Page 78 of 401 FirstFirst ... 2868767778798088128178 ... LastLast
Results 771 to 780 of 4004

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20

  1. #771
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நன்றி மறவாமை !நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் நாடகத்துறையில் நடித்து கொண்டிருந்தபோது சில காலம் திருச்சியில் தங்கி நாடகத்திலும் சினிமாவிலும் நடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.அப்போது திருச்சியில் தங்குவதற்கு கூட இடம் இல்லாத சூழ்நிலையில் அவரது திறமையை உணர்ந்து சிவாஜியை தன் வீட்டில் தங்கவைத்து அவருக்கு ஆதரவு கொடுத்தவர் திருச்சியை சேர்ந்த நடுத்தர வணிகரான பெரியண்ணா அவர்கள். மளிகை வியாபாரியான யாதவரான பெரியண்ணாவின் வீடு திருச்சி நகரத்தில் காஜாபேட்டை அருகில் எடத்தெருவில் இருந்தது. நடிக்கும் ஆர்வத்தில் திருச்சிக்கு வந்த சிவாஜியை அரவணைத்து தன்வீட்டின் ஒருபகுதியில் தங்கவைத்து ஆதரவு கொடுத்தவர் பெரியண்ணா
    காலம் கடந்தது! சிவாஜி சென்னைக்கு சென்று பராசக்தி படத்தில் நடித்து மக்கள் போற்றும் மிகப்பிரபலமான நடிகராகி விட்டார். அவர் பிரலமான நடிகராகி விட்டாலும் சிலகாலம் திருச்சியில் தன்னை தங்கவைத்து ஆதரித்த பெரிண்ணாவை மறக்கவில்லை.
    தன்னுடைய மகள் சாந்தியின் பெயரால் சாந்திபிலிம்ஸ் என்ற படகம்பெனியை துவக்கி அதில் பெரியண்ணாவை தயாரிப்பாளராக்கி சில படங்களை நடித்து கொடுத்தார் நடிகர்திலகம். அப்படி பெரியண்ணாவின் தயாரிப்பில் நடிகர்திலகம் நடித்து கொடுத்தபடங்களில் குறிப்பிடதக்கவை தெய்வமகன் திருவருட்செல்வர் தர்மம்எங்கே ஆகும்!
    அதுமட்டுமல்ல திருச்சி பாலக்கரையில் பிரபலமான இஸ்லாமிய குடும்பமான ந.மு குடும்பத்தாரின் பில்டிங் தான் N.M. பில்டிங். பிரபாத் தியேட்டர் என்றழைக்கபட்ட இந்த தியேட்டரை ந.மு. குடும்பத்தாரிடம் நடிகர் திலகமே நேரடியாக பேசி பெரியண்ணாவிற்காக நீண்ட கால குத்தகைக்கு எடுத்து கொடுத்தார்.
    சென்னையில் எப்படி சாந்திதியேட்டர் சிவாஜி ரசிகர்களுக்கு சொர்க்கமாக இருந்ததோ. அதைப்போல தான் திருச்சி பிரபாத் தியேட்டரும் சிவாஜி ரசிகர்கள் ஒன்று கூடும் இடமாக அமைந்தது.தன் மகன் பிரபுவை நடிகர்திலகம் பெங்களூரில் படிக்கவைத்தபோது பெரியண்ணணாவின் மகன் பரணியையும் பிரபுவுடன் படிக்கவைக்கும் பொறுப்பையும் நடிகர் திலகம ஏற்றுக்கொண்டார்.
    நடிகர்திலகம் நடித்த உத்தமன் திரைப்படத்தில் வரும் காஷ்மீர் ஸ்கேட்டிங் காட்சியில் பிரபுவும் வருவார் என்பது சிவாஜி ரசிகர்கள் அறிந்த செய்தி!
    அக்காட்சியில் பிரபுவுடன் பரணியும் இருப்பார்.
    தன் வீட்டில் தங்கவைத்த அக்குடும்பத்திற்கு பல உதவிகளை செய்த சிவாஜி 1983 என நினைக்கிறேன் பெரியண்ணா அவர்கள் மறைந்தபோது தன்னுடைய அனைத்து படப்பிடிப்புகளையும் ரத்து செய்துவிட்டு உடனடியாக திருச்சி விரைந்தார்.
    முதல்நாள் இரவு 11.00மணியிலிருந்து மறுநாள் மதியம் வரை பெரியண்ணாவின் உடல் அருகிலேயே இருந்து தன்கையாலேயே அவரது உடம்பை தூக்கி தன் சொந்த சகோதரனை போல் இறுதி கடமைகளை நிறைவேற்றினார் சிவாஜி!
    அப்போது சிவாஜியுடன் G.k.மூப்பனார் அவர்களும் பிற்காலத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அடைக்கலராஜ் அவர்களும் உடன் இருந்தார்கள்
    (அரசியலில் வேறு இடத்தில் இருந்தாலும் இளம்பிராயத்தில் இருந்து மிகத்தீவிரமான சிவாஜி ரசிகரான நான்அப்போது பிரபாத் தியேட்டர் அருகே புத்தககடை வைத்திருந்து அந்த துக்க நிகழ்வுக்கு சென்றிருந்ததால் இவை நேரடியாக நான் கண்ட சம்பவங்களாகும்)
    பெரியண்ணா இறந்த பிறகும் அக்குடும்பத்திற்கான அனைத்து உதவிகளையும் செய்தார் நடிகர்திலகம்!
    பெரியண்ணாவின் மருமகன் T.சீனிவாசன் தான் திருச்சி மாவட்ட சிவாஜி மன்றதலைவராக நீண்ட காலம் இருந்தார்.
    தற்போதும் அகில இந்திய சிவாஜி மன்றத்தின் துணைதலைவராக இருக்கிறார்!
    1989ல் சிவாஜி தமிழக முன்னேற்ற முன்னணி என்ற தனிகட்சியை துவங்கியபோது திருச்சி 1வது தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பையும் கொடுத்தார்.
    ஏறிவந்த ஏணியை எட்டிஉதைக்கும் கலையுலகில் தன்னை ஆதரித்த ஒருவரின் குடும்பத்திற்கு நன்றி செலுத்திய நடிகர்திலகம் பற்றிய இச்செய்தியினை தெரிவிப்பதில் பெருமை கொள்கிறேன்!




    நன்றி ஜியாத் சுல்தான்
    Last edited by sivaa; 30th November 2018 at 01:22 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #772
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #773
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #774
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like


    the hindu 30-11-2018
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #775
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like


    சிவாஜி கணேசன்: நடிப்புலகுக்கு தமிழகம் அளித்த அருங்கொடை

    தமிழ்த் திரையுலகில் தனது அசாத்திய நடிப்பால் தனிமுத்திரை பதித்த சிம்மக்குரலோன் சிவாஜி கணேசனைக் கொண்டாடுகிறது ‘இந்து தமிழ்’. நாடகத் துறையிலிருந்து திரைத் துறைக்குள் பிரவேசித்த சிவாஜி கணேசன், ஏற்று நடித்த வேடங்களுக்கெல்லாம் தனது நடிப்பால் உயிர்கொடுத்து, ரசிகர்களின் நினைவுகளில் நிலைபெற வைத்த மகா கலைஞன். இறைவனின் அவதாரங்களை, இறையடியார்களை, காவிய நாயகர்களை, விடுதலைப் போராட்ட வீரர்களை, வாழ்வின் அலைக்கழிப்பில் தத்தளிக்கும் மனிதர்களை, அவர்தம் மனப் போராட்டங்களை சிவாஜி கணேசனின் வாயிலாக உலகமே தரிசித்துக்கொண்டிருக்கிறது. அவர் நினைவைப் போற்றுவோம்.
    தமிழகத்தின் கலை இலக்கிய வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதி சிவாஜியின் காலம். அண்ணாவின் ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ நாடகத்தில் நடித்தபோது, பெரியாரால் சிவாஜி என்று பட்டம் வழங்கப்பட்டவர். மு.கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதிய ‘பராசக்தி’ வாயிலாகத் திரையுலகுக்குள் அடியெடுத்துவைத்தார். திராவிட இயக்கம் சினிமாவைத் தனது கொள்கைப் பிரச்சார ஊடகமாகப் பயன்படுத்திய அந்நாட்களில், சிவாஜி கணேசனின் வரவு அவ்வியக்கத்துக்குப் பெரும் வாய்ப்பாக அமைந்தது. பிற்பாடு காமராஜர் தலைமையின் கீழ் தேசிய இயக்கத்தைத் தழுவினார். ஆனால், அவரது நடிப்போ எந்த இயக்கத்துக்குள்ளும் எந்த ஒரு எல்லைக்குள்ளும் அடங்காமல் விரிந்து பரந்தது.
    சங்கத் தமிழ் வளர்த்த மாநகரமாம் மதுரையின் வரலாற்றைப் பேசும் திருவிளையாடல் புராணத்தின் காட்சிகளைப் பாமரருக்கும் கொண்டுசேர்த்து தமிழ் மணம் பரப்பியவர். குறுந்தொகை பாடிய இறையனாராகவே மாறிப்போய் நெற்றிக்கண் காட்டினார். இதிகாசங்களுக்கு இணையாக ‘மதுரைப் புராண’த்தை மக்கள் மனதில் இடம்பெறச் செய்தார். துல்லியமாக ஒலித்த அவரது தமிழ் உச்சரிப்பு, வருங்காலத்து தலைமுறைகளுக்கெல்லாம் தமிழ் சொல்லிக் கொடுக்கும்.
    தெருக்கூத்துக் கலைஞர்களுக்கும் மேடை நாடக நடிகர்களுக்கும் இசைக் கலைஞர்களுக்கும் தன்னுடைய நடிப்பினால் பெருமை சேர்த்தவர் சிவாஜி கணேசன். விழுமியம் காக்கத் துடிக்கும் உயர்குடி மக்கள், வாழ்க்கைப் போராட்டங்களுக்கு மத்தியிலும் பாச உணர்ச்சியால் கட்டுண்டு கிடக்கும் நடுத்தர மக்கள், மனித மாண்புகளைப் பேணும் உடல் உழைப்பாளர்கள் என்று வாழ்வின் பல்வேறு அடுக்குகளில் வாழும் மனிதர்கள் அவரது நடிப்பால் திரையில் உயிர்பெற்றார்கள்.
    சிவாஜி நடித்த படங்களும் அவற்றின் கதைகளும் காட்சிகளும் பொழுதுபோக்காக மட்டுமின்றி, வாழ்க்கைப் பாடமாகவும் அமைந்திருந்தன. எப்பாடுபட்டேனும் உண்மையைப் பின்பற்ற வேண்டும் என்பதையும் உழைப்பின் மகத்துவத்தையும் மனித உறவுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதையும் அவர் நடித்த கதாபாத்திரங்கள் உணர்த்தின.
    மனித வாழ்வில் எதிர்கொள்ளும் இன்ப துன்பங்களில், தடுமாறி நிற்கும் பொழுதுகளில் சிவாஜி நடித்த படங்களும் பாடல்களும் தோன்றாத் துணையாக உடன் வந்துகொண்டிருக்கின்றன. வாழ்ந்து மறைந்த பிறகும்கூட, வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறியிருக்கிறார் சிவாஜி. ஒரு கலைஞனுக்கு இதைவிடவும் வேறென்ன பெருமை வேண்டும்?
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #776
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like



    சிவாஜி கணேசன் எனும் தனித்துவம்


    Published : 30 Nov 2018 10:07 IST
    Updated : 30 Nov 2018 10:07 IST

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்தபோது, அவரது மகனும் நடிகருமான பிரபு வெளிப்படுத்திய ஒரு கூற்றை இங்கே நினைவுகூரலாம். “எங்க அப்பா பெரிய மனிதர் என்றுதான் தெரிந்துவைத்திருந்தேன். ஆனால், அவருடைய மறைவைத் தமிழ்ச் சமூகம் தனது சொந்த இழப்பாகக் கருதும் அளவுக்கு இவ்வளவு பெரிய அன்பை அவர் பெற்றிருந்தார் என்பதை இன்றுதான் உணர்கிறேன்; வியந்துபோகிறேன்.”
    தமிழ் ஆளுமையின் முகம்
    தவறவிடாதீர்

    அப்பா என்ற அணுக்கம் பிரபுவுக்கு சிவாஜியின் உயரத்தை காட்டத் தவறிவிட்டதாகக் கருத முடியாது. காரணம், தமிழ்ச் சமூகம் சிவாஜியின் இழப்புக்கு அப்படி ஒருமித்து எழுந்து நிற்கும் என்பதை, அன்றைய ஆட்சியாளர்கள் உட்பட பலரும் அறிந்திருக்கவில்லை. ஏன் தமிழ்ச் சுயமே தனது அத்தனை வகை ஆளுமைத் திறன்களையும் அட்சரம் பிசகாமல் தனக்கு அடையாளம் காட்டியவரின் இழப்பைத் தனது அல்லது பொது இழப்பாக்கிக்கொள்ளும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை.
    தமிழ் இனத்தின் அரசியல் விடுதலையைச் சாத்தியமாக்கிய அண்ணாவின் மரணத்தில் தொடங்கியது இந்த முறைமை. இந்தியாவே வியந்துபார்க்கும் அளவுக்கு ஒட்டுமொத்த சமூகமும் பங்கேற்கும், அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளாக அரங்கேறுபவை தமிழக அரசியல் தலைவர்களின் மரணங்கள். அது கருணாநிதி வரை தொடர்ந்தபடி உள்ளது. ஆனால், சிவாஜி கணேசன் எனும் நடிப்பாளுமை அரசியல் களத்தில் அடைந்த வெற்றிகள் எனக் குறித்துக்கொள்ள ஏதும் இல்லாதவர். அவரது மரணம் எப்படிப் பெரும் அரசியல் தலைமைகளுக்கு ஒப்பானதாக ஆயிற்று?
    சினிமா வெறும் சினிமா இல்லை
    தமிழ்ச் சமூகத்தின் இருப்பில் சினிமா உருவாக்கும் சுவடுகள், தடங்கள் வலிமையானவை. இன்றும்கூட மக்கள் தொடர்புச் சாதனங்களின் பெருக்கம், இணையவெளியின் மாபெரும் விரிவு ஆகியவை அதனைக் குறுக்குவதாக இல்லாமல் விரித்தபடியே இருகின்றன. அப்படியானால், பெரும்பாலும் திரைப்படங்கள் மட்டுமே ஒரே பொழுதுபோக்குவெளியாக இருந்த ஒருகாலகட்டத்தில் சமூகத்தின் நிலை எப்படி இருந்திருக்கும்?
    பொதுவாக, திரைப்படங்களே நாயக மையமானது என்பது உலக அளவில் உண்மை, இந்திய அளவில் மெய்மை. இன்னும் அபூர்வமாக தமிழ்நாட்டுச் சூழலில் இரண்டு எதிரெதிர் அதிநாயக பிம்பங்கள் என்ற கூறு உண்டு. தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா காலம் தொடங்கி இன்றைய அஜித், விஜய் வரை தொடரும் சங்கதி. இன்னும் வேடிக்கை, அதே காலவெளியில் படிநிலையில் கீழிறங்கியவாறு பல இரட்டைகள் இருப்பு இருக்கும் என்பதுதான். ஆனால், அடிப்படை வடிவமைப்பு - டிஸைன் / பேட்டர்ன் - ஒன்றுதான். ஒரு எளிமையான புரிதலுக்கு அது நாயகத்துவம் அல்லது அதிநாயகத்துவம். நாயகத்துவம் ‘ஓடித் தாவினால்’, அதிநாயகத்துவம் ‘பறந்து பாயும்’.
    இந்த எதிரிணைகளிடையே அதிநாயகத்துவத்தை நோக்கிய இடைவிடாத பாய்ச்சல் தொடர்ந்தபடியே இருக்கும். அதிநாயகத்துவத்தை நோக்கிய இந்த நகர்வில் ஒரு உண்மையான நடிகன் இழப்பது என்னவென்றால், ஒரு பன்மைத்துவமான ஆளுமைப் பரிமாணங்களைத் திரையில் வெளிப்படுத்தும் வாய்ப்பை! வேடிக்கை என்னவென்றால், அதிநாயகன் ஒற்றைப் பரிமாணமானவனாக ஆகிப்போவதன் வழியாகவே அவ்விடத்தை அடைய முடிகிறது என்பதுதான்!
    சிவாஜியும் எம்ஜிஆரும்
    சிவாஜி காலத்திலும் எதிரெதிர் நாயக பிம்பம் இருந்தது. இன்னும் சொல்லப்போனால் இன்றைவிட வலுவாகவே இருந்தது. அந்த நாயகத்துவங்கள் பல்நிலை சமூக, அரசியல் கருத்துநிலைகளின் வடிவாகவும் இருந்தன. ஆனால் கூடுதலாக சிவாஜியும், எம்ஜிஆரும் வடிவமைத்துக்கொண்ட நுட்பங்களே அவர்களை இன்றளவும் ஒப்பாரும் மிக்காரும் இலராக ஆக்கியது.
    பொதுப் பண்பில் இருமுனை நாயகத்துவம் எப்போதும் இருப்பில் இருந்தது, இன்றும் இருக்கிறது என்றாலும், அதன் நுட்பத்தினைப் பகுத்தறிந்தால் மட்டுமே எப்படி எம்ஜிஆர் எனும் நடிகர், பெரிதும் அவரது அரசியல் நடவடிக்கைகளுக்காக, வெற்றிகளுக்காக மட்டுமே அறியப்பட, அதே தளத்தில் தன்னைக் கட்டமைத்த சிவாஜி கணேசன் முற்றிலுமாக மாபெரும் நடிகராக மட்டுமே ஆனார் என்பது விளங்கும்.
    எப்படிக் குடும்ப நாயகன் ஆனார்?
    இந்த ஒப்பீட்டின் சிக்கலான பகுதி இதுதான். எம்ஜிஆரும் நடிகரெனும் பிம்பம் வழியாகவே இதைச் சாதித்தார். இன்னும் சொல்வதானால், பெரும் தொகுதியான பெண்களின் கவர்ச்சியான பிம்பமாகக் கருதப்படுபவர். அதே வகையில் அவரது திரைச் சாகசம், ஏழைப் பங்காளர், வள்ளல் தன்மை போன்றவை அவரை எளிய மனிதர்களுக்கும் ஆதர்சம் ஆக்கியது.
    ஆனால், பொதுவான வெகுமக்கள் தொகுதியின், குடும்பம் எனும் அமைப்பின் வெளி கற்பனை சஞ்சாரங்களைப் பெரிதும் அனுமதிப்பதில்லை அல்லது அந்த ஆடம்பரம் அங்கு இருப்புக்கொள்ள முடிவதில்லை. அந்த வெளியின் வெற்றிடத்தை நிரப்பியவர்தான் சிவாஜி கணேசன் எனும் நடிக ஆளுமை. கனவுகள் சாத்தியமில்லாத வெளிச்சத்தின் சூட்டில் வாழ்வின் அசல்தன்மையைக் காட்சியாக்கி, இது பொது அனுபவம்தான் என ஆசுவாசம் கொள்ளச் செய்தது சிவாஜியின் திரைப்படங்கள். அதனால்தான் அவர் குடும்பங்களின் நாயகன் ஆனார். தனி நபர்களின் விருப்பு வெறுப்புகள், குடும்பம் எனும் பொதுமையில் இணக்கம் கொள்ள வேண்டியதாவது குடும்ப அமைப்பின் அசைக்க முடியாத விதி.
    யாரிடம் இங்கு சிவாஜி இல்லை?
    சிவாஜியும் நாயகத்துவ, ஏன் அதிநாயகத்துவப் பண்புகளைத் திரைவெளியில் கையாண்டவர்தான். ஆனால், அதை அவர் நிகழ்த்திய விதம் ஒப்பீட்டளவில், இந்திய சினிமாவிலேயே இன்னொரு நாயகன் செய்யாதது எனலாம். சிவாஜி அளவுக்கு நாயகத்துவத்தைக் ‘கலைத்துப் போட்ட’ இன்னொரு நாயகன் இல்லை.
    சிவாஜி பிரதிநிதித்துவப்படுத்திய பாத்திரங்கள் ஏராளம். இந்த இடம்தான் முக்கியமானது. தமிழ் வாழ்வுவெளியின் எந்தப் புள்ளியை சிவாஜி தொடாமல் விடுத்தாரெனக் காண்பது அரிது. தமிழ் ஓர்மையின் அத்தனை வடிவங்களையும் பரீட்சித்துப் பார்த்த நடிகர் அவர். சிவாஜியின் ஏதாவது ஒரு பாத்திரத்தோடு தன்னைப் பொருத்திக்கொள்ள இயலாத தமிழ்ச் சுயம் இங்கு சாத்தியமில்லை எனலாம்.
    சிவாஜியின் திரையிருப்புக் காலவெளியில் அவர் காப்பகப்படுத்திய (Archive) வாழ்வு மாதிரிகளை வகை பிரித்து வாசித்தால், தமிழ்ச் சமூக வரலாறு சாத்தியமாகும். தமிழ்த் திரைப்பட ஆய்வு கவனமாக ஆய்ந்தால் சிவாஜியின் குரல்மொழியும், உடல்மொழியும் வெளிப்படுத்தும் தரவுகள் ஏராளம். திரைப் பிரதிகளின் பலம் அவை காலத்தைக் காட்சிப்படிமங்களாக உறையச் செய்திருக்கின்றன. சிவாஜி காலத்தில் உறைந்து நிற்கும் தமிழ்ப் பிம்பங்களின் தொகுப்பு!
    - சுபகுணராஜன், திரைப்பட ஆய்வாளர், சமூக விமர்சகர், ‘காட்சிப்பிழை’ சினிமா இதழின் ஆசிரியர்,
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #777
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like



    சிவாஜி ஏன் மிகை நடிப்பைத் தேர்ந்தெடுத்தார்?




    நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பு பாணி ‘மிகை நடிப்பு’ என்ற விமர்சனம் எப்போதும் உண்டு; அவர் எதிர்கொண்ட பெரும் விமர்சனம் என்றும் அதைச் சொல்லலாம். சரி, சிவாஜியின் மிகை நடிப்பை நாம் எவ்வாறு அர்த்தப்படுத்திக்கொள்ளப்போகிறோம்?
    சிவாஜி பலவிதமான நடிப்பு முறைகளை அறிந்தவர். மேற்கத்திய யதார்த்த பாணி நடிப்பு வரப்பெறாதவர் அல்ல. ஆனாலும், மிகை நடிப்பு பாணி என்பது அவரது அடையாளமானது. சொல்லப்போனால், அவரது நடிப்பை விமர்சித்தவர்கள்கூட அவரது படங்களைப் பார்த்து தாரைதாரையாகக் கண்ணீர் வடித்திருக்கக்கூடும் - பெண்கள் மட்டுமல்ல; ஆண்களும்கூட.
    தவறவிடாதீர்

    இன்றும் சிவாஜி படங்களைப் பார்ப்பதற்கு எனக்குப் பெரும் தடையாக இருப்பது நான் கண்டிப்பாக அழுதுவிடுவேன் என்கிற அச்சம்தான். இந்த அழுகை என்னைப் பல காலங்கள் பின்னுக்கு இழுத்துவிடும் என்று அஞ்சுகிறேன். குறிப்பாக, அவரது ‘பா’ வரிசைப் படங்களைச் சொல்லாம். இந்தப் படங்களில், அவர் ஏற்கும் பாத்திரங்கள் பெரும் துயரத்தை, வலியை அனுபவிக்கின்றன. சுமை, பழி, பொறுப்பு, கடன் எல்லாம் அவர் ஏற்கும் பாத்திரத்தின் மீது சுமத்தப்பட்டிருக்கும். அவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு அந்தப் பாத்திரங்கள் தம்மை நிலைநிறுத்திக்கொள்கின்றன; மீண்டுவருகின்றன.
    போலச்செய்தல்தானே நடிப்புக்கான வரையறை?
    நடிப்பு என்பது அடிப்படையில் பிரக்ஞைபூர்வமாக போலச்செய்தல். தான் ஏற்கும் பாத்திரத்தை ஒரு நடிகர் போலச்செய்கிறார். சிவாஜி இத்தகைய பாத்திரங்களை ஏற்கும்போது, எதைப் போலச்செய்கிறார் என்பதுதான் கேள்வி. சிவாஜியின் பாத்திரங்களின் உளவியல்ரீதியான வெளிப்பாட்டை போலச்செய்ய முயற்சிக்கிறார் என்ற புரிதலிலிருந்துதான் அவரது நடிப்பை மிகை நடிப்பு என்கிறோம்.
    ஆனால், சிவாஜி பாத்திரங்களின் உளவியலைப் போலச்செய்யவில்லை. மாறாக, சுற்றத்தாரை, குடும்பத்தை, உறவை, சமூகத்தை, தேசத்தை முன்னிலைப்படுத்தி அதற்காக எத்தகைய வேதனையையும், வலியையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையைப் போலச்செய்கிறார். இது உளவியல் பூர்வமானதல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
    எதிர்மறையாகவே அணுக வேண்டியதா துயரம்?
    வலி, வேதனை, துயரம் போன்றவை பொதுவாக எதிர்மறையாகப் பார்க்கப்படுகின்றன. உடலில் உள்ள நோயை வெளியேற்றுவதுபோல் உடல், உள்ளத்திலிருந்து வலி, வேதனைகளையும் வெளியேற்றுவதே நேர்மறையானதாக நம் மனதில் இருக்கிறது. ஆனால், வலி என்றால் என்ன? வலி எதிர்மறையானது மட்டும்தானா? வலி தனிமனித அனுபவத்துக்குள் சுருங்கிவிடக் கூடியதுதானா? வலிக்கு முகமை என்று ஒன்று இல்லையா? இத்தகைய கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ள வேண்டியுள்ளது.
    நாம் வலியை, துயரத்தைப் பார்க்க முடியாது, தீண்ட முடியாது, ருசிக்க முடியாது. அதற்குப் பருமனான பண்புகள் ஏதும் கிடையாது. ஆனாலும் துயரத்தை, வலியை அனுபவிக்கிறோம். வலி, வேதனை எப்போது அனுபவமாகிறது? “ஒரு துயரர் அவரது வலியை மொழியாக்கம்செய்து, துயரத்தை ஒரு சமூக உறவாக மாற்றும்போது அது அனுபவமாகிறது” என்கிறார் மானுடவியலாளர் தலால் அசாத்.
    மிகை தவிர்க்க முடியாமல் போகும் இடம்
    ஒரு துயரர் அவர் அனுபவிக்கும் துயரத்தின் ஊடாக சமூகத்துடன் உறவை உருவாக்கிக்கொள்கிறார்; அர்த்தப்படுத்துகிறார். வலி, வேதனை போன்றவை தனிமனித இயலாமை சார்ந்தவை அல்ல. உதாரணமாக, கீழே விழுந்துவிட்ட அவரது குழந்தையைக் கண்டு ஒரு தாய் பதறி ஓடிவருகிறார். ஒரு தாயாக இருப்பதால் மட்டுமே அவர் ஓடிவரவில்லை. ஓடிவருவதன் மூலமாகத் தாய் என்ற உறவையும் அவர் பலப்படுத்துகிறார்; உத்தரவாதப்படுத்துகிறார்.
    இத்தகைய வெளிப்பாடுகளில் மிகை தன்மை தவிர்க்க முடியாததாகிறது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் மக்களின் வலியை, வேதனையை அர்த்தப்படுத்திய பெரும் கலைஞன் சிவாஜி. ஸ்டானிஸ்லாவிஸ்கியின் ‘மெதட் ஆக்டிங்’ முறையை சிவாஜி முழுமையாக அறிந்திருந்தாலும், எலிசபெத் நடிப்பு பாணியை அவரது தனித்த பண்பாக வரித்துக்கொண்டார்.
    எலிசபெத் நடிப்பு பாணியில் ஒரு நடிகர் தன்னை முழுமையாக இழக்க வேண்டியிருக்கிறது. நடிப்பு என்பது போலச்செய்தல் என்பதைத் தற்காலிகமாகவேனும் மறக்க வேண்டியுள்ளது. இதில் தனிமனிதனின் நுட்பமான உளவியலைக் காட்டிலும் கூடுதலாக ஏதோ ஒன்றை அது கொண்டிருக்க வேண்டியுள்ளது. இந்த இடத்தில்தான் அர்ப்பணிப்பைப் போலச்செய்தார் சிவாஜி.
    தான் ஏற்கும் பாத்திரத்துக்கும் தனக்கும் இடையேயான இறுக்கத்தைக் காட்டிலும், அவர் ஏற்ற பாத்திரத்துக்கும் மக்களுக்கும் இடையேயான இறுக்கத்தைப் பிரதானப்படுத்தினார் சிவாஜி. அவர் தமிழ் மக்களிடம் பெற்ற பெரும் அங்கீகாரம் அவர்கள் உள்ளார்ந்து அனுபவித்த, அவர்களுக்குள் தக்கவைத்துக்கொள்ள முடியாத வலியை எல்லாம் திரையில் சிவாஜி என்ற பெரும் கலைஞன் ஊடாக சாதகமாக ஒன்றாக மாற்றி மகிழ்ந்தார்கள் என்பதுதான்.
    வலியைச் சமூக உறவாக்கியவர்
    வலியும் வேதனையும் அந்தரங்கமானவை அல்ல; அவை எப்போதும் சமூக உறவுக்கானது என்று விட்டிங்கென்ஸ்டைன் சொன்னதையே சிவாஜி அவரது நடிப்பு பாணியாக மாற்றினார். அவரது நடிப்பு தேசத்தின் மீதும், சமூகத்தின் மீதும், அரசாங்கத்தின் மீதும், குடும்பங்கள் மீதும், தனிமனித உறவுகள் மீதும், மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளையும் அதற்காக எத்தகைய வலிகளையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் வெகுஜன உளவியல் இருந்த ஒரு காலகட்டத்தின் வெளிப்பாடு. இது அவருக்கு முன்னும் சாத்தியமில்லை; பின்னும் சாத்தியமில்லை. சுருக்கமாகச் சொல்வதென்றால், சிவாஜியின் நடிப்பு மிகை பாணியிலானது அல்ல. அது ஒரு காலகட்டத்தின் தேவை. அதை மிகச் சிறப்பாக நிறைவேற்றியதன் மூலமே சிவாஜி பெரும் கலைஞனாகத் நிகழ்கிறார்!
    - சீனிவாச ராமாநுஜம், சமூக அறிவியலாளர், நாடகவியலாளர்,
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #778
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like


    அமெரிக்கர்களை அசரடித்த நடிகர் திலகம்


    ஈஸ்வர் சாகர்






    சிவாஜி கணேசனுடன் டென்னிஸ் குக்ஸ் என்ற வெளியுறவுத் துறை அதிகாரியும் வேறு இரண்டு நண்பர்களும்தான் அமெரிக்காவைச் சுற்றிவந்தனர். டென்னிஸ் குக்ஸ் சரளமாகத் தமிழ் பேசுபவர். அமெரிக்கத் திரையுலகின் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், கதை வசனகர்த்தாக்கள் என்று அனைவருமே எங்கு போவதாக இருந்தாலும் மக்கள் தொடர்பு அதிகாரி, விளம்பரத் தூதர், போட்டியாளர்களை வசைபாடித் தூற்றுபவர் என்று ஐந்தாறு பேர் உள்ள சிறிய படை இல்லாமல் செல்ல மாட்டார்கள்.
    சிவாஜி எளிமையாக வந்திருப்பதை வியப்போடு பார்த்தார்கள். இங்கு மட்டுமல்ல, இந்தியாவிலும் தனக்கு இப்படி யாருமில்லை என்றபோது, அவர்களுடைய விழிகள் வியப்பால் விரிந்தன. எனக்கு நானே விளம்பரத் தூதர் என்று சிரித்துக்கொண்டே அவர் சொன்னபோது ஆடிப்போனார்கள்.
    தவறவிடாதீர்

    சிவாஜி போன இடங்களிலெல்லாம் அனைவரும் கேட்ட கேள்விகள், உங்களுடைய சொந்த வாழ்க்கையை நிருபர்கள் மோப்பம் பிடித்துவிடாமலிருக்கவும், சொந்த விஷயங்கள் வெளியே பேசப்படாமலிருக்கவும் என்ன உத்தியைக் கையாளுகிறீர்கள் என்பவைதான். எங்கள் நாட்டு சினிமா நிருபர்கள், நாங்கள் நடிக்கும் படத்தின் கதை, அதில் எங்களுடைய கதாபாத்திரம் ஆகியவற்றோடு நிறுத்திக்கொள்வார்கள் என்று பதிலளித்திருக்கிறார்.
    உங்கள் திரைப்படங்களில் முத்தக் காட்சிகளுக்கு அனுமதி இல்லையாமே, ஆணும் பெண்ணும் அன்பாக இருப்பதைக் காட்ட என்ன செய்வீர்கள் என்று கேட்டுள்ளனர். லேசாகக் கட்டி அணைப்பதன் மூலமும் கைகளைப் பற்றுவதன் மூலமுமே காதலையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவோம், அதுவே போதுமானது என்றார். ஆனால், இந்தப் பதில் அமெரிக்கர்களுக்குத் திருப்தி தரவில்லை. அழுத்தமாக ஒரு முத்தம் தருவதைப் போல இதுவெல்லாம் வருமா என்று கேட்டுள்ளனர். இன்னும் சிலர், இந்தியர்கள் பாவம், எல்லா உணர்ச்சிகளையும் அடக்கிக் கொள்பவர்கள்போல இருக்கிறது என்று ஆதங்கப்பட்டுள்ளனர்.
    ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் பிரெடரிக் மார்ச், ஹென்றி ஃபோன்டா, ஷெல்லி விண்டர்ஸ், பர்ட் லங்காஸ்டர் ஆனாலும் சரி, புதிதாக நடிக்க வந்தவர்களானாலும் சரி, எல்லோருடனும் உற்சாகமாகவும் கண்ணியமாகவும் பேசியிருக்கிறார் சிவாஜி.
    தொலைக்காட்சியில் நடிக்க வரும் பயிற்சியற்ற கலைஞர்களுக்கான பயிற்சிப் பள்ளிக்கும் சென்றிருக்கிறார். சிறுசிறு வேடங்களை ஏற்று படிப்படியாக முன்னேறி மாபெரும் கலைஞனான அவரைச் சக கலைஞர்கள் மரியாதையோடும் பிரமிப்போடும் பார்த்தார்கள்.
    அவர்களுடைய நாடக அரங்க அமைப்புகளையும் காட்சி ஜோடனைகளையும் காட்சிகளை மாற்றும் உத்தியையும் கருவிகளையும் கண்டு வியந்தார் சிவாஜி. ரேடியோ சிட்டி மியூஸிக் ஹால் என்ற அந்த அரங்கத்தைப் போல இந்தியாவிலும் நிறைய உருவாக வேண்டும் என்ற ஆசையை சிவாஜி உரக்க வெளிப்படுத்தினார்.
    இந்தியத் திரைப்படங்கள் அமெரிக்காவில் ஓடாது என்று ஒரு விநியோகஸ்தர் கூறியபோது, அதை வன்மையாக மறுத்தார் சிவாஜி. சத்யஜித் ராய் படம் விதிவிலக்கு என்றார் ஒரு அமெரிக்கர். நீங்கள்கூட சத்யஜித் ராய் படத்தில் நடித்ததால்தானே புகழ்பெற்றீர்கள் என்றுகூட ஒருவர் கேட்டார். கேள்வி கேட்டவர்களின் அறியாமையை சிவாஜி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #779
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like


    சிவாஜி எனும் தகப்பன் சகோதரன், காதலன், கணவன்!







    அன்றைய திரைப்படப் பார்வையாளர்களுக்கு சினிமா வெறும் பொழுதுபோக்குச் சாதனமல்ல, நாடகத்தைப் போலவோ ஓவியம் அல்லது இசையைப் போலவோ அது வெறும் கலை அல்ல. அது அவர்களுடைய வாழ்வோடு நேரடியாக உறவாடியது, அவர்களுக்கு அன்பையும் அறத்தையும் போதித்தது, ஒருவகையில் வாழ்வின் எல்லாமுமாக இருந்தது.
    குறிப்பாக, சிவாஜி நடித்த திரைப்படங்கள். 1950, 60-களில் அவரது ஒரு திரைப்படம் வெளியாகும்போது வீடுகளுக்குள் அடைந்து கிடந்த பெண்கள் அவரது ‘பாசமலர்’ அல்லது ‘பாலும் பழமும்’ போன்ற ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதற்காக திரைப்பட அரங்குகளுக்குப் போனார்கள். எம்ஜிஆரின் ரசிகர்களைப் போல் திரையரங்க வாசல்களில் கட்-அவுட்கள் வைத்து, பட்டாசு கொளுத்தி ஆரவாரமான கொண்டாட்டங்கள் சிவாஜி ரசிகர்களிடம் வெளிப்படாது. மாறாக, திரையரங்குக்குச் செல்லும்போது தங்களுடைய சகோதரர்களை, காதலரை, தந்தையரைக் காணச்செல்வது போன்ற ஓர் உணர்வு அவர்களுக்கு இருந்தது.
    தவறவிடாதீர்

    தங்களை நேசிக்கும் தங்களுக்காகக் கண்ணீர் சிந்தும் தங்களுக்காக எல்லாவிதமான தியாகங்களையும் செய்யத் தயாராக இருக்கும் ஒரு நாயகனைத் திரையில் காணும்போது அவரோடு எளிதில் தங்களைப் பிணைத்துக்கொண்டார்கள். ‘பாசமலர்’ படத்தில் சாவித்திரியை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு, ‘கைவீசம்மா கைவீசு, கடைக்குப் போகலாம் கை வீசு’ என சிவாஜி விம்மியபோது திரைக்கு எதிரே உட்கார்ந்திருந்த பெண்கள் கண்ணீர் வடித்தார்கள், சிலர் கதறி அழுதார்கள், எல்லோருமே பரிதவித்துப்போனார்கள்.
    சிவாஜியின் படங்களில் அவரது ஏதாவதொரு பாத்திரம் பெறும் சிறிய வெற்றியைக் கண்டு குதூகலித்தார்கள். அவர் வாய்விட்டுச் சிரிக்கும் காட்சிகளைக் காண வாய்க்கும்போது புன்னகைத்தார்கள். அவற்றை அவர்கள் தம் முழு வாழ்நாள் வரையிலும் நினைவில் வைத்திருக்க விரும்பினார்கள். அவரது திரைப்படம் அவரது ரசிகர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு நிச்சயமாகப் பொழுதுபோக்கு மட்டுமே அல்ல!
    - தேவிபாரதி, எழுத்தாளர், விமர்சகர்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #780
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like


    சினிமாவுக்கு பெரிய அச்சுறுத்தல் தொலைக்காட்சி: சிவாஜி பேட்டி 







    உலகத்தையே சந்தையாக வைத்திருக்கும் அமெரிக்கத் திரைப்படவுலகமான ஹாலிவுட், தொலைக்காட்சிகளின் வருகையால் திண்டாடுகிறது என்று தெரிவித்தார் சிவாஜி கணேசன். அமெரிக்காவில் மேற்கொண்ட இரண்டு மாத சுற்றுப் பயண அனுபவம் தொடர்பில் அவர் அளித்த பேட்டி.
    ஹாலிவுட் மகிழ்ச்சியாக இல்லை
    தவறவிடாதீர்

    “ஹாலிவுட் திரைப்படத் துறை மகிழ்ச்சியாக இல்லை. தொலைக்காட்சியின் வரவு அவர்களை மிகவும் பாதித்துவருகிறது. இதுவரை கதைப் படங்களை எடுத்த பல தயாரிப்பாளர்கள் தொலைக்காட்சிக்காகப் படம் எடுக்கத் தொடங்கிவிட்டனர். ஒரு ஸ்டுடியோவில் 5 ஃபுளோர்கள் இருந்தால், அதில் 3 தொலைக்காட்சித் தொடர் படப்பிடிப்புக்காக ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிலும் தொலைக்காட்சி இருப்பதால் திரைப்படம் என்பது வரவேற்பறைக்கே வந்துவிட்டது. எனவே, மக்கள் ஒரு மாறுதலுக்காகத் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
    தொலைக்காட்சித் தொடராக எதை வேண்டுமானாலும் காட்டுவது என்று தயாரிப்பாளர்கள் முடிவுசெய்துவிட்டதால் ரசிகர்களே அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள். தொலைக்காட்சி பார்த்துக் குழந்தைகள் கெட்டுப்போகிறார்கள் என்று கல்வியாளர்களும் பொறுப்புள்ள பெற்றோர்களும் கவலைப்பட ஆரம்பித்துள்ளனர். மாணவர்கள் படிப்புக்குக் குறைந்த நேரத்தை ஒதுக்கிவிட்டு, எப்போதும் தொலைக்காட்சி முன்னாலேயே உட்கார்ந்துவிடுகின்றனர்.”
    தொலைக்காட்சியால் பாதிக்கப்படும் கலைஞர்கள்
    “தொலைக்காட்சியில் காட்டும் படங்களுக்கு வரவேற்பு அதிகமாவதால், வழக்கமான திரைப்படங்களின் நீளத்தைத் தயாரிப்பாளர்கள் குறைத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால், திரைத் துறையில் ஏராளமான கலைஞர்களுக்கு, தொழில்நுட்ப உதவியாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டுவிட்டது. சம்பளத்துக்காக அவர்களில் பலர் இப்போது நாடகங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டனர். அவர்களை நான் நேரிலேயே சந்தித்தேன்.”
    ஹாலிவுட்டைப் பார்த்தேன்
    “அமெரிக்காவின் பல நகரங்களையும் பார்க்க வேண்டிய இடங்களையும் பல்கலைக்கழகங்களையும் பார்த்துவிட்டு ஹாலிவுட்டுக்குச் சென்றேன். டுவென்டியத் செஞ்சுரி பாக்ஸ், வார்னர் பிரதர்ஸ், கொலம்பியா நிறுவனங்களின் ஸ்டுடியோக்களில் திரைப்படப் படப்பிடிப்பை நேரில் பார்த்தேன். ‘தி டயமண்ட் ஹெட்’, ‘தி அக்ளி அமெரிக்கன்’ என்ற இரு சிறப்பான திரைப்படங்கள் அப்போது படமாக்கப்பட்டன.
    படம்பிடிக்கும் விதத்தில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ள படப்பிடிப்பு உத்திகள்தான் நிறைய உள்ளன. ஒரு படத்தைத் தயாரிக்கத் தொடங்குவதற்கு முன்னால், அதன் அனைத்து அம்சங்கள் குறித்தும் விவாதித்துத் திட்டமிடுகிறார்கள். இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் படப்பிடிப்பை முடித்துவிடுகிறார்கள்.’’
    என்னவெல்லாம் தமிழர்கள் கற்றுக்கொள்ளலாம்?
    “அமெரிக்கத் தயாரிப்பாளர்களை நாமும் பின்பற்றுவது நல்லது. அங்கே மிகவும் பிரமிப்பாக இருந்தது படப்பிடிப்பு தொடர்பான தொழில்நுட்பங்களின் வளர்ச்சி. படப்பிடிப்பின் ஒவ்வொரு அம்சத்துக்கும் அவர்கள் பல கருவிகளையும் தொழில்நுட்பங்களையும் கையாள்கிறார்கள். அதனால், அவர்களுடைய படங்கள் செய்நேர்த்தியுடன் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன.
    திரைப்படத்தைத் தயாரிப்பதிலும் காட்சிப்படுத்து வதிலும் ஏதாவது புதுமை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து ஆராய்ச்சி செய்கின்றனர். கேமராக்களில் பயன்படுத்தும் லென்ஸ்களை வெவ்வேறு விதங்களில் தொடர்ந்து தயாரிக்கின்றனர். திறமைசாலியான கேமராமேனால் அவற்றைக் கொண்டு சிறப்பான படங்களை எடுத்துவிட முடியும். அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் அம்மாதிரியான தொழில்நுட்ப வசதிக்கெல்லாம் நம்மால் ஆசைப்பட முடியாது. திரைப்படத்தை அவர்கள் எப்படி ஊக்குவிக்கிறார்கள், விநியோகிக்கிறார்கள் என்பதிலிருந்து நாம் சில பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும். உலகம் முழுக்க அவர்கள் விநியோக அலுவலகம் திறந்திருக்கிறார்கள். குறைந்தபட்சம் அமெரிக்கச் சந்தையில் நம்முடைய படங்கள் திரையிடப்பட நாமும் அங்கு அலுவலகங்களைத் திறக்க வேண்டும். மிகத் திறமைசாலிகளை நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும்.’’
    நடிகர் சங்கத்தை மேம்படுத்துங்கள்
    “அங்குள்ள நடிகர் சங்க விதிகளின்படி எந்த நடிகரும் தொடர்ச்சியாகப் பல மணி நேரம் நடிப்பது கிடையாது. இந்திய நடிகர்களுடன் ஒப்பிடுகையில் ஹாலிவுட் நடிகர்கள் ஒரு திரைப்படத்துக்குக் குறைவான நேரமே நடிக்கிறார்கள். கேமரா முன்னால் சிறப்பாக நடிக்க உடல்நிலை நன்றாக இருக்க வேண்டும் என்பதால், நடிகர்களைக் களைப்படைய விடுவதில்லை.அப்போதுதான் நடிப்பும் தரமாக இருக்கும் என்பதால் இதில் கவனம் செலுத்துகிறார்கள்.
    ஒரு சமயத்தில் ஒரேயொரு திரைப்படத்தில் மட்டுமே நடிக்கிறார்கள். இந்தியாவில் ஒரு நடிகர், ஒரே சமயத்தில் முப்பது படங்களில் நடிப்பார் என்று சொன்னபோது நம்ப மறுத்துச் சிரித்தார்கள். மார்லன் பிராண்டோவைச் சந்தித்தேன். என்னை எல்லோரும் முரடன் என்கிறார்கள், நான் அப்படியில்லை என்றார்.குழந்தையைப் போலவே என்னிடம் உற்சாகமாகப் பேசினார். வெகு விரைவிலேயே இந்தியா வர விருப்பம் என்றார்.
    திரைப்பட நடிகர்களின் சங்கம் (கில்டு) மிக சக்திவாய்ந்த தொழிற்சங்கம். அதன் விதிகளை மீற யாருக்கும் துணிச்சல் கிடையாது. திரைப்பட வாய்ப்புகள் இல்லாத போதும் நடிகர்கள் உடல் ஊனமுற்று வாழ்வாதாரத்தை இழந்தாலும் அவர்களுடைய பொருளாதாரத் தேவைகளை கில்டு கவனித்துக்கொள்கிறது. நடிகர்கள் தங்களுடைய ஊதியத்தில் 5% தொகையை கில்டுக்கு சந்தாவாகச் செலுத்துகிறார்கள். கில்டு திறமையாக நிர்வகிக்கப்படுகிறது. சென்னையில் உள்ள தென்னிந்தியத் திரைப்பட நடிகர்கள் சங்கமும் அதைப் போலவே செயல்பட வேண்டும். அதற்கான உதவிகளையும் ஒத்துழைப்பையும் அளிக்கத் தயாராக இருக்கிறேன்.”
    இவ்வாறு தன் பேட்டியில் குறிப்பிட்டார் சிவாஜி.
    மொழிபெயர்த்துத் தொகுத்தவர்: சாரி
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •