Page 20 of 210 FirstFirst ... 1018192021223070120 ... LastLast
Results 191 to 200 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #191
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "முதல் படத்தில் எம்.ஜி.ஆரின் சம்பளம் எவ்வளவு"?- நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர். �� அத்தியாயம்-13��

    கே.பி கேசவன் மூலம் தேடிவந்த வாய்ப்பு, தன் முகவாய்கட்டையில் இருந்த தழும்பினால் தவறிப்போன வருத்தத்துடன் இருந்த நேரத்தில்தான், எம்.கந்தசாமி முதலியாரைச் சந்தித்தனர் எம்.ஜி.ஆர் சகோதரர்கள். அவர்களின் நலம் விசாரித்த எம்.கே, உடனடியாக அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தர முன்வந்தார். தங்களின் நாடக குரு மூலம் ராம்சந்தர் முதன்முதலாக படத்தில் நடிக்கும் வாய்ப்புப் பெற்றாலும், அத்தனை எளிதாக அது கைகூடவில்லை. படத்தின் படப்பிடிப்பு துவங்கும்வரை, அதில் தான் நடிப்போமா இல்லையா என்று குழப்பத்தின் உச்சிக்கே செல்லும்படி பல சம்பவங்கள் நடந்தேறின. 1966 -ம் ஆண்டில், தான் பொறுப்பாசிரியராக இருந்து நடத்திய சமநீதி இதழில் சுவாரஸ்யமான அந்த சம்பவங்களை எழுதியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.

    பதவிப் போராட்டம் என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையில், சதி லீலாவதி செய்த சதிகளை சுவாரஸ்யமாக எழுதுகிறார் இப்படி...
    நான் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் நடித்துக்கொண்டிருந்த நேரம். வெளியுலகத்தைப் பற்றியோ, மக்கள் மனோபாவம் எப்படியிருக்கும் என்பதையோ, எந்தெந்தக் குணத்தினர், எப்படிப்பட்ட தரத்தினர் என்பதையோ சிறிதும் தெரிந்துக்கொள்ளாத, தெரிந்துக்கொள்ள முடியாத நிலையில் இருந்தேன். (இப்போது எல்லாம் தெரிந்துகொண்டுவிட்டேன் என்று கருதுவதாக யாரும் எண்ண வேண்டாம்.) உலக அனுபவம் சிறிதும் பெறாத நிலையில் இருந்தேன் என்பதையே குறிப்பிடுகிறேன்.

    அந்தப் பருவத்தில், அதுவரை எனக்குக் கிடைத்திருந்த அனுபவமெல்லாம், “நாடகத்திலே நடிக்கிறோம்; பணம் கிடைக்கிறது. கிடைக்கிற பணம் வாழ்க்கைக்குப் போதாது. அதிகப் பணம் தேவை. அந்த அதிகப் பணத்திற்காக ,அதிகச் சம்பளம் வாங்குவதற்கு வேறு கம்பெனிக்குப் போக வேண்டுமென்றால், அதற்கு வேண்டிய தகுதிகள் இல்லை. ஏதோ கிடைத்ததைக்கொண்டு, இதாவது கிடைக்கிறதே என்று வாழ்க்கையைத் தள்ளிக்கொண்டு போகவேண்டியதுதான்” என்று சுற்றிச்சுற்றி இந்தப் பிரச்னையிலேயே உழன்று கொண்டிருந்தேன்.

    இப்போது சில சமயம் வேலை செய்வதற்கு நேரம் போதவில்லையே என்ற கவலை! அப்போது நிறைய நேரமிருக்கிறது, வேலையில்லையே என்ற கவலை.

    இத்தகைய நிலையில், மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியார் நல்ல வசூலோடும், வெற்றியோடும் நடத்திக்கொண்டிருந்த 'பதிபக்தி' என்ற நாடகத்தைச் சினிமாவாக எடுக்கத் தீர்மானித்துவிட்டார்கள். வெகு விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது என்ற செய்தி விபத்தைப்போல எங்கள் செவிகளில் விழுந்தது. படம் எடுப்பதனால் நாடகக் கம்பெனியை நிறுத்திவிடப்போவதாகவும், அவர்களை ஒவ்வொன்றாகத் தொடர்ந்து படமெடுக்கத் தீர்மானித்துவிட்டதாகவும் சொல்லப்பட்டதுதான் அந்தச் செய்தி. அது, விபத்தைப் போன்று என்னையும், என் தமயனாரையும் உலுக்கியது.

    “ஆமாம், நாடகக் கம்பெனியை நிறுத்திவிட்டால் என்ன? படம்தான் எடுக்கிறார்களே! அதில் வேலை (வேடம்) கிடைக்காதா என்ன? அந்த நம்பிக்கை இருக்குமல்லவா?”: என்று கேட்டுவிடாதீர்கள்! நாடகக் கம்பெனி என்றால், தினமும் நாடகம் நடக்கும். மாதா மாதம் சம்பளமும் கிடைக்கும். எப்போதோ படம் எடுப்பார்கள்; என்றோ ஓரிரு நாள் வேலையிருக்கும். மாதச் சம்பளம் எப்படிக் கிடைக்கும்! அதை எப்படி எதிர்பார்க்க முடியும்? ஆனால், எதிர்பார்க்காவிட்டால் எப்படித்தான் வாழ்வு..? எங்களுக்கு இந்த நல்ல குணம் (தேவையற்ற குணம்) யாரிடமாவது சென்று வேலை கேட்கும் பழக்கமும் கிடையாது; எப்படிக் கேட்பது என்றும் தெரியாது. அழுதபிள்ளைதான் பால்குடிக்கும்! சரி, பால் எந்தத் தாயிடமிருந்து கிடைக்கும் என்றாவது குழந்தைக்குத் தெரிய வேண்டுமே!

    வறுமையின் காரணமாக பால் கொடுக்கும் சக்தியை இழந்துவிட்ட ஒரு தாயிடம், அதன் குழந்தை எவ்வளவு பெரியதாக அழுதால்தான் என்ன, எத்தனை நேரம் அழுதால்தான் என்ன? அந்த நிலையில் உள்ள குழந்தைகளைப் போன்றவர்களானோம் நாங்களும். ஒரு நாள் ,எதிர்பாராதவிதமாக எங்களுடைய நாடக ஆசிரியரும், எம்.கே.ராதா அவர்களின் காலஞ்சென்ற தந்தையுமான எம்.கந்தசாமி முதலியார் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. “என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்... எதிர்காலத்திற்கு என்ன செய்யப்போகிறீர்கள்?” என்று எப்போதும்போல அக்கறையோடும், அன்போடும் அவர் விசாரித்தார். “படம் எடுக்கப்போகிறார்கள்... அதிலே ஏதாவது வேடம் கிடைக்குமென்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.” இதுவே எங்கள் பதில்.

    ‘இல்லை’ என்று சொல்வதற்கும் வெட்கம்! “இருக்கிறது” என்று சொல்வதற்கும் அச்சம்!

    அவர் சொன்னார், “நல்லவேடம் கொடுத்தால் நடிக்கலாம் இல்லையா? ஒரு பட முதலாளி ‘சதிலீலாவதி’ என்ற படத்தை எடுக்கவிருக்கிறார். அதற்கு நான்தான் உரையாடல் எழுதப்போகிறேன்! எல்லிஸ் ஆர்.டங்கன் என்கிற அமெரிக்க டைரக்டர் படத்தை இயக்கப்போகிறார். அதில் ஒரு துப்பறிபவன் வேடம் இருக்கிறது. சண்டைக் காட்சிகள் எல்லாம் அந்த வேடத்திற்கு உள்ளன. நீ வருவதாயிருந்தால், அந்த வேடத்தை உனக்குத் தர ஏற்பாடுசெய்கிறேன்” என்றார்.

    கரும்பு தின்னக் கூலியா கேட்போம்! 'பத்தோடு பதினொன்று அத்தோடு இதொன்று' என்ற நிலையிலிருந்த எனக்குத் துப்பறிபவன் வேடம்!
    'பதிபக்தி' என்ற நாடகத்திலும் 'துப்பறியும் சந்தானம்' என்ற ஒரு வேடம் உண்டு. அந்த வேடத்தை ஏற்று நடிப்பவர் எனக்கு நடிப்புக் கற்றுக் கொடுத்த ஆசிரியரான காளி என். ரத்தினம் அவர்கள். அந்த நாடகம் பெருமை பெறக்காரணமாக இருந்த சிறப்புகளில் ஒன்று காளி. என். ரத்தினம். அவர்கள் தாம் ஏற்றுக்கொண்ட துப்பறியும் வேடத்திற்கேற்ப நாடகத்தின் இறுதிக்கட்டத்தில் போடும் சண்டைக் காட்சி தவிர கே.பி. கேசவன் அவர்களின் குடிகார நடிப்பும், நல்ல கதையமைப்பும் அதன் வெற்றிக்குக் காரணங்களாகும்.

    'சதிலீலாவதி' யின் கதையும் ‘பதிபக்தி’போன்றே ஒரே மாதிரியான பல சம்பவங்களைக் கொண்ட கதைதான். 'பதிபக்தி' யின் கதாசிரியர் தெ.பொ.கிருஷ்ணசாமி பாவலர். “சதிலீலாவதி”யின் கதை ஆசிரியர் எஸ்.எஸ். வாசன். என்னுடைய ஆசிரியர் நடிக்கிற அதே வேடம். அதேபோன்ற படத்தில் எனக்குக் கிடைக்கிறதென்றால் எப்படி அதை வரவேற்காமல் இருக்க முடியும்? “எப்பொழுது வரவேண்டும்?” என்றுதான் என்னால் கேட்க முடிந்தது. “முதலாளி வந்துவிடுவார்கள்; வந்ததும் பாரு, ஒப்பந்தம் செய்து வைக்கிறேன் ’’ என்றார்.

    அதன்பின், படத்தின் முதலாளி வந்துவிட்டார் என்ற செய்தி வருகிற ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகக் கழிந்தது என்றால் மிகையாகாது.

    எங்கள் நாடக் கம்பெனி நாடகங்கள் சென்னை ராயல் தியேட்டரில் (சால் கொட்டர்ஸ்) தொடர்ந்து நடந்துக் கொண்டிருந்தது. நாங்கள் வேறொரு கம்பெனிக்கு ஒப்பந்தம் செய்யப்படப் போகிறோம் என்ற செய்தி எங்கள் இருவரையும், எங்கள் தாயாரையும் தவிர வேறு யாருக்கும் சொல்லப்படவில்லை. நாங்களும் சொல்லவில்லை. வேண்டுமென்றேதான் மறைத்து வைத்திருந்தோம். ஒருநாள் ஆசிரியர் எம்.கே. அவர்களிடமிருந்து தகவல் கிடைத்தது. ஒரு குறிப்பிட்ட நாளில் எங்களை அழைத்துப்போய் ஒப்பந்தம் செய்துவைத்து முன்பணம் வாங்கித் தருவதாக கிடைத்த தகவல்.

    எங்களுடைய மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. காத்திருந்தோம்; காலமும் வந்தது, கைநீட்டிப் பணம் வாங்க நானும், என் தமையனாரும் நாடக ஆசிரியரோடு சென்றோம். ஒரு ஓட்டலில் அந்த முதலாளி தங்கியிருந்தார். அவர் பெயர் மருதாசலம் செட்டியார்; கோவையைச் சேர்ந்தவர்; நல்ல உயரம், உயரத்திற்கு ஏற்ற பருமன், உருவத்திற்கு ஏற்றவாறு கணீரென்று ஒலிக்கும் குரல். அவர் வந்தார். எங்கள் இருவரையும் பார்த்தார்.

    பிறகு ஆசிரியரும், அவரும் பேசினார்கள். எங்களுக்கு ஒரு சம்பளமும் நியமிக்கப்பட்டது. முதலாளி முன்பணம் கொடுப்பதற்காகப் பணமெடுக்க விரைந்து சென்றார். சட்டைக்கெல்லாம் நூறு ரூபாய் நோட்டு என்று சொல்லப்படும் ஒரு தாளுடன் அவர் வந்தார். அவர் எங்களிடம் அதைக்கொடுக்க வந்தபோது நாங்கள் ஆசிரியரைப் பார்த்தோம். ஆசிரியர் எங்களுடைய எண்ணத்தைப்புரிந்துக் கொண்டு அதைத் தம்கையில் வாங்கி எங்களிடம் கொடுத்தார். ஆசிரியர் “உங்களுக்கு நூறு ரூபாய் அட்வான்ஸ் கொடுத்திருக்கு. இது உங்களுக்கு முன்பணம்‘ என்று சொன்னார். என் காதுகளை என்னால் நம்ப முடியவில்லை. நாடகத்திலே ஆயிரம் ரூபாய், பத்தாயிரம் ரூபாய் நோட்டுகளை எல்லாம் பார்த்திருக்கிறேன். ஆனால் உண்மையான ஒரு நூறு ரூபாய் நோட்டை கூடக் கண்டதில்லை. அதிலும் ஒரே நேரத்தில் மொத்தமாக நூறு ரூபாய் முன் பணம்! நெஞ்சிலே ஏதோ ஒன்று கிளர்ந்து நெஞ்சை முன்னால் தள்ளியது போன்ற உணர்ச்சி. இதற்குத்தான ‘மகிழ்ச்சி விம்மல்’ என்று பெயரோ?

    அண்ணனை நான் பார்த்தேன். அண்ணன் என்னைப் பார்த்தார். மருதாசலம் செட்டியார் என்ன நினைத்தார் என்று தெரியாது. முதல் படம் தானே! கொடுக்கிறதை வாங்கிக்குங்க முன்னே பின்ன இருந்தாலும் ‘அட்ஜஸ்ட்’ பண்ணிக்கத்தான் வேணும் ...அப்புறம் தருவோம். நல்லா நடிச்சுப்பெயர் வாங்குங்க...” என்று கூறினார் அவர். அவர்கள் இருவருக்கும் நமஸ்காரத்தைச் சொல்லி விட்டுப் புறப்பட்டோம். “வணக்கம்“ சொல்வதற்கு எங்களுக்கு என்ன தெரியும்? ஆசிரியர் கீழே வாசல் வரை வந்து வழியனுப்பினார்.

    எங்களுக்கு இப்படிப்பட்ட பேருதவியைச் செய்தாரே, அதற்காக அவர் எங்களிடமிருந்து உபசாரத்திற்காக நாங்கள் சொல்லவேண்டிய ஒரு நன்றி வார்த்தையைக் கூட எதிர்பார்க்கவில்லை. எங்களுக்கு உதவிசெய்ய வேண்டியது ஒரு கடமை என்று கருதியவராக எந்தவித மறுமொழியையும் எதிர்பார்க்காமல் ஒரு வண்டியில் ஏறிக்கொண்டு போய்விட்டார். நாங்கள் வண்டியில் செல்வதாவது? அதற்கு ஏது எங்களிடம் காசு! நானும் அண்ணனும் நடந்தே வீடுநோக்கி புறப்பட்டோம்.

    வீடு செல்லும் வழியில் எம்.ஜி.ஆருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. என்ன அது?...

    தொடரும்............

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #192
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "ஒரு வேடத்துக்கு இருவர்..! 'சதி லீலாவதி' யில் சதி!.. - நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் -
    🍁 அத்தியாயம்-14🍁

    நாடகத்திலிருந்து திரைப்பட உலகுக்குள் நுழையும் பெரும் கனவு, அந்நாளைய நாடக நடிகர்களைப் போலவே எம்.ஜி.ஆர் சகோதரர்களுக்கும் இருந்தது. பல போராட்டங்களுக்கிடையில் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கப்பெற்றார்கள். அதற்கு நுாறு ரூபாய் சம்பளமும் பெற்றார்கள் ஆனால் அதைத் தக்கவைத்துக்கொள்ள முடிந்ததா?... அதற்காக அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன...தொடர்ந்து பேசுகிறார் எம்.ஜி.ஆர்.

    ”செல்லும் வழியில் நான் தமயனாரிடம் கேட்டேன். “ஏன் அண்ணே! இது உண்மையான நோட்டா இருக்குமா? சரியான நூறு ரூபாய் நோட்டுதானே?“ என்று.

    'இதுக்கு முன்னாலே நான் எங்கேடா பார்த்தேன்?' என்று சொன்ன அண்ணன், 'ஆமாம் உனக்கு ஏன் திடீர் சந்தேகம்?' என்று கேட்டார்.
    'ஏன் அண்ணே நீங்க கவனிக்கலையா? நூறு ரூபாய் முன்பணம் கொடுத்தாரே! அவர் போட்டுக்கிட்டிருந்த சட்டையிலே கைப் பொத்தான் கிடையாது. கயிறுதான் கட்டியிருந்தாரு. பாத்தீங்க இல்லே? அதனால்தான் சந்தேகம். நூறு ரூபாய் முன்பணம் கொடுக்கிறவர் ஏன் பொத்தான்கூடப் போட்டுக்காம கயிற்றைக் கட்டிக்கிட்டிருக்காரு?' என்றேன்.

    'நானும் கவனிச்சேன். இந்தக் கயிறு கட்டினதுனாலே அவரு முதலாளியா இருக்கக் கூடாதுங்கறது இல்லையே! நிறைகுடம் தளும்பாதுன்னு பெரியவங்க சொல்லுவாங்க. ஒன்றுமில்லாதவங்கதானேடா வெளிச்சம் போடணும்! நாமெல்லாம் நல்ல சட்டை, வேட்டியில்லாம போனா கேலி பண்ணுவாங்க! அதுக்காக எல்லாம் சரியாப் போட்டுக்கிட்டுப் போகவேண்டியிருக்கு. அவங்களை யாரு கேள்விகேட்க முடியும்? யாரு கேலி பேச முடியும்?' என்றார் அண்ணன். அதுவும் சரியான நியாயமாகத்தான் எனக்குப்பட்டது.

    வீட்டுக்குப்போய் தாயாரிடம் நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்தோம். அப்போது இரவு நேரம். அவர்கள் நோட்டைப் பார்த்தார். பார்க்கும்போதே என்னுடைய சந்தேகத்தை அண்ணன் தாயாரிடம் சொன்னார். தாயார் உடனே விளக்கு வெளிச்சத்தில் பார்த்தார்கள். 'நீரோட்டம் இருக்கேடா! எப்படிப் பொய்யாக முடியும்?' என்று சொல்லிவிட்டார்.

    அந்த நோட்டை அப்படியே எடுத்துத் தாயார் அவர்கள் எப்போதும் வணங்கும் விஷ்ணுவின் படத்தடியில் வைத்துவிட்டு, 'நாளைக் காலையில் இதைப்போய் மாத்திக்கிட்டு வரலாம்' என்றார். அந்த இரவெல்லாம் எனக்குத் தூக்கமே இல்லை. வீடு நிறையப் பணமாக இறைந்து கிடப்பதுபோல ஒரு பிரமை. நடப்பதற்குக்கூட இடமில்லாதபடி வெள்ளி ரூபாய்களாகக் குவிந்து கிடப்பது போல எனக்குத் தெரிந்தது.

    தூங்கினேனோ, இல்லையோ தெரியாது. விடிந்து எழுந்தேன். உடனே நாடகக் கம்பெனிக்குச் சென்று எல்லோரையும் பார்க்கவேண்டுமென்ற ஆசை. என் சக நண்பர்களிடம் போய் இந்த முன்பணம் சமாச்சாரத்தைச் சொல்ல வேண்டுமென்று பேராவல்.

    எப்படித்தான் தாயார் என் மனக்குறிப்பைத் தெரிந்துக் கொண்டார்களோ, அறியேன். சட்டையைப் போட்டுக் கொண்டு நான் புறப்பட்டபோது அழைத்தார்கள்; சென்றேன்.

    “நான் சொல்ற வரைக்கும் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது. நாடகக் கம்பெனி முறையெல்லாம் தெரியுமில்லே? ஜாக்கிரதை!” என்றார்கள். எவ்வளவு பெருமையோடு புறப்பட்டேனோ அவ்வளவுக்கவ்வளவு தாழ்ந்து, குறுகி, சோர்ந்து ஒரு மூலையில் போய் உட்கார்ந்தேன்.

    ஒருநாள் நாடகத்தின்போது நாடகக் கொட்டகைக்குப் போனேன். என் நண்பர்களையெல்லாம் பார்த்தேன். என் தோழர்கள் எவ்வித மாற்றத்தோடும் இல்லை; எப்போதும் போலத்தான் இருந்தார்கள். ஆனால், என் கண்களுக்கு அவர்கள் என்னைவிடத் தகுதி குறைந்தவர்களாகத் தோன்றினார்கள்! ஏனென்றால் நூறு ரூபாய் முன்பணம் வாங்கினவன் அல்லவா நான்!
    அவர்கள் என்னிடம் ஏதோ ஒரு மாற்றத்தைக் கண்டுவிட்ட நிலையில் ஏதேதோ கேட்கத் தொடங்கினார்கள்.
    நான் சொல்லவும் முடியாமல், மனதிலே வைத்துக்கொள்ளவும் முடியாமல் தடுமாறினேன். நெருங்கிய நண்பன் ஒருவனிடமாவது சொல்லலாமா என்று ஆசை.

    தாயாரின் கட்டளையை நினைத்தவுடன் ஆசை எப்படி பறந்தோடிற்றோ எனக்குத் தெரியாது. ஒருநாள் எங்கள் நாடகத்தின்போது காலஞ்சென்ற ஜட்ஜ் எம்.வி.மணி ஐயர் என்பவர் கொட்டகைக்கு வந்தார். எங்கள் நாடகக் கம்பெனியிலேயே நாங்கள் சேர்வதற்கு முன்பு நடித்துக் கொண்டிருந்தவர் அவர். ஜட்ஜாக நடித்து மக்களால் பாராட்டப்பட்டதன் காரணமாக ‘ஜட்ஜ் எம்.வி. மணி ஐயர்’ என்ற பட்டப்பெயர் சூட்டப்பட்டது. அவரிடம் காளி என். ரத்தினம் அவர்கள், 'ஏன் மணி எங்கே வந்திருக்கே?' என்று கேட்டார்.

    “சினிமாப் படத்திலே நடிக்க வந்திருக்கேன். உங்க ‘பதிபக்தி’ மாதிரிதான்; சதிலீலாவதி. அந்தப் படத்திலே நடிக்க வந்திருக்கேன்” என்றார். எங்களுக்கு ஒரே பயம். எங்கே நாங்கள் ஒப்பந்தமாகியிருக்கும் விஷயத்தைச் சொல்லி விடுவாரோ என்ற திகில். ஆனால், அவர் மேலும் பேசுவதற்குள் டி.ஆர்.பி. ராவ் அவர்கள் அவரைக் கேட்டார். “நீ என்ன வேஷம் போடப் போகிறாய்?” என்று 'துப்பறியும் வேடம்' என்றார் அவர். அவ்வளவுதான்! என் தலை சுற்றுவதுபோல் இருந்தது. அந்த வேடத்துக்குத்தானே சம்பளம் பெற்று வந்திருக்கிறோம். “சரி இந்த வேடம் நமக்குக் கிடைக்காதோ “சரி இந்த வேடம் நமக்குக் கிடைக்காதோ என்னவோ, என்ன ஆனாலும் மறுநாள் ஆசிரியரைப் பார்த்து விடுவது” என்று முடிவெடுத்தேன்.

    ஜட்ஜ் எம்.வி. மணி இந்தச் சேதியைச் சொன்ன பிறகு சிறிது நேரத்துக்கு முன்னால் எந்த நண்பர்கள் என்னைவிடத் தாழ்ந்தவர்களாக என்முன் தெரிந்தார்களோ, அதே நண்பர்கள் இப்போது என்னைவிட உயர்ந்தவர்களாகத் தெரிந்தார்கள் எனக்கு! மனிதனுடைய மனம் எத்தனை பலவீனமானது என்பதை அப்போது தான் ஒரு சிறிது நேரத்தில் புரிந்துக்கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மனதின் உள்ளம் மிகக் கடினமானது, வலிவுமிக்கது, எதனாலும், யாராலும் கலங்கவோ, கலக்கப்படவோ முடியாத சக்தி வாய்ந்த ஒன்று என்பது பல புராணக் கதைகள் மூலமாகவும், வீரப் பெருமக்களின் சரிதை மூலமாகவும், என் தாயின் வாய்மொழி வழியாகவும் ஓரளவு புரிந்துக்கொண்ட முடிவாகும்.

    இளகிய மனம் படைத்தவர்கள் பலரை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். ஏன், என் தாயார் செய்த பல அருஞ்செயல்களை மகனான நான் கண்முன் அறிந்து உணர்ந்திருக்கிறேன்.

    இந்த சம்பவம் சில ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்ததொரு நிகழ்ச்சிக்கு என் மனம் என்னை ஈர்த்துச் செல்கிறது. இங்கே அதை வெளியிடவும் விரும்புகிறேன்.

    அந்தச் சமயம் நாங்கள் குடியிருந்த வீட்டில் இன்னும் சில குடித்தனக்காரர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களில் ஒருவர் ‘டீ’ விற்கும் தொழிலாளி; அவருக்கு தொழில் செய்யும் உபகரணங்கள் சேதமாகிவிட்டது ஒருநாள். தாயாருக்கு இந்தச் செய்தி தெரியவந்தது. தொழில் செய்யத்துடிக்கும் அந்த எளியவர்களுக்கு அதற்குத் தேவையான கருவி இல்லாமல் பிழைப்பே கெட்டுப்போகிறதே என்று அவர்களின் அல்லலை நினைத்து அனுதாபத்தோடு வேதனையும் அடைந்தார். அந்தக் காலத்தில் நாங்கள் உயர்ந்த நிலையில் வசதியோடு இருந்தோம் என்று யாரும் தப்புக்கணக்குப் போட்டுவிட வேண்டாம். எப்படியோ சிரமத்துடன் ஒருவிதமாய்க் காலம் ஓடிக்கொண்டிருந்து பட்டினி கிடக்கவில்லை என்பதுதான் அப்போதைய நிலைமை.

    அந்தத் தொழிலாளருக்கு உதவுவேண்டும் என்ற நல்ல எண்ணம் தாயாருக்குப் பிறந்தது. எண்ணம் பிறந்தால் போதுமா! செயல்படுத்துவதற்கு வாய்ப்பு அதாவது, பணம் வேண்டாமா? பணம் தான் இல்லையே!

    நாங்கள் பற்று வரவுக் கணக்கில் கடையில் வாங்கும் உணவுப் பண்டங்களை வேண்டுமானால் கொடுக்கலாம். எத்தனை நாளைக்கு முடியும்? அப்படியும் கொடுத்திருக்கிறார்கள். அதற்கெல்லாம் பின்புதான் கடைசியாக முடிவுக்கு வந்து எங்களுக்குக்கூடத் தெரியாமல் பணம் ஏற்பாடு செய்து அவருக்குத் தேவையான அந்தப் பணத்தைக்கொடுத்திருக்கிறார். இதன்பின் அந்தக் குடும்பத்தினர் டீ விற்பதையும், சம்பாதிப்பதையும் நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் எப்படித்தான் அவர்களின் வாழ்க்கை நடந்து வருகிறது என்பது தெரியாது.

    ஒருநாள் வீடு திரும்பிய நேரத்தில் ஆறு மாதக் கடன்காரன் என்று அழைக்கப்படுகிற ஈட்டிக்காரனுக்கும், தாயாருக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கக் கண்டோம்.

    ஒன்றுமே புரியவில்லை. எங்களுக்கு ஈட்டிக்காரன் என்றாலே பிடிக்காது. அவன் பயங்கரமானவன் என்ற எண்ணமுள்ளவர்கள் நாங்கள். அவன் வீட்டுக்கு வருவதே தலைகுனிவு என்பதும் எங்கள் முடிவு. அப்படிப்பட்ட ஒருவன் என் தாயிடம் வந்து 'பணத்தை வைத்துவிட்டு மறுவேலை பார்' என்றால் அதை எப்படி நாங்கள் சகித்துக் கொள்வோம். அதுவரை நாங்கள் தாயாரை எதிர்த்துப் பேசியதோ, முரண்பாட்டுடன் பார்த்ததோ கிடையாது. என்னவென்று விசாரித்தோம். எங்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பைப் பார்த்துப் புரிந்துக்கொண்ட தாயார் தம் கையில் போட்டிருந்த தங்கக் காப்பைக் கழற்றி அவன் மேல் விட்டெறிந்து 'இதை எடுத்துக் கொண்டு போய் விற்று உன் பணம்போக மீதத்தைக்கொண்டு வந்து கொடு' என்றார்கள்.

    இதைச் சிறிதும் எதிர்பார்க்காத அந்த ஈட்டிக்காரன், 'நாளைக்கு வரேன். நீங்களே நாளைக்குக் கொடுங்க' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான். அதோடு காலையில் 10 மணிக்கு வந்துவிடுவேன் என்று எச்சரிக்கையும் செய்தான். அவன் போனதும் நாங்கள் தாயாரைப் பார்த்தோம். அழுகையோடும்; ஆத்திரத்தோடும் எங்கள் வார்த்தைகள் வெளிப்பட்டன. தாயார் அவர்கள் சிறிதும் சலனமுறவில்லை. 'நான் கைநீட்டி வாங்கினேன் திருப்பிக் கொடுக்கலன்னா அவன் திட்டத்தானே செய்வான்.'

    'எதுக்காக வாங்கனும்? அவன் கிட்டே எதுக்காக வாங்கினீங்க?'- கொஞ்சம் அதிகமாகவே வார்த்தைகள் எங்களிடமிருந்து வெளிவந்தன. எதுக்காகவோ வாங்கினேன்; ஏன் எனக்காகத்தான் வாங்கினேன்! அதை யார்கிட்டயும் சொல்ல வேண்டிய அவசியமில்லை.'
    இழிவான, கேவலமான வார்த்தைகள் அல்ல. 'நீங்கள் ஏன் இப்படிச் செய்ய வேண்டும் என்று கண்டிக்கும் வார்த்தைகள்'. இதுவரை அவர்கள்தான் எங்களைக் கேட்டதும், கண்டிப்பதும் வழக்கம்.

    இப்போது நாங்கள் கேட்கும் படியாக நேர்ந்ததை எங்களாலேயே பொறுத்துக் கொள்ளமுடியாதபோது தாயாருக்கு அதை எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்! ஆனாலும் கடைசி வரையில் அவர்கள் எதற்குப்பணம் வாங்கினார்கள் என்பதைத் தெரிவிக்கவே இல்லை. இந்தக் குழப்பத்தையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அந்தத் தொழிலாளியின் மனைவி எங்களிடம் வந்து அழுதபடியே உண்மையைச் சொன்னார்.

    அவர்களுக்குக் கெட்டிலுக்குப் பணம் தருவதற்காகவும், வியாபாரம் நன்றாக நடப்பதற்காகவும் அவர்கள் மீது ஈட்டிக்காரனுக்கு நம்பிக்கையில்லாத காரணத்தால் என் தாயார் தன் பேரில் கடன் வாங்கி அவர்களுக்குக் கொடுத்திருக்கிறார். அவர்களால் திருப்பிக்கொடுக்க முடியவில்லை. வரவுக்கும், செலவுக்கும் தான் சரியாக இருக்கிறதே! எப்படிக் கொடுப்பார்கள். அதனால் தாயார் ஈட்டிக்காரனுக்குப் பதில் சொல்லக்கூடிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட இளகிய மனத்தையும் நாங்கள் கண்டிருக்கிறோம்.

    மேலே நான் குறிப்பிட்ட நிகழ்ச்சி என்னுடைய பதவிப் போராட்ட காலத்துக்குப் பின்னால் சில ஆண்டுகள் கழித்து நடந்ததுதான் என்றாலும் இன்றைய சூழ்நிலையில் இதை நினைவுப்படுத்திக்கொள்ள வேண்டியதாயிற்று.

    எப்படியோ ஆசிரியரின் மனத்தை எங்கள் பக்கம் திருப்பி எங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கை மட்டும் இருந்து கொண்டிருந்தது.

    தொடரும்............

  4. #193
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "எனக்கு இழைக்கப்பட்ட அநீதி!... எம்.ஜி.ஆர் முதல் பட அனுபவம்! - நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர்.
    �� அத்தியாயம் - 15��

    நாடக ஆசிரியர் எம்.கந்தசாமி முதலியார் மூலம் எஸ்.எஸ் வாசன் எழுதிய கதையான சதிலீலாவதி திரைப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு முதன்முதலாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் அந்த வாய்ப்பை தக்கவைத்துக்கொள்வதற்கு அவர் பல சிரமங்களைச் சந்திக்கவேண்டியதிருந்தது. அந்த அனுபவத்தைத் தொடர்ந்து விவரிக்கிறார் இங்கே...

    “அந்த நேரத்தில் நாடக் கம்பெனியில் ஆசிரியருடைய மகன் எம்.கே.ராதா, டி.எஸ்.பாலையா போன்றவர்கள் நடித்துக் கொண்டிருந்தார்கள். அரக்கோணத்தில் நாடகம் நடந்துகொண்டிருந்த நேரம். அரக்கோணத்துக்குப் போய்ப்பார்க்க எங்களுக்கு நேரம் இல்லை.சென்னையிலேயே தினமும் எங்கள் கம்பெனி நாடகம் இடைவிடாமல் நடந்து கொண்டிருந்ததால் நாங்கள் அங்கே போகமுடியவில்லை. கடைசியாக நாங்கள் எங்கள் கம்பெனியைவிட்டு விலகி சினிமா கம்பெனி வாடகைக்கு எடுத்திருந்த வீட்டுக்கே போய்ச் சேரவேண்டிய அவசர அவசியம் ஏற்பட்டுவிட்டது.

    நாங்கள் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியிலிருந்து எப்படி அங்கே குடி போனோம் என்பதே நெருக்கடி நிறைந்த ஒரு நல்ல நிகழ்ச்சியாகும். அதைப் பிறகு சொல்வோம். நாங்கள் ஆழ்வார்ப் பேட்டையிலிருந்த அந்தக் கம்பெனி வீட்டில் குடிபுகுந்தோம். வேடத்தைப் பற்றிய பிரச்னை எங்கள் முன்னால் பெரிய உருவெடுத்துச் சோதனைக் குறியாக நின்று கொண்டிருந்தது.

    ஒருநாள் நாங்கள் அரக்கோணத்துக்குச் சென்று ஆசிரியரைச் சந்தித்தோம். அங்கு சதிலீலாவதி நாடகம் நடந்துகொண்டிருந்தது. என்னை வற்புறுத்தினார்கள் சண்டைக் காட்சிகளில் நடிக்கும்படியாக. நான் நடிக்கவும் செய்தேன். மறுநாள் ஆசிரியரிடம் நாங்கள் எங்கள் அச்சத்தைச் சொன்னோம். எனக்குக் குறிப்பிட்ட வேடத்தை எம்.வி. மணி அவர்களுக்குக் கொடுக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாமே, என்னுடைய நிலைமைதான் என்ன, எனக்கு என்னதான் வேடம் என்று நேரிடையாகவே கேட்டுவிட்டேன்.

    ஆசிரியருக்குத் தெரியாமலேயே பட முதலாளிகள் எம்.வி. மணி அவர்களுடைய நடிப்பை வேறு கம்பெனி நடத்திய பதிபக்தி என்ற நாடகத்தில் கண்டு வியந்து அவரை ஒப்பந்தம் செய்துவிட்டிருக்கிறார்கள் என்ற செய்தி கிடைத்ததாம்.

    இதைச் சொல்லிவிட்டு அந்த வேடம் கிடைக்க முடியாமல் போய்விட்டதாலும், அதைப்போலவே இன்னொரு வேடம் இருக்கிறது. அதை ஏற்பாடு செய்து தருகிறேன் என்று கூறினார். அவர் குறிப்பிட்ட வேடம் உண்மையிலேயே நல்ல வேடம் தான். கதாநாயகனால் கொல்லப்பட்டதாகக் கருதப்பட்டவர். அந்தக் கதாநாயகனுடைய நெருங்கிய நண்பர். கதாநாயகனுக்கு தொல்லை வரக்கூடாது என்பதற்காகவும், கொலையாளிகளைப் போலீசிடம் ஒப்படைப்பதற்காகவும் மாறு வேடத்தில் இருந்து கொண்டே நண்பருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வழக்கு மன்றத்தில் உண்மையை நிரூபித்து நண்பரைக் காப்பாற்றும் ஒரு நல்ல பாத்திரம். மனத்துக்கு ஒரு பெரிய நிம்மதி. மகிழ்ச்சியோடு நாட்களைக் கடத்திக்கொண்டிருந்தோம்.

    விரைவில் படப்பிடிப்புத் துவங்கவிருக்கிற செய்தி வெளிவந்தது. படப்பிடிப்புத் துவங்க ஒருசில நாட்களுக்கு முன்பு எங்களுக்குக் கிடைத்த செய்தி குழப்பத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியது. ஆசிரியர் அவர்களுடைய கம்பெனியில் அவர் மகனுடன் கதாநாயகியாக நடித்த நண்பர் நம்மாழ்வார் என்பவருக்கு சதிலீலாவதி படத்தில் எந்த வேடமும் குறிப்பிடப்படவில்லை என்பதாகவும், அதனால் ஆசிரியருக்கும், அவருக்கும் மனத்தாங்கல்கூட ஏற்பட்டுக்கொண்டிருப்பதாகவும் வந்த செய்திதான் அது.

    நம்மாழ்வார் என்பவர் பல ஆண்டுகள் நாடக மேடையில் நடித்து அனுபவம் பெற்றவர் என்பது மட்டுமல்லாமல் ஆசிரியருக்கு வலதுகை போல் இருந்து எவ்வளவு துன்பங்கள் ஏற்பட்டாலும் ஆசிரியரை விட்டுப் பிரியாது அந்தக் கம்பெனியிலேயே இருந்து நிறையச் சேவை செய்தவர். ஆசிரியருடைய நன்மதிப்புக்கும், நன்றிக்கும்கூடப் பாத்திரமாகும் தகுதியைப் பெற்றவர். இந்த உண்மையை நாங்கள் முன்பே நன்றாக அறிந்தவர்கள்.

    அனுதாபத்தின் பேரால் வேலைகொடுக்கப்பட்ட எனக்கே வேடம் மாற்றப்படுகிறது என்ற செய்தியை தாங்க முடியாதிருக்கும்போது பல ஆண்டுகளாக ஓடாக்கிக் கொண்டவருக்கு வேலையே இல்லை என்றால் எப்படி அவரால் தாங்கிக்கொள்ளமுடியும்!
    அவர் விரும்பியதோ, கேட்டதோ நியாயம் என்று இப்போதுதான் தெரிகிறது. ஆனால், அப்போது அதைப்பற்றிச் சிந்திக்க நேரமும் இல்லை. மனதில் அந்த எண்ணத்துக்கு இடமும் இல்லை.

    அவருடைய நியாயமான வாதத்தை உணர்ந்த ஆசிரியர், நம்மாழ்வாருக்குச் செய்யவேண்டிய கடமையைச் சரிவரத்தான் செய்தார். ஆனால், அது சரிவரச் செய்ததாக என் உள்ளத்துக்கு எப்படித் தோன்ற முடியும்!

    ஏனெனில், அந்தத் தீர்மானத்தால் பாதிக்கப்பட்டவன் நான் எப்படியெனில் எனக்கு என்று சொல்லப்பட்ட\இரண்டாவது முறையாகத் தீர்மானிக்கப்பட்ட “பரசுராமன்” (கதாநாயகனின் நண்பன்) என்ற வேடம் நம்மாழ்வாருக்கு என்று முடிவு செய்யப்பட்டுவிட்டது.
    இது எனக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று நான் கருதினேன். நீதியோ, அநீதியோ முடிவாகத் தீர்மானிக்கப்பட்டுவிட்டது. எனக்கு அந்த வேடம் இல்லையென்று. வேடம் இல்லை என்று சொல்லிவிட்டால் போதுமா! என் வேதனையைத் தீர்க்க யாரால் மருந்து கொடுக்க முடியும்?

    தாயாரிடம் போய்ச் சொல்வதற்கும் எங்களுக்குத் துணிவில்லை; அவரைத் தவிர நாங்கள் போய் எங்கள் குறைகளைச் சொல்ல வேறு யாருமில்லை.

    எப்படியோ மனதில் இருக்கிற பாரம் குறையவேண்டும். மறைவு இல்லாமல் எல்லாவற்றையும் கொட்டி விடவேண்டும். திறந்த மனதோடு கொட்டப்படுகிற அந்த வார்த்தைகளில் எந்தவிதமான இடையூறும் வந்துவிடக்கூடாது. சே இவ்வளவு மோசமா! என்று கேலியும் வந்துவிடக்கூடாது. கேலி செய்யப்பட்டால் அவமானம் மிஞ்சும். அதனால் சொல்லப்படுகிற திசையிலிருப்பவரிடமிருந்து எந்தவித மறுமொழியும் இல்லாதிருக்கவேண்டும். ஆனால், ஒருவரிடம் மனச்சுமையை இறக்கிவிட்டோம். அதாவது நம் குறைகளைக் கொட்டிவிட்டோம். அவர்கேட்டுவிட்டார் என்கிற நம்பிக்கை பிறக்கவேண்டும். அந்த நேரத்தில் முறையீட்டைக் கேட்டவரிடமிருந்து வந்த மறுமொழியும் இல்லாவிட்டாலும் பின்பு என்றைக்காவது அவரால் ஒருவழி காட்டப்பட்டே தீரும் என்ற நம்பிக்கை உதயமாகும்.
    இதற்கு ஏற்ற ஒரே இடம் கடவுள் சிலைதான் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.

    எங்களுக்கு ஆறுதலோ, தேறுதலோ உண்டாக வேண்டுமானால் எங்கள் தாயாரிடமிருந்துதான் உண்டாக வேண்டும். உண்டாவது வழக்கம். அவர்கள் சொல்கிற பதில் எப்போதும் உறுதியூட்டுவதாகவும், தன்னம்பிக்கையை உண்டாக்குவதாகவும் இருக்கும்.

    அம்மாவிடம் சொல்லாமல் இருக்க முடியாது. சொன்னால் அவர்களுடைய முகபாவம் நிச்சயமாக அவருடைய துன்பத்தையும், வேதனையையும் அல்லவா வெளிக்காட்டும்!

    கடவுள் சிலையைப் போல் மவுனமாக இருக்க அவர்களால் முடியாதே! தன்னுடைய மகனுக்கு ஏற்படும் இன்னலை எப்படி ஒரு தாயால் பதில் உணர்வைக் காட்டாமல் மறைத்துக் கொள்ளமுடியும். ஆனால், சொல்லாமலிருக்க முடியாதே! தாயிடம் கூறினோம். நாங்கள் சொல்லுவதையெல்லாம் அமைதியாகக் கேட்டுக்கொண்டேயிருந்தார். தாயார் அவர்கள் என்ன சொல்வார்களோ, வேதனைப் படுவார்களோ என்று அவர் முகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தோம்...

    பிள்ளைகளிடம் என்ன சொன்னார் சத்தியபாமா?

    அடுத்த அத்தியாயத்தில்.............

  5. #194
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "எம்.ஜி.ஆரின் முதற்படத்தின் படப்பிடிப்பில் இதுதான் நடந்தது"! : நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் -
    �� அத்தியாயம் :16��

    தன் முதல்பட வாய்ப்பு குறித்து கனவில் மிதந்துகொண்டிருந்த எம்.ஜி.ஆருக்கு அவருக்கு அளிக்கப்பட்ட வேடத்துக்கு வேறு ஒருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்ட தகவல் அறிந்து கலங்கிப்போனார். வழக்கம்போல் அந்த கவலையை தாயார் சத்தியபாமாவிடம் பகிர்ந்துகொண்டபோது மகனின் கவலையை அவரது தாயார் எப்படி தீர்த்தார் என தொடர்ந்து சொல்கிறார் எம்.ஜி.ஆர்.

    ...“கடைசியாக இப்ப என்னதான் வேஷம் கொடுத்திருக்கிறார்கள் என்று கேட்டார் என் தாயார். இன்ஸ்பெக்டர் வேஷம் என்று சொன்னேன். ஒரு நீண்ட பெருமூச்சோடு எங்களைத் திரும்பிப் பார்த்தார். எங்களுடைய விழிகளிலிருந்து எங்களை அறியாமல் கண்ணீர் விழுந்து கொண்டிருந்தது.

    அதைப் பார்த்துவிட்டு கேலி நிறைந்த ஓர் அலட்சியச் சிரிப்போடு என் கண்களைத் துடைத்தபடி சொன்னார். 'போடா, ரொம்ப லட்சணம்! வானம் இடிந்து விழப் போகுதுன்னு முட்டையினாலே தடுத்து நிறுத்த யாராவது முயற்சி செய்வார்களா! முட்டையும், பூமியும் கிட்டத்தட்ட ஒரே வடிவம் தாண்டா அதைப் போலத்தானே நாமும் நம்ம நிலைமையிலே இதையெல்லாம் எப்படித்தடுக்க முடியும். நடக்கிறது நடந்தே தீரும். அதுக்காக ஏக்கப்பட்டு கண்ணீர் விட்டால் முடிவு மாறியா போயிடும்!

    பாய்ஸ் கம்பெனியிலே இருந்தவங்க பலபேருக்கு இந்த வேடம் கூடக் கிடைக்கலே, இல்லையா! உனக்காவது இந்த வேடம் கிடைச்சிருக்கே! அதுக்குச் சந்தோஷப்படு. எப்போ கிடைக்குமோ, அப்போதுதான் எதுவும் கிடைக்கும் வர்றதை தடுக்க முடியாது; வராததைக் கொண்டு வாழ்ந்துட முடியாது. கிடைச்ச வேஷத்துல உன் திறமையைக் காட்டு' என்றார்.

    இப்போது உணர்கிறேன். நான் பம்பாய்க்குப் போனபோது எனக்குக் கொடுக்கப்படுவதாக இருந்த வேடம் பாலையா அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது என்று எழுதியிருந்தேனே அந்த வேடத்தையோ, அல்லது இங்கே குறிப்பிட்டு இல்லை என்று ஆன அந்த வேடத்தையே ஏற்று நான் நடித்திருந்தால் நிச்சயமாக நானும் தோல்வி அடைந்திருப்பேன்; அந்தப் படமும் தோல்வி கண்டிருக்கும்.

    மனிதனுக்கு ஆசை தோன்ற வேண்டியது தான். முன்னேற வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தே தீரவேண்டிய ஒன்று தான். ஆனால், எதிரியோடு போராடப் போகிற ஒருவன் தன் பலத்தையும், எதிரியின் பலத்தையும் தெரிந்து போராடப் போகவேண்டும் என்று சொல்லியிருபதுபோல் தன்னுடைய சக்தியையும், அந்தப் பாத்திரத்தின் தகுதியையும் உணர்ந்து விருப்பம் கொள்ளாவிட்டால் எத்தனை பேருக்கு அதனால் எப்பேர்பட்ட விளைவு உண்டாகுமென்பதை அன்று என்னால் உணரமுடியவில்லை. இன்று உணர முடிகிறது!"- இப்படி தன் முதல்படமான சதி லீலாவதி குறித்து எழுதியிருந்தார் எம்.ஜி.ஆர்.

    'இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படைத்தவன் தொழிலாளி'...என தன் படத்தில் இடம்பெற்ற கண்ணதாசன் வரிகளை அன்றே அனுபவபூர்வமாக தாய் சத்தியபாமா எம்.ஜி ஆருக்கு உணர்த்தியதால் எம்.ஜி.ஆரின் திரையுலக வாழ்க்கை 1936-ம் ஆண்டு வெற்றிகரமாக துவங்கியது.

    சதி லீலாவதி படம் எம்.ஜி.ஆருக்கு மட்டுமல்ல; பிற்காலத்தில் எம்.ஜி.ஆரின் வள்ளல்குணத்துக்கு ஆதர்ஷமாக விளங்கியவரும் தமிழக மக்களால் கலைவாணர் என அழைக்கப்பட்ட நகைச்சுவை மேதை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் அதுதான் முதற்படம். குணச்சித்திர நடிகர் டி.எஸ் பாலய்யா அறிமுகமானதும் இந்த படத்தில்தான்.திரையுலகில் எம்.ஜி.ஆர் சகாப்தம் துவங்கியது..........

    சதி லீலாவதி படத்தின் படப்பிடிப்புக் காட்சி....இப்பதிவில் இணைத்துள்ளேன்....

  6. #195
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கௌரவம் பார்த்தால்
    கௌரவம் பார்க்காதே?
    ---------------------------------------------

    எம்.ஜி.ஆரின் சிறப்பை வகை வகையாய் ஒவ்வொருத்தரும்,, தங்கள் தனித் திறமையால் வித விதமாக முக நூல்,,வாட்ஸ்-அப்புகளில் விளக்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள்!
    அந்த வகையில் எம்.ஜி.ஆரின் ஒரு குண நலனை,,அதுவும் அவர் முதல்வராக இருக்கும்போதும் செயல்படுத்தியதை இங்கேப் பார்க்கலாம்!
    அது,,சத்யா மூவீஸின் மாஸ்டர் பீஸ் படம்--
    ரிக்ஷாக்காரன்!!
    சோ வையும்,,இன்னொரு சிறந்த நடிகரையும் தனது விருப்பத் தேர்வாக,,அந்தப் படத்தில் நடிக்க வைக்க விரும்புகிறார் எம்.ஜி.ஆர்!
    தேங்காய் ஸ்ரீனிவாசனோடு ஈடு கட்டும் ஐயராக சோ நடிக்க வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் எதிர்ப்பார்ப்பு எவ்வளவு சரியானது என்பதைப் படம் பார்த்த நாம் புரிந்து கொள்ளலாம்!
    தேங்காயோடு சேர்ந்து கலக்கியிருப்பார் சோ!!
    வக்கீலாக,,ஒரு குணச்சித்திர நடிகரை தம் மனதில் தேர்வு செய்து வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்!
    கதையே,,அந்த வக்கீலால் தான் அமைந்திருக்கிறது என்பதையும்,,அந்த நடிகரால் தான் அந்தப் பாத்திரத்துக்கு உயிர்க் கொடுக்க முடியும் என்றும் திடமாக நம்பினார் எம்.ஜி.ஆர்!
    குணச் சித்திர நடிகராக எவர் பொருத்தமானவர் என்று எம்.ஜி.ஆர் கருதினாரோ,,அவரால் எம்.ஜி.ஆரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய இயலவில்லை?
    சிவாஜி படங்களுடன் வேறு நடிகர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் ஒரு நாள் கால்ஷீட்டைக் கூட ரிக்ஷாக்காரனுக்காக அவரால் ஒதுக்க முடியவில்லை!
    தயாரிப்பாளர் சார்பிலும்,,இயக்குனர் சார்பிலும் கேட்கப் பட்டும் சாதகமான பதிலை அந்த நடிகரால் கொடுக்க முடியவில்லை!
    வத்தி வைக்கவும்,,வளைத்துப் பேசவும் தான் வகை வகையாய் மனிதர்கள் இருக்கிறார்களே?
    ரொம்ப அலட்சியமா மாட்டேன்னு சொல்லிட்டார்!
    சிவாஜி படங்களில் நடிக்கறோம்ங்கற திமிரு?
    உங்கள வச்சு தாண்ணே படமே!
    அந்தாளு கிட்டே எதுக்குக் கெஞ்சணும்?
    இப்படியாக உப்புக் காரம் சேர்த்து??
    பதில் ஏதும் சொல்லாத எம்.ஜி.ஆர்,,தொலைபேசியைக் கையில் எடுக்கிறார்--
    சாதாரணமாக,, மறு முனையில் பேசிய அந்த நடிகர் பேசுவது எம்.ஜி.ஆர் எனத் தெரிந்ததும் டென்ஷனாகிறார்?
    என் படத்துல நீங்க நடிச்சா நான் சந்தோசப்படுவேன். உங்களுக்குக் கால்ஷீட்டு பிரச்சனை இருக்குங்கறதையும் நான் மறுக்கலே.
    உங்களுக்காக ஒரு ரெண்டு மாசம் காத்திருக்கணும்ன்னாலும் பரவாயில்லே--
    எம்.ஜி.ஆர் போய் இப்படி--அதுவும் நம்மப் போல சாதாரண நடிகரிடம்??
    நெகிழ்ச்சியில் கண் கலங்கிய அந்த நடிகர் பல்வேறு முறைகளில் தன் கால்ஷீட்டை அட்ஜஸ்ட் செய்து கொண்டு நடித்துக் கொடுத்து,,தம் நடிப்பில் எம்.ஜி.ஆருக்கு இருந்த நம்பிக்கையை பூர்த்தி செய்து கொடுக்கிறார்!1
    ஆம்! அவர் மேஜர் சுந்தரராஜன்!!!
    ஒரு கலைஞனாக மட்டுமே தம்மை இருத்தி,,ஒரு படம் வெற்றிப் படமாக இருக்க வேண்டும் என்பதோடு,,காசு கொடுத்துப் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு மன நிறைவைக் கொடுக்க வேண்டும் என்ற காரணத்தால்,,தன் நிலையைத் தாழ்த்தி மேஜரிடம் பேசிய எம்.ஜி.ஆர்??
    இதே எம்.ஜி.ஆர் தான் முதல்வராக இருந்தபோது மத்தியில் பிரதமராக எவர் இருந்தாலும் தன் ஆதரவைக் காட்டினார்--
    நான் இப்போ தமிழ் நாட்டு மக்களின் பிரதி நிதி!
    ராமச்சந்திரனுக்குன்னு நான் கவுரவம் பார்த்தால் தமிழ் நாட்டு மக்களுக்கு மத்தியிலேர்ந்து வரும் உதவிகள் தடைபடுமே??
    எவன் ஒருவன்--
    தன்னிலைத் தாழ்ந்து மற்றவர்க்காக குரல் கொடுத்தால்--
    விண் நிலைக்கு உயரமாட்டானா ஒருவன்?
    என் நிலை இதுவென்று எம்.ஜி.ஆர் சொன்னதைக் கடைப் பிடித்தால்-
    இன் நிலை தானே எல்லோருக்கும் இறுதி வரைக்கும்!!
    இதுவென்று நாமும் பணிவைக் கொள்வோம்!
    இது வென்று கொடுக்கும் நம் முயற்சிகளை!!!.........

  7. #196
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "எம் ஜி.ஆரின் முதல் காதல்"...! - நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர்.
    �� அத்தியாயம்-17��

    நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்ததால் எம்.ஜி.ஆருக்கு சில பிரச்னைகள் இருந்தன. 'சதி லீலாவதி' படப்பிடிப்பின் ஆரம்ப நாட்களில் பெரும் சிரமப்பட்டார் எம்.ஜி.ஆர். சினிமாவைப்பற்றிய அடிப்படை புரிதல்கள் அவருக்கு கைவரவில்லை.

    பார்வையாளர்களுக்கும் நாடகமேடைக்கும் பல அடி துார இடைவெளி இருக்கும் என்பதால் அந்நாளைய நாடக நடிகர்கள் வசனங்களையும் பாடல்களையும் உச்சஸ்தாயியில் பாடி நடிப்பார்கள். சினிமாவும் புதிது; சினிமாவுக்கு எம்.ஜி.ஆரும் புதிது. சொல்லவேண்டுமா எம்.ஜி.ஆர் நிலையை?...நாடக பாணியிலான நடிப்பை திரைப்படத்துக்கு தக்கவாறு மாற்றிக்கொள்ளப் பெரிதும் சிரமப்பட்டார் அவர்.

    வழக்கம்போலவே சினிமா வசனங்களையும் நாடக பாணியிலேயே உரத்தக் குரலில் பேசினார். சினிமாவின் நுணுக்கங்களை அவரால் முதலில் புரிந்துகொள்ளமுடியவில்லை. இயக்குநர் எல்லிஸ் ஆர்.டங்கனுக்கும் இது முதல் படம்தான் என்றாலும், அமெரிக்கரான அவர் மேலைநாடுகளின் மென்மையான வசனபாணியைப் பின்பற்றி படத்தை இயக்கிக்கொண்டிருந்தார். அத்தகையவருக்கு எம்.ஜி.ஆரின் நாடக பாணி நடிப்பும், வசன உச்சரிப்பும் எரிச்சலைத் தந்தது. ஆவேசத்தோடு இப்படி பேசுகையில் நடிப்பும் மிகையாக வெளிப்பட்டது. டங்கன் பலமுறை சொல்லியும் எம்.ஜி.ஆர் திருத்திக்கொள்ளவில்லை.

    ஒருநாள் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு எம்.ஜி.ஆரை தனியே அழைத்துச்சென்று, “மிஸ்டர் ராமச்சந்திரன், சினிமா மனித உழைப்பினால் மட்டும் உருவாவது அல்ல; பல்வேறு தொழில்நுட்ப விஷயங்களின் ஒருங்கிணைப்பில் உருவாகிறது. நீங்கள் இயல்பாக பேசி நடியுங்கள். நான் பார்வையாளனுக்கு தக்கபடி அதைக் கொண்டு சேர்க்கிறேன். இது தொடர்ந்தால் உங்கள் சினிமா வாழ்வு பாதிக்கப்படும்” என மென்மையாக சொல்லிப் புரியவைத்தார்.

    இத்தனை அல்லல்களுக்கு மத்தியில் கிடைத்த அரியவாய்ப்பை இழக்க விரும்பாத எம்.ஜி.ஆர் பெரும் முயற்சிகளுக்குப்பின் நாடக பாணி நடிப்பிலிருந்து வெளிவந்தார். சில நாட்களில் இயக்குநர் டங்கனே ஆச்சர்யப்படும்வகையில் எம்.ஜி.ஆரின் நடிப்பு மிளிர்ந்தது.

    திரைப்படத்தின் நுணுக்கங்களை புரிந்துகொண்டாலும் நாடகத்தைத்தான் எம்.ஜி.ஆர் மிகவும் நேசித்தார். சினிமாவின் யதார்த்தங்களை உணர்ந்ததால் அவர் சினிமாவுக்குரிய உடல்மொழியில் நடித்து வெற்றிபெற்றார். ஆனால் அது எம்.ஜி.ஆருக்கு திருப்தியளித்த விஷயமல்ல. சினிமாவின் வெற்றிக்காக அவர் விருப்பமின்றி சில விஷயங்களை தியாகம் செய்யவேண்டியதானது.

    'எம்.ஜி.ஆரின் அழுகை நடிப்பு சோபிக்காது என்றும், அழுகிற காட்சிகளில் அவர் முகத்தை காமிராவுக்கு காட்டமாட்டார்' என அவர் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஆனால் எம்.ஜி.ஆர் ஆரம்பநாட்களில் நாடகங்களில் கூட கிளிசரின் பயன்படுத்தமாட்டார். இயல்பாக நடிப்பதையே அவர் விரும்பினார். 'என் தங்கை' நாடகத்தில் துயரமான காட்சிகளுக்குத் தக்கபடி முகத்தில் உணர்ச்சிகளை வரவழைத்துக்கொண்டு அவர் அழும்போது அவரின் அழுகை பார்வையாளர்களை உருகவைத்துவிடும். சினிமாவிலும் அப்படியே நடிக்க அவர் ஆசைப்பட்டார். ஆரம்பத்தில் சில படங்களில் கிளிசரினை பயன்படுத்தாமல் இயற்கையாகவே அழுகை காட்சிகளில் நடித்தார். ஒரு படத்தில் நடித்துமுடித்து 'ரஷ்' பார்த்தபோது அவரது அழுகை நடிப்பு சோபிக்கவேயில்லை. காரணம் படமாக்கப்பட்டபோது இருந்த மின்விளக்கின் சூட்டினால் அவரது கன்னத்தில் வழிந்த நீர் உடனடியாக காய்ந்து உலர்ந்துபோனது. காட்சி எடுபடாமல் போனது. நாடகம் வேறு, சினிமா வேறு என்பதை அன்றுதான் முழுமையாக புரிந்துகொண்டார் எம்.ஜி.ஆர்.

    சதி லீலாவதி திரைப்படம் வெளியாகி அபார வெற்றிபெற்றது. படத்தின் வெற்றியைவிட திரையுலகில் நாமும் நுழைந்துவிட்டோம் என்பதில் எம்.ஜி.ஆருக்கு பெரும் மகிழ்ச்சி. சதி லீலாவதியைத் தொடர்ந்து 'இரு சகோதரர்கள்' வாய்ப்பு. முதல் இரண்டு படங்களுக்குப்பின் வாய்ப்பின்றி இருந்தவருக்கு மீண்டும் எம்.கே.ராதா மூலம் 3-வது படவாய்ப்பு கிடைத்தது. 1938-ம் ஆண்டு 3-வது படமாக 'தட்சயக்ஞம்' வெளியானது. இதில் கதாநாயகன் தட்சனாக எம்.ஜி.நடராஜபிள்ளை என்பவர் நடித்திருந்தார். எம்.ஜி.ஆருக்கு மகாவிஷ்ணு வேடம். படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் கல்கத்தாவிலேயே நடந்தது. இது கம்பெனி தயாரித்த மாயா மச்சீந்திரா படத்திலும் எம்.ஜி.ஆருக்கு ஒரு வேடம் கிடைத்தது. அதற்கு முன் அவர் நடித்து வெளியான படம் வீர ஜெகதீஸ்....இந்த படம் வெளியான சமயம் எம்.ஜி.சக்கரபாணிக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் பிறந்திருந்தது.

    இதனால் பெரியவனைப்போல் சின்னவனுக்கும் திருமணம் முடித்து விடவேண்டும் என்ற எண்ணம் சத்தியபாமாவுக்கு ஏற்பட்டது. ஆனால் அதற்கு எம்.ஜி.ஆர் உடன்படவில்லை. “சினிமாவில் பேரும் புகழும் பெறவேண்டும் என்பதுதான் என் வாழ்நாள் லட்சியம். திருமணம் அதற்குத் தடையாக இருக்கும். சினிமாவில் அப்படி ஒரு நிலையை எட்டியபின்தான் திருமணத்தைப் பற்றி சிந்திப்பேன்” என உறுதியாக தெரிவித்துவிட்டார்.

    உள்ளம் உறுதி காட்டினாலும் 22 வயது வாலிபனால் இயற்கையான உணர்ச்சிகளை ஒளித்துவைக்கமுடியுமா?... அப்போது எம்.ஜி.ஆர் தங்கியிருந்த வீட்டுக்கு எதிரே ஒரு இளம்பெண் வசித்துவந்தார். இளமையும் அழகும் இணைந்த வசீகரமான இந்த இளம்பெண் மீது எம்.ஜி.ஆருக்கு ஒருவித ஈர்ப்பு இருந்தது.

    படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் ஓய்வில் இருக்கும் சமயங்களில் அந்தப் பெண் எம்.ஜி.ஆர் வீட்டுக்குள் தண்ணீர் பிடிக்க குடத்துடன் வருவார். அப்போது அவளைக் கவர்வதற்காக எம்.ஜி.ஆர் ஒரு ஆர்மோனியப் பெட்டியை எடுத்துவைத்துக்கொண்டு ஏதாவது கத்திப்பாடுவார். அதை அந்தப் பெண் ஓரக்கண்ணால் பார்த்தபடி செல்வதைக் கண்டு ரசிப்பார் எம்.ஜி.ஆர்.

    கொஞ்சநாளில் இருவரும் கண்களாலேயே பேசிக்கொள்ளத்துவங்கினர். அரசல் புரசலாக சத்தியபாமாவின் காதுகளுக்கு இந்த சேதி வந்துசேர்ந்தது. பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தால் என்ன ஆகும் என பழுத்த அனுபவசாலியான அவருக்குத் தெரியாதா?! கொஞ்சநாட்களில் அந்த வீட்டை காலி செய்துகொண்டு வேறு இடத்துக்கு குடிபுகுந்தார்.எம்.ஜி.ஆர் தாடிவிட ஆரம்பித்தார்.

    அதன்பின் தீர்க்கமாக ஒரு முடிவெடுத்தார் சத்தியபாமா. சக்கரபாணியுடன் கலந்துபேசியவர், எம்.ஜி.ஆரின் 'வீரஜெகதீஷ்' பட ஸ்டில் ஒன்றைப் பையில் பத்திரப்படுத்தியடி பாலக்காட்டுக்கு ரயில் ஏறினார்...

    சத்தியபாமா எதற்கு பாலக்காடு புறப்பட்டுச் சென்றார்...
    தொடரும்... .........

  8. #197
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #1983 ம் ஆண்டு மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் எம்.ஜி.ஆர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அன்றைக்கு பரபரப்பான அரசியல் சூழலில் எதிர்கட்சியான திமுக எம்.ஜி.ஆர் அரசு மீது பெரும் குற்றச்சாட்டு ஒன்றை வைக்கப்போவதாக எம்.ஜி.ஆருக்கு உளவுத்துறையிலிருந்து தகவல் போனது. அதேசமயம் திமுக கட்சியினரின் எம்ஜிஆரின் தொப்பி பற்றிய தாக்குதல் உச்சத்தில் இருந்தநேரம் அது. பேட்டியளித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆரிடம் கருணாநிதியின் குற்றச்சாட்டு குறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

    #ஆனால் எம்.ஜி.ஆர் பதிலைக் கூறாமல் ஒரு காரியம் செய்தார். மெல்ல தன் தலையிலிருந்து தொப்பியை கழற்றி மேஜை மீது வைத்தார். அவ்வளவுதான் அடுத்த நொடி புகைப்பட .ஃப்ளாஷ்கள் மின்னத் துவங்கின. மறுநாள் செய்தித்தாள்களில் தலைப்புச்செய்தி எம்.ஜி.ஆர் 'தலைச் செய்தி'தான். எம்.ஜி.ஆரின் தொப்பியற்ற தோற்றத்தை வெளியிட்ட பத்திரிகைகள் கருணாநிதியின் குற்றச்சாட்டை கடைசிப்பக்கத்தில் முக்கியத்துவம் இன்றி வெளியிட்டன. அதுதான் எம்.ஜி.ஆரின் சாதுர்யம்..............

  9. #198
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சத்தணவு திட்டம் பற்றிய ........
    புரட்சி தலைவரின் ....

    கண்ணீர் வரவழைக்கும் ......
    பேட்டி .......

    அப்போது நான் பாய்ஸ் கம்பெனியில் நடிச்சிக்கிட்டு இருக்கேன்.

    பாய்ஸ் கம்பனினா என்னனு தெரியுமா உங்களுக்கு?

    (பாய்ஸ் கம்பெனி என்பது ஒரு குழுவாகத் தொழில் முறை நடிகர்களை வைத்து நாடகம் போடும் நிறுவனங்கள்.

    அதில் சிறுவர்கள் நிறைய இருப்பார்கள்.

    வறுமையின் காரணமாகவும், கலை ஆர்வம் காரணமாகவும் வந்து சேரும் சிறுவர்கள்.

    எல்லோரும் ஒன்றாகத் தங்கி, ஒன்றாக உண்டு, ஊர் ஊராகப் போய் நாடகம் போடுவார்கள்.

    சிறுவர்களுக்குப் பயிற்சி அளிக்க வாத்தியார்களும் இருப்பார்கள்)

    குரல் உடையற வயசு. அந்த வயசில இருக்கிறவனுக்குப் பாடம் கொடுக்க மாட்டாங்க.

    பாட முடியாதில்ல?. வேஷம் இல்லாதவனுக்கு கம்பெனியில மரியாதை கிடையாது.

    ஆசிரியர்கள் வேண்டாத மாணவர்களைப் பழி தீர்த்துக் கொள்வதும் அப்போதுதான்.

    வாழ்க்கை பெரிய நரகமாக ஆகிவிடும்.

    ஒரு நாளைக்கு சாப்பிட உட்கார்திருக்கோம்.

    நல்ல பசி.
    இலை போட்டாச்சு.
    காயும் ஊறுகாயும் வைச்சுட்டுப் போயிருக்காங்க.

    சோறு வந்துகிட்டே இருக்கு. என்னை பிடிக்காத வாத்தியார் ஒருத்தர்

    நான் சாப்பிட உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்தாரு.

    வேகமாக கிட்ட வந்தாரு. ' ஏண்டா உங்களுக்கெல்லாம் முதப் பந்தி கேட்ட்குதா?'னு

    கையைப் பிடிச்சு எழுப்பிவிட்டார்.

    கையிலசோறு எடுத்து வாயில போடப்போற நேரத்தில எழுப்பிவிட்டா எப்படி இருக்கும்?

    ஆனா அந்த நேரத்தில எனக்கு பசியைவிட அவமானம்தான் அதிகமாக இருந்தது.

    'அவரை எதிர்த்து யாரும் சண்டை போட முடியாது,

    கேள்வி கேட்க முடியாது, தன் கிட்ட அதிகாரம் இருக்குனு தானே எழுப்பிவிடறாரு?

    எனக்கு என்னிக்காவது அதிகாரம் வந்தா நாலு பேருக்குச் சோறு போடுவேன்,

    எவன் சோத்தையும் பறிக்க மாட்டேன்'னு அன்னிக்கு நினைச்சேன்.

    இன்னிக்கு எல்லோரும் என்னை வாத்தியார் வாத்தியார்னு கூப்பிடும் போது

    எனக்கு அவங்களுக்கு சோறு போடற கடமை இருக்குகிற நினைப்பு வருது.

    அடுத்த வேளைச் சோற்றுக்கு உத்திரவாதம் இருக்கிறவங்க

    ஏழைகள் சோற்றைப் பற்றி என்ன வேணா கேள்வி கேட்கலாம்.

    எனக்கு அதைப் பற்றி கவலை இல்லீங்க."

    இதைச் சொல்லும் போது அவர் குரல் கனமேறிக் கரகரத்தது.

    புத்தகங்களில் உள்ள பொருளாதாரத் தத்துவங்களால்

    விளக்க முடியாததாக இருந்ததுஅவரது சத்துணவுத் திட்டம்.........

  10. #199
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1984 வருடம் டிசம்பர் மாதம் தமிழகமே தவித்து நின்றது சோகத்தில் தினசரி ஊடங்களில் மேல் சிகிச்சைக்காக சென்ற முதல்வர் எம்ஜிஆர் எப்போது திரும்பி வருவார்? என்ற செய்தியை தவீர வேற செய்திகள் வந்தாலும் மனம் ஏற்க மறுக்கிறது மக்களுக்கு விரதம் இருக்கும் தாய்மார்களும் மூன்று மதத்திலும் சிறப்பு வழிபாடுகள் நடந்த வண்ணம் உள்ளது

    "இறைவா! உன் காலடியில் எத்தனையோ மணிவிலக்கு?
    தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒலி விளக்கு!"

    என்ற பாடலை தேசியகீதம் போல் ஒவ்வொரு காட்சிக்கும் முதலில் காண்பித்து எல்லா திரையரங்கமும் எம்ஜிஆருக்காக நன்றி கடன் செழுத்திக் கொண்டிருந்தனர் ஏன்? தலைவர் படத்தை வைத்து சம்பாரிக்காத திரையரங்கே கிடையாது என்றே சொல்லலாம்.
    எம்ஜிஆர் அவர்களுக்கு மூளையில் கட்டி வந்ததை அப்போலோவில் நீக்கிய பின் தனி விமானத்தில் சிறுநீரகம் மாற்று சிகிச்சைக்காக அமெரிக்கா புரூக்ளீன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
    அவர் உயிருடன் இல்லை என்றல்லாம் எதிர்கட்சிகள் பரப்புரை செய்கிறார்கள் கிராமங்களில் அழுகுரல் ஓலமிட தமிழகமே உருக்கமாக நின்ற வேலையில்
    அண்ணே ஒரு தந்தி கொடுக்கனும் ம்ம்.. சொல்லுங்க என்ன விஷயமாக "தலைவா.. நீங்க நல்லபடியா சிகிச்சைப்பெற்று திரும்பி வரனும் இது வீரகாளி அம்மன் மீது ஆனை சரி அட்ரஸ் என்ன என் தலைவர் எந்த ஆஸ்பத்திரிக்கு எங்க போனாரோ? அங்க அனுப்பு சரி உன் பேர் சொல்லு ஏழுமலை மொத்தம் 28 ரூபாய் ஆச்சு இந்தா ரசீது
    மீண்டும் மறு நாள் அதே தந்தி அதே வார்த்தைகள் அனுப்பு யோவ் ஒனக்கு பைத்தியமா நேத்துதா ஒரு தந்தி கொடுத்த அதுக்கே பதில் இல்ல? இன்னைக்கு இன்னோரு தந்தி வேறயா? உங்க தலைவர் எவ்வளவு பெரிய ஆளு உன்னை எல்லாம் யாருன்னே அவருக்கு தெரியாது நீ ஒரு நாள் சைக்கிள் ரிக்ஷா ஓட்டி சம்பாரிக்கிற காச இப்புடி ஏ? வீணடிக்கிற?
    யோவ் உன் வாய கழுவுயா நீ இங்க வந்து பாரூய்யா... இந்த சைக்கிள்ரிக்ஷா அவர் கொடுத்தது இன்னைக்கு என்னோட குடும்பத்துக்கே சோறு போடுது அதுக்கு என்னால முடுஞ்சது என் தெய்வத்துக்கு செலவு செய்யாம வேற யாருக்குயா செய்ய சொல்ற... ஏழுமலை ஓட்டி சென்ற சைக்கிள்ரிக்ஷாவையே பார்க்க பின்னால் உள்ள தலைவர் முகம் சிரித்தபடியே ஓடி சென்று மறைகிறது
    இடம் நுங்கபாக்கம் தலைமை தபால் நிலையம்

    மீண்டும் தலைவரின் நினைவில் சந்திப்போம்

    #எல்லா புகழும் எம்ஜிஆர்கே..........

  11. #200
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நமது மக்கள் திலகம் புகழ் பரப்பும் எண்ணற்ற தகவல்கள் புதிதாக வந்து கொண்டே இருக்கிறது..... சக சகோதரர்கள் புதுவை திரு கலியபெருமாள், சௌ.செல்வகுமார், esvee, லோகநாதன் உட்பட அனைத்து நல் உள்ளங்களும் அவரவர்களுக்கு இயன்ற அருமையான பதிவுகள் பகிர்ந்து புரட்சி நடிகர் அவர்களுக்கு தொண்டுகள் புரிய மனமார அழைக்கின்றோம், நன்றிகள் உரித்தாகுக.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •