Page 1 of 5 123 ... LastLast
Results 1 to 10 of 47

Thread: Oru Kanavin Isai - Ananda Vikatan

  1. #1
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like

    Oru Kanavin Isai - Ananda Vikatan

    New series on A.R. Rahman written by Krishna DaVinci started in Ananda Vikatan. Somebody post updates.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Diamond Hubber A.ANAND's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    K.L MALAYSIA
    Posts
    4,661
    Post Thanks / Like
    tamil-innu sonnale 'alagic' innga,ithala update panna etthanana peru padikka porangga??translate vera pannaum!

    a.v magazine vaangi sonthama padichikka vendiyathu than nallathu!1000 thanx to mr.krishna davinci

  4. #3
    Senior Member Diamond Hubber Nerd's Avatar
    Join Date
    Mar 2005
    Posts
    7,811
    Post Thanks / Like
    1978...

    அந்த 11 வயதுச் சிறுவன் கோடம்பாக்கத்தில் ஒரு ரிக்கார்டிங் ஸ்டுடியோவின் வாசலில் தயங்கியபடி உள்ளே செல்கிறான். அவனுக்காகப் பல வாத்தியக்காரர்கள் காத்திருக்கிறார்கள். ''வாப்பா திலீப்... உனக்காகத்தான் காத்துட்டிருக்கோம். நீ கொண்டுவந்த சிந்தசைஸர்ல என்னவோ பிரச்னை. என்னன்னு பாரேன்'' என்கிறார் அர்ஜுனன் மாஸ்டர். சிறுவன் திலீப் அந்தக் கருவியின் பாகங்களைத் தொழில்நுட்ப நேர்த்தியுடன் அழகாகப் பிரிக்கிறான். எதையோ சரிசெய்து ஒன்று சேர்க்கிறான். சில நிமிடங்களில் அது மீண்டும் நன்றாக வேலை செய்ய ஆரம்பிக்கிறது. அர்ஜுனன் மாஸ்டர் அவனை அன்புடன் அணைத்துக்கொள்கிறார்... ''கில்லாடிடா நீ!''

    திலீப்பின் கண்கள் கலங்கியிருக்க, அவரும் மனம் கலங்குகிறார். ''என்ன திலீப், அப்பா ஞாபகம் வந்திடுச்சா..?'' என்பவர், பெருமூச்சுவிடுகிறார். ''என்ன செய்றது... விதின்னுதான் சொல்லணும். சாகிற வயசா மனுஷனுக்கு? இப்பவும் உன் அப்பா இங்கேயே இருக்கிற மாதிரிதான் தோணுது திலீப்'' என்பவர், சிறுவனின் கைகளில் சில ரூபாய் நோட்டுகளைக் கொடுக்கிறார். யூனிவோக்ஸ், கிளாவியோலின் போன்ற மின் இசைக் கருவிகளை வாடகைக்கு விட்டதற்காகக் கொடுக்கப்படும் சிறிய தொகை அது.

    `திலீப் அந்தப் பணத்தில் தன் சகோதரிகளுக்காக சாக்லேட்டுகளும் பிஸ்கட்டுகளும் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வருகிறான். அம்மாவிடம் மிச்சப் பணத்தைக் கொடுக்கிறான். அவனைப் பார்க்கப் பார்க்க, அம்மாவின் மனம் நெகிழ்கிறது. 'சின்னப் பையன் மேல குடும்பப் பாரம் விழுந்துவிட்டதே! படிக்க வேண்டிய பையனை இப்படி ரிக்கார்டிங் தியேட்டர்களுக்கு அனுப்புகிறோமே' என்கிற வருத்தம். ஆனால், சிறுவன் திலீப்பின் கண்களில் மின்னிய விவரிக்க இயலாத ஒளியைக் கண்டபோது, அவன் சரியான பாதையில்தான் போகிறான் என்று அந்தத் தாயின் மனதுக்குப் புரிந்தது.

    திலீப் பொதுவாக வீட்டில் யாருடனும் கலகலப்பாகப் பேச மாட்டான். வீடெங்கும் இறைந்துகிடக்கும் இசைக் கருவிகளும், இசைப்பதிவு இயந்திரங்களும்தான் அவனுக்குப் பிடித்த உலகம். தன் அறைக்குச் சென்று அவற்றை வாசிப்பதிலும் பிரித்துப் போட்டு மீண்டும் ஒன்று சேர்ப்பதும்தான் அவனுடைய விருப்பமான ஒரே விளையாட்டு. மற்றபடி நண்பர்களுடன் கிரிக் கெட் விளையாடுவது, சினிமா, அரட்டை போன்ற வேறு பொழுதுபோக்குகள்..? ம்ஹூம்... எதுவும் இல்லை.

    திலீப் தன் அறைக்குச் சென்று ஹார்மோனியத்தில் ஒரு பாட்டை வாசிக்க ஆரம்பிக்கிறான். அது அவனுடைய அப்பா இசையமைத்த ''பெத்லஹேமில் ராவில்...'' என்கிற பிரபல மலையாளப் படப் பாட்டின் மெட்டு. அவன் வாசிப்பதைக் கேட்கும் அம்மா, தன் கணவரே நேரில் வந்ததைப் போல் மெய்ம்மறந்துபோகிறார். அந்த மெட்டில் அவன் சில மாற்றங்களையும் செய்து மிக இனிமையாக வாசிப்பதைக் கேட்கும்போது அந்தத் தாய்க்குச் சிலிர்க்கிறது. ஓடி வந்து தன் மகனை நெஞ்சார அணைத்துக்கொள்கிறார். அவர் கண்களில் கண்ணீர் வழிகிறது.

    ''நீ வாசிக்கிறதைக் கேக்கும்போது சந்தோஷமா இருக்குப்பா... ஆனா, கொஞ்சம் பயமாவும் இருக்கு.''

    ''பயமா... ஏம்மா?''

    ''உங்கப்பா ரொம்ப திறமைசாலிப்பா. எவ்வளவோ உயரத்துக்குப் போயிருக்க வேண்டியவரு. இந்த உலகம்தான் அவரைக் கடைசி வரை புரிஞ்சுக்கலை. இவ்வளவு சின்ன வயசுல உனக்கு இருக்கிற திறமை எனக்குத் தெரியுது. ஆனா, உலகம் புரிஞ்சுக்குமான்னு பயமா இருக்கு'' என்கிறார் வாழ்க்கையின் பல பிரச்னைகளைப் போராட்டத்துடன் கடந்து வந்த அந்தப் பாசமிகு அம்மா.

    உலகம் அந்தச் சிறுவனைப் புரிந்துகொண்டது. இருகரம் நீட்டி அந்த இளம் இசை மேதையை வரவேற்கக் காத்திருந்தது. அவனுக்கான பிரகாசமான எதிர்கால வெற்றிப் பாதை ஏற்கெனவே அமைக்கப்பட்டுவிட்டது. நான்கு வயதிலேயே பெற்றோர்களால் பியானோ வகுப்புகளுக்கு அனுப்பப்பட்ட சிறுவன் திலீப், விரைவில் பள்ளிப் படிப்பைவிடப் போகிறான். தனராஜ் மாஸ்டரிடம் இசை கற்று, லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் ஸ்காலர்ஷிப் பெற்று, மேற்கத்திய கிளாசிக்கல் இசையில் பட்டம் பெறப்போகிறான். ரூட்ஸ், நெமிஸிஸ் அவின்யூ, மாஜிக் போன்ற சென்னை ஆங்கில இசைக் குழுக்களில் பங்கேற்கும் வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கப் போகிறது.

    இன்னும் ஒரு சில வருடங்களில் எம்.எஸ்.வி, இளையராஜா போன்ற மாபெரும் இசைஅமைப்பாளர்களுக்கு கீ-போர்டு பிளேயராகவும், சில சமயங்களில் இசை கோப்பாளராகவும் பணியாற்றப்போகிறான். அவனுடைய திறமை விக்கு விநாயக் ராம், குன்னக்குடி வைத்தியநாதன், ஜாகிர் ஹுசேன் போன்றவர்களுடன் சேர்த்துவைக்கப்போகிறது. அவர்களுடன் கச்சேரிகளில் பங்கேற்க உலகப் பயணம் செல்வான். அதன் பிறகு, 300-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களுக்கு இசை அமைப்பான். 'பஞ்சதன்' என்கிற பெயரில் சொந்தமாக ஒரு ஹைடெக் ரிகார்டிங் ஸ்டுடியோவைக் கட்டுவான்.

    அங்கேதான் இயக்குநர் மணிரத்னத்தைச் சந்திப்பான். 'ரோஜா' என்கிற படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு அவனுக்குத் தரப்படும். அந்த இசையமைப்பு இந்தியத் திரை இசையின் ஸ்டைலையே மாற்றி அமைக்கும். முதல் படத்திலேயே தேசிய விருது பெறுவான். சொந்த வாழ்க்கையில் நடந்த சில புதிரான நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, அப்போது அவன் பெயரும் மாற்றம் செய்யப்பட்டிருக்கும். திலீப் என்கிற இளைஞன் ஏ.ஆர்.ரஹ்மான் என்கிற இசைக் கனவானாக மாறுவார். 'ரோஜா'வில் ஆரம்பிக்கப் போகும் அந்த மகத்தான இசைக் கனவு ஆஸ்கர் விருதையும் கடந்து செல்லும்.

    இத்தனையும் ஓர் அற்புதம் போல் கண் முன்னால் நடந்தன. ரஹ்மானின் அம்மா கரீமா பேகத்துக்கு அந்த வாழ்க்கை அனுபவங்களைப் பற்றி நினைத்துப் பார்க்கும்போதே, உணர்ச்சிவசப்பட்டு மனம் நெகிழ்கிறது. ''என் மகன் சின்ன வயசுலேர்ந்தே ரொம்ப அடக்கம். எதுக்கும் உணர்ச்சிவசப்படாது. அப்பாவோட ரிக்கார்டிங் தியேட்டருக்குப் போயி வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கும். வீட்டுல ஹார்மோனியத்தை அது (அப்படித்தான் மகனைச் செல்லமாக அழைக்கிறார்) பிரமாதமா வாசிக்கிறதை அப்பா எல்லார்கிட்டேயும் பெருமையா சொல் லிட்டிருப்பாரு. ஒரு தடவை அதோட அப்பா சுதர்ஸனம் மாஸ்டர்கிட்டே கூட்டிப் போயிருந் தாரு. அப்ப அதுக்கு நாலு வயசு. ''என்னடா... என்னவோ ஹார்மோனியத்துல பிரமாதமா வாசிப்பியாமே... வாசிச்சுக் காமி''ன்னு சுதர்ஸனம் மாஸ்டர் கேட்டிருக்காரு. அது கொஞ்சமும் அலட்டிக்காம, ரொம்ப அற்புதமா வாசிச்சிருக்கு. அவரு மிரண்டுபோயிட்டாரு. நம்ப முடியாம ஹார்மோனியக் கட்டைகள் மேல ஒரு வேட்டி யைப் போட்டு மூடி ''எங்கே, இப்ப வாசிச்சுக் காட்டு''ன்னு சொல்லியிருக்காரு. ஹார்மோனி யக் கட்டைகள் ஏதும் தெரியாதபோதே, அப்ப வும் அதே மாதிரி வாசிச்சிருக்குது. எல்லாரும் அசந்துபோயிட்டாங்க. அதோட அப்பா ரொம்ப ஆச்சர்யமா, அடிக்கடி என்கிட்டே 'இவன் பெரிய ஆளா வருவான் பாரு'ன்னு சொல்லிக்கிட்டே இருப்பாரு. அவரு அப்போ சொன்னது இப்பவும் என் மனசுல கேட்டுக் கிட்டே இருக்கு. இந்தப் புள்ளகிட்டே என்னவோ அற்புதமான திறமை இருக்குன்னு புரிஞ்சுக்கிட்டு, உடனே பியானோ கிளாஸ்ல சேர்த்துவிட்டோம். அப்ப ஆரம்பிச்சதுதான் எல்லாம். இப்ப ஆஸ்கர் அவார்டு வரை வந்திருச்சு அது!'' அவர் குரலில் பெருமிதமும் பரவசமும் சேர்ந்து ஒலிக்கிறது.

    இந்தியத் திரையுலகம் எத்தனையோ இசை மேதைகளைத் தந்திருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை. யாரும் யாருக்கும் குறைவில்லை. ஆனால், ரஹ்மானை 'first among equals' என்று பல காரணங்களுக்காகச் சொல்லலாம். ஆஸ்கர் விருது அவருடைய பயணத்தில் தங்க நேர்ந்த ஒரு ஸ்டேஷன். அவ்வளவுதான். அதையும் தாண்டி அவர் பயணித்துக்கொண்டே இருக்கும் இசை மைல் கற்கள் ஏராளம். தன் முதல் படமான 'ரோஜா'வில் 'ரகே' என்னும் மேற்கத்தியத் துள்ளல் இசையைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர். அடுத்தடுத்து, மேற்கத்திய கிளாஸிக்கல் இசை, ஹிந்துஸ்தானி, அரபி சுஃபி, கவாலி, ஜாஸ், கர்னாடிக், கஸல், ஹிப் ஹாப், ராக், ஓபரா, ப்ளூஸ், ஆப்பிரிக்க பீட்ஸ் என்று புத்தம் புதிதாகப் பல இசை வடிவங்களை அறிமுகப்படுத்தியபடியே இருக்கிறார். இவர் அளவுக்கு உலக இசைக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றிய இந்திய இசை அமைப்பாளர்கள் யாரும் இல்லை. மைக்கேல் ஜாக்சன், வனஸா மே, ஆண்ட்ரூ வெப்பர் லாயிட், புஸ்ஸி கேட் டால்ஸ், நஸ்ரத் ஃபதே அலிகான், ஆட்னன் சாமி, டீப் ஃபாரஸ்ட், டமினிக் மில்லர், அகான் என்று இவர் கைகோத்தவர்கள் ஏராளம். பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஸ்பைக் லீ, ரஹ்மானின் 'சைய... சைய...' பாடலைத் தன் படமான 'இன்சைட் மேன்'ல் பயன்படுத்திஇருக்கிறார். 'லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்' ஆங்கிலப் படத்துக்கும், சீனப் படமான 'வாரியர்ஸ் ஆஃப் ஹெவன் அண்ட் எர்த்' படத்துக்கும் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

    15 வருடத் திரை இசை வாழ்க்கையில் இவர் பெற்றுள்ள தேசிய விருதுகள் மூன்று, பத்ம விருது, 14 ஃபிலிம்ஃபேர் விருதுகள், 6 தமிழக அரசு விருதுகள், கோல்டன் குளோப், பாஃப்டா, க்ரிட்டிக்ஸ் விருது... எல்லாவற்றுக்கும் மேல் சிகரம் வைத்தாற் போல் ஆஸ்கர்!

    கடும் உழைப்பு, புதிய டெக்னாலஜியில், இசைப்பதிவுக் கருவிகளில் ஆர்வம், புதிய புதிய பாடகர்களை அறிமுகப்படுத்தியது போன்றவை ரஹ்மானின் பிரமாண்ட வெற்றிக்கான சில கார ணங்களாகச் சொல்லப்படுகின் றன. இந்தச் சிறப்புகள் எல்லாம் அவருடைய அப்பா ஆர்.கே.சேகரி டமும் அந்தக் காலத்திலேயே இருந்தது என்பது ஆச்சர்யமான ஒற்றுமை! ''என் அப்பாவின் மாபெரும் இசை ஞானத்தின் ஒரு சிறிய பகுதிதான் இறைவனின் அருளால் என்னிடம் வந்திருப் பதாக நான் நினைக்கிறேன். அவரைப் பற்றி நினைத்தாலே என் நெஞ்சம் கண்ணீரில் நனை கிறது'' என்றார் ரஹ்மான் ஒரு முறை. மலையாளப் பட இசை உலகில் சத்தமில்லாமல் மாபெரும் சாதனைகள் செய்தவர் இசை அமைப்பாளர் ஆர்.கே.சேகர். அவருடைய சரித்திரம் குடத்திலிட்ட விளக்காக இருக்கிறது'' என்கிறார் பிரபல மலையாள எழுத்தாளரும், இசை விமர்சகரும், ரஹ்மானின் நண்பருமான ஷாஜி.

    நெகிழவைக்கும் அந்தக் கதை... அடுத்த வாரம்!

    ரோஜா மலர்ந்த நேரம்!

    1992... ரஹ்மான் 'பஞ்சதன்' என்கிற பெயரில் சொந்தமாகத் தன் வீட்டிலேயே ஒரு பிரமாதமான ரிக்கார்டிங் நிலையத்தை அமைத்திருந்தார். ஆசியாவின் மிகச் சிறந்த ஒலிப்பதிவுக்கூடம் அது. லியோ காபி, ஆல்வின், பூஸ்ட், ப்ரீமியம் பிரஷர் குக்கர், எம்.ஆர்.எஃப் டயர்ஸ், தி ஹிண்டு, ஏஷியன் பெயின்ட்ஸ் போன்ற பிரபல கம்பெனிகளுக்கு விளம்பர இசை அமைத்து ஹிட் ஆகியிருந்த காலம். சாரதா திரிலோக் என்கிற விளம்பரப் படத் தயாரிப்பாளர், ரஹ்மானின் இசையில் வெளியான லியோ காபி விளம்பரத்துக்காக விருது வாங்கியிருந்தார். அப்போது மணிரத்னம் தன் அடுத்த படத்துக்காக ஒரு புதிய இசையமைப்பாளரைத் தேடிக்கொண்டு இருந்தார். அவருடைய உறவினரான சாரதா திரிலோக், ரஹ்மானை அவரிடம் அறிமுகப்படுத்திவைத்தார். தன்னுடைய 'பஞ்சதன்' ஸ்டுடியோவுக்கு நேரம் கிடைக்கும்போது வந்து சந்திக்குமாறு வரவேற்றுவிட்டு விடைபெற்றார் ரஹ்மான். பின்பு, அந்தச் சந்திப்பையே அவர் மறந்துவிட்டார். ஆறு மாதங்களுக்குப் பிறகு, திடீரென்று ஒருநாள் பஞ்சதன் ஸ்டுடியோவுக்கு வருகை தந்தார் மணிரத்னம். அப்படி ஒரு ஹைடெக் ஸ்டுடியோவை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. அதன் தொழில்நுட்பத் தரத்தைக் கண்டு வியந்தார். ரஹ்மானின் விளம்பர ஜிங்கிள்ஸைக் கேட்டவர், அந்த இசையின் மீது உடனடியாகக் காதல்கொண்டார். ''என் அடுத்த படம் 'ரோஜா'வுக்கு நீங்கள்தான் இசைஅமைப்பாளர்'' என்று அங்கேயே சொல்லி, புக் செய்தார். அதற்குப் பிறகு நிகழ்ந்ததெல்லாம்... சரித்திரம்!

    'ரோஜா' படத்துக்காக ரஹ்மான் பெற்ற சம்பளம் வெறும் 25,000 ரூபாய்தான். அதை அப்போது மூன்று மணி நேரங்களில் சம்பாதிப்பார். ''பணம் ஒரு பொருட்டல்ல. எனக்கு மணி சாரிடம் வேலை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அவர் என்னிடம் ஒரு நண்பராகவும், சகோதரராகவும் நடந்துகொண்டார். திரை இசையில் பிறருடைய பாணி இல்லாத என் ஸ்டைல் இசையை அவர் மிகத் திறமையாகத் தேர்ந்தெடுத்து ரோஜாவில் பயன்படுத்தினார். அது என்னையே நான் கண்டுகொள்ள உதவியது. திரை இசையின் பாடங்களை மணிரத்னம் யுனிவர்சிட்டியில்தான் படித்தேன்'' என்றார் ரஹ்மான்.

    ஹிட் காம்பினேஷன்!

    மணிரத்னம்-ரஹ்மான் காம்பினேஷன் எப்போதுமே சூப்பர் ஹிட்தான். அதற்கு ஓர் உதாரணம் சொல்லலாம். 1998-ம் வருடம் பொருளாதாரத் தேக்க நிலை ஹிந்தி சினிமா இசை மார்க்கெட்டையும் பெரிதாகப் பாதித்திருந்தது. கேசட் விற்பனை பலத்த அடி. அப்போதுதான் வெளியானது 'தில்ஸே'. ஒரே வாரத்தில் இரண்டு மில்லியன் கேசட்டுகள் அமோக விற்பனை. அடுத்த ஆறு மாதங்களில் ஆறு மில்லியன் கேசட்டுகள் சூப்பர் சேல்ஸ். இங்கிலாந்து இசை மார்க்கெட்டில் டாப் 10 பாடல்களில் இடம் பிடித்துச் சாதனை புரிந்தது தில்ஸே. ரஹ்மான் இசையின் உலகப் பயணம் அப்போதுதான் ஆரம்பித்தது. இன்று வரை ரஹ்மானின் இசை விற்றிருப்பது, 100 மில்லியன் சிடிக்கள், 200 மில்லியன் கேசட்டுகள். உலக அளவில் மிக அதிகமான இசைப்பதிவுகளை விற்றிருக்கும் இசைக் கலைஞர்களின் டாப் 25 வரிசையில் இடம் பிடித்திருக்கிறார் நம்ம ரஹ்மான்!

    - கனவு தொடரும்...

  5. #4
    Moderator Diamond Hubber littlemaster1982's Avatar
    Join Date
    Nov 2006
    Location
    Chennai
    Posts
    9,880
    Post Thanks / Like
    Thanks a ton Nerd

  6. #5
    Senior Member Diamond Hubber Nerd's Avatar
    Join Date
    Mar 2005
    Posts
    7,811
    Post Thanks / Like
    ஒரு கனவின் இசை! - ஏ.ஆர்.ரஹ்மான்
    - கிருஷ்ணா டாலின்ஸி - Part 2

    ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகர், மலையாளப் பட இசை உலகில் எத்தனையோ அற்புதமான, காலத்தை வெல்லக்கூடிய பாடல்களைத் தந்திருக்கிறார். இப்போது கம்ப்யூட்டரில் இதை எழுதிக்கொண்டு இருக்கும்போதுகூட, அதில் அவருடைய 1976-ம் வருடத்துப் பாடலான 'சோபான சங்கீத ராத்ரி' இனிமையாக ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. சேகரின் பாடல்களைக் கேட்பவர் களுக்கு, தந்தைக்கும் மகனுக்கும் இடையே தொடர்ந்து வந்திருக்கும் சங்கிலிப் பிணைப்பு போன்ற நுண்ணியமான இசைத் தொடர்பைப் புரிந்துகொள்ள முடியும்.

    முந்தைய சோவியத் ரஷ்யாவில் ஓர் இளம் வயலின் மேதை இருந்தான். எட்டு வயதிலேயே மேடைக் கச்சேரிகள் செய்யும் அளவுக்குப் புகழ் பெற்றிருந்தான். அவனுடைய அப்பா ஒரு கால்பந்தாட்டக்காரர். அம்மா, வரலாற்று ஆசிரியர். இப்படிஇருக்கையில், இந்தச் சிறுவனிடம் எப்படி வந்தது இந்த வயலின் இசை மேதைமை என்று ஆராய்ந்தார்கள் விஞ்ஞானிகள். பரம்பரை விவரங்களைத் தேடியதில் அவனுடைய தாத்தாவுக்குத் தாத்தா ஒரு வயலினிஸ்ட் என்பது தெரிய வந்தது. ரஹ்மான் என்னும் இளம் இசை மேதை யின் வேர்களை இது போல் வேறெங்கும் தேட வேண்டியதில்லை. அது, அவருடைய அப்பா விடமே நிறைந்திருந்தது.

    ஆர்.கே.சேகரைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னால், ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்...

    அது 1964-ம் வருடம்.

    வீட்டின் சுவரில் கதாகாலட்சேபம் செய்யும் ஒரு பெரியவரின் பழைய புகைப்படம் மாட்டப் பட்டு இருக்கிறது. அதில் 'கீழானூர் ராஜகோபால் பாகவதர்' என்று மங்கிய எழுத்துக்கள். அதன் கீழ் பாயில் அமர்ந்து, மெய்ம்மறந்து ஒரு டியூனை ஹார்மோனியத்தில் வாசித்துக்கொண்டு இருக்கிறார் ஆர்.கே.சேகர். ஆர்.கே.சேகர் என்பதன் விரிவாக்கம், ராஜகோபால குலசேகர் என்பதே! புகைப்படத்தில் காணும் கீழானூர் ராஜகோபால் பாகவதர், அவரு டைய தந்தை. அதாவது, ரஹ்மானின் தாத்தா. அந்தக் காலங்களில் மயிலாப்பூர் கோயில்களில் ஹரிகதை பாகவதம் சொல்லியவர்.

    சேகர் தன் ஹார்மோனியத்தில், அப்போது மலையாளத்தில் அவருடைய இசையமைப்பில் வெளியாகி ஹிட்டான 'பழசி ராஜா' ( இப்போதும் ரீ-மேக்கில் உள்ள படம் ) படத்தின் சூப்பர் ஹிட் பாடலான 'சொட்ட முதல் சுடல வரே...' என்கிற பாடலை வாசித்துக்கொண்டு இருக் கிறார். அடுத்த சில வருடங்களில் ரஹ்மானைப் பெற்றெடுக்கப்போகும் அவருடைய மனைவி கஸ்தூரி (பிற்பாடு கரீமா) அவர் வாசிப்பதை ஆனந்தத்துடன் கேட்டுக்கொண்டு இருக்கிறார். அவர் கண்கள் சந்தோஷத்தில் கலங்குகின்றன. அதைக் காணும் சேகர், தன் பாட்டை நிறுத்திவிட்டு, ''கஸ்தூரி, ஏன் அழறே? என்னாச்சு?'' என்கிறார்.

    கஸ்தூரி கண்களைத் துடைத்துக்கொண்டு ''இதுக்காகத்தானேங்க இத்தனை நாள் கஷ்டப்பட்டோம். இப்ப உங்க பாட்டுதான் கேரளாவுல பட்டிதொட்டியெல்லாம் கேக்குதுன்னு சொல்றாங்க...'' என்கிறார்.

    சேகர் ஒரு வறண்ட புன்னகையுடன் பதில் சொல்கிறார்... ''ரொம்ப சந்தோஷப்படாதேம்மா! பாட்டெல்லாம் பெரிய ஹிட்தான். ஆனா, அடுத்த படத்துக்கு ஒப்பந்தம் பண்ணத்தான் ஆள் வரலை.''

    அவர் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே ராமநாதன் என்பவர் வீட்டினுள் பவ்வியமாக நுழைகிறார். சேகரிடம் கை குலுக்கிவிட்டு, ''உங்க பழசிராஜா பாட்டெல்லாம் சூப்பர் ஹிட் சார்! அடுத்து 'ஆயிஷா'ன்னு ஒரு படம் பண்றோம். நீங்கதான் மியூஸிக் போடணும். அட்வான்ஸ் கொடுக்க வந்தேன்...'' என்று ஒரு தொகையை அவரிடம் கொடுக்கிறார். வீடெங்கும் இறைந்து கிடக்கும் இசைப்பதிவு இயந்திரங்களை, இசைக் கருவிகளை அவர் ஆச்சர்யமாகப் பார்க்கிறார்.

    ''எல்லாமே இறக்குமதி எக்விப்மென்ட்ஸ் போல இருக்கே, சார்! உங்களை மாதிரி யாரு இப்பெல்லாம் புதுமை செய்யறாங்க? எல்லாம் பழைய தேய்ஞ்சு போன ரிக்கார்டுகளையே தேய்க்கறாங்க. பழசிராஜாவுல பாட்டு

    மட்டுமில்ல, அந்தப் பாட்டுகளை நீங்க ஒலிப்பதிவு பண்ணியிருக்கிற துல்லியம் பாருங்க... யாரும் கிட்டே நெருங்கமுடியாது. சவுண்டே ரொம்ப வித்தியாசமா இருக்கு...'' என்று பாராட்டிப் பேசும் ராமநாதன் தன் குரலைச் சற்றுக் கீழிறக்கி, ''சேகர் சார், பாலிடிக்ஸ் பேசறேன்னு தப்பா நினைக்கக் கூடாது. என்னடா,

    தமிழ் நாட்டுலேர்ந்து ஒருத்தன் வந்து மியூஸிக்ல என்னென்னமோ புதுமை பண்றானேனு இங்கே சில ஜாம்பவான்கள் பொருமிக்கிட்டு இருக்காங்க. தமிழ் ஆளுங்கன்னாலே இவங்களுக்குக் கொஞ்சம் அலர்ஜி! எதுக்கும் ஜாக்கிரதையா இருந்துக்கோங்க'' என் கிறார்.

    அதில் சற்றும் கலவரப்படாத சேகர், ''வளர வேண்டியவங்க வளருவாங்க ராமநாதன் சார். யாரும் யாரையும் எதுவும் செய்ய முடியாது. அவங்கவங்களுக் குப் போக வேண்டிய அரிசியில அவங்க பேரு எழுதி இருக்கும்!'' என்று சொல்லிக் கை கூப்பி விடையளிக்கிறார்.

    ஆர்.கே.சேகர்... மலையாளப் பட இசை உலகில் முற்றிலும் புதிய சிந்தனைகளுடன், ஆரவாரமில்லாமல் நுழைந்த தமிழர். ஆனால், அங்கே அவரை மனதார வரவேற்க, ரசிகர்களைத் தவிர வேறு யாரும் இல்லை. ஏனென்றால், ஒரு மரபுரீதியான கேரள இசைக்கு மட்டுமே பழக்கப்பட்டு இருந்த மலையாளப் பட இசை உலகம், அந்த இசைப் பாணியை மட்டுமே பிடிவாதமாக விரும்பியது. வேற்றொரு இசையின் 'புதியன புகுதலில்' யாரும் ஆர்வம் இல்¢லாமல் இருந்த சூழல்.

    சலீல் சவுத்ரி போன்ற ஒரு சில இசையமைப்பாளர்களே அங்கே தங்கள் தனித்திறமையால் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தார்கள். இ¬சயில் பல புதுமைகள் செய்திட வேண்டும் என்று விரும்பிய ஆர்.கே.சேகருக்கு, அப்போது அங்கே ரத்தினக் கம்பளம் கிடைக்காததில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. மாபெரும் கலைஞர்கள் பலரைச் சமூகம் தன் அறியாமையால் கண்டுகொள்ளாமல் கை விட்டிருப்பது சரித்திரம். ஆனால், அதைப் பற்றி சேகர் கவலைப்பட்டதே இல்லை. படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு தனக்கு வருகிறதா இல்லையா என்பதெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல. இசை வேலைகளில் எப்போதும் ஈடுபட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்பது மட்டுமே அவருடைய ஒரே குறிக்கோள். ஓய்வு ஒழிச்சலின்றி உழைத்து, சரியான உணவு உட்கொள்ளும் பழக்கமும் இல்லாமல், ஒரு 'வொர்க்கஹாலிக்'காகப் பணியாற்றியதன் விலையை மிக இளம் வயதிலேயே அவர் கொடுக்க வேண்டி இருந்தது.

    இந்தியத் திரை இசையின் முதல் ஒலிப்பதிவான, 1902-ல் வெளியான 'கௌஹார் ஜான்' பாடல் முதற் கொண்டு லேட்டஸ்டாக வெளியான ரஹ்மானின் 'டெல்லி 6' வரை ஏகப்பட்ட இசைத் தொகுப்புகளைத் தனிப்பட்ட ரசனைக்காக ஒரு பொக்கிஷம் போல் பாதுகாத்து வைத்திருக்கும் இசை விமர்சகர், எழுத்தாளர் ஷாஜி.

    இவர், ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகர் இசைஅமைத்த பல பாடல்களின் தொகுப்பை சிடிக்களில் பதிவு செய்து, ரஹ்மானிடம் கொடுத்திருக்கிறார். ரஹ்மானிடமே அந்தப் பாடல்கள் இல்லை. தன்னிடம் கைவசம் இல்லாத தன் தந்தையின் அபூர்வமான பாடல்களைக் கேட்கும் ஒரு மகனின் பரவச மனநிலையை நீங்கள் யூகித்துக்கொள்ளலாம்.

    ''கேரளாவில் மெல்லிசைக் குழுக்கள் அன்று முதல் இன்று வரை மேடைகளில் தவறாமல் பாடி வரும் ஒரு பாடல், 'பழசிராஜா' படத்தில் ஆர்.கே.சேகரின் இசையமைப்பில் உருவான யேசுதாஸ் பாடிய 'சொட்ட முதல் சுடல வரே' என்கிற பாட்டு. கடந்த 40 வருடங்களாக எவர்கிரீன் புகழுடன் இருக்கும் அந்தப் பாடல், யேசுதாஸின் பிரபல ஆரம்ப மலையாளப் பாடல்களில் ஒன்று. ஆர்.கே.சேகர் மொத்தம் 22 மலையாளப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அதில் நூற் றுக்கும் மேற்பட்ட பாடல்கள் இன்றளவும் கேரள மக்கள் மனதில் பசுமையாகநிலைத்திருக்கின்றன.

    தனிப்பட்ட முறையில் மிகச் சிறந்த கம்போஸராக இருந்தாலும், அன்றைய காலகட்டத்தில் இசை கோப்பாளராகவும், இசை நடத்துனராகவும் பணிபுரிய அவரைப் போன்ற மிகத் திறமையானவர்கள் தேவைப்பட்டார்கள். எனவே, இசைப் பணியின் மீது தணியாத பித்துக்கொண்ட சேகர், அந்தப் பொறுப்புகளை எல்லாம் உவகையுடன் ஏற்றுக்கொண்டார்'' என்கிறார் ஷாஜி.

    அந்தக் காலகட்டங்களில் சேகர் கொடுக்கும் இசை 'நோட்'டுகளை காம்போ ஆர்கனிலும், கிட்டாரிலும் வாசிப்பவராகப் பணியாற்றியிருக்கிறார் இளையராஜா. பின்னாளில் சேகரின் மகன் ரஹ்மான், இளையராஜாவிடம் கீ போர்டு வாசிப்ப வராகப் பணியாற்றியது ஓர் ஆங்கிலப் பழமொழியை நினைவுபடுத்துகிறது - 'History repeats itself'.

    ''தமிழக அரசுப் பணியில் மின்சாரத் துறைப் பணியாளராகத் தன் வாழ்வைத் துவக்கிய சேகர், ஒரு கட்டத்தில் இசைத் துறைக்கு மாறினார். ஹார்மோனியக் கருவியில் இயல்பாகவே மிகுந்த திறமையுடன் இருந்த அவர், தட்சிணாமூர்த்தியிடம் கர்னாடக இசை கற்றுத் தேர்ந்தார். கொஞ்சம் கொஞ்சமாக இசையின் பல்வேறு பரிமாணங்களையும் புரிந்துகொண்ட இசை கோப்பாளராகவும் (arranger) இசை நடத்துனராகவும் (conductor) மாறினார்.

    மலையாளப் பட இசை உலகில் திறமையான இசையமைப்பாளர்கள் இருந்தனர். அவர்களில் டியூன் போடுவதில் திறமை பெற்றிருந்த பலர், அதை ஒர் அமைப்புரீதியான இசைப்படிவமாக மாற்றக்கூடிய, சரியான இசை 'நோட்'டுகளை எழுதி வாத்தியக்காரர்களுக்குக் கொடுக்கக்கூடிய திறன் இல்லாமல் இருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரு வரப்பிரசாதமாக இருந்தார் சேகர்.

    'பழசிராஜா' படத்தின் மூலம் சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்து மலையாளப் பட இசைத் துறையில் புயலெனப் புகுந்த ஆர்.கே.சேகர், தன் அடுத்த பட வாய்ப்புக்காக எட்டு வருடங்கள் காத் திருந்ததையும், நடுவே பொருளாதாரத் தேவைகளுக்காக இப்படிப்பட்ட இசை நடத்துனர் வாய்ப்புகளைத் தட்ட முடியாமலும் இருந்ததைப் பற்றிய நிலையை என்னவென்று சொல்வது?'' என்று பெருமூச்சு விடுகிறார் ஷாஜி.

    ஓய்வு ஒழிச்சலில்லாத சேகரின் இசைப் பணி ராப்பகலாக நடந்தது. வீட்டைவிட்டு வெளியே செல்லும் சேகர், வேலை முடிந்து எப்போது வீடு திரும்புவார் என்று அவர் குடும்பத்தினருக்கே தெரியாது. அந்த ஓயாப் பணியும் அலைச்சலும், கடும் உழைப்பும்தான் ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகரை ஒரு கட்டத்தில் படுத்த படுக்கையில் தள்ளியது!

    - கனவு தொடரும்...

  7. #6
    Moderator Diamond Hubber littlemaster1982's Avatar
    Join Date
    Nov 2006
    Location
    Chennai
    Posts
    9,880
    Post Thanks / Like
    ஒரு கனவின் இசை! ஏ.ஆர்.ரஹ்மான்

    - கிருஷ்ணா டாலின்ஸி Part 3

    ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகர் இடைவிடாமல் பணி புரிந்த காலத்தில் உணவைப் பற்றியோ, ஓய்வைப் பற்றியோ கவலைப்பட்டதே இல்லை. டீயும் ஒரு சில பிஸ்கட்டுகளையும் மட்டுமே சாப்பிட்டுவிட்டு, ரிக்கார்டிங் தியேட்டரே கதி எனக் கிடந்தார். சில சமயம், நள்ளிரவு நேரங்களில் அவருக்குக் கடும் வயிற்று வலி ஏற்படும். வலி பொறுக்க முடியாமல், தலையணையை வயிற்றுக்குக் கொடுத்து குறுகிப் படுத்துக் கிடப்பார். உயிரைக் கொல்லும் அந்த வலி கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியதும், மெள்ளக் கண் அயர்வார். இமை மூடி ஓரிரு மணி நேரமே ஆகியிருக்கும்... அதற்குள் விடிய ஆரம்பித்துவிடும். காலை ஏழு மணிக்கே இசைக் கலைஞர்கள் காத்திருப்பார்களே என்கிற அலாரம் அடித்ததும், தூக்கம் கலைந்து எழுந்து ஒலிப்பதிவுக் கூடத்துக்கு ஓடுவார். வயிற்று வலியைப் பற்றி மருத்துவரிடம் ஆலோசிக்கக்கூட நேரம் இல்லை. அந்த வலியைப் பற்றி அவர் யாரிடமும் சொல்வதும் இல்லை. இதில் மற்றொரு சோகம் என்னவென்றால்... மகத்தான இசையமைப்பாளரான அவர், தனக்கான பட வாய்ப்புகள் இன்றி, பிற இசை அமைப்பாளர்களுக்கே வேலை செய்ததுதான். 'பழசிராஜா' படத்தில் அருமை யான 10 பாடல்களைக் கொடுத்தார் சேகர். அதில் ஏ.எம்.ராஜாவும் எஸ்.ஜானகியும் பாடிய 'சிறகற்று வீணொரு கொச்சுத் தும்பி...', பி.சுசீலா பாடிய பிரபல தாலாட்டுப் பாடலான 'முத்தே வாவாவோ' போன்ற பாடல்கள் இன்றைக்கும் கேட்பதற்கு சுகானுபவம் தரும். 'சாயிபே... சாயிபே... அஸ்லாமு அலைக்கும்' என்கிற பாட்டு அங்கே ஒரு டிரெண்ட்செட் டர். அதற்கடுத்து அவர் இசையமைப்பில் பல வருடங்களுக்குப் பின் வெளிவந்த 'ஆயிஷா' படத்தில் பி.பி.னிவாஸ் பாடிய 'யாத்ரகாரா போவுக... போவுக...' பாட்டு பி.பி.னிவாஸின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று. ஆனாலும், ஒரு மனிதனால் எவ்வளவு நாட்கள்தான் இசை அமைக்கும் வாய்ப்பு கிடைக் காமல் பொருளாதாரரீதியாகச் சமாளிக்க முடியும்? நாட்கள் செல்லச் செல்ல, ஆர்.கே.சேகரின் நோய் தன் கொடூரக் கரங்களால் அவரைச் சுற்றி வளைத்தது. நடமாட முடியாதபடி படுக்கையில் விழுந்தார். சிறுவனாக இருந்த திலீப் அப்போது மருத்துவமனைக்குத் தினமும் சென்று அப்பாவைப் பார்த்த ஞாபகங்கள், அவரது மனதில் நீங்காத சித்திரங்களாகப் பதிந்திருக்கின்றன.

    அப்பா மருத்துவமனை கட்டிலில் படுத்திருக்கிறார். சுற்றிலும் நிற்கும் அவருடைய உதவியாளர்கள், அவர் சொல்லும் இசை நோட்டுகளைக் குறிப்பெடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். சில சினிமா இயக்குநர்கள் வந்து, ''இந்த நிலைமையில் இப்படிச் சொல்லக் கஷ்டமா இருக்கு. ஆனா, நீங்க எழுந்து வந்தால்தான் எங்க பட மியூஸிக் எல்லாம் கம்ப்ளீட் ஆகும்'' என்று சங்கடத்துடன் சொல்கிறார்கள். நோயின் தீவிரத்துக்கு நடுவிலும் டியூன்களைக் கேட்டு அதற்கான அரேஞ்ச்மென்ட் நோட்டுகளை எழுதிக் கொடுக்கிறார் சேகர். பிரபல திரைப்படப் பாடலாசிரியர் குமாரன் தம்பி வந்து சேகரின் கைகளைப் பற்றிக்கொண்டு, ''சீக்கிரமே குணமடைஞ்சு வாங்க. நாம சேர்ந்து மறுபடியும் மியூஸிக் செய்யலாம்'' என்கிறார். இருவரும் இணைந்து பல படங்களில் சிறந்த பாடல்களைக் கொடுத்தவர்கள். ஒரு வறண்ட புன்னகையை அவருக்குப் பதிலாக அளிக்கிறார் சேகர். தன் நோயைப் பற்றிய தீவிரம் அவருக்கு அப்போது தெரிந்தே இருந்தது. சிறுவன் திலீப் இந்தக் காட்சிகளை எல்லாம் ஒரு வித பிரமிப்புடனும் குழப்பத்துடனும் பார்க்கிறான்.

    ஒரு தேனீயைப் போல் சுறுசுறுப்பாகச் சுழன்று வேலை பார்த்த அப்பாவுக்குத் திடீரென்று என்ன ஆனது என்று புரியவில்லை. அப்பா ஒரு சிறந்த இசைக் கலைஞர் என்பது மட்டும்தான் தெரியும். வீட்டில் அப்பா சேகரித்து வைத்திருந்த இசைத் தட்டுகளும், இசைக் கருவிகளும் தான் திலீப்பின் விருப்பமான உலகம். விரைவில் அப்பாவுக்கு உடம்பு சரியாகி விடும், முன்பு போல் அவர் உற்சாகமாக இசைப் பணிகளுக்குத் திரும்புவார் என்று திலீப் நம்பினான். ஆனால், அந்த நம்பிக்கை நனவாகவில்லை. அப்பாவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோச மாகியது.


    சேகரின் 31-ம் வயதில்தான் திருப்பதியில் திருமணம் நடந்தது. கஸ்தூரியை மனைவியாக்கிக்கொண்டவருக்கு காஞ்சனா, திலீப், பாலா, ரேகா என்று அடுத்தடுத்துக் குழந்தைகள். அப்போது மலையாளப் பட உலகில் பல புதுமைகளைப் புகுத்தி வந்தார் சேகர். பாலமுரளி கிருஷ்ணா வையும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தையும் அங்கே அறிமுகப்படுத்தியவர் அவர்தான். கே.ஜே.யேசுதாஸின் பிரமாண்டமான கோட்டையை ஊடுருவுவது மலையாளத்தில் அப்போது யாராலும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத காலகட்டம். 1972-ல் வெளியான 'மிஸ் மேரி' படத்தில் சேகர் இசையமைத்த பி.சுசீலாவின் 'நீயென்றே வெளிச்சம்' பாடல் இன்றைக்கும் கிறிஸ்துவ மேரி மாதா பக்திப் பாடல்களில் ஒன்றாகக் கேரளத்தில் பாடப்படுகிறது.

    ரஹ்மானிடம் இப்போது நாம் காணும் புதிய டெக்னாலஜியில் உள்ள ஆர்வம் அப்போதே ஆர்.கே.சேகரிடம் வெளிப்பட்டிருக்கிறது. அவர் அடிக்கடி சிங்கப்பூர் சென்று இசைக் கருவிகள் புதிதாக என்னென்ன வந்திருக்கின்றன, இசைப் பதிவு டெக்னாலஜியில் என் னென்ன மாற்றங்கள் வந்திருக்கின்றன என்றெல்லாம் அவதானித்தபடி இருந்திருக்கிறார். ஒரு சில குரல்களையே மீண்டும் மீண்டும் கேட்டு அலுத்துப்போயிருந்த நமக்குப் பல புதிய புதிய குரல்களை அறிமுகப் படுத்தி இசை கேட்கும் அனுபவத்தையே மாற்றிக் காட்டியவர் ரஹ்மான். அதற்கு முன்னோடியாக இருந்திருக்கிறார் அவருடைய தந்தை ஆர்.கே.சேகர்.

    ''அன்றைய காலகட்டத்தில் சினிமாவுக்குப் பாடுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. ரிக்கார்டிங் ஸ்டுடியோக்களெல்லாம் இரும்புக்கோட்டைகள். யாரும் அத்தனை சீக்கிரத்தில் உள்ளே புக முடியாது. ஆர்.கே.சேகர் அந்தக் கோட்டையின் கதவுகளைப் புதிய பாடகர்களுக்காகத் திறந்துவிட்டார். பிரும்மானந்தன், சதானந்தன், சுதா வர்மா, கோபால கிருஷ்ணன், சோமன், பொன்குந்நம் ரவி, ஜெயலக்ஷ்மி, கஸ்தூரி சங்கர், மனோகரன், அம்பிளி, ஜெய போன்று எத்தனையோ பாடகர்களை அறிமுகம் செய்தார் சேகர். அந்த 'லெகஸி', அவர் மகன் ரஹ்மான் வழியே தொடர்கிறது.

    ஆர்.கே.சேகர் மலையாளத்தில் 110 பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். யேசுதாஸ், ஜெயச்சந்திரன், பி.சுசீலா, வாணி ஜெயராம் போன்ற பாடகர்கள் அவருடைய இசையில் எண்ணற்ற பிரமாதமான பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். இன்றைக்கும் சேகரின் இசை கேரளத்தில் வற்றாத ஜீவ ஊற்றாகத் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

    ஆர்.கே.சேகர் கடைசியாக இசையமைத்த படம் 1976-ல் வெளியான 'சோட்டாணிக்கர அம்ம'. அதில் இடம்பெற்ற 'மனசு மனசின்றே காதில்' என்கிற பாட்டு இன்றைக்கும் கேரளாவின் 'நீங்கள் கேட்டவை'யாக ஒலிக்கும் அற்புதமான பாட்டு. அந்தப் படம் வெளியான அதே நாளில் இந்த உலகைவிட்டு மறைந்தார் ரஹ்மானின் தந்தை சேகர். அப்போது அவருடைய வயது 42.

    திலீப்புக்கோ வயது 9.

    சேகருக்கு யாரோ சூனியம் வைத்ததால்தான் இறந்தார் என்கிற வதந்தி அப்போது இசையுலகில் எழுந்து அடங்கியது. சரியாகக் கவனிக்கப்படாத அல்சர்தான் அவர் உயிரைப் பறித்தது என்கிறார்கள், அவரை நன்கு அறிந்த சிலர்!

    ஏ.ஆர்.ரஹ்மானின் வீட்டில் இன் றைக்கு இந்தியாவின் புகழ்பெற்ற இயக்கு நர்களும் தயாரிப்பாளர்களும் அவரு டைய நேரத்துக்காகக் காத்திருக்கிறார்கள். எத்தனைப் பணம் கேட்டாலும் கொட்டிக் கொடுக்கத் தயாரிப்பாளர்கள் ரெடி! இது இன்றைய நிலைமை. ஆனாலும் சரியான வாய்ப்புகள் கிடைத்து ஒரு நட்சத்திரமாக மின்ன முடியாமல் போன இசைமேதையான தன் அப்பாவைப் பற்றிய பழைய நினை வுகள் ரஹ்மானை அலைக்கழித்தபடியே தான் இருக்கின்றன.

    ''எனக்கு வாழ்க்கையில் முதன்முதலாக அறிமுகமான இசையே அப்பாவின் இசை தான். அப்பாவின் விரல்களைப் பிடித்துக் கொண்டு நானும் ரிக்கார்டிங் தியேட்டர் களுக்குச் செல்வேன். பெரிய பெரிய இசையமைப்பாளர்களும் இயக்குநர்களும் என் அப்பாவிடம் மரியாதையாக நடந்துகொள்வதைப் பார்ப்பேன். அப்பாவை நினைத்தால் பெருமையாக இருக்கும். பிற்காலத்தில் நானும் ஒரு இசை கோப்பா ளனாகப் பணி புரிந்தபோதுதான் அவருடைய பணியின் உன்னதம் எனக்குப் புரிந்தது.

    ஒரே சமயத்தில் அவர் பல படங்களுக்கு வேலை செய்வார். ஒரு படத்தில் அவர் இசையமைப்பாளராக இருப்பார். அதே நேரம், மற்ற படங்களுக்கு கண்டக் டராகவும், அரேஞ்சராகவும் வேலை செய்வார். ஓய்வற்ற கடும் உழைப்பால்தான் அவர் இறந்தார் என்று எண்ணுகிறேன். அவரால் உதவி பெற்ற எத்தனையோ பேர் இன்றைக்கும் என்னிடம் வந்து நன்றி சொல்லும்போது, என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை. அவர் எனக்கு ஒரு முன்னுதாரணமாக வாழ்ந்திருக்கிறார்'' என்கிறார் ரஹ்மான் நெகிழ்ச்சியோடு.

    தன் ஹீரோவான தந்தை ஆர்.கே.சேகரின் அதிர்ச்சியான மரணமும், அதைத் தொடர்ந்து அவர் வாழ்வில் நிகழ்ந்த எதிர்பாராத சம்பவங்களும்தான் திலீப்பை அல்லா ரக்கா ரஹ்மானாக மாற்றியது!


    - கனவு தொடரும்...

  8. #7
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    3,162
    Post Thanks / Like
    Nerd

    (but for me, its a strain on eyes to read tamil esp long articles )

    Anyway, I will read it

  9. #8
    Moderator Diamond Hubber littlemaster1982's Avatar
    Join Date
    Nov 2006
    Location
    Chennai
    Posts
    9,880
    Post Thanks / Like
    ஒரு கனவின் இசை! ஏ.ஆர்.ரஹ்மான்

    - கிருஷ்ணா டாலின்ஸி Part 4

    அப்பா மூலமாகத்தான் திலீப் என்ற ரஹ்மானுக்கு மிகச் சிறு வயதி லேயே இசையிலும் இசைப்பதிவு நுட் பத்திலும் தணியாத ஆர்வம் ஏற்பட்டது. வீட்டில் எப்போதும் இசையைக் கேட்ட படி வளர்ந்த திலீப்புக்கு, திடீரென்று அப்பாவை நோய் தாக்கியதையும், கிட்டத்தட்ட மூன்று வருடங்கள்

    அந்த நோயின் கடுமையான தாக்குதலால் அவர் துடிதுடித்ததையும் நேரில் கண்டபோது, அச்சமாக இருந்தது. சகோதரிகளும் மனம் நொந்தார்கள். அதே போன்ற பிரச்னைகள் மீண்டும் மீண்டும் தங்கள் குடும்பத்தினரைத் தாக்கினால் எப்படிச் சமாளிப்பது என்கிற இனம் புரியாத பயம் அந்த இளம் பிஞ்சுகளை அப்போது ஆட் கொண்டது.

    அந்த மறக்க முடியாத நாட்களைப் பற்றி நினைவு கூர்கிறார் ரஹ்மானின் தாய் கரீமா. ''புள்ளைங்கல்லாம் ஸீஸ்கூலுக்குப் போயிக்கிட்டிருக்குதுங்க. திடீர்னு அவங்க அப்பா படுத்த படுக்கை ஆயிட்டாரு. எனக்கு உலகமே இருண்டிருச்சு. அவரைக் கவனிப்பேனா... பிள்ளைங்களைக் கவனிப்பேனா? ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் அலைவேன். காரணமே புரியாம ரொம்ப நாள் ஆஸ்பத்திரியில இருந்தவரு ஒருநாள் இறந்தே போயிட்டாரு. நாங்க இடிஞ்சுபோயிட்டோம். எந்த நேரமும் ஹார்மோனியமும் கையுமா இருந்த ரஹ்மானுக்கு அப்பா இறந்ததுல ரொம்பவே பாதிப்பு. ஸ்கூல் படிப்பைக்கூட அதால சரியா படிக்க முடியலை. சின்னப் பிள்ளையை ஸ்டுடியோ வேலைகளுக்கு அனுப்பியே ஆகணும்னு கட்டாயம். ஆனா, அதுக்கெல்லாம் ஒரு விடிவுக் காலம் வரும்னு நான் மனசார நம்பினேன்.''


    நோயின் தீவிரம் கடுமையான காலகட்டத்தில் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் ஆர்.கே.சேகர் அனுமதிக்கப் பட்ட போது, திலீப்பும் சகோதரிகளும் அடிக்கடி போய்ப் பார்ப்பார்கள். உடல்நலம் வாட்டிய போதும் குழந்தைகளிடம் அதை மறைத்துக்கொண்டு அப்பா புன்னகைப்பார். ''நல்லாப் படிக்கணும். ஸ்கூலுக்கு லீவு போடக் கூடாது. அம்மா சொல்றபடி நடந்துக்கணும்'' என்றெல்லாம் அறிவுரைகள் சொல்வார். மகன் திலீப்பிடம் பேசும்போது மட்டும் அவருக்குத் தனியாக ஒரு பாசம் பொங்கி வரும். அவனை அள்ளி அணைத்து உச்சிமுகர்வார். அதற்கு ஒரு தனிப்பட்ட காரணமும் இருந்தது.

    ரஹ்மானின் மூத்த சகோதரியான இசையமைப்பாளர் ரைஹானா சொல்கிறார்... ''கல்யாணமான புதுசுல எங்கப்பாகிட்டே யாரோ ஒருத்தர் 'உங்களுக்கு ஒரு மகன் பிறப்பான். அவன் பெரிய புகழை அடைவான்'னு சொல்லியிருக்காரு. அப்பாவும் அதை எதிர்பார்த்து ரொம்ப ஆவலா காத்திருந்தாரு. ஆனா, முதல்ல நான் பிறந்தேன். என்கிட்டே அவர் ரொம்பப் பாசமா இருந்தாலும், அவர் மனசுக்குள்ள அந்தக் குறை இருந்துகிட்டே இருந்தது. அடுத்ததா திலீப் பிறந்ததும், அவரால சந்தோஷத்தைத் தாங்க முடியல...''

    வாழ்வில் அற்புதங்கள் நிகழும், அது கடவுள் மூலமாக நடக்கும் என்கிற நம்பிக்கை ரஹ்மானின் குடும்பத்தில் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும் யாரோ ஒருவர் வந்து, சில எதிர்காலச் செய்திகளைச் சொல்லி வாழ்த்திவிட்டுப் போனதாகச் சொல்கிறார்கள். சேகர் இறந்துபோன அறை இருந்த இடத்தில் இசைப்பதிவுக் கூடத்தைக் கட்டச் சொல்லி ஆசீர்வதித்துவிட்டுப் போனாராம் ஓர் இஸ்லாமிய குரு. அங்கேதான் 'பஞ்சதன்' ஸ்டுடியோ கட்டப்பட்டது. 'ரோஜா' அங்கேதான் முதன்முதலில் மலர்ந்தது.

    ''ரஹ்மான் ஒரு 'ப்ளூ பேபி'யாகத்தான் பிறந்தார். குழந்தை உயிர் பிழைக்குமாங்கிறதே பெரிய கேள்வியா இருந்தது. அப்பா அப்ப ரொம்ப டென்ஷனா இருந்தார். எப்படியோ, குழந்தை உயிர் பிழைச்சது. அப்பா முகத்துல பெரிய நிம்மதி. குழந்தை வளர வளர... அதுகிட்டே பெரிய இசைத் திறமை இருந்ததைப் பார்த்தவர் ரொம்ப உற்சாகமானார். தம்பிகிட்டே எப்பவும் ஒரு ஸ்பெஷல் இன்ட்ரெஸ்ட் காட்டுவார். தன்கூடவே ரெகார்டிங் ஸ்டுடியோக்கள்லாம் கூட்டிட்டுப் போயி இசை உலகத்தை அறிமுகப்படுத்திவெச்சார். ஆனா, எந்தப் பாரபட்சமும் காட்டாமல், என்னையும் ரஹ்மானையும் ஒரே நேரத்தில் பியோனோ, கிடார் வகுப்புகள்ல பைலட் எட்வின், தன்ராஜ் மாஸ்டரிடம் சேர்த்துவிட்டார். நாங்க வாசிக்கிறதையும் பாடுறதையும் ரொம்ப ரசிச்சுக் கேட்பார். அப்பல்லாம் பாட்டும் கூத்துமா எங்க குடும்பமே ரொம்ப ஜாலியா இருப்போம். எங்க எல்லாருக்குமே அப்பான்னா ரொம்பப் பிரியம். அவர் தந்ததுதானே எல்லாமே! எவ்வளவு அற்புதமான வாழ்க்கை. அப்பா திடீர்னு இறந்துபோனதும் ஸ்தம்பிச்சுப் போயிட்டோம்'' என்று அந்த நினைவலைகளில் ஆழ்கிறார் ரைஹானா.

    அதற்குப் பிறகு என்ன ஆனது?

    ஆர்.கே.சேகரின் சமகால மலையாள இசையமைப்பாளரான அர்ஜுனன் மாஸ்டர் இப்போது கேரளாவின் கோட்டயத்தில் தன் 73-ம் வயதிலும் சுறுசுறுப்பாக திரைப்பட இசை வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார். குரல் லேசாகத் தடுமாறினாலும் பழைய நினைவுகளை அவர் தன் இதயத்திலேயே வைத்திருக் கிறார்.

    ''உண்மையிலேயே ரஹ்மானோட அம்மாவை ஒரு தீர்க்க தரிசின்னுதான் சொல்லணும். சேகர் இறந்தபோது திலீப் ரொம்பச் சின்னப் பையன். ஆனா, அப்பவே என்னைப் போன்ற மியூஸிக் டைரக்டர்களை எல்லாம் சந்திச்சு, என் மகனுக்கு இசை வாய்ப்பு கொடுங்க... அவன்கிட்டே பெரிய திறமை இருக்குன்னு சொல்லுவாங்க. 'எங்க சேகர் பையனாச்சேம்மா... நீங்க இவ்வளவு தூரம் சொல்லணுமா? உடனே திலீப்பை வரச் சொல்லுங்கம்மா'ன்னு நாங்களும் சொல்வோம். அற்புதமா கீ போர்டு வாசிப்பான். மியூஸிக் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்ல வர்ற ரிப்பேரெல்லாம் திலீப் ரொம்ப ஈஸியாச் சரிபண்ணிடுவான். அவனை கீ போர்டு வாசிக்கவைக்கலாமேனு தோணிச்சு. ஆனா, ரொம்பச் சின்னப் பையனா இருக்கானேன்னு யோசிச்சோம். வாய்ப்பு கொடுத்தபோது பொளந்து கட்டினான். அப்பதான் அவன் ஒரு மியூஸிக்கல் பிராடிஜின்னு எங்களுக்குப் புரிஞ்சது. எங்களுக்கு முன்னாடியே அந்த உண்மை அவன் அம்மாவுக்குப் புரிஞ்சிருந்ததுதான் அற்புதமான விஷயம். அப்ப நாங்க திலீப்புக்குக் கொடுத்தது ரொம்ப சொற்பச் சம்பளம். எதுவுமே சொல்லாம புன்னகையோடு அந்தத் தொகையை வாங்கிக்கிட்டுப் போகும் அந்தப் பையன். அந்த அமைதியும் மெச்சூரிட்டியும்தான் ரஹ்மானை இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கு!''

    ஆருயிர்த் தந்தை திடீரென்று இறந்துபோனது ரஹ்மானின் இசை வாழ்க்கையில் ஒரு முக்கியமான திருப்புமுனைக் கட்டம். பள்ளிப் படிப்பா, இசைத் தொழிலா என்கிற சவாலை அவர் அப்போது சந்திக்க நேர்ந்தது. படிப்பில் சுமாராகவே ஸ்கோர் பண்ணிக்கொண்டு இருந்த திலீப், இசையைத் தேர்ந்தெடுத்தான். படிப்பை விடுகிறோமே, எதிர்காலம் என்ன ஆகும் என்கிற பதற்றம் கொஞ்சமும் இல்லை.

    பத்மாசேஷாத்ரி, எம்.சி.சி போன்ற சிறந்த பள்ளிகளில் படித்தாலும், மனம் படிப்புக்கும் இசைக்கும் இடையே அலை பாய்ந்தது. படிப்பு அத்தனை சூட்டிகையாக வரவில்லை. ஆனால், மனம் எங்கும் இசை ஆழ் நதிப் பிரவாகமாக ஓடிக்கொண்டு இருந்தது. அணை திறந்துவிடப்படு வதற்காக அந்த நதி காத்திருந்தது. அப்பா இல்லாமல், வீட்டின் பொருளாதார நிலைமையும் மோசமாகி இருந்த சமயம் அது. ஏதாவது செய்தே ஆக வேண்டிய கட்டாயம்.

    'இடிந்து கருகிய வீட்டில் ஒற்றைச் செடி பூத்திருந்தது' என்று ஒரு ஜப்பானிய ஹைக்கூ உண்டு. அது மாதிரிதான் பள்ளிப் படிப்பை நிறுத்தினான் திலீப். பாடப் புத்தகங்களைக் கீழே போட்டுவிட்டு, இசைக் கருவிகளைக் கையில் எடுத்தான். ஒரு புதிய சகாப்தம் தொடங் கியது.

    ஆர்.கே.சேகரின் மேல் பெரிய மரியாதை வைத்திருந்த இசைக் கலைஞர்கள் சிறுவன் திலீப்பை அன்புடன் வரவேற்றார்கள். அள்ளி அணைத்துக்கொண்டார்கள். இசைப்பதிவுக் கூடங்களில் ஒரு பிரகாசமான சிறுவன், இசைக் கருவிகளைத் தூக்கிக்கொண்டு வரும் காட்சி எல்லோருக்கும் மிகப் புதுமையாகவும் ஆச்சர்ய மாகவும் இருந்தது. ஆர்.கே.சேகரையே மீண்டும் இன்னொரு வடிவத்தில் பார்ப்பது போல் அவர்களுக்குத் தோன்றியது.

    சிறுவன் திலீப்பின் அமைதியான குணமும், எப்போதும் மலரவிட்டபடி இருக்கும் புன்னகை யும், ஒரு வார்த்தைகூட அதிர்ந்து பேசாத தன்மையும் எல்லோருக்கும் பிடித்தது. விரைவிலேயே எல்லா இசையமைப்பாளர்களின் செல்லப் பிள்ளையாக மாறினான் திலீப்.

    ''இப்ப அந்தக் குழந்தை ஆஸ்கர் அவார்டு எல்லாம் ஜெயிக்கும்போது பார்க்கப் பரவசமா இருக்கு. சேகர் இதையெல்லாம் இன்னொரு உலகத்துல இருந்து பார்த்துக்கிட்டே இருக்கிற மாதிரி தோணுது. அப்பப்ப ரஹ்மான் என்கிட்டே போன்ல மறக்காம பேசும். ரொம்ப ஆனந்தமா இருக்கும். ஆண்டவனோட நல்லாசிகள் அந்த நல்ல மனம் படைச்ச பையனுக்கு பரிபூர்ணமா இருக்குன்னு தோணுது'' என்கிறார் அர்ஜுனன் மாஸ்டர் நெகிழ்வாக.

    11 வயதுச் சிறுவனாக ஸ்டுடியோக்களில் காலடி எடுத்துவைத்த திலீப், அடுத்த சில வருடங்களிலேயே மிக வேகமாக வெற்றிப் படிகளில் ஏற ஆரம்பித்தது ரகளையான இளமைக் கதை!



    - கனவு தொடரும்...

  10. #9
    Senior Member Seasoned Hubber lancelot's Avatar
    Join Date
    Apr 2005
    Location
    Sri Lanka
    Posts
    1,104
    Post Thanks / Like
    would it be like very rude of me to ask you guys to translate this for me?

    hehe

  11. #10
    Senior Member Diamond Hubber Nerd's Avatar
    Join Date
    Mar 2005
    Posts
    7,811
    Post Thanks / Like
    ஒரு கனவின் இசை! ஏ.ஆர்.ரஹ்மான்
    - கிருஷ்ணா டாலின்ஸி Part 5

    ரெக்கார்டிங் ஸ்டுடியோக்களுக்கு இசைக் கருவிகளை வாடகைக்கு எடுத்துச் சென்ற திலீப்பை, அந்தக் கருவிகளில் ஒன்றான கீ-போர்டு மிகவும் வசீகரித்தது. அப்பா சிங்கப்பூரில் இருந்து வாங்கி வந்திருந்தது. அந்த டிஜிட்டல் ஒலி கேட்பதற்கே மிகவும் புதுமையாக இருந்தது. அந்தத் துல்லியமான சத்தத்தை இங்கே இசைப் பதிவில் ஏன் கொண்டுவர முடிவதில்லை என்று நண்பர்களிடம் ஆதங்கத்துடன் விவாதிப்பார் திலீப். மேல்நாட்டு இசையில் புதிய 'சவுண்ட்' புரட்சிகள் வெடித்துக்கொண்டு இருந்த காலம் அது.

    அப்போதெல்லாம் சென்னையைவிட பெங்களூரில்தான் இசைக் கடைகள் அதிகம். ரஹ்மானும் நண்பர்களும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பெங்களூருக்குச் சென்று, தங்களுக்குப் பிடித்த மேற்கத்தியப் பாடல்களை கேசட்டுகளில் பதிவுசெய்து வருவார்கள்.

    12 வயது திலீப்புக்கு அப்போதுதான் டிஜிட்டல் இசையிலும் ஆடியோகிராஃபியிலும் ஆர்வம் வந்தது.சொல்லப் போனால்... இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்று அவர் எண்ணியதே இல்லை. ஒரு சிறந்த சவுண்ட் இன்ஜினீயராக உருவாகவே விரும்பினார்.

    ''அந்த நாட்களில் இசை என்பது எனக்கு வெறும் ஒரு தொழிலாக, குடும்பத்துக்கான உணவைச் சம்பாதிக்கும் வழியாக மட்டுமே தெரிந்தது. I was not crazy about the music. எனக்கு டெக்னாலஜியில்தான் ஆர்வம் இருந்தது. என்னால் கீ-போர்டிலிருந்து கண்களை விலக்கவே முடிய வில்லை. அது ஒரு மாய பொம்மை போல் காட்சியளித்தது'' என்கிறார் ரஹ்மான்.

    கீ-போர்டை வெறுமனே வாசிப்பதோடு நிறுத்தாமல், அதைப் பிரித்துப் பார்த்து அந்தச் சத்தம் எப்படி, எதன் மூலம் வருகிறது என்பதையும் சொந்த ஆராய்ச்சியின் மூலமே கண்டுகொண்டார் திலீப். கிடார் இசைக் கலைஞரான ஜான் ஆண்டனி ஒருமுறை அவரிடம், ''இந்தியாவோட பிரதமர் யாருன்னு உனக்குத் தெரியுமா? கொஞ்சம் வெளியில போயி அந்த விஷ யங்களையும் தெரிஞ்சுக்கோ'' என்று அன்புடன் சொல்லியிருக்கிறார். அதற்கு திலீப்பின் பதில்... ஒரு மெல்லிய புன்னகை மட்டுமே!

    அந்நாட்களில் அவருக்கு 'கீ-போர்டு' என்பது இசையையும் நவீன டெக்னாலஜியையும் இணைக்கும் உருவமாக இருந்தது. அந்தச் சிறிய மாய பொம்மைதான் அவரைப் பிறகு மலைக்கவைக்கும் உயரங்களுக்குக் கொண்டு சென்றது.

    கீ-போர்டு இசையில் எழும் எந்தச் சந்தேகங்களையும் தீர்த்து வைக்கக்கூடியவராக அப்போது இருந்திருக்கிறார் ராகவன் என்கிற இசைக் கலைஞர். ஹார்டுவேர் இன்ஜினீயர் என்றும் அவரைச் சொல்லலாம். கீ-போர்டில் தன்னால் தீர்க்க முடியாத ஏதாவது பிரச்னை என்றால்ராகவனிடம்தான் நள்ளிரவுகளில் ஓடுவார். ஏனென்றால், ராகவன் வேலை பார்ப்பது இரவு நேரங்களில்தான். (இரவுகளில் வேலை பார்க்கும் ஸ்டைல் அவரிடமிருந்துகூட திலீப்புக்கு வந்திருக்கலாம்) 'ரிதம் பாக்ஸ்' என்று சொல்லக்கூடிய ஒரு புதிய இசைக் கருவியின் செயல்பாடுகளை அவரிடம் பார்த்துப் பிரமித்தார் திலீப். அதிலிருந்து கிளம்பிய புத்தம் புது இசை ஒலிகள் அவரை மிரட்டின.

    கீ-போர்டுடன் கிடாரிலும் தேர்ச்சி பெற்றிருந்தார் திலீப். ''ஸ்கூல் விட்டதும் வீட்டுக்கு ஓடி வர்றப்ப, தெரு முனையிலேயே எங்க வீட்ல இருந்து கீ-போர்டு, எலெக்ட்ரிக் கிடார் இசைச் சத்தம் பெரிசாக் கேட்கும். திலீப் சூப்பரா வாசிச்சுட்டு இருக்கும். நான் யூனிஃபார்ம் கூடக் கழட்டாம நின்னு கேப்பேன். என் தலையில் ஹெட் போன் மாட்டி, 'இப்பக் கேளு... இன்னும் பிரமாதமா இருக்கும்'னு சொல்லும். 'பாப்கார்ன்'னு ஒரு யீuஸீளீஹ் மியூஸிக், லக்ஷ்மிகாந்த் பியாரிலால் மியூஸிக்ல 'ஹீரோ'ன்னு இந்திப் படப் பாட்டெல்லாம் அப்ப சூப்பர் ஹிட். அதையெல்லாம் கீ-போர்டுல பிரமாதமா வாசிக்கும்'' என்கிறார் ரைஹானா.

    அப்பா இறந்த சோகத்திலிருந்து மெதுவாக அந்தக் குடும்பம் மறுபடி மீண்டு எழுந்தது. மெள்ள மெள்ள கீ-போர்டில் நிபுணத் துவம் வந்ததும், திலீப்பை 'அரிஸ்டோகிராட்' என்கிற இசைக் குழுவில் வாசிக்கக் கூப்பிட்டார்கள். அந்தக் குழுவே சிறுவர்களால் அமைக்கப்பட்ட ஒன்றுதான். திலீப்பும் ஒரு சிறுவனாக அந்த இசைக் குழு நிகழ்ச்சிகளில் வாசிக்க ஆரம்பித்தார். கூடவே, ரெஹானாவும். திருமணம், பள்ளி ஆண்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் ரஹ்மானின் கீ-போர்டு வாசிப்பு நடந்தது. ''அதுல பெருசா காசு எதுவும் கிடைக்காது. 'கூட்டிக் கழிச்சுப் பாருங்க, ஏதும் மிஞ்சாது'ன்னு அம்மா கிண்டல் அடிப்பாங்க. நாங்க சிரிச்சுக்கிட்டே சமாளிப்போம்'' என்கிறார் ரைஹானா.

    அடுத்து, திலீப்புக்கு டெலிவிஷனில் கீ-போர்டு வாசிக்க வாய்ப்பு கிடைத்தது. 1980-களில் பிரபலமாக இருந்த தூர்தர்ஷனின் 'வொண்டர்பலூன்' நிகழ்ச்சியில், அடர்ந்து சிலுப்பிய தலைமுடியுடன் சிறுவன் திலீப் கீ-போர்டு வாசித்ததையும் அது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்ததையும் உங்களில் பலர் நினைவுகூரலாம். அதற்குப் பிறகு 'ரூட்ஸ்' என்கிற இசைக் குழுவில் இணைந்தார் திலீப். இசைப் பயணத்தின் அடுத்த கட்டம் அது.

    அந்த நாட்களில் ரஹ்மானின் இளம் வயதுத் தோழராக இருந்தவர்தான், இப்போது உலகெங்கும் இசைப் பயணம் செய்து தூள் கிளப்பும் டிரம்மர் சிவமணி. தென் ஆப்பிரிக்காவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரபூர்வ டிரம்மராக ஸ்டேடியங்களில் முழங்கி வரும் சிவமணிக்கு அந்தப் பழைய நாட்கள் இனிய வசந்தமாக நினைவில் இருக்கின்றன.

    ''சின்ன வயசுலயே நான், திலீப், ஜான் ஆன்டனி, ஜோஜோ, ராஜான்னு நண்பர்கள் சேர்ந்து ரூட்ஸ்னு இசைக் குழு ஆரம்பிச்சோம். வெஸ்டர்ன் கிளாஸிக்கல் முதல் நம்ம ஊர் மியூஸிக் வரை ரொம்ப உற்சாகமா, புதுசு புதுசா எக்ஸ்பெரிமென்ட் பண்ணுவோம். மெலடியை 'லயா'ன்னும் 'பீட்'டை 'தாளா'ன்னும் சொல்வாங்க. அந்த ரெண்டிலும் அப்பவே மாஸ்டரா இருந்தார் ரஹ்மான். ஸாரி, அப்ப திலீப்! இன்னிக்கு நான் உலகம் முழுக்கத் தெரியக் கூடிய இசைக் கலைஞனா இருக்கேன்னா அதுக்கு அவர் கொடுத்த 'ஓப்பனிங்'தான் காரணம். எம்.எஸ்.வி, இளையராஜான்னு எத்தனையோ பிரபல இசையமைப்பாளர்களுக்கு நான் பல படங்கள் வாசிச்சிருக்கேன். ஆனா, பட டைட்டில்களில், கேசட் கவர்களில் என் பெயர் வந்ததே இல்லை. அந்தப் பெருமையை முதல்ல செஞ்சது ரஹ்மான்தான். சக கலைஞர்களைக் கௌரவிக்கிறதுல அவர் ரொம்ப பெருந்தன்மையானவர்!''

    சிவமணி போன்ற கலைஞர்களுடன் ரூட்ஸில் பணி புரிந்தது ரஹ்மானுக்கும் புதிய அனுபவங்களைத் தந்தது. கொஞ்சம் கொஞ்சமாக கம்போஸிங்கிலும் அவருடைய ஆர்வம் பெருக ஆரம்பித்தது. ரூட்ஸில் இருந்த நண்பர்கள் மூலம் அவருக்கு ராக், பாப், ஜாஸ், ராப் போன்ற இசை வடிவங்கள் அறிமுகமாயின. ரூட்ஸின் புகழ் இசைக் கலைஞர்களின் மத்தியில் மெதுவாகப் பரவ ஆரம்பித்தது. உலகப் புகழ்பெற்ற வயலின் மேதை எல்.ஷங்கரிடம் இருந்து ஒரு நாள் திலீப்புக்கு அழைப்பு வந்தது. ''என் இசைக் குழு 'எபிடமிக்ஸ்'குக்காக பின்னணி (back up) வாசிக்க முடியுமா?'' எத்தனை பெரிய இசை மேதை அழைக்கிறார்! திலீப் உளம் மகிழ்ந்து, உடனே ஒப்புக்கொண்டார்.

    சென்னையிலும் பெங்களூரிலும் எல்.ஷங்கருக்காக மேடைக் கச்சேரிகளில் கீ-போர்டு வாசித்தார் திலீப். அவருக்கு அந்த அனுபவம் மிகப் புதிதாக இருந்தது. கச்சேரிகள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் சிறுவன் திலீப்பின் காதுக்குள் முணுமுணுத்தார் ஷங்கர். ''உன்னை எனக்குச் சின்ன வயசுலேயே தெரியும். மயிலாப்பூர்ல என் வீட்டுக்குப் பக்கத்துலதான் உன் வீடும் இருந்தது.'' திலீப் பினால் அப்போது அதை நம்பவே முடியவில்லை. அது ஒரு கனவு போல் தோன்றியது.

    வித்தியாசமான முயற்சிகளைச் செய்தாலும், ரூட்ஸ் இசைக் குழுவினால் பொருளாதாரரீதியாகத் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அதனால் குழு மூடப்பட்டது. இந்த நிலையில் குடும்பத்துக்குத் தேவையான பணத்தை திலீப் சம்பாதித்துதானே ஆக வேண்டும்? ஏற்கெனவே திலீப்பின் கீ-போர்டு திறமை திரைப்பட இசையுலகில் பரவி இருந்ததால், சினிமா இசையில் வாசிக்க அவசர அழைப்புகள் வந்தன. உடனே அவற்றை ஒப்புக்கொண்டார் திலீப். அந்தப் பணி அவரை முழுவதுமாக அள்ளிக்கொண்டது. அடுத்த ஒன்பது வருடங்களுக்கு திலீப் சினிமா மற்றும் இசைக் கச்சேரிகளில் வாசிப்பதில் மூழ்கிப் போனார்.

    ''இப்ப மாதிரி அட்வான்ஸ்டு டெக்னாலஜி கிடையாது. ஆர்கெஸ்ட்ராவுல எல்லாரும் வாசிப் போம். யாராவது ஒருத்தர் தப்பு பண்ணிட்டாக்கூட, மறுபடி எல்லாரும் முதல்லேர்ந்து வாசிக்கணும். எம்.எஸ்.வி., கே.வி.மகாதேவன் மாதிரியான இசை ஜாம்பவான்களின் பெரிய ரசிகன் நான். அவங்க சொல்லுவாங்க... 'பழைய ஒயின்தான் எப்பவும் சிறந்தது'ன்னு. அதனால புது ஒயின் கூட பழைய ஒயினா மாறுற வரை நாங்க காத்திருப்போம்' என்று சொல்லிச் சிரிக்கிறார் ரஹ்மான்.

    மேல்நாடுகளில்இருப்பது போல் தனியாக ஒரு ரெக்கார்டிங் ஸ்டுடியோவை ஹைடெக்காக அமைக்க வேண்டும் என்கிற எண்ணம் ஆழமாக மனதில் வேரூன்றியது. அதற்குத் தேவை நிறையப் பணம். அதைச் சம்பாதிக்க வேண்டுமானால் தேவை ஓயாத உழைப்பு!

    அப்போது உலக அளவில் பல இசைக் கலைஞர்களைப் போதை உலகம் ஆட்கொண்டு இருந்தது. பீட்டில்ஸில் ஆரம்பித்து ஜான் கேஷ், ஃபிரெட்டி மெர்குரி என்று எத்தனையோ அற்புதமான இசைக்கலைஞர்கள் போதை மருந்தின் பிடியில் சிக்கிச் சின்னாபின்னமாகி இருந்தார்கள்.

    ''இசை என்பதே ஒருவித போதை மனநிலையில்தான் உருவாகுமோ? அந்த போதை மனநிலை இல்லாமல் நல்ல இசையை உருவாக்கவே முடியாதோ என்றுகூட எனக்கு அப்போதெல்லாம் தோன்றும். ஆனால், என் கண் எதிரே ஒரு இசையமைப்பாளர் இருந்தார். அற்புதமான இசையை அளித்த அவரிடம் எந்தப் போதைப் பழக்கமும் இல்லை. அதற்கு மாறாக, ஆழமான ஆன்மிகப் பிடிப்பு இருந்தது. அவரைப் போலத்தான் நாமும் இருக்க வேண்டும் என்று அப்போது மனதுக்குள் தீர்மான மாக முடிவு செய்தேன்'' என்கிறார் ரஹ்மான்.

    யார் அந்த இசையமைப்பாளர்? வேறு யார்?

    மாஸ்ட்ரோ இளையராஜாதான்!

    - கனவு தொடரும்...

Page 1 of 5 123 ... LastLast

Similar Threads

  1. Aanandha Vikatan/Kumudham Movie reviews
    By Sanguine Sridhar in forum Tamil Films
    Replies: 98
    Last Post: 1st February 2007, 05:20 PM
  2. PC on IR In Ananda Vikatan
    By saisiv in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1
    Last Post: 10th July 2006, 12:09 PM
  3. ARR's interview in latest Vikatan
    By NagaS in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 72
    Last Post: 2nd November 2005, 12:19 AM
  4. Isai Gnani, Isai Puyal, etc.
    By Dragun in forum Current Topics
    Replies: 14
    Last Post: 31st May 2005, 01:29 PM
  5. ARR's interview in Vikatan
    By Ramki in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 11
    Last Post: 7th March 2005, 01:51 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •