Page 64 of 210 FirstFirst ... 1454626364656674114164 ... LastLast
Results 631 to 640 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #631
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "அன்பிருந்தால் , ஆண்மையும் தாய்மையடையும்"
    - இதை அன்றே நிரூபித்தவர் அன்னை உள்ளம் கொண்ட எம்.ஜி.ஆர்...!
    .
    இதோ ...எம்.ஜி.ஆருடன் கதாசிரியர் ஆரூர்தாசுக்கு ஏற்பட்ட அன்பு அனுபவங்கள்...
    ஆரூர்தாசின் வார்த்தைகளில் :

    "எம்.ஜி.ஆரின் ஒப்பனைஅறைக்குள் நுழைந்தேன்.
    சுழல் நாற்காலியில் அமர்ந்து மேக்-அப் போட்டுக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர். , எதிர்க்கண்ணாடியில் என்னைப்பார்த்து திடுக்கிட்டுத் திரும்பி என் முகத்தைக் கையால் பிடித்துக்கொண்டு கண்களைக் கவனித்து ...
    எ ம்.ஜி.ஆர் : "என்ன, கண் இப்படி ரத்தக் கோளமா இருக்கு ... சிவாஜி பிலிம்ஸ் படம் ராத்திரியில கண்ணு முழிச்சி எழுதுறீங்களா?"

    நான்: "ஆமாண்ணே."

    எம்.ஜி.ஆர்:- "சரி. என் குடும்ப டாக்டர் வி.ஆர்.எஸ்.கிட்டே போறீங்களா? போன் பண்ணி சொல்லட்டுமா?"

    நான்:- "வேண்டாண்ணே....எனக்கு அப்படி ஒண்ணும் இல்லே. நல்லாத்தான் இருக்கேன். தூக்கம் இல்லே. அவ்வளவுதான். தூங்கினா சரியா போயிடும். "
    .
    மதிய வேளை வழக்கம்போல் மேக்-அப் அறையில் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து சாப்பிட்டேன். "குழம்பைக் குறைச்சிக்கிட்டு நிறைய தயிர் போட்டுக்குங்க. தினமும் காபி, டீக்குப் பதிலா மோர் நிறைய குடிங்க. கெட்டித்தயிர்ல சர்க்கரை கலந்து சாப்பிடுங்க. இளநீர் குடிங்க. உஷ்ணம் குறைஞ்சிடும்.."

    "சரிண்ணே.."

    சாப்பிட்டு முடித்ததும் எம்.ஜி.ஆர். வழக்கம்போல் ’பாக்கெட் ரேடியோ’வில் மாநிலச் செய்திகள்கேட்டுக்கொண்டு சோபாவில் அமர்ந்திருந்தார். நான் அவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்தேன்.

    வயிறார சாப்பிட்டது ... ஏற்கனவே இருந்த களைப்பு! இரண்டுமாகச் சேர்ந்து என் கண்களைச் சொக்கிச் சுழல வைத்தன. அதை மட்டுந்தான் நான் உணர்ந்தேன். பின்னர் உணர்விழந்தேன்...!
    .
    எவ்வளவு நேரம் என்று தெரியாத நிலையில் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தேன். இப்பொழுது என் தலை எம்.ஜி.ஆரின் மடி மீது இருந்தது ..!

    மிரள மிரள விழித்தபடி "அண்ணே.." என்றேன். ஏதோ கனவு கண்டதுபோல ...!

    எம்.ஜி.ஆர். என் முதுகைத்தடவியபடி சொன்னார் :
    "தூக்கத்திலே அப்படியே சோபாவுலே சரிஞ்சி விழுந்து ஒரு பக்கமா சாஞ்சிட்டிங்க. தலை தொங்குச்சி. சுளுக்கிக்கும் இல்லியா? அதனால ஒங்க தலையை என் மடியிலே வச்சிக்கிட்டேன். அதுகூட தெரியாத அளவுக்கு அடிச்சிப்போட்டதுபோல ஆயிட்டிங்க. பரவாயில்லே. இன்னும் நேரம் இருக்கு. அப்படியே என் மடியில படுத்து தூங்குங்க..."
    .
    ஆரூர்தாசின் இந்த அனுபவங்களைப் படிக்கும்போது , மீண்டும் என் நினைவுக்கு வரும் வார்த்தைகள் :

    "அன்பிருந்தால் , ஆண்மையும் தாய்மையடையும்"...........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #632
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தனிப்பிறவி நெல்லை பார்வதி திரையரங்கில் 1966 செப்டம்பரில் வெளியானது. கருப்பு வெள்ளை திரைப்படங்களில் முதன் முறையாக 52 நாட்கள் மாட்னி ஷோ நடைபெற்று
    பெரிய வெற்றியை பெற்ற படம்.
    தேவரின் குறுகிய கால தயாரிப்பான
    தனிப்பிறவியின் வெற்றி அனைவரையும் வியப்படைய செய்தது. 1968 ஏப் 13 ல் வெளியான
    கலாட்டா கல்யாணம் வெறும் 13 நாளில் எடுக்கப்பட்டு கண்ணன் என் காதலன் ஏப் 25 ல் திரையிடப்பட்டது என்றால் நீங்கள் புரிந்து கொள்ளலாம் தனிப்பிறவியின் வெற்றியின் வீரியத்தை. அதனால் தேவர் படம் என்றாலே வெற்றி உறுதி என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்.
    இதே திரையரங்கில் தான் புரட்சி நடிகரின் திருடாதே மாபெரும் வெற்றி பெற்று 100 நாட்கள் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது..........

  4. #633
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம.ஜி.ஆர் 100/ 1.

    "அறிஞர் அண்ணா குறிப்பிட்ட கவிதை".

    ஒருவர் ஒரு துறையில் வெற்றி பெறுவதே கடினம். அதிலும் முதலிடம் பெறுவது இன்னும் கடினம். அதைத் தக்க வைத்துக் கொள்வது அதைவிட கடினம். சினிமா, அரசியல் இரண்டு துறைகளிலும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், முதலிடம் பெற்று, அதை கடைசி வரை தக்க வைத்துக் கொண்ட அதிசயமே அசந்து போகும் அதிசயம் எம்.ஜி.ஆர்.

    தமிழர்களை மயக்கும் மந்திரச் சொல்லாக அவர் பெயர் ஆனது ஏதோ மாயா ஜாலத்தால் அல்ல. அதற்கு பின்னணியில் இருக்கும் அவரது திட்டமிட்ட கடும் உழைப்பு. அவருக்கே அமைந்த வசீகரம். இந்த இரண்டும் கூட எல்லா நடிகர்களுக்கும் இருந்து விடலாம். ஆனால், மற்றவர்களுக்கு இல்லாத புகழும் பெருமையும் மக்கள் ஆதரவும் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே ஏன்? இவற்றை எல்லாம் தாண்டிய மனிதாபிமானம் என்பதே பதிலாக இருக்கும். இந்த குணத்தால் மக்களை அவர் நேசித்தார். அதனால்தான் மக்கள் அவரை நேசித்தனர். அதனால்தான், இதுவரை எந்த தமிழக முதல்வரும் செய்யாத சாதனையாக அடுத்தடுத்து மூன்று முறை ஆட்சியைக் கைப்பற்றினார்.

    1917-ம் ஆண்டு ஜனவரி 17ல் பிறந்த எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கடந்த மாதம் 17-ம் தேதி தொடங்கியுள்ளது. இலங்கையில் கண்டியில் பிறந்து, தந்தையை இழந்து, தாய் மற்றும் தமையனுடன் தமிழகம் வந்து நாடகத்தில் சேர்ந்து சினிமாவில் சிறிய வேடங்களில் தலைகாட்டி, கதாநாயகனாக உயர்ந்து, பொதுவாழ்வில் ஈடுபட்டு, கட்சியின் தலைவராகி, அவர் தமிழக முதல்வரானது எல்லாருக்கும் தெரிந்ததுதான்.

    ஆனால், எம்.ஜி.ஆரின் இந்த நெடிய சாதனை வாழ்வில் ஊடாடி இருக்கும் சினிமா, அரசியல், தனிப்பட்ட வாழ்க்கையில் அவரது அருங்குணங்களை, திறமைகளை, சாதுர்யங்களை, மனிதாபிமானத்தை, பண்பு நலன்களை விளக்கும் வகையில், அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர். 100 என்ற பெயரில் 100 முத்துக்களை தொகுத்து வாசகர்களுக்கு அளிக்கிறோம்.

    ‘‘மரத்திலே பழுத்த கனி தங்கள் மடியிலே விழாதா? என்று பலர் ஆவலாக காத்திருந் தனர். நல்லவேளையாக அது எனது மடியிலேயே வந்து விழுந்தது. அதை எடுத்து எனது இதயத்திலே வைத்துக் கொண்டேன். அந்த இதயக்கனிதான் எம்.ஜி.ஆர்.’’

    எம்.ஜி.ஆரைப் பாராட்டி அறிஞர் அண்ணா கூறியதுதான் இது. அண்ணா எழுதிய ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’நாடகத்தில் நடிப்பதற்காக நடிகர் டி.வி.நாராயணசாமியால் அண்ணாவிடம் எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தப்பட்டார். சினிமா வில் துணை வேடங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடிக்க முதலில் ஒப்பந்தமான படம் ‘சாயா'. படத்தின் கதாநாயகி டி.வி. குமுதினி. அப்போதே அவர் புகழ் பெற்ற நடிகை. புதுமுக நடிகரான எம்.ஜி.ஆருடன் நடிப்பதற்கு குமுதினியின் கணவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதுபோன்ற சில காரணங்களால் ‘சாயா' படம் நின்று போனது.

    பின்னர், தீவிர முயற்சிக்குப் பிறகு வாராது வந்த மாமணிபோல, ஜூபிடர் நிறுவனத்தின் ‘ராஜகுமாரி’ படத்தில் கதாநாயகனாக நடிக்க எம்.ஜி.ஆருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் நடிக்க வேண்டி இருந்ததால் நாடகத்தில் நடிக்க நேரம் ஒதுக்க முடியவில்லை. அதனால், அந்த நாடகத்தில் எம்.ஜி.ஆரால் நடிக்க முடியாமல் போனது. என்றாலும் அண்ணாவோடு எம்.ஜி.ஆருக்கு பழக்கம் தொடர்ந்தது. அவரது பணத்தோட்டம், சந்திரோதயம் புத்தகங்களைப் படித்து அண்ணாவாலும் அவரது கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டு திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.

    திமுக கொடியை முதன்முதலாக திரையில் காட்டியவர் எம்.ஜி.ஆர்.தான். அவரே தயாரித்து இயக்கி நடித்த ‘நாடோடி மன்னன்' படத்தில் ஆணும் பெண்ணும் இருவண்ணக் கொடியை ஏந்தியபடி திரும்புவது போன்ற எம்.ஜி.ஆர். பிக்சர்ஸின் இலச்சினை (லோகோ) படத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் காட்டப் பட்டது. எம்.ஜி.ஆரின் படங்களில் அண்ணாவைப் பற்றியும் திமுக கொள்கைகளைப் பற்றிய வசனங் களும் பாடல்களும் கட்டாயம் இடம்பெற்றன.

    அண்ணா தமிழக முதல்வரானதும் சென்னையில் 1968-ம் ஆண்டு தொடக்கத்தில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. அப்போது, சென்னையில் மையப் பகுதியான அண்ணா சாலையில் (அப்போது மவுண்ட் ரோடு) ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் அலுவலகம் எதிரே கையை உயர்த்தியபடி கம்பீரமாக நிற்கும் அண்ணாவின் சிலையை தனது சொந்த செலவில் எம்.ஜி.ஆர். நிறுவினார். சர்.ஏ.ராமசாமி முதலியார் சிலையை திறந்து வைத்தார்.

    உலகத் தமிழ் மாநாட்டில் கருத்தரங்கு ஒன்றில் எம்.ஜி.ஆர். பேசினார். கவிதையைப் பற்றிய நயமான விளக்கம் அளித்தார். ‘அழகும் உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை ’ என்று கூறினார். கூடியிருந்த மக்கள் கரகோஷம் எழுப்பினர்.

    பின்னர், அண்ணா பேச வந்தார். எம்.ஜி.ஆருக்கே குருவாயிற்றே? கேட்க வேண்டுமா? கவிதை பற்றி அவர் கூறும்போது,

    ‘அறிந்ததனை அறிந்தோர்க்கு

    அறிவிக்கும் போதினிலே

    அறிந்ததுதான் என்றாலும்

    எத்துணை அழகம்மா? என்று

    அறிந்தோரையும் வியக்க வைக்கும்

    அருங்கலையே கவிதையாகும்’

    ... என்று கவிதையாலேயே கவிதைக்கு விளக்கம் அளித்தார் அறிஞர் அண்ணா. மக்களின் கரகோஷம் அடங்க வெகுநேர மாயிற்று.

    தொடர்ந்து அண்ணா பேசும்போது, ‘அழகும் உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை என்று எம்.ஜி.ஆர். கூறினார். நீங்கள் கைதட்டினீர்கள். எதற்கு என்று யோசித்தேன். பிறகுதான் தெரிந்தது. அவர் தன்னைப் பற்றியே சொல்லியிருக்கிறார். ஆம். அழகும் உணர்ச்சியும் சேர்ந்த எம்.ஜி.ஆரே ஒரு கவிதைதானே...’ என்றார் அண்ணா.

    மக்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது. இதயக்கனியின் ஈர்ப்பு ரகசியம் அறிந்தவர் அண்ணா!
    Publisher :
    அதி உயர் தகவல் களஞ்சியம்.........

  5. #634
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழகத்தில் வருகின்ற 31-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுப்பு என்று அரசால் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதை பயன்படுத்தி நாம் ஒரு பதிவை வருங்கால சந்ததிகளுக்கு உதவுமே என்று பதிவிடுகிறோம் டாக்டர் புரட்சித்தலைவர் வாழ்ந்த வாழ்க்கை தொகுப்பை இட்டாள் பல ஆண்டுகள் பதிவிடலாம். ஆனால் மிகச் சுருக்கமாக இப்பதிவு இடுகிறோம். காரணம் வரக்கூடிய சந்ததிகளுக்கு சுருக்கமாக பதிவிட்டால் அதைப்பற்றி அவரிடம் பல கேள்விகள் உருவாகும், அதைப்பற்றி தெரிந்து கொள்வோம் என்ற ஆர்வம் உருவாகும் ஆகையால் பெற்றோர்கள் தன் குழந்தைகளுக்கு இப்பதிவை ஒரு கதையாக சொல்லி அவரவர் தன் குழந்தைகளின் மனதில் பதியவைத்து, இவ்வாறான ஒரு மாமனிதன் இவ்வுலகில் வாழ்ந்தார் என்பதை விளக்கிச் சொல்லி நீங்கள் ஒரு நல்ல வழிகாட்டியாக பெற்றோர்கள் இருப்பீர்கள் என்பதை உணர்ந்து இந்த சிறு விடுமுறை நாட்களை புரட்சித் தலைவரோடு இப்பதிவை பதிவிடுகிறோம்.

    மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்ற இவர், ‘எம்.ஜி.ராமச்சந்திரன்’ என்றும், ‘எம்.ஜி.ஆர்’ என்றும் அன்போடு அழைக்கப்பட்டார். இவர் இந்தியாவின் தலைச்சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். அவருடைய வாழ்க்கையில், நடிப்பும், அரசியலும் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது. அவருடைய இளமைக்காலத்திலேயே, பல நாடக குழுக்களில் பிரபலமாக திகழ்ந்தார். அவர் காந்தியின் மீதும் அவரது கொள்கைகள் மீதும் மிகவும் பற்றுடையவராக இருந்ததால், அவருடைய இளம்வயதிலேயே இந்திய நேஷனல் காங்கிரஸில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள், தமிழ் திரையுலகை முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆதிக்கம் செய்தார். பின்னர், திமுக அரசியல் கட்சியுடன் கைகோர்த்தார். ஒரு தமிழ் நடிகர் என்ற மகத்தான புகழ் பெற்றிருந்தாலும், எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் சமமான வெற்றிகரமான அரசியல் வாழ்க்கையையும் அனுபவித்தார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டப்பின், அவர் தனது சொந்தக் கட்சியான அ.தி.மு.கவை மிகச் சிறப்பாக வழி நடத்தினார். மக்கள் எம்.ஜி.ஆரை மிகவும் நேசிக்க முக்கிய காரணம், அவர் ஏழை மக்களின் இதய தெய்வமாக விளங்கினார். நாட்டின் மாநில முதலமைச்சர் நாற்காலியை ஆக்ரமித்த, முதல் இந்திய திரையுலக பிரமுகர் என்ற பெருமை எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களையே சேரும். ஒரு நடிகராக இருந்து அரசியலில் பதவி அடைந்த போதும், அவர் ஏழைகளின் தோழனாகவும், இல்லாதோருக்குக் கொடையாளியாகவும் விளங்கினார். தனது மனிதநேய பண்புகளால் அன்பு செலுத்தியதால் பெருமளவில் பிரபலமானார்.

    பிறந்த தேதி: ஜனவரி 17, 1917
    பிறந்த இடம்: நாவலப்பிட்டி, கண்டி, இலங்கை
    இறந்த தேதி: டிசம்பர் 24, 1987
    தொழில்: நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி
    குடியுரிமை: இந்தியா

    திரையுலக வாழ்க்கை

    எம்.ஜி.ஆர் தனது இளமைப்பருவத்திலேயே, நடிப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அவர் சிறுவனாக இருந்த போதே அவரது தந்தை இறந்துவிட்டார். அவரது தந்தையின் மறைவுக்குப் பின், குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத்தொடர முடியாமல், பணம் சம்பாதிக்கும் நிர்பந்தம் ஏற்பட்டதால், இவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தில், தனது பெயரை முதல்முறையாக ‘ஒரிஜினல் பாய்ஸ்’ என்ற நாடக குழுவில் பதிவு செய்தார். அவருடைய சகோதரரும் இந்த குழுவில் உறுப்பினராக இருந்தார். சில ஆண்டுகளுக்கு பிறகு, நாடகத்தில் நடிப்பதை விட்டுவிட்டு, 1935ல் தமிழ் திரையுலகில் சேர்ந்தார். 1936ல் ‘சதிலீலாவதி’ என்ற படத்தில் துணை கதாபாத்திரமாக முதல்முறையாக நடித்தார். 1940களில் தான் அவருக்கு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. தமிழ் சினிமாவிலேயே இதுவரை பார்த்திராத வர்ததகரீதியான ரொமாண்டிக் மற்றும் ஆக்க்ஷன் ஹீரோ என்று அவரை உருவாக்கிய படம், ‘இராஜகுமாரி’. இது கலைஞரால் எழுதி உருவாக்கப்பட்டது. 1947ல், இராஜகுமாரி’ திரைப்படம் தமிழக திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. பின்னர், தமிழ் திரையுலகம் மூன்று தசாப்தங்களுக்கும் எம்.ஜி.ஆரை முழக்கமிட்டனர். 1956ல், எம்.ஜி.ஆர், திரையுலகில் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் உருவெடுத்தார். அவர் இயக்கிய முதல் படமான ‘நாடோடி மன்னன்’, தமிழ்நாட்டில் பல திரையரங்குளில் ஓடி, பெரிய வெற்றிப்பெற்று, தமிழ் ரசிகர்களின் மனதில் ஒரு அங்கீகாரத்தைப் பெற்றது. ஒரு இயக்குனராக தனது முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அவர் இரண்டு படங்களை இயக்கி நடிக்கவும் செய்தார். அவை ‘உலகம் சுற்றும் வாலிபன்’ மற்றும் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ ஆகும். 1971ல் வெளியான ‘ரிக்க்ஷாக்காரன்’ படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததால், எம்.ஜி.ஆர் அவர்களுக்கு, சிறந்த நடிகருக்கான ‘தேசிய விருது’ கிடைத்தது.

    விருதுகள் மற்றும் அங்கீகாரம்

    1960ல், எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் இந்தியாவின் ‘பத்மஸ்ரீ விருதுக்காகத்’ தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவர் அரசாங்கத்தின் பற்றற்ற நடத்தையின் காரணமாக அதை ஏற்க மறுத்துவிட்டார். ஏனென்றால், விருதில் பாரம்பரிய ஹிந்தி வார்த்தைகளுக்கு பதிலாக தனது தாய்மொழியான தமிழில் இருக்க வேண்டுமென்று அவர் விரும்பினார்.
    ‘ரிக்க்ஷாக்காரன்’ படத்திற்காக, தனது நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை 1972ல், எம்.ஜி.ஆர் பெற்றார்.
    சென்னை மற்றும் உலக பல்கலைக்கழகமும் அவருக்கு ‘முனைவர் பட்டம்’ வழங்கி சிறப்பித்தது.
    தமிழ்நாட்டின் சமுதாயத்தின் நன்மைக்காக அவருடைய பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக அவர் இறந்த பிறகு 1988ல் ‘பாரத ரத்னா விருதை’ வழங்கப்பட்டது.
    தனிப்பட்ட வாழ்க்கை

    எம்.ஜி.ராமச்சந்திரன் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். அவரது முதல் இரண்டு மனைவிகள் நோயின் காரணமாக இறந்துவிட்டனர். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, அவரது மூன்றாவது மனைவியான ஜானகி ராமச்சந்திரன் அவர்கள் அ.இ.அ.தி.மு.கவின் பொறுப்பை ஏற்றார்.

    இறப்பு

    எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களுக்கு சிறுநீரக பிரச்சினைகள் இருந்தது. சிறுநீரகக் கோளாறு காரணமாக 1984ஆம் ஆண்டு அக்டோபரில், அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் உள்ள டவுன்ஸ்டேட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதே ஆண்டு, சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொண்டார். இறுதியாக 1987ல் நோய்வாய்ப்பட்டார். டிசம்பர் 24ஆம் தேதி, 1987ல் இயற்கை எய்தினார். எம்.ஜி.ஆருடைய மரணம் தமிழ்நாட்டில் பெருங்கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கட்டுக்கடங்காத மக்களையும், அதிகளவில் போராடி உயிரிழந்த உணர்ச்சித் தமிழர்களையும் நிர்வகிக்க தமிழக அரசும், போலீஸ் அதிகாரிகளும் கடுமையாக போராடினர். அவரது மறைவுக்குப் பின், அஇதிமுக இரண்டு பிரிவுகளாக பிரிந்தது. ஒன்று அவரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலும், மற்றொன்று ஜே.ஜெயலலிதா தலைமையிலும் தனித்தனி கட்சிகள் உருவாகின. அவரது ‘சத்யா ஸ்டுடியோ’ இப்போது ஒரு பெண்கள் கல்லூரியாக உள்ளது. சென்னை டி.நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டை தமிழக அரசு நினைவு இல்லமாக மாற்றி பராமரித்து வருகிறது.

    காலவரிசை

    1917 : எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் ஜனவரி ம் தேதி 17 பிறந்தார்.

    1936 : தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
    1947 : அவரின் முதல் வெற்றிப்படமான ‘ராஜகுமாரி’ வெளியானது.
    1953 : அரசியல் கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தில் சேர்ந்தார்.
    1956 : முதல் முறையாக திரைப்பட இயக்குனராக மாறினார்.
    1960 : பத்மஸ்ரீ விருதை ஏற்க மறுத்து விட்டார்.
    1962 : மாநில சட்ட மன்றத்தின் உறுப்பினரானார்.
    1967 : தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார்.
    1967: எம். ராதாவால் கழுத்தில் சுடப்பட்டார்.
    1969 : திமுக பொருளாளராக மாறினார்.
    1972 : தனது சொந்த அரசியல் கட்சியான, அ.தி.மு.கவை உருவாக்கினார்.
    1972 : ‘ரிக்க்ஷாக்காரன்’ படத்திற்காக தேசிய விருதை வென்றார்.
    1977 : முதல் முறையாகவும், மூன்று முறை தொடர்ந்தும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார்.
    1984 : சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார்..
    1987 : டிசம்பர் 24ஆம் தேதி,1987ல் இறந்தார்.
    1988 : இறப்பிற்கு பின், பாரத ரத்னா விருதை அரசு அவருக்கு வழங்கியது..........

  6. #635
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நெல்லையில் ஸ்ரீலட்சுமி திரையரங்கில் ரிலீஸ் ஆனது. நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.
    நூறாவது நாள் முடிந்தும் கூட்டம் அலைமோதும். பார்த்தவர்கள் மீண்டும் மீண்டும் பார்ப்பார்கள்.
    தலைவர் குதிரை வண்டியில
    திரையில் தோன்றியவுடன் விசில் சத்தம் காதைப் பிளக்கும்.
    கடைசி பைட் சீன். நம்பியாருடன் மணல்மேட்டில் நடக்கும் சிலம்பு சண்டை சாட்டையை லாவகமாக தலைவர் கையாளும் விதம் என்ன ஒரு
    ஆர்ப்பாட்டம் தியேட்டரில் நடக்கும் தெரியுமா?
    இன்றைய சண்டைக்காட்சி கள் அனைத்தும் கிராபிக்ஸ் தொழில் நுட்பம். அனுபவித்து ரசித்து பார்த்த படம் பாடல்களும் இனிமைதான்.............

  7. #636
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1974-ம் ஆண்டு சென்னை, மதுரை, சேலம், கோவை, ஈரோடு, திருச்சி, தஞ்சை, கும்பகோணம், நெல்லை, பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களில் 12 தியேட்டர்களில் 100 நாள் கொண்டாடி மதுரை, நெல்லையில் வெள்ளிவிழாவும் கொண்டாடி அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது உரிமைக்குரல். உண்மையில் மதுரையில் 7 லட்சமும் கோவையில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக அளவாக ரூ.8 லட்சமும் வசூல் சுனாமியாக சுழன்றடித்து உலகம் சுற்றும் வாலிபனை வசூலில் மிஞ்சியது. ஆனால், சிவாஜி கணேசன் ரசிகர்கள் தங்கப்பதக்கம் வசூலில் சாதனை செய்தது என்று மனசாட்சியே இல்லாமல் புளுகுவார்கள். நம்மிடம் உரிமைக்குரலுக்கும் உலகம் சுற்றும் வாலிபனுக்கும் விநியோகஸ்தர்கள் கொடுத்த வசூல் விளம்பரம் இருக்கிறது. ஆனால், அதை தங்கப்பதக்கம் மிஞ்சியதாக விநியோகஸ்தர்கள் கொடுத்த வசூல் விபரம் எதுவும் இல்லை. இருந்தால் அதை அவர்கள் வெளியிடுவார்களே. எல்லாம் வாய் பொய் வசூல்தான்..........

  8. #637
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம் ஜி ராமசந்திரன் முதலமைச்சர்
    பொற்கால ஆட்சி சாதனைகள்
    எம்.ஜி.ஆர் தனது ஆட்சிக் காலத்தில் மாணவர்களுக்கு இலவச சத்துணவு திட்டம் கொண்டு வந்தார்.

    தம் இளமைக் காலத்தில் பசிக்கொடுமை எப்படிப் பட்டது என்பதை முழுமையாக உணர்ந்து, துன்புற்ற அனுபவத்தை எப்பொழுதும் மறவாமல் நினைவில் கொண்டிருந்தார். புரட்சித்தலைவர். அவர் தமிழகத்தின் முதல் அமைச்சரானதும், பசிக்கொடுமையால் அவதியுறக் கூடாது. சாப்பிட உணவு கிடைக்கவில்லை என்பதற்காக எந்தக் குழந்தையும் பள்ளிக்கு வாராமல் இருந்துவிடக்கூடாது என்பதற்காக, இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் நிறைவேற்றாத முதலமைச்சர் சத்துணவு திட்டத்தை அமல்படுத்தினார். ஆரம்பப்பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் 2 முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் மதியம் ஒரு வேளை பள்ளிகளிலேயே சமைத்து வழங்கப்பட்டது.

    அதுமட்டுமின்றி, சத்துணவுக் கூடங்களில் உணவு சமைத்து பரிமாற ஆயா வேலையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் அமர்த்தப்பட்டனர். அவர்கள் மாதம் ரூ.100 சம்பளம் பெறவும் வகை செய்யப்பட்டது. பெண்களின் வேலையில்லாத்த் திண்டாட்டமும் இதன் மூலம் ஓரளவுக்குக் குறைந்தது; குழந்தைகளின் பசியும் தீர்க்கப்பட்டது. இதற்காக ஆன செலவு ஆண்டுக்கு ரூ.200 கோடியாகும்.மக்கள் மத்தியில் இத்திட்டம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

    அரிசி விலை குறைப்பு

    தமிழகத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் விளைச்சல் பாதிக்கப்படிருந்த போதிலும் தமிழ் நாட்டில் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் அரிசி விலையை ரூ.1.75 ஆகக் குறைக்க உத்தரவிட்டார். அதனுடன் மாதம் ஒன்றுக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 20 கிலோ அரிசியும் வழங்க ஏற்பாடு செய்தார். ஒரு கிலோ அரிசியை இலவசமாகவும் வழங்கவும் ஏற்பாடு செய்தார்.

    சென்னைக்கு குடிநீர் திட்டம்

    சென்னை நகருக்கு கிருஷ்ணா நதி நீரைக் கொண்டு வந்து சென்னை நகர மக்களின் குடிநீர்த் தேவையைப்பூர்த்தி செய்யும் திட்டம் கடந்த பல ஆண்டுகளாகப் பல்வேறு அரசுகளாலும், மக்களாலும் பேசப்பட்டு வந்தது. 1983 ஆம் ஆண்டில் புரட்சித் தலைவர், ஆந்திர முதல்வர் என்.டி. ராமாராவுடன் கலந்து பேசி நனவாக்கினார். அதற்கான தொடக்க விழாவைப் பிரதமர் இந்திராகாந்தி, என்.டி.ஆர். ஆகியோரை சென்னைக்கு அழைத்து விழாவை நடத்தினார்.

    இலவச காலணி, இலவச வேலை வாய்ப்பு வழங்கினார். நாட்டு மக்களுக்கு இலவச மின்சாரம், வீட்டு வசதி, திருமண நிதி உதவி, நதி நீர் திட்டம், 20 அம்சத் திட்டம், தாழ்த்தப்பட்டோர்களுக்கு உதவி, ஊனமுற்றோர்களுக்கு உதவி, தொழிலாளிகளுக்கு உதவி, அரிசி விலை குறைப்பு போன்ற திட்டங்களை நடைமுறை படுத்தினார்.

    மேலும் எம்.ஜி.ஆரின் ஆட்சிகால திட்டங்களின் சாதனை பட்டியல்!

    குழந்தைகளுக்கான திட்டங்கள்

    1.முதலமைச்சர் குழந்தைகள் சத்துணவு பணியாற்றுவோர்- 1,98,990,
    பயன்பெறும் குழந்தைகள்-62,43,662,பாலர் மற்றும் பள்ளி சத்துணவுக் கூடங்கள் 60,000.
    2. இலவச சீருடை
    3. இலவச பாடநூல்
    4. இலவச பற்பொடி
    5. இலவச காலணி

    முதியோருக்கான திட்டங்கள்

    1. மாத உதவித் தொகை
    2. நாள்தோறும் மதிய உணவு
    3. ஆண்டிற்கு இருமுறை இலவச உடை

    வேலை வாய்ப்புக்கான திட்டங்கள்

    1. வீட்டுக்கொருவருக்கு வேலைவாய்ப்பு
    2. படித்து வேலையில்லாத இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை
    3. கைவினைஞர்களுக்கான கருவிகள்
    4. சுயவேலை வாய்ப்பு

    மகளிருக்கான திட்டங்கள்

    1. விதவை ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவி
    2. தாலிக்கு தங்கம் வழங்குதல்
    3. மகளிருக்கு சேவை நிலையங்கள்
    4. பணிபுரியும் பெண்களுக்கு தங்கும் விடுதிகள்
    5. தாய் சேய் நல இல்லங்கள்

    ஏழைகளுக்கான திட்டங்கள்

    1. நலிந்தோருக்கான மூன்று ஆண்டுகளில் 30 லட்சம் வீடுகள் கட்டுதல்
    2. ஏழை ஏளியவர்களுக்கு இலவச மின்சாரம்

    தன்னிறைவு திட்டங்கள்

    1. குடியிருப்புகள் கட்டுதல்
    2. குடிநீர் வசதி
    3. சிறுபாசன ஆதாரங்கள்
    4. இணைப்புச் சாலைகள்
    5. சிறு பாலங்கள்
    6. ஊரக மருந்தகங்கள்
    7. ஆதி திராவிடர் மயான சாலைகள்

    விவசாயிகளுக்கான திட்டங்கள்

    1. சிறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்
    2. இதர விவசாயிகளுக்கு குறைந்த மின் கட்டணம்
    3. கடனை அடைக்கமுடியாத விவசாயிகளுக்கு கடன் தள்ளுபதி
    4. பயிர் பாதுகாப்பு
    5. இடுப்போருள்கள் மற்றும் விதைகள் மான்யம்

    தொழிலாளர்களுக்கான திட்டங்கள்

    1. விபத்து நேரிட்டால் உதவுதல்
    2. ஈட்டுறுதியுடன் இணைந்த ஓய்வூதியம்
    3. தொழிலாளர்களுக்கு விபத்து நிவாரணத் திட்டம்
    4. மீனவர் மற்றும் நெசவாளர் வீட்டு வசதி
    5. நெசவாளர், பனையேருவோர், தீப்பெட்டி தொழிலாளர் விபத்து உதவி திட்டம்
    6. சேமிப்பு மற்றும் நிவாரணம்
    7. கட்டிட தொழிலாளர், கிராமக்கை வினைஞர் வண்டி இழுப்போர், சுமை ஏற்றி இறக்குவோர் ஆகியோருக்கு ஆயுள் காப்புறுதி மற்றும் பணி ஓய்வு பலன் திட்டம்..........

  9. #638
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1970 -2020

    மக்கள் திலகம் எம்ஜிஆர்
    .
    பொன்விழா - மலரும் நினைவுகள் .

    1969ல் வெளிவந்த நம்நாடு - திரைப்படம் 100 வது நாள் வெற்றிவிழா 1970 பிப்ரவரியில் மதுரை , சேலம் , திருச்சி நகரங்களில் கொண்டாடப்பட்டது ..மக்கள் திலகம் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார் .

    1970ல் வெளிவந்த மக்கள் திலகம் திரைப்படங்கள் .

    1. மாட்டுக்காரவேலன்
    2. என் அண்ணன்
    3. தலைவன்
    4. தேடிவந்த மாப்பிள்ளை
    5. எங்கள் தங்கம் .

    மாட்டுக்காரவேலன் - சென்னை மற்றும் மதுரையில் வெள்ளிவிழா கொண்டாடியது .
    சென்னை நகரில் 4 திரை அரங்கிலும் தொடர்ந்து 444 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனை .
    இப் படத்தின் வெள்ளிவிழா மற்றும் 100வது நாள் விழாக்கள் சென்னை மற்றும் மதுரையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது .
    மக்கள் திலகம் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார் ..

    என் அண்ணன்
    சென்னை , மதுரை , திருச்சி , சேலம் நகரங்களில் 100 நாட்கள் ஓடியது ,

    எங்கள் தங்கம்
    சென்னை , மதுரை , திருச்சி 100 நாட்கள் ஓடியது
    சென்னை நகரில் எங்கள் தங்கம் 100.வது நாள் வெற்றிவிழா நடந்தது .மக்கள் திலகம் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்

    1969ல் வெளிவந்த அடிமைப்பெண் படத்திற்கு சிறந்த படத்திற்கான பிலிம் பேர் விருது.கிடைத்தது ,மக்கள் திலகம் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார் ..

    1970ல் மக்கள் திலகம் எழுதிய சுய சரிதம் - ஆனந்தவிகடனில் '' நான் ஏன் பிறந்தேன் '' தலைப்பில் தொடர்கட்டுரை தொடங்கியது .

    உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பிற்காக ஜப்பான் மற்றும் கீழ் திசை நாடுகள் பயணம் .

    டிசம்பரில் ராமன் தேடிய சீதை படத்திற்காக முதல் முறையாக காஷ்மீர் பயணம் .
    மறக்க முடியாத இனிமையான நாட்கள் ................

  10. #639
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1964 ஜூலை 18 ல் வெளியான வெற்றிப் படம்தான் "தெய்வத்தாய்".
    சத்யா மூவிஸின் முதல் படமாக இருந்தாலும் தயாரிப்புக்கு பல்வேறு வகையில் துணையாக இருந்தவர்கள்தான் தென்காசி pkv
    சங்கரன், ஆறுமுகம் மற்றும் ஜெயந்தி பிலிம்ஸ் கனகசபை செட்டியார் ஆகியோர்.

    இந்த படத்திற்கு கதை வசனம் எழுதியவர் k பாலசந்தர்.
    படத்தை இயக்கியவர் p மாதவன் .
    இவர்கள் இருவரும் எம்ஜிஆர் படத்தின் மூலமாக உருவாகி பாலசந்தர் தனித்தன்மையுடன் தனியாகவும், p மாதவன்
    சிவாஜியிடமும் ஒட்டிக் கொண்டவர்கள். சிவாஜியுடன் சேர்ந்து விட்டால் போதும் இவர்களுக்கும் எம்ஜிஆர் மீது வன்மம் உண்டாகி விடுகிறது.

    இவருடைய சொந்த கம்பெனி அருண்பிரசாத் மூவிஸ் தயாரித்த "ராமன் எத்தனை ராமனடி" படத்தில் சிவாஜி ஓரங்க நாடகம் எம்ஜிஆரை
    தாக்குவதற்கென்றே வைத்து சிவாஜி தனது இயலாமையை
    உறுமிக்கொண்டே
    புலம்புவதை பார்க்கலாம். "தெய்வத்தாயில்" எம்ஜிஆர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாறனாகவே வாழ்ந்திருப்பார்.

    எம்ஜிஆருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை பெருக்கிய படம்.
    அருமையான பாடல்கள், அழகான கதாநாயகி, தெள்ளுத்தமிழ் வசனம், தெளிந்த நீரோடை இயக்கம், திட்டமிட்ட தயாரிப்பு சிறப்பான ஒளிப்பதிவு என அனைத்திலும் தனி முத்திரையை பதித்த படம்.

    சென்னையில் பிளாசா, கிரவுன், புவனேஸ்வரியில் வெளியாகி மூன்றிலும் 108 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. "தெய்வத்தாயை" தொடர்ந்து "படகோட்டி" நவ 3 தீபாவளி அன்று அதே மூன்று தியேட்டர்களில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த பிளாசாவுடன் கிரவுன், புவனேஸ்வரி என்ற காம்பினேஷன்
    "படகோட்டியு"டன் நின்று போனது.

    "திருவிளையாடல்" படத்தில்தான் சாந்தியுடன் சேர்ந்து கொண்டது கிரவுனும் புவனேஸ்வரியும். அதன்பின்பு அந்த காம்பினேஷன் தொடர்ச்சியாக பல சிவாஜி படங்களுக்கு நீடித்தது. இதில் ஒரே ஒரு தடவை மட்டும் புவனேஸ்வரி, குளோப், கிருஷ்ணாவுடன் சேர்ந்து "குடியிருந்த கோயிலை" திரையிட்டது. "தெய்வத்தாய்"
    மதுரையில் 93 நாட்களும் சேலத்தில் 93 நாட்களும் திருச்சியில் 86 நாட்களும் கோவையில் 84 நாட்களும் ஓடி வெற்றி பெற்றது.

    ஈரோடு, நெல்லை, பாண்டிச்சேரி,
    தஞ்சாவூர் குடந்தை ஆகிய ஊர்களில் 10 வாரங்களை கடந்து ஓடியது. மேலும் 18 ஊர்களில் 50 நாட்களை கடந்தும் ஓடியது. 1964 ல் பிளாக்பஸ்டர் வெற்றி "படகோட்டி" தான். 44 அரங்குகளில் வெளியாகி 32 அரங்குகளில் 50 நாட்களும் 15 திரையரங்குகளில் 10 வாரமும் பிளாஸாவில் மட்டும் 101 நாட்கள்
    ஓடி வசூலில் மிகப் பெரிய
    வெற்றியை பெற்றது.

    தொடர்ந்து வந்த "எங்க வீட்டு பிள்ளை"க்காக மாபெரும் வெற்றியை "படகோட்டி" தியாகம் செய்ததென்றாலும் வசூலில் மிகப்பெரிய சாதனை செய்தது. கூட வந்த படத்தை ராத்திரி கண்விழித்து ஓட்டினாலும் 100 நாட்கள் ஓட்ட முடிந்ததே தவிர வசூலில் அவர்களால் சாதிக்க முடியவில்லை. அதிக தியேட்டரில் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்ற படம் "பணக்கார குடும்பம்." "வேட்டைக்காரன்" அதற்கு அடுத்தபடியாக வசூலை குவித்தது. "தெய்வத்தாய்" 4வதாக அந்த ஆண்டு வசூலில் வெற்றி பெற்றது..........

  11. #640
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நமது புரட்சித் தலைவர் கண்ட இயக்கத்தில் சிலருக்கு புதிதாக காமராசர் மீது பாசம் பொங்கி வழிகிறது. ஒரு சிலர், காமராஜர் ஆட்சியை நமது தலைவர் வழங்கிய பொற்கால ஆட்சி போல் இருந்தது என கூக்குரலிடுகின்றனர் நல்லாட்சி தந்த நாயகன் எம்.ஜி.ஆர். அவர்களை விட காமராஜர் எந்த விதத்திலும் சிறப்பாக ஆட்சி செய்ய வில்லை என்று கீழ்கண்ட குறிப்புக்களின் மூலம் அறிந்து கொள்ளலாம். எனவே தயவு செய்து மீண்டும் அவ்வாறு ஒப்பிடாதீர்கள்.

    பெருந்தலைவர் காமராசர் மதிய உணவு திட்டத்தை, மாநிலத்தின் சில பகுதிகளில் மட்டுமே அமல் படுத்தினார். அதிலும், எல்லா மாணவர்களும் பயன் பெற வில்லை. மதிய உணவு என்பது ஒரு கலவை சாதமாகவே இருந்தது. அதுவும் நல்ல அரிசியில் சமைக்கப் பட வில்லை. ஆனால், பொற்கால ஆட்சி தந்த பொன்மனச் செம்மலோ மாநிலம் முழவதும், மதிய உணவுத் திட்டத்திலிருந்து பெருமளவில் மாறுபட்டு, புதுமையான சத்துணவு திட்டத்தை அமல் படுத்தி, உலக நாடுகள் சபையால் பாராட்டப் பட்டார்.



    காமராசர் ஆட்சி காலத்தில் இயற்கை வளம் மிகுந்து, மக்கள் தொகை சிறிய அளவில் இருந்தது. நல்லாட்சி தந்த நாயகன் எம்.ஜி.ஆர். ஆட்சி செய்த போது இயற்கை வளம் குன்றி, மக்கள் தொகை பெருகி இருந்தது. இருப்பினும், பொற்கால ஆட்சியை வழங்கினார் பொன்மனச் செம்மல்.



    காமராசர் ஆட்சி செய்த பொழுது அவரது காங்கிரஸ் கட்சியே மத்தியில் ஆட்சி புரிந்து வந்தது. இதனால், திட்டங்களை தமிழகத்துக்கு பெறுவதில் சிக்கல் ஏதுமில்லை. ஆனால், புரட்சித் தலைவர் ஆண்ட போது மத்தியில் ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆட்சி செய்தது. தமிழக மக்களின் நல் வாழ்விற்கான திட்டங்களை போராடி போராடித் தான் பெற்றார், சமதர்ம சமுதாய காவலன் எம்.ஜி.ஆர்.

    நமது இந்திய நாடு சுதந்திரம் பெற்ற பிறகு காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி பொறுப்பேற்றது. அப்போது, எந்த கட்சி ஆட்சி செய்திருந்தாலும், திட்டங்கள் பல தீட்டப்பட்டுதான் இருக்கும். இதில் ஒரு விந்தையும் கிடையாது. மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் உண்ண உணவு, இருக்க இடம், உடுக்க உடை போன்றவற்றைகளை ஏற்பாடு செய்து கொடுப்பது தான் ஒரு குடும்பத தலைவனின் கடமை. அது போன்றது தான் இதுவும். ஆனால், அதை மிகைப்படுத்தி கூறும் பொழுது, இந்த குடும்பத்தலைவன் பொறுப்புக்கள் தான் நினைவுக்கு வருகிறது. தன் மனைவி மக்களுக்கு உணவளித்து, இடமளித்து, உடைகள் வாங்கி கொடுத்தது பற்றி பெருமை பீற்றிக் கொள்வது ஒரு குடும்பத் தலைவனுக்கு அழகா ?



    காமராசர் ஆட்சி செய்த காலத்தில், குறைந்த அளவில் மக்கள் தொகை இருந்த காரணத்தால், மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யும் அளவுக்கு அரசு ஓரளவு செயல்பட்டது. ஆனால், நம் எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சிக் காலத்தில், குடிநீர் தட்டுப்பாடு மிகுந்து காணப்பட்டதன் காரணத்தால், கிருஷ்ணா நதி நீர் திட்டம் தீட்டப்பட்டு, அதன் மூலம் தலைநகர் வாழ் மக்களுக்கு குடிநீர் எளிதாக கிடைக்க வழி காணப் பட்டது. அரசு கஜானாவை தீயசக்தியும் காலி செய்தது வரலாற்று உண்மை. அண்டை மாநில அரசுகளுடன் கொண்டிருந்த நல்லுறவு காரணமாக காவிரி நீர் தமிழகத்துக்கு தங்கு தடையின்றி கிடைத்தது. இதன் மூலம் டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரும் பயனடைந்தனர். (அப்போது, மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கட்சியே கர்நாடகாவிலும், தமிழகத்திலும் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. காவிரி நீர் பிரச்சினைக்கு அப்போதே தீர்வு கண்டிருக்கலாம் என்பது வேறு விஷயம். அது போன்றே முல்லைப் பெரியாறு ஒரு பூதாகரமான பிரச்சினையாகி உள்ளது. - இப்போது காவிரி நீர் பிரச்சினையும், முல்லைப் பெரியாறு பிரச்சினையும் ஒரு தொடர்கதையாகி வருகிறது).



    நமது மக்கள் திலகம் ஆட்சியில்தான், மேட்டூரிலிருந்து ஈரோடு வரை 4 தடுப்பணைகள் கட்டப்பட்டு, விவசாய பாசன வசதிகள் பெருகின.

    அது மட்டுமல்லாமல், வால்பாறை அருகே காடம்பாறை நீரேற்று மின் நிலைம் உருவாகி மின்சக்தி உற்பத்தி செய்யப்பட்டது.

    இந்த திட்டங்கள் எல்லாம் காங்கிரஸ் கட்சியின் காமராஜர் ஆட்சி புரிந்த பொழுது ஏன் செயல்படுத்தப் பட வில்லை. அது பற்றி ஏன் யோசிக்க வில்லை என்பதே நம் கேள்வி ?

    தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில் பெரும்பான்மையாக வசிக்கும் தமிழர்கள் ஏன் உரிமை கொண்டாட வில்லை. அந்த பகுதிகளை கேரளாவுக்கு தாரை வார்த்து கொடுத்ததே இந்த காமராஜரின் காங்கிரஸ் ஆட்சியில் தான்.

    பள்ளிக் கல்வியை மட்டுமே பிரதானமாக கொண்டு கல்விச் சாலைகள் பல காமராசர் காலத்தில் திறக்கப் பட்டாலும், உயர் கல்வி (பொறியியல், மருத்துவம் மற்றும் தொழில் சார்ந்த கல்வி) நிறுவனங்கள். மன்னாதி மன்னன் மக்கள் திலகம் ஆட்சியில் பல தொடங்கப்பட்டு, ஆண்டுதோறும் இன்று தமிழ் நாட்டில் இலட்சக் கணக்கான, கோடிக்கணக்கான பட்டதாரிகள் உருவாக காரணகர்த்தாவாக விளங்கியவர் சத்துணவு தந்த சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர்.



    நம் இதய தெய்வத்தின் இதயக்கனி எம்.ஜி.ஆர். அவர்கள் 1963ல் காமராசர் அவர்களை என் தலைவர் என்றும், பேரறிஞர் அண்ணா அவர்களை என் வழிகாட்டி என்றும் , தி.மு.க.வில் இருந்த போதே தைரியமாக அன்புடன் கூறினார். ஆனால், பெருந்தலைவரோ, 1964ல் நடந்த சென்னை மாநகராட்சி தேர்தலில், "வேட்டைக்காரன்" வருகிறான், அவனிடம் ஏமாந்து விடாதீர்கள் என்று வெறுப்புடன் கூறினார்.



    சொந்த விருதுநகர் தொகுதியிலேயே மக்களால் நிராகரிக்கப் பட்டார் காமராசர். தமிழகத்தின் எந்த தொகுதியில் நின்றாலும், வெற்றியே கண்டு, தமிழகத்தின் தொடர் முதல்வராக விளங்கி பெருமையை பெற்றார். நிருத்திய சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். இந்த 1967 சட்டமன்ற தேர்தலுக்கு முன்புதான் தமிழ் நாட்டில், காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த போது, கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது, எலிக்கறி சாப்பிடச் சொனனதுதான் இந்த காங்கிரஸ் அரசாங்கம். இதனாலே காமராசர் தோற்ற சம்பவமும் அரங்கேறியது.



    நம் எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். அவர்கள் கட்சி ஆரம்பித்த புதிதில், காமராஜரிடம் நிருபர்கள் கருத்து கேட்ட போது, ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்று காழ்ப்புணர்ச்சி கொண்டு கூறியது நாகரீகமானதா ?

    தேசிய அளவில் எலியும் பூனையுமாக இருந்த இந்திரா காந்தியும், காமராஜரும், தங்கள் கொள்கைகளை கைவிட்டு, பொன்மனச் செம்மலின் வளர்ந்து வரும் செல்வாக்கை தாங்க முடியாமல், 1974 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைத்தார்கள். இதை விட வெட்கக்கேடான செயல் இருக்குமா ?



    காமராஜார் ஆட்சி சிறப்பானது என்று சொன்னால், நடிகர் சிவாஜி கணேசன் காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்ததையும் அவர் ஆதரித்த விதத்தையும் ஏற்றுக் கொண்டதாகத்தான் பொருள் படும். எனவே இப்பதிவின் மூலம் கேட்டுக் கொள்வது என்னவென்றால், இன்னொரு முறை காமராஜர் பெருமைகளை பற்றி பேசாதீர்கள். அது காங்கிரஸ் கட்சிக்காரன் பேசட்டும். நம் தலைவர் ஆரம்பித்த இயக்கத்தில் இருந்து கொண்டு, காமராஜரை புகழ்வது என்பது ஏற்புடையது அல்ல !

    இவ்வாறு பல ஒப்பீடுகள் செய்யப்படும் போது, என் கண்களுக்கு தமிழகத்தில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கி, பொற்காலத்தை வழங்கியவர் புரட்சித் தலைவர் ஒருவரே என்றுதான் புலப்படுகிறது.



    இறுதியாக ஒன்று .... என் தங்கத் தலைவர் எம்.ஜி.ஆர். ஜாதி, இனம், மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு, அனைத்து தரப்பினராலும் எங்கள் வீட்டு பிள்ளை என ஏற்றுக் கொள்ளப் பட்டவர்.



    ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் !



    என்றென்றும் என் தங்கத் தலைவன் எம்.ஜி.ஆர். புகழ் மட்டுமே பாடும்,



    தங்கள் உண்மையுள்ள ..... சௌ. செ...........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •