Page 1 of 3 123 LastLast
Results 1 to 10 of 24

Thread: samAthAnangaL

  1. #1
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like

    samAthAnangaL

    சமாதானங்கள்

    இதுதானா என்று சரியாகத் தெரியவில்லை. 16க்கும் 17க்கும் இடையில் 16 A வைக் காணோம்.

    16க்கும் 17க்கும் இடையிலான ஒற்றைச் சுவரை ஒட்டி ஒரு தனி கேட். பதினாறில் தானும் சேர்த்தி என்பதன் நிரூபணமாக, காரை அடைத்து நின்ற பதினாறின் கேட்டில் உள்ள இரும்பு மலர் தோரண வரிசை இதில் சின்னதாக இருந்தது. அதற்குப் பின்னிருந்த இரண்டடி அகலச் சந்து பின்சுவர் வரை ஓடியது. பதினேழை ஒட்டிய தரையில் ஈரத்தடமும், அதன் துவக்கத்தில் ஒரு அடிபம்பும் தெரிந்தன.

    அதன் எதிரே பதினாறின் பக்கச்சுவற்றில் கதவுபோல தெரிந்தது. சற்று உள்ளே இருந்ததால் இங்கிருந்து தெரியவில்லை. வலப்பக்கம் நகர்ந்து தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என்றால் அதற்குள் பதினேழு தடபுடலாக எழுந்து மறைத்தது.

    இதுவாகத்தான் இருக்கவேண்டும் என்று இரும்புமலருக்குள் கைவிட்டு உள்ளே போடப்பட்டிருந்த உள்தாழ்ப்பாளைத் தளர்த்தினேன். தெரியாத கதவுகளைத் திறக்க இந்த மூன்றாண்டு விற்பனை அனுபவம் கற்றுத்தரவில்லையென்றால் எப்படி ?

    கொதிக்கும் தாழ்ப்பாள் க்ரீச்சிட, “யாருங்க ?” என்றது ஒரு குரல். பதினாறு. தார்ப்பாலின் போர்வையிடப்பட்ட காரைத் தாண்டிஒரு ஜன்னல் இருப்பதையே அப்போதுதான் கவனித்தேன். அதிலும் அதே இரும்புமலர். மூக்கும் முழியும் மட்டுமே தெரியும் பெண்மணி. இன்னும் வெயில் தாழவில்லை.

    அனிச்சையாக “நான் லோட்டஸ் மார்க்கெட்டிங்லேர்ந்து…” என்று சொல்ல வந்த வார்த்தைகளை விழுங்கி “இங்க 16A ….? கண்ணன்னு சொல்லி…” என்று நான் இழுத்தேன்

    “ஆங் இதாங்க…ஆனா அவங்க இப்ப ஒரு பங்க்ஸனுக்கு போயிட்டாங்களே…”
    “ஓஹோ அப்ப ஃபங்க்ஷன் வீட்டுலெ இல்லீங்களா ?” என்று பாக்கெட்டுக்குள் கையை விட்டு செல்ஃபோனை எடுத்தேன். மானேஜர் பயலுக்காக அணைத்து வைத்திருந்தேன்.
    “இல்லீங்க..பங்க்ஸன் அவுங்க மச்சான் வீட்டுல நடக்குது” குரல் கொஞ்சம் சகஜமாகியிருந்தது.

    மச்சான் வீடா ? செல்ஃபோனை உயிர்ப்பிக்க, பல எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பியிருந்தான் மானேஜர். கடைசியில் “வேர் ஆர் யூ” என்று கண்ணன். அவனுக்கு அடித்தேன்.

    “இங்க பக்கத்துலதான் அவுங்க அண்ணென் வீடு…நாங்களும் அங்கதான் கிளம்பிக்கிட்டிருக்கோம் “ என்று கதவைத் திறந்து காரருகில் வந்தார் அந்தப் பெண்மணி.

    முதல் மணியிலேயே எடுத்துவிட்டு “எங்கடா இருக்க ?” என்று நேராகக் கேட்டான்.
    “உன் வீட்டு வாசல்ல…நீயி ?”
    “அங்கயே இரு…இத வந்துட்டேன்” என்று தொடர்பைத் துண்டித்தான். நான் ஃபோனை கவனமாக அணைத்து பையில் போட்டுக் கொண்டேன்.

    “நீங்க கண்ணன் ப்ரெண்டா ?”
    “ஆமாங்க”
    “வெளியூருங்களா ?”
    கையில் ஒன்றும், காலடியில் ஒன்றுமாக பைகளோடு நிற்பதால் கேட்கிறாள். இந்தப் பைகளில், “இந்தக்கால குழந்தைகளின் பலதரப்பட்ட அறிவுத்தேடல்களை 50 சதவிகித தள்ளுபடியில் நிறைவு செய்யும், வழவழப்பான பக்கங்களில், படங்களுடன் கூடிய கெட்டி அட்டை முதுகுடைப்பான் புத்தகத்தொகுப்புகள் இருப்பது அந்த பெண்மணிக்குத் தெரிய வாய்ப்பில்லை.
    அவளுக்குக் குழந்தைகள் இருக்கக்கூடும்; ஆனால் எனக்கு பயண அசதி.

    “இந்தூர்லதான் இருந்தது...இந்த நேரு நகர்ல.இப்ப மதுரையில இருக்கோம்”
    “ம்ம்”
    “கண்ணன், ஸ்கூல்லேர்ந்து க்ளாஸ்மேட்டு” கேட்காமல் நானே சொல்வது போல இருந்தது.

    மோட்டார்சைக்கிள் உறுமியபடி தெருவோரத்தில் திரும்பி நுழைந்தது. இன்னும் அப்பிடியேதான் ஓட்டுகிறான். என்னைக்கடந்து 17ம் வீட்டு சுவரருகே சாய்த்து நிறுத்தினான். முழுக்கை சட்டையை முழங்கை வரை மடித்துவிட்டுக் கொண்டு புதுவேட்டியின் வெள்ளை மிளிர இறங்கி வந்தான்.

    “எத்தனை தரம்டா அடிக்கிறது உனக்கு” என்று என் மூட்டையில் ஒன்றைத் தூக்கிக் கொண்டு, 16 A கேட் என்று நிரூபணமாகிவிட்டதைத் திறந்து உள்ளே நடந்தான். “ரெடியா ?” என்று என்னைத் தாண்டி அவன் கேட்க “இந்தா…”என்று வீட்டுக்குள் மறைந்தார் நம்பர் பதினாறு.

    “ஆன் ட்யூட்டி போட்டுக்கிட்டு வந்திருக்கேண்டா, அதான் ஃபோனை அணைச்சு வச்சிருந்தேன்” என்றபடி இரண்டடி சந்துக்குள் அவனைப் பின்தொடர்ந்தேன்.
    “உன் ட்யூட்டியில் தீய வைக்க” என்று அடிபம்பின் எதிரிலிருந்த அந்தக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றான்.

    ஒரே அறை தான் – எங்கு சமைப்பார்கள் ? மரபெஞ்சின் மீது நாளிதழ் அடுக்கியிருந்தது.சின்ன டி.வி. மீது சிரிக்கும் புத்தர். இரண்டு தகர மடிப்பு நாற்காலிகள் விரித்தே இருந்தன. என் மூட்டைகளைத் தரையில் வைத்ததும் தரையில் குறிபார்த்துத்தான் நடக்கவேண்டும். ஒரு நாற்காலியில் அயர்ந்து உட்கார்ந்தேன். அவன் ஸ்விட்சைப் போட ட்யூப்லைட் முனக ஆரம்பித்தது.

    “உக்காராத….கிளம்பு” என்றான் அலமாரிக் கண்ணாடியைப் பார்த்துத் தலைசீவிக் கொண்டே
    “எங்கடா நடக்குது ?”
    “திவ்யா வீட்ல “ என்று இயல்பாக சொல்வதுபோல சொன்னான்.
    “ என்னடா சொல்ற ”.
    ஒரு குதூகலப் புன்னகையுடம் என் பக்கம் திரும்பி சொன்னான், “ஆமாண்டா, இப்ப கொஞ்ச நாளாவே அவ அண்ணி கூட ஃபோன்ல பேசுறது உண்டு. போன வாரம் அவ அண்ணன் அண்ணி ரெண்டு பேரும் வீட்டுக்கே வந்துட்டாங்க”

    ட்யூப்லைட் உயிர்பெற்றது.
    “ஃபங்க்ஷனா பண்ணனும் …அவுங்க வீட்ல வச்சு செய்யணும்னு சொன்னாங்க. சரிண்ட்டேன்….அவங்கதான் ஏற்பாடு பூராம் ”

    எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது, “ நாயே ! ஏண்டா முன்னமே எனக்கு சொல்லல……..ஏதோ வீட்டுலையே சின்னதா செய்யப்போறதாத் தானே சொன்ன ?”
    “ஒரு சர்ப்ரைஸ்தான்” என்றவனுக்கு முகமெல்லாம் சிரிப்பு. இதற்கு மூன்று வருடம் ஆகியிருக்கிறது.
    “புண்ணாக்கு சர்ப்ரைஸ்…..வேற ஏதும் சர்ப்ரைஸ் வச்சிருக்கியா ?”
    நான் எதைக் கேட்கிறேன் என்று அவனுக்குத் தெரியும்.

    “இல்லடா. அப்பா இன்னும் அப்பிடியேதான் இருக்காரு….நான் சொல்லச் சொல்ல கேக்காம திவ்யா அண்ணன் ஃபோன் போட்டாரு. அப்பா சட்டுண்டு ஃபோனை வச்சுட்டாரு……..அதுவும் சரிதான், அவர் ஏதாச்சும் அவ அண்ணனை சொல்லிருந்தாருன்னா எனக்கு சங்கடமாயிருக்கும்…….” என்றான்.
    அவ்வளவாக வருத்தம் தெரியவில்லை.

    “……கொஞ்சம் மாசம்டா…புள்ள பொறந்ததும் அம்மாவாச்சும் நிச்சயம் வரும் பாரு” என்று நம்பிக்கையோடு சொன்னான்.

    எனக்கு இதுவே மிக சந்தோஷமாக இருந்தது “ ரொம்ப சந்தோஷம்டா !” என்று எத்தனையாவது தடவையாகவோ சொன்னேன்.

    “பைய்ய சந்தோஷப்படலாம், இப்பொ கிளம்புடா..” என்று ஈரவாடை அடித்த ஒரு துண்டை என் மீது எறிந்தான். முகம் கழுவி, போட்டுக் கொண்டிருந்த உடையையே சரி செய்து கொண்டு கிளம்பினேன். அவன் அணைத்த போது மட்டும் உடனே கேட்டது ட்யூப்லைட்.

    வண்டியில் ஏறியதும் பக்கத்துவீட்டிலிருந்து ஒரு ஆதிகால ப்ரீமியர் பத்மினி கிளம்பியது. முன்சீட்டில் ஒல்லியான ஒல்லிமீசைக்காரரும் அருகில் அந்தப் பெண்மணியும் இருந்தார்கள்.

    “பின்னாடியே வாங்க சார்” என்று சொல்லிவிட்டு பைக்கை கிளப்பினான். “ஹவுஸ் ஓனர்டா…. நல்ல டைப்….இவங்க இல்லைன்னா ரொம்ப கஷ்டப்பட்டுப் போயிருப்போம்” என்று மெதுவாக பின்னால் இருந்த எனக்குச் சொன்னான். அவர்கள் தொடரப்போவதால் அவன் பறக்கப் போவதில்லை, அதனால் கொஞ்சம் நிம்மதியானேன்.

    பிள்ளையார் கோயில் தாண்டியதும் எங்கள் ஏரியா. இங்கு பல வருடங்கள் பல வீடுகளில் இருந்தோம். நாங்கள் எல்லோரும் திரிந்தது இங்கு தான். கண்ணன் மட்டும் வேறு ஏரியா. பள்ளி, கல்லுரியில் என் வகுப்பு. எங்கள் குழுவில் சங்கமித்தான்.

    இதோ, இதே தடங்களில் வண்டி ஓட்டிப் பழகியிருக்கிறோம். பெண்கள் எதிர்ப்பட்டால் கண்ணன் கொஞ்சம் வித்தை எல்லாம் காட்டுவான். திவ்யா வீட்டு வாசலைக் கடக்கும்போது கைப்பிடியிலிருந்து கைகளை விலக்கி சொடக்குப் போடுவான். அதை மிகுந்த அசட்டையுடன் செய்வான், இதேபோல் பின்னால் உட்கார்ந்திருக்கும் என்னிடம் ஏதோ பேசிக்கொண்டே. இந்த கழைக்கூத்தாடி வேலலக்கெல்லாம் பெண்கள் மயங்குவார்கள் என்று நான் நம்பவில்லை. இப்போது ‘நம்ப விரும்பவில்லை’ என்று மாற்றித்தான் சொல்லவேண்டும்.
    பின்ன ? திவ்யாவுக்குப் பிடித்துப் போனது என்னவாம் ?
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    நாங்கள் எல்லோரும் அதே ட்யூஷனில்தான் படித்தோம். இத்தனைக்கும் கண்ணன் விளிம்பு வித்தகன் தான். பெரிய சண்டியனென்றுகூட சொல்லிவிட முடியாது. ஒரு முறை ஆள்தெரியாமல் பாண்டியோடு மோதி, ட்யூஷன் வாசலில் சகலோர் முன்னிலையிலும் உதைபட்டான். அத்துடன் அவன் வாய்ப்புகள் முடிந்ததென்றே நினைத்தேன். பின்னர்தான் தெரிந்தது, அதற்குப் பிறகு தான் ஆரம்பித்திருக்கிறது என்று.

    அவளுக்கு அப்பா அம்மா இல்லை, அண்ணன் மட்டும் தான் என்று தெரியும், ‘பாசமில்லாமல் வறண்ட வாழ்க்கை” என்று நீளநீளமாகவெல்லாம் கண்ணன் பேசத்தொடங்கியபோது தான் அவன் தீவிரமே எங்களுக்குப் புரிய ஆரம்பித்தது. எல்லா வகையிலும் எங்களுக்கு அது புதிதாக இருந்தது. நாங்கள் பார்க்க அது வளர்ந்து கல்லூரி இறுதியாண்டில் உச்சத்துக்கே வந்துவிட்டது.
    அன்று காலை எனக்குத்தான் அந்த தீரச்செயல் பணிக்கப்பட்டது. காலை நான்கு மணிக்கு அவர்கள் வீட்டு சுவரருகே நின்றிருந்தேன். இப்போது யோசிக்கவே பயமாக இருக்கிறது. ஒரு கூர்க்காவோ, தெருநாயோ கூட திட்டத்தைக் கெடுத்திருக்கக்கூடும். பக்கவாட்டில் இருந்த சுவரைத் தாண்டியதும் தென்னைமரமும் அதைத் தாண்டி சற்று உள்ளே ஒரு இளங்கொய்யா மரமும் இருந்தன. அங்கிருந்து வீட்டு ஜன்னல்களும் முன்பக்க வாசலும் தெரிந்தன. இந்நேரம் அவள் வந்திருக்க வேண்டும். வாசலில் அசைவு தெரிய கொய்யா மரத்தின் அடர்த்தியற்ற கிளைகள் பின்னால் அசட்டுத்தனமாக ஒளியப் பார்த்தேன்.

    அவள்தான். சீவி சிங்காரிக்கவெல்லாம் இல்லை. ஆனால் புடவையில் பெரிய பெண் போல இருந்தாள். வந்து இடப்பக்கம் மரங்களை அவள் பார்க்க, கையை ஆட்டி இருக்கும் இடத்தை தெரியப்படுத்தினேன்.. ஒரு கையால் புடவையைக் கொஞ்சம் தூக்கிப்பிடித்துக் கொண்டு இன்னொரு கையில் ஒரு தோல்பையுடன் மெல்ல நடந்து வந்தாள்.

    அவள் கொய்யா மரத்தை வந்தடைந்ததும் திடுமென்று ஒரு சத்தம். வெற்றுடம்பும் லுங்கியுமாக அவள் அண்ணன் வாசல் வந்தடைய நான் உறைந்தேன். அவள் என் கையைப் பிடித்து சுவர்பக்கம் ஓடினாள். அவர் ஏதோ கத்திக்கொண்டே எங்களை நோக்கி ஓடிவந்தார்.

    நாலடிச்சுவரை ஒரே நெம்பலில் அவள் முதலில் தாண்ட, நான் இரண்டாவதாக தாண்டியபோது அவர் வெகு அருகில் வந்துவிட்டதை உணரமுடிந்தது. திரும்பிப்பார்த்தால் வலதுகாலை சுவர்மீது வைத்து ஏறிக்கொண்டிருந்தார். தொப்பையும் சற்றே வெளுத்திருந்த அவர் தாடியும் அவரை அவ்வளவாகத் தளர்த்தவில்லை. நிச்சயம் வண்டியைக் கிளப்புவதற்குள் பிடித்துவிடுவார். வேகமாக முன்சென்று, சுவர் மீது அவர் வைத்திருந்த காலைப் பிடித்து மூர்க்கமாகத் தள்ளினேன். நிதானம் மொத்தமாகத் தவறி அவரது இடதுகாலின் மேல் ஏடாகூடமாக விழுந்தார்.

    இன்னும் அதிகமாகக் கத்தி என்னை நேராகப் பார்த்தார். கோபத்தை மீறி ஒரு ஆச்சரியம் அவர் முகத்தில் தெரிந்தது. வண்டி ஒரே உதையில் புறப்பட்டது. தெருமுனை வரை திரும்பிப் பார்த்துக் கொண்டேவந்தேன். சுவர் மட்டும்தான் தெரிந்தது, அவர் எழவில்லை.

    நான் அவ்வளவு வேகமாக வண்டி ஓட்டுவேன் என்று எனக்கே தெரியாது. கற்றுக்கொடுத்த கண்ணனே ஆச்சர்யப்பட்டிருப்பான். பின்னால் உட்கார்ந்திருக்கும் இவளும் கூட. இனி ஆச்சர்யப்பட்டு என்ன…

    கோவிலை சென்றடையும் வரை எனக்குப் படபடப்பு தான். கண்ணனும் நண்பர்களும் தயராக இருந்தார்கள். எல்லாம் இனிதே முடிந்தது.

    கல்லூரி முடியும் வரை எங்கள் ஆசிரியர் லெனின் சார் வீட்டு மாடி ரூமில் தங்கியிருந்தார்கள். கண்ணனை அவரது உறவினர் ஒருவர் தனது கம்பெனியில் வேலைக்கு அமர்த்திக் கொண்டார். அவருக்கும் கண்ணன் அப்பாவுக்கும் ஆகாது. அதனால் தான் இந்தச் சூழ்நிலையில் வேலையையே கொடுத்தார் என்பது தெரியும். இதனால் கண்ணனுக்கும் அவன் அப்பாவுக்கும் உள்ள பிளவு அதிகமாகும் என்று நாங்களெல்லாம் சொன்னோம். ஆனால் கிடைத்த வேலையை ஏன் விடுவானேன் என்று தோன்றியது. சொல்லாமல் இருந்துவிட்டிருக்கக் கூடாது என்பதற்காகச் சொன்னோம்.

    என் அப்பா உடல்நிலை மேலும் மோசமானதால் மதுரைக்குக் குடிபெயர்ந்துவிட வேண்டியதாயிற்று. சென்னை ஐ.ஐ.டி.யில் எம். எஸ்.சி படிக்க இடம் கிடைத்திருந்ததும் நான் புத்தகம் விற்கப் போக வேண்டியதாயிற்று. இதில் லெனின் சாருக்குக் கொஞ்சம் கோபம்.

    “உன்னைய வேஸ்ட் பண்ணிக்காதப்பா….ஜஸ்ட் டூ இயர்ஸ்….கஷ்டப்பட்டா ஒண்ணும் தப்பில்லை”

    “அதுக்கில்லை சார்……இது வீட்டு ப்ராப்ளம்”
    “அது தான் சொல்றேன், கொஞ்ச நாள் வீட்ல இருக்கவங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கத்தான் வேணும்”
    “………”
    “உங்கண்ணன் ஒண்ணும் அனுப்பறதில்லையா ?”
    “…….”
    “ப்ரைட் ஃப்யூச்சர்…….ம்…….சிலதெல்லாம் இப்ப செஞ்சாதாம்பா உண்டு” என்று இறுக்கமாகச் சொன்னார்.
    நான் இவ்வளவையும் கேட்டுவிட்டு வேலைக்குத்தான் போகப்போகிறேன் என்று அவருக்குத் தெரிந்தது.

    எங்கள் செட்டில் ஆளுக்கு ஒரு இடமென்றாகச் சென்றாலும், கண்ணனிடம் மட்டும் எப்போதும் பேசிக்கொள்வது. ஊர்ச் செய்திகள் எல்லாம் தொகுத்து எனக்கு வழங்குபவன், அவ்வப்போது அவன் கதையையும்.

    சென்றவருடம் ஜெயராஜ் ஆஸ்திரேலியா சென்றுவிட்ட செய்தியை எனக்கு தெரிவிக்கும்போது, “கப்பிப் பயக எல்லாம் அமெரிக்கா சிங்கப்பூர்னு போயிக்கிருக்காய்ங்க…நீ என்னடா இங்கனுக்குள்ளயே சுத்திக்கிருக்க !” என்று திட்டினான் கண்ணன். அவன் யார் மீது கோபப் படுகிறான் என்று கொஞ்சம் வினோதமாகவும், மனதுக்கு இதமாகவும் இருந்தது.


    தெரு ஆரம்பத்திலேயே வண்டியை அணைத்து மீதமிருந்த வேகத்தில் செலுத்திச் சென்றான். அந்தச் சுவரின் அருகிலேயே நிறுத்தினான். “அந்த முனையிலே நிப்பாட்டிக்கலாங்க” என்று பின்னால் வந்த கார்க்காரருக்குச் சொல்லிவிட்டு “வாடா” என்று என் முதுகைத் தட்டிவிட்டு முன் நடந்தான். கேட்டைத் தாண்டி வாசலை அடையும் முன் வலதுபக்கம் கொய்யா மரத்தைத் தேடினேன். வளராமல் அன்று இருந்தது போலவே இருந்தது.

    வாசலில் மாவிலைத் தோரணமெல்லாம் கட்டி கீழே செருப்புக்களை இரைத்திருந்தார்கள். இரண்டாம் அறையில் ஜமுக்காள வண்ணமும், குவிந்திருந்த பெண்கள் கூட்டமும் வாசலிலிருந்தே தெரிந்தது. வாசல் அறையைத் தாண்டி இரண்டாம் அழைக்குள் நுழைந்திருந்த கண்ணன், பின்னால் திரும்பி “வா” என்பது போல தலை அசைக்க, மெதுவாக உள்ளே நுழைந்தேன்.

    நிறைவயிறும், வளையல்களும், களைப்பு சற்றே தெரியும் சிரிப்புமாக திவ்யா ஒரு நாற்காலியில் நடுநாயகமாக உட்கார்ந்திருந்தாள். “வாங்க….. பிரபுண்ணே ” என்று உற்சாகமாக புன்னகைத்தாள். அவளை நலம் விசாரிப்பதே அபத்தமாக இருக்கும்படி ஆனந்தம் நிதர்சனமாகத் தெரிந்தது. கையை உயர்த்தி ஒரு பதில் சிரிப்பு மட்டும் சிரித்தேன். அநேகமாக இன்றுதான் அவளும் இவ்வீட்டிற்கு வந்திருக்கக் கூடும்.

    நான் நுழைந்த அறை வாசலருகில் இடப்பக்கமாக அவர் நின்றிருந்தார். தாடியில் இன்னும் கொஞ்சம் நரை ஏறியிருந்தது. “வாங்க தம்பி” என்று அவர் சொன்னதும் எனக்குக் கூச்சமாக இருந்தது.

    “காபி சாப்ட்றீங்களா “ என்று விசாரித்த அவரை நேராக நான் பார்க்கவில்லை. என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லையா என்ன ? அன்று நான் அவர் முகத்தை பார்க்கும் அளவுக்காவது வெளிச்சம் இருந்ததே.

    என் பதிலை எல்லாம் அவர் எதிர்பார்க்கவில்லை. உள்ளறைப் பக்கம் திரும்பி “யே…காப்பி ரெடியா ?” என்று உரக்கக் கேட்டுக் கொண்டே வீட்டுக்குள் நடந்தார், இடது காலைத் தேய்த்துத் தேய்த்து.

    ***
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  4. #3
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like

    AathA naan publish aayittEn

    An edited version of the above story has been published in the June edition of Amudhasurabhi.
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  5. #4
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    wow ! PR...

    ennavO "நிதானம் மொத்தமாகத் தவறி அவரது இடதுகாலின் மேல் ஏடாகூடமாக விழுந்தார்" appadinnu padikkaRappavE kadaisi-la kAlai thEichu nadappadhAga mudiyumOnnu nenachEn..

    hayyO.. hayyO.. nAn unga kadhai pOkkai purinjukittEn pOla irukkE !



    andha "eera vAdai adikkum thuNdu" ellA friends roomlEyum oNNu kaNdippA irukkum

    innum oru thadavai nidhAnamA padichuttu ezhudhuvEn :P

  6. #5
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like

    Re: AathA naan publish aayittEn

    Quote Originally Posted by Prabhu Ram
    An edited version of the above story has been published in the June edition of Amudhasurabhi.
    ada... AmAm... unga pic ellAm vEra pOttirukkAnga !!


  7. #6
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,170
    Post Thanks / Like
    கதையில் நல்ல விறுவிறுப்பு!வாலிபத்தின் சுறுசுறுப்பு! சொல்லியும் சொல்லாமலும் எத்தனை சங்கதிகள்! வாவ்!

    amudhasurabhi-kkum, picture-kkum link?
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  8. #7
    Senior Member Veteran Hubber Anoushka's Avatar
    Join Date
    Nov 2004
    Location
    Dublin, Ireland
    Posts
    2,807
    Post Thanks / Like
    PR: good one
    The moment will arrive when you are comfortable with who you are, and what you are--when you don't feel the need to apologize for anything or to deny anything. To be comfortable in your own skin is the beginning of strength.

  9. #8
    Senior Member Veteran Hubber Roshan's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Kabul, Afghanistan
    Posts
    4,984
    Post Thanks / Like
    Prabhu - it's lovely

    Nice writing with an excellent flow.

    RombavE pidichuthu enakku. ungaL ezhuthil naaLukku naL munnERRam. subtle'a sila vishayangaLa azhagA solli irukeenga. Great going and keep it up

    VaazhthukkaL !
    And those who were seen dancing, were thought to be insane, by those who could not hear the music - Friedrich Nietzsche

  10. #9
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Thank You madhu

    Quote Originally Posted by madhu
    nnum oru thadavai nidhAnamA padichuttu ezhudhuvEn
    looking forward to it.

    Thank you Mrs.PP.
    Unfortunately Amudhasurabhi is not available online.

    Thank you Anoushka.

    Thank you Roshan
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  11. #10
    Senior Member Veteran Hubber Sanguine Sridhar's Avatar
    Join Date
    Apr 2005
    Posts
    3,220
    Post Thanks / Like
    Very nice PR!

Page 1 of 3 123 LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •