயரோடு இணைத்துப் போடப்படுகிறது. எழுத்தாளன் என்று செய்திக் கட்டுரையாளரை ஏற்பதில் உடன்பாடு இல்லாத நிலைமை.

    இரண்டு நிலையிலும் இயங்கிய உலகப் படைப்பாளி என்று சொல்வதானால், கேப்ரியேல் மார்க்வெஸ் அவர்களைத் தான் சொல்லவேண்டும். ஒருமுறை அவர் சொன்ன பதில் அருமையானது. அவர் சொன்னார், புனைவுகளில் எங்காவது ஓரிடத்தில் வாழ்வியல் உண்மை இருந்துவிடுமானால் அது அதற்குரிய கனத்தோடு மக்களைப் போய்ச்சேரும். அதே நேரம் செய்திக்கட்டுரைகளில் ஒரே ஓர் இடத்தில் தகவல் பொய்யாகப் போய்விடுமானால் அந்தப் படைப்பு அழிந்தே போகும்.

    அப்படியான பணிகளில் நெறி பிறழாது, நேர்மை தவறாது இயங்கவேண்டும். இந்த அம்சம் மிகவும் முக்கியமானது.

    விகடன் எஸ் எஸ் பாலன் அவர்களுக்கு இந்த நேரத்தில் அஞ்சலி தெரிவிக்க வேண்டியது அவசியம். அவரது குழுமத்தில் பணியாற்றியது முக்கியமான அனுபவம். அவரோடு பணியாற்றுவதில் இருந்த நல்ல அம்சம் என்னவெனில், அவரோடு கருத்து மாறுபாடு கொள்ளலாம். வாதிடவும் செயலாம். உங்கள் கருத்து தவறு என்று அவரிடம் சொல்ல முடியும். உங்கள் கருத்து முட்டாள்தனமானது என்று கூட சொல்லலாம். அவர் அதையெல்லாம் பொருட்படுத்தியதில்லை. ஆனால் அவர் சொல்வார், என்னை 'கன்வின்ஸ்' பண்ணு! அதற்கு நேரம் அவகாசம் அவரே கொடுப்பார். நாளைக்கு நாலு மணிக்கு நாம உட்கார்ந்து பேசுவோம் என்பார். மறுநாள் அவர் தனது கருத்துக்கு ஏற்ற ஆதாரங்களோடு வந்து விடுவார். நீங்கள் உங்கள் தரப்புக்கு நியாயங்கள் என்ன உண்டோ அவற்றோடு போய் உட்கார்ந்து வாதிட வேண்டும்.

    பல பிரச்சனைகளில் நான் அவரோடு இப்படி தர்க்கம் செய்திருக்கிறேன். அணு ஆற்றல் பிரச்சனையில் நான் அவரோடு மாறுபட்டேன். அவர் அது அவசியம் என்றார். அணு குண்டு மற்றுமல்ல அணு ஆற்றல் கூட ஆபத்தானதுதான் என்று நான் அவரோடு முரண்பட்டேன். அவர் ஒதுக்கிய நேரத்தில் பேச்சு இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் என்று தொடர்ந்தது. அவர் பொறுமையோடு பேசிக் கொண்டிருந்தார். கேட்டுக் கொண்டிருந்தார். பின்னர், சரி, ஜூவியில் முப்பது வாரத் தொடர் ஒன்றை நீ எழுது என்றார். அதில் உன் வாதங்களை அடுக்கு என்றும் இடம் ஒதுக்கத் தயாரானார். அவரிடம் என்ன நிபந்தனை என்றால், முப்பது வாரம் என்ன எழுதப் போகிறோம் என்பதற்கான synopsis நீங்கள் முதலிலேயே எழுதிக் கொடுத்துவிட வேண்டும். நான் 32 வாரத்துக்கு எழுதிக் கொடுத்தேன். ஆனால் எனக்கு இதழ் பொறுப்பு என்பதால் வேறு வேறு கமிட்மெண்ட்ஸ் இருப்பதால் எழுத இயலாது என்றும் அவரிடம் தெரிவித்தேன். ஆர்கியு பண்ணிட்டு எழுதல என்றால் என்ன அர்த்தம் என்றார். பிறகு ஏ எஸ் பன்னீர்செல்வம் அவர்களை கேட்டுக் கொண்டேன். அவர் எழுத அந்தத் தொடர் ஜூவியில் வெளியானது.

    வாசன் காலத்தில் தொடங்கிய ஜெமினி ஸ்டூடியோ, திரைப்பட உலகம் இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், பாலன் அவர்கள் இதயம் பத்திரிகை உலகத்தில் இருந்தது.

    நான் பல நிறுவனங்களில் பணியாற்றியவன். இந்தியன் எக்ஸ்பிரசில் இருந்தேன். பின்னர் விகடன் நிறுவனத்தில் ஜூவி பொறுப்பில், ஜூனியர் போஸ்ட் பொறுப்பில், சுட்டி விகடன் பொறுப்பில் என பணியாற்றியவன். எங்கும் பணியில் இல்லாதும் பழகி இருக்கிறேன்.

    அதனால்தான் அரவிந்தன், சமஸ் போன்றவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, நாம் யாருக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்பதில் தெளிவு இருக்கவேண்டும். வாசகருக்குச் சொல்லவேண்டிய உண்மைகளைச் சொல்பவனாக அவர்களுக்கே நமது விசுவாசம் - நிறுவனத்திற்கு அல்ல. அதற்காக, நிறுவனத்தை betray செய்யவேண்டும் என்றல்ல. நமது எழுத்தின் நேர்மை நம்மை கறாராக வழிநடத்தும்.

    ஏற்புரை: சமஸ்:

    இந்தப் புத்தகம் கொண்டுவரும் தகுதி உண்டா என்று யோசித்தேன். ஆனால் இது வந்திருப்பதன் பின்னணி, பல அன்பர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கின்றனர். பேப்பர் கட்டிங்க்ஸ் எடுத்து வைத்திருக்கிறோம். எத்தனை நாள் முடியும், தொகுப்பாகக் கொண்டு வாருங்களேன் என்றனர். முதல் புத்தகம், சாப்பாட்டுப் புராணம் வந்தபோது உடனே விற்றுப் போனது. அதற்காக வெளியீட்டு விழா எல்லாம் நடத்தவில்லை.

    இந்த தொகுப்பை யாரிடம் கொடுக்கலாம் என்று யோசித்தோம். வாசகரும் அதிக விலை கொடுக்கக் கூடாது. நமக்கும் கையைக் கடிக்கக் கூடாது. என் மனைவியே வெளியிட முன்வந்தார். நண்பர் வேடியப்பன் இந்த விழாவை நடத்தலாம் என்றார்.

    இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் பலவும் வெவ்வேறு கால கட்டங்களில் எழுதப் பட்டவை. ஆனால் எப்போதும் பொருத்தப்பாடு உடையவை என்று தொகுத்திருக்கிறோம். தமிழ் இதழியலில் உள்ள சாதியம் குறித்து ஞாநி சொன்னார். குறிப்பிட்ட துறைக்குள்ளும் சாதியம் உண்டு. எனக்கு ஆங்கிலத்தில் ஒரு கடிதம் எழுதக் கூடத் தெரியாது. இங்கே உயரம், நிறம், அது, இது என்று ஏகப்பட்ட பிரச்சனைகள் உண்டு. எழுதி எழுதிக் கொடுத்தாலும் குப்பைக் கூடைக்குத் தான் போகும் செய்திக் கட்டுரைகள். ஆனாலும் நான் சளைக்காமல் தொடர்ந்தேன். என் நண்பன் கேட்பான், ஏண்டா மாப்ள, அவனுங்க போடமாட்டாங்க என்றாலும் எதுக்கு ஓயாம எழுதிக் கொடுக்கிறன்னு. நடக்கற விஷயங்களைப் பார்த்தா என்னால் எழுதாம இருக்க முடியாது. என் இயல்பு அப்படி. எங்கும் பிரச்சனை. எல்லா இடத்திலும் கலகம். கேள்வி கேள்வி. ஒண்ணு நான் இதையெல்லாம் எழுதணும், இல்ல செத்துப் போயிரணும். என் மனைவிக்குத் தெரியும். இப்படி பல இதழ்கள் மாறி வந்தாயிற்று.ஞாநி சார் கிட்ட ஆலோசனை கேட்பேன்.எனக்கு எத்தனையோ ஆசிரியர்கள். அவரும் ஒருவர். அப்படித் தான் வளர்ந்து வந்திருக்கிறேன். அவர் ஒருமுறை சொன்னார். இடம் மாறிப் போகும்போது, புதிய இடத்தில் கூடுதல் சம்பளம் கிடைத்தால், இப்போ வாங்கற சம்பளத்தில் குடும்பம் நடத்தப் பழகிக்கணும். கூடுதல் தொகையை சேமிக்கக் கத்துக்கணும். ஏன்னா உன்ன மாதிரி, நம்ம மாதிரி ஆளுங்களுக்கு எப்போ வேலை போகும் என்பது தெரியாது. அப்போ அவஸ்தைப் படக் கூடாது என்றார். இப்போது வரை அதை நான் செய்து கொண்டிருக்கிறேன்.

    இந்தத் தொகுப்பு பல்வேறு கட்டங்களில் எழுதியது. அந்தந்த ஆண்டு போடப்பட்டிருக்கிறது. ஆனாலும் இன்னும் அவை பொருத்தம் உள்ளவை. உதாரணமாக, இதில் மம்தா பானர்ஜி குறிப்பிட்ட சாலைகளில் சைக்கிள் ஓட்டத் தடை கொண்டுவந்ததைப் பற்றிய கட்டுரை இருக்கிறது. எந்த விமர்சனமும் இன்றி இருப்பதை அப்படியே கொடுத்திருந்த கட்டுரை. திருணாமூல் என்றால், புல்லின் வேர்-அடிப்பாகம் என்று பொருள். அப்படி கடைசியில் உள்ள மனிதருக்கான இயக்கம் என்று பேரை வைத்துக் கொண்டு, சாதாரண மனிதர்கள் சைக்கிள் ஓட்டத் தடை, மீறினால் அது வேக வாகனங்கள் செல்ல பிரச்சனை ஏற்படுத்துகிறது என்று அதற்கு ரூ 500 அபராதம் என்று ஓர் அரசு சொல்லுமானால் என்ன ஜனநாயகம் இது?


    ஏற்புரைக்குப் பிறகு கலந்துரையாடல் தொடங்கியது.
    வந்திருந்தோர் .பேசலாம் என்றனர். முதல் பார்வையாளராக எனது கருத்துக்களை அங்கே தெரிவித்தேன்:

    அதன் சுருக்கம்:

    அழகிய பெரியவன் கவிதை ஒன்று, மரணப் படுக்கையில் இருக்கும் பாட்டி குறித்துப் பேசுகிறது. அவள் சாவு வராது இழுத்துக் கொண்டிருப்பதை,

    காலப் பூனையிடம்
    சுண்டெலி போல
    ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறது
    பாட்டியின் உயிர்

    என்று தொடங்குகிறது. பிறகு,
    பாட்டியிடம் கற்றுக் கொள்கிறோம்
    அடங்க மறுத்தலை...

    என்று முடிகிறது. சம காலத்தில் என்ன நடக்கிறது. அமெரிக்க சிந்தனையாளர் நோம் சாம்ஸ்கி சொல்வதுபோல், சம்மதத்தை உற்பத்தி செய்ய வைக்கின்றனர். (MANUFACTURING THE CONSENT ). நாமே ஏற்றுக் கொள்வதுபோல் அத்தனை அநியாயங்களும் நடக்கின்றன. அடங்க மறுப்பது, எதிர்ப்பது, கேள்விகளை எழுப்புவது இவற்றை இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய காலமிது.

    சுதேசி இயக்கத்தில் முகிழ்த்தது இந்தியன் வங்கி. பாரதி நவம்பர் 1906ல் இந்தியா பத்திரிகையில் செட்டி நாட்டு சீமான்களே என்று தொடங்கி உள்நாட்டு முதலாளிகள் ஏன் வங்கி தொடங்கக் கூடாதென்றார். 1907 ஆகஸ்ட் 15 அன்று இந்தியன் வங்கி பிறந்தது. இன்று எல்லாவற்றையும் விற்கத் துடிக்கின்றனர் ஆட்சியாளர்கள். கோயில் பூசை செய்வோன் சிலையைக் கொண்டு விற்றல் போலும் என்றார் மகாகவி.

    சொத்துக்களை மட்டுமல்ல, விழுமியங்களை, பண்பாட்டின் கூறுகளை, கருத்துக்களை, எத்தனையோ அம்சங்களைப் பறிகொடுக்கும் அபாயமான காலம் இது.

    மக்களுக்கு செய்தி சொல்பவர்கள் மட்டுமல்ல, புலம்புவது அல்ல, எதிர்ப்பின் குரலை எழுப்பும் செய்தியாளர்கள் தேவை. அரிதான வரிசையில் சமஸ் அற்புதமாக நமக்குக் கிடைத்திருக்கிறார். இன்னும் இன்னும் பரந்துபட்ட தளங்களில் மேலும் மேலும் கூர்மையான எழுத்துக்களை எதிர்பார்ப்போம் என்று சொல்லி வாழ்த்தி மகிழ்கிறேன்.



    அன்புடன்

    எஸ் வி வேணுகோபாலன்

    ***************

    சமஸ் எழுதும் வலைப்பூ முகவரி:

    http://writersamas.blogspot.in/

    ***********


    யாருடைய எலிகள் நாம்
    நூலுக்கு ஜெயமோகன், ஞாநி, எஸ் வி ராஜதுரை, அ முத்துலிங்கம் நால்வரும் அணிந்துரை எழுதி உள்ளனர்.

    சமஸுடைய மொழிநடை அபூர்வமானது......
    அ முத்துலிங்கம்

    இந்தத் தொகுப்பு வெளிவந்ததும் பல நோக்கிலிருந்து எதிர்வினைகள் வரலாம். ஆனால் கட்டுரைகளில் உள்ள தரவுகளின் ஆதாரங்களை யாரும் கேள்விக்குட்படுத்த முடியாது - எஸ் வி ராஜதுரை

    சாமர்த்தியமான எழுத்தினால் தன்னை வித்தியாசமாகக் காட்டிக் கொண்டால் போதுமென்று நினைப்பவர் அல்ல சமஸ். மெய்யாகவே எது சரிஎன்று தான் நம்புபவரோ
    அதன் பக்கம் நிற்பவர்.
    - ஞாநி

    மேலும் மேலும் வணிகமயமாகி நுகர்வுமயமாகி வரும் உலகில் ஜனநாயகம், மனிதாபிமானம், சமத்துவம் போன்ற விழுமியங்களின் இடமென்ன என்ற கேள்வியையும், ஐயத்தையும் எழுப்புகின்றன சமஸின் கட்டுரைகள் - ஜெயமோகன்
    gkrishna

  6. #65
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    ட்வீட்டர்:

    சவுளி என்பது தமிழ்ச் சொல்; ஜவுளி-ன்னு எழுதாதீர்கள்
    --
    சவளம்/ கவளம்= Piece
    Piece துணி= சவுளி
    -- கலைச் சவுளி, தலைக்கு உலவி= திருப்புகழ்

    *சவுளி = ஜவுளி
    *சல்லிக் (காசு) கட்டு = ஜல்லிக் கட்டு
    *வேட்டி= வேஷ்டி ..
    இப்படி, ஜ, ஷ திணிப்பு | புரிந்து கொண்டு, புறம் தள்ளுவீர்

    # நெசவுத்தமிழ்: சவுளி= சவளம் (Piece Cloth)
    --
    வேட்டி= தறியில், வெட்டி எடுப்பதால் வேட்டி
    --
    புடைவை= புடை(பக்கம்) சுற்றுவதால், புடை-வை.

    ----------------

    நன்றி @kryes
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  7. #66
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    சிறு கதை [விகடனில் வெளியானது dt. 7/1/2015

    நன்றி விகடன் மற்றும் தகவல் தந்த எனது இனிய நண்பர் திரு வேணுகோபால் அவர்களுக்கு

    யாக்கை
    சிறுகதை: பாஸ்கர் சக்தி
    ஓவியங்கள்: ஸ்யாம்

    குமார் ரொம்ப உற்சாகமான ஆள். எப்போதும் எதற்காவது சிரித்துக்கொண்டே இருக்கிறவன். அவன் சிரிக்க வேண்டுமெனில், பெரிய நகைச்சுவைகள் தேவை இல்லை. 'ஆபீஸ் வாசல்ல பாத்தியா குமார்... ஒருத்தன் ரௌடி மாதிரி நிக்கிறான். முதுகுல ஏதோ பொருளைச் சொருகிவெச்சிருக்கான் என்றால்கூட சிரித்தபடியே, 'ஆமாமா... நானும் பாத்தேன். யாரைப் போட வந்திருக்கான்னு தெரியலியே என்பான். அந்த அளவுக்கு கேனத்தனமான ஹ்யூமர்சென்ஸ்.

    அன்றும் உற்சாகமாகத்தான் இருந்தான். ஒரு வாரப் பத்திரிகையில் உதவி ஆசிரியர். சக உதவி ஆசிரியர்களில் பலருக்கு இருக்கும் டென்ஷனை, இவன் முகத்தில் பார்க்கவே முடியாது. அன்று இன்னும் ரொம்ப உற்சாகமாக இருந்தான். காரணம், காலையில் ஆபீஸுக்கு பைக்கில் வரும்போது, எதிர்ப்புறம் பைக்கில் ஒருவனின் முதுகில் கை வைத்தபடி சென்ற ஒரு தேவதை, இவனைப் பார்த்து தெள்ளத் தெளிவாகச் சிரித்தாள். ஒரு விநாடி இவன் பைக்கின் பேலன்ஸைத் தவறவிட்டு, அடுத்து வந்த யு டர்னில் வெகுவேகமாகத் திரும்பி, அந்தப் பெண்ணை சுமந்து செல்லும் பைக்கைத் தொடர்ந்தான். சென்னையின் சபிக்கத்தக்க டிராஃபிக் அவன் பொறுமையைச் சோதிக்க, பல கார்களையும் பஸ்களையும் கடந்து அவளை நெருங்கிச் செல்லும்போது, அவள் மறுபடியும் இவனைப் பார்த்து ஒரு புன்னகையைச் சிந்த, இவன் நாடி நரம்புகள் தடதடத்தன. விடாமல் தொடர்ந்தான்.
    வள்ளுவர் கோட்டம் அருகே வந்த குப்பை லாரியின் சதியால் அவள் சென்ற பைக்கைத் தவறவிட்டு, ஆபீஸுக்குத் தாமதமாக வந்து ஸீட்டில் உட்கார்ந்தான். ஒருமணி நேரம் தாமதம். எனவே அரை நாள் லீவாகக் கணக்கிடப்படும். ஆனால், அதற்காகச் சிரிக்காமல் இருக்க முடியுமா? அந்தப் பெண்தான் தன்னைப் பார்த்து எவ்வளவு அழகாகச் சிரித்தாள்! நேருக்குநேர் கண்கள் பார்த்து ஓர் ஓவியப் புன்னகை! எத்தனை மாதச் சம்பளமும் அதற்கு ஈடாகாதே? இந்த மாதிரியான அங்கீகாரத்துக்குத்தானே ஆணாகப் பிறந்த பாவிகள் எல்லாரும் அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள்.
    காலையில் தன்னைப் பார்த்து புன்னகைத்த அந்தப் பெண்ணை மறுபடியும் பார்க்க நேர்ந்தால், காதலைச் சொல்லிவிட வேண்டும். வாய்ப்பு இல்லையென்றால், அவள் கைகளைப் பற்றி நன்றியாவது சொல்ல வேண்டும். இப்படி ஒரு சிரிப்பைச் சிரித்து 30 ஆண்டு கால வாழ்க்கையை அர்த்தப்படுத்தியதற்காக!
    குமார், இப்படி வெட்டியாக யோசித்து நினைவுச் சுகத்தில் திளைத்துக்கொண்டிருந்தபோது, போன் அடித்தது. எடுத்தான்.
    ''அலைகடல் பத்திரிகை ஆபீஸுங்களா?''
    ''ஆமா, உங்களுக்கு யாரு வேணும்?'
    ''சப் எடிட்டர் குமார்?''
    ''நாந்தான்... சொல்லுங்க!''
    ''அய்யா, என் பேர் தங்கராஜ். நான் உங்களுக்கு ஒரு பேட்டி குடுக்கணும். எம் போட்டோ உங்க புஸ்தகத்துல வரணும். உங்க நம்பரை சோமு குடுத்தாப்ல...''
    ''எந்த சோமு?'
    ''விநாயகா ஃபைனான்ஸ் சோமு...''
    குமாருக்கு சோமு யாரெனச் சுத்தமாகத் தெரியவில்லை. செய்தி சேகரிக்கச் செல்லும்போது, யார் கேட்டாலும் மொபைல் நம்பரைக் கொடுத்துவிடுவது குமாரின் வியாதி. அதனால் விளைகிற சங்கடம் இது.
    ''சரி... நம்பர் யார் வேணா குடுத்திருக்கட்டும். உங்க பேட்டி பத்திரிகையில வரணும்னா, நீங்க ஏதாவது பண்ணி இருக்கணுமே... எந்த பேசிஸ்ல உங்களை நான் பேட்டி எடுக்கறது?'
    ''நான் சிலை எல்லாம் செய்வேன் சார்!''
    ''சிற்பிங்களா... ஸ்தபதியா?''
    ''இல்லைங்க... ஸ்தபதி எல்லாம் பெரிய வார்த்தை. என்னை நான் அப்படிச் சொல்லிக்க மாட்டேன். ஆனா, எல்லா சிலைகளையும் சரியான அங்கலட்சணங்களோடு செய்வேன். நல்லா படம் வரைவேன். எல்லாமே சுயமா கத்துக்கிட்டேன். என் பேட்டியை நீங்க போட்டிங்கன்னா, என்னைப் பத்தி யாருக்காவது தெரியும். ஏதாச்சும் சான்ஸ் கிடைக்கும். ரொம்பக் கஷ்டத்தில இருக்கேன்.'' இதுவரை சிரித்தபடி பேசிக்கொண்டிருந்த குமாரின் முகம் மாறியது.
    ''சார்... நீங்க உங்களை விளம்பரப்படுத்திக் கிறதுக்கு எல்லாம் நாங்க பத்திரிகை நடத்தலை... புரியுதா? அதுமாதிரி பண்ண முடியாது. போனை வைங்க.''
    ''ஏன் சார்? இந்த வாரம் விதவிதமா பூட்டை உடைக்கிற ஒரு திருடன்கிட்ட பேட்டி எடுத்திருக்கீங்க. அவன் எப்படி எல்லாம் திறமையா பூட்டை உடைப்பேன்னு உங்ககிட்ட பெருமையா சொல்லி இருக்கான். போட்டோவோட அதைப் போட்டிருக்கீங்க. நான் ஒரு கலைஞன். என்கிட்ட பேட்டி எடுக்க முடியாதா?'' - அந்த நபர் குரலில் ஓர் ஆற்றாமை தெரிந்தது. ஆனாலும், குமாருக்கு கடுப்பாகிவிட்டது.



    ''ஏங்க... அந்தத் திருடன் போலீஸ் குவார்ட்டர்ஸுக்குள்ள வீடு வீடா உடைச்சுத் திருடியிருக்கான். அது சென்சேஷன். அதனால அவன் பேட்டியைப் போட்டோம். புரியுதுங்களா?''
    ''அப்ப என் பேட்டி வரணும்னா, நானும் திருடணுமா?'' என்றதும் குமார் பொறுமை இழந்தான்.
    ''சார்... உங்களுக்குச் சொல்லிப் புரியவைக்க முடியாது. போனை வைங்க. எனக்கு நிறைய வேலை இருக்கு.''
    ''திருடனைப் பேட்டி எடுக்கிற... கலைஞனை இன்சல்ட் பண்ற. என்னா ஜர்னலிஸ்ட் நீ? இந்த நாடு வெளங்குமா? நீ எல்லாம் ஒரு
    சப் எடிட்டரா? மடப்பயலே.''
    ''இதுக்கு மேல பேசினா, நல்லா இருக்காது. போனை வைங்க.''
    போனை கட் செய்த குமாரின் முகத்தில் சுத்தமாகச் சிரிப்பு இல்லை. 'சரியான லூஸா இருக்கான் என எரிச்சலுடன் எழுந்து போனான். ஒருமணி நேரத்தில் அந்த ஆளை மறந்துவிட்டான்.
    அடுத்த நாள், ரிசப்ஷனில் ஒரு பெண் அவனுக்காகக் காத்திருப்பதாகத் தகவல் வந்தது. ரிசப்ஷனுக்குக் கீழே இறங்கும்போதே அவளைப் பார்த்துவிட்டான். நேற்று பைக்கில் சென்றவள். இவனைப் பார்த்துச் சிரித்தவள்!
    குமாரின் கை-கால்கள் எல்லாம் ஜிவ் என்னும் உணர்வு பரவ, உடல் லேசானது. நாக்கு லேசாக உலர, தன் உடம்பு முழுவதும் பரபரப்பான ஒரு சூடு பரவியது. காய்ச்சல் போல... ஆனால் காய்ச்சல் இல்லை. இங்லீஷில் 'எக்ஸைட்டட் என சுலபமாகச் சொல்லிவிடுகிறார்கள். தமிழில் நிறைய வார்த்தைகள் தேவைப்படுகின்றன என ஒரு சப் எடிட்டர் யோசனை மனதுக்குள் ஓட, அவளை நெருங்கினான். அவள் இவனைப் பார்த்ததும் எழுந்தாள். அவள் மட்டுமா எழுந்தாள்?! அவளுடன் கொஞ்சம் இசையும், கொஞ்சம் சுகந்தமும், கொஞ்சம் வெப்பமும் எழுந்தன.
    ''ஹலோ சார்!''
    ''ஹலோ... நீங்க..?''
    ''என் பேர் பாவை.''
    பாவைதான். பழைய கறுப்பு வெள்ளைப் படங்களில் வரும் தேவிகாவைப்போல, மதுபாலாவைப் போல இருக்கிறாள். என்ன கொஞ்சம் பழைய பெயராக இருக்கிறது. குமார், பாவையை இப்போது நன்றாக உற்றுக் கவனித்தான். பாவைக்கு வயது 30 இருக்கலாம். எளிமையான காட்டன் சேலை. கழுத்தில் ஒரு பாசிமாலை. சாதாரண செருப்பு எனத் தள்ளுபடியாகவும், கண்களும் முகமும் சிரித்த சிரிப்பில் அள்ளும்படியாகவும் இருந்தாள்.
    ''நல்ல பேருங்க...''
    ''என் அப்பா வெச்சது.''
    ''சூப்பருங்க... இப்பல்லாம் யாரு இந்த மாதிரி பேர் வைக்கிறாங்க'' - பாவை சிரித்தாள்.
    ''ஆக்ச்சுவலா நான் உங்களை ஏற்கெனவே பார்த்திருக்கேன்.''
    ''நேத்து பைக்ல பார்த்தீங்க; சிரிச்சீங்க.''
    ''கரெக்ட்... ஆனா, அதுக்கு முன்னாடியே ஒருநாள் ஒரு மீட்டிங்ல உங்களைப் பார்த்தேன். பட், அப்ப நீங்க என்னைப் பார்க்கலை.''
    குமார் மனதில் அதற்குள் ஒரு கதைச் சுருக்கம் தோன்றிவிட்டது. பாவை, குமாரை எங்கோ பார்த்திருக்கிறாள். கண்டதும் காதல். இப்போது விசாரித்து வந்துவிட்டாள். கூட்டிப்போய் காதலைச் சொல்லப்போகிறாள்.
    இவன் இப்படி நினைக்கும்போதே பாவை கேட்டாள்... ''டீ சாப்பிடலாமா?''
    குமார் மனதுக்குள் கன்றுக்குட்டிகள் ஓடின.
    ''வாங்க போகலாம்.''
    டீ குடிக்கும்போது பாவையின் சொற்களுக்காகக் காத்திருந்தான் குமார். பாவை சொன்னாள்... ''அன்னைக்கு ஃபங்க்ஷன்ல நீங்க யாரையோ பேட்டி எடுத்துக்கிட்டு இருந்தீங்க... அப்ப சோமுதான் உங்களைக் காமிச்சாரு.''
    ''எந்த சோமு?''
    ''விநாயகா ஃபைனான்ஸ் சோமு.''
    குமாரின் மனதுக்குள் ஒரு குரல் ஒலித்தது. யார் இந்த விநாயகா ஃபைனான்ஸ் சோமு? இந்தப் பேரை எங்கே கேட்டோம்? நேற்று வந்த போன். அந்தக் கிறுக்குப் பயல்... சிற்பி!
    பாவை புன்னகையுடன் பேசினாள், ''நேத்து அப்பா பேசினாராம். நீங்க பேட்டி எல்லாம் எடுக்க முடியாதுனு சொன்னீங்களாம். அதான், 'நேர்லயே
    நீ போய் சாரைப் பார்த்துக் கேளும்மானு அப்பா சொன்னார். அதான்...''
    குமார் மனதுக்குள் ஓர் அணு உலை வெடித்து புல் பூண்டுகள் பொசுங்கின.
    30 ஆண்டுகள் கழித்து முதன்முதலாக தன்னைப் பார்த்து ஒருத்தி சிரித்தாள் என்கிற பெருமிதம், அவள் ஒரு காரியம் வேண்டித்தான் சிரித்திருக்கிறாள் என உணர்ந்ததும் நொடியில் ஆவியானது. முகம் சுருங்கினான்.
    குமாரின் முகம் மாறியதை பாவை படித்துவிட்டாள். கெஞ்சலான குரலில் பேசினாள் ''ஸாரி சார். நீங்க எரிச்சலாவீங்கனு தெரிஞ்சுதான் வந்தேன். இதை ஒரு உதவியா நினைச்சு செய்ங்க. நீங்க பேட்டி போடறது ரெண்டாவது. முதல்ல வந்து என் அப்பாவைப் பாருங்க சார். அவர்கிட்ட பேசுங்க... ப்ளீஸ்!''
    'இதுக்கெல்லாம் வேற ஆளைப் பாரு என சொல்ல எத்தனித்து தலைநிமிர்ந்த குமார், பாவையின் கண்களைப் பார்த்தான். தேவிகாவும் மதுபாலாவும் கண்களில் நீர் கோக்க பார்வையால் இறைஞ்சும்போது கதாநாயகனால் என்ன செய்ய முடியும்?
    ''வர்றேங்க.''



    திருவல்லிக்கேணியின் சல்லடை சந்துகளின் வழியாக நடந்துபோய், 'இங்கே சிறுநீர் கழித்தால் செருப்படி கிடைக்கும் என்ற ஒரு சுவரைக் கடந்து, ஒரு சின்ன கேட்டைத் திறந்து சந்துக்குள்ளே போனதும் அந்த வீடு இருந்தது. திருவல்லிக்கேணி கிராமமாக இருந்தபோது உருவான வீடாக இருக்க வேண்டும். ஹாலின் மேல்புறம் திறந்திருந்தது. அந்த வெளிச்சத்தின் கீழ் தங்கராஜ் உட்கார்ந்திருந்தார். 55 வயது இருக்கலாம். பாவையுடன் குமார் உள்ளே நுழைந்ததும், எழுந்து நின்று கை கூப்பி வணங்கினார். மூக்குப்பொடியும் வெற்றிலையும் கலந்த ஒரு வாசம் அவரைச் சூழ்ந்திருந்தது.
    குமார் அவர் எதிரே அமரவும் பாவை உள்ளே போய்விட்டாள். குமார் தனது பத்திரிகைப் பார்வையால் அந்த வீட்டை அளந்தான். அவரது மனைவியின் படம் மாலை போட்டு மாட்டி இருந்தது. அந்த வீட்டின் வறுமையை உடனடியாக அவனால் உணர முடிந்தது. சுருட்டி வைக்கப்பட்ட கிழிந்த பாயும் மண்ணெண்ணெய் ஸ்டவ்வின் வாசமும், அறையின் மூலையிலேயே வைக்கப்பட்டிருந்த சொற்ப பாத்திரங்களும் எல்லாவற்றையும் சொல்லிவிட்டன. குமாரின் பார்வையைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் தங்கராஜ் பேச ஆரம்பித்தார்.
    ''நேத்து கோவமாப் பேசிட்டேன். மனசில வெச்சுக்கிடாம வந்திருக்கே. சந்தோஷம். எல்லாம் ஒரு ஆத்தாமையில பேசறதுதான். பாரிஸ்ல என்னை மாதிரி ஒருத்தன் இருந்தா, அவன் கோடீஸ்வரன். ஆனா, நான் திருவல்லிக்கேணியில இருக்கேன். பாரதியாரையே அலையவிட்ட ஊர்ல இது'' - குமார் அவரைப் பார்த்துச் சிரித்தான்.
    ''சாருநிவேதிதா மாதிரி பேசறீங்க. என்ன படிச்சிருக்கீங்க?''
    ''அப்ப ப்ளஸ் டூ கிடையாது. பி.யூ.சி-னு சொல்வாங்க. அதுவரைக்கும் படிச்சேன். படிப்பில புத்தி போகலை. வீட்டுல சண்டை போட்டுட்டு ஓடிப்போய் ஊர் ஊரா அலைஞ்சேன். நல்லா படம் வரைவேன். சிலதெல்லாம் பிறவியிலேயே வருமில்லையா? பானை செய்யுற ஒரு ஆள்கிட்ட கொஞ்ச நாள் இருந்தேன். அந்தாளு கோயில் திருவிழாவுக்கு ரூபம் எல்லாம் செய்வாரு. அவர்கிட்ட கொஞ்ச நாளு, அப்புறம் ஆந்திராவில் ஒரு ஆள்கிட்ட கொஞ்ச நாள்னு இருந்து கத்துக்கிட்டதுதான் இந்தத் தொழில். முறைப்படி படிக்கலை. ஆனா, எப்படியோ எல்லாத்தையும் கத்துக்கிட்டேன். ஆல்பம் பாக்கிறியா?''
    ஓர் அலமாரியைத் திறந்து ஆல்பத்தை எடுத்து வந்தார். ஆயிரக்கணக்கான தடவை புரட்டிப் புரட்டி ஆல்பம் நொந்துபோய் இருந்தது. அதன் பக்கங்களை குமார் புரட்டினான். அவன் கண்கள் பிரகாசித்தன.
    எல்லாம் மங்கிய புகைப்படங்கள். ஆனால், அவற்றில் இருந்த சிலைகள் அனைத்தும் அவ்வளவு திருத்தமாக இருந்தன. இந்த மனிதனா இவற்றை வடித்தான் என்கிற சந்தேகம் தோன்றும் அளவுக்கு அழகாக இருந்தன.
    ''இந்தச் சிலை எல்லாம் எங்கே?''
    ''இது எல்லாமே நான் ஒரு ஏஜென்ட்டுக்கு செஞ்சுக்கொடுத்தது. ரொம்ப சொற்பமாத்தான் காசு தருவான். நான் எல்லாரையும் நம்பிருவேன். அதனால இழந்தது நிறைய. ஏமாந்ததுக்கு அளவே இல்லை'' - பாவை உள்ளே வந்தாள். கையில் இருந்த தூக்கில் இருந்து காபி ஊற்றிக்கொடுத்தாள்.
    ''கடையில வாங்கினேன். இனிப்பு போதுமா?''
    குமார் அவளை நிமிர்ந்து பார்த்தான். 30 வயது ஆகியும் அவளுக்குத் திருமணம் ஆகாதது ஏன் எனப் புரிந்தது.
    'இங்க வாப்பா என தங்கராஜ் அவனை இன்னோர் அறைக்கு அழைத்துச் சென்றார். அந்த அறையின் மூலையில் இருந்த பழைய மரப் பெட்டியைத் திறந்தார். உள்ளே 10, 20 சிலைகள் கிடந்தன. ஒரு அடி, அரை அடி உயரமுள்ள பல்வேறு சிலைகள்.
    ''இது எல்லாமே நான் பண்ணதுதான். மண்ணுல பண்ணுவேன். அப்புறம் பித்தளையில, ஐம்பொன்ல எல்லாத்திலயும் பண்ணுவேன். அச்சு பண்ணி ஊத்தி பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்ல பண்ண புத்தர் இது. பாருங்க.''
    தங்கராஜ் ஒரு புத்தரின் சிலையை எடுத்து நீட்ட, குமார் அதைப் பார்த்து அசந்துபோனான். அவன் இதுவரை கண் மூடிய புத்தர் சிலையைத்தான் அதிகம் பார்த்திருக்கிறான். இந்தப் புத்தர் கண்களைத் திறந்திருந்தார். மென்மையாக இமைகளை விலக்கியும் விலகாமலும் கருணை வழியும் கண்கள். கண்களை மூடியிருக்கும் புத்தரின் சிலையில் காணும் அதே சாந்தமும், தியானத்தில் லயித்த அழகிய புன்னகையும் அற்புதம். தங்கராஜை வியப்புடன் பார்த்தான் குமார். அவர் இவனது பிரமிப்பைக் கண்டுகொள்ளாமல் மற்றொரு சிறிய சிலையை எடுத்து, தனது வேஷ்டியில் துடைத்து அவனிடம் நீட்டினார்.

    ''இந்த அம்மனைப் பாருங்க... ஃபைபர்ல பண்ணது. பன்னிரண்டு வருஷங்கள் ஆச்சு.''
    குமார், அதை கையில் வாங்கினான். மிகவும் லேசாக இருந்தது. மீனாட்சி அம்மன். ஒரு அடி உயரம்தான் இருக்கும். கையில் இருக்கும் கிளியும் டாலடிக்க, மின்னும் மூக்குத்தியுடன், அழகிய பச்சை நிறத்தில்... அந்தச் சிலையில் தென்பட்ட உயிர்ப்பு, குமாரைப் பிரமிக்கவைத்தது.
    ''என்ன சார் சொல்றீங்க... இது ஃபைபர்ல பண்ணதா?!''
    ''ஆமா தம்பி... அச்சு பண்ணி மோல்டு எடுத்துப் பண்ணது. ஃபைபர். பொதுவா மோல்டு எடுத்துப் பண்ணா, அது அவ்வளவு சிறப்பா இருக்காதுனு சொல்வாங்க. ஆனா நான் பண்ணது, செதுக்கினது மாதிரி இருக்கும். அதுதான் நம்ம தனித்திறமை. நீங்க பெங்களூரு போயிருக்கீங்களா?'
    ''போயிருக்கேன்.''
    ''அங்க தும்கூர் போற ரூட்ல ஒரு தீம் பார்க் இருக்கு... தெரியுமா?''
    ''தெரியாதுங்க.''
    ''அந்த தீம் பார்க்ல நிறைய அனிமல்ஸ் வெச்சிருக்காங்க. ஒவ்வொண்ணும் 20 அடி,
    30 அடி உயரம். எல்லாமே நான் செஞ்சது. ஃபைபர்ல பண்ணது. போட்டோ பாருங்க.''
    மற்றோர் ஆல்பத்தை எடுத்துக் காட்டினார். அதில் டைனோசர், யானை, திமிங்கலம் ஆகியவை பிரமாண்டமாக உயிர்பெற்றிருந்தன.
    ''இதுக்கெல்லாம் நான் காசே வாங்கலை. 'குழந்தைகளுக்காக பண்ணிக்கொடுங்கனு கேட்டாங்க. 'சரினு பண்ணிக்கொடுத்தேன்.''
    ''சார்... நீங்க உங்க தொழில்ல திறமையானவர்தான். அதுல இப்ப எனக்கு சந்தேகம் இல்லை.''
    ''தொழில் இல்லை தம்பி... கலை. நான் கலைஞன். இன்னமும் அப்படித்தான் நினைக்கிறேன். தொழிலா நினைச்சுப் பண்ணியிருந்தா, நிறையக் காசு சேர்த்திருப்பேனே.''
    ''சரிங்க... இப்ப நான் என்ன செய்யணும்?'
    அவர் பெருமூச்சுவிட்டார். போனில் பேசியபோது தென்படாத ஒரு தயக்கம், இப்போது அவர் முகத்தில் இருந்தது. பாவைதான் பேசினாள்.
    ''சார்... சில வருஷங்களாவே அப்பா வேலையில்லாம சும்மா இருக்கார். நைட்ல தூங்க மாட்டேங்கிறாரு. சமயத்தில தனியா உக்காந்துக்கிட்டு அவராவே பேசிக்கிட்டு இருக்காரு. ரொம்பக் கஷ்டமா இருக்கு. அதான் ஒரு பேட்டி எடுத்துப் போட்டீங்கன்னா, ஏதாச்சும் வேலை வரும்னு...''
    குமார், தங்கராஜைப் பார்த்தான். உடனே அவசரமான குரலில் பாவை பேசினாள்.
    ''இது நான் சொன்ன ஐடியாதான். நேத்து நான் கம்ப்பெல் பண்ணதாலதான் போன்ல உங்ககிட்ட பேசினாரு. இப்பப் பாருங்க... பேசாம நிக்கிறதை...''
    தங்கராஜ் லேசான குரலில் பேசினார். ''இவ சொல்றா. ஆனா, எனக்கு கொஞ்சம் கூச்சமாத்தான் இருக்கு. நேத்துக்கூட போன்ல ஒரு வேகத்தில பேசினேனே தவிர, என் சுபாவம் அது கிடையாது. பேட்டி எல்லாம் வேணாம். விட்டுத்தள்ளுங்க கழுதையை.''
    குமார், பாவையைப் பார்த்தான். அவள் கண்களில் இருந்த சோகமும் கெஞ்சலும் குமாரை உருக்கின. தங்கராஜைப் பார்த்து தீர்மானமான குரலில் சொன்னான்
    ''நான் உங்களைப் பேட்டி எடுக்கிறேன் சார்!''

    பேட்டி எடுத்துக்கொண்டு எடிட்டரிடம் போனான் குமார். வாங்கிப் பார்த்தார்.
    ''இதை எதுக்கு நாம போடணும்?''
    ''நல்லா சிலை செய்றார் சார். கஷ்டப்படுறார்.''
    ''தொழில் நல்லாத் தெரிஞ்சவன்... சிரமப்படுறவன் லட்சம் பேர் இருக்கான் நம்ம ஊர்ல. எல்லாரையும் நாம பேட்டி எடுக்க முடியுமா?''
    ''நீங்க படிச்சுப் பாருங்க சார். படிச்சுட்டு டிஸைட் பண்ணுங்க.''
    அவர் படிக்கத் தொடங்கினார். குமார் பிரமாதமாக எழுதுவான். தங்கராஜ் அவரே பேசுவதுபோல் அந்தப் பேட்டியை எழுதியிருந்தான். எடிட்டர் படித்துவிட்டுப் புன்னகைத்தார்.
    ''இதை நான் போடுறேன், இந்த ஆளுக்காக இல்லை; உன் அருமையான ரைட்டிங்குக்காக.''
    அடுத்த வாரமே பேட்டி பிரசுரமானது. அச்சாகி வந்த புத்தகத்தை எடுத்துக்காண்டு குமார் போனான். தங்கராஜ் புத்தகத்தை வாங்கியதும் கண்களில் நீர் கசிய, அதை மறுபடி மறுபடி படிக்கத் தொடங்கினார். குமார், பாவையைத் தேடினான். வீட்டுக்குப் பின்னால் இருந்த அடிபம்ப்பில் தண்ணீர் அடித்துக்கொண்டிருந்தாள். குமார், அவளிடம் கண்களில் காதலை வெளிப்படுத்தியவாறு பேசிக்கொண்டிருந்தான். அவள் தண்ணீர் அடித்தபடி புன்னகையுடன் பேசிக்கொண்டிருந்தாள். சூட்சுமமானவள். அவளுக்கு குமாரின் காதல் புரிந்துவிட்டது.
    அடுத்த ஓரிரு தினங்களில் மறுபடியும் அந்த வீட்டுக்குப் போனான். அப்போது தங்கராஜ் வீட்டில் இல்லை. ஸ்வீட் வாங்கிக்கொண்டு போயிருந்தான்.
    ''ஜஸ்ட் இந்தப் பக்கம் வந்தேன். உங்களைப் பார்த்துட்டுப் போலாம்னு தோணுச்சு'' என்றவனைப் பார்த்து பாவை சிரித்தாள்.
    ''சார்... உங்ககிட்ட ஓப்பனா பேசலாமா?''
    ''தாராளமா.''
    ''நீங்க என்னைப் பார்க்கத்தானே வந்தீங்க?'' - குமார் உடல் லேசாகச் சிலிர்த்தது. சொல்லிவிட வேண்டியதுதான்.
    ''ஆமா பாவை. உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்.''
    ''என்னை லவ் பண்றீங்களா?''
    குமாருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. கண்களில் மையல் வழிய, ''ஆமா பாவை. நீங்க பைக்ல என்னைப் பார்த்து சிரிச்சீங்க இல்லையா... அதுல இருந்து என் மைண்ட் ஃபுல்லா நீங்கதான்...' - பாவை சிரித்தாள்.
    ''இந்த வீடு, நிலைமை எல்லாத்தையும் பார்த்த பிறகுமா?''
    ''இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை பாவை.''
    ''இன்னொரு மேட்டர் இருக்கு.''
    ''என்ன மேட்டர்?''
    பாவையின் குரலில் லேசான தயக்கம் தெரிந்தாலும், இதைச் சொல்லியே ஆக வேண்டும் என்பதுபோல் மெல்லிய குரலில் சொன்னாள்.
    ''எனக்கு வயசு 31. அப்பாவுக்கு வருமானம்னு ஒண்ணு வந்து கிட்டத்தட்ட நாலைஞ்சு வருஷங்கள் ஆகிருச்சு. எனக்கு கல்யாணம் ஆகலையே தவிர, ஒருத்தர்கூடத்தான் நான் இருக்கேன். அவர்தான் இந்தக் குடும்பத்தை சப்போர்ட் பண்றாரு.''
    குமாரின் உடல் எங்கும் லேசான பதற்றம் பரவியது.
    ''என்ன சொல்றீங்க?''
    ''விநாயகா ஃபைனான்ஸ் சோமுனு சொன்னேனே... அவர்தான். வட்டிக்குப் பணம் கொடுக்கிறவர். அவருக்குக் கல்யாணம் ஆகி ப்ளஸ் டூ படிக்கிற பசங்க இருக்காங்க. அதனால கல்யாணம் பண்ணிக்க முடியாதுனு சொல்லிட்டாரு. எனக்கும் வேற வழி இல்லாம இப்படி இருக்கேன். ஆக்ச்சுவலா இந்த மேட்டர் அப்பாவுக்கும் ஓரளவு தெரியும்'' - குமார் அதிர்ந்தான்.
    ''அவருக்கும் தெரியுமா?''
    ''ம்... நீங்க என்கிட்ட 'ஐ லவ் யூனு என்னத்தையாவது சொல்றதுக்கு முன்னாடியே இதைச் சொல்லிடணும்னு நினைச்சேன். அதான் சொன்னேன். ஸாரி...'' -குமாருக்கு உள்ளுக்குள் தோல்வியும் அழுகையும் பீறிட்டன.
    ''நான் கிளம்பறேன்'' எனத் தடுமாற்றத்துடன் சொன்னவனின், முகத்தை அவள் கவனித்தாள்.
    ''ஏன் இவ்வளவு அப்செட் ஆகணும்? ஜஸ்ட் மூணு தடவைதானே பாத்திருக்கோம்.''
    குமார் அவள் கண்களைப் பார்க்காமல் சொன்னான், ''அது அப்படித்தான்... ப்ச்! வர்றேன்' - திரும்பிப் பார்க்காமல் வந்துவிட்டான் குமார்.
    அடுத்த வாரம் தேர்தல் அறிவிக்கப்பட, அதன் பின் பத்திரிகை வேலைகளில் மும்முரமாகி மெள்ள அவர்களை மறந்துவிட்டான். சில மாதங்களுக்குப் பின்னர் கர்நாடகாவுக்கு ஒரு வேலையாகச் சென்றபோது தும்கூர் செல்லும் பாதையில் அந்த தீம் பார்க்கைப் பார்த்தான். தங்கராஜ் நினைவு வந்தது. தீம் பார்க்குக்கு உள்ளே போனான்.
    முகப்பில் இவன் போட்டோவில் பார்த்த சுறா மீனும் யானையும் டைனோசரும் உயரமாக நின்றிருந்தன. என்ன ஒரு நேர்த்தி. அதைத் தொட்டுப்பார்த்தான். கல்லில் செதுக்கியதுபோல சின்னச் சின்ன நெளிவுகளும் நுட்பங்களும் தங்கராஜின் திறமையை, அர்ப்பணிப்பைச் சொல்லின. ஒரு பெண்ணின் சிலையையும் தங்கராஜ் வடித்திருந்தார். அதன் வடிவும் வனப்பும் உயிர்ப்பும் இவனுக்கு பாவையை நினைவுபடுத்தின. ஊருக்குப் போனதும் அவர்களைப் பார்க்க வேண்டும் எனத் தோன்றியது.
    சென்னை திரும்பியதும் காலையிலேயே பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினான். வீட்டை அடைந்து உள்ளே நுழைந்தான். வீடு அமைதியாக இருந்தது. குரல்கொடுத்தான். தங்கராஜ் பின்னால் இருந்து வந்தார்.
    ''வாங்க தம்பி வாங்க... உக்காருங்க'' இவன் அமர்ந்தான்.
    ''நல்லா இருக்கீங்களா?''
    ''இருக்கேன் தம்பி...''
    ''பாவை இல்லீங்களா?''
    ''அவ இப்ப இங்க இல்லை'' என்றவர் குரலில் சின்னத் தடுமாற்றம். பிறகு சொன்னார்.
    ''சோமுனு தெரிஞ்சவர் ஒருத்தர்...'' எனத் தயங்கினார்.
    ''தெரியும் சார். சொல்லுங்க...''
    ''அவர் ஒய்ஃப் திடீர்னு செத்துப்போச்சு. அடுத்த மாசத்துல இருந்து இவளை அவர் கூட்டிக்கிட்டுப் போய்ட்டார். அவருக்கு பெரிய பசங்கள்லாம் இருக்கு. அதனால தனி வீடு எடுத்துவெச்சிருக்கார்...' - தங்கராஜின் குரலில் கூச்சமும் குற்றஉணர்வும் அப்பட்டமாகத் தெரிந்தன. குமார் மறுபடியும் ஏதோ ஓர் இழப்பை உணர்ந்தான்.
    ''அந்தாளு ஒய்ஃப் எப்படிச் செத்தாங்க?''
    ''சூஸைட்னு சொல்லிக்கிறாங்க...'
    சிறிதுநேரம் கனத்த மௌனம் நிலவியது. அவர் பேச்சை மாற்றினார்.
    ''ரொம்ப நன்றி தம்பி. எனக்கு உங்களால மறுபடியும் வேலை வந்திருச்சு.''
    ''அப்படியா..? பரவால்லையே... சிலை செய்யிறதுக்குக் கூப்பிட்டாங்களா?''
    ''இல்லை... இது வேறமாதிரி வொர்க்கு. இதைப் பாருங்க.''
    பின்புறம் கூட்டிப்போனார். அங்கே சின்னச் சின்னதாக மனித உறுப்புகள் சிதறிக் கிடந்தன. இதயம், நுரையீரல், மூளை, கை, கால்...
    ''இதெல்லாம் நான் செஞ்சது. மாணவர்களுக்குச் சொல்லித்தர்றதுக்காக ஒரு கம்பெனி இதைத் தயார் பண்ணுது. எல்லாம் ரியல் சைஸ். இதைப் பாருங்க... எல்லாமே கரெக்ட்டா ஃபிக்ஸ் பண்ற மாதிரி பண்ணிருக்கேன்.''
    அவர் கட கடவென இதயம், நுரையீரல், கல்லீரல் என எல்லாவற்றையும் எடுத்துப் பொருத்தினார்.

    ''பாத்தீங்களா? மனுஷனோட மார்புக்கூடு. இது மூளை. பசங்களுக்கு இதைவெச்சு சொல்லித்தர்றது ரொம்ப ஈஸி. என் வேலை அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. மாசாமாசம் இனிமேல் காசு பிரச்னை இல்லை. மெள்ள மெள்ள கடனை எல்லாம் அடைக்கணும்.''
    குமார் அவரை வியப்புடன் பார்த்தான்.
    ''என்ன பாக்குறீங்க?''
    ''இல்லை... நீங்க செஞ்ச புத்தர், மீனாட்சி அம்மன்... அந்த தீம் பார்க் யானை, டைனோசர்லாம்...''
    ''எனக்கும் அது மாதிரி செய்யத்தான் ஆசை. என்ன பண்றது தம்பி? வாழ்க்கைதான் நம்மளைப் பிச்சுப்போட்டுருச்சே. மூளை, இதயம், குடல், குந்தாணினு அக்கக்கா பிரிச்சுப்போட்டுருச்சே? என்ன பண்றது..?''
    அவர், தான் இணைத்த உடல் உறுப்புகளை தனித்தனியாகப் பிரிக்கத் தொடங்கினார்!

    ****************
    gkrishna

  8. Likes aanaa, chinnakkannan liked this post
  9. #67
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    இப்போதெல்லாம் ஆனந்த விகடனைப் படிப்பதெல்லாம் கிடையாது..புரட்டுவதோடு சரி.. முப்பதுக்கும் மேலான வருடப் பழக்கம்..வாங்குவதை நிறுத்தவும் மனமில்லை.. சிறுகதைகள் அவ்வளவாகக் கவர்வதில்லை.. விகடன் மேடை மற்ற பகுதிகள் எல்லாம் கொஞ்சம் பழையதையே புதுமை என்ற பெயரில் ஜல்லிதான் அடிக்கின்றன வெகு அபூர்வமாகத் தான் நல்லகதை தென்படுவதுண்டு.

    கிருஷ்ணாஜி.. தாங்கள் இட்டதை பார்த்த பிறகு வாங்கி வைத்திருந்த ப்ரிண்ட்டட் வெர்ஷனை எடுத்து இந்தக் கதையைப் படித்தேன்.. ரொம்ப ஓஹோ எனச் சொல்ல முடியாவிட்டாலும் ஓ.கே கதை. நவீன இலக்கியங்களின் தாக்கங்கள் சிறுகதைகளிலும் வந்திருப்பது தெரிகிறது. ம்ம் இந்த எடிட்டர் சொல்வது போல - அவன் செய்யற விஷயத்துக்காக்ப் பிரசுரிக்கலை.. நீ அழகா எழுதியிருக்க அதற்காகச் செய்கிறேன் - என்றபடி பிரசுரித்திருப்பார்கள் போல. வாழ்க்கை பிச்சுப் போடத்தான்செய்யும்..அதிலும் அழகியல் பார்த்து ஓடிக் கொண்டு தானிருக்க வேண்டும்..

  10. #68
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    நன்றி சின்ன கண்ணன் சார்

    'யாக்கை' கதை படித்து வெளியிட்ட கருத்துகளுக்கு .
    gkrishna

Page 7 of 7 FirstFirst ... 567

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •