ராஜாவின் இசை மேற்கு தொடர்ச்சி போல..

இசை விமர்சகர் ரவிநாட் ரொம்ப அழகா Crater ஏரியை ஒப்புமைக்கு எடுத்தக்கொண்டார். ராஜா உயர்தர சுற்றுசூழலை இசைவழியே கட்டமைத்திருக்கிறார். பல்லுயிரும் வாழ, இணக்கமான ஒரு தட்பவெப்ப நிலையை தந்திருக்கிறார். குட்டி பிரபஞ்சம் போல அவற்றுள் எல்லாமே அடங்கியிருக்கு.

இந்தவகையான இசை என முத்திரைக்கு அடங்காமல் அவருக்கே உரிய மரபுடைக்கும் பாங்கு அவரது இசையாக்கங்களில் காலகாலமாக பார்த்து வருகிறோம்.

ஆயிரம் படங்கள், தனித் தொகுப்புகள் என நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு அவரது இசைப்பாய்ச்சல்.

எப்படி அன்னக்கிளியில் அவரது இசையிருந்ததோ, அவரது ஈடுபாடு இருந்ததோ அப்படித்தான் 2016 இந்தாண்டு வெளிவந்திருக்கிற Abbayitho Ammayi, தாரைதப்பட்டையாகட்டும், சென்ற ஆண்டு 2015 வெளிவந்த ஷமிதாப், ருத்ரமாதேவியாகட்டும், ஸ்வப்னம் தனியிசைத் தொகுப்பாகட்டும் நல்லிசை ரசிகர்களுக்கு விருந்துதான்.

என்னைப் பொறுத்தவரை ஆயிரம் படங்களில் அவர் இயற்றியிருக்கும் அத்தனை இசைக்குறிப்புகளை ஒதுக்கிவைத்துவிட்டு அவரது தனியிசைத் தொகுப்புகளை மட்டுமே கணக்கில் கொண்டால்கூட அவர் உயரத்திற்கு இணையாக யாருமில்லை. பிரபஞ்சமாக விரிந்துகொண்டிருக்கும் அவரது கற்பனைவளம் இன்னமும் இசை தெரிந்தவர்களுக்கு, இசைவிரும்பிகளுக்கு மலைக்கத்தக்க ஒன்று.