சின்னத்திரை தான் ரஜினி படவாய்ப்பை வாங்கித்தந்தது! -தாடி பாலாஜி பேட்டி


சினிமாவில் காமெடியனாக நடித்து வரும் தாடி பாலாஜி, விஜய் டிவியின் பல காமெடி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். கலக்கப்போவது யாரு, நடுவுல கொஞ்சம் டிர்ஸ்டப் பண்ணுவோம், சிரிப்புடா என பல நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார். மேலும், வடிவேலு ரீ-என்ட்ரி கொடுத்த கத்திச்சண்டை படத்திலும் அவருடன் இணைந்து காமெடி செய்தவர், தொடர்ந்து அவர் நடித்து வரும் படங்களிலும் நடிக்கிறார் தாடி பாலாஜி.


தினமலர் இணையதளத்திற்காக அவரை பேட்டி கண்டபோது, அவர் நமக்களித்த தகவல்கள் இங்கே இடம்பெறுகிறது...


வடிவேலுவுடன் கத்திச்சண்டையில் நடித்தது பற்றி!


வடிவேலுவுடன் பல படங்களில் நடித்திருக்கிறேன். அந்த படங்களில் காமெடி காட்சிகள் பெரிய அளவில் ஒர்க்அவுட்டாகியிருக்கிறது. மேலும், வடிவேலு சாரின் ரீ-என்ட்ரியில் நடித்த முதல் படத்திலேயே அவர் எனக்கு வாய்ப்பு கொடுத் தது மகிழ்ச்சியாக இருந்தது. அதேசமயம், கத்திச்சண்டையில் அவருக்கான தீனி இல்லை என்பது எனது கருத்து. டைரக்டர் சுராஜ் இயக்கத்தில் அவர் நடித்த மருதமலை படத்தில் சூப்பர் காமெடி காட்சிகள். மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. அர்ஜூனே தெரியமாட்டார். வடிவேலுதான் தெரிவார்.


ஆனால் இந்த படத்தைப்பொறுத்தவரை அந்த அளவுக்கு காமெடி பெரிதாக இல்லை. அதோடு, வடிவேலு நார்மலா வந்திருக்கலாம். இந்த மாதிரி கெட்டப்பில் வந்திருக்க வேண்டாம் என் நினைக்கிறேன். கத்திச்சண்டை ட்ரெய்லரில் ஐ வில் பேக் என்று அவர் சொன்னபோது தியேட்டரில் பெரிய கைதட்டல் கிடைத்தது. ஜனங்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த அளவுக்கு அவருக்கான காமெடி காட்சிகள் படத்தில் இல்லையோ என்று தோன்றுகிறது. மேலும், வடிவேலுவுடன் அடுத்தபடியாக 23ஆம் புலிகேசி படத்தில் நடிக்கிறேன். அடுத்தடுத்த படங்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அவர் முழுமையாக பூர்த்தி செய்து விடுவார் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. காரணம், வடிவேலு ஒரு சிறந்த காமெடியன். டிவி மூலமாக மற்றவர்களை சிரிக்க வைத்துக்கொண்டேதான் இருக்கிறார். அவர் சினிமாவில் இல்லாதபோதும் சிரிக்க வைத்தார்.


தனி காமெடியனாக எப்போது நடிப்பீர்கள்?</b>




சில இயக்குனர்கள் அந்த வாய்ப்பை தருவதாக சொல்லியிருக்கிறார்கள். அதனால் விரைவில் நான் தனி காமெடியனாக நடிக்கும் படங்கள் வெளியாகும். மேலும், பெரிய திரையில் கிடைக்காத பெயரை விஜய் டிவி வாங்கிக்கொடுத்து வருகிறது. எந்த ஷோவாக இருந்தாலும் பாலாஜி இருப்பார் என்றாகி விட்டது. அந்த அளவுக்கு விஜய் டிவி என்னை ஆதரித்து வருகிறது. அதோடு, விஜய் டிவியில் அனைவரையும் பேமிலி மாதிரி என நினைப்பார்கள். எங்களது பிறந்தநாள், திருமண நாளைகூட இணைந்து கொண்டாடி மகிழ்வார்கள். தலைமையில் இருந்து செக்யூரிட்டி வரைக்கும் பேமிலி மாதிரிதான் பழகுவார்கள். அதுதான் விஜய் டிவி. என்ன பிரச்சினை, என்ன தேவை என்றெல்லாம் கேட்டு செய்வார்கள். சில சேனல்கள் என்னை கூப்பிட்டும் நான் போகவில்லை. அப்படி போய் விட்டால் நன்றி என்ற வார்த்தைக்கு அர்த்தம் இல்லாமல் போய் விடும். அதனால் விஜய் டிவியை விட்டு நான் போகவே மாட்டேன்.


ஒரே நிகழ்ச்சிக்கு ஐந்து நீதிபதிகள் தேவையா?


ஒவ்வொருத்தரும் ஒரு பாய்ண்ட் சொல்வார்கள். சிலர் மனசு நோகாம பொதுவாக சொல்வார்கள். இதைத்தான் நான் பண்ணிக்கொண்டிருக்கிறேன். ஒரே ஆள் இருந்தால் பர்பாம் பண்ணுபவர்களுக்கும் அவர் சொல்வதுதான் முடிவு என்பதால் ஒருவித பயம் இருக்கும். ஆனால், 5 பேர் இருக்கும்போது அதில் ஓரிருவராவது தங்களது பர்பாமென்ஸ் நன்றாக இருப்பதாக சொல்வார்கள் என்கிற நம்பிக்கை இருக்கும். அதற்காகத்தான் பலரை ஜட்ஜ்களாக உட்கார வைக்கிறார்கள்.


காமெடிகளில் ஓவராக கலாய்ப்பது பற்றி?


நாகேஷ் காலத்தில் பாடிலாங்குவேஜ் காமெடி இருந்தது. இப்போது டயமிங்காகி விட்டதே. சந்தானம் என் நண்பர்தான். சூரி உடம்புக்குள்ளேயும் வடிவேலு இருக்கிறார். கவுண்டமணி-செந்தில் கெமிஸ்ட்ரி பெரிய அளவில் ஒர்க்அவுட் ஆனது. அதேமாதிரி விஜய் டிவியில் நானும் ஈரோடு மகேசும் கெமிஸ்ட்ரியுடன் நிகழ்ச்சி பண்ணி வருகிறோம். எங்களுக்கிடையே ஈகோவே வந்ததில்லை. என்னடா லூசு மாதிரி பேசுறே என்பார். அப்போதுகூட நான் லூசுங்கிறதை மத்தவங்களுக்கு காட்டுறியா என்பேன். நான் சீனியர் என்னையா இப்படி சொல்றே என்றெல்லாம் நான் கேட்க மாட்டேன். என்னை கலாய்ப்பதைகூட காமெடியாக்கி விடுவேன்.


கான்செப்ட் ரெடி பண்ணி நிகழ்ச்சி பண்ணும் ஐடியா உள்ளதா?


தற்போது ஒரு நிகழ்ச்சி நடத்தப்போகிறேன். அதற்கான கான்செப்ட் ரெடி பண்ணி ஓகே வாங்கி விட்டேன். செலிப்பிரிட்டி மற்றும் ஆடியன்ஸ்கிட்ட உடனுக்குடன் பேசும் நிகழ்ச்சி அது. சகல - ரகளை நிகழ்ச்சியில் சந்தானம், சின்னி ஜெயந்த் பண்ணியதை ஒரு புது பாணியில் கான்சப்ட் ரெடி பண்ணி பண்ணப்போகிறேன்.


டிவியினால் சினிமா வரவேற்பு குறைகிறதா?


அப்படியெல்லாம் எதுவும் இல்லை. ரஜினி நடித்த லிங்கா படவாய்ப்பே விஜய் டிவியைப் பார்த்துதான் வந்தது. கே.எஸ்.ரவிக்குமார்கிட்ட ரொம்ப நாளா சான்ஸ் கேட்டு வந்தேன். எதேச்சையாக டிவி பார்த்திருக்காரு. அப்பத்தான் லிங்கா படத்தில் நடிக்க கூப்பிட்டார். விஜய் டிவி மூலமா வந்த அந்த வாய்ப்பில் ரஜினிக்கு ப்ரண்டாவே நடித்துவிட்டேன்.


குடும்பப் பஞ்சாயத்து நிகழ்ச்சிகள் பற்றி?


குடும்பப் பிரச்சினையைப்பற்றி சில ஷோக்கள் வருது. எனக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லை. அதை பண்றவங்க பேமிலியாவது நல்லா இருந்தா பெறவாயில்லை. அவங்களே பிரச்சினையில் இருக்காங்க. வர்றவங்களும் நான் அவர்கூட இருந்தேன். இப்ப இன்னொருத்தரோட இருக்கேன் என்கிறார்கள். இதைப்பார்க் கிறவர்கள் நம்ம குடும்பம் எவ்வளவோ பெறவாயில்லை என்கிறார்கள். பிரச்சினையை தூண்டுற மாதிரி உள்ளது.


நான் என்ன சொல்ல வர்றேன்னா. கேள்வி கேட்கிறவங்க, இதை மாதிரி அவங்க பக்கத்து வீட்டுல ஒரு பிரச்சினைன்னா போய் தீர்த்து வைப்பாங்களா. அப்பவும் சுத்தி சுத்தி கேமராவதான் பார்ப்பாங்க.


விஜய் டிவியில்கூடதான் அது இது எதுவில் கலாய்க்கிறீர்களே?


மனசு நோகாம கலாய்க்கலாம். ஆரம்பத்தில் அது இது எதுவில் கொஞ்சம் கலாய்த்தார்கள். இப்போது அப்படி யாரையும் கலாய்ப்பதில்லை. ரோபோ சங்கர் ரஜினி, விஜய்காந்த் மாதிரியெல்லாம் பண்ணினார். மேலும், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் என்னைதான் கன்டசன்ட் கலாய்ப்பாங்க. அதைகூட நான் ஜாலியா காமெடியா எடுத்து பண்ணுவேன். விஜய் டிவியைப்பொறுத்தவரைக்கும் யார் மனதையும் புண்படுத்தக்கூடாது என்பதை கருத்தில்கொண்டுதான் தற்போது நிகழ்ச்சிகளை கொடுத்து வருகிறோம் என்கிறார் தாடி பாலாஜி.



நன்றி: தினமலர்