Page 317 of 401 FirstFirst ... 217267307315316317318319327367 ... LastLast
Results 3,161 to 3,170 of 4001

Thread: Makkal thilagam mgr part 22

  1. #3161
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    ஆகிரா.

    அறிமுகம்:
    “வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
    மக்களின் மனதில் நிற்பவர் யார்?
    மாபெரும் வீரர் மானம் காத்தோர்
    சரித்திரம் தனிலே நிற்கின்றார்.”

    என்ற கவியரசர் கண்ணதாசனின் பாடலைப் பாடிக்கொண்டே அக்கால இளவரசு குதிரை வண்டியில் நண்பன் குலதெய்வம் ராஜகோபாலுடன் சவாரி செய்யும் “மன்னாதி மன்ன”னாக பவனி வந்த மக்கள் திலகம் அவர்களது நாட்டியத் திறமை அதே திரைப்படத்தில் நாட்டியப் பேரொளி பத்மினியுடன் அவர் போட்டி நடனம் புரிந்து வெல்வதாகப் படமெடுக்கப் பட்ட காட்சிகளில் தெளிவாயிற்று. நாட்டியத்தில் மட்டுமின்றி இசையிலும் அவர் திறமை மிக்கவர் என்பது அதே திரைப்படத்தில் அவர் பத்மினி ஆடும் நடனத்துக்குப் பத்துக்கும் மேற்பட்ட தாள வாத்தியக் கருவிகளைக் கொண்டு தாளம் போடுவதாக அமைந்த, டி.எம். சௌந்தரராஜன், எம்.எல். வசந்தகுமாரி குரல்களில் ஒலிக்கும் “ஆடாத மனமும் உண்டோ?” எனும் பாடல் காட்சியில் தெளிவானது. அதே திரைப் படத்திலும் அனேகமாக அவர் நடித்த அனைத்துத் திரைப் படங்களிலும் அவர் பங்கு பெற்ற சண்டைக் காட்சிகளைக் கண்டு பாராட்டாத ரசிகர் யாரும் இல்லை என்பது பிரசித்தம்.

    பண்டைய பாரத மன்னர்களைப் போலவே யானையேற்றம், குதிரை சவாரி, வாட்போர், மற்போர், கம்பு சுழற்றுதல் மற்றும் பல்வேறு சாகசக் கலைகளில் தலைசிறந்து விளங்கினார் எம்.ஜி.ஆர். அவரது திரைப்படம் வெளியாகிறதென்றால் அத்திரையரங்குகளில் கூட்டம் வரலாறு காணாத அளவுக்குக் காணப்படும். 1964-ஆம் ஆண்டில் வெளிவந்த அவரது “எங்க வீட்டுப் பிள்ளை” திரைப் படத்தைத் திரையிட்ட கிராமப்புற ஓலைக் கொட்டகைத் திரையரங்குகளில் டிக்கட் கவுண்டர்களின் முன்னால் போடப்பட்ட தடுப்புகள் தவிடுபொடியாயின. அதுவரையில் வேறு எந்தத் திரைப்படத்திற்கும் அப்படிப்பட்ட கூட்டத்தைக் கண்டதில்லை, அதன் பிறகும் கண்டதில்லை. எம்.ஜி.ஆர். என்பது ஒரு தாரக மந்திரமாகவே விளங்கிற்று. அவர் பெயரைக் கேட்டால் “மயங்காத மனம் யாவும் மயங்கும்” எனக் “காஞ்சித் தலைவன்” திரைப்படத்தில் பானுமதி பாடும் பாடல் போலவே அனைவரது மனங்களும் மயங்கும். அவரது திரைப்படங்களைக் கண்டு மகிழாத மக்கள் மிகவும் குறைவே.

    மக்களின் மனங்களில் மாறா இடம்:
    தனது குணச்சித்திர நடிப்பினாலும் பல்வேறு வகையான பாத்திரங்களை ஏற்று, அப்பாத்திரங்களாகவே தான் மாறி ரசிகர்களைத் தன்பால் ஈர்த்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த திரைப் படங்களைக் காட்டிலும் எம்.ஜி.ஆர். அவர்களது திரைப் படங்கள் அதிகப் பொழுது போக்கு அம்சங்களுடன் காண வருவோர் மனங்களைக் குளிர்விக்கும் தன்மை கொண்டவையாய் இருந்ததுடன் வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் கடைபிடிக்க வேண்டிய சீரிய அறிவுரைகள் நிறைந்திருந்தமையே எம்.ஜி.ஆர். மக்கள் திலகமாகி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்ததன் அடிப்படை ரகசியமாகும்.

    “கொடுக்குற காலம் நெருங்குவதால்
    இனி எடுக்குற அவசியம் இருக்காது
    இருக்குறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
    பதுக்குற வேலையும் இருக்காது
    ஒதுக்குற வேலையும் இருக்காது
    உழைக்குற நோக்கம் உறுதியாயிட்டாக்
    கெடுக்குற நோக்கம் வளராது
    மனம் கீழும் மேலும் புரளாது.”

    எனக் கவிஞர் பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் எழுதிய,
    “திருடாதே பாப்பா திருடாதே,
    வறுமை நிலைக்கு பயந்து விடாதே,
    திறமை இருக்கு மறந்து விடாதே”
    எனும் “திருடாதே” படப் பாடலைக் கேட்டுத் திருந்தியவர்கள் ஏராளம்.

    திரைப்படங்களில் நடித்ததுடன் நில்லாது மக்கள் திலகம் சமூக சேவையிலும் அதிக ஈடுபாடு கொண்டு பல்வேறு காரணங்களால் அவதியுற்ற மக்களின் துயர் நீங்க அரும்பாடு பட்டார். கை ரிக்ஷாக்கள் மற்றும் சைக்கிள் ரிக்ஷாக்கள் ஓட்டிப் பிழைப்போர், மீனவர்கள், ஏழைத் தொழிலாளிகள், விவசாயிகள் முதலானோர் வாழும் வாழ்க்கையினை விளக்கும் பல திரைப்படங்களைத் தந்ததோடு அவர்களது குறைகள் களைய நிஜ வாழ்வில் பெரும் பொருளுதவியும், வேறு பலவித உதவிகளையும் அவர் செய்தார்.

    “கடல்நீர் நடுவே பயணம் போனால்
    குடிநீர் தருபவர் யாரோ?
    தனியாய் வருவோர் துணிவைத் தவிர
    துணையாய் வருபவர் யாரோ?
    ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
    ஒவ்வொரு நாளும் துயரம்;
    ஒரு ஜாண் வயிறை வளர்ப்பவர்
    உயிரை ஊரார் நினைப்பது சுலபம்”
    எனும் உயிர்த்துடிப்பு மிக்க வரிகளுடன் கவிஞர் வாலி எழுதிய

    “தரை மேல் பிறக்க வைத்தாய்
    எங்களைத் தண்ணீரில் திளைக்க வைத்தாய்,
    கரைமேல் இருக்க வைத்தாய்
    பெண்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தாய்”
    எனும் மீனவர்கள் படும் துயரத்தை விளக்கும் பாடலைப் “படகோட்டி” திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். பாடி நடிக்கக்கண்டு கண்ணீர் உகுக்காதவர் வெகு சிலரே.

    “என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?
    ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?
    ஒழுங்காய்ப் பாடுபடு வயக்காட்டில்,
    உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்”
    எனும் வாலி பாடலை டி.எம்.எஸ். குரலில் பாடி கே.ஆர். விஜயாவுடன் அவர் நடித்த “விவசாயி” படம் விவசாயத்தின் பெருமையைப் பறைசாற்றிற்று. பேருந்து நடத்துனராகப் பணி செய்கையில் தன் தாய் வழியில் நிற்கக் கண்டும் அதிகம் பேரை ஏற்றக்கூடாது எனும் சட்டத்தை மதித்துத் தாய்க்கும் பேருந்தில் இடமளிக்காமல் நடத்தும் காட்சியும், பின் அதே பேருந்துக் கம்பெனியில் அதிகாரி பதவி பெற்று அதன் பின் முதலாளியின் மகள் கே.ஆர். விஜயாவின் காதலை ஏற்க மறுத்ததால் வேலையிழந்து கைவண்டி இழுத்துக் கொண்டு அவர் பாடுவதாக, “தொழிலாளி” படத்தில் அமைந்த
    “ஆண்டவன் உலகத்தின் முதலாளி,
    அவனுக்கு நானொரு தொழிலாளி,
    அன்னை உலகின் மடியின் மேலே
    அனைவரும் எனது கூட்டாளி”
    என டி.எம்.எஸ். குரலில் அமைந்த பாடல் தொழிலாளியின் பெருமையை இனிமையான இசையுடன் விளக்குவதாகும்.

    சென்னையை அடுத்த பரங்கிமலை எம்.ஜி.ஆர். அவர்கள் பல்லாண்டுகள் சட்டமன்ற உறுப்பினராய் விளங்கிய தொகுதியாகும். அங்கே எம்.ஜி.ஆர். தோட்டம் இன்னும் சிறப்புடன் விளங்குகிறது. அங்கே காது கேளாத குழந்தைகள் பலர் இலவசமாய்க் கல்வி பெற ஒரு அருமையான பள்ளிக் கூடம் எம்.ஜி.ஆர். அருளால் துவங்கப் பட்டு இன்றும் சீரும் சிறப்புமாய் நடந்து வருகிறது.

    எல்லா அரசுப் பள்ளிகளிலும் பயிலும் மாணவ மாணவியருக்கு தினந்தோறும் மதிய உணவு வழங்கும் நோக்கில் பெருந்தலைவர் காமராஜர் துவக்கி வைத்துத் திறம்பட நடத்தி வந்த மதிய உணவுத் திட்டத்துடன் பள்ளிகளில் மட்டுமின்றி வேறு பல மையங்களிலும் ஏழைக் குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்கவும், அம்மையங்களில் அவர்களுக்குப் பாடங்கள் சொல்லித் தரவும் ஏற்ற வகையில் சத்துணவுத் திட்டம் கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். தான் தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கையில்.

    எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம்:
    அகத்திய முனிவர் காவேரி நதியையே தன் சிறு கமண்டலத்தில் அடைத்தாரம். அது போன்றே எம்.ஜி.ஆர். குறித்த கட்டுரையை 1500 வார்த்தைகளுக்குள் அடக்குவதும் ஆகும். ஏனெனில், அவரது தனிமனித சிறப்பு குறித்தும் அவரது படங்கள் குறித்தும் எழுதத் துவங்கினால் மகாபாரதத்தையும் விட அதிகமான பக்கங்கள் நிறையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. எனினும் என் மனதில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய விஷயங்களை மட்டும் முன்வைக்கிறேன்.

    வி.என். ஜானகி, பானுமதி, சரோஜா தேவி, சாவித்திரி, மாலினி, கே.ஆர். விஜயா, ரத்னா, ஜெயலலிதா, மஞ்சுளா உட்படப் பல கதாநாயகிகளுடனும் சேர்ந்து அவர் நடித்த திரைப்படங்கள் அன்றும் இன்றும் என்றும் பார்த்து இன்புறத் தக்க இனிய காவியங்களாகும். திரைப்படங்களில் கண்கவரும் பாடல் காட்சிகளும், செட்டிங்குகளும், சந்திரபாபு, எம்.ஆர். ராதா, டி.எஸ். பாலையா, நாகேஷ், மனோரமா, குமாரி சச்சு, ஐசரி வேலன் உட்படப் பல நகைச்சுவை நடிகர்கள் இடம்பெற்ற இனிய நகைச்சுவைக் காட்சிகளும் குறைவின்றி நிறைந்திருந்தன. கவிஞர் கண்ணதாசன், பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம், மருதகாசி, புலமைப் பித்தன், தஞ்சை ராமையா தாஸ், வாலி உட்படப் பல கவிஞர்கள் இயற்றிய அரிய பொருட்செறிவு மிக்க எம்.ஜி.ஆர். படப் பாடல்கள் திரையிசைத் திலகம் கே.வி. மகாதேவன் மற்றும் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் உட்படப் பல திறமைமிக்க இசையமைப்பாளர்களது இசையில் என்றும் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கும் தன்மையவை. ஏ.எம். ராஜா, பி.பி. ஸ்ரீனிவாஸ், டி.எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், கே.ஜே. ஜேசுதாஸ் உட்படப் பல பிரபலப் பாடகர்கள் என்.ஜி.ஆருக்குக் குரல் கொடுத்துப் பாடியுள்ளனர்.

    எம்.ஜி.ஆர். படங்களில் பி.எஸ். வீரப்பா, ஈ.ஆர். சகாதேவன், டி.எஸ். பாலையா, சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர், எம்.ஆர். ராதா, என்.என். நம்பியார், எஸ்.ஏ. அசோகன், ஆர்.எஸ். மனோகர் முதலானோர் முக்கிய வில்லன் பாத்திரங்களிலும் பிற குணச்சித்திரப் பாத்திரங்களிலும் தவறாமல் பங்கு பெற்றனர். நடிப்புத் திறமையில் புகழ்பெற்று விளங்கிய எந்த நடிகரையும் எம்.ஜி.ஆர். தன் படத்தில் பங்கேற்க வைப்பதில் மிக முனைப்புடன் இருந்தார். சிவகுமார், டி.கே. பகவதி, எஸ்.வி, சஹஸ்ரநாமம், எம்.வி. ராஜம்மா, பண்டரி பாய் முதலானோர் அவரது பல படங்களில் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். சின்னப்பா தேவர் எம்.ஜி,ஆர். அவர்ககளை வைத்துப் பல திரைப்படங்கள் தயாரித்துள்ளார்.

    மாறுவேட மாமன்னன்:
    எம்.ஜி.ஆர். மாறுவேடம் புனைந்து நடிப்பதில் தனித்திறமை வாய்ந்தவர். “குலேபகாவலி” திரைப்படத்தில் கிழவர் வேடம் பூண்டு டி.ஆர். ராஜகுமாரியும் தங்கவேலுவும் சேர்ந்து நடத்தும் ஏமாற்று பகடை விளையாட்டை வெளிச்சமாக்கும் காட்சிகளும், “பாக்தாத் திருடன்” படத்தில் அருவருப்பான கிழவர் வேடம் பூண்டு அடிமையாக விற்கப்படும் கதாநாயகி வைஜயந்திமாலாவை விலை கொடுத்து வாங்கி அவள் இரவில் திருட்டுத் தனமாகத் தன்னிடமிருந்து தப்ப முயல்கையில் பிடித்து, “யாருக்கு டிமிக்கி கொடுக்கப் பாக்குறே? எங்கே ஓடுறே? சொல்லு” எனும் பாடலைப் பாடும் காட்சிகளும், “மஹாதேவி” திரைப்படத்தில் குருடனாகத் தாயத்து விற்றுக்கொண்டே, “தாயத்து அம்மா தாயத்து” என்று பாடிச் சென்று மக்களூக்குத் தாயத்துகள் மூலம் ரகசிய செய்தி சொல்லும் காட்சிகளும், “படகோட்டி” படத்தில் வளையல் காரராக வேடம் பூண்டு எதிரிகளால் சிறை வைக்கப்பட்டிருக்கும் நாயகி சரோஜா தேவியை சந்தித்து, “கல்யாணப் பொண்ணு, கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல்” என்று பாடி ஆடி தைரியமூட்டும் காட்சிகளும் “குமரிக்கோட்டம்” திரைப்படத்தில் மொட்டைத் தலையுடன் நெற்றி நிறையத் திருநீற்றுடன் அவர் செய்யும் கதாகாலக்ஷேபமும், “இதயவீணை” திரைப்படத்தில் சாமியார் வேடம் பூண்டு தன் சகோதரியின் திருமணம் நிகழும் மண்டபத்தில் வாயிலில் நின்று, “திருநிறைச் செல்வி, மங்கையர்க்கரசி திருமணம் கொண்டாள் இனிதாக” என்று பாடி மணமக்களை ஆசீர்வதிக்கும் காட்சிகளும் எம்.ஜி.ஆர். அவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்துகின்றன.

    புரட்சித் தலைவர்:
    “எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” எனும் பாடலை “மலைக்கள்ளன்” படத்தில் பாடி நடித்த எம்.ஜி.ஆர். புரட்சி நடிகர் என்று கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் புகழப் பட்டார் முன்பு. அதே பாடலில் வரும்,
    “தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்,
    கல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்,
    கருத்தாகப் பல தொழில் பயிலுவோம்,
    ஊரில் கஞ்சிக்கில்லை எனும்
    கொடுமையைப் போக்குவோம்”
    எனும் வரிகளை மெய்ப்பிக்கும் வகையில் தான் முதல்வரான பின்பு செயல்பட்டவர். புரட்சி நடிகர் புரட்சித் தலைவரான வரலாறு தமிழ்நாட்டு அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்பம். இங்கே அரசியல் வேண்டாம் என்பதால் எழுதவில்லை.

    பொன்மனச் செம்மல்:
    திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு அவரது சேவை மனப்பான்மையைப் பாராட்டிப் “பொன்மனச் செம்மல்” என்று பட்டம் சூட்டினார். அப்பெயர் இன்றளவும் நீடித்து நிற்கிறது, இனி என்றும் நிலைத்து நிற்கும். “பொன்மனச் செம்மலைப் புண்பட வைத்தது யாரோ?” எனும் தஞ்சை ராமையா தாஸ் அவர்கள் இயற்றிய பாடல் வாணி ஜெயராம் பாட, எம்.ஜி.ஆர்., லதா ஆகியோர் நடிக்க இடம்பெற்ற படம் “சிரித்து வாழ வேண்டும்”.

    எம்.ஜி.ஆர். ரின் முதல் படம் “சதி லீலாவதி”. அதன் பின்னர் அவர் “ராஜகுமாரி” எனும் படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதன் பின்னர் அவரது இறுதிப் படமான, “மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்” வரை கதாநாயகனாகவே நடித்து வந்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் அவர் இணைந்து நடித்த ஓரே திரைப்படம், “கூண்டுக் கிளி”. அதன் பின்னர் சிவாஜிக்குப் போட்டியாகத் தனியாக நடித்து வந்தாலும் தான் முதல்வரான பின்னர் கலைத்துறை தொடர்பான எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த போதும் சிவாஜியை அழைத்து மேடையில் அமர்த்தி உரிய மரியாதை செலுத்தத் தவறியதில்லை.

    அடிமைப்பெண் திரைப்படத்தில் முதல் முதலாக எஸ்.பி. பாலசுப்பிரமணியம் எம்.ஜி.ஆர். அவர்களால் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப் பட்டார். பாடல் பதிவு செய்யும் நாளில் எஸ்.பி.பி. உடல்நலக் குறைவால் அவதிப்பட்டதால் பதிவு செய்யும் நாளைத் தள்ளி வைத்தார் எம்.ஜி.ஆர். பின்னர் பதிவு செய்யப்பட்டு ரசிகர்கள் மனங்களைக் கொள்ளை கொண்ட பாடலே,

    “ஆயிரம் நிலவே வா,
    ஓராயிரம் நிலவே வா,
    இதழோரம் சுவை தேட,
    புதுப் பாடல் விழி பாடப் பாட”
    எனும் பாடல். அப்பாடலுடன் தன் தமிழ்த் திரையிசைப் பயணத்தைத் துவங்கிய எஸ்.பி.பி. இன்று சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறி நிற்கிறார்.

    தன்னைப் போலப் பிறரை எண்ணும் தன்மை கொண்ட பொன்மனச்செம்மலன்றோ எம்.ஜி.ஆர்!

    “ஒளிவிளக்கு” திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். உயிருக்குப் போராடும் நிலையில் படுத்திருக்க, அவரது உயிரை மீட்டுத்தரக் கோரி சவுகார் ஜானகி அவர்கள் முருகனிடம் வேண்டுவதாக அமைந்த பி. சுசீலாவின் குரலில் ஒலித்த,

    “ஆண்டவனே, உன் பாதங்களை நான்
    கண்ணீரில் நீராட்டினேன்,
    இந்த ஓருயிரை நீ வாழ வைக்க இன்று
    உன்னிடம் கையேந்தினேன் முருகையா!”
    எனும் பாடல் பிற்காலத்தில் 1984ஆம் ஆண்டு சிறுநீரகக் கோளாறினால் அவதியுற்று சென்னை அப்பொலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கையில் தமிழகமெங்கும் எல்லா ஊர்களிலும் ஆட்டோ ரிக்ஷாக்களிலும், வேறு பல இடங்களிலும் ஒலிபெருக்கிகள் வாயிலாகத் தொடர்ந்து ஒலிபரப்பப் பட்டது. எம்.ஜி.ஆர். பிழைத்து வர வேண்டும் என வேண்டாத உள்ளங்கள் அரிதாக இருந்தது அந்நாளில்.

    தமிழ் மக்களின் பிரார்த்தனை பலித்தது. எம்.ஜி.ஆர். அவர்களை சகல வசதிகளுடன் ஒரு மருத்துவ மனையாகவே மாற்றப்பட்ட ஆகாய விமானத்தில் சென்னையிலிருந்து அமெரிக்காவில் இருக்கும் ப்ரூக்லின் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்ல அந்நாளில் பாரதப் பிரதமராக இருந்த திருமதி இந்திரா காந்தியவர்கள் ஏற்பாடு செய்தார். ப்ரூக்லின் மருத்துவமனையில் தன் அண்ணன் சக்கரபாணி அவர்களின் மகள் தானமாகக் கொடுத்த சிறுநீரகம் பொறுத்தப்பட்டு உடல்நலம் தேறிப் புத்துயிர் பெற்றார் எம்.ஜி.ஆர். ப்ரூக்லின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காலத்திலேயே தமிழ்நாட்டு சட்டசபைத் தேர்தலில் போட்டியிற்று அபார வெற்றியும் பெற்றுத் திரும்பி வந்து முதல்வர் பதவியில் தன் இறுதி மூச்சுள்ள வரை தொடர்ந்தார்.

    எம்.ஜி.ஆர். எனும் ஒளிவிளக்கு இவ்வுலகை விட்டு மறைந்த பின்னர் கழுதை தேய்ந்து கட்டெறும்பானாற் போலத் தமிழகம் மீண்டும் இருளில் மூழ்கி மக்கள் சொல்லுணாத் துயருற்று விலைவாசி ஏற்றத்தாலும், சுற்றுச்சூழல் மாசுபாடு பெருகுவதாலும், தண்ணீர் தரும் ஆறுகள் சாக்கடைகளாகி ஓட, சாராய ஆறு கட்டுக்கடங்காமல் கரைபுரண்டு ஓடுவதாலும் இன்னும் பல முறைகேடுகளாலும் அவதியுறும் நிலை வந்துற்றது. அவர் அன்று பாடி நடித்த, “எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?” எனும் பாடலை மீண்டும் பாடி நல்ல காலம் வருமா என ஏங்கும் உள்ளங்கள் விடை தெரியாமல் கலங்கி மடிகின்றன.

    இன்னும் ஒரு பொன்மனச் செம்மல் தமிழ்நாட்டைக் காக்க வர வேண்டும். நம் துன்பங்கள் தீர வேண்டும். அதற்கு மக்கள் திலகத்தின் உயிரைக் காத்த முருகன் அருள்புரிய வேண்டும்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3162
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    சி. எஸ். குமார்.





    உலகத் திரைப்பட வரலாற்றில் மாபெரும் புரட்சி செய்து என்றென்றும் கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களில் ஒருவர் வாழ்கிறார் என்றால் உலக வரலாற்றில் அவர் மக்கள் திலகம் ஒருவரே. இயற்கையான நடிப்பால் மக்கள் மனதை வென்றவர் .ஆஸ்கர் விருதை விட, மக்கள் தந்த விருது ”மக்கள் திலகம் எம்ஜிஆர் ”- இது ஒன்று போதுமே.

    எம்ஜிஆர் படங்களையும், அவரது ரசிகர்களையும் ஒரு கால கட்டத்தில் தரமின்றி சில பத்திரிகைகள் விமர்சனம் செய்தார்கள். அடிமட்ட மக்கள் மட்டும் எம்ஜிஆர் ரசிகர்கள் என்று ஏளனமாக பார்த்தார்கள். மக்கள் திலகம் எம்ஜிஆர் இவர்களைப் பற்றி கவலை படாமல் தன்னுடைய தொழிலில், அரசியலில், பொது வாழ்வில் தொடர்ந்து பல அற்புதங்களை நிகழ்த்தி மாபெரும் வெற்றிகளைக் குவித்தார். வெற்றி மேல் வெற்றி பெற்று எல்லா தரப்பு மக்களின் ஆதரவை பெற்றார்.

    1967 முதல் 1984 வரை நடந்த பல தேர்தல்களில் எம்ஜிஆரின் பிரச்சாரம் – உழைப்பு – திரைப்பட தாக்கம் மறக்க முடியாதது . அண்ணாவை ஆட்சியில் அமர்த்தினார். பின்னர் கருணாநிதியை ஆட்சியில் அமர வைத்தார் . 1977ல் தானே முதல்வரானார். இந்த விந்தை உலகில் யாருக்கு சாத்தியம்? அவருக்குப் பிறகும் அவருடைய பெயர் – இரட்டை இலை சின்னம் மூலம் மூன்று முறை எம்ஜிஆர் ஆட்சி அமைத்தது – மக்கள் திலகம் எம்ஜிஆர் வலிமை அன்றோ ?

    மக்கள் திலகம் எம்ஜிஆர் திரைப்படத் துறையை விட்டு விலகி 38 ஆண்டுகள் கடந்த பின்னாலும் இன்றும் அவருடைய எல்லா படங்களும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. எம்ஜிஆர் புகழ் பாடும் பல புத்தகங்கள் வந்த வண்ணம் உள்ளது . எம்ஜிஆர் சிறப்பு நிகழ்ச்சிகள் நாடெங்கும் நடை பெற்று வருகிறது. மக்கள் திலகம் ஒரு சகாப்தம். சாதனையின் சிகரம் -திரை உலகின் சரித்திரம்.

  4. #3163
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    சக்தி சக்திதாசன்.

    “மக்கள் திலகம்” என்றதுமே ஏதோ இனம்புரியாப் பரவசம் என் மனதில் ஊற்றெடுக்கிறது. அந்த ஊற்றின் மூலத்தைத் தேடிக் கொண்டே சென்றேன் அது என்னை எனது இளமைக்காலத்திற்கு அழைத்துச் சென்றது .

    ஆமாம், எம்.ஜி.ஆர் எனும் மூன்றெழுத்து, “சக்தி” எனும் இந்த மூன்றெழுத்துடன் பின்னிப்பிணைந்தது இன்று நேற்றல்ல.

    அப்படி என்னதான் இந்த மனிதனுடன் என்னைப் பிணைத்தது?

    மிக ஆழமான கேள்வி? ஐம்பதுகளின் இறுதிப் பகுதியில் காலடி வைத்திருக்கும் இந்நிலையில் நான் என்னைக் கேட்கிறேன்.

    பதில் மிகவும் விசித்திரமானது.

    “மனிதனாக வாழந்திட வேண்டும் மனதில் வையடா, தம்பி மனதில் வையடா !” என்று மக்கள் திலகத்தின் படத்தில் வரும் பாடலொன்றில் வரிகள் உண்டு.

    உலகில் நன்னெறி கொண்ட மனிதனாக, மக்கள் மனங்களில் கோலோச்சும் மன்னனாக நடைபோட வேண்டுமென்றால் மக்கள் திலகத்தின் படங்களில் அவர் ஏற்கும் பாத்திரங்களின் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் எனும் உன்னத கருத்தே இம்மாமனிதனுடன் என்னை இணைத்தது என்பதே உண்மையாகும்.

    யார் இவர் ? ஒரு சாதாரண நடிகர் தானே! இவருக்கென்ன இத்தனை விளம்பரம் என்று எண்ணுபவர்கள் இருக்கலாம்.

    இவரின் படத்தில் வரும் பாத்திரங்களில் மயங்கி விட்டாய் என்று சொல்பவர்கள் கூட இருக்கலாம் .

    சரி அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.

    ஆனால் இம்மானிதர் மக்களுடைய மனங்களில் பிடித்திருக்கும் இடம் காலத்தால் அழிக்கப்பட முடியாத ஒன்றாக இருப்பதற்குக் காரணம் என்ன என்றாவது நாம் எண்ணிப்பார்க்க வேண்டாமா ?

    மக்கள் திலகம் எனும் இம்மாமனிதருடன் பழகும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால், இவருடன் பழகிய பலருடன் பழகும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

    அவர்களில் முக்கியமானவர் என் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் அமரர் கவிஞர் வாலி அவர்கள்.

    அவரைப் பலமுறை சந்தித்து அளவளாவும் பாக்கியம் பெற்றிருந்தேன் . எமது ஒவ்வொருமுறைச் சந்திப்பின் போதும் அவர் எனக்கு மக்கள் திலகத்தின் உயரிய பண்புகளில் ஏதாவது ஒன்றைப் பற்றி உன்னதமாக விளக்குவார்.

    திரையுலகைச் சேர்ந்தவர்கள் யாராயிருந்தாலும் அவர்களைத் தனது குடும்பத்தில் ஒருவராக மதித்து அவர்களது தேவை என்னவோ அதைத் தனது தேவையாகக் கருதி நிறைவேற்றும் அவரது இளகிய மனம் ஒன்றே அவருக்கு “பொன்மனச் செம்மல்” எனும் பட்டத்தை பெற்றுக்கொடுக்கும் வல்லமை பெற்றது.

    எனது மானசீகக் குரு கவியரசர் கணவிதாசன் அவர்களை தமிழக ஆஸ்தானக் கவிஞராக்கி மகிழ்ந்த அவரது உள்ளத்தை என்னவென்று போற்றுவது.

    கவியரசரது விழுதுகளில் ஒன்றான கண்மணி சுப்பு அவர்களின் சந்திப்பின் போது
    தனது தந்தையின் வேண்டுகோளை சிரமேல் ஏற்று கவியரசரின் மறைவிற்கு பின்னர் அதைக் கச்சிதமாக நிறைவேற்றிக் கொடுத்த பண்பினை மிக அழகாக எடுத்தியம்பியபோது மக்கள் திலகம் இன்றும் மக்கள் மனங்களில் நிலைத்திருக்கும் மர்மம் புரிகிறது.

    நான் படித்த ஒரு சுவையான சம்பவம் எனக்கு இப்போது நினைவிற்கு வருகிறது .
    பணத்தோட்டம் எனும் படத்திற்காக டி.எம்.எஸ் உம் , பி.சுசீலா வும் பாடிய “பேசுவது கிளியா ?“ எனும் பாடலில் ஒரு பகுதி

    பாடுவது கவியா -இல்லை
    பாரி வள்ளல் மகனா
    சேரனுக்கு உறவா
    செந்தமிழர் நிலவா …
    என்று வரும் .

    இந்தப் பாடல் எழுதப்பட்ட சமயம் மக்கள் திலகத்தை அவரது தோட்டத்தில் சந்தித்த ஒரு தயாரிப்பாளரிடம் இப்பாடலைக் கேட்டு அவரது கருத்தைக் கூறும்படி மக்கள் திலகம் கேட்டாராம் .

    பாடலைக் கேட்ட அத்தயாரிப்பாளர் உங்களது சரித்திரத்தையே இருவரிகளில் கவியரசர் கண்ணதாசனை விட வேறுயாரால் கூற முடியும் என்று சொன்னராம்.

    அதற்கு மக்கள் திலகம் அது எப்படி ? என்று கேட்க,

    சேரனுக்கு உறவா
    செந்தமிழர் நிலவா

    எனும் இந்த இருவரிகள் உங்கள் சரித்திரத்தைத் தானே கூறுகிறது என்று கூற மக்கள் திலகம் வியப்பில் ஆழ்ந்து கவியரசரின் திறமையை ரசித்தாராம் .

    எனக்கு அப்போது 9 வயது என்று நினைக்கிறேன். எனது தாய்மண்ணாம் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் இருக்கிறேன்.

    “எங்க வீட்டுப் பிள்ளை” யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படும்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், அபிநய சரஸ்வதி சரோஜாதேவியும் யாழுக்கு விஜயம் செய்திருந்தார்கள்.

    திறந்தததொரு ஜீப் வண்டியில் பலாலி விமான நிலயத்திலிருந்து பலாலி வீதி வழியாக யாழ் நகருக்கு ஊர்கோலமாக அழைத்து வரப்பட்டார்கள்.

    மிகவும் பரபரப்பாக இருந்த என்னை அப்போது விடுமுறையில் வந்திருந்த என் தந்தை எதற்காக இந்தப் பரபரப்பு என்றதும் மக்கள் திலகத்தைப் பார்க்க வேண்டும் என்ற எனது விருப்பத்தைக் கேட்டதும் சைக்கிளில் என்னை உட்கார்த்தி யாழ் கந்தர்மடத்தில் பலாலி வீதிச் சந்தியில் எம்.ஜி.ஆரையும் , கன்னடத்துப் பைங்கிளியையும் நேராகப் பார்க்கும் வாய்ப்பை என் அன்புத்தந்தை ஏற்படுத்திக் கொடுத்ததை எப்படி என்னால் மறக்க முடியும்?

    அப்பப்பா ! பொன் வண்ணம் என்பார்களே அப்படியான வதனம், அன்பான புன்னகை அவரைப் பற்றி அவ்வயதில் நான் கொண்டிருந்த கற்பனையை அக்காட்சி எவ்விதத்திலும் சிதறடிக்கவில்லை .

    பின்பு எனது பதினாறவது வயதில் எங்க வீட்டுப் பிள்ளை மீண்டும் யாழ் வெலிங்டன் தியேட்டரில் திரையிடப்பட்ட போது டிக்கெட் கிடைக்காமல் மதில் வழியாகப் பாய முற்பட்டு தியேட்டர் ஊழியர் என் சட்டையைப் பிடித்திழுக்க முதுகுப் பக்கச் சட்டை கிழிந்து சட்டை அவர் கையிலும் நான் உள்ளேயும் விழுந்த அனுபவம் இனிக்கிறது.

    முதுகுப் பக்கச் சட்டை இல்லாமலே அத்திரைப்படத்தை என் நண்பர்களுடன் பார்த்து மகிழ்ந்தது மக்கள் திலத்தின் ஞாபகத்திற்கு ஒரு மகுடமாய் நெஞ்சில் திகழ்கிறது .

    மக்கள் திலகத்தின் திரைப்படப் பாடல்கள் எப்போதும் மனதில் அளவிடமுடியாத உற்சாகத்தைக் கொடுக்கும்.

    இப்போது கூட லண்டனில் எப்போது எனக்கு நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர் ஹிட்ஸ் பார்ப்பதே என் மனதிற்கு ஆனந்தத்தை அளிக்கும்.

    நீ ஆண்டது
    அரியணைக் கதிரையல்ல
    மக்களின்
    அன்பு மனங்களென்பேன்

    காலன் உனைக்
    கவர்ந்து சென்று
    காலங்கள் பல
    கடந்தாலும்
    காலத்தால் அழியாத
    கலங்கரை விளக்காய்
    அரசியல் உலகிற்கு
    ஆணிவேராகினாய்

    மன்னாதி மன்னனாய்
    உலகம் சுறும் வாலிபனாய்
    உழைக்கும் கரங்களோடு
    பட்டிக்காட்டு பொன்னையா
    மாட்டுக்கார வேலனாக
    மக்கள் மனங்களை உழுதாயே !

    மதுரை வீரனாய் நீயோ
    நீதிக்குத் தலைவணங்கும்
    எங்கள் வீட்டுப் பிள்ளையென
    தர்மம் தலைகாக்கும் என
    கலங்கரை விளக்கானாய்

    பாசத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாய்
    தனிப்பிறவி நீ என்வாழ்வில்
    ஒளிவிளக்காய் பிரகாசித்தாய்
    புதுமைப் பித்தன் நீ
    தாய்சொல்லைத் தட்டாமல்
    தாய்க்குப்பின் தாரம் என
    நல்லவன் வாழ்வான் என்றே
    ஆயிரத்தில் ஒருவனானாய்

    தமிழர்களின் காவல்காரன்
    காத்திருந்தாய் விவசாயிகளை
    ஒருதாய் மக்கள் நாமென்று
    சங்கே முழங்கென்றாய்
    ஊருக்கு உழைப்பவனே
    நம்நாடு என் இதயவீணை
    பாடிய உன் உள்ளமே
    உன் மக்கள் எப்போதும்
    குடியிருந்த கோயில்

  5. #3164
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    சித்தார் கோட்டை நூர் மணாளன்.



    பிறப்பும் சிறப்பும்:
    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி…
    மக்களின் மனதில் நிற்பவர் யார்…?
    என்ற இந்த வினாவை தமிழறிந்த மக்களிடம் வினவினால் எம்.ஜி.ஆர். தான் என பட்டென பதில் வரும்!

    இந்த இருபதாம் நூற்றாண்டில் திரையுலகிலும் அரசியலிலும் விடி வெள்ளியாக ஒளிர்ந்து, தொட்டதெல்லாம் துலங்க கொடிகட்டிப் பறந்து நட்புக்கரம் நீட்டி தன்னை நேசித்த நெஞ்சங்களை அரவணைத்த அற்புதமான கரத்திற்கு சொந்தக்காரரே எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்துக் காரர்தான்.

    மாநிலத்தில் மானிடராய் பிறந்திட என்ன தவம் செய்தால் நலம் என்றால்… மறைந்த பின்னும் மக்களின் மனதை விட்டு நீங்காது இடம்பிடிக்கும் அளவுக்கு நன்மை செய்தலாகும் என்று வாழ்ந்து காட்டியவர்!!

    வரலாற்று வரிகளில் மறைந்தும் மக்கள் மனதில் நிறைந்தும் வாழுகின்ற அறிஞர் கூட்டம் ஏராளம்! அவர்களது படைப்புகளும் அசாதாரணமான பங்களிப்புகளும்தான் மக்களின் மனங்களில் விழுந்த விதையாகிப் பின் முளைத்து தழைத்து விருட்சமாக எழுந்து பரந்து நிற்கிறது!

    இளமைப் பருவம்:
    வாழ்க்கைத் தளத்தில் முறையாக நடந்து நெறியோடு வாழத் தகுந்த பாதை எதுவென தேடி ஓடிய எம்.ஜி.ஆருக்கு நாடகக் கூடாரம் ஒளி விளக்குடன் மிளிரி அழைப்புக் கொடுத்து அரவணைத்தது!

    நான் ஏன் பிறந்தேன்? என தனக்குத் தானே வெந்து வேதனை வினாவினை தன்னுள் எழுப்பியவாறு வாழும் மக்களிடையே … மக்களின் நெஞ்சங்களில் மஞ்சம் அமைத்து வாழும் அளவுக்கு, மன்னாதி மன்னனாகவும், நாடோடி மன்னனாகவும், காவல்காரனாகவும், அன்னமிட்டகையாகவும், குடியிருந்த கோவிலாகவும், எண்ணை விளக்குகளின் ஒளியில் வாழ்க்கை துவங்கிய எம்.ஜி.ஆர். கண்ணைக்கவரும் வண்ணமயமான மின்னொளியில் மிளிரும் காலம்வரை மண்ணில் வைரமாகவும் விண்ணில் கண் சிமிட்டும் நட்ச்சத்திரமாகவும் ஜொளிக்கலானார்.

    ஆரம்பக் காலங்களில் சில அணாக்களை சம்பளமாகப் பெற்று நடிப்புத்துறையில் நுழைந்தார். தனது சுய கட்டுப்பாடு, தன்னம்பிக்கை, தளாரத முயற்சி, இடைவிடாப் பயிற்சி, கண்ணியம் இவைகளுடன் கடமையைச் செய்ததால் பல கோடி பணம் ஈட்டி உயரும் உன்னத நிலையை அடைந்தார்.

    நட்ட மரமே பலனளிக்கும்… என்ற உண்மையை உணர்ந்தவர். தானும் வாழ்ந்து பிறரையும் வாழ வைக்க வேண்டும் என எண்ணினார். அதனால் ஏழை எளிய மக்கள் மீது அக்கறை காட்டினார். தன்னால் ஆன உதவிகளைச் செய்து ஏழை மக்களை அரவணைக்கலானார். அதன் பயனாய் சொந்த வாழ்வு பந்த வாழ்வாக மலர்ந்தது.

    பருவ வயது:
    புகழடைய வேண்டுமென்ற அவாவில் மக்களெல்லாம் எதையெதையோ தேடி ஓடும் காலத்தில் எம்.ஜி.ஆரைத் தேடி புகழ் வந்தது. நாடக வாழ்வு முடிவுற திரையுலக வாழ்வுத் தொடரலானது.

    மக்களின் யதார்த்தங்களை மையப்படுத்தி எழுதப்பட்ட வசனங்களுக்கு ஏற்ப திரையுலகில் காட்சியளித்த எம்.ஜி.ஆரின் நடிப்பு அவர்பால் மக்கள் மட்டுமல்ல… பற்பல கதாசிரிய விற்பன்னர்களும் அவரது தொடர்புக்காக காத்திருந்தனர். கழகங்கள் பலவும் அவரின் ஆதரவுக்காக அணிவகுத்தது. ஆரம்ப காலங்களில் காந்தியக் கொள்கையால் ஈர்க்கப்பட்டவர். காங்கிரஸ்காரராகவே தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். கதர் ஆடையுடனும் கழுத்தில் துளசி மாலையுடனும் வலம் வந்த அவரை அறிஞர் அண்ணாவின் அழைப்பும், அரவணைப்பும் திரையுலகில் முன்னணி நட்ச்சத்திரமாக ஜொலிக்க வைத்தது. அது மட்டுமல்ல… அவருடைய இளமைக் கால கனவுகளை நனவாக்க அரசியல் பாட்டையும் அவருக்கு கை கொடுத்தது. கால சுழட்சிக்குப் பின்னால் மள மளவென புகழ் அடைந்துவிட்ட பல படங்கள் அவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சேர்த்தது.

    திராவிட இயக்கத்தில் இருந்து பிரிந்த அறிஞர் அண்ணாவின் திராவிட முன்னேற்ற கழகத்தின் வளர்ச்சிக்கும் மலர்ச்சிக்கும் எம்.ஜி.ஆர். ஆற்றிய பணியும் பங்கும் மகத்தானது.

    அண்ணாவின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் தம்பியாக ஆரம்பத்தில் இருந்தவர் அண்ணாவின் மறைவுக்குப் பின் அவரது கனவுகளை நனவாக்கிக் காட்டி தமிழ் திரையுலகிலும் அரசியல் உலகிலும் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து அவரின்றி வேறொருவர் அவரிடத்தை அடைய முடியாது என்ற நிலைக்கு ஆளாகிப் போய்விட்டார். அண்ணாவைத் தொட்டவர்களில்… தொடர்ந்தவர்களில் அரியணை ஏறிய பலரில் முதலாமானவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான் என்றால் அது மிகையில்லை.

    பிறந்தது முதல் வேதனைகளும் சோதனைகளும் எம்.ஜி.ஆரின் கரம்பிடித்து நடந்தும் அவரது சுய சாதனையால் ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.

    திரைத்துறை:
    ‘ரத்னகுமார்’ என்னும் திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்கத் துவங்கியவரை ‘சதிலீலாவதி’ என்ற திரைப்படம்தான் எம்.ஜி.ஆரை அடையாளப்படுத்திக் காட்டியது. அதன்பின் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்றவர்களின் கதை வசனங்களுக்கு ஏற்ற நடிப்பு எம்.ஜி.ஆருக்கு ஈடு இணையில்லை என்கிற நிலையை உருவாக்கியது.

    தொடர்ந்து அவர் நடித்த படங்களும், அதன் தலைப்புகளும் அவர் நடந்த தடங்களாகவும், அவர் நடத்தியப் பாடங்களாகவும் ஆகின. பெற்றால்தான் பிள்ளையா, தாயைக் காத்த தனயன், அன்னமிட்டகை, பாசம், ஊருக்கு உழைப்பவன், படகோட்டி, தொழிலாளி, ரிக்க்ஷாக்காரன், விவசாயி, காவல்காரன் என ஒவ்வொரு படத்தின் தலைப்பும் அவருக்குப் புகழை வாரி வாரி வழங்கிட… திரை உலகில் ஒளி விளக்காக மிளிர்ந்து உலகம் சுற்றும் வாலிபனாக இறுதியாக மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனுடன் அவர் தனது திரையுலகத் தொடர்பை காரண காரியங்களை முன்னிட்டு துண்டித்துவிட்டார். அவரது நடிப்பு தான் நின்றுபோனதே தவிர அவரின் இதயத்துடிப்பு நின்றபாடில்லை. இன்றும்கூட அவரது படங்களை விரும்பிப் பார்க்கும் மக்கள் இருந்து கொண்டுள்ளார்கள் என்பதே அதற்குச் சான்று!

    அரசியல்:
    புரட்சி நடிகர் என மக்களால் புகழப்பட்டவர் புரட்சித் தலைவரானார். நாத்திகர்களால் மட்டுமல்ல.. ஆத்திகர்களாலும் போற்றப்பட்டவர். நாட்டின் பற்பல விருதுகளையும், பட்டங்களையும் சுமக்கலானர். திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களால் ‘பொன்மனச் செம்மல்’ என்கிற பட்டத்தையும் பெற்றார்.

    காங்கிரஸ்காரராக கட்சியில் இணைந்தவர் கலையுலகப் பிரவேசத்தின் முதிர்வில், கழகக்காரராக கட்சியில் இணைந்து தமிழக அரசியல் வானில் உதயசூரியனாக உயர்ந்து வலம் வந்தார்.

    அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கலைஞரின் ஆட்சி தொடங்கியது. கொள்கைகள் அளவில் உண்டான கருத்து வேறுபாடுகளால் திராவிட முன்னேற்ற கழகத்தை விட்டும் நீங்கியோ, நீக்கப்பட்டோ போன எம். ஜி.ஆர். நன்றி மறவாத தனது தன்மையின் வெளிப்பாடாக அறிஞர் அண்ணாவின் பெயரை முன்வைத்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் துவங்கி இரட்டை இலையை சின்னமாக்கி தமிழக அரியணையில் ஏறி அமர்ந்தார்.

    தனது பிரகாசம் பொருந்திய சட்டதிட்டங்களால் மக்களுக்கு பயனளிக்கும் உதவிகளையும் உபகரணங்களையும் அரசு மூலம் நல்கினார். மறைந்த பின்னும் மக்களின் மனதில் நிறைந்து நிற்கும் மக்கள் திலகமாக – திகழக் காரணம் அவரது சரியான திட்டங்கள்தான்.

    ஆட்சிக்கு வந்ததும், பூரண மதுவிலக்கை அமல்படுத்தியது, பள்ளிமாணவ மாணவியர்க்கு சீருடை வழங்கியது, சத்துணவுத் திட்டம் நடைமுறைக்கு வந்தது, இன்ன பிற திட்டங்களுடன்… அண்ணாவின் கொள்கைகளான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இவற்றைக்கொண்டு கருணை உள்ளம் கொண்டு மக்களை அரவணைத்துச் சென்றதால் திரை உலகிலும், அரசியல் உலகிலும் தனக்கென ஓர் தனியிடத்தைப் பிடித்து ‘மக்கள் மனதில் நிறைந்து நிற்கும் மக்கள் திலகம்’ என்று போற்றுதலுக்கு உரியவராக உயர்ந்துள்ளார்.

    வாழ்க அவரது புகழ்!

  6. #3165
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    சுடர்மதி மலர்வேந்தன்.

    முன்னுரரை:
    “நான் நிரந்தரமானவன் அழிவதில்லை…
    எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை”
    கவியரசரால் எழுதப்பட்ட தீர்க்கமான வரிகள்.

    சரித்திரப் பக்கங்களில் இடம்பெற்ற ஒரு மனிதரின் … திருத்தம்… தன் வாழ்க்கையையே சரித்திரமாக்கிவிட்ட ஒரு அசாதாரண மனிதரைப் பற்றியதோர் கட்டுரை. தொட்டவை அனைத்தும் வெற்றிகளாகவே வந்து மடியில் தவழ, இவர் என்ன அதிசயப் பிறவியா? கேள்விகள் இன்றும் கூட இப்படித்தான் கேட்கப்படுகின்றன. இவரைப்பற்றி அறியும்பொழுது, 20-ம் நூற்றாண்டில் பிறந்து, இன்றளவும் நம் உணர்வோடு உறவாடும் மா மனிதர்… மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வருகிறார்… நம்மோடு இந்தக் கட்டுரையில்!

    விடிவெள்ளியின் உதயம்:
    ஜனவரி 17, 1917 கண்டியில் பிறந்த நம் தலைவர் அங்கேயே வளர்ந்து… வாழ்ந்து… உதிர்ந்திருக்க முடியும். கடவுள் நினைத்தார் போலும் “தமிழகமே நம்மை தூற்றும் இச்சக்ரவர்த்தியை அங்கு கொண்டு சேர்க்காவிடில்” என்று! கோபால மேனன், சத்ய பாமா தம்பதியருக்கு ஐந்தாம் பிள்ளையாய் பிறந்தார். ஐவரில் ஒருவன் என்பது போலாகாது.. கையின் கட்டை விரலாய் சிறப்புப் பெற்றார்.

    வறுமை:
    “இளமையில் வறுமை கொடுமை” இலட்சக் கணக்கான மாணவர்களைப் படிக்க வைத்த செம்மல், தன் பள்ளிப்படிப்பைத் தொடர முடியாத அளவு, வறுமையில் உழன்றவர். தன் இரண்டு வயதில் தந்தையின் அரவணைப்பை இழந்த எம்.ஜி.ஆர். அவர்கள், தாயின் வளர்ப்பிலும், வறுமையின் தவிப்பிலும் வளர்ந்தவர். குடந்தை நகரை அடைந்து இம்மண்ணில் கால் பதித்தார். பின்பு மக்களின் மனதிலும் கூட என்பது உலகறிந்த ஒன்று!

    கலை வாழ்க்கை:
    தன் ஏழு வயதில் நாடகத்துறையில் நுழைந்தபொது எண்ணியிருக்க மாட்டார்… ஆம்… இந்த உலகம் எனும் நாடக மேடையிலும், தான் கதாநாயகனாக வலம் வரப் போகிறோம் என்று! பள்ளிப்படிப்பைத் தொடர முடியாமல் காலத்தின் கட்டாய சூழ்நிலையால் தள்ளப்பட்டு, நாடகங்களில் நடிக்கவந்தவரைப் போல் தெரியவில்லை. ஆர்வமும் தன்னம்பிக்கையும் மிளிர்ந்தன. தன் வாழ்வை முன்னெடுத்துச் செல்ல, தனக்குக் கிடைத்த அந்த வாய்ப்பை அனைவரைக்காட்டிலும் மிகச் சாதுர்யமாக பயன்படுத்திக் கொண்டார். உடலையும் மனதையும் ஒருசேர வடிவமைத்துக் கொண்டார்.

    “கல்லுக்குள் உளி செலுத்தி சிற்பத்தைப் பெற வேண்டும்… ஆனால், இங்கோ சிற்பம் தானாகவே தன்னைச் செதுக்கிக் கொண்டிருந்தது” மதுரை ஒரிஜினல் பாய்ஸ் குழுமத்தில்…

    திரையுலகம்:
    அக்காலத்தில் நாடகத்தில் ஒளிரும் மணிகள், பட்டைத்தீட்டப்பட்டு, அடுத்த கட்டமாக இடம்பெறப் போவது திரைத்துறை எனும் கிரீடத்தில் தான் காத்துக் கொண்டிருந்தது போலும். எம்.ஜி.ஆர். தம் வருகைக்காக! ஆரம்ப காலத்தில் சினிமா, ரோஜா மேத்தைபோல அமையவில்லை… முட்களாய் குத்தின தவறிய வாய்ப்புகள். ஆயினும், அம்முட்களையே தன் ஊன்றுகோலாக்கி முன்னேறினார் எம்.ஜி.ஆர் அவர்கள். 1936ல் தொடங்கிய திரை வாழ்க்கையை கைவிட மனமில்லாது, தான் முதல் அமைச்சர் ஆனா பின்னரும்கூட அதனைத் தன்னோடு அதனை இணைத்துக் கொண்டார். கடமை, பற்று என்பது இதுதானா என்று வியக்க வைத்தவரும் இவரே! அரசியல் கடலில் நீந்திக் கொண்டிருக்கும்போதே, நல்ல கருத்துக்களை, இதுவரை தான் சொல்லிவந்த திரைப்படங்கள் வாயிலாகவும் தொடர எண்ணினார்.

    1936 முதல் 1977 வரை கலை உலகில் அவர் ஏற்று நடித்த கதா பாத்திரங்கள், அவரைப் புரட்சி நடிகராக மட்டுமில்லாமல், புரட்சித் தலைவராகவும் மக்களைப் பார்க்கச் செய்தது. தங்கள் அபிமான நடிகராக மட்டுமின்றி, நம்பிக்கை நட்சத்திரமாகவும் எதிர்பார்த்தனர்.

    வெற்றி நாயகன்:
    மருத நாட்டு இளவரசி, மலைக்கள்ளன், குலேபகாவலி, விவசாயி, அடிமைப்பெண், அன்பே வா, உலகம் சுற்றும் வாலிபன் .. போதும் போதும்! வெற்றிப் படங்களின் பட்டியலிடவே பல ஏடுகள் வேண்டும்! நல்லக் கதைகளையும் கற்பனைத் திறனையும் சுமந்து நின்ற இயக்குனர்களுக்குக் கிடைத்த ஒப்பற்றக் கலைஞன். தயாரிப்பாளர்களின் அட்சயப்பாத்திரம்! முதலில் நாடகம், பின்பு சினிமா, அடுத்து அரசியல் என தன் நிறங்களை மாற்றிக்கொள்ளவில்லை எம்.ஜி.ஆர்.

    தன் பணிகளுக்கிடையே இடையூறு வராத வகையில் 1977வரையிலும் மக்களை மகிழ்விக்கும் கலைஞனாகவும் திகழ்ந்தார். இயக்குனர், தயாரிப்பாளர் என தான் தொட்ட துறைகளெல்லாம் வெற்றிப் பூக்களை மலர்ச் செய்தார்.

    தடைகள் துகள்களாக:
    முடியவே முடியாது! அவரா? கெடுபிடியான அந்த மனிதர் இதற்கெல்லாம் இணங்க மாட்டார்! ஒரு முதல்வர் சினிமாவில் நடிப்பதைத் தொடர்வதா? சாத்தியப்படாத செயல். இவர் யாராக இருக்கக் கூடும்? 1977ல் பிரதமரான மொரார்ஜி தேசாய் தான் அவர்.. ஆம் .. எம்.ஜி.ஆர். தான் தொடர்ந்து நடிக்கப்போவதாக அறிவித்தபோது, இத்துணை எதிர்மறையான உறுதியுரைகளை சுற்றியிருந்தோர் கூறினார்.

    மறுநாள், நாளிதழ்களில் வெளிவந்த செய்தி அத்துனைப் போரையும் மூக்கின்மேல் விரல் வைக்கச் செய்தது. “தன் பணிகளுக்கு குந்தகம் நேராமல், திரு எம்.ஜி.ஆர் நடிப்பதில் எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை” எனக் கூறியிருந்தார் மொரார்ஜி.

    இது உண்மைதானா? உண்மை ஆக்கியவர் எம்.ஜி.ஆர். மற்றொரு சம்பவத்தையும் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1972ல் தானே இயக்கிய “உலகம் சுற்றும் வாலிபன்” திரைப்படத்தை உருவாக்கிக் கொண்டிருந்தார். கட்சியைத் தொடங்கியாயிற்று. எதிர்த்து நிற்பது கருணாநிதி எனும் அரசியல் சிகரம்! இருந்தபோதிலும் படப்பிடிப்பு வேளைகளில் சற்றும் சுணக்கம் காட்டவில்லை. தி.மு.க. மதுரை மாவட்டச் செயலாளர் முத்து ஒரு அறிவிப்பை வெளியிட்டார். “உலகம் சுற்றும் வாலிபன்” நம் ஊருக்கு வர மாட்டான். வந்தாலும் ஒரு நாள் கூட ஓடாது. நான் கூறியது தவறானால், சேலைக் கட்டிக் கொள்கிறேன்’ என்றார். படம் திரையானது. ஓடியது.. உசேன் போல்ட் போல மிக பிரம்மிப்பான அளவில்! தமிழகத்தில் மட்டுமல்ல அயல் நாடுகளில் திரையிடப்பட்ட ஒருசில திரைப்படங்களுக்குள் அதுவும் ஒன்று என்ற பெருமையையும் தட்டிச்சென்றது!

    இப்படியும் இருப்பாரா?:
    இருந்தார்… எம்.ஜி.ஆர். 1967-ல் மக்கள் போற்றும் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள் சுடப்பட்டார். தகவலறிந்து அதிர்ந்தது தமிழகம். சுட்டவர் எம்.ஆர்.ராதா … “தன் பண பலத்தால், குண்டர்களை வைத்து காமராசரை கொலை செய்ய முயன்றார் எம்.ஜி.ஆர். என்பதுதான் அவர் சார்பாக வைக்கப்பட்ட வாதம்” .எம்.ஆர். ராதா கூறிய அந்த பண பலமும், மக்கள் மன்றத்தில் அவர் பெற்றிருந்த இடமும் அப்போது, எம்.ஜி.ஆரிடம் அதீதமாகவே இருந்தது. ஆனால், ஒரு மாநாட்டு மேடையிலே, “காமராசர் என் தலைவர்; அண்ணா என் வழிகாட்டி” என்று தெளிவு படுத்திய எம்.ஜி.ஆர்… எவ்வாறு இப்படி ஒரு செயலை நினைப்பார்? கடுஞ்சொல் கூறியவனையே துரோகி… எதிரி என்று சொல்லும் நபர்களுக்கிடையே எம்.ஆர். ராதா அவர்களைத் தொடர்ந்து தன் நண்பராகவும்… சக பணியாளராகவும் மட்டுமே பார்த்தார் தலைவர் அவர்கள்.

    தி.மு.கவில் பங்களிப்பு:
    1953 தொடக்கம் முதல் 1972 வரையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தவிர்க்க முடியாத, தடுக்க முடியாத ஓர் பிரபலமாகவே ஜொலித்தார். கருணாநிதி இறங்கி மைக்கைப் பிடித்தால் ஆர்ப்பரித்தது கூட்டம். எம்.ஜி.ஆர். இறங்கினார். மைக்கைப் பிடிக்க எழுந்தாலே அரங்கம் கர்ஜித்தது. அடுக்கு மொழி வசனங்களால் மக்களை வசியமாக்கும் கலைகளில் வல்லமை பெற்றவர்கள் திராவிடத் தலைவர்கள். தனக்கென்ற தனி பாணியில் மக்களிடையே சென்றார் எம்.ஜி.ஆர். பிரசார பீரங்கியாக சென்ற இடங்களில் எல்லாம் வாக்குகளோடு, மக்களின் தனி அன்பையும் பெற்றுக் கொண்டு தனக்கான ஓர் இடத்தையும் அவர்களிடையே விட்டுச் சென்றார்.

    “நான் உங்கள் வீட்டுப்பிள்ளை… இது ஊரறிந்த உண்மை… நான் செல்லுகின்ற பாதை… பேரறிஞர் காட்டும் பாதை” அண்ணாவின் இதயக்கனி ஆனார் மக்கள் திலகம்.

    உதயமானது அஇஅதிமுக … பேரறிஞரின் பாதையிலே!

    1967ல் மேலவை உறுப்பினர்…1969ல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் என பல உயரிய பதவிகள் வகித்தாலும், கட்சியின் சாதாரணத் தொண்டனாகவே தன்னைக் கருதினார். தி.மு.கவின் ஒவ்வொரு படி வளர்ச்சியிலும் தன் அயராத உழைப்பை அடித்தளமாக்கினார். கொள்கைகளை விரும்பிய எம்.ஜி.ஆர் அதே சமயத்தில் உள்ளிருக்கும் சில களைகளையும் நீக்க நினைத்தார். அனைத்து தி.மு.க. சட்டப் பேரவை உறுப்பினரும்… தங்கள் மற்றும் தங்களுக்கு நெருக்கமானவர்களின் சொத்து மதிப்புகளையும் கணக்குகளையும் கட்சியின் முன்பாக பட்டியிலிட வேண்டும் என்று எண்ணினார். அத்துணை பெரும் ஒப்புக் கொள்ளவில்லை. மக்கள் மன்றத்தின் முன் இந்தக் கோரிக்கையை வைக்கப் போவதாகத் தெரிவித்தார். ஆண்டுகளாகக் காத்திருந்த எதிரிகளுக்குக் கிடைத்துவிட்டது துருப்புச் சீட்டு! வெளியேற்ற எத்தனித்தார்கள்.. ஜெயித்தார்கள்.. நீக்கப்பட்டார் எம்.ஜி.ஆர்.!

    நான் ஆணையிட்டால்… அது நடந்து விட்டால்… இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார்! 17, அக்டோபர் 1972ல் உதயமானது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். தன் ரசிகர் மன்றங்களை கட்சி அலுவலகங்களாக மாற்ற அழைத்தார். 20,000 கட்சி அலுவலகங்களோடு ஆரவாரமாக பறக்கிறது இரட்டை இலை.. எம்.ஜி.ஆரின் அரசியல் கனவுகளுக்கு சுருக்குக் கயிறு என்று எண்ணியவர்களைக் கண்டு பரிதாபம் மட்டுமே கொள்ள முடிகிறது. அது அவருக்கு அணிவிக்கப்பட்ட வெற்றி மாலை என அவர்கள் புரிந்து கொள்ள வெகு காலம் ஆகவில்லை.

    வெற்றி முழக்கம்:
    கட்சி தொடங்கிய ஐந்து ஆண்டுகளில் தேடிவந்தது முதலமைச்சர் அரியணை. தி.மு.கவிற்கு அதிமுக எவ்வகையிலும் சளைத்ததல்ல என்பதனைச் சொல்லாமல் சொல்லியது அந்த வெற்றி.

    “அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு” … அதுவரை தி.மு.க. செய்யாத அல்லது செய்ய முடியாத ஒன்று! தமிழகம் சார்பாக இருவரை மத்திய அமைச்சரவையில் இடம்பெறச் செய்தார் எம்.ஜி.ஆர். இந்திரா, மொரார்ஜி… என எந்த அரசு மத்தியில் அமர்ந்தாலும் அவர்களுடன் ஒரு இணக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டார்.

    சமுத்திரத்திலிருந்து சாதனைத் துளிகள்:
    எண்ணிலடங்கா சாதனைக் குவியலிலிருந்து சில… தமிழக்கத்தில் மட்டுமல்லாது, தேசிய அளவில் அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்த சத்துணவுத் திட்டம்… பெருந்தலைவர் காமராசரின் மதிய உணவுத் திட்டத்தின் மேம்பாடு. 1,20,000த்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் கல்வியை உறுதி செய்த பெருமைக்குரிய செயல்பாடு.

    நெற்களஞ்சியமாம் தஞ்சைக்கு இரு பெரும் சிறப்புகள் ஒன்று தஞ்சை இராச ராசனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில். மற்றொன்று 1981ல் எம்.ஜி.ஆர். அவர்களின் அரசால் நிறுவப்பட்ட தஞ்சைத் தமிழ்ப் பல்கலைகழகம்…

    “ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம்…” என்பார்களே அதுபோல தான் இவ்விரண்டும்!

    தமிழர் தலைவர்:
    “நீங்க நல்லா இருக்கணும்… நாடு முன்னேற…
    இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற!

    சென்ற இடங்களிலெல்லாம் புகழ்! வெற்றியின் கூக்குரல்! தமிழகத்திற்கு நன்மை செய்தாரா இந்த முதல்வர்? இல்லை… தமிழர்களுக்குச் செய்தார்… அண்டை நாடான இலங்கையில் மண்ணோடு மண்ணாக அழிந்து வரும் நம் தமிழனத்தின் துயர் கண்டு, வெகுண்டது தமிழகம்… ஆனால், இலங்கையில் இருப்பவர்கள் ஈழத்தமிழர்கள்! வேறு நாட்டில் வாழும் தமிழர்கள், புலம்பெயர்ந்து சென்றவர்கள். அனுதாபங்களை அள்ளி வீசுவோம் என்றது இந்திய அரசு! செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் விரைந்தார் டில்லியை நோக்கி… பதிலாக, ஈழத்தமிழ் இயக்கங்களுக்கு பயிற்சியையும் அளித்தது இந்திய அரசு. கடமை முடிந்தது என்பது போல் நினைக்கவில்லை நம் தலைவர். இயக்கங்களின் தலைவர்களை சந்திக்க விரும்புவதாக அழைப்பு விடுத்தார்… நேரடியாக! புலிகளின் முன்னேற்றத்திற்காக… விடுதலை வேட்கைக்காக… நான்கு கோடி தேவைப் பட்டது. அரசாங்க ரீதியாக வழங்க தடைஎற்பட்டபோது, தன் சொந்தப் பணத்தை கரங்கள் சிவக்க அள்ளி வழங்கியவர்.

    அமெரிக்காவை எதிர்நோக்கிய நெஞ்சங்கள்:
    எம்.ஜி.ஆர். அவர்கள் உடல்நலம் குன்றியபோது, இனி வரமாட்டார்… என்று ஒரு வதந்தி வந்த வேளையில் தமிழகமே இருளானது போல ஒரு மாயை! வதந்திகளும் அவதூறுகளும் புதிததல்ல! பொய்க் கூற்றுகளைத் தவிடுபொடியாக்கினார். நின்றார் ஆண்டிப்பட்டித் தொகுதியில் அமெரிக்காவில் இருந்தபடியே வேட்புமனு பெறப்பட்டது. அபாரமான வெற்றி! அனுதாப வெற்றி என்றார்கள் அறியாதவர்கள். ஆழிப் பேரலையாய் எழுந்து நின்றது தமிழகம். தலைவர் இல்லம் திரும்புகையில் வெற்றிடத்தையும் வெற்றி இடங்களாய் புரட்டிப் போட்டார்!
    1977 முதல் 1987ல் தான் இறக்கும் வரை தொடர்ந்து நீண்ட காலமாக இருந்த ஒரே முதல்வர் எம்.ஜி.ஆர். என்ற சிறப்பை இன்றளவும் தன்னோடு மட்டுமே வைத்திருக்கிறார் இந்த மகான்!

    மீளாத் துயர்:
    டிசம்பர் 24, 1987 அதிகாலை 3.30 மணி அத்துணை நெஞ்சங்களையும் சோக வெள்ளத்திலே மூழ்கடித்தது அந்தத் தகவல்! எங்கும் வன்முறை… கதறல், ஸ்தம்பித்தது.. தமிழகம்! வந்த துக்கம் தொண்டையை அடைத்தது! செய்வதறியாது திகைத்த மக்கள், துயரச் செய்தி தாளாது மாண்டோர் பலர்.

    எம்.ஜி.ஆர் ஒரு நபராகவோ… கட்சித் தலைவராகவோ பார்த்திருந்தால் ஏற்பட்டிருக்காது இப்படி ஓர் நிகழ்வு! அனாதைகளாக்கிவிட்டு இம்மண்ணுலகைவிட்டு மட்டுமே சென்றிருந்தார் மக்கள் திலகம்!

    கலைத்துறையில் தேசிய விருதுகள்… இந்திய அரசின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” என நூற்றுக்கணக்கான விருதுகளின் சொந்தக்காரர் மட்டுமல்ல… தமிழக மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட கொள்ளைக்காரரும் கூட!

    முடிவுரை:
    எம்.ஜி.ஆர். அவர்தம் வாழ்வின் சிறப்பைப் பேச எனக்குக் கிடைத்த இந்த 1300 வார்த்தைகள் போதுமா? நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், முதல்வர் … என்னவாக தோற்றம் கொண்டாலும், அவர் மக்கள் திலகம்! இதய தெய்வம்! தமிழ் நாட்டிற்கு மட்டுமல்லாது தமிழர்களுக்காக ஒவ்வொரு நொடியையும் அர்ப்பணித்தவர்!

    தொண்டர்களைத் தன் தோழர்களாக பாவித்தவர். எளிமையும் உண்மையும் நெஞ்சில் கொண்ட கொள்கையும் அவரை தமிழக முதல்வர் எனும் சிம்மாசனத்தில் அமரச் செய்தது. சாத்தியமே இல்லை என்பவற்றைக்கூட தன் சட்டைப்பையில் சகஜமாக வைத்திருப்பார்! முடியுமா என்பவற்றை முடித்துவிட்டேனே என புன்முறுவல் பூத்தவர்!

    காலனே! எம்.ஜி.ஆர். என்பவர் உலகில் இல்லை என்று நீ எண்ணினால், ஏளனம் செய்யும் தமிழகம்! இல்லை இல்லை.. தமிழினம்! அஸ்தமிக்கும் சூரியனுக்கும் பஸ்பமாக்கும் உஷ்ணம் உண்டு… நன்றி மறந்தோர் அல்லர் தமிழர்! வழங்கிய கொடிகளும் அவர் நிறுவிய படைகளும் எக்காலமும் முக்காலமும் பறைசாற்றும் உந்தன் பெருமைகளை!

    நினைக்க கோடி உண்டு.. மறக்க ஒன்றே ஒன்று தான் – அவர் மறைவு

    இது முடிவுரை.. இந்தக் கட்டுரைக்கு மட்டுமே!

  7. #3166
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    ஆர். எஸ். கலா, மலேசியா

    மக்களின் பாட்டாளி
    மக்களின் கூட்டாளி
    மகத்துவம் நிறைந்த சோக்காளி
    மன்னிக்கும் குணம் படைத்த பெருமைசாலி
    மாறாத மனம் கொண்ட அறிவாளி
    கண்ணியம் தவறாத மாமனிதன் mgr
    கடமையிலே மகாமனிதன்!

    பூப் போன்ற மனசு
    புதையல் போன்ற உள்ளம்
    புன்னகை மாறாத முகம்
    ஏழைகளின் குடிசைக்கு விளக்கு ஒளி
    ஏமாற்ற எண்ணும் கொடியவனுக்குக்
    கை விலங்கு!

    ஆட்சியில் கிடைத்த காட்சி
    அழிக்க முடியாத ராச்சியம்
    கடமை கண்ணியம் கட்டுப்பட்டை
    உடையாக உடுத்திய கொடை வள்ளல்
    உழைப்பாளிகளின் அடிமைத்தனத்தை
    மீட்டார்!

    வறுமையின் பிடியில் வாடிய
    மழலைகளுக்கு
    மதிய உணவு திட்டத்தைக் கொடுத்தார்
    வாரிச் சுருட்டி எடுக்கும் அரசியலை
    வெறுத்துத்
    தன் வாழ்க்கையையே அரசியலுக்காக
    அர்ப்பணித்தார்!
    கொள்ளை அடித்தார் சொல்லாமலே
    பலஉள்ளங்களின் அன்பை!

    ஒன்றே குலம் என்று கூறி வாழ்ந்தார்
    ஒரு தாய் மக்களாக அரவணைத்தார்!
    சாதி மதம் பாராது பணம் படிப்பு பாராது
    பதவி பட்டம் ஏழை எளியோர் பாராது
    அனைவரும் மனிதரே என உரைத்தார்!
    இறந்தும் இறவா வரம் பெற்றார்
    கோடான கோடி மக்கள் மனதிலே
    ஒரு நிலையான இடம் பிடித்தார்!

    கொடை வள்ளலாக
    இதயக்கனியாக
    மக்கள் நண்பனாகப்
    புரட்சித் தலைவனாக
    ஒளி விளக்காக
    வாழ்ந்து மறைந்தார்!

    மறக்க முடியாத அச்சகத்திலே அச்சடித்தார்
    அவர் பேச்சு மொழியைக் கிளிபோல் பேசியே
    மக்கள் மறக்கவோ வெறுக்கவோ விரும்பாத
    நூலகத்திலே முதல் இடத்தையே
    அடைந்தார்!

    கலை உலகில் பல சாதனை படைத்து
    ஆட்சியில் அதையே நிஜமாக்கி விட்டார்
    நடிப்பை நடிப்பாகப் பார்த்த பலர்முன்
    அதில் வரும் பல காட்சிக்கு நிஜத்தில்
    உயிர் கொடுத்து விட்டார் பலர் வியக்கும்
    வண்ணம்!

    அவர் மூச்சு போனபின்னரும் பேச்சு
    மாறாமல்
    பலர் குரலிலும் வாழ்விலும் இதயக்
    கோயிலாக
    வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்
    எங்கள்
    இதயக் கனி மக்கள் திலகம்!

  8. #3167
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    வெ.சந்திரமணி.

    கண்டி டூ கும்பகோணம்…

    சினிமாத் துறையிலும், பின்னர் அரசியல் துறையிலும் சகாப்தம் படைத்து, தமிழக முதல்வராக 10 ஆண்டுக் காலம் பணியாற்றிய எம்.ஜி.ஆர்., இலங்கையில் உள்ள கண்டியில் 1917 ஜனவரி 17ம் தேதி பிறந்தார். தந்தை கோபால மேனன். தாயார் சத்தியபாமா. கோபாலமேனன், கேரளத்திலும், தமிழ்நாட்டிலும், திருச்சூர், அரூர், கரூர், எர்ணாகுளம் முதலிய இடங்களில் மாஜிஸ்திரேட்டாகப் பணியாற்றினார். பின்னர் இலங்கைக்குச் சென்று ஒரு கல்லூரியில் முதல்வராக அமர்ந்தார். அப்போதுதான் எம்.ஜி.ஆர்., பிறந்தார். இவருக்கு பெற்றோர் சூட்டிய பெயர் ராமச்சந்திரன்.

    திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தபோது எம்.ஜி.ராமச்சந்திரன் என்றும் அழைக்கப்பட்டார். திரை வாழ்க்கையில் சிகரத்தை அடைந்த பின் ‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்’ ‘மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.,’ என்றும் அழைக்கப்பட்டார். எம்.ஜி.ஆருக்கு இருண்டரை வயதாகும்போது தந்தை இறந்து விட்டார். எம்.ஜி.ஆருக்கு கமலாட்சி, சுமித்ரா என்ற 2 மூத்த சகோதரிகளும், பாலகிருஷ்ணன், எம்.ஜி. சக்ரபாணி என்ற இரண்டு மூத்த சகோதரர்களும் உண்டு. குடும்பத்தில் 5வதாக பிறந்தவர் எம்.ஜி.ஆர். கோபாலமேனன் காலமானதும், சத்தியபாமா, குழந்தைகளுடன் தமிழ்நாட்டுக்கு வந்து கும்பகோணத்தில் குடியேறினார். கும்பகோணத்தில் உள்ள அணையாடி பள்ளிக்கூடத்தில் எம்.ஜி.ஆர் சேர்க்கப்பட்டார். வறுமையுடன் போராடிக் கொண்டு, குழந்தைகளை அன்புடன் வளர்த்தார் சத்தியபாமா. இந்நிலையில் எம்.ஜி.ஆரின் மூத்த சகோதரி கமலாட்சி 16 வயதில் மரணம் அடைந்தார்.

    படுத்துக் கொண்டே தேர்தலில் வெற்றி:
    ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர்., காங்கிரசில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். கதர் வேட்டி, சட்டைதான் அணிவார். 1952ல் எம்.ஜி.ஆரை அறிஞர் அண்ணாவிடம் டி.வி.நாராயணசாமி அறிமுகம் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து தி.மு.க.,வில் தன்னை இணைத்துக் கொண்டார். அப்போது கலைஞர் கருணாநிதிக்கும் எம்.ஜி.ஆருக்கும் நெருங்கிய நட்புறவு ஏற்படவே, அவர்கள் பங்குதாரர்களாக மேகலா பிக்சர்ஸ் படக் கம்பெனியை தொடங்கினார்கள். பல படங்கள் மாபெரும் வெற்றி பெற்று, எம்.ஜி.ஆரை சிகரத்துக்கு உயர்த்தயது. சினிமாத்துறையில் புகழேணயில் உயரே உயரே சென்று கொண்டிருந்த எம்.ஜி.ஆர், அரசியலிலும் உயர்ந்து கொண்ட போனார். திமுகவிலிருந்த இளைஞர்களின் நெஞ்சில் இடம் பெற்றார். தி.மு.க., கொடியை தன் படங்களின் தொடக்கத்தில் காட்டினார்.

    திமுக பொதுக் கூட்டங்களில் பேசினார். நன்கொடைகளை வாரி வழங்கினார். இதன் காரணமாக அண்ணா எம்.ஜி.ஆரை இதயக்கனி என்று குறிப்பிட்டார். 1967 தேர்தலில் பரங்கிமலை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டார். அப்போது நடிகர் எம்.ஆர்.ராதாவால் எம்.ஜி.ஆர்., துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எம்.ஜி.ஆர்., கழுத்தில் பாய்ந்த குண்டு, ஆபரேஷனில் அகற்றப்பட்டது. மறுபிறவி எடுத்தார். அப்போது எம்.ஜி.ஆர்., ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டே தேர்தலில் வெற்றிபெற்றார். 1967 தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்தது. அண்ணா முதல்வரானார். 1969ல் அண்ணா மறைவுக்குப் பின் கருணாநிதி முதல்வரானார். அந்தநேரத்தில் எம்.ஜி.ஆர்., திமுக பொருளாளனார்.கருணாநிதி முதல்வரான பிறகு திரை உலகிலும், அரசியலிலும் உயிர் நண்பர்களாக இருந்த இருவர் நட்பிலும் விரிசல் ஏற்பட்டது. அதனால், திமுக சொத்துக் கணக்கை காட்ட வேண்டும் என்று எம்.ஜி.ஆர்., பகிரங்கமாகப் பேசினார். அதைத் தொடர்ந்து 1972 அக்டோபர் 18ம் தேதி ‘அண்ணா திமுக’ என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கினார். 1977ல் நடந்த தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடித்தது. தமிழக முதல்வரானார் எம்.ஜி.ஆர். 1980 ஜனவரியில் நடந்த லோக்சபாத் தேர்தலில் அதிமுக தோல்வி அடையவே எம்.ஜி.ஆர்., மந்திரிசபை டிஸ்மிஸ் செய்யப்பட்டது. ஆனால், சில மாதங்களுக்குப் பின் நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று எம்.ஜி.ஆர்., மீண்டும் முதல்வரானார்.

    எமனை வென்றவர்:
    1984ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு, உடலில் வலது பக்கம் செயல் இழந்தது. நவம்பர் 5ம் தேதி அவர் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நியூயார்க் நகரில் உள்ள புரூக்ளின் ஆஸ்பத்திரியில் அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டது. சிறுநீரகம் அளித்தவர், அண்ணன் சக்ரபாணியின் மகள் லீலாவதி. எம்.ஜி.ஆர்., அமெரிக்காவில் இருக்கும்போதே, தமிழக சட்டசபை தேர்தல் நடந்தது. எம்.ஜி.ஆர்., அமெரிக்காவில் இருக்க, தமிழ்நாட்டில் அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. எமனை வென்ற எம்.ஜி.ஆர்., 1985 பிப்ரவரி 4ம் தேதி சென்னை திரும்பி, 10ம் தேதி 3வது முறையாக தமிழக முதல்வரானார். அன்றைய காலகட்டத்தில் எம்.ஜி.ஆர்., ஆரோக்கியமாக இருந்தாலும், அவருக்கு பேச்சு வரவில்லை. என்றாலும் விடா முயற்சியுடன் பயிற்சிகள் பெற்று ஓரளவு பேசினார். இந்நிலையில் 1987 டிசம்பர் 23ம் தேதி அவர் உடல்நிலை மோசமடைந்நது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 24ம் தேதி எம்.ஜி.ஆர்., மறைந்தார். திரை உலகிலும், அரசியலிலும் ஒரு சகாப்தம் முடிந்தது.

    எம்.ஜி.ஆருக்கு ரசிகர்களும், தொண்டர்களும் ஏராளம், அவர் எதை செய்தாலும், அதை வேதவாக்காக ஏற்று செயல்பட்டார்கள். ‘கையில் பச்சை குத்திக் கொள்ள வேண்டும்’ என்று அவர் கூறியதும், அனைவரும் பச்சை குத்திக் கொண்டனர். வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு, பல சோதனைகளில் வெற்றி கண்டு, சாதரண நடிகராக இருந்து சூப்பர் ஸ்டாராக உயர்ந்து, அரசியலில் மும்முறை முதல்வரான எம்.ஜி.ஆர் மறைந்தாலும், மக்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

  9. #3168
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    –ஜியாவுத்தீன்.

    எம்ஜிஆர்:
    1936ல் தமிழ்த்திரையுலகத்தைத் தாக்க ஆரம்பித்த இந்தப் புயல்
    திரையில் ஓய்ந்தது 1977ல், சுந்தரபாண்டியனாக மதுரையை மீட்ட பின்பு!
    தரையில் ஓய்ந்தது 1987ல் தமிழகத்தை 11 வருடங்கள் ஆண்டபின்பு!
    அரசியல் எதிரிகள் மெதுவாக எட்டிப்பார்த்தனர் இவர் மாண்ட பின்பு!

    ஆனாலும், திரையுலகைத் தாண்டி அரசியலிலும், மக்கள் மனங்களிலும், ஏழைகளின் இதயங்களிலும் இன்னும் இந்த வசீகரப் புயல் நிலைகொண்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்தப் பெயர் இவ்வுலகுள்ளவரை நிலைத்திருக்கும் என்பதும் உண்மை. கண்ணை மூடிக்கொண்டு திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்கள் முதல், தேர்தல் அரங்குகளுக்கு வரும் தொண்டர்கள் வரை இன்னும் இந்தப் பெயர் கோலோச்சி வருவது நாம் அனைவரும் கண்கூடாகக் காணும் நிகழ்வுகள்! இவரைப்பற்றி 1000 வார்த்தைகள், 1500 வார்த்தைகள் என்று வரையறுப்பதெல்லாம் காட்டாற்று வெள்ளத்துக்கு மணலால் அணை கட்டுவது போலாகும். இவரைப் பற்றி எழுத ஆரம்பித்தால் பல புத்தகங்களாக எழுதலாம். ஆராய்ச்சி செய்தால் பல முனைவர் பட்டங்கள் வெல்லலாம்! ‘புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், மக்கள் திலகம்’! இவருக்குரிய இம்மூன்று முக்கிய பட்டங்களிலேயே இவருடைய மொத்தப் புகழையும் வாழ்க்கையையும் அடக்கிவிடலாம்!

    திரைப்படங்களில் கதாநாயகிகளைக் காப்பாற்றிப் பழக்கப்பட்ட இவரது கரங்கள், நிஜ வாழ்வில் பற்றியிருந்ததோ ஏழைகளின் கரங்களை! போலியாக புகைப்படங்களுக்கு மட்டும் காட்சியாக இல்லாமல், செல்லும் இடமெல்லாம் கூடும் மக்கள் கூட்டங்களில், முதியோர், வறியோர், எளியோர் என்று இவரது அன்புக் கரங்களுக்குள் அடைக்கலமானவர்கள் எண்ணிலடங்காதோர்! எந்தவித சஞ்சலமுமின்றி, ஏழைக்குழந்தைகளை இவர் வாரியணைத்த வண்ணக் கோலங்கள் எத்தனை எத்தனையோ! மக்களோடு மக்களாக, குழந்தைகளோடு குழந்தையாக இவர் சத்துணவும் சமபந்தி போஜனமும் சாப்பிட்ட காட்சிகள் கண்களுக்கு நிறைவளிப்பவை. இப்படி ஒரு ஏழைப்பங்காளனாக விளங்கிய இவரின் அரசியல் சமூகம் சார்ந்த வாழ்க்கைக்குள் போவதற்கு முன் …

    எம்.ஜி.ராமச்சந்திரன்:
    1917ம் ஆண்டு, இலங்கையில் பிறந்த மலையாளக் குடும்பத்துப் பிள்ளை இவர். ஆனால் வாழ்ந்து முடித்ததோ அன்னைத் தமிழ்நாட்டில், அச்சுப் பிறழாமல் அசல் தமிழனாக! மலையாளி என்றாலும் கேரளத்துக்கு வக்காலத்து வாங்கவில்லை, தமிழ்நாட்டுக்கு வந்தாலும், இலங்கையை மறந்து விடவுமில்லை! யாருக்கும் பாதகமின்றி தான் ஏற்றுக்கொண்ட பணிகளில், கொள்கைகளில் தடம் மாறாமல் தடம் பதித்தத் தங்கமகன் இவர்! தந்தையை இழந்து, தமிழ்நாட்டை நாடிவந்து, முதல் தடம் பதித்தது மதுரை பாய்ஸ் கம்பெனியில்! நாடக நடிகனாக வாழ்க்கையைத் தொடங்கிய நமது எம்ஜிஆர் அவர்கள், 1936ம் ஆண்டு அடியெடுத்து வைத்தார் தன் வலது காலை, தமிழ்த்திரையுலகில்! சதிலீலாவதி படம் மூலம் சதிராட இவர் வந்ததும், சதிராடிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் கதிகலங்கிப் போனார்கள்! போட்டியிட முடியாமல் ஒதுங்கியே நின்றார்கள்!

    பலரது பெயர்களுக்கிடையில் ஒரு பெயராய் வந்த எம்.ஜி.ராமச்சந்திரன் எனும் பெயர், விரைவிலேயே தனிப்பெயராய், தன்னிகரில்லா பெயராய், தரை டிக்கெட் முதல் பால்கனிவரை ரசிகர்களின் கைதட்டல்களைப் பெறும் பெயராய் உயர்ந்தது! சின்னச் சின்ன வேடங்களிலும் சிறப்பாய் நடித்து வந்தவரை, உச்சத்தில் கொண்டு சேர்த்தனர் மந்திரி குமாரியும், மலைக்கள்ளனும்! ரசிகர்களிடம் அப்போது துவங்கிய அந்தத் தாக்கம், இறுதிவரை இம்மியளவும் குறையவில்லை, இன்றளவும் அவரின்மீதுள்ள ஈர்ப்பு மறையவில்லை!

    இவரது திரைப்படங்களை ரசிகர்கள் திரைப்படங்களாகப் பார்க்கவில்லை, தம்மையே திரையில் பார்க்கும் உணர்வுடன் ஒன்றிப்போய்ப் பார்த்தார்கள். எம்ஜிஆரின் உருவத்தில் இளைஞர்கள் தங்களை எண்ணிக்கொண்டு, இறுமாப்புடன் வலம் வந்தார்கள். அதனால்தான், எம்ஜிஆரது திரைப்படங்களில் பலவும் சாதனைகள் படைத்தன, சரித்திரங்களாய் மாறின. நகரங்கள், கிராமங்கள் என்று பட்டிதொட்டியெங்கும் எம்ஜிஆரின் திரைப்படங்கள் வெளியாகும் நாட்கள்தான் பண்டிகை நாட்களாகக் கருதப்பட்டன.

    பொன்மனச்செம்மல்:
    துவக்கத்தில் காங்கிரசில் அரசியல் வாழ்வைத் துவக்கிய எம்ஜிஆர், பின்னர் பெரியாரின் சீடனாக, அறிஞர் அண்ணாவின் அன்புத் தம்பியாக திராவிடர் கழகத்தில் பகுத்தறிவுப் பாடம் பயின்றதன் விளைவாக, ஆன்மீக வேடங்களிலோ, ஆன்மீகத் திரைப்படங்களிலோ நடிப்பதில்லை என்கிற உறுதியான கொள்கையைக் கடைபிடித்தார். இறுதிவரையிலும் இக்கொள்கையை யாருக்காகவும் அவர் விட்டுக் கொடுத்ததில்லை. தனிப்பிறவி திரைப்படத்தில் முருகனாய்த் தோன்ற வைக்க சின்னப்பா தேவரவர்கள் பிரம்மப் பிரயத்தனம் செய்து நடிக்க வைத்ததாக பின்னாளில் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் காரணத்துக்காக எந்த ஆன்மீகவாதியும் எம்ஜிஆரை விரும்பாமல் விட்டதுமில்லை. வெறுத்ததுமில்லை.

    அவர் கடைபிடித்த உறுதியான இன்னொரு கொள்கை புகை பிடிக்காததும், மது அருந்தாததும்! ஆம், மதுவும் புகையும் மலிவாகப் போன இவ்வுலகில், தன் திரை வாழ்விலும் சொந்த வாழ்விலும் அவற்றைக் கையாளாத அவரது சிறப்பு, அவரது ரசிகர் மனங்களில் மட்டுமின்றி, அனைவரது மனங்களிலும் ஆழப்பதிந்தது. அவருக்கென்று ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுத் தந்தது, அவரைப் பற்றிய தூய எண்ணத்தை வளர்த்தது. இந்த அரிய குணம்தான் எம்ஜிஆர் மிக நல்லவர் என்னும் நம்பிக்கையை அனைவரிடமும் விதைத்தது!

    திருடனாக வந்தாலும், கொள்ளைக்காரனாக வந்தாலும் ஏழைகளுக்கு உழைப்பவராக, உதவுபவராகவே கதாபாத்திரங்களை அமைத்து நடித்து வந்ததால், ரசிகர்களுக்கும் அவருக்குமான நெருக்கம் என்றும் மாறாமல் தொடர்ந்துகொண்டே வந்தது. விவசாயியாகவும், மீனவனாகவும், ரிக்க்ஷா ஓட்டுபவராகவும், குப்பத்தைக் கூட்டுபவராகவும் நடித்ததன் மூலம் தன்னுடைய ஏழைப்பங்காளன் எனும் ஆதர்ச கதாபாத்திரத்தை மக்கள் மனங்களில் அழுத்தமாகப் பதியவைத்துக் கொண்டார். ராஜா தேசிங்கு, விக்கிரமாதித்தன், போர்ப்படைத் தளபதி, சிப்பாய், அரசன், அமைச்சன், புலவன் என்று மக்கள் திலகத்தின் பல பரிமாணங்களில் மக்கள் மயங்கிக் கிடந்தார்கள். சங்க கால சரித்திரங்களும், புறநானூறு போன்ற காவியங்களும் போற்றும் தமிழரின் வீரத்தின் அடையாளமாக எம்ஜிஆரின் தினவெடுத்த தோள்களையும், பரந்து விரிந்த மார்புகளையும், வலிமையான கரங்களையும் கட்டுடலையும் கண்டு மகிழ்ந்தார்கள்.

    தெள்ளத் தெளிவான அழகுத் தமிழில் அவர் பேசிய வசனங்கள் செவிகளில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது. பரபரவென்று அவரின் நடையும், வாளைச்சுழற்றும் லாவகமும், வளைய வரும் அவரது துடிப்பும், சண்டைக் காட்சிகளில் சதிராடிய வாளும், வேலும், சிலம்பமும், இடம் மாறி மாறித் துள்ளிக்குதித்து வில்லன்களைப் பந்தாடிய அவரது கரங்களும் மக்களை அசைய விடாமல் ஆண்டாண்டுகளாகக் கட்டிப் போட்டிருந்தன. உதாரணத்திற்கு ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தில் நம்பியார் அவர்கள், ‘மதம்கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?’ என்று கேள்வி கேட்க, ‘சினம்கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்’ என்னும் எம்ஜிஆரின் பதிலுக்கு எப்போதும் அரங்கங்கள் அதிரும், ஆரவாரக் கைதட்டல் விண்னைத் தொடும்.

    மதுரை வீரனிலும், மந்திரிகுமாரியிலும், மன்னாதிமன்னனிலும் மக்கள் திலகத்தின் தெள்ளுதமிழ் வசனங்களில் மயங்காத மனங்களும் உண்டோ? அந்தக்குரல் பாதிப்படைந்த பின், மக்கள் மனங்களில் தனக்கான இடம் மாறாமல் இருக்கிறதா என்பதை அறிய பரீட்சார்த்தமாக தன் சொந்தக் குரலிலேயே பேசி நடித்து வெளியிட்ட காவல்காரன் பட்டி தொட்டியெல்லாம் பிரமாதமாக ஓடி வெற்றிக்கொடி நாட்ட, தன் மீது மக்களுக்கு இருந்த அபிமானத்தைக் கண்டு எம்ஜிஆரே திக்கு முக்காடிப் போனார். துப்பாக்கியால் சுடப்பட்டும் தானே மருத்துவமனைக்கு காரோட்டிச் சென்று மருத்துவரிடம் நடந்ததை விளக்கி தானே சிகிச்சைக்கு உட்பட்டார் என்றால் அவரின் மனதைரியத்துக்கு வேறு என்ன சான்று வேண்டும்? கண் விழித்ததும் அவர் கேட்ட முதல் கேள்வி ‘ராதா அண்ணன் நலமாக இருக்கிறாரா?’ என்பதே. காரணம், எம் ஆர் ராதா எம்ஜிஆரை சுட்டுவிட்டு தன்னைத் தானே சுட்டுக் கொள்ள முயன்றார் என்பதே. தனக்கு தீங்கு நினைத்தவருக்கும் இரங்கும் இந்த உயரிய குணம் காண்பது மிக அரிது.

    எம்ஜிஆர் ஆன்மீகத்திலும் தவறான பழக்கங்களைக் கையாளும் கதாபாத்திரங்களிலும் நடிப்பதில்லை என்பதில் எந்த அளவு உறுதியுடன் இருந்தாரோ, அதே அளவு பெண்களை மதிப்பதிலும், தங்கையாக எண்ணுவதிலும், தாயாக எண்ணுவதிலும் தன் சொந்த வாழ்விலும், திரையிலும் எந்த வித்தியாசத்தையும் காட்டாத பண்பிலும் உறுதியுடன் இருந்தார். அவரின் திரைப்படங்களில் தாய் கதாபாத்திரங்கள் வலுவானதாக இருந்தன. தாய் சொல்லை மதித்து நடக்கும் அன்பு மகனாக அவர் வாழ்ந்து காட்டியது, ரசிகர்களை தாய்மீது அன்பு கொள்ள வைத்தது. தாயை மதிக்கும் பண்பை வளர்த்தது. தாயின் சொல்படி நடக்கும் பிள்ளைகள் சிறப்புறுவார்கள், சிறந்த புகழ் பெறுவார்கள் என்பதை வலியுறுத்திச் சொல்லியது. சிறுவயதிலேயே தந்தையை இழந்த அவர் உண்மையாகவே தன் தாயின் மீது அளவிலாப் பாசமும் பற்றும் கொண்டிருந்தார். அதைத்தான் அவர் திரையில் வெளிப்படுத்தினார். மகளிர் மீது இவர் காட்டிய பரிவும் பாசமும் ‘தாய்க்குலம்’ என்று ஒரு புதிய சொல்லாடலைத் தோற்றுவித்தது.

    30 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களுக்குப் பிடித்த வகையில் மட்டுமே நடித்து ரசிகர்களைப் பரவசப்படுத்தி தமிழ்த்திரையுலகத்தைத் தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார் என்பதுதான் உண்மை.

    எம்ஜிஆரின் இன்னுமொரு வலுவான ஆயுதம் பாடல்கள். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாக ரசிகர்களைக் கிறங்கடித்தன. அவரின் சமூக நோக்கத்தை வெளிப்படுத்தும் தத்துவப் பாடல்களும், அரசியல் சார்ந்த கொள்கைப்பாடல்களும், திராவிடப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் பாடல்களும் ரசிகர்களின் மனங்களில் தங்க சிம்மாசனமிட்டு அமர்ந்தன. அச்சம் என்பது மடமையடா, வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும், தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை, உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால், புதிய வானம் புதிய பூமி, ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை, ஓடி ஓடி உழைக்கணும், கொடுத்ததெல்லாம் கொடுத்தான், கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் என்று எண்ணிலடங்கா பாடல்கள் இன்றும் ரீங்காரமிட்டுக் கொண்டுள்ளன. தாயில்லாமல் நானில்லை, செல்லக் கிளியே மெல்லப் பேசு, உலகம் பிறந்தது எனக்காக, இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவில், திருவளர்செல்வி மங்கையர்க்கரசி, பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த என்று பல பாடல்கள் பாசமழையில் நனைய வைக்கின்றன. உடுமலை நாராயணகவி தொடங்கி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கவியரசர் கண்ணதாசன், வாலி, புலமைப் பித்தன் என்று எம்ஜிஆருக்காகப் பாட்டெழுதும் கவிஞர்களுக்கு, வார்த்தைகளும் வரிகளும் அமுத சுரபியாய்க் கொட்டிக் குவித்தன. பாடல்களைத் தேர்வு செய்வதில் அவர் என்றும் சமரசம் செய்துகொண்டதேயில்லை. அதனால்தான், அவரது திரைப்படங்களில் பாடல்களுக்கு தனிச்சிறப்பு இருந்தது. அவரது பாடல்களுக்கு தனி மதிப்பும் இருந்தது.

    தன்னுடைய திரைப்படங்களால் யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது என்பதில் அதிக அக்கறை காட்டினார். அதனால்தான் ஒரு படத்துக்கும் மற்றொரு படத்துக்கும் குறைந்த பட்சம் 3 மாத இடைவெளியை அமைத்து வெளியிடச் செய்தார். இடைவெளி அதிகரித்து ரசிகனும் ஏமாந்துவிடக் கூடாது, இடைவெளி குறைவதால், தயாரிப்பாளரும் நஷ்டமடைந்துவிடக் கூடாது என்று சரியான தெளிவான திட்டமிட்டுத் தன் தொழிலை அர்ப்பணிப்புடன் செய்தார்.

    வீரம் பாசம் விவேகம் மட்டுமின்றி நகைச்சுவையிலும் எம்ஜிஆர் அவர்கள் குறை வைத்ததில்லை. அலிபாபாவும் 40 திருடர்களும், சபாஷ் மாப்பிளே, மாட்டுக்கார வேலன், பெரிய இடத்துப் பெண், குடியிருந்த கோயில் என்று பல படங்களில் நகைச்சுவைக்குப் பஞ்சமேயில்லை. உருக்கமான நடிப்புக்கு உதாரணங்களாய் பெற்றால்தான் பிள்ளையா, பணம் படைத்தவன், எங்க வீட்டுப் பிள்ளை என்றும், வீரத்துக்கு அடிமைப்பெண், அரச கட்டளை, மதுரை வீரன், மன்னாதி மன்னன், மகாதேவி என்றும் ஏராளமாய்! இப்படி நவரசங்களையும் வெளிப்படுத்தும் நயமான கதாபாத்திரங்களிலெல்லாம் நடித்து தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை நிரூபித்து, ரிக்சாக்காரன் திரைப்படத்துக்காக இந்திய அளவில் சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருதும் பெற்றார்.

    திரைப்பட வாய்ப்புகளுக்காக எந்தக் கொள்கையையும் கட்டுப்பாட்டையும் விட்டுக் கொடுக்கும் மனிதர்களுக்கிடையில், தன் இறுதி மூச்சு வரை எதற்காகவும் தன் கொள்கைகளை மாற்றிக் கொள்வதில்லை, கட்டுப்பாடுகளை விட்டுக்கொடுப்பதில்லை என்கிற அசைக்க முடியா உறுதியுடன் வாழ்ந்து காட்டியவர் இந்தப் பொன்மனச் செம்மல்.

    புரட்சித் தலைவர்:
    தன் திரைப்படங்களை தான் சார்ந்த அரசியல் இயக்கத்துக்குப் பயன்தரும் வகையில் அந்தந்தக் காலகட்டங்களில் அமைத்துக் கொண்டார். அதனால்தான், அறிஞர் அண்ணா அவர்கள் அரசியல் மேடைகளுக்கு கலைஞர் கருணாநிதியையும் திரைப்படங்களில் எம்ஜிஆர் அவர்களையும் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் துப்பாக்கியின் இரு குழல்களாக்கி கட்சியை வளர்த்தார், கொள்கைகளைப் பரப்பி வந்தார். அண்ணாவின் தொண்டனாகத் தொடங்கிய அரசியல் வாழ்வில் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியுயர்வு பெற்றார். 1969ம் ஆண்டு அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கலைஞர் முதல்வராகப் பொறுப்பேற்க, எம்ஜிஆர் கட்சியின் பொருளாளர் பொறுப்பேற்றார். சிறிது காலத்திலேயே கலைஞருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியை விட்டு விலக்கப்பட்டு தனிக்கட்சி கண்டார்.

    திராவிட முன்னேற்றக் கழகம் என்பது அறிஞர் அண்ணா உருவாக்கிய கட்சி, அந்தப் பெயரும் மாறிவிடக் கூடாது, கருணாநிதியும் தன் கட்சிப் பெயரை தவறாக விமர்சிக்கக் கூடாது என்று யோசித்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று அறிவுபூர்வமாகத் தன் கட்சிக்குப் பெயர் சூட்டினார். அவரது செல்வாக்கால் தனிக்கட்சி துவங்கி ஒரு ஆண்டுக்குள் திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் முதன்முதலாகத் தன் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரை வெல்ல வைத்தார். அடுத்த ஆண்டு திமுக ஆட்சிக் காலத்திலேயே ஆளும் கட்சிக்கு எதிராக இவரது கட்சியை கோயம்புத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் வெற்றிபெற வைத்தனர். கட்சி துவங்கி 5வது ஆண்டிலேயே தேர்தலில் வென்று தமிழகத்தின் முதலமைச்சரானார். நடிகராக இருந்து அரசியலில் ஈடுபட்டு நாடாள வந்து ஒரு புதிய புரட்சியைத் தோற்றுவித்தார். இவரைத் தொடர்ந்தே நடிகராக இருந்த பலரும் அரசியலில் ஈடுபட தைரியம் பெற்றனர். இரு துறைகளிலும் தான் மட்டுமே முதன்மையாக இருக்க வேண்டும் என்கிற பேராசை, கர்வம், ஆணவமின்றி, அரசியலில் முழுமையாக ஈடுபடவேண்டிய நிலை வந்ததும் தானாகவே திரையுலகை விட்டு விலகி, இளைய தலைமுறைக்கும் புதுமைக்கும் வழிவிட்டு ஒதுங்கினார்.

    நடிகருக்கு நாடாளத் தெரியுமா என்று கேள்வி எழுப்பியவர்களுக்கெல்லாம் ஒரே பதில்: இவரது மரணம்வரை இவரை யாராலும் வீழ்த்த முடியவில்லை என்பதே. கருணாநிதியை எதிர்த்து கட்சி துவங்கினாலும், அவர்மீது வைத்திருந்த மரியாதையை எம்ஜிஆர் எப்போதும் குறைத்ததேயில்லை. முக்கியமாக, தன் இறுதி மூச்சுவரை ‘கருணாநிதி’ என்று அழைக்காமல் ‘கலைஞர்’ என்று மரியாதையுடன் அழைத்து வந்தார். அதுதான் எம்ஜிஆர்.! இவருடன் நடித்த நடிகர்கள் பலபேர் இவரது கட்சியில் அடைக்கலமாகி சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் என அரசியலில் வலுவான பதவிகளைப் பெற்றனர். இவரது தொண்டர்கள் மந்திரிகளாக மாண்பு பெற்றனர். கிராமங்கள்தோறும் எம்ஜிஆரின் புகழ் ஒவ்வொரு குடிசையிலும் அரியாசனமிட்டு கோலோச்சிக் கொண்டிருந்தது. ஏழைகளைக் கருத்தில் கொண்டு பல திட்டங்களை செயல்படுத்தினார். குறிப்பாக கர்மவீரர் காமராசரால் அறிமுகப்படுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டத்தை சத்துணவுத் திட்டமாக மாற்றி ஏழைக்குழந்தைகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி சாதனை புரிந்தார்.

    அரசியலாகட்டும், திரைப்படங்களாகட்டும், தன் ஆளுமையை என்றுமே அவர் இழந்ததில்லை. அவரை முழுமையாக நம்பியவர்களை அவர் என்றுமே ஏமாற்றியதில்லை, மாறாக அவரால் பலனடைந்து பணம் சம்பாதித்தவர்கள் ஏராளம்.

    மக்கள் திலகம்:
    எம்ஜிஆரின் இல்லத்துக்குச் சென்றுவிட்டு யாரும் உணவருந்தாமல் திரும்பமுடியாது. தாய்மைப் பண்புக்குதாரணமாய், வயிற்றுப் பசிக்கு உணவிட்டு அனுப்புவது அவரது தலையாய பண்பு. அதேபோல், ஏழைகள் யாரும் உதவி என்று அவரது வீட்டுப் படியேறினால் வெறும் கையுடன் திரும்புவதும் நடக்காத ஒன்று. கேட்டு செய்த உதவிகள் ஒருபுறம், வெளியுலகுக்குத் தெரியாமல் கேளாமலே செய்த உதவிகள் எண்ணிலடங்கா.

    எம்ஜிஆரை நாடி, அவரது ஆதரவை நாடி, அவரது புகழெனும் ஆலமரத்தினடியில் இளைப்பாற ஆயிரக்கணக்கானோர் வந்தனர். ஆனால் யாரிடமும் கையேந்தி நிற்க ஆண்டவன் அவரைத் தாழ்த்தியதுமில்லை, அந்நிலைக்கு அவரைத் தள்ளியதுமில்லை. தன் இறுதி மூச்சுவரை வாரி வாரி வழங்கினாரே தவிர, தனக்கு வேண்டும் என்று வாரி வைத்துக் கொண்டதில்லை. ஏழைக்கு உதவுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தாரே தவிர, ஏழையின் சாபத்திற்கு என்றும் ஆளானதில்லை. தமிழ் மக்கள்மீது பாசத்தைப் பொழிந்தாரேயன்றி, அரசியல் வேசத்தைக் காட்டி ஏமாற்றியதில்லை. யார் வயிற்றிலும் அடிக்கவில்லை, வள்ளல் என்றே பெயர் பெற்றார். யார் குடியையும் கெடுத்ததில்லை, பலரின் குடி உயர காரணமாய் இருந்திருக்கிறார். தமிழன் என்று சொல்லிக்கொண்டு, தமிழருக்கே துரோகமிழைக்கும் பலருக்கு நடுவில், மலையாளி என்றாலும் தன்மீது அன்பும் நம்பிக்கையும் வைத்த தமிழ் மக்களுக்கு உண்மையானவராக இருந்தார். தமிழரெல்லாம் ஆங்கிலத்தில் கையெழுத்திட்டு வந்த நாகரிகத்திற்கு மாற்றாக, தமிழில் கையெழுத்திட்டு தன்னை வளர்த்த மண்ணுக்கு மாண்பைக் கூட்டினார், நன்றியைக் காட்டினார்! பொழுதுபோக்காக மட்டுமே இருந்த திரைப்படம் என்னும் சாதாரண ஊடகத்தை, கருத்துக்களை விதைக்கவும், கொள்கைகளை முழங்கவும், தத்துவங்களை உரைக்கவும் விழிப்புணர்வை வெளிப்படுத்தவும் கூடிய பலமான ஆயுதமாக மாற்றிக் காட்டினார். மக்கள் மனங்களில் இடம்பிடித்து விட்டால் போதும், உலகையே வெல்லலாம் என்பதை தன் வாழ்வில் நிரூபித்துக் காட்டினார்.

    பிரச்சாரத்திற்கே போகாமல் மருத்துவமனையில் படுத்துக் கொண்டே தேர்தலில் வென்றார். துப்பாக்கி குண்டுகள்கூட துளைக்க முடியாமல் துவண்டு போக மறுபிறவி கண்டார். இட்ட அடியெல்லாம் வெற்றிப்படிக்கட்டுகளாக மாற்றிக் காட்டினார். தொட்டதெல்லாம் பொன்னாக துலங்கச் செய்தார். திக்குத் தெரியாமல் திசை தெரியாமல் அல்லாடியவர்களுக்கு விடிவெள்ளியாகக் காட்சி தந்தார்.

    1950களில் தொடங்கி 1977 வரை தமிழ்த் திரையுலகின் முடிசூடா மன்னனாய் வலம் வந்த மக்கள் திலகம், அதன்பின் தமிழ்நாட்டின் முடிசூடா மன்னனாக மாறி, தமிழ் மக்களின் இதயங்களில் முதல்வராய் வலம் வந்தார். உடற்பயிற்சி, தங்க பஸ்பம், ஆரோக்கியம் என்று அனைவருக்கும் போதித்த அந்தத் தேக்குமர தேகத்தை, பொன்னொத்த பளிங்கு மேனியை, வெற்றிகளால் வேயப்பட்டிருந்த அந்த நிழல்தரும் குடிலை, கதாநாயகிகள் ஊஞ்சலாடிய அந்தக் கட்டுடலை, நோய் என்னும் சாத்தான் ஏதோ ஒரு துரதிர்ஷ்ட சமயத்தில் ஏமாற்றி உள்நுழைந்து, உருக்குலைக்கத் துவங்கினான். அந்தச் செய்தி கேட்டு, அகில உலகமும் அதிர்ச்சியடைந்தது, அல்லாடித்தான் போனது, ஆறுதல் கொள்ள வழியின்றி கதறித் துடித்தது. அவரது அருமையும் தேவையும் தெரிந்த அன்னை இந்திராகாந்தி, தனி விமானம் தந்து உடனடியாக அமெரிக்காவுக்கு அனுப்பி சிகிச்சை பெற ஏற்பாடு செய்தார்.

    சிகிச்சை முடிந்து திரும்பியவரை வரவேற்க தமிழகமே விமான நிலையத்தில் திரண்டது. தன் வலிமை குறைந்து விடவில்லை என்பதை அதன்பின் பல நிகழ்ச்சிகளில் அவர் நிரூபித்திருக்கிறார். ஆனாலும் விதி வலியது என்னும் சொல்லுக்கேற்ப காலன் அவர்மீது காதல் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் கவர்ந்து போய்விட்டான்.

    அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா போயிருந்த சமயத்தில் அனைத்து திரையரங்குகளிலும் அவர் குணம்பெறவேண்டி, காட்சி தவறாமல் ஒளிபரப்பப்பட்ட ‘ஆண்டவனே உன் பாதங்களை கண்ணீரால் நீராட்டினேன்’ மற்றும் ‘நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற’ ஆகிய பாடல்கள் திரையில் இடம்பெற்ற போது அவருக்காக கண்ணீர் சிந்திய மனங்களில் அன்று மட்டுமல்ல, இன்று மட்டுமல்ல, என்றும் எம்ஜிஆர் வாழ்ந்து கொண்டிருக்கிறார், வாழ்ந்து கொண்டிருப்பார் என்பது தமிழ் சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு.

    மக்களின் திலகமாக, பொன்மனச் செம்மலாக, புரட்சித்தலைவராக, முதல்வராக, நமது குடும்பத்தில் ஒருவர்போல் தோன்றிய, இளைஞர்களின் உதாரண புருஷனாக, தாய்க்குலத்தின் தவப்புதல்வனாக, இளம்பெண்களின் சகோதரனாக, கனவுக் கண்ணனாக, நல்லபல மனிதர்களின் உற்ற நண்பனாக சிரமத்தில் கைகொடுக்கும் ஆபத்பாந்தவனாக, கஷ்டங்களில் கண்ணீரைத் துடைக்கும் ரட்சகனாக, தமிழ்நாட்டை மட்டுமின்றி தமிழர் இருந்த இடங்களிலெல்லாம் குதூகலம் குடிகொள்ள வைத்த இணையில்லா கலைஞனாகத் திகழ்ந்த அம்மாமனிதர், என்றும் மனத்தில் நிறைந்த மக்கள் திலகம் என்று சொல்வதில் கர்வப்படுகிறேன். அவரது ரசிகன் என்பதில் பெருமைப் படுகிறேன். அவரின் மறைவுக்குப் பின்னும் அவரது புகழின் தாக்கத்தை உணர்ந்ததனால்தான் இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ அவரைத் தேடி வந்து தஞ்சமடைந்தது.

    வாழ்க எம்ஜிஆர் எனும் பெயர்! ஓங்குக அவரது புகழ்!

  10. #3169
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    –நர்கிஸ் ஜியா.

    எம்ஜிஆர்! மூன்றெழுத்தில் ஒரு மந்திரம்!

    சாதிமத பேதம் கடந்த ஒரு மந்திரம்! மந்திரங்கள்கூட சமயத்தில் உச்சரிப்பை மட்டுமே ஆட்கொள்ளும்! இந்த மூன்றெழுத்து மந்திரமோ ‘அதுக்கும் மேலே’ என்றும் உள்ளத்தை ஆட்கொள்ளும். இதன் திறம், இறைவன் அளித்த வரம்!

    எம்ஜிஆர் மனதில் நிறைந்தவர் மட்டுமா? பலர் மனதை வென்றவரும்கூட என்பதில் இருவேறு கருத்தில்லை! வரையறுக்க முயல்கிறேன் வரிகளில், வள்ளல் என வாழ்ந்த இப்பெருந்தகையை! எம்.ஜி.இராமச்சந்திரன் – நாடுவிட்டு நாடு வந்து நாட்கள் பல காத்திருந்து நாடகங்களில் கால் பதித்து இன்று நிலைத்து நிற்பதோ நம் அனைவரின் நெஞ்சங்களில்!

    இவருடைய திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாடமாய் நற்கல்வியாய் பலருக்கு வழிகாட்டிக் கொண்டிருப்பது இன்றளவும் கண்கூடான உண்மை! அழகிய தமிழ்மகன் இவர்! அழகென்ற சொல்லுக்குப் பொருத்தமானவர்! பொதுவாக கவிஞர் கூட்டம் கதாநாயகிகளையே வர்ணித்து பாடல்கள் புனைந்து வந்த நிலையில், இவரது வரவால் கதாநாயகனை, இவரது தேக்குமர தேகத்தை, பொன் தந்த நிறத்தை விரும்பி,

    ‘தேக்குமரம் உடலைத் தந்தது,
    சின்னயானை நடையைத் தந்தது,
    பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது,
    பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது என்று வர்ணித்துப் பாட வைத்தது.

    புகழ்ந்து பலர் பாடினாலும் அதற்குப் பொருத்தமாய் வாழ்ந்து காட்டிய தோற்றம் மட்டுமா? அவரின் மன ஏற்றமும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது! இந்த வள்ளல் திருக்குறளை நிறையப் படித்திருப்பார் நிச்சயமாக! எவரெவர் எப்படியெப்படியெல்லாம் இருக்க வேண்டுமென வள்ளுவர் பெருமான் வரையறுத்துள்ளாரோ அப்படியெல்லாம் தன்னை நெறிப்படுத்தி நிஜத்தில் வாழ்ந்து காட்டிய நேர்த்தி சொல்லி மாளாது! சொற்களில் அடங்காது!

    இவருக்காக எழுதிய பாடல்கள் வியப்பின் உச்சம்! திரைப்படத்தை மீறி உண்மையாகவே இவருக்கெனப் பிறந்த அந்த வார்த்தைகள் இவருக்கு மட்டுமே பொருத்தமான அவ்வரிகள் இவரால் வளம் பெற்றன, சாகாவரம் பெற்றன! கற்புக்கரசி பெய்யென்று சொன்னால் பெய்யுமாம் மழை! இலக்கியத்தில் படித்திருக்கிறோம். அப்படி இவருக்கு திரைப்படத்திற்கு எழுதிய வரிகள் நிஜமானது வியப்பின் உச்சம். ‘உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்’ பாடலில்,

    மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு
    மாலைகள் விழவேண்டும்! ஒரு
    மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று
    போற்றிப் புகழவேண்டும்!

    கவிஞரின் கற்பனையில் பிறந்த வரிகள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டது எப்படி?

    ‘மனிதனென்பவன் தெய்வமாகலாம்
    வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்’

    என்கிற வரிகளுக்கேற்ப வாரி வாரி வழங்கி வள்ளலானார், பின் மக்கள் மனங்களில் தெய்வமானார்.

    ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்
    இங்கு ஏழைகள் வேதனைப்படமாட்டார்.
    உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
    அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார்’

    என்று பாடியவர், ஆணையிட்டு ஏழைகளின் நல்வாழ்வுக்காகப் பாடுபட்டார். ஏழைகளை மனதில் தாங்கி அவர்களுக்கான திட்டங்கள் வகுத்தார்.

    அதனால்தான், மக்கள் பாடி வாழ்த்தினர்,

    ‘நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற
    இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற’ என்று!

    இந்த வாழ்த்து அவர் நோய்வாய்ப்பட்டிருந்த போது வேண்டுதலாக மாறி,

    ‘ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரால் நீராட்டுவேன்
    இந்த ஓருயிரை நீ வாழவிடு என்று உன்னிடம் கையேந்தினேன்’

    என்னும் வேண்டுதலுடன் சேர்த்து ஒவ்வொரு திரையரங்கிலும் கூட்டுப் பிரார்த்தனையாய் தமிழ்நாட்டு மக்களின் எண்ணப் பிரதிபலிப்பாய் ஒலித்துக் கொண்டிருந்தது, அவர் நலம்பெற்று திரும்பி காலடி வைக்கும்வரை!

    இவையனைத்துமே அவரே அறியாமல் அவருக்காகப் பாடப்பட்டு பின் உண்மையாய் மாறிய வரிகள்!

    மக்கள் திலகம்! மகளிர் மனதில் மிக நெருக்கமான உறவுகளாய் பாசமிகு மகன், அன்பு அண்ணன், ஆசைத் தம்பி என பதிந்ததோடு உதாரணக் காதலனாகவும் இருந்திருப்பார் என்பதில் ஐயமில்லை. திரையுலகம் என்பது சக்திமிகுந்த ஊடகம், அதில் கதாநாயகன் என்பவன் மூன்று மணி நேரம் காண்போர் மதியை ஈர்ப்பவன் என்ற பொறுப்பை உணர்ந்து சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து பாசம், வீரம், விடுதலை, வேட்கை, கடமை என நல்ல விஷயங்களையே கையாண்டு காண்போருக்குக் கருத்தில் பதிய வைத்தவர். பல கலைகளில் தேர்ந்த இந்த சகலகலா வல்லவர், படிப்பதைவிட பார்ப்பது மக்கள் மனதில் பதிந்துவிடும் என்ற மனோதத்துவத்தை அறிந்து, அதிலும் படிப்பறிவில்லா பாமர மக்களையும் மனதில் கொண்டு நன்மை விதையைத் தூவி அனைவரின் மனதிலும் வேரூன்றிய இந்த எம்ஜிஆர் எனும் பயிர் சற்று துறை மாறி அரசியலில் நுழைந்தது, தமிழ்நாட்டு வரலாற்றில் பொற்காலம் என்பது வியப்பேதுமில்லை.

    வெற்றி இவரால் பேருவகை கொண்டது. தோல்வியோ தோல்வி கண்டே துவண்டது. தலைவன் என்ற சொல் தாழாமல் தனித்துவம் கண்டது. இவருடைய புதிய கட்சியின் கொடியும் பெயரும் இதயக்கனி என இவரை மனதில் தாங்கிய அண்ணாவை கொள்கைத் தலைவர் என ஏற்றுப் பெருமைப் படுத்தியது. இவருடைய மனதில் அண்ணாவிற்கு இருந்த பக்தியை ஒவ்வொரு மேடையிலும் ‘அண்ணா நாமம் வாழ்க!’ என்ற வாக்கியத்தால் பறைசாற்றியது. பிறருக்கு வாய்ப்பூட்டு போட்டது. அண்ணாவை மட்டுமே தலைவனாக ஏற்றதால், இவரது கட்சியில் அண்ணாவுக்கான தலைவர் நாற்காலி காலியாகவே வைக்கப்பட்டது. செயலாளராகவே இவரை செயல்பட வைத்தது.

    வலுக்கட்டாயமாக தமிழ்நாட்டை ஆண்டவர் இல்லை, இவர் வசந்த பூமியாய் தமிழ்நாட்டை மாற்றியவர். மத்தியில் என்றும் இணக்கம் காட்டி தன் மதியால் தமிழ்நாட்டுக்குப் பல நல்ல திட்டங்களைப் பெற்றுத் தந்தவர். பொங்கலுக்குப் பரிசு தந்து எல்லோர் வீட்டிலும் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ ஆனார். கல்வித்துறை, காவல்துறை, போக்குவரத்துத் துறை, வேலைவாய்ப்புகள் என்று இவரது ஆட்சிக்காலத்தில் வளர்ச்சி கண்ட துறைகள் பல. குறிப்பாக, 5ம் உலகத் தமிழ் மாநாடும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமும், அன்னை தெரசா பல்கலைக்கழகம், தெலுங்கு கங்கை திட்டம் (கிருஷ்ணா நதிநீர்த் திட்டம்) ஆகியவை இவரது ஆட்சியின் அடையாளங்கள். மதுவுக்குத் தடை போட்டார். மகளிர் மட்டும் பேருந்துகளுக்கு விதையிட்டார். ஏழைக் குழந்தைகளின் கால்களுக்கு காலணி தந்து காத்திட்டார்.

    அதேபோல், எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கொள்கைகளில் மாறுபட்டிருந்தாலும், அரசவைக் கவிஞர் என்னும் புதிய பதவியை உருவாக்கி, அதில் முதல் நபராக கவியரசர் கண்ணதாசனை அமரவைத்து அழகு பார்த்த இவரது பெருந்தன்மை மறுக்கவோ, மறக்கவோ முடியாதது. கல்லூரிகளில் அதிக மாணவர்களைச் சேர்க்க அனுமதியளித்து பல மாணவர்களின் வாழ்வில் ஒளி விளக்கானவர்.

    எண்ணமே வாழ்வு என்பார்கள், தேர்தல் களத்தில் அனுதினமும் அல்லலுற்று ஓட்டு வேட்டையாடும் அரசியல்வாதிகளுக்கிடையில் தேர்தல் நடந்து முடியும்வரை ஆளே வராமல் ஆண்டிப்பட்டியில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தது மட்டுமின்றி, பெரும்பான்மையும் பெற்று முதல்வரானதிலிருந்தே இவர் மக்கள் மனதில் பதிந்த ஆழம் புரியும். நீள அகலங்கள் விரியும்.

    தொண்டர்களை மதித்து அரவணைத்து ஒவ்வொருவரின் திறமையையும் உணர்ந்து பொறுப்பளித்து எண்ணித் துணிந்து செயலாக்கிய இவர் மின்னி மறையும் மின்னலல்ல, வான் உள்ளவரை தமிழ் உலகை ஆளும் பொன்மனச்செம்மல் ஆவார். அவரின் மனத்தைப் போலவே வெள்ளை உடையும், அவருடைய சுறுசுறுப்புக்கேற்ற கைக்கடிகாரமும், கதிர்வீச்சுக் கண்களைக் கட்டுக்குள் வைத்த கறுப்புக் கண்ணாடியும், அனைத்துக்கும் சிகரமாய் மெத்தென்ற தொப்பியும் நிலையாய்ப் பூண்டு வந்த இந்த இணையற்ற மக்கள் திலகம் மக்களின் மனங்களை விட்டு மறையவேயில்லை, நிறைந்தே இருக்கிறார். அதனால்தான் அவர் நடமாடிவந்த இந்தத் தனித்துவமான அற்புத அடையாளங்களோடு அவர் மெரீனா கடற்கரையில் ஆழ்ந்த நித்திரைக்கு அனுப்பப்பட்டார். அவரது பூவுடல்தான் அங்கே உறங்குகிறது. ஆனால் அவரது ஆன்மா என்றென்றும் தமிழ்மக்களின் இதயங்களிலேயே நிலைத்து நின்று வாழ்ந்துகொண்டிருக்கும்.

    மனத்தில் நிறைந்த மக்கள் திலகம் வாழ்க.

  11. #3170
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    எஸ். சசிகலா

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவரை ஒரு சகாப்தம் என்றுதான் சொல்ல வேண்டும். வாழும் நாளில் வாழ்வது வாழ்க்கையல்ல, இறந்தபின்னும் வாழும் வாழ்க்கைதான் சிறந்தது என்றொரு பொன்மொழி உண்டு. அதை மெய்ப்பிக்கும் விதமாக இன்றளவும் மனத்தில் நிறைந்தே நீக்கமற நிறைந்திருக்கிறார் மக்கள் திலகம்.

    உதயம்
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்ன் முழுப்பெயர் எம் ஜி ராமச்சந்திரன். 1917-ஆம் ஆண்டு ஜனவரி 17-ம் நாள் இலங்கையில் கண்டி அருகே உள்ள நாவலபிடியாவில் பிறந்தார். தந்தை கோபால மேனன், தாயார் மருதூர் சத்யபாமா. மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் என்ற இயற் பெயரைக் கொண்டவர்,பின்னாளில் எம்ஜிஆர் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். அது தவிர மக்கள் திலகம், இதயக்கனி, பொன்மனச்செம்மல், புரட்சித் தலைவர் என்ற பட்டங்களும் உண்டு. சிறுவயதில், குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத் தொடர முடியாததால், நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துதுறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி பிரபலமான நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களை மனதளவில் பெரியதாக அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாகக் கவர்ந்தது.

    மண வாழ்க்கை….
    எம்ஜிஆர், தங்கமணி என்ற கிராமத்துப் பெண்ணை முதலில் திருமணம் செய்தார். ஆனால் அவர் உடல்நலமின்றி சிறிது நாட்களிலேயே இறந்துவிட, பின்னர் சதானந்தவதி என்ற பெண்ணை மறுமணம் செய்தார். அவரும் காசநோயால் இறந்துவிட இறுதியாக நடிகை வி.என்.ஜானகியை மணம் முடித்தார்.

    திரை வாழ்க்கை….
    அமெரிக்க இயக்குநர் எல்லீஸ் டங்கன் 1935ல் முதன்முதலில் தமிழில் இயக்கிய சதிலீலாவதி என்ற படத்தில்தான் எம்ஜிஆர் முதன் முதலில் அறிமுகமானார். எம்.ஜி.ஆரே தயாரித்து இயக்கிய முதல் படம்நாடோடி மன்னன் இந்த படம் 1956ம் ஆண்டு வெளியானது.1974ம் ஆண்டு வெளியான ராஜகுமாரி என்ற படம்தான் எம்ஜிஆருக்கு மிகம்பெரும் வெற்றியை ஈட்டித்தந்தது .ரிக் ஷாக்காரன் திரைப்படம் எம்ஜிஆருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை பெற்றுத் தந்தது.

    அரசியலில்………
    திரையுலகை விட்டு அரசியலுக்கு வந்தபோதும், திரைப்படங்களுக்கு வெற்றி தேடித்தந்த தமிழக மக்கள்தங்கள் மனங்கவர்ந்த நாயகரை ஏமாற்றவில்லை. அண்ணாவின் இதயக் கனியானஎம்.ஜி.ஆருக்கு,அரசியலிலும் வெற்றிக் கனியை கொடுத்தார்கள்.அண்ணாவின் மறைவுக்குப் பின், தி.மு.கழக ஆட்சியின் மீது சிறிது சிறிதாக அதிருப்தி வளரத் தொடங்குவதைக் கண்ட எம்.ஜி.ஆர், 1972ம் ஆண்டு அதிமுகவை உருவாக்கினார். தேவை எனத் தோன்றியபோது தனியாக சொந்தக் கட்சியைக் தொடங்கினார். அவர் வாழ்ந்த காலம் வரை மக்கள் மனதில் இடம் பிடித்திருந்த காரணத்தால், அவர் கட்சி தோல்வியைச் சந்திக்கவே இல்லை. 1977ம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்ஜிஆர் 1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி வரை முதலமைச்சராக இருந்தார்.

    பொன்மனச் செம்மல்
    எம்.ஜி.ஆர் என்னும் பொன்மனச் செம்மல் வாழ்ந்த காலத்தில் ஆற்றிய அளப்பரிய பணிகள் இன்றளவும் நினைவுகூரத்தக்கதாக இருப்பதை யாராலும் மறக்கவே மறுக்கவே முடியாது. எல்லோரும் தமது சம்பாத்தியத்தை தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் மட்டுமே பயன்படத்தக்க விதத்தில் அமைத்துக் கொள்ளும்போது, இவர் மட்டும் தன் வருமானத்தின் பலனை அனைவருக்கும் அளித்தார். எல்லோருடனும் அன்பாகப் பழகும் தன்மையைக் கொண்டிருந்தார். பல திருமணங்களுக்கு நேரில் சென்று அக்குடும்பத்தவர்களுக்கு தேவையான தொகையைப் பரிசாக வழங்கிவந்தார். ஈகை அவரது மிகப் பெரியபலம்.அதனாலேயே பொன்மனச் செம்மல் என்று மக்கள் இவரை அன்போடு அழைத்தனர்.

    மறக்க முடியாத மாமனிதர்
    எதிரிகள் தன்னைச் சிலுவையில் அறைந்து இம்சித்த போதும்கூட, ”அறியாமல் செய்யும் இவர் பாவங்கள் மன்னிக்கக்கடவது….” என்று பரமபிதா சொன்னதாக பைபிள் சொல்கிறது. அதற்கு இணையாக, இந்த இருபதாம் நூற்றாண்டில் நடந்த நிஜம் ஒன்று. இன்னும் நம் கண்முன்னே நிழலாடிக்கொண்டிருக்கிறது

    1967 ஜனவரி பன்னிரண்டாம் தேதி இராமாவரம் இல்லத்துக்குள்ளே புகுந்த எம்.ஆர். இராதா, வள்ளலைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தானும் சுட்டுக்கொள்கிறார். கழுத்தில் குண்டு பாய்ந்ததால் இரத்தம் பீறிட்டு வருகிறது. வள்ளல் அதைக் கையால் அழுத்திப் பிடித்துக்கொண்டு, எம்.ஆர். இராதாவைத் தாக்க முயன்ற தன் விசவாசிகளிடம், “இராதா அண்ணனை ஒன்றும் செய்துவிடாதீர்கள். அவரைப் பத்திரமாக வெளியில் கொண்டு போய்விட்டு விடுங்கள்…” என்று ஆணையிடுகிறார்.

    அந்தத்தன்மைதான் எம்ஜிஆரின் உயரிய குணங்களில் ஒன்றாக இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. அதுவே இன்றளவும் மக்கள் மனதில் அவரை நிறுத்தி வைத்திருக்கிறது. அந்த இக்கட்டான நேரத்தில்கூட தன்னைத் கொல்ல வந்த கொலையாளியைக சர்வவல்லமையும், செல்வாக்கும் படைத்த செம்மல் காத்து நிற்கிறார்.

    தன்னை கொல்லும் பொருட்டு தன்மீது கத்தி எறிந்த சிவனடியார் வேடத்தில் வந்த மூத்தநாதனை, அவன் உயிருக்கு ஆபத்து ஏற்படா வண்ணம், அவனை ஊருக்கு வெளியே கொண்டு போய் பத்திரமாக விட்டுவா என்று தத்தனை ஏவிய, மெய்ப் பொருள் நாயனார் போலத்தான் வாழ்ந்திருக்கிறார் மக்கள் திலகம்.

    கேட்டவர்க்கு கேட்டபடி…
    பள்ளிக் குழந்தைகள் பசியோடு பயிலக்கூடாது என்பதற்காக, மதிய உணவுத்திட்டத்தை வழி வகுத்தவர் மக்கள் திலகம்.

    பசி என்று ஒருவன் வந்துவிட்டால், அவனின் பசியைப் போக்கிப் பரவசம் அடைவார். ஒருவன் அணிந்து கொள்ள ஆடை வேண்டி வந்தால், அவனுக்கு ஆடை அணிவித்து அழகு பார்ப்பார். இப்படி பொன் கொடுத்து, பொருள் கொடுத்து, கேட்டவர்க்கு கேட்டதைக்கொடுத்து, கேட்காதவர்களுக்கு கொடுத்து மகிழ்ந்த வள்ளலிடம், வாழ்நாளில் யாருமே தன்னிடம் இதுவரை கேட்காத ஒன்றை கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் கேட்கிறார்.

    1967-ல் பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப்பின், அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுகையில்,கலைஞர் வள்ளலைச் சந்தித்து, தன் விருப்பத்தை தெரிவிக்கிறார். அதைக் கேட்ட மக்கள் திலகம், ஒருநிமிடம் யோசித்தார். அடுத்த விநாடியே, “நான் பார்த்துக்கொள்கிறேன். பதட்டம் இல்லாமல் செல்லுங்கள்…” என்று கலைஞருக்கு வாக்குக் கொடுத்து வழியனுப்பி வைக்கிறார்.

    அதற்குப்பிறகு, இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் அவர்களுக்குப்போன் செய்து,மதியச் சாப்பாட்டுக்கு வருகிறேன் என்று சொல்கிறார். சொல்லியபடி சரியாக ஒரு மணிக்கு இலட்சிய நடிகரின் இல்லம் வருகிறார் வள்ளல். இலை போட்டுவிட்டு இன் முகத்துடன் இலட்சிய நடிகரின் தாய், சமையல் கட்டிலிருந்து பதார்த்தங்களை எடுத்து வந்து வைக்கிறார். இந்த நேரத்தில் இலட்சிய நடிகர் வள்ளலிடம் “அண்ணே! இப்படித் திடுதிப்புன்னு சாப்பிட வர்றேன்னு நீங்க சொன்னா இதுல ஏதோ விஷயம் இருக்கும்….என்னன்னு சொல்லுவாங்க….!” என்றார்.

    அப்பொழுதுதான் இலட்சிய நடிகரிடம், “கலைஞர் முதல்வர் நாற்காலியல் அமர விரும்புகிறார். நானும் அமர வைப்பதாக வாக்குக் கொடுத்து விட்டேன். அதற்கு உன்னுடைய உதவி தேவைப்படுகிறது. உன் பக்கம் உள்ள எம்.எல்.ஏக்களை கலைஞருக்கு ஆதரவாக செயல்படச் செய்யணும்…” என்று வள்ளல் விளக்குகிறார்.

    அதற்கு இலட்சிய நடிகர் நிறைய விளக்கம் அளித்து, “உங்களுக்காக என் உயிரையும் தருவேன். ஆனால் இது உங்களுக்கு வேண்டாத வேலை!” என்று எச்சரிக்கிறார்.

    உடனே, “நான் சாப்பிடட்டுமா? வேண்டாமா” என்கிற தமிழ்க் கலாசார பிரம்மாஸ்திரத்தை பிரயோகிக்கிறார். அவ்வளவு தான்; இலட்சிய நடிகர் வீழந்து விடுகிறார்!

    “சரி நீங்க சாப்பிடுங்க..” ஒப்புதல் அளிக்கிறார் இலட்சிய நடிகர். அதற்குப் பிறகு முதல்வராகக் கலைஞர் பொறுப்பேற்கிறார்.

    வள்ளல் ஒருவருக்கு வாக்குக் கொடுத்துவிட்டால் வானத்தையும் வசப்படுததும் வலிமை பெற்றவர் என்பதும், நினைத்ததை முடித்துக் காட்டும் வல்லமை மிக்கவர் என்றும், நம்பி வந்தவர்களுக்காக நட்புக்காகத் தன்னையே இழக்கத் துணிகிற குணமும் தெளிவாகத் தெரிகிறது. அதுவே அவரை மனதில் வாழும் மனிதராகவும் வைத்திருக்கிறது.

    வாடிய பயிரைக் கண்ட வள்ளல்
    1972-ல் வள்ளல் துவங்கிய கட்சி, 1977-ல் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு அசுர பலம் கொண்டு வளர்ந்த நேரமது. வள்ளல் தமிழகம் முழுவதும் சுற்றி வலம் வருகிறார். அப்பொழுது ஏரி-குளங்களில் வற்றி, வாடிய பயிர்களும், வாடிய முகங்களும் மட்டுமே வள்ளலின் பார்வையில் படுகின்றன.

    கங்கை காவிரித் திடமெல்லாம் சட்டச் சிகலில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது. ஆட்சி அதிகாரம் தன்னிடம் இல்லாத பட்சத்திலும், தன்னால் ஆனதைச்செய்ய முடிவெடுக்கிறார் வள்ளல். உடனே கர்நாடகப்பொதுப்பணித்துறை அமைச்சர் பாலகிருஷணன் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு,மறுநாள் மதியம் அவர் வீட்டிற்குச்சாப்பிட வருவதை தெரிவிக்கிறார்.

    பொதுப்பணித்துறை அமைச்சர் பாலகிருஷ்ணன் அவர்கள், இதற்கு முன்பு பலமுறை வள்ளலை விருந்துக்கு அழைத்திருக்கிறார். அப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கும் பொழுது நிச்சயமாக வருகிறேன்’ என்று மழுப்பி வந்த வள்ளல், இன்று வலிய போன் செய்து வருகிறேன் என்று சொன்னதும், அமைச்சருக்கும், அவரது தாயாருக்கம் ஆனந்தம் தாளவில்லை! அமைச்சரின் தாயார் வள்ளலின் தீவிர ரசிகையும் கூட!

    மறுநாள் மதியம் பெங்களூர் விமான நிலையத்திலிருந்து சாப்பாட்டு நேரத்திற்குச் சரியாக வந்த வள்ளலை, அமைச்சரின் தாயார் அக மகிழ்வுடன் சாப்பிட அழைக்கிறார். அவரே விழுந்து விழுந்து உபசரிக்கிறார்.

    வந்த நோக்கத்தை அமைச்சருக்குத் தெரிவிக்கத் தருணம் பார்த்துக்கொண்டிருந்த வள்ளல், இரண்டுமூன்று வாய் சாப்பிட்டுவிட்டு வேண்டுமென்றே விக்க ஆரம்பிக்கிறார். வள்ளலின் தொடர் விக்கல் சத்தம் கேட்டு,அடுக்களையில் இருந்தவாறே, “ஏம்பா! பிள்ளை சாப்பிட முடியாம விக்கிக்கிட்டு இருக்குது. பக்கத்துல இருக்கிற நீ பார்த்துக்கிட்டு இருக்கியே? தண்ணிய எடுத்துத் தரக்கூடாதா?” என் கடிந்து கொள்கிறார்.

    உடனே வள்ளல், “எங்கே உங்க பிள்ளை தண்ணி தர்றாரு?” என்று சூசகமாய்ச்சொல்ல அதற்கு அமைச்சரின்தாயார், உனக்கா என் பிள்ளை தண்ணி தரமாட்டேங்குறான்…” என்று யதார்த்தமாகய் சொல்லிக் கொண்டே தண்ணீர் சொம்பை நீட்டுகிறார்.

    அமைச்சரின் தாயாரிடமிருந்து தண்ணீர் சொம்பை வாங்கிய வள்ளல், “அம்மா நீங்க எனக்குச்சாப்பிட சோறும், குடிக்கத் தண்ணீரும் தாராளமாக கொடுக்கிறீங்க..! ஆனா தமிழ் நாட்டுல சாப்பிட சோறே கிடைக்காத அளவுக்கு ஜனங்க தண்ணியில்லாமத்தவிக்கிறாங்க. பயிர் பச்சையெல்லாம் வாடிக் கிடக்குது…” என்று தான் வந்த நோக்கத்தைக் கோரிக்கையாக அமைச்சரின் தாயார் மூலம் அமைச்சரின் பார்வைக்கு நேரடியாகத் தெரிவிக்கிறார் வள்ளல்.

    புரிந்து கொண்டு பொதுப்பணித்துறை அமைச்சர், நட்பு நாடி வந்து நாசுக்காகத் தன்நாட்டு மக்கள் பிரச்சினையை முன் வைத்த வள்ளலைக் கட்டித் தழுவிக்கொள்கிறார். வள்ளல் பெங்களூரில் இருந்து சென்னை வந்து சேருவதற்குள் கர்நாடகத் தண்ணீர் தமிழகம் வந்து சேர்கிறது.இப்படி சாப்பாட்டு வேளையில்கூட சரித்திரம் படைத்தவர் வள்ளல் ஒருவர் மட்டும்தானே!

    பெற்றால்தான் பிள்ளையா?
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தன் வாழ்நாளில் ‘முதலாளி’ என்று அழைத்த சிலரில் சரவணா பிலிம்ஸ் ஜி.என். வேலு மணியும் ஒருவர். அவர் எம்.ஜி.ஆரைத் தன் படத்தில் நடிக்கும் ஒரு நடிகராக மட்டும் நினைக்காமல், தன் மனதில் வைத்து தன் குடும்ப உறுப்பினராகவே பாவித்து வந்தார். தன் வீட்டில் எந்த ஒரு விசேஷம் நடத்த நினைத்தாலும் எம்.ஜி.ஆரைக் கலந்தாலோசிந்துத்தான் முடிவெடுப்பார்.

    ஒரு நாள் அதிகாலை நேரம் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட வீட்டிற்குச் வந்தார் வேலுமணி.

    “என்ன முதலாளி! இவ்வளவு சீக்கிரமா வந்திருக்கீங்க.. விஷயம் ரொம்ப அர்ஜெண்டா?”

    “அர்ஜெண்டைவிட, அவசியம் என்பதால்தானே உங்களைப் பார்க்க வந்தேன்….”

    “சொல்லுங்க!”

    “பையன் சரவணன் ஒரு பொண்ணைக்காதலிக்கிறான். கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுகிறான்.”

    “அப்புறம் என்ன… அவன் ஆசைப்பட்டபடி நடத்தி வச்சுட வேண்டியதுதானே?”

    “இல்லே.. பொண்ணு ரொம்ப ஏழை! அது மட்டும்மல்லாம, அம்மா-அப்பா இல்லாத அநாதை! இப்பக்கூட அவுங்க அத்தை வீட்ல தங்கித்தான் படிக்குது அதான்…நம்ம ஸ்டேட்டசுக்கு இது சரிப்பட்டு வருமான்னு யோசிச்சுக்கிண்டு இருக்கேன்..”.

    என்ன முதலாளி ஸ்டேட்டஸ்? இப்படிப்பட்ட பொண்ணை நீங்க மருமகளா ஏத்துகறதுதான் உங்களுக்கு ஸ்டேட்டஸ்! இந்த்ததிருமணம் நடக்கறதுனால, உங்க உறவுக்காரங்க மத்தியிலயும் ஊர்க்காரங்க மத்தியிலயும் உங்க ஸ்டேட்டஸ் உயருமே தவிர குறையாது. ஒண்ணும் யோசிக்காம கல்யாணத்துக்குத் தேதி குறிச்சிட்டு வாங்க! அந்தப்பொண்ணுக்கு நானே அப்பாவா இருந்து, திருமணத்தை நடத்தி வைக்கிறேன்…”

    மறுப்பேதும் பேசாமல் வேலு மணி அங்கிருந்து விரைகிறார். திருமண வேலைகள் தடபுடலாக நடந்துகொண்டிருந்த வேளையில் கல்யாண மாப்பிள்ளை ஓட்டிச் சென்ற காரில் மோதி, ஒரு கிழவி இறந்துவிடுகிறார். வரப்போகிற பெண்ணின் ராசியால்தான் இந்த விபத்து நடந்திருக்கிறது என்று வேலுமணி வீட்டார் அந்தத் திருமணத்தையே நிறுத்தி விடுவதென்று தீர்மானித்து விடுகிறார்கள்.

    அதைக்கேட்ட எம்.ஜி.ஆர். மிகுந்த கோபத்துடன், “இதே அசம்பாவிதம் திருமணத்திற்குப் பின்னாடி நடந்திருந்தா என்ன பண்ணுவீங்க? சரி; உங்க மகளுக்கே இந்த மாதிரி நிலைமை வந்தா உங்களுக்கு எப்படி இருக்கும்? கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க…. எதுக்கும் உங்க விட்டுல திரும்பவும் எல்லார்கிட்டயும் பேசி, நல்ல முடிவோட வாங்க…’ என்று சொல்லியவர், காரில் ஏறப்போன வேலுமணியை நிறுத்தி, “இதோ பாருங்க முதலாளி… ஒருவேளை நாங்க எல்லோம் சேர்ந்து இந்தத் திருமணத்தை நிறத்தணும்னு முடிவெடுத் திட்டீங்கன்னா, அந்த அனாதைப் பொண்ணை நாளைக்கே என் தோட்டத்துக்கு அனுப்பி வச்சுடுங்க.. நானே அவளை என் மகளா த்த்து எடுத்துக்கிறேன்…” என்றார் பொன்மனச்செம்மல். அவரின் வார்த்தையைக் கேட்ட வேலுமணி, அப்படியே வெலவெலத்துப்போகிறார்.

    “கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் ஒரு பெண்ணின் வாழ்வில் விளையாடத்துணிந்தோமே! முகம் தெரியாத முகவரி அறியாத யார் பெத்த பிள்ளைக்காகவோ பரிஞ்சு பேசி, மகளாகத் த்த்தெடுக்க முன்றவந்திருக்கிறாரே! ஆனா நம்ம பெத்த பிள்ளை காதலிச்ச பொண்ணுன்னு தெரிஞ்சும் கூட கைவிட நினைச்சோமே..’ என்று மனம் உருகி மக்கள் திலகத்திடம், “என்னை மன்னித்து விடுங்கள்.. அதே தேதியில் தான் திருமணம்.. இதில் எந்த மாற்றும் இல்லை!” என்று சொல்லிவிட்டு வேலுமணி விடைபெறுகிறார்.

    திருமண மண்டபம் நிறைந்து வழிந்தது. காரில் வரும் பொழுதுதான், நின்று போகவிருந்த தனதுதிருமணம், மக்கள் திலகத்தாலதான் நடந்து கொண்டிருக்கிறது என்கிற விவரம் தோழிகள் மூலம் மணப்பெண் சாந்திக்குச்சொல்லப்படுகிறது. அவ்வளவுதான், மணமேடைக்குச்செல்ல வேண்டிய மணப்பெண் சாந்தி, காரைவிட்டு இறங்கியவுடன் பொன்மனச் செம்மலை நோக்கி ஓடி வருகிறார். அதுவரை ஒரு நடிகராக மட்டுமே திரையில் பார்த்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆரைத் தனக்கு அப்பாவா பார்க்கிறோமே என்கிற பரவசத்தில் அப்படியே சாஷ்டாங்கமாக்க் காலில் விழுந்து ஆசி பெறுகிறார்.

    அந்த குணம்தான் எம்ஜிஆரை மக்களின் மனதில் அணையா விளக்காக வைத்திருக்கிறது.

    மனங்களில் வாழ்கிறார்
    உலகத்தின் மிக உயர்ந்த குணம் என்னவென்றால், அன்பு காட்டுவது என்கிறார்கள். பிற மனிதனை நேசிப்பதைவிட உயர்ந்த விஷயம் எதுவும் பண்ண முடியாது என்று சொல்கிறார்கள். அதாவது காசு பணம் கொடுப்பது வேறு. துணி மணிகள் அளிப்பது வேறு. ஒருவரை பார்த்தவுடன் உடனடியாகச் செய்வது அன்பு செலுத்துவது. அதை செய்தவர் எம் ஜி ஆர். அவரை மிகப் பெரிய நடிகர் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் எல்லோரையும் நேசித்த மிகப் பெரிய மனிதர். தான-தர்மம் பண்ணுவதில் அவர் என்எஸ்கே-யின் நேரடி வாரிசு.

    தானம் என்பது அவருக்கு அன்னை சத்யபாமாவின் தாய்பாலிலிருந்து வந்திருக்கும். இப்ப உங்க கையில ஒரு ரூபாய் இருக்கும்போது, பத்து பைசா தானம் பண்ண மனசு வரலைன்னா, நீ ஒரு லட்சம் ரூபாய் வைச்சிருக்கும்போது நூறு ரூபாய் தானம் பண்ணவே மாட்ட. இருக்கற காச தானம் பண்ணக்கூடிய மனோபாவம் வேணும். அந்த மனோபாவம் எம்ஜிஆர்-கிட்ட இருந்தது.

    இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருது அவரது மறைவுக்கு பின் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் திலகம், இதயக்கனி, பொன்மனச்செம்மல், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ஒரு யுக புருசனாக வாழ்ந்து கோடானு கோடி மக்களின் அன்புக்குரியவராக இன்றும் அவர்கள் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார் மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •