Results 1 to 10 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

Threaded View

  1. #11
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Sukumar Shan

    சிவாஜி ஏன் உசத்தி? நாட்டிய பேரொளி பத்மினியின் பதில் !

    சிவாஜியுடன் நீங்கள் அதிகம் இணைந்து நடித்ததற்குக் காரணம், உங்களுக்கும் அவருக்கும் இருந்த நட்பா, இல்லை உங்கள் இருவரின் நடிப்பாற்றலா?
    இந்தக் கேள்விக்கான பதிலை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பல நேர்காணல்களில் பகிர்ந்துகொண்டிருக்கிறார் பத்மினி. இனி வருவது அவற்றின் தொகுப்பு. இதில் ஒவ்வொரு சொல்லும் பப்பிக்கே சொந்தம்.
    ‘நான் மறக்கமுடியாத ஒருவர் சிவாஜி. கணேஷ் நடிகராக மட்டுமின்றி என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ரொம்பவே அக்கறையானவர். பப்பியம்மா என்றுதான் என்னை அழைப்பார். உற்சாகமான மூடில் இருந்தால், பேப் என்று அழைப்பார். நான் நன்றாகத் தமிழ் பேச ஆரம்பித்ததே சிவாஜியால்தான்.
    1959-ல் நெப்டியூன் ஸ்டுடியோவில் தங்கப்பதுமை படம் எடுத்தார்கள். ஏ.எஸ்.ஏ.சாமி டைரக்டர். அதில் வரும் ‘ஈடற்றப் பத்தினியின் இன்பத்தைக் கொன்றவன் நான்...’ என்ற பாடல், அப்போதே பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்தப் பாட்டினூடே நான் கண் பறிக்கப்பட்ட நிலையில் இருக்கும் என் கணவரைப் பார்த்து, ‘அத்தான் உங்கள் கண்கள் எங்கே அத்தான்?’ என்று வீறிட வேண்டும்.

    காட்சி விளக்கப்பட்டதும், நான் ரிகர்சல் எதுவுமின்றி கதறி அழுது நடித்தேன். அப்படி ஒரு சம்பவம் எனக்கே நேர்ந்தது போலான நடிப்புக்குள் நான் ஆழ்ந்துபோனேன். யதார்த்த நிலைக்கு வர சில விநாடிகள் பிடித்தது. சீன் முடிந்ததும், ‘நடிச்ச மாதிரியே தெரியல. ரொம்ப இயல்பா இருந்தது பப்பி’ என்று சிவாஜி பாராட்டினார்.
    சிவாஜியிடமிருந்து இலேசில் பாராட்டு வாங்கிவிட முடியாது. அவரே பாராட்டிய பிறகு அதற்கு ஈடான பாராட்டு வேறு எதுவும் இருக்கமுடியாது.
    அவருடன் நடிப்பதே ஒரு தனியான அனுபவம். சிவாஜி ஒரு பிறவி நடிகர். கணேஷைப்போல ஒரு நொடியில் முகபாவங்களை மாற்றிக்கொள்ளவோ, உணர்ச்சியைப் பொழிந்து வசனம் பேசவோ யாராலும் முடியாது. நான் ஒரு நல்ல நடிகை என்று பெயர் வாங்கியதற்கு, சிவாஜியுடன் நடித்த படங்களில் பெற்ற பயிற்சியே காரணம்.
    ‘நான் நாடகத்தில் நடித்துத் தேர்ச்சியுற்று முன்னுக்கு வந்தவன். நீ மேடையில் பாவனைகளைக் காட்டக் கற்று பெயர் பெற்றவள். உனக்குச் சொல்லிக் கொடுப்பதில் எனக்கு என்ன சிரமம்?’ என்பார். நான் நடிக்க வேண்டியவற்றை அவரே நடித்தும் காட்டுவார். எங்களுக்குள் நடிப்பில் ஒரு போட்டிகூட இருக்கும். என்னால் முடிந்தவரையில் அவருக்கு ஈடு கொடுத்திருக்கிறேன்.
    பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள், சிவாஜி படங்களில் அதிகம் இருந்தது. மேலும் நடிப்புத் தொழிலில் என் தாயார் சொன்னபடிதான் பட ஒப்பந்தங்கள் அமையும். நடிகர் திலகத்தோடு நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். அரை நூற்றாண்டுக்கும் மேலாக அவர் எனக்குப் பழக்கமானவர். இந்த இரண்டையுமே பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் நினைத்துக்கொள்வேன்.
    சம்பூர்ண இராமாயணம் ஷூட்டிங்குக்காக நாங்கள் ஒகேனக்கல் போயிருந்தோம். இதில் சிவாஜி பரதனாக நடித்ததை ராஜாஜியே பார்த்துப் பாராட்டி இருக்கிறார். கணேஷுக்கு வேட்டை என்றால் ரொம்பப் பிரியம். எங்கேயாவது ஒரு சிறு சான்ஸ் கிடைத்தால் கிளம்பிவிடுவார். காடுகள் நிறைந்த மலைப்பாங்கான இடமான ஒகேனக்கல்லில் நாங்கள் விடுதியில் தங்கி இருந்தோம்.
    இரவு பன்னிரெண்டு மணி இருக்கும். கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. எனக்குப் பயமாகப் போயிற்று. எழுந்து மெதுவாகக் கதவைத் திறந்தேன். வெளியே சிவாஜி நின்றுகொண்டிருந்தார்.
    ‘என்ன விஷயம்?’ என்று கேட்டேன். ‘பப்பி! உனக்கு ஒரு ப்ரஸண்ட்’ என்று தன் கையில் இருந்த பையில் கையை விட்டார். வெளியே வந்தது ஒரு அழகான சிறு முயல் குட்டி!
    சிவாஜியோடு நடிப்பதற்கு அவர் மீது செலுத்தும் அன்பும் நட்பும் மட்டும் போதாது. அவரோடு ஈடுகொடுத்து நடிக்க வேண்டும். அது அவ்வளவு எளிதல்ல. ‘இதைவிடச் சிறப்பாக உன்னால் நடிக்க முடியும். உன்னுடைய திறமை எனக்கு நன்றாகத் தெரியும் என்றெல்லாம் சொல்லிச் சொல்லி, பிரமாதமாக நடிக்க வைப்பார்.
    நான் எப்படி நடித்தால் நன்றாக வரும். இன்னும் அதை எவ்விதம் வளர்த்துக்கொள்வது என்பதெல்லாம் அவர்தான் சொல்லித் தருவார். இல்லாவிட்டால், அன்று என் வயதுக்கு மீறிய வேடங்களில் என்னால் நடிகர் திலகத்தோடு நடித்திருக்க முடியுமா?
    சிவாஜி ரொம்ப பங்க்சுவலாக, காலை ஏழு மணிக்கெல்லாம் செட்டில் நடிக்க வந்துவிடுவார். என்னைப் போன்ற ஹீரோயின்கள், மேக் அப் செய்துகொண்டு வர நேரமாகும். சில சமயம், நான் பத்து மணிக்குத்தான் தயாராக முடியும். அதுவரைக்கும் கணேஷ் பொறுமையாக இருப்பார். இதுவே எனக்கு வெட்கமாகக்கூடப் போய்விடும் .

    சிவாஜி, சேர்ந்தாற்போல் ஒரு டஜன் படங்களில் நடித்துக்கொண்டிருப்பார். அவற்றில் அதிகமாக அவரோடு நானும் பங்கு பெறுவேன். ஒரு சினிமாவுக்கும் இன்னொரு சினிமாவுக்கும் கொஞ்சமும் குழப்பம் இல்லாமல், கணேசன் வசனம் பேசுவதையும், நடிப்பை மாற்றிக்கொள்வதையும் பார்க்கும்போது எனக்குப் பிரமிப்பாக இருக்கும்! உலகத்திலேயே மிகச்சிறந்த கலைஞர் நடிகர் திலகம். அதைப்பற்றி இரண்டு கருத்துகள் இருக்கமுடியாது.
    கெய்ரோவில் நடந்த ஆசிய-ஆப்பிரிக்கத் திரைப்பட விழாவுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் படம் அனுப்பிவைக்கப்பட்டது. அதையொட்டி, சிவாஜியுடன் நானும் ராகினியும் அம்மாவும் போயிருந்தோம்.
    ‘புகழ் பெற்ற நடிகர்கள் ஒமர் ஷெரீப்போல் உலகின் பல பாகங்களில் இருந்தும் வந்திருந்தார்கள். சிறந்த நடிகர் என்ற மரியாதை யாருக்குக் கிடைக்கப்போகிறதோ...? என எல்லாரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். பரிசு, சிவாஜி கணேசனுக்குத்தான் என்று அறிவிக்கப்பட்டபோது, எங்களுக்கெல்லாம் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. சிவாஜி கணேசன் அந்த சந்தோஷத்தைத் தாங்கமுடியாமல் உருகிப்போனார். என்னால் இந்தியாவுக்கு இவ்வளவு பெரிய கௌரவமா... என் உடம்பெல்லாம் சிலிர்க்குது’ என்று உணர்ச்சிவசப்பட்டார்’.
    சிவாஜியிடம் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் பல. பொறுமையுடன் அதிக தடவை சொல்லிக் கொடுப்பார். அதில் திருப்தி அடையும்வரையில் விடமாட்டார். நடிப்பு நன்றாக இருந்தால் உடனே பாராட்டுவார். சரியாக இல்லையென்றால் டைரக்டரிடம் சொல்லி, மீண்டும் எடுக்கச் சொல்வார். சிவாஜியால் நடிக்க முடியாத ரோல் எதுவும் கிடையாது. ஆனால் அதைச் செய்வதற்கு முன் அவர் பர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என்று முழு முயற்சி எடுத்துக்கொள்வார்.
    சென்னைக்கு எப்போது வந்தாலும், நான் சிவாஜியைச் சந்திப்பது வழக்கம். ஒரு நாளாவது அவர் வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டு வருவேன். 1979-ல், டிசம்பர் சீசனில் மியூசிக் அகாடமியில் என்னுடைய ராமாயணம் நாட்டிய நாடகம் இரண்டு நாள்கள் நடந்தது. நிகழ்ச்சிக்கு மனைவி கமலா அம்மாளோடு அவர் வந்திருந்தார்.
    ஒரு ஆள் உயரத்துக்கு ரொம்பப் பெரிய மாலை ஒன்றைத் தூக்க முடியாமல் எடுத்துக்கொண்டு வந்து, ஸ்டேஜில் என்னை கௌரவித்துப் போட்டார். அவர் வரப்போவது எனக்குகூடத் தெரியாது. ப்ளசன்ட் சர்ப்ரைஸ் ஆக இருக்க வேண்டும் என்று யாருக்கும் சொல்லாமலே வந்தாராம். பத்மினி இப்ப நடிக்கிறதுகூட இல்லையே என சிலர் கேட்டபோது, ‘நடிக்காவிட்டால் என்ன? பப்பி ஒரு கிரேட் ஆக்ட்ரஸ். அதுக்காகவே மரியாதை செய்யணும்’ என்று சிவாஜி சொன்னதாகக் கூறினார்கள்.
    ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளைப் பார்வையிட சிவாஜி அமெரிக்கா வந்தபோது, விமான நிலையத்துக்குச் சென்று அவரை வரவேற்றேன். என் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஹார்ட் ஆபரேஷனுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தேறி வந்த சமயம். என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை. கமலா அம்மாள் என்னைப் பார்த்துக் கண் கலங்கிவிட சிவாஜி சோகமானாலும், ‘ஷீ ஈஸ் சச் எ பியூட்டிஃபுல் லேடி’ என என்னைத் தட்டிக் கொடுத்தார். அழுதுவிடக்கூடாது என்று தன்னையும் கட்டுப்படுத்திக்கொண்டார்.
    அமெரிக்காவில் இருந்தாலும் சிவாஜியின் பிறந்த தினம், திருமண நாள் ஆகிய விசேஷத் தருணங்களில் மறக்காமல் கணேஷூக்கு ஃபோனில் வாழ்த்து சொல்லுவேன். ஆனால், சிவாஜிக்கு எனது பிறந்த நாள்கூடத் தெரியாது.’ - பத்மினி.
    *
    கணேசனின் முதல் காமெடி சித்திரம், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி…
    முதல் பட விநியோகம், அமரதீபம்…
    முதல் புராணப் படம், சம்பூர்ண இராமாயணம்…
    இரட்டை வேட நடிப்பு, உத்தமபுத்திரன்…
    தமிழில் முதல் சரித்திரம் மற்றும் சிவாஜியின் முதல் வண்ணப்படம், வீரபாண்டிய கட்டபொம்மன்.
    ஆசிய அளவில் முதல் அயல்நாட்டு விருது, வீரபாண்டிய கட்டபொம்மன்…
    சிவாஜி புரொடக்ஷன்ஸ் முதல் தயாரிப்பு, வியட்நாம் வீடு...
    என, சிவாஜியின் பல முதல்களில் பத்மினிக்கும் அதிகப் பங்கு உண்டு. சிவாஜியின் மிக ராசியான நட்சத்திரம் அவர்.
    ‘தில்லானா மோகனாம்பாள்’ பற்றிச் சொல்லாமல், பத்மினியின் சினிமா வாழ்வு பூர்த்தி பெறாது.
    ஏறக்குறைய, இளமையைத் தொலைத்துவிட்ட நிலையில், தில்லானா மோகனாம்பாள், பத்மினியின் திரை உலகப் பயணத்தில் மாபெரும் பாக்கியம். என்றைக்கும் பத்மினியை இளைய தலைமுறை மறந்துவிடாமல் இருக்க, கலைத்தாய் சூட்டிய மகுடம்! கொத்தமங்கலம் சுப்புவின் காலத்தை வென்ற படைப்பான மோகனாம்பாள், பத்மினிக்குக் கிடைக்கக் காரணமானவர் ஏ.பி.நாகராஜன் .

    ஏ.பி.நாகராஜன் நீண்ட வருடங்களாக, அக்கதையைப் படம் எடுக்க வேண்டும் என்று வாசனிடம் கேட்டு வந்தார். வாசன் அதற்குச் சம்மதிக்கவில்லை. மோகனாம்பாளாக வைஜெயந்திமாலா நடிக்க, ஜெமினி ஸ்டுடியோஸ் சார்பில் தானே தயாரிக்கப்போவதாக வாசன் சொல்லி அனுப்பிவிடுவார்.
    1965-ல், ஏ.பி.நாகராஜன் உருவாக்கிய ‘திருவிளையாடல்’, வாசனைக் கவர்ந்தது. மீண்டும் நாகராஜன் வந்து கேட்டபோது, தில்லானா மோகனாம்பாள் உரிமையை அவருக்கு விட்டுக்கொடுத்தார்.
    ‘எனக்கு மணமான பிறகு நான் நடித்த படங்களில் முக்கியமானது தில்லானா மோகனாம்பாள். என்னால் மறக்க முடியாத ஓர் அனுபவம்! நாட்டியமாடும் ஒரு பெண்ணின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் படம் அது. அதன் ஒவ்வொரு காட்சியையும் மிகவும் அனுபவித்து நடித்தேன்.
    ‘தில்லானா மோகனாம்பாள் படத்தைத் தயாரிக்கணும்னு முடிவு பண்ணினதுமே, நீதாம்மா மோகனா. சிவாஜி சிக்கல் ஷண்முகசுந்தரம்னு முடிவு பண்ணிட்டேன். உங்க ரெண்டு பேர்ல யார் ஒருத்தர் நடிக்கலைன்னாலும் படத்தை எடுக்கிறதா இல்லை என்றார் ஏ.பி.என். எப்பேர்ப்பட்ட வார்த்தை! சிலிர்த்துப் போனேன்.
    நான் அன்று அடைந்த சந்தோஷம், எவ்வளவுன்னு சொல்ல முடியாது. ஆனந்த விகடனில் தொடராக வந்தபோதே, இந்தக் கதை படமானால் மோகனாம்பாள் கேரக்டர் எனக்கே கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். கதையோடு பத்திரிகையில் கோபுலு வரைந்த சித்திரங்கள் பற்றியும் பரபரப்பாக பேசப்பட்டது. கோபுலுவின் ஓவியங்களைப் போலவே, எங்களுக்கான மேக் அப்பும் காஸ்ட்யூமும் அமைந்தன.
    18 வயசுப் பெண் ரோல் அது. எனக்கு அப்போ 38. என் மகன் பிரேம், சிறுவனாக இருந்த நேரம். மோகனாம்பாளின் யவ்வன பருவத்தை நினைத்துக்கொண்டு நடிக்கவேண்டி இருந்தது. உடம்பை ஒல்லியாக்கிக்கொள்ள நேர்ந்தது. அந்த மாதிரி சமயத்தில், நமக்கு நம்ம வாழ்வே சொந்தமில்லே. சினிமா தொழிலுக்கும் ஜனங்களுக்கும்தான் அது சொந்தம்.
    எனக்கும் சிவாஜிக்கும் கதைக்கு ஏற்ற மாதிரி நிஜமான போட்டி உணர்வு ஏற்படணும்னு நாகராஜன், சாரதா ஸ்டுடியோல இரண்டு தனித்தனி காட்டேஜ் அமைச்சார். சிவாஜி க்ரூப் ஒரு காட்டேஜ். என் குழுவினர் ஒரு காட்டேஜ். யாரை யார் மிஞ்சறாங்க பார்க்கலாம் என்கிற போட்டியை உருவாக்கினார். அதனால்தான் மோகனாம்பாள் வெற்றிப் படமாச்சு.
    வாத்தியக் கோஷ்டியுடன் நான் ஜரூராக ஒத்திகை பார்த்துக்கொண்டிருப்பேன். சிக்கலாரின் செட்டில் தவில் வாசிப்பவர், நாயணக்காரர், ஒத்து ஊதுபவர், தாளம் போடுபவர் என்று அங்கேயும் தீவிரமான ரிகர்ஸல் நடக்கும். அவர்கள் மிஞ்சிவிடுவார்கள்போல... என்று எனக்கு இங்கே தகவல் வரும். நாங்கள் இன்னும் மும்முரம் காட்டுவோம்.
    பப்பி முந்திக்கொண்டுவிடுவார் என சிவாஜிக்கு செய்தி போகும். கணேஷ் பார்ட்டியின் வேகம் கூடும். ஏ.பி.என்., இரண்டு தரப்பினரையும் வந்து பார்த்து உற்சாகப்படுத்திவிட்டுப் போவார். இரண்டு கோஷ்டியை வைத்தும் ஃபைனல் பார்ப்பார். இந்தக் காட்சி சிறப்பா அமையணும்னா, எல்லாரும் உடம்பு பலவீனம் இல்லாம நடிக்கணும்னுவார்.
    என் முகத்தில் கொஞ்சம் அலுப்புத் தட்டினாலும், ‘உடம்பு சரியில்லயாம்மா... ஷூட்டிங்கை கேன்சல் செய்துடவா’ என்று அக்கறையுடன் கேட்பார்.
    கடைசியில் இந்தப் போட்டிக் காட்சி பிரமாதமாகவே அமைந்தது. நாங்கள் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொண்டோம்’ - பத்மினி.
    *
    தில்லானா மோகனாம்பாளுக்காக, பத்மினியை 1968-ம் ஆண்டின் சிறந்த நடிகையாகத் தேர்வு செய்தது தமிழக அரசு. விருது வழங்கியவர், அன்றைய முதல்வர் மு.கருணாநிதி. நவீனன் அவர்களுக்கு நன்றி .





    (முகநூல் பதிவு)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •