Page 156 of 401 FirstFirst ... 56106146154155156157158166206256 ... LastLast
Results 1,551 to 1,560 of 4001

Thread: Makkal thilagam mgr part 22

  1. #1551
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆரின் படங்களில் டாப் டென் பட்டியலிட சொன்னால் எனது தேர்வு இதுதான்
    1. அன்பே வா
    2 குடியிருந்த கோவில்
    3 உலகம் சுற்றும் வாலிபன்
    4. நம்நாடு
    5. நான் ஏன் பிறந்தேன்
    6.எங்க வீட்டுப் பிள்ளை
    7 இதயக்கனி
    8.பணம் படைத்தவன்
    9. படகோட்டி
    10.ஆயிரத்தில் ஒருவன்
    இதில் முதல் படத்தைத் தவிர மற்ற படங்களை விருப்பம் போல நம்பர்களை மாற்றிக் கொள்ளலாம்.
    எல்லா படங்களிலும் வசனம், காட்சி, பாடல்கள் மூலம் கருத்துகளை சொன்னவர் எம்ஜிஆர்.
    தவறு செய்தால் தட்டிக் கேட்பதும், குழந்தைகள், பெண்களை நேசிப்பதும் எம்ஜிஆரின் பார்முலா.இன்றுவரை ரஜினி, கமல், விஜய் வரை இந்த பார்முலாதான் நீடிக்கிறது. எவ்வளவு நாளைக்கு நல்லவனாவே இருப்பது போரடிக்குது என்று அஜித் பேசும் வசனமும் இதன் நீட்சிதான்.
    மனிதன் தவறுகளை செய்பவன்தான் .ஆனால் திருத்திக் கொள்ள வேண்டும் என்பது எம்ஜிஆரின் அவதானிப்பு. திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் வருந்தாத உள்ளங்கள் பிறந்தென்ன லாபம் இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவர்போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்ற எம்ஜிஆரின் பணம் படைத்தவன் படத்துக்காக வாலி எழுதிய பாடல் வரிகள் பசுமரத்தாணி போல சிறுவயதில் என் மனதுக்குள் பதிந்து விட்டன. இன்று வரை அதன் தடயம் அழியவே இல்லை.

    எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் தமிழக மக்களின் மனசாட்சியின் குரலாக ஒலிக்கிறது.

    courtesy - net

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1552
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆர் எனும் நாமம் !..


    எம்ஜிஆர் எனும் நாமம் !.. எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் ..
    வண்ணத் திரையினில் வலம்வந்தார் நாயகனாய்
    எண்ணமெலாம் எம்ஜிஆர் எனும்நினைப்பை ஊட்டிநின்றார்
    கண்ணுக்குள் பதியும்படி காட்சிகள் பலவமைத்து
    மண்ணிலுள்ளோர் மனமெல்லாம் வந்தமர்ந்தார் எம்ஜிஆர் !ஏழையாய் வாழ்ந்தாலும் கோழையாய் வாழாமல்
    வாழ்நாளை வளமாக்கி வாழ்வதற்கு அவருழைத்தார்
    நாளையதை மனமிருத்தி நல்லவற்றைத் தேர்ந்தெடுத்து
    ஆழமுள்ள ஆள்மையுடன் அவர்வாழத் தொடங்கினரே !


    தாய்ப்பாசம் அவரிடத்துப் பெருக்கெடுத்து ஓடியதே
    தாய்க்குலத்தின் பெருமைகளை தன்படத்தில் காட்டினரே
    வாய்க்கின்ற தருணமெலாம் மனிதகுல உயர்வினுக்கு
    வடிகாலாய் இருக்கும்படி வகுத்தளித்தார் வசனமெலாம் !

    எம்ஜிஆர் படங்களிலே எப்பாட்டு வந்திடினும்
    அப்பாட்டில் பலகருத்தை அவர்புகுத்த முனைந்திடுவார்
    படம்பார்ப்போர் வாழ்க்கையிலே புடம்போட்டு வருவதற்கு
    பாட்டமைத்த எம்ஜிஆர் பாடமாய் ஆகிநின்றார் !

    தானதர்மம் செய்வதுதான் தலைசிறந்த தருமமென
    தன்வாழ்வில் அதைப்புகுத்தி இயன்றவரை உதவிநின்றார்
    பணம்கிடைத்த போதெல்லாம் பலபணிகள் அவர்செய்து
    பாமரரின் தோழமையை பரிசெனவே பெற்றுநின்றார் !

    வெள்ளித்திரை நாயகனாய் வீதியெல்லாம் வந்தாலும்
    உள்ளமெலாம் உயர்கருத்தை உவந்தேற்ற விரும்பினரே
    நல்லமனம் அவரிடத்து இயல்பாக அமைந்ததனால்
    நாட்டுமக்கள் வாழ்வுபற்றி நாளுமவர் எண்ணினரே !

    நடிக்கின்ற காட்சிகளில் குடிக்கின்ற காட்சிகளை
    வெறுத்துவிட்ட நாயகனாய் வெற்றிநடை போட்டாரே
    குடிப்பழக்கம் தனையொதுக்கி குடிமக்கள் தனைப்பற்றி
    நடிப்பாலும் உணர்த்திநின்ற நாயகனே எம்ஜிஆர் !

    ஆத்திகம் நாத்திகம் அனைத்தையும் அரவணைத்தார்
    அநியாயம் கண்டவுடன் ஆத்திரமும் அவர்கொண்டார்
    ஆதாலால் அரசியலை அவசியமாய் ஆக்கிக்கொண்டு
    ஆட்சியினை வசமாக்க ஆக்கமுடன் அவருழைத்தார் !

    மக்களது ஆணையுடன் வந்தமர்ந்தார் எம்ஜிஆர்
    மக்களெலாம் அவராலே மறுவாழ்வு பெற்றனரே
    பாமரர்க்கு பயனைநல்கும் பலத்திட்டம் அவர்கொணர்ந்தார்
    பார்த்தவர்கள் வியந்தபடி போற்றினரே எம்ஜிஆரை !




    படகோட்டியாய் இருந்து பலதுன்பம் பட்டாலும்
    எங்கவீட்டுப் பிள்ளையாய் எம்ஜிஆர் இருந்துவிட்டார்
    நாடோடி மன்னனாய் நற்கருத்தை விதைத்தஅவர்
    ஊர்கூடித் தேர்ந்தெடுக்க உட்கார்ந்தார் ஆட்சியிலே !

    பட்டிதொட்டி எல்லாமே எம்ஜிஆர் எனும்வெளிச்சம்
    பட்டுத் தெறித்தனால் பலருமே பயனடைந்தார்
    கிட்டவந்து தொட்டுப்பார்க முட்டிமோதி நின்றார்கள்
    அத்தனையும் எம்ஜிஆரின் ஆளுமையின் மகத்துவமே !

    புதுக்கட்சி புதுப்பாடம் புதுஆட்சி அத்தனையும்
    புறப்பட்டு வரச்செய்த புரட்சிதான் எம்ஜிஆர்
    நிதம்மக்கள் வாழ்க்கையிலே நெருங்கிநின்ற உறவாக
    உரம்பெற்று வளர்ந்தவர்தான் உணர்வுநிறை எம்ஜிஆர் !

    எம்ஜிஆர் எனும்நாமம் இன்றளவும் ஒலிக்கிறது
    எல்லோரும் அவர்பெயரை இதயத்தில் வைத்துள்ளார்
    தமிழ்நாட்டின் விடிவுக்காய் தனைக்கொடுத்த எம்ஜிஆர்
    தமிழர்களின் மந்திரமாய் தானுயர்ந்து நிற்கின்றார் !

    courtesy - எம் . ஜெயராமசர்மா … net

  4. #1553
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    10 ஆயிரம் சதுர அடியில் எம்ஜிஆர் உருவத்தை ஓவியமாக வரைந்த அரசுப் பள்ளி மாணவிகள்

    பெரம்பலூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் பள்ளி மாணவிகள் 100 பேர் சேர்ந்து 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் உருவத்தை வரைந்து சாதனை படைத்துள்ளனர்.

    மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படுகிறது. இதன் ஒருபகுதியாக பெரம்பலூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் நேற்று 100 அடி நீளம், 100 அடி அகலத்தில் எம்.ஜி.ஆர் உருவத்தை ஓவியமாக வரையும் நிகழ்ச்சி நடைபெற்றது.




    நிகழ்ச்சியில், பெரம்பலூர், பாடாலூர், சத்திரமனை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகள் 100 பேர், ஓவிய ஆசிரியர்கள் வேல்முருகன், செல்வராஜ் ஆகியோர் மேற்பார்வையில் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் எம்ஜிஆர் உருவத்தை தத்ரூபமாக வரைந்து சாதனை படைத்தனர். இந்த ஓவியத்தை பார்த்து ரசித்த ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவிகளை பாராட்டினர்.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்மொழி தேவி ஆகியோரும் ஓவியம் வரைந்த மாணவிகளைப் பாராட்டினர்.

  5. #1554
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திரையரங்குகளில் கலக்கும் மக்கள் திலகம் அவர்தம் தீர்க்க தரிசன காவியம் "அரச கட்டளை" தற்போது சன் லைப் சானலில் காட்சிக்கு நடை பெறுகிறது...

  6. #1555
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கலையுலக சக்ரவர்த்தி புரட்சி நடிகர் காவியங்களில் டிஜிட்டல் வடிவில் தயாராகும் படைப்புகள்... "ஆசை முகம்", "🎂குடும்ப தலைவன்"...

  7. #1556
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    திரைப்படங்களை அரசியல் ஆயுதமாக்கிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்!


    தனது படத்தின் தொடக்கக்காட்சியில் வரும் பேனரிலேயே எதிர்க்கட்சிக் கொடியை தைரியமாக பட்டொளி வீசிப்பறக்கவிட்டவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அதனால்தான் அவர் இன்றும் தலைவராக இருக்கிறார். பொதுமக்களின ஊடகமான திரைப்படத்தை எப்படிப் பயன்படுத்தினால் எவ்வளவு உயரத்தை அடையமுடியும் என்பதை வெற்றிகரமாக நிரூபித்தவர், எம்.ஜி.ஆர்.

    இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தவர் மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன். இதன் சுருக்கம்தான் எம்.ஜி.ஆர். சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். தாயார் சத்யாவுடன் தமிழகம் வந்தார். கும்பகோணத்தில் ஆரம்பக்கல்வி பயின்றார். குடும்பச் சூழல் காரணமாக படிப்பு தடைபட்டது. எம்.ஜி.ஆரும் அவரது அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியும் நாடகங்களில் நடித்து வந்தனர். திரைப்படத்துறை வளர்ச்சி பெற்றுவந்த காலம் அது. அண்ணனும் தம்பியும் அந்தத் துறையிலும் கவனம் செலுத்தினர். வாய்ப்புகள் மிக அரிதாகவே கிடைத்துவந்தன.

    ‘சதி லீலாவதி’ (1936) படத்தின் மூலம் எம்.ஜி.ஆர் திரையுலகில் அறிமுகமானார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம். எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கிய இப்படத்தில் எம்.கே.ராதா கதாநாயகன். கலைவாணர் என்.எஸ்.கே, பாலைய்யா உள்ளிட்ட பலருக்கும் இதுதான் முதல் படம்.



    பிரபல நடிகர்களாக இருந்த எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா போன்றவர்கள் நாயகர்களாக நடித்த அசோக்குமார், ரத்னகுமார் உள்ளிட்ட படங்களில் சிறுபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகளே எம்.ஜி.ஆருக்குக் கிடைத்து வந்தன. அவர் சோர்ந்துவிடவில்லை. முயற்சிகளைத் தொடர்ந்துகொண்டே இருந்தார். டி.ஆர்.ரகுநாத் இயக்கிய தமிழறியும் பெருமாள், கிருஷ்ணன்-பஞ்சு இயக்கிய பைத்தியக்காரன் உள்ளிட்ட படங்களிலும் எம்.ஜி.ஆருக்கு வாய்ப்புக் கிடைத்தது.

    அவரது விடாமுயற்சி வீண்போகவில்லை. கோவையில் எம்.ஜி.ஆரும் கலைஞரும் ஒன்றாகத் தங்கி திரையுலக வாய்ப்புகளைப் பெற்று வந்தனர். ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில் வெளியான ‘அபிமன்யு’ (கலைஞர் வசனம்- ஆனால் அவரது பெயர் இடம் பெறவில்லை) படத்தில் அபிமன்யுவின் அப்பா அர்ஜூனன் கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். மகனை இழந்த சோகத்துடன், நியாயம் கேட்கும் வசனங்கள் இடம்பெற்ற காட்சிகளில் எம்.ஜி.ஆரின் நடிப்பு கவனம் பெற்றது. எம்.ஜி.ஆரின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அது துணை நின்றது.

    ‘ராஜகுமாரி’ (1947) படத்தில் முதன்முதலாக நாயகன் ஆனார் எம்.ஜி.ஆர். ஏறத்தாழ 10 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு அவருக்குக் கிடைத்த வாய்ப்பு. இந்தப் படத்திற்கும் கலைஞர்தான் வசனம். படம் வெற்றிபெறவே, வாய்ப்புகள் தொடர்ந்தன. எல்லீஸ் ஆர் டங்கன் இயக்கத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் கலைஞரின் திரைக்கதை-வசனத்தில் உருவான ‘மந்திரிகுமாரி’ (1950) படத்தில், கொள்ளையர்களைப் பிடித்து நீதிமுன் நிறுத்தும் தளபதி வேடத்தில் எம்.ஜி.ஆர் நடித்தார்.



    இந்த கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர்தான் நடிக்கவேண்டும் என இயக்குநரிடமும் தயாரிப்பாளரிடமும் போராடியவர் கலைஞர். படம் பெருவெற்றி பெறவே எம்.ஜி.ஆரின் திரையுலகப் பயணம் சிறப்பாகத் தொடர்ந்தது. கலைஞரின் வசனத்தில் ‘மருதநாட்டு இளவரசி’ படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்த வி.என்.ஜானகி, பின்னாளில் அவரது வாழ்க்கைத்துணையானார். மருதநாட்டு இளவரசிக்கு கலைஞர்தான் வசனம் எழுதவேண்டும் என படத்தயாரிப்பாளர்களிடம் வலியுறுத்தியவர் எம்.ஜி.ஆர். “மிருகஜாதியிலே புலி, மானை வேட்டையாடுகிறது. மனித ஜாதியிலே மான், புலியை வேட்டையாடுகிறது” என்கிற புகழ்பெற்ற வசனம் இடம்பெற்றது இப்படத்தில்தான்.

    எம்.ஜி.ஆர் தொடர்ந்து நடித்தவை, சரித்திர சாயல்கொண்ட படங்களே என்றாலும் அவற்றில் அவருடைய கதாபாத்திரங்கள் பெரும்பாலும், மக்களின் ஜனநாயகக் குரலை ஆட்சியாளர்களிடம் முன்வைப்பதாகவே அமைந்திருந்தன. எம்.ஜி.ஆர். தனக்கான ஃபார்முலாவை மெல்ல மெல்ல உருவாக்கத் தொடங்கினார். மகாதேவி,, புதுமைப்பித்தன், குலேபகாவலி, சக்கரவர்த்தி திருமகள், தமிழின் முதல் ‘ஏ’ சர்டிபிகேட் (திகில் காட்சிகளுக்காக) படமான ‘மர்மயோகி’ உள்ளிட்டவை அத்தகைய படங்களே. தமிழ் சினிமாவின் முதல் வண்ணப்படமான (கேவா கலர்) ‘அலிபாபாவும் நாற்பது திருடர்கள்’ படத்திலும் எம்.ஜி.ஆருக்கேற்றபடி திரைக்கதையும் காட்சிகளும் அமைக்கப்பட்டன.

    படம் பார்க்கவரும் எளிய மக்களின் மனதில் தேங்கிக் கிடக்கும் குமுறல்களை திரையில் எதிரொலிக்கும் நாயகனாக எம்.ஜி.ஆர். இருந்தார். அவர்களுக்காக ஆட்சியாளர்களுடன் போராடுபவராகவும், எதிரிகளை வீழ்த்தி நீதி கிடைக்கச் செய்பவராகவும் எம்.ஜி.ஆரின் படங்கள் அமைந்தன. தாங்கள் கனவில் காணும் ஒரு நாயகன் இதோ நிஜத்தில் வந்துவிட்டார் என ரசிகர்கள் எம்.ஜி.ஆரைக் கொண்டாடினர். பணக்காரர்களிடம் பறித்து ஏழைகளுக்கு வழங்கும் ராபின் ஹூட் டைப் படமான மலைக்கள்ளன், எம்.ஜி.ஆருக்குப் புகழ் பெற்றுத் தந்தது. (நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் கதைக்கு வசனம் எழுதியவர் கலைஞர்)தமிழக நாட்டுப்புறக் கதை மரபிலான ‘மதுரை வீரன்’ படம் எம்.ஜி.ஆரின் திரையுலக வரலாற்றில் ஒரு மைல்கல். செருப்புத் தைக்கும் சமுதாயத்தினரால் வளர்க்கப்படும் மதுரைவீரன் பாத்திரத்தில் அவர் நடித்தார். (வசனம்- கவிஞர் கண்ணதாசன்) திரையிடப்பட்ட அரங்குகள் பலவற்றிலும் 100 நாட்களைக் கடந்து ஓடியது. மக்களின் நாயகனாக எம்.ஜி.ஆர் முழுப் பரிமாணம் பெற்றது மதுரைவீரன் படத்தில்தான்.



    தொடர்ந்து ஏற்றமும் இறக்கமுமாக அவருடைய திரைப்பயணம் அமைந்த நேரத்தில், தனது வெற்றிசூத்திரத்தின்படி சொந்தமாக ஒரு படம் தயாரித்து-இயக்கவும் முடிவு செய்தார் எம்.ஜி.ஆர். அந்தப் படம்தான் ‘நாடோடி மன்னன்’. திரையுலகில் போராடி சம்பாதித்ததையெல்லாம் முதலீடு செய்து, இருவேடங்களில் அவரே நடித்தார். படத்தின் ஒரு பகுதி மட்டும் கலரில் எடுக்கப்பட்டது. “இப்படம் வெற்றிபெற்றால் நான் மன்னன். இல்லையென்றால் நாடோடி” என்று எம்.ஜி.ஆர் சொன்னார். திரையுலகின் முடிசூடா மன்னனாக அவரை மாற்றியது ‘நாடோடி மன்னன்’ (1958) படத்தின் பெரும் வெற்றி. (வசனம்-கவிஞர் கண்ணதாசன்). இப்படத்தின் மூலம் ‘புரட்சி நடிகர்’ என்ற பாராட்டும் அடைமொழியும் எம்.ஜி.ஆருக்குக் கிடைத்தது. (இந்தப் பட்டத்தை வழங்கியவர், கலைஞர்). எம்.ஜி.ஆர், தான் வெறும் நடிகனல்ல, தனக்கேற்றபடி திரைப்படத்தை உருவாக்கும் படைப்பாளி என்பதை நாடோடி மன்னன் வெற்றியின் மூலம் நிரூபித்தார்.

    அதன்பிறகு அவர் நடித்து வெளியான சரித்திரக் கதை படங்களாக இருந்தாலும் சமூகப் படங்களாக இருந்தாலும் எல்லாமும் அவருக்கேயுரிய ஃபார்முலாவுடன்தான் அமைந்தன. (பாசம், அன்பேவா போன்ற ஒரு சிலபடங்கள் தவிர) வசனங்களை எழுதிய கலைஞர் மு.கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன், ஆர்.கே.சண்முகம், சொர்ணம் உள்ளிட்ட யாராக இருந்தாலும், பாடல்களை எழுதிய கவிஞர்கள் கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம், நா.காமராசன் போன்றவர்களாக இருந்தாலும், இசையமைப்பாளர்களான எஸ்.எம்.சுப்பையா(நாயுடு), விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் ஆகியோரும், படங்களை தயாரித்தவர்களும் இயக்கியவர்களுமான சின்னப்பாதேவர், டி.ஆர்.ராமண்ணா, ப.நீலகண்டன், கே.சங்கர் உள்ளிட்டவர்களும் எம்.ஜி.ஆரை மனதில் வைத்தே தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தினர். எம்.ஜி.ஆருக்கேற்றபடி சிந்திப்பவர்கள்தான் அவருடைய படங்களில் தொடரும் சூழ்நிலை அமைந்தது.

    தி.மு.கவில் எம்.ஜி.ஆர் இருந்ததால் கட்சியால் தனக்கும், தன்னால் கட்சிக்கும் பலன் இருக்கும்வகையில் திரைப்படங்களில் கவனம் செலுத்தினார். அவருடைய எம்ஜியார் பிக்சர்ஸின் பேனரே ஓர் ஆணும் பெண்ணும் தி.மு.க கொடியை உயர்த்திப் பிடித்திருப்பதுதான். (தனிக்கட்சி தொடங்கியபிறகு, அது அ.தி.மு.க கொடியாக ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் மாறியது). பகுத்தறிவுக் கொள்கையை அன்றைய தி.மு.க உறுதியாகக் கடைப்பிடித்ததால் எம்.ஜி.ஆர் தனது படங்களில் மூடநம்பிக்கை சார்ந்த காட்சிகளை அனுமதிக்கமாட்டார். கதையோட்டத்திற்கு அது தேவையென்றாலும் அவர் அதில் இடம்பெறமாட்டார். திருமணக் காட்சிகள் பெரும்பாலும் சுயமரியாதை திருமணங்களாகவே இருக்கும். புரோகிதர் இருக்கமாட்டார்.



    கட்சிக்கொடியின் இருவண்ணமான கறுப்பும் சிவப்பும் கதாபாத்திரங்களின் உடை, மேஜை விரிப்பு, திரைச்சீலை, சுவரின் நிறம் எனப் பலவற்றிலும் வெளிப்படும். எம்ஜியார் பிக்சர்ஸின் தயாரிப்பான ‘அடிமைப் பெண்’ (இயக்குநர் கே.சங்கர்) படத்தில், உலகம் அறியாமல் வளர்ந்த எம்.ஜி.ஆருக்கு சூரியனைக் காட்டுவார் ஜெயலலிதா. அது என்ன என்பதுபோல எம்.ஜி.ஆர் சைகையால் கேட்க, “அதுதான் உதயசூரியன்” என்பார் ஜெயலலிதா. இப்படி, தி.மு.கவின் சின்னமான உதயசூரியனும் அவரது பல படங்களில் அடையாளம் காட்டப்பட்டது. பத்திரிகை படிக்கும் காட்சி என்றால் நம்நாடு, முரசொலி போன்ற தி.மு.க பத்திரிகைகளைத்தான் எம்.ஜி.ஆர் படிப்பார். (தனிக்கட்சி தொடங்கிய பிறகு, ‘தென்னகம்’ பத்திரிகை படிப்பதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றன). தி.மு.கவை நிறுவியவரான அறிஞர் அண்ணாவின் படத்தைக் காட்டி அவரைப் புகழும் வசனமோ, பாடல்களோ தன் படத்தில் இடம்பெறுவதை எம்.ஜி.ஆர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

    தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த சூழலில் எம்.ஜி.ஆரின் இந்த பங்களிப்பு பாமர மக்களிடம் கட்சிக்கான செல்வாக்கை அதிகரிக்கச் செய்தது. அவருக்கும் எம்.எல்.சி பதவி கிடைக்க வழி வகுத்தது. பின்னர் 1967ல் அவர் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் பரங்கிமலை தொகுதியில் வென்று எம்.எல்.ஏவானார். 1971லும் வென்றார். சிறுசேமிப்புத்துறை தலைவர் என்ற பொறுப்பையும் பெற்றார். சினிமாவில் தனக்கென்று தனி பாணியைப் பின்பற்றுவதில் அவர் உறுதியாக இருந்தார். மது, புகைப்பழக்க காட்சிகளில் நடிக்க மாட்டார். பெண்களுக்கு ஆபத்து என்றால் எங்கிருந்தாலும் தாவி வந்து உதவுவார். ஏழைகளுக்குத் தோழனாக இருப்பார். எதிரிகளைப் பந்தாடுவார்.

    எம்.ஜி.ஆரின் நடிப்பு, அலட்டிக்கொள்ளாத வகையைச் சேர்ந்தது. அவருடைய ரசிகர்களுக்கு அதுதான் பிடிக்கும். கவர்ந்திழுக்கும் புன்னகை, நெருக்கமான காதல் காட்சிகள், அசத்தும் சண்டைக்காட்சிகள், நெஞ்சில் மையம் கொள்ளும் பாடல்கள், சமுதாயத்திற்கானக் கருத்துகளைக் கொண்ட வசனங்கள் இவற்றின் அடிப்படையிலானதுதான் அவரது படம். இந்த ரெடிமேட் ஃபார்முலாவுக்குள் உடன்பட முடியாத புகழ்பெற்ற இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் ஒருநேரத்தில் எம்.ஜி.ஆர் பக்கம் கவனத்தைத் திருப்பவில்லை என்றாலும் பிறகு அவர்களும் அவரை வைத்து படம் இயக்கினார்கள்.



    ஏ.வி.எம் நிறுவனத்தின் முதல் வண்ணப்படமான ‘அன்பே வா’ (இயக்கம்-ஏ.சி.திருலோகச்சந்தர்), ஜெமினி நிறுவனத்தின் முதல் வண்ணப்படமான ‘ஒளிவிளக்கு’ ஆகியவை எம்.ஜி.ஆர் நடித்தவையாகும். (ஒளிவிளக்கு, எம்.ஜி.ஆரின் 100வது படம்). பத்மினி பிக்சர்ஸ் அதிபர் பி.ஆர்.பந்தலு தயாரித்து இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ தமிழ்த் திரையின் முக்கியமான படங்களில் ஒன்று. நீண்டகாலம் எம்.ஜி.ஆர் பக்கம் திரும்பாமல் இருந்த இயக்குநர் ஸ்ரீதர் பின்னர் ‘உரிமைக்குரல்’, ‘மீனவநண்பன்’ ஆகிய படங்களை எம்.ஜி.ஆரை வைத்து இயக்கினார். (அண்ணா நீ என் தெய்வம் என்ற படத்தையும் அவர் இயக்கினார். எம்.ஜி.ஆர் முதல்வரானதால் படம் பாதியில் நின்றுபோய், பின்னர் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப்பிறகு பாக்யராஜ் இயக்கத்தில் ‘அவசர போலீஸ் 100’ என்ற தலைப்பில் எம்.ஜி.ஆர் நடித்த காட்சிகளுடன் வெளியானது). புராணப்படங்களை வெற்றிகரமாகத் தந்த இயக்குநர் ஏ.பி.நாகராஜன் எம்.ஜி.ஆரை வைத்து ’நவரத்தினம்’ என்ற படத்தை இயக்கினார். இவர்களும் எம்.ஜி.ஆர் ஃபார்முலாவுக்குட்பட்டே இப்படங்களை இயக்கினர்.

    துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் மீண்ட எம்.ஜி.ஆரின் குரல் பாதிக்கப்பட்டபோதும், படங்களில் அவரே சொந்தக் குரலில் பேசினார். அவரது ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். அதுபோல சண்டைக் காட்சிகளில் வாள் சுழற்றுதல், சிலம்பம், மான்கொம்பு, சுருள்கத்தி சுழற்றுதல், பூட்டுப்போட்டு தாக்குதல் எனப் பலவகைகளைக் கையாண்டு ரசிகர்களைக் கவர்ந்தார். ரிக்*ஷாக்காரன் படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது(பாரத்) கிடைத்தது. தமிழ் நடிகர்களில் முதலில் தேசிய விருது வாங்கியவர் எம்.ஜி.ஆரே. அவர் நடித்த மொத்த படங்கள் 136. கடைசியாக வெளியான படம் எம்.ஜி.ஆரின் இயக்கத்தில் உருவான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’(1978). படவேலைகள் நிறைவடைந்து எம்.ஜி.ஆர் முதல்வரானபிறகு வெளியானது. அவரது மறைவுக்குப்பிறகு வெளியான ‘அவசர போலீஸ் 100‘, ‘நல்லதை நாடு கேட்கும்’ ஆகியவற்றில் அவர் நடித்து வெளிவராத படங்களின் காட்சிகள் இடம்பெற்றன.

    தனது படங்கள் மூலம் தன்னுடைய திரையுலக-அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்துவதில் எம்.ஜி.ஆர் தீவிரமாகவும் திட்டமிட்டும் கவனம் செலுத்தினார். அன்று தென்னிந்திய (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்) நடிகர்களிலேயே அதிக சம்பளம் பெற்றவர் எம்.ஜி.ஆர்தான் (6 முதல் 8 லட்ச ரூபாய் வரை). மதுரை வீரனில் தொடங்கி நாடோடி மன்னன் வழியாகப் பல படங்களிலும் ஏழைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்காகவும் அவர் பேசிய வசனங்களும், வாயசைத்த பாடல்களும் அவருடைய அரசியல் செல்வாக்கிற்கு அடிப்படையாக அமைந்தன.




    ‘படகோட்டி’ படம் மூலம் மீனவ சமுதாயத்திடம் அவர் ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை அவருடைய கட்சிக்கான வாக்கு வங்கியாக நிலைபெற்றிருக்கிறது. தொழிலாளி, விவசாயி, எங்க வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல படங்களும் அவருடைய அரசியல் செல்வாக்கிற்குத் துணை நின்றன. தி.மு.கவிலிருந்து அவர் நீக்கப்பட்டு, தனிக்கட்சியான அ.தி.மு.கவைத் தொடங்கிய சூழ்நிலையில் வெளியான ‘ரிக்*ஷாக்காரன்’ படத்திற்கு நெருக்கடி வந்தபோது, பல ஊர்களிலும் ரிக்*ஷா தொழிலாளர்கள் அந்தப் படத்திற்கு பாதுகாப்பாக இருந்து, திரையிடச் செய்தனர். எம்.ஜி.ஆரின் தயாரிப்பு- இயக்கத்தில் அன்றைய சூழலில் பெரும்பொருட்செலவில் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்ட ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் வெளியீட்டின்போது, தி.மு.க ஆட்சி கொடுத்த நெருக்கடியால் சென்னையில் சுவரொட்டி ஒட்டமுடியாத நிலை ஏற்பட்டது. அதற்குப் பதிலாக ஸ்டிக்கர்கள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டது. அதனை வாகனங்களிலும் கடைகளிலும் ஒட்டும் பணியில் அவருடைய ரசிகர் மன்றத்தினர் முழுமையாக ஈடுபட்டனர்.

    தனது ரசிகர்களை மன்றங்கள் என்ற அமைப்பின் கீழ் ஒன்றிணைத்து அதனை அரசியல் தளத்திற்கு நகர்த்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். 1972ல் அ.தி.மு.க என்ற தனிக்கட்சியைத் தொடங்கியபிறகு, திரைப்படத்தின் சில காட்சிகளையும், பாடல்களையும் நேரடி அரசியல் பிரச்சாரமாக்கி, 5ஆண்டுகளில் ஆட்சியையும் பிடித்தவர் அவர். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். மும்முறை தொடர்ச்சியாக அவரது கட்சி தேர்தலில் வென்றது. 11ஆண்டுகாலம்(1977ஜூன்-1987டிசம்பர்) தமிழகத்தின் முதலமைச்சராக செயல்பட்டார்.

    திரைப்படங்களை தன்னுடைய பிரச்சார ஊடகமாக, அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். அவரது இந்த அணுகுமுறையைக் கடுமையாக விமர்சிப்பவர்களும் உண்டு. எனினும், திரைப்படங்களை நுட்பமாகப் பயன்படுத்தி அவர் வெற்றி பெற்றார் என்பது மறுக்கமுடியாதது. எம்.ஜி.ஆருடைய படங்கள் சில, வெளியான காலத்தில் வணிகரீதியில் தோல்வியடைந்துள்ளன. ஆனால், பின்னர் அவை திரும்பத் திரும்ப வெளியிடப்பட்டு வசூலைக் குவித்தன. அவரது படப்பாடல்கள்தான் இன்றளவும் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருப்பதுடன் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பிரச்சாரப் பாடல்களாகவும் நிலைத்திருக்கின்றன. தொலைக்காட்சி, இணையதளம் என நவீனத் தொழில்நுட்பங்கள் வளர்ந்த நிலையிலும் எம்.ஜி.ஆரின் புகழ் ஒளிவீசுகிறது.

    எம்…ஜி….ஆர்… என்ற ஆங்கில எழுத்துகள், இங்கே தமிழுக்குரிய எழுத்துகளைப்போல ஆகிவிட்டன...

    -கோவி.லெனின்.

  8. #1557
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    MGR’s Aayirathil Oruvan Screening in IFFI at G0A



    20-11-17 அன்று கோவாவில் தொடங்க உள்ள (International Film Festival of India) 48வது உலக திரைப்பட விழாவில் புரட்சி தலைவரும் புரட்சி தலைவியும் நடித்த “ஆயிரத்தில் ஒருவன்”திரைப்படம் பங்குபெற தேர்வாகியுள்ளது.

    அதனை Digitalல் வடிவமைத்தவன் என்ற முறையில் எனக்கு விமான டிக்கட், மற்றும் நட்சத்திர அந்தஸ்த்து விடுதியில் உபசரிப்பு போன்றவைகளுடன் விழாவில் கலந்து கொள்ள சிறப்பு அழைப்பாளராக மத்திய அரசு அழைப்பு அனுப்பியுள்ளது, எங்கள் முயற்சிக்கு கிடைத்த மாமரியாதை என பூரிப்படைகிறேன்.

    இதனை எற்பாடு செய்த IFFI, NFDC Govt of India, மற்றும் SIFCC அனைவர்க்கும் எனது பணிவான நன்றியினை தெறிவித்துக்கொள்கிறேன்.

    மற்றும் 1965ல் ஆயிரத்தில் ஒருவன் -ஐ படைத்த இயக்குனர் B.R. பந்துலு ஐயா அவர்களுக்கு இது எமது சமர்ப்பணம் .

    DIVYA FILMS- CHOKKALINGAM

  9. #1558
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் - சிறப்பு பார்வை
    நன்றி - சாரதா
    இணையத்தளம்


    தமிழ்ப் படங்களில் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு ஒரு தனிச் சிறப்பு எப்போதுமே உண்டு. தமிழ்ப் படங்களில் புராணப் படங்கள் ஏராளமாக வந்திருக்கின்றன. ராஜா ராணியை மையமாக வைத்து சரித்திரப் படங்களும் அதிக அளவில் வந்துள்ளன. சமூகப் படங்கள், மற்றும் நாட்டு விடுதலையை மையமாகக் கொண்ட படங்களும், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் அராஜகங்களை தோலுரித்துக் காட்டும் படங்களும் அதிகமாக வந்துள்ளன. நகைச்சுவைப் படங்களின் பட்டியலும் நீளம்தான்.

    காதலை மையமாகக் கொண்ட படங்களோ திகட்டத் திகட்ட வந்திருக்கின்றன.

    ஆனால் இது வரை கடற் கொள்ளையர்களை கதைக் கருவாகக் கொண்டு வெளி வந்த ஒரே படம் ஆயிரத்தில் ஒருவன் மட்டுமே. கதை, வசனம், காட்சியமைப்புகள், பாடல்கள், இசை, பொருத்தமான நடிகர் நடிகையர் தேர்வு, பொழுதுபோக்கு அம்சங்கள், கதையோடு ஒன்றிய கதைக் களங்கள் என, ஒரு வெற்றிப் படத்துக்குரிய எல்லா அம்சங்களும் ஒரு சேர அமைந்த படம் ஆயிரத்தில் ஒருவன்.


    இப்படத்தின் கதாநாயனான ‘மக்கள் திலகம்’ எம்ஜியார் ஏற்றிருந்த மணிமாறன் என்ற கதாபாத்திரம், ஒரு கை தேர்ந்த தையற் கலைஞர் அளவெடுத்து தைத்த சட்டை பொருந்துவது போல வெகு அருமையாகப் பொருந்தியது. அவர் திறமைக்குத் தீனி போடுவது போல கத்திச் சண்டைக் காட்சிகள், அளவு மீறாத காதல் காட்சிகள், அவருக்கே பொருந்துவது போல அற்புதமாக அமைந்த பாடல்கள் என கனகச்சிதமாகச் சேர்ந்திருந்தது.


    ஆயிரத்தில் ஒருவன் படத்தின் கதைச் சுருக்கத்தைச் சொல்வது என்பது அவசியமில்லாத ஒன்று. அந்த அளவுக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு பழகிப்போன திரைப்படம் இது. இன்றைய இளம் தலைமுறையினரும் கூட அறிந்து கொள்ளும் விதமாக, இன்றைக்கும் ஏதாவது ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கும் படம்.


    கதாநாயகியாக ஜெயலலிதா. இதிலும் பந்துலு மற்றும் எம்ஜியாரின் துணிச்சல் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அது வரை (பானுமதிக்குப் பின்) சரோஜா தேவிதான் எல்லாப் படங்களிலும் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வந்தார். அப்படியிருக்க, திடீரென்று அப்போதுதான் அறிமுகமாகி ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்த ஜெயலலிதாவை கதாநாயகியாக (அதுவும் எம்ஜியாருக்கு ஜோடியாக) போட்டிருந்தார்கள். (ஜெயலலிதா இப்போது நாடறிந்த புள்ளியாக இருந்தாலும், அப்போது அவர் புது முகம்தானே). ஆனால் படத்தில் அவர் நடிப்பைப் பார்க்கும்போது அவரை புதுமுகம் என்று யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அந்த அளவுக்குத் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.


    பருவம் எனது பாடல் என்ற பாடல் காட்சியில் ஜெயலலிதாவை அறிமுகம் செய்வதே அழகாக இருக்கும். கண்ணின் கருவிழியிலும், தாமரைப்பூவின் நடு இதழிலும்,கோயிலின் நடு மண்டபத்திலும் அவருடைய முகத்தை அறிமுகப்படுத்துவதே ஒரு அழகு.
    எம்.ஜி.ஆரின் அறிமுகம் வழக்கம் போல “வெற்றி… வெற்றி…” என்ற வசனத்துடன் துவங்கும். (பாம்பு கடிக்கு மருந்து கண்டுபிடிப்பதில் வெற்றியடைந்திருப்பார்). சர்வாதிகாரி மனோகரால் கன்னித் தீவுக்கு அடிமைகளாக விற்கப்படும் போதாகட்டும், கப்பலில் பாயாசம் கேட்டு போராட்டம் செய்வதாகட்டும், தன்னை விரும்பும் இளவரசி பூங்கொடியிடம் அவருடைய காதலுக்கு கொஞ்சமும் தகுதியில்லாதவன் என்பதை விளக்குவதாகட்டும், நம்பியாரை நல்லவர் என்று நம்பி அவரிடம் மாட்டிக் கொண்டபின் தன்னை நம்பி வந்தவர்களின் உயிரைக் காக்க தன் மனச்சாட்சிக்கு விரோதமாக ‘கடற் கொள்ளையனாக’ சம்மதிப்பதாகட்டும், மனோகர் தன் எதிரியாக இருந்தபோதும் கூட கோழைத்தனமாக நம்பியார் விஷம் தோய்ந்த கத்தியை அவர் மீது வீசியதைக் கண்டு கொதித்துப் போய் அவரைக் காப்பாற்றும் இடத்திலாகட்டும்… இப்படி எல்லா காட்சிகளிலும் எம்.ஜி.ஆரின் நடிப்பு பாராட்டும்படியாக இருக்கும்.


    கத்திச் சண்டைக் காட்சிகள் மூன்று இடங்களிலும் மிக அருமையாக படமாக்கப் பட்டிருக்கும். மணிமாறனும் பூங்கொடியும் (எம்ஜிஆர்+ஜெ) குடியிருக்கும் குடிலில் எம்ஜியாருக்கும் நம்பியாருக்கும் நடக்கும் கத்திச் சண்டை (முழுக்க முழுக்க மூங்கிலிலேயே அமைக்கப்பட்ட அருமையான செட்), கார்வார் மலைப் பகுதியில் அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் வாள் சண்டை (நம்பியார்: “இப்போட்டியில் வெற்றி பெறுபவனே இந்த தீவின் தலைவனாவான். முடிந்தால் நீ தலைவனாகு. இருந்தால் நான் தொண்டனாகிறேன்”), மூன்றாவதாக மனோகரின் படை வீரர்களோடு கப்பலில் மோதும் வாள் சண்டை. இவையனைத்திலும் எம்.ஜி.ஆர். (வழக்கம் போல) தன்னுடைய திறமையைக் காட்டி அசத்தியிருப்பார்.


    பின்னர் வரப் போகும் மூன்று கத்திச் சண்டைக் காட்சிகளும் ரொம்ப சீரியசாக இருக்கும் என்பதால்தானோ என்னவோ, இவற்றுக்கு முதலில், கன்னித் தீவில் கொள்ளையடிக்க வரும் நம்பியாரின் ஆட்களோடு நடக்கும் சண்டையை ரொம்பவும் நகைச்சுவை ததும்பும் விதமாக படமாக்கியிருப்பார் பந்துலு.


    பாடல்களும் இசையும்:

    இப்படம் இன்னொரு விதத்திலும் மறக்க முடியாத படமாக அமைந்தது. ஆம், அது வரை தமிழ்த் திரை இசையில் இரட்டையர்களாக கோலோச்சி வந்த ‘மெல்லிசை மன்னர்கள்’ விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரும் கடைசியாக இணைந்து இசையமைத்தது ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்குத்தான். அதனால்தானோ என்னவோ இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் வெரைட்டியாகவும், இசையில் இன்றைக்கும் ஒரு சாதனையாகவும் திகழ்கின்றன. பாடல்கள் அனைத்தும் கிட்டத்தட்ட தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மனப்பாடம் ஆகிவிட்ட ஒன்று. இன்றைக்கும் ஏதாவது ஒரு வகையில் தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக தொலைக்காட்சிகளில் வந்து கொண்டிருக்கின்றன. சிறப்பு தேன்கிண்ணம் வழங்க வரும் திரையுலக வி.ஐ.பி.க்கள் மறக்காமல் தொடும் பாடல்கள் இடம் பெற்ற படங்கள் ஆயிரத்தில் ஒருவன், புதிய பறவை, அன்பே வா… இவற்றிலிருந்து பாடல்களைச் சொல்லாமல் அவர்கள் நிகழ்ச்சிகளை நிறைவு செய்வதேயில்லை. காரணம் அந்த அளவுக்கு தேன் சொட்டும் பாடல்கள்.


    1. பருவம் எனது பாடல்
    நான் முதலிலேயே சொன்னபடி, கதாநாயகி ஜெயலலிதா அறிமுகம் ஆகும் பாடல். தோழிகளோடு அவர் ஆடிப்பாடும் காட்சி என்பதால், பி.சுசீலாவின் குரலோடு கோரஸ் சிறப்பாக சேர்க்கப்பட்டிருக்கும்.
    பருவம் எனது பாடல்
    பார்வை எனது ஆடல்
    கருணை எனது கோயில் கலைகள் எனது காவல்
    கருணை உனது கோயில் கலைகள் உனது காவல்
    பல்லவியை பாடி முடித்த சுசீலா, உச்ச ஸ்தாயியில் ஹம்மிங் ஆரம்பித்து அப்படியே படிப்படியாக கீழ் ஸ்தாயி வரையில் கொண்டு வர*, கூடவே அதுக்கு அனுசரணையாக கோரஸ் கலந்து ஒலிக்க, அப்பப்பா.. மெல்லிசை மன்னர்கள் இங்கு மெல்லிசை சக்கரவர்த்திகளாக உயர்ந்து நிற்பார்கள். பல்லவி முடிந்து
    இதயம் எனது ஊராகும் இளமை எனது பேராகும்
    என்று சரணம் தொடங்கும்போது, பாங்கோஸ் அருமையாக பாடலை அணைத்துச் செல்லும். அதனால்தான், பிற்காலத்தில் எத்தனையோ இசைக்கொம்பர்கள் வந்தும் கூட இந்தப் பாடல்களை மக்கள் மனத்திலிருந்து அகற்ற முடியவில்லை.
    (நண்பர்கள் நிச்சயம் இங்கு அதற்கான ‘link’ தருவார்கள். Songs கேட்டுப் பாருங்கள். வேறொரு உலகத்துக்குப் போவீர்கள்).


    2. ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை

    வழக்கம் போல எம்.ஜி.ஆரின் தன்னம்பிக்கை ஊட்டும் பாடல் வரிசையில் ஒன்று.
    ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே
    நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே
    வரும் காலத்திலே நம் பரம்பரைகள்
    நாம் அடிமையில்லை என்று முழங்கட்டுமே
    இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் எல்லாம் இப்படி எண்ணியதால்தானே இன்று நாம் சுத*ந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டு இருக்கிறோம்.


    3. ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ


    இந்தப் பாடலைப் பற்றி நண்பர்கள் ஏற்கெனவே இங்கு சொல்லியிருக்கிறார்கள். மக்கள் திலகம் பல கவிஞர்களிடம் பாடல் எழுதியும் திருப்தியடையாமல், அப்போது தன்னிடம் கருத்து வேறுபாடு கொண்டிருந்த கவியரசர் கண்ணதாசனை அழைத்து இந்தப் பாடலை எழுதச் சொல்லி திருப்தியடைந்தார் என்பார்க*ள். பாதிப் பாட*ல் அர*ண்ம*னை செட்டிலும் பாதிப்பாட*ல் கார்வார் க*ட*ற்க*ரையிலும் க*ண்டினியூட்டி கெடாம*ல் எடுக்க*ப்ப*ட்டிருக்கும்.


    4. உன்னை நான் ச*ந்தித்தேன் நீ ஆயிர*த்தில் ஒருவ*ன்

    பி.சுசீலா தனியாக*ப் பாடிய* பாட*ல். கூட*வே ஆண்க*ளின் கோர*ஸ். ம*ணிமாற*னைப் பிரிந்த* பூங்கொடி, செங்க*ப்ப*ரின் அர*ண்ம*னையில் சோக*மே உருவாக* பாடும் பாட*ல், கூட*வே க*ப்ப*லில் போய்க்கொண்டிருக்கும் ம*ணிமாற*னைக் காண்பிக்கும்போது, அவ*ர*து கூட்டாளிக*ளின் உற்சாக*மான* கோர*ஸ்.
    பொன்னைத்தான் உட*ல் என்பேன் சிறு பிள்ளை போல் ம*ன*மென்பேன்
    க*ண்க*ளால் உன்னை அள*ந்தேன் தொட்ட* கைக*ளால் நான் ம*ல*ர்ந்தேன்
    உள்ள*த்தால் வ*ள்ள*ல்தான் ஏழைக*ளின் த*லைவ*ன்
    அடுத்து வ*ரும் இசை ‘பிட்’டைக் கேட்க* முடியாது, கார*ண*ம் ப*ல*த்த* கைத*ட்ட*லும், விசில் ச*த்த*மும். பாட*ல் முடியும்போது, கோர*ஸுட*ன் க*ப்ப*ல்க*ள் முல்லைத்தீவு க*ரையில் ஒதுங்குவ*தாக* காட்டுவ*து அருமை. (கப்பல்கள் கரை ஒதுங்கும்போது, முல்லைத்தீவின் அரசியான எல்.விஜயலட்சுமி கறுப்பு நிற உடையில் அழகுப் பதுமையாக நடந்து வருவது எடுப்பான காட்சி).


    4. ஆடாமல் ஆடுகிறேன்

    கடற்கொள்ளையின்போது கிடைத்த பொருட்கள் மட்டுமின்றி, மனிதர்கள் கூட பொருட்களாக கருதப்பட்டு ஏலத்தில் விடப்பட வேண்டும் என்ற தீவின் சட்டப்படி, ஜெயலலிதா ஏலம் விடப்படும்போது அவர் மனம் நொந்து ஆண்டவனை அழைக்கும் பாடல். சுசீலா மேடத்துக்கு இப்படத்தில் அற்புதமான மூன்று தனிப்பாடல்கள், அதில் இதுவும் ஒன்று. இசை அருமையோ அருமை. முதலில் சாட்டையடி சத்தம், அதைத் தொடர்ந்து ஒவ்வொரு சாட்டையடிக்கும் அதைப் பிரதிபலிக்கும் வண்ணம் வயலினின் ஓசை.
    ஆடாமல் ஆடுகிறேன்… பாடாமல் பாடுகிறேன்
    ஆண்டவனைத் தேடுகிறேன் வா…வா…வா….
    நான் ஆண்டவனைத் தேடுகிறேன்
    வா…வா…வா…. வா….வா…வா…
    முதல் இரண்டு வரிகளுக்கு பாங்கோஸ் இசைக்க, ‘ஆண்டவனைத் தேடுகிறேன்’ என்ற வரி ஆரம்பிக்கும்போது அருமையாக தபேலா ஆரம்பிக்கும். இடையிசையில் முதலில் வயலின், பின்னர் கிடார், அடுத்து ஃப்ளூட், பின் மீண்டும் வயலின் அடுத்து தபேலா சோலோ என்று மாறி மாறி ஒலித்து பாடலை எங்கோ கொண்டு செல்லும்.
    விதியே உன் கை நீட்டி வலை வீசலாம்
    ஊரார்கள் என்னைப் பார்த்து விலை பேசலாம்
    அழகென்ற பொருள் வாங்க பலர் கூடலாம்
    அன்பென்ற மனம் வாங்க யார் கூடுவார்
    ‘கன்னித்தீவின் இளவரசியாக கவலையில்லாமல் வாழ்ந்தேனே, இன்று இவர்கள் கையில் மாட்டி ஏலம் போகவா செங்கப்பரை வற்புறுத்தி கடல் பயணம் வந்தேன்’ என்ற ஏக்கம் பொங்க ஜெயலலிதா காட்டும் முகபாவம் நம் கண்களில் நீரை வரவழைக்கும். வயலினும் தபேலாவும் உச்ச ஸ்தாயியில் போய் பாடல் முடியும்போது மழை பெய்து ஓய்ந்த மாதிரி இருக்கும்.
    (மெல்லிசை மன்னர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அருமையான ‘send off ‘கொடுத்திருக்கிறார்கள் இப்படத்தில்).


    5. நாணமோ… இன்னும் நாணமோ

    நீ இளவரசி, நான் அடிமை யென்று பேதம் பார்த்து ஒதுங்கிருந்த மணிமாறனை ஒருவழியாக (விஷம் அருந்தியதாக பொய் சொல்லி) தன் காதலுக்கு சம்மதிக்க வைத்தாயிற்று. பின்னர் என்ன? காதலர்களுக்கு ஒரு பாடலாவது வேண்டாமா? அதுதான் இந்தப் பாடல். சிங்கம் ஒரு குட்டி போட்டாலும் அது சிங்கக் குட்டியாக இருக்கும் என்பது போல, படத்தில் இடம் பெற்றது ஒரேயொரு டூயட் பாடல் என்றாலும், மனதை அள்ளிக்கொண்டு போகும் பாடல். பாடலின் ‘prelude’அருமையாக துவங்கும். (prelude, interlude என்பவை என்ன என்று தெரிந்து கொள்ள இன்றைய இளைஞர்கள் இதுபோன்ற படங்களின் பாடல்களைக் கேட்பது நல்லது).
    தோட்டத்துப் பூவினில் இல்லாதது
    ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
    ஆடையில் ஆடுது வாடையில் வாடுது
    ஆனந்த வெள்ளத்தில் நீராடுது – அது எது?
    ஆடவர் கண்கள் காணாதது
    அது காலங்கள் மாறினும் மாறாதது
    காதலன் பெண்ணிடம் தேடுவது
    காதலி கண்களை மூடுவது – அது இது
    பாடலின் முதல் பாதியில் ஜெயலலிதாவுக்கு பூக்களால் ஆடை செய்திருப்பார்கள். மறுபாதியில் எம்ஜியார், ஜெயலலிதா இருவருக்கும் ஆடை அழகாக கண்ணைக் கவரும் வண்ணம் இருக்கும்.


    6. அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்

    அடிக்கடி தொலைக்காட்சியில் கேட்டு, பார்த்து ரசித்த பாடல். எல்லோருமே இப்பாடலை பாராட்டிப் பேசுவார்கள். ஆகவே நானும் இழுத்துக் கொண்டு போவது அவசியமற்றது. கப்பலில் எம்ஜியார், ஜெயலலிதா, நாகேஷ், நம்பியார் என அனைவரும் இடம்பெறும் பாடல் காட்சி. பாடலின் பல்லவியை முதலிலேயே கிடாரில் ‘prelude’ ஆக வாசித்துக் காட்டுவார்கள். இதன் இடையிசையில் வரும் ல..லா..லா.. ல..லா.. லா என்ற கோரஸ் ரொம்ப பிரசித்தம்.
    கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
    கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை
    அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
    அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை
    இன்றைக்கு இந்தப்பாடல்களை தொலைக்காட்சியில் வசதியாக கண்டு ரசிக்கிறோம். ஆனால், இது போன்ற வசதியற்ற அந்நாட்களில் இப்படத்தின் பாடல்களை தமிழர்களின் காதுகளுக்கு கொண்டு சென்று சேர்த்த பெருமை இலங்கை வானொலியைச் சேரும் என்பதை நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்.
    இப்படத்தில் நாகேஷின் நகைச்சுவை நம்மை வயிறு குலுங்க சிரிக்கவைக்கும். உதாரணத்துக்கு ஒன்று. பூங்கொடியின் தோழி தேன்மொழியை (மாதவி) நாகேஷ் ஏலத்தில் எடுத்து வருவார். அப்போது எம்ஜியார் “என்னப்பா, தேன்மொழியை நீ ஏலத்தில் எடுத்தியா?”


    நாகேஷ்: “அட நீங்க வேறே. இவள் வாயைப் பார்த்ததும்தான் திடலே காலியா போச்சே. பழகின தோஷத்துக்காக சும்மா பாத்துக்கிட்டு நின்னேன். என்னைப்பார்த்து ‘ஈ’ன்னு சிரிச்சா. ‘கொன்னுடுவேன்’ அப்படீன்னு ஒரு விரலைக் காட்டினேன். அந்த ஏலக்காரன், நான் ஒரு பவுனுக்கு இவளைக் கேட்கிறேனாக்கும்னு நினைச்சு இவளை என் தலையில் கட்டிட்டான்”.


    ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரையிடப்பட்டபோது சென்னை புரசைவாக்கம் மேகலா தியேட்டரில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருடன் பந்துலுவும் அமர்ந்து படத்தைப் பார்த்தார். படத்தின் முதல் நாள் முதல் காட்சியிலேயே தெரிந்து விட்டது, படம் மாபெரும் வெற்றி யென்பது. தமிழ்நாட்டின் பல ஊர்களில மாபெரும் வெற்றி பெற்று சாதனை புரிந்தது.
    எப்போது பார்த்தாலும் புத்தம் புதியதாகவும் பிரமிப்பூட்டும் படமாகவும் அமைந்த படம் தான் ஆயிரத்தில் ஒருவன்.

    இப்படத்தைப்பற்றிய கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டது பற்றி மிகவும் சந்தோஷம்.
    ‘
    Last edited by esvee; 19th November 2017 at 06:19 PM.

  10. #1559
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    15.11.1963 released PARISU

  11. #1560
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    17-11-2017 அன்று "தந்தி" தொலைக்காட்சியில் விரைவில் வெளி வரவிற்குகின்ற டிஜிட்டல் "எங்க வீட்டுப் பிள்ளை" பற்றிய தகவல்களும் , காட்சிகளும் செய்திகள் பகுதியில் ஒளி பரப்பானது...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •