Page 101 of 199 FirstFirst ... 519199100101102103111151 ... LastLast
Results 1,001 to 1,010 of 1983

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7

  1. #1001
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by saradhaa_sn
    அனைவருக்கும் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    எல்லோர் இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கி வழியட்டும்.

    தீவிரவாதம் இல்லாத உலகம், ஊழலில்லாத இந்தியா, வறுமையில்லாத தமிழகம் மலர இவ்வாண்டு துவக்கமாக அமையட்டும்.

    நேற்று வடித்ததே, இலங்கைத்தமிழர்கள் வடித்த கடைசி கண்ணீர்த்துளிகளாய் இருக்கட்டும்.

    கைப்பையில் பணம் எடுத்துச்சென்று, சட்டைப்பையில் பொருள் வாங்கிவரும் நிலை மாறி, சட்டைப்பையில் பணம் எடுத்துச்சென்று கோணிப்பைகளில் பொருள் வாங்கிவரும் நிலை பெருகட்டும்.

    இலவசங்கள் வேண்டாம். ஆனால் அவற்றை காசுகொடுத்து வாங்கும் அளவுக்கு மக்கள் வாழ்க்கைத்தரம் உயரட்டும்.

    இத்தனை பவுனுக்கு மேல் நகையணிந்தால் சிறைத்தண்டனை என்ற சட்டம் இயற்றப்படட்டும்.

    'வற்றாத ஜீவநதி என்ற பெயரை மீண்டும் காவிரியன்னை பெற்றாள்' என்ற நிலைவரட்டும். பாலாறு என்ற பெயரே நிலைக்கட்டும், அது 'பாழாறு' என்ற பெயர் பெறவேண்டாம்.

    நதிகள் தண்ணீர் ஓடுவதற்கே தவிர மணல் அள்ளுவதற்கல்ல என்ற நற்சிந்தனை வளரட்டும்.

    'இந்தியாவில் கோயில்களை இஸ்லாமியர்கள் மற்றும் கிருத்துவர்களும், தேவாலயங்களை இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களும், மசூதிகளை இந்துக்கள் மற்றும் கிருத்துவர்களும் பத்திரமாகப் பாதுகாக்கிறார்களாம்' என்று உலகம் சொல்லி வியக்கும் நிலை இவ்வாண்டு மலரட்டும்.

    'எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலைவேண்டும்' என்ற வாசகம் பாட்டில் மட்டும் ஒலிக்காமல், ஒவ்வொருவர் வீட்டிலும் ஒலிக்கட்டும்.

    வாழ்க வளத்துடன்.

    அன்புடன்..... சாரூ...
    Oh ! What a post !! Simply Outstanding !!!
    pammalar

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1002
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    சகோதரி சாரதா,

    மனித வாழ்க்கையின் அஸ்திவாரமே 'நல்லெண்ணம்' என்ற ஒரு சொல்லில் தான் அடங்கியுள்ளது. நல்ல எண்ணம் உதயமாகும் போது நல்ல சொற்கள் வெளிப்படும். நல்ல சொற்கள் நல்ல செயல்பாடுகளை மட்டுமே தரும். நல்லெண்ணம், நற்சொல், நற்செயல் இவை மூன்றும் ஒன்று சேரும் போது நல்லொழுக்கம் உருவாகும். இத்தகைய நல்லொழுக்கத்தின் உருவாக என்றென்றும் திகழ்ந்து கொண்டிருப்பவர் நமது இதயதெய்வம் நடிகர் திலகம் அவர்கள். தூய்மையான எண்ணம், கள்ளம்-கபடமற்ற வெளிப்படையான பேச்சு, 'எனது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்' என்கின்ற ஒளிவு-மறைவற்ற சிறந்த செயல்பாடுகள் என எந்தத் தலைமுறைக்குமே, எந்தத் துறையாளருக்குமே அவர் ஒரு No. 1 Role Model.

    "உள்ளதைச் சொல்வேன் சொன்னதைச் செய்வேன் வேறொன்றும் தெரியாது !
    உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் கபடம் தெரியாது !"

    என அவர் பாடிய வைர வரிகள் அவருக்கு 100 / 100 சதவீதம் மட்டுமல்ல N% / N % பொருந்தும்.

    தங்களது புத்தாண்டுப் பதிவு, தங்களைப் போன்ற ஒவ்வொரு தூய இந்தியனின் உள்ளத்து வேட்கையை பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு தனி மனிதனிடமும் அவ்வப்போது தலைகாட்டும் நல்லொழுக்கம், நிரந்தரமாக அவனுள் அரியாசனமிட்டு அமரும் போது, தங்களது ஆசைக்கனவுகள் நிச்சயம் பேரின்ப நனவுகளாகும். அந்த நன்னாளை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், நாம் தொடர்ந்து தொய்வின்றி பயணிக்க, நமது இதயதெய்வம் முதற்கொண்ட எல்லா தெய்வங்களும் நமக்கு காட்டுகிறார்கள் "பச்சை விளக்கு".

    ஆசைக்கனவுகள் நிறைவேற இன்று நாம் ஆனந்தப்பண் பாடுகிறோம்:

    "ஒளிமயமான எதிர்காலம் நம் உள்ளத்தில் தெரிகிறது !
    இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது !" என்று.

    விரைவில் நனவாகப் போகும் நாளிலிருந்து நமது பேரின்ப நாதம்,

    "கேள்வி பிறந்தது அன்று ! நல்ல பதில் கிடைத்தது இன்று !
    ஆசை பிறந்தது அன்று ! யாவும் நடந்தது இன்று !"

    என எந்நாளும் ஆன்மாவுக்குள் உள்ளுணர்வாக ஒலித்துக் கொண்டே இருக்கும் !

    வாழ்க தமிழகம் ! வாழ்க பாரதம் ! வாழ்க இவ்வையகம் !

    ஜெய்ஹிந்த் !

    அன்புடன்,
    பம்மல் ஆர்.சுவாமிநாதன்.
    pammalar

  4. #1003
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    ராகவேந்தர் சார்! காலண்டர் பிரமாதம்

    சாரதா, உங்கள் பதிவு பிரமாதமோ பிரமாதம்.

    சுவாமி, சூப்பர் பதிவு!

    அன்புடன்

  5. #1004
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    லட்சுமி கல்யாணம்- Part I

    கதை வசனம் பாடல்கள் - கண்ணதாசன்

    தயாரிப்பு - AL.S புரொடக்சன்ஸ்

    இயக்கம் - ஜி.ஆர்.நாதன்

    வெளியான நாள் - 15-11-1968

    அழகனூர் ஒரு அழகான கிராமம். அங்கே பத்திரிக்கை நிருபராகவும் Agent - ஆகவும் இருப்பவன் கதிர்வேல். அவனின் தந்தை ஏகாம்பரம். கதிர்க்கு தாய்.இல்லை. திருமணம் செய்து கொள்ளவில்லை. அதே ஊரில் வசிக்கும் தாய் - பார்வதி மகள்- லட்சுமி. லட்சுமியின் தந்தை அவர்களுடன் இல்லை, அவர் ஒரு அரசியல் கைதி என நமக்கு சொல்லபப்டுகிறது. எங்கிருக்கிறார் என்றும் தெரியவில்லை. ஆனால் அவர் எங்கேயோ உயிருடன் இருக்கிறார் என்று லட்சுமியின் தாய் நம்புகிறாள். அவள் சுமங்கலி கோலத்தில் வலம் வருவதை ஊரார் கேலி செய்தாலும் அவள் அதிப் பொருட்படுத்துவதில்லை. லட்சுமிக்கு அதே ஊரில் உறவு முறையில் ஒரு மாமன்-அத்தை இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரே மகன் கண்ணன், ஆனால் அவன் சற்று அறிவு வளர்ச்சி குன்றியவனாக ஊரில் கருதப்படுகிறான். ஊர் முன்ஸிப் சுந்தரம் பிள்ளை. எப்போதும் சுருட்டும் கையுமாக அலைவதால் சுருட்டு சுந்தரம் பிள்ளை. யார் நன்றாக வாழ்ந்தாலும் பொறுத்துக்க கொள்ள முடியாத மனம் உடையவர். கல்யாணம் செய்துக் கொள்ளாத சுந்தரம், லட்சுமியை பெண் கேட்டு செல்ல, லட்சுமியின் தாய் மறுத்து விடுகிறாள். தனக்கு பெண் கொடுக்க மறுத்ததனால் லட்சுமியின் கல்யாணம் எப்படி நடக்கிறது பார்ப்போம் என்று சவால் விடுகிறார் சுந்தரம்.

    கதிர்வேலுவும் அவனது தந்தையும் அந்தக் குடும்பத்தின் மீது மிகுந்த அன்பும் ஈடுபாடும் காட்டுகிறார்கள். லட்சுமிக்கு கல்யாணம் செய்து வைக்க கதிர்வேலு மிகுந்த முயற்சி எடுக்கிறான். அந்நேரத்தில் கண்ணனின் பிறந்த நாள் வர அதில் கலந்து கொள்ள ஏகாம்பரத்தின் நண்பர் ராஜாங்கம் தன் மகன் ராமுவுடன் வருகிறார்.

    கதிர்வேலுவின் நண்பன் ராமு. பிறந்தநாள் விழா நடக்கிறது. பிறந்தநாள் விழாவில் அந்த ஊருக்கு புதியதாக வந்த சித்த மருத்துவர் விழாவிற்கு வர அவரை பார்க்கும் பார்வதியும், பார்வதியை பார்க்கும் அவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

    பிறந்த நாள் விழாவில் லட்சுமியை பார்க்கும் ராமு அவளை விரும்புகிறான். இதை தெரிந்துக் கொண்ட கதிர் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முயற்சி எடுக்க இரு வீட்டார்களுக்கும் இதில் சம்மதம் தெரிவிக்கிறார்கள். அன்றிரவு யாருக்கும் தெரியாமல் மருத்துவரை சென்று சந்திக்கிறாள் லட்சுமியின் தாய். அப்போதுதான் தெரிகிறது அந்த சித்த மருத்துவராக இருப்பவர் அவளின் கணவன் ரகுநாதன் என்பது. அவள் யாருக்கும் தெரியாமல் போனாலும் சுருட்டு சுந்தரம் பிள்ளை இதை பார்த்து விடுகிறார். அவர் மனதில் ஒரு திட்டம் உருவாகிறது.

    கல்யாணத்தன்று மணமேடையில் ராமு தயாராக இருக்க மணமகள் லட்சுமி மணமகளாக மேடைக்கு வர, ராமுவின் தந்தையார் ராஜாங்கத்தை லட்சுமியின் அத்தை [அவர் மகனை லட்சுமி கல்யாணம் செய்துக் கொள்ளவில்லை என்ற கோவத்தில்] தனியே அழைத்து செல்ல அங்கே யார் கண்ணிலும் படாமல் மறைந்திருக்கும் சுந்தரம் பிள்ளை லட்சுமியின் குடும்பத்தைப் பற்றிய அவதூறுகளை சொல்கிறார். முதலில் நம்ப மறுக்கும் ராஜாங்கம் அவர்களின் தொடர்ச்சியான போதனையினால் மனம் மாறி தாலி கட்டும் நேரம் கல்யாணத்தை நிறுத்தி விடுகிறார். கதிர்வேலுவும் மற்றவர்களும் எத்தனை எடுத்துச் சொல்லியும் மகனை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு போய் விடுகிறார். லட்சுமியும் அவள் தாயாரும் நில குலைந்து போகின்றனர்.

    அவர்களுக்கு ஆறுதல் சொல்லும் கதிர்வேலு லட்சுமிக்கு ஒரு நல்ல மாப்பிளையை தானே தேடிக் கொண்டு வருவதாக சொல்லிவிட்டு சென்னைக்கு போகிறான்.

    சென்னையில் திருமண தரகர் ஒருவரின் அலுவலகத்திற்கு செல்லும் கதிர்வேலு அங்கே இருக்கும் புகைப்படங்களை பார்க்க ஒரு வாலிபனின் படத்தை பார்த்து விவரங்கள் கேட்க தரகர் அந்த பையனின் வீட்டிற்கு கூட்டி செல்கிறார். பையனின் தாயார் மிகுந்த நல்ல முறையில் பழகுகிறார். ஆனால் பையன் ராஜதுரை பெரிய குடிகாரன். இந்த விஷயத்தை எப்படியேனும் மறைத்து திருமணம் செய்து வைக்க தரகரிடம் சொல்ல அவரும் அதை கதிர்வேலுவிடமிருந்து மறைத்து விடுகிறார். பேச்சு வாக்கில் பையன் சுந்தரம் பிள்ளைக்கு உறவு என்பதை தெரிந்துக் கொள்ளும் கதிர் கல்யாணத்தின் போது தன் வீட்டில்தான் தங்க வேண்டும் என்று வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறான்.

    அழகனூர் வரும் ராஜதுரையையும் தாயாரையும் தனியாக சந்திக்க சுந்தரம் பிள்ளை செய்யும் முயற்சியை எல்லாம் கதிரும் அவனது தந்தையும் தடுத்து விடுகின்றனர்.
    விடிந்தால் கல்யாணம். அதற்கான வேலைகளில் கதிர் ஈடுபட்டிருக்க மணமகன் தங்கியிருக்கும் வீட்டிற்கு அவனது தந்தை காவல் இருக்கிறார். விடிந்தவுடன் அவர்கள் வீட்டிற்கு செல்லும் கதிர் வீட்டை திறந்து பார்க்க அவர்கள் இல்லை. ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு அவர்கள் கிளம்பி போக அவர்களை தேடித் போகும் கதிரை பார்த்து பரிகாசம் செய்கிறார் சுந்தரம் பிள்ளை.

    மனம் உடைந்து போகும் தாய் தன் மகளின் மேல் கோவத்தைக் காட்ட மனம் வெறுத்து போகும் மகள் விபரீதமான முடிவு எடுக்க போகும் நேரம் தாய் தடுத்து விடுகிறாள். நடந்தையெல்லாம் அறிந்த அவள் கணவன் ரகுநாதன் உண்மையை சொல்லி விடுகிறேன் என்று சொல்ல தாய் தடுக்கிறாள். உண்மையை சொல்லக் கூடாது என்று சத்தியம் வாங்கி கொள்கிறாள். தாய் நடு இரவில் வீட்டை விட்டு வெளியே போவதை பார்க்கும் மகள் ஒரு நாள் இரவில் அவளை நிறுத்தி கேள்வி கேட்க தாய் அவமானத்தால் கூனி குறுகுகிறாள்.ஆனாலும் உண்மையை சொல்ல மறுக்கிறாள். உண்மை தெரிந்தால் கொலைக் குற்றவாளி என முத்திரை குத்தப்பட்டு போலீசார் தேடிக் கொண்டிருக்கும் தன் கணவனை எங்கே பிடித்து சென்று விடுவார்களோ என்ற பயம்.

    இந்நிலையில் சித்தா மருத்துவமனைக்கு கண்ணில் ஒரு பிரச்சனை என்று வந்து மருந்து ஊற்றிக் கொண்டு போகும் ஒருவர் மீது ரகுநாதனுக்கு சந்தேகம் தோன்றுகிறது. அவர் சந்தேகப்பட்டபடியே வந்தவர் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். தாங்கள் தேடிக் கொண்டிருக்கும் நபர் இவர்தான் என்று தெரிந்ததும் அவரை கைது செய்ய வரும் போலீஸ் அவரை காணாமல் தேடுகிறது. துரத்துகின்ற போலீசின் கையில் இருந்த தப்பிக்க தன் மனைவி வாழும் வீட்டிற்கே ரகு வர, லட்சுமியால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனைவிக்கும் மகளுக்கும் ஏற்படும் மோதலை காண சகிக்காமல் ரகுநாதன் வெளியேறுகிறார்.

    இதற்கிடையில் மனம் ஒடிந்து மீண்டும் சென்னைக்கு செல்லும் கதிர்வேலு அங்கே தன் பழைய நண்பன் பாலுவை சந்திக்கிறான். ஒரு வங்கியில் வேலை செய்யும் அவன் வீட்டிற்கு சென்று தாயை பார்க்கிறான். அவனது ஒரே தங்கை தாரா நோய்வாய்ப்பட்டு இப்போது நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் இருப்பதை பார்க்கும் கதிர் அதிர்ச்சிக்கு உள்ளாகிறான். பாலுவிடம் லட்சுமியை கல்யாணம் செய்துக் கொள்ள கதிர் வேண்டுகோள் விடுக்க தன் தங்கையின் நிலையை சுட்டிக் காட்டும் போதே கதிர் தானே அவன் தங்கைக்கு வாழ்வு கொடுப்பதாக வாக்களிக்கிறான். உடனே கல்யாண ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்படுகிறது.

    அனைத்து உண்மைகளும் சொல்லப்பட்டு விட்டதால் சுந்தரம் பிள்ளையின் சூழ்ச்சி பலிக்காமல் போகிறது. இப்போது பிரச்னை வேறு ரூபத்தில் வருகிறது. கல்யாணம் நடக்கப் போகும் நேரத்தில் போலீசார் வீட்டில் நுழைந்து வங்கியில் பணத்தை கையாடல் செய்தற்காக கைது செய்ய வந்திருப்பதாக கூற, கதிர்வேலு நிலை குலைந்து போகிறான். தான் திருடியது உண்மைதான் என்று ஒப்புக் கொள்ளும் பாலு அதை தங்கையின் திருமனதிற்காக செய்ததாக சொல்கிறான். நண்பனிடம் கதிர் நீ சொன்ன வாக்கை உன்னால் காப்பாற்ற முடியாமல் போனாலும் கூட நான் உனக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவேன் என உறுதி கூறுகிறான்.

    லட்சுமியின் கல்யாணத்திற்கு இத்தனை தடங்கல்கள் ஏற்பட்டதற்கு காரணம் தன் நண்பன் ராமுவும் அவன் தந்தை ராஜாங்கமும்தான் என கோவம் கொள்ளும் கதிர், அவனை இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு போகிறான். மகளின் கல்யாணம் நடக்கப் போவதை அறிந்து அதைக் காண மாறுவேடத்தில் வரும் ரகுநாதன் கல்யாணம் நின்று போனவுடன் அவரும் ராமுவின் வீட்டிற்கு செல்கிறார்.

    இங்கே தொடர்ச்சியாக நடந்த தடங்கல்களினால் மனம் வெறுத்து தன் அத்தை மகனையே திருமணம் செய்துக் கொள்ள லட்சுமி முடிவெடுக்கிறாள். மாமா மற்றும் உறவினர்கள் வேண்டாம் இந்த முடிவு என்று சொல்லியும் அவள் தன் நிலையில் உறுதியாக இருக்கிறாள். திருமண வேலைகள் இங்கே நடந்துக் கொண்டிருக்கின்றன.

    ராமுவை தேடி செல்லும் கதிர் அவனை தாக்க முயற்சிக்க, தான் இப்போதும் லட்சுமியை மணம் செய்துக் கொள்ள தயார் என்று ராமு சொல்ல அவனையும் கூட்டிக் கொண்டு கதிர் கிளம்ப ராமுவின் தந்தை ராஜாங்கம் தடுக்கிறார். அந்நேரம் அங்கே வரும் ரகுநாதன் தான் ராஜாங்கம் மற்றும் ஏகாம்பரம் இருவரின் பழைய நண்பன் என்பதையும் ராஜாங்கத்தின் தம்பியை கொன்ற ஆங்கிலேய சப் கலக்டரை தான் சுட்ட போது ஏற்பட்ட சப் கலக்டர்- ன் மரணம் காரணமாகதான் போலீஸ் தன்னை தேடுகிறது என்று தன்னிலை விளக்கம் கொடுக்க உண்மையை உணரும் ராஜாங்கம் இந்த திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறார். நால்வரும் அழகனூர் கிளம்ப ரகுநாதனை கைது செய்ய போலீஸ் இவர்களை சுற்றி வளைக்க ராமுவையும் ராஜாங்கத்தையும் முன்னால் அனுப்பி வைத்துவிட்டு கதிர்வேலுவும் ரகுநாதனும் பின்பக்க வழியாக வெளியேறும் நேரத்தில் போலீசார் சுடும் குண்டு ரகுநாதனின் காலில் படுகிறது. அவரை தூக்கி போட்டுக் கொண்டு கதிர்வேலு ஊருக்கு திரும்ப போலீஸ் துரத்துகிறது.

    அதே நேரத்தில் அங்கே லட்சுமியின் கல்யாண ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. ஊரில் வந்து ரகுநாதனோடு இறங்குகிறான் கதிர். துரத்தி வரும் போலீசார் மீண்டும் சுட மீண்டும் ரகுநாதனின் உடலில் குண்டு பாய்கிறது. ரகுநாதனை எப்படியேனும் மகளின் கல்யாணத்தை பார்க்க வைக்க வேண்டும் என்று துடிப்பில் கதிர்வேலு ஒரு பக்கம், அத்தை மகனோடு லட்சுமிக்கு கல்யாணம் நடத்தும் ஏற்பாடுகள் ஒரு பக்கம், ராமு மணமகனாக தன்னை தயாரித்துக் கொண்டு திருமண ஏற்பாடுகளில் மூழ்குவது ஒரு பக்கம், மகளின் கல்யாணத்தை பார்ப்பதற்காக உயிரை கையில் பிடித்துக் கொண்டே வரும் ரகுநாதன், அவர் எப்படியும் கல்யாணத்திற்கு வருவார் என்று கைது செய்ய காத்திருக்கும் போலீஸ் - இந்த சூழலில் என்ன நடந்தது, லட்சுமி கல்யாணம் நடந்ததா என்பதற்கு வெள்ளித்திரையில் விடை காண்க.

    (தொடரும்)

    அன்புடன்

  6. #1005
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    லட்சுமி கல்யாணம் - Part II

    கவியரசர் கண்ணதாசனின் அண்ணனும் தயாரிப்பாளருமான AL. ஸ்ரீனிவாசன் தயாரித்த படம்.

    நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றி என்ன சொல்வது? சாதாரணமான கதாபாத்திரங்கள் கூட அவர் கை பட்டால் மின்னும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். பாசத்தையும் மனித நேயத்தையும் அடிப்படையாக வைத்து வடிவமைக்கப்பட்ட அவரது எந்த ரோலும் சோடை போனதில்லை. இந்த கதிர்வேலுவும் அப்படித்தான். கதிர்வேலு என்ற பெயரே ஒரு புதுமை. இதற்கு முன்போ அல்லது இதற்கு பின்போ இது போன்ற ஒரு பெயர் தாங்கிய காரக்டர் அவர் செய்ததாக நினைவில்லை.

    அந்த காலக்கட்டத்தில் [60 -70 களில்] பொது விழாக்களில் எப்படி தோன்றுவாரோ அது போன்ற ஜிப்பா குர்தா உடையில் சில காட்சிகளில் வருவார். மற்றப்படி அணியும் உடை சாதாரண பாண்ட்-ஷர்ட், லைட் மேக்கப். ஒரிஜினல் சுருண்ட முடி. ஜோடி கிடையாது.

    அவரின் அறிமுக காட்சியிலே லட்சுமியை எப்படி ஒரு தங்கையாக பாவிக்கிறார் என்பதை உணர்த்தி விடுவார். நகைச்சுவையாக நக்கல் பண்ணுவதில் நடிகர் திலகத்தை மிஞ்ச ஆளே கிடையாது. கிராம முனுஸிப் பதவியை பயன்படுத்திக் கொண்டு சிரித்த முகம் காட்டும் நரி குணமுள்ள நம்பியாரை அவர் கிண்டலாக வெறுப்பேற்றுவது எல்லாமே டைமிங்காக இருக்கும். தன்னை பற்றி ஊர் பெண்கள் எல்லாம் புகழ்ந்து பேசுகிறார்கள் என்று நம்பியார் சொல்லும் போது அங்கே ஒரு பெண்மணி விளக்குமாறு வாங்கிக் கொண்டு வர உங்களுக்காக இல்லேங்க, அவங்க வீட்டிற்கு வாங்கிட்டு போறாங்க என்பது, பிறந்த நாள் விழாவில் இவர்தான் கிராமத்திற்கே பெரிய ஆள் என்பது போல் இவர் ஒருத்தர் போதும் என்பது, சொந்தக்கார மாப்பிள்ளையிடம் எப்படியாவது லட்சுமியைப் பற்றி அவதூறு சொல்ல வேண்டும் என்று சுத்தி சுத்தி வரும் நம்பியாரை அவர் டீல் செய்யும் அழகே அழகு.

    இது இப்படியென்றால் ஒவ்வொரு முறை கல்யாணம் நடத்த முயற்சிக்கும் போது ஏற்படும் தடைகள், அப்போது அவரின் உணர்வுகள்!

    நம்பியாரின் பேச்சை கேட்டு கல்யாணத்தை நிறுத்தும் வி.எஸ். ராகவனிடம் அவர் பேசம் தொனி மாறிக் கொண்டே வரும். முதலில் சாதாரணமாக நியாயத்தை எடுத்துக் கூறும் அவர் ராகவனின் பிடிவாதத்தை பார்த்துவிட்டு கெஞ்சலும் கோபமுமாக பேசுவதை சொல்வதா, அதையும் மீறி ராகவன் வெளியே சென்று விட நீ பேசினதால்தான் அவர்கள் கிளம்பி போகிறார்கள் என்று சௌகார் சொன்னதும் ஓடிப் போய் அவர்களை கெஞ்சி காலில் விழ முயற்சிப்பதை சொல்வதா, ஒரேடியாக மறுத்துவிட்டு அவர்கள் காரில் ஏறி சென்றவுடன் உச்சக்கட்ட ஆத்திரத்தில் அவர்களை சபிப்பதும் மண்ணை வாரி தூற்றுவதையும் சொல்வதா, பின்னியிருப்பார் பின்னி.

    இதற்கு நேர்மாறாக இரண்டாவது முறை எஸ்.வி. ராமதாஸ் தன் தாயோடு கல்யாணத்தன்று காலையில் லெட்டர் எழுதி வைத்துவிட்டு கிளம்பி போய் விட, லட்சுமி வீட்டிற்கு விஷயம் சொல்ல வரும் அந்தக் காட்சி! இவர் மாப்பிளையுடன் வரப்போகிறார் என மகிழ்ச்சியாய் காத்திருக்கும் சௌகார், தலை தாழ்ந்து கலங்கிய முகத்துடன் வரும் நடிகர் திலகத்தைப் பார்த்தவுடன் என்ன விஷயம் என்று பார்வையாலே கேள்வி கேட்க வசனமே இல்லாமல் கண்ணீர் நிறைந்திருக்கும் கண்களையும் துடிக்கும் உதடுகளையும் முகபாவத்தையும் மட்டுமே வைத்து நடந்ததை வெளிப்படுத்தும் நடிகர் திலகம், உள்ளிருந்து வரும் லட்சுமி, அவளைப் பார்த்ததும் அவள் அருகில் நெருங்கி அவளிடமும் வசனமே பேசாமல் கண் அசைவிலேயே விவரம் சொல்லும் நடிகர் திலகம், பொங்கி வரும் அழுகையை கட்டுப்படுத்த தவிக்கும் லட்சுமி, இனி என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் அங்கிருந்து விலகி அப்போதும் அந்த கண்கள் மட்டுமே தன் இயலாமையை வெளிப்படுத்த வீட்டை விட்டு வெளியேறும் காட்சி, நடிகர் திலகத்தின் நடிப்பு வரலாற்றில் குறிப்பிட வேண்டிய ஒன்று. வசனமே இல்லாமல் இதற்கு முன்பும் நவராத்திரி கிளைமாக்ஸ் காட்சியில் நடித்திருந்தாலும் கூட இது சிறப்பு வாய்ந்த ஒன்று என்பதில் சந்தேகமில்லை.

    அவரின் இயல்பான நடிப்பிற்கு உதாரணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம். நண்பனின் வீதியில் வைத்து அவன் தங்கையை பற்றியும் அவளின் வெட்கத்துடன் கூடிய நடையைப் பற்றியும் விசாரிக்க உள் அறையிலிருந்து சக்கர நாற்காலியில் வெளியே வரும் அந்தப் பெண்ணை பார்த்தவுடன் அவர் வெளிப்படுத்தும் உடல் மொழி! நண்பனும் தாயும் சினிமா பாணியில் முகம் திருப்பி அழ, அங்கேயும் எந்த வசனமும் இல்லாமல் நண்பனின் தாயிடம் என்ன இது என்பது போல் கையை மட்டும் நீட்டி கேட்கும் இடம் இருக்கிறதே, சூப்பர்!

    முதல் இரண்டு திருமண முயற்சிகளிலும் இரண்டு வெவ்வேறு உணர்வுகளை காட்டிய நடிகர் திலகம், வி.கோபாலகிருஷ்ணனை போலீஸ் கைது செய்து அழைத்து செல்லும் போது எனக்கு கொடுத்த வாக்கை நீ காப்பாத்தலேனாலும் நான் உனக்கு கொடுத்த வாக்கை காப்பாத்துவேன் என்று அனுப்பி வைக்கும் காட்சியில் இன்னொரு முகம் தெரியும்.

    கதாபாத்திரமாக அவர் கோவப்படும்போது எப்போதுமே அது பார்வையாளனுக்கு பளிச்சென்று மனதில் பதியும்! இதிலும் அப்படியே! கல்யாணத்தை நடத்த விடாமல் தடை போடும் நம்பியாரை கொல்ல அரிவாளுடன் கிளம்பும் ஆவேசம், நம்பியாரின் ஆட்களுடன் சிலம்பு சண்டை போடுவது, அனைத்து மனிதர்கள் மீதும் கோவப்பட்டு மனிதனே இங்கே இல்லையே என்று யாரடா மனிதன் இங்கே என்று பாட்டாய் வெடிப்பது, எத்தனை முயற்சி எடுத்தும் பலன் இல்லையே எனும்போது விரக்தியில் கோயில் சன்னதியில் ஆத்திரப்படுவது இவைகளின் மூலம் ரௌத்திர பாவத்தை தரிசிக்கலாம் என்றால் ஜாலியான சிவாஜியை போட்டாளே பாடலிலும் தங்கத் தேரோடும் வீதியிலே பாடலிலும் பார்க்கலாம்.

    படத்தில் மிகுந்த இளமையாக இருப்பார் நடிகர் திலகம். மேக்கப் இல்லாமலே வசீகரிப்பார்.போலீஸ் குண்டடிப்பட்டு மயங்கி கிடக்கும் வெயிட்டான மேஜரை தன் தோள் மேல் தூக்கி போட்டுக் கொண்டு அண்டர் கிரௌண்ட் tunnel-இல் நடப்பது அவரது உடல் வலிமையை பறைசாற்றும்.

    நடிகர் திலகத்திற்கு அடுத்தபடியாக முக்கியமான பாத்திரம் சௌகார். பொதுவாகவே சௌகார் பற்றி அழுது வடிந்து சோகத்தை பிழிவார் என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஆனால் இந்தப் படத்தில் அப்படிபட்ட சோகத்திற்கு ஸ்கோப் இருந்தும் அந்த trap-ல் சிக்கி விடாமல், கணவன் இல்லாமல் பலபேர் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகியும் கூட தைரியத்தை கைவிடாத ஒரு பெண்மணியின் குணாதிசயத்தை நன்றாக வெளிக் கொணர்ந்திருப்பார். அழுகை தவிர்த்து அவர் காட்டும் அந்த தைரியம் அதிலும் மகளே தன்னை சந்தேகப்படும் போது அதை சமாளிக்கும் திறன் எல்லாமே சௌகார் எவ்வளவு தேர்ந்த நடிகை என்பதை காட்டும்.

    வெண்ணிற ஆடை நிர்மலா, கதையின் நாயகியாக வருவார். குறைவின்றி செய்திருப்பார். சுருட்டு சுந்தரம் பிள்ளையாக நம்பியார். இதில் வித்தியாச வில்லன். வழக்கம் போல் கண்ணை உருட்டி உள்ளங்கையை பிசையும் வில்லத்தனம் இல்லாமல் வீண் பொல்லாப்பு மற்றும் வம்பு பேச்சின் மூலமாக வில்லத்தனம் செய்யும் ரோல். அதிலும் குறிப்பாக ஒரு காட்சி சொல்லவேண்டும். வரும் மாப்பிள்ளைகள் எல்லாம் இவர் பேச்சை கேட்டு திரும்பி போய் விட நடிகர் திலகத்தின் நண்பன் பாலுவாக வரும் வி.கோபாலகிருஷ்ணன் இவரை போய்யா என்று சொல்லிவிட இடிந்து போய் உட்கார்ந்திருப்பார். கல்யாணத்தன்று அவரை கைது செய்து விட்டார்கள் என்ற செய்தி வந்தவுடன் அவர் துள்ளிக் குதிக்கும் காட்சியில் நம்பியார் சிறப்பாக செய்திருப்பார்.

    முதலில் வந்து பெண் பார்க்கும் மாப்பிள்ளையாகவும் பிறகு இறுதியில் லட்சுமியை திருமணம் செய்துக் கொள்பவராக பாலாஜி, அவரின் தந்தையாக வி.எஸ்.ராகவன், சிவாஜியின் தந்தையாக வி.கே.ஆர். அவரவர் பாணி நடிப்பை வழங்கியிருப்பார்கள். இந்த அவரவர் பாணி என்று சொல்லும்போது லட்சுமியின் அத்தையாக வரும் சி.கே சரஸ்வதியையும் அவர் கணவனாக வரும் ஏ.கருணாநிதியையும் சேர்த்துக் கொள்ளலாம். லட்சுமியின் முறைப் பையனாக சோ. அவர் துக்ளக் ஆரம்பிப்பதற்கு முன் வந்த படம் என்பதால் அரசியல் வசனங்கள் இல்லை. கதையின் முக்கிய திருப்பத்திற்கு காரணமாக வரும் லட்சுமியின் தந்தை ரகுநாதனாக மேஜர்.

    (தொடரும்)

    அன்புடன்

  7. #1006
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    லட்சுமி கல்யாணம் - Part III

    ஏ.எல்.ஸ்ரீனிவாசனை பொறுத்தவரை படத்தயாரிப்பாளர் என்ற பெயர் மட்டுமே. ஒரு படத்தை எப்படி திட்டமிட்டு தயாரிப்பது, அதை குறிப்பிட்ட காலத்தில் எப்படி வெளியிடுவது போன்றவை அவருக்கு கை வராத கலை. ஜெமினி, சிவகுமார் ஆகியோரை வைத்து ஏ.பி.என் இயக்கத்தில் கந்த லீலா என்ற பெயரில் படம் தயாரித்தார். அது இடையில் வைத்து நின்று போனது. அந்நேரம் வெளியான திருவிளையாடல் படத்தின் இமாலய வெற்றியை பார்த்த விநியோகஸ்தர்கள் நடிகர் திலகத்தை இந்தப் படத்தில் கொண்டு வர வேண்டும் என்று பிரஷர் கொடுத்தனர். ஏ.எல்.எஸ் மற்றும் ஏ.பி.என். இருவரின் வேண்டுகோளை ஏற்று நடிகர் திலகம் வீரபாகு ரோலை ஏற்றதும் படம் கந்தன் கருணை என்று பெயர் மாற்றப்பட்டு வெளியாகி பெரிய வெற்றியை பெற்றதும் நமக்கு தெரிந்ததே. அது 1967 ஜனவரியில் வெளியானது. அப்போதே ஆரம்பிக்கப்பட்ட படம்தான் லட்சுமி கல்யாணம். பிசியான ஆர்டிஸ்ட்களை வைத்து படம் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. அவர்களின் கால்ஷீட் கிளாஷ் ஆக வழக்கம் போல் வெளியிட தாமதமானது.

    கதை வசனம் பாடல்கள் கண்ணதாசன். சிவாஜி வி.கோபாலகிருஷ்ணனிடம் அவர் தங்கையை திருமணம் செய்துக் கொள்கிறேன் என்று சொல்லும் இடத்திலும், நம்பியாரை வெட்டுவதற்காக அரிவாளுடன் கிளம்பும் சிவாஜியை நிர்மலா தடுக்கும் காட்சியிலும் மட்டும் இடம் பெறும் தூய தமிழ் வசன பாணியை தவிர்த்து விட்டால் வசனங்கள் இயல்பான தன்மையுடன் எழுதப்பட்டிருக்கும். கிழவங்கதானே இப்போதெல்லாம் லவ் பண்றாங்க போன்ற சில கிண்டல் வசனங்களும் உண்டு.

    ஒளிப்பதிவு இயக்கம் GOr நாதன். ஒளிப்பதிவு ஓகே. ஆனால இயக்குனர் பொறுப்பை அவரிடம் ஏன் கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை. படத்தில் குறை என்று சொன்னால் படத்தின் மையப் பகுதியான மேஜர் எதற்காக தலைமறைவு வாழ்க்கை நடத்துகிறார் ஏன் அவரை போலீஸ் தேடுகிறது, அவர் யாரை எதற்காக கொலை செய்தார் என்பதை இன்னும் கொஞ்சம் தெளிவாக அனைவருக்கும் புரியும்படியாக சொல்லியிருக்கலாம். திரைக்கதையில் ஏற்பட்ட பிழையா இல்லை கால்ஷீட் பிரச்சனைகளினால் எடுக்க முடியாமல் போய் விட்டதா என்று தெரியவில்லை. அது போல நம்பியாரின் ஆட்களுடன் நடிகர் திலகம் போடும் சிலம்பு சண்டை காட்சியையும் இன்னும் சற்று நன்றாக எடுத்திருக்கலாம்.

    கவியரசரின் சொந்தப் படம் எனும் போது மெல்லிசை மன்னர் விட்டு விடுவாரா?

    1. போட்டாளே! போட்டாளே! உன்னையும் ஒருத்தி பெற்று போட்டாளே! - சோவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் வரும் பாடல். சிவாஜி, சோ மற்றும் நிர்மலாவிற்கு முறையே டி.எம்.எஸ், ஏ.எல்.ராகவன் மற்றும் ஈஸ்வரி பாடியிருப்பார்கள். கேரக்டரின் தன்மையை நடிகர் திலகம் எந்த அளவிற்கு உள்வாங்குவார் என்பதற்கு இந்தப் பாடலில் வரும் ஒரு ஷாட் உதாரணம். நிர்மலாவை பார்த்ததும் பாலாஜிக்கு பிடித்து விடுகிறது. இதை நடிகர் திலகமும் உணர்ந்து விடுவார். அவருக்கு சந்தோஷம். அதே நேரத்தில் இந்தப் பாடலின் ஒரு சரணத்தின் இடையில் நிர்மலா அந்த ஹாலில் தனியாக ஒரு இடத்தில் போய் ஆட, ஆசையுடன் பாலாஜி அங்கே சென்று நிர்மலாவின் கைப்பற்ற முயற்சி செய்ய, இதை கவனித்து விடும் நடிகர் திலகம் இயல்பாக இருவருக்கு இடையில் நுழைந்து ஒரு அண்ணனின் நிலையிலிருந்து நிர்மலாவின் கையை தான் பற்றி பாலாஜியை ஒரு லுக் விட்டுக் கொண்டே ஸ்டெப் போட்டு போவார். இதை எந்த இயக்குனரும் அவருக்கு சொல்லித் தராத நுணுக்கம். இதே பாடலின் இன்னொரு சரணத்தில் முட்டாளின் மூளையிலே முந்நூறு பூ மலரும் என்ற வரியை கவனித்து கேளுங்கள், சிவாஜிதானே பாடியிருப்பார். டி.எம்.எஸ். என்று தவறுதலாக போட்டு விட்டார்களோ! படம் வெளி வருவதற்கு முன் இறுதி சரணத்தில் வரும்

    கண்ணா உன் ஆட்சியிலே

    கல்யாண சீசன் வரும்


    என்ற வரியை பற்றி அது கண்ணாவா இல்லை அண்ணாவா என்று ரசிகர்கள் இடையில் ஒரு விவாதம் இருந்தது. காரணம் படம் வெளியாகும் போது அண்ணாவின் ஆட்சி நடந்துக் கொண்டிருந்த நேரம்.

    2. ராமன் எத்தனை ராமனடி - படத்தின் மிகப் பிரபலமான பாடல்- சுசீலாவின் தேன் குரலில்.

    பாலாஜி பெண் பார்க்க வரும்போது நிர்மலா சிதார் வாசித்துக் கொண்டே பாடுவதாக அமைந்திருக்கும் கண்ணதாசன் ராமன்களை வைத்து விளையாடியிருப்பார். பாடலின் நடுவில் திரையில் ஒரு பகுதியில் [வேறு சில நடிகர்களை வைத்து எடுத்த] ராமாயணக் காட்சிகள் இடம் பெறும். நிர்மலாவின் நடனமும் உண்டு. பாடல் முடிந்தது கூட தெரியாமல் அனைவரும் மெய்மறந்து இருப்பார்கள். அது பாடல் கேட்பவர்களுக்கும் பொருந்தும் என சொல்லலாம்.

    3. யாரடா மனிதன் இங்கே - நடிகர் திலகத்தின் signature பாடல். டி.எம்.எஸ் உணர்வு பூர்வமாய் பாடியிருப்பார். ஒரு ஆதரவற்ற பெண்ணின் வாழ்க்கையில் விளையாடுகிறார்களே என்ற தார்மீக கோவம் கொப்பளிக்கும் பாடல். வரிகள் சாட்டையடியாய் விழும்.

    நாயும் நரியும் புலியும் பாம்பும் வாழும் பூமியிலே

    பாயும் மிருகம் தூங்கும் தெய்வம் நடுவே மனிதனடா

    எங்கோ ஒருவன் இருந்தால் அவனை உலகம் வணங்குமடா!

    [மகாத்மா நடந்தது வரும் காட்சி இடம் பெறும்]

    இந்தப் பாடலைதான் தன் படத்தில் வரும் பாடலைப் போல் இருப்பதாக கேள்விப்பட்டு அதை தனக்கு போட்டுக் காட்ட வேண்டும் என்று மெல்லிசை மன்னர் நிர்பந்தம் செய்யப்பட்டார். அதற்கு கண்ணதாசன் மறுக்க, எம்.எஸ்,வி அவருக்கு தெரியாமல் எடுத்துக் கொண்டு போய் போட்டு காண்பித்தார் என்று சொல்லுவார்கள்.

    4. பிருந்தாவனத்திற்கு வருகின்றேன் - மீண்டும் சுசீலாவின் தேன் குரல்.

    இரண்டாவது முறையும் திருமணம் தடைபட, சௌகார் கையாகலாத கோவத்தில் நிர்மலாவை ராசியற்றவள் என்ற அர்த்தத்தில் திட்டி விட, கண்ணனிடம் சென்று நிர்மலா நியாயம் கேட்கும் பாடல். கண்ணதாசனின் பேனாவிற்கு சரியான தீனி.

    5. வெட்டவெளி பொட்டலிலே பட்ட மரம் ஒன்று - டி.எம்.எஸ்.

    நடிகர் திலகம் விரக்தியில் பாடும் பாடல். இங்கேயும் சமுதாய சாடல்கள் இருக்கும். கோவிலின் முன்னால் நின்று நடிகர் திலகம் பாடுவதாக வரும் வரிகள் பளீரென்று இருக்கும்.

    தெய்வம் ஆளவில்லையென்றால்

    பேய்கள் ஆட்சி செய்யும்ம்மா!


    என்ற வரிகளின் போது 42 வருடங்களுக்கு முன்பு கேட்ட கைதட்டல் இன்றும் காதில் ஒலிக்கிறது.[ஆனால் தமிழகத்தின் நிலைதான் மாறவில்லை]

    6. தங்க தேரோடும் வீதியிலே ஊர்கோலம் போகுதடா- டி.எம்.எஸ்-சீர்காழியார்.

    கல்யாண மாப்பிள்ளையாக வி. கோபாலகிருஷ்ணனை வைத்து ஊர்வலம் வரும்போது நம்பியாரையும், சி.கே.சரஸ்வதியையும் கிண்டல் செய்து பாடும் பாடல். நடிகர் திலகமும் வி.கே.ஆரும் மிகுந்த உற்சாகத்துடன் ஆடிப் பாட அது நம்மையும் தொற்றிக் கொள்ளும்.

    இப்போது பட ரிலீசிற்கு வருவோம். முதலில் சொன்னது போல படம் எப்போதெல்லாம் combination கால்ஷீட் கிடைத்ததோ அப்போதெல்லாம் எடுத்த படம். ஆகவே இன்ன தேதியில் ரிலீஸ் ஆகும் என்று சொல்ல முடியாத சூழல் [ஒழுங்காய் எடுத்த படம் மட்டும் பார்த்து ரிலீஸ் பண்ணினார்களா என்ற கேள்வி எழுவது காதில் விழுகிறது]. 1968 தீபாவளிக்கு [அக்டோபர் 21] வெளியிட முயற்சி செய்தனர். ஆனால் எங்க ஊர் ராஜா ஏற்கனவே தீபாவளிக்கு கமிட் ஆகியிருந்தது. ஏ.விஎம் வேறு உயர்ந்த மனிதன் நவம்பர் 29 ரிலீஸ் என்று அறிவித்து விட்டார்கள்.இனியும் காத்திருந்தால் பொங்கல் ஆகி விடும். அப்போதும் படங்கள் ரிலீசிற்கு இருக்கின்றன. சரி பரவாயில்லை என்று துணிந்து நவம்பர் 15 அன்று ரிலீஸ் செய்து விட்டார்கள். இங்கேதான் கவனிக்க வேண்டும்.

    1968 ஜூலை 27 அன்று வெளியான தில்லானா அப்போதும் பிரமாதமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 1968 அக்டோபர் 21 தீபாவளியன்று எங்க ஊர் ராஜா வெளியாகி வெற்றிக் கொடி கட்டுகிறது. அந்த படம் வெளியான 24 நாட்களில் லட்சுமி கல்யாணம் நவம்பர் 15 அன்று வெளியாகிறது. அது வெளியான 14 நாட்களில் உயர்ந்த மனிதன் வெளியாகிறது, ஒரே நேரத்தில் நான்கு நடிகர் திலகத்தின் படங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது. எங்கள் மதுரையை எடுத்துக் கொண்டால் சிந்தாமணியில் தில்லானா, நியூசினிமாவில் எங்க ஊர் ராஜா, தேவியில் லட்சுமி கல்யாணம், சென்ட்ரலில் உயர்ந்த மனிதன் என ஓடிக் கொண்டிருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை சாந்தியில் தில்லானா, சித்ராவில் எங்க ஊர் ராஜா[சித்ரா தவிரவும் இரண்டு அரங்குகள்], கிரௌன், புவனேஸ்வரியில் லட்சுமி கல்யாணம் (மற்ற இரண்டு தியேட்டர்கள் கிருஷ்ணவேணி காமதேனு? மவுண்ட் ரோடு தியேட்டர் இல்லை என்று நினைவு], வெலிங்டன்-ல் உயர்ந்த மனிதன் [வெலிங்டன் தவிரவும் இரண்டு அரங்குகள்] ஓடிக் கொண்டிருக்கின்றன. மெயின் தியட்டர்களிலிருந்து தில்லானா மாறினாலும் கூட ஷிப்டிங் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. மதுரையில் சிந்தாமணியில் வெற்றிகரமாக 132 நாட்கள் ஓடிய பிறகு வெள்ளைக்கண்ணு அரங்கத்திற்கு மாற்றப்பட்டு சக்கைப் போடு போட்டது. இவை எல்லாம் போதாதென்று உயர்ந்த மனிதன் ஒரு மாதத்தை நிறைவு செய்யும் போது அடுத்த வெளியீடாக 1969 ஜனவரி 1 அன்று அன்பளிப்பு வெளியாகிறது.

    லட்சுமி கல்யாணம் கமர்ஷியல் படம் இல்லை. பொழுது போக்கு படம் இல்லை. கலர் இல்லை. கருப்பு வெள்ளை படம். டூயட் இல்லை. ஏன், ஜோடியே இல்லை. சராசரி ரசிகனை தியேட்டருக்கு வரவழைக்கும் எந்த அம்சங்களும் இல்லை. இத்தனை இல்லைகளையும் தாண்டி, போட்டிக்கு நின்ற நடிகர் திலகத்தின் படங்களையும் சமாளித்து இந்த படம் பெற்ற வெற்றி இருக்கிறதே, அது சாதனை. அதுதான் சாதனை.

    தில்லானா -132 நாட்கள்

    எங்க ஊர் ராஜா - 85 நாட்கள்

    உயர்ந்த மனிதன் - 105 நாட்கள்

    லட்சுமி கல்யாணம் - 60 நாட்கள்
    .

    ஆம் மதுரை ஸ்ரீதேவியிலும், கோவையிலும் 60 நாட்கள். இந்தப்படமே எதிர்பாராமல் வெளியானதால் பல ஊர்களிலும் தியேட்டர்கள் பொங்கலுக்கு புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தன. ஆகவே மதுரையில் பொங்கலுக்கு வேறு படத்திற்கு மாறிக் கொடுக்க வேண்டிய சூழல்.

    ஆறு மாதங்களுக்கு ஒரு படம் வெளியிட்டு ஒட்டப்பட்டவை அல்ல சிவாஜி படங்கள். இது போன்ற எதிர்மறையான சூழலிலும் தனது படங்களே தனது படங்களுக்கு போட்டியாக வரும் நேரத்திலும் வெற்றிகளை அடைந்தவர் நடிகர் திலகம்.

    சிவாஜி ரசிகர்கள் எப்போதும் தலை நிமிர்த்தி நெஞ்சுயர்த்தி சொல்வோம். 80 வருட தமிழ் சினிமா சரித்திரத்தில் நடிப்புக் கலையிலும் சரி, பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளிலும் சரி வரலாறு படைத்த ஒரே நடிகன் அன்றும் இன்றும் என்றும் நடிகர் திலகம் ஒருவரே.

    இந்தப்படத்தைப் பற்றி நடிகர் திலகமே தனது ஒரு வரி விமர்சனத்தில் "இவ்வளவு பெரிய ரசிப்பை நானே எதிர்பார்க்கவில்லை" என்று சொல்லியிருக்கிறார் என்றால் படத்திற்கு கிடைத்த வரவேற்பை நாம் புரிந்துக் கொள்ளலாம்.

    அன்புடன்

    This is a film close to Raakesh and this is being written to make him visit here often rather than the occasional peep ins. Thanks to Radhakrishnan and Senthil also for bringing this movie for discussion. And Thanks to Swami for providing accurate data.

  8. #1007
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    டியர் முரளி,

    'லட்சுமி கல்யாணம்' திரைக்காவியத்தில் திறனாய்வு மிக மிக அருமை. படித்துக் கொண்டிருக்கும்போதே, படிப்பவர்களை அப்படியே பெயர்த்தெடுத்துக் கொண்டுபோய், திரையரங்கின் நடு இருக்கையில் உட்காரவைத்துவிடும் திறன் உங்களுக்கு கைவந்த கலை. இந்த ஆய்வும் அப்படியே.

    எல்லா ரோல்களுக்கும் பிரபலமான ஆட்களையே போட்டதால் ஏகப்பட்ட தாமதங்கள். யாருடைய கால்ஷீட் எப்போது கிடைக்கிறதோ அப்போதெல்லாம் படப்பிடிப்பை வைத்துக்கொள்வார்களாம். நீங்கள் சொன்னதுபோல தயாரிப்பாளர், இயக்குனர் இருவருமே படப்பிடிப்பு நுணுக்கங்களில் சற்று குறைவானவர்கள். அதனால் படம் ரொம்பவே சீரியஸான படமாகத்தோற்றமளிக்கும்.

    தான் நடித்த பல்வேறு படங்களைப்பற்றியும் ஒரு தொலைக்காட்சியின் தொடர்நிகழ்ச்சியில் சொல்லிவந்த வெண்ணிற ஆடை நிர்மலா, 'லட்சுமி கல்யாணம்' பற்றியும் சொல்லியிருந்தார். (நடிகர்திலகத்துடன் நடித்த எங்கமாமா, பாபு, தங்கைக்காக படங்கள் பற்றியும் விவரமாகச் சொல்லியவர், மக்கள் திலகத்துடனும் மற்றவர்களுடன் நடித்த படங்கள் பற்றியும் சொன்னார். அவற்றில் ஜெய் படம் அதிகம் இருந்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. 'சிவகாமியின் செல்வன்' படத்தில் தான் நடிக்கவிருந்த ரோலில்தான் பின்னர் லதா நடித்திருந்தார் என்ற புதிய செய்தியையும் சொன்னார்).

    லட்சுமி கல்யாணம் பற்றிச்சொன்னபோது, அப்படம் வெகு நாட்கள் தயாரிப்பில் இருந்தது என்றும், எப்போது ஷூட்டிங் போனாலும் தன்னைப்பெண் பார்க்கும் காட்சியே எடுத்தார்கள் என்பதால் எப்போதும் கல்யாணப்பெண் கெட்டப்பிலேயே இருந்த தன்னை, மற்ற பட ஷூட்டிங் களுக்கு வரும் கே.ஆர்.விஜயா போன்றவர்கள் 'நீ என்ன நித்திய கல்யாணியா?' என்று கிண்டல் செய்வார்கள் என்று சொன்னார். ஏ.எல்.எஸ்ஸின் சொந்த ஸ்டுடியோவான 'சாரதா' வில் படப்பிடிப்பு நடந்ததால், தாமதம் பற்றிக் கவலைப்படாமல் மெல்ல எடுத்தார்கள் என்றும், இயக்குனர் ஒரு தேர்ந்த ஒளிப்பதிவாளராதலால் கேமரா விஷயங்களில்தான் அதிக கவனம் செலுத்தினார் என்றும் சொன்னார். (நீங்களும் அப்படியே சொல்லியிருக்கிறீர்கள்).

    மேஜரும் சௌகாரும் சந்திக்கும் இடங்களில் கொஞ்சம் பொறுமையை சோதிக்கும் எனப்து உண்மையே. அதுபோல 'போட்டாளே' பாடலுக்கு பதிலாக இன்னும் சற்று நல்ல பாடலை கவியரசரும் மெல்லிசை மன்னரும் போட்டிருக்கலாம்.

    'பிருந்தாவனத்துக்கு வருகின்றேன்' பாடல் மனதை அள்ளக்கூடிய மெட்டு மற்றும் வார்த்தைகள். அதில் வரும் 'கங்கையின் வெள்ளம் தண்ணீரோ, இல்லை கன்னியர் விடும் கண்ணீரோ' போன்ற வரிகள் கண்னதாசனின் முத்திரை.

    அந்த ஆண்டில் நடிகர்திலகத்தின் எட்டு படங்கள் வெளியாயின. திருமால் பெருமை, அரிச்சந்திரா, கலாட்டா கல்யாணம், என் தம்பி, தில்லானா, எங்க ஊர் ராஜா, லட்சுமி கல்யாணம், உயர்ந்த மனிதன் ஆகியன (ஒருநாள் முந்தியிருந்தால் அன்பளிப்புடன் ஒன்பதாகியிருக்கும். முந்தைய ஆண்டில் ஏற்பட்ட 'அசம்பாவிதத்தில்' சிக்கி தாமதித்ததால் இந்த ஆண்டில் மட்டும் அதிசயமாக 'அந்தப்பக்கமும்' எட்டு படங்கள். இடைவெளியின்றி வெளியிட்டால் வெற்றி வாய்ப்புக்கள் என்ன ஆகும் என்பதை இருபக்கமும் புரிய வைத்த ஆண்டு இது. புரிந்துகொண்ட அந்தப்பக்கம் சுதாரித்துக் கொண்டது. புரியாத இந்தப்பக்கம் வழக்கம்போல புற்றீசல்களாகப் படங்கள். என்னதான் நல்ல படங்கள் என்றபோதிலும், தொடர்ந்து 'ஒரே சமயத்தில் நான்கு புதுப்படங்கள்' ஓட்டத்தில் இருந்தால் எவ்வளவு பாதிக்கும் என்பதை கடைசி வரை புரிந்துகொள்ளவேயில்லை நம்மவர்கள்).

    அதிகம் பேசப்படாத 'லட்சுமி கல்யாணம்' படத்தைத் தெரிவு செய்து, அலசி ஆரய்ந்து, நுண்ணிய பல விஷயங்களை துல்லியமாகத் தெரிவித்தமைக்கு நன்றி. குறிப்பாக, ராமதாஸ் ஓடிவிட்ட விஷயத்தை வார்த்தைகளினால் தெரிவிக்க முடியாமல், மௌன மொழியிலேயே உணர்த்தும் இடம்.

    வாழ்த்துக்கள்.... பாராட்டுக்கள்.... நன்றிகள்.....

  9. #1008
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas
    3. யாரடா மனிதன் இங்கே - நடிகர் திலகத்தின் signature பாடல். டி.எம்.எஸ் உணர்வு பூர்வமாய் பாடியிருப்பார். ஒரு ஆதரவற்ற பெண்ணின் வாழ்க்கையில் விளையாடுகிறார்களே என்ற தார்மீக கோவம் கொப்பளிக்கும் பாடல். வரிகள் சாட்டையடியாய் விழும்.

    நாயும் நரியும் புலியும் பாம்பும் வாழும் பூமியிலே

    பாயும் மிருகம் தூங்கும் தெய்வம் நடுவே மனிதனடா

    எங்கோ ஒருவன் இருந்தால் அவனை உலகம் வணங்குமடா!

    [மகாத்மா நடந்தது வரும் காட்சி இடம் பெறும்]

    இந்தப் பாடலைதான் தன் படத்தில் வரும் பாடலைப் போல் இருப்பதாக கேள்விப்பட்டு அதை தனக்கு போட்டுக் காட்ட வேண்டும் என்று மெல்லிசை மன்னர் நிர்பந்தம் செய்யப்பட்டார். அதற்கு கண்ணதாசன் மறுக்க, எம்.எஸ்,வி அவருக்கு தெரியாமல் எடுத்துக் கொண்டு போய் போட்டு காண்பித்தார் என்று சொல்லுவார்கள்.
    'மனிதன்' என்ற வார்த்தை வருவதால் இரண்டு பாடலும் ஒன்றாகி விடுமா?. இரண்டு பாடல்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லையென்று, மெல்லிசை மன்னர் 'தைரியமாகசொல்'ல வேண்டியதுதானே.

    Quote Originally Posted by Murali Srinivas
    1968 ஜூலை 27 அன்று வெளியான தில்லானா அப்போதும் பிரமாதமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 1968 அக்டோபர் 21 தீபாவளியன்று எங்க ஊர் ராஜா வெளியாகி வெற்றிக் கொடி கட்டுகிறது. அந்த படம் வெளியான 24 நாட்களில் லட்சுமி கல்யாணம் நவம்பர் 15 அன்று வெளியாகிறது. அது வெளியான 14 நாட்களில் உயர்ந்த மனிதன் வெளியாகிறது, ஒரே நேரத்தில் நான்கு நடிகர் திலகத்தின் படங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது. எங்கள் மதுரையை எடுத்துக் கொண்டால் சிந்தாமணியில் தில்லானா, நியூசினிமாவில் எங்க ஊர் ராஜா, தேவியில் லட்சுமி கல்யாணம், சென்ட்ரலில் உயர்ந்த மனிதன் என ஓடிக் கொண்டிருக்கிறது. [b]சென்னையைப் பொறுத்தவரை சாந்தியில் தில்லானா, சித்ராவில் எங்க ஊர் ராஜா[சித்ரா தவிரவும் இரண்டு அரங்குகள்], கிரௌன், புவனேஸ்வரியில் லட்சுமி கல்யாணம் (மற்ற இரண்டு தியேட்டர்கள் கிருஷ்ணவேணி காமதேனு? மவுண்ட் ரோடு தியேட்டர் இல்லை என்று நினைவு], வெலிங்டன்-ல் உயர்ந்த மனிதன் [வெலிங்டன் தவிரவும் இரண்டு அரங்குகள்] ஓடிக் கொண்டிருக்கின்றன. மெயின் தியட்டர்களிலிருந்து தில்லானா மாறினாலும் கூட ஷிப்டிங் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.
    சென்னையில் அப்போது ஓடிக்கொண்டிருந்த அரங்குகள்.....

    தில்லானா மோகனாம்பாள் - சாந்தி (கிரௌன், புவனேஸ்வரியில் 100 நாட்களைக்கடந்தபின் எடுக்கப்பட்ட பின்னும் சாந்தியில் ஓடிக்கொன்டிருந்தது)

    எங்க ஊர் ராஜா - சித்ரா, மகாராணி, சயானி, லிபர்ட்டி.

    லட்சுமி கல்யாணம் - காமதேனு, கிரௌன், புவனேஸ்வரி, கிருஷ்ணவேனி

    உய்ர்ந்த மனிதன் - வெலிங்டன், பிரபாத், ராக்ஸி, ராம்.

  10. #1009
    Junior Member Junior Hubber
    Join Date
    Sep 2010
    Posts
    26
    Post Thanks / Like

    HAPPY NEW YEAR TO OUR NADIGAR THILGAM AND BELOVED FANS

    MY DEAR BELOVED NT FANS

    HAPPY NEW YEAR TO OUR NADIGAR THILGAM AND BELOVED FANS

    Happiness deep down within.
    Serenity with each sunrise.
    Success in each facet of your life.
    Family beside you.
    Close and caring friends.
    Health, inside you.
    Love that never ends.
    Special memories of all the yesterdays.
    A bright today with much to be thankful for.
    A path that leads to beautiful tomorrows.
    Dreams that do their best to come true.
    Appreciation of all the wonderful things about you.

    JAI HIND!!
    M.Gnanaguruswamy

  11. #1010
    Senior Member Devoted Hubber J.Radhakrishnan's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    128
    Post Thanks / Like
    முரளி சார்,

    லட்சுமி கல்யாணம் திறனாய்வு அருமை, நேரில் பார்த்தது போல் இருந்தது, இதேபோல் அன்பளிப்பு படம் பற்றியும் திறனாய்வு செய்ய வேண்டுகிறேன்.
    அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1478
    Last Post: 17th November 2008, 09:45 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •