Page 209 of 400 FirstFirst ... 109159199207208209210211219259309 ... LastLast
Results 2,081 to 2,090 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #2081
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கலி முற்றி தலை விரித்து ஆடுகிறது. இந்த சராசரிகளுக்கும், தற்பெருமைகளுக்கும், படித்தவர்களின் அறிவு -மனம் விரிவடையாமல் சிறுவயது மாயைகளில் உழன்று, பாலபிஷேகம் அமெரிக்கா வரை விரிவடைந்ததுதான் ஒரே பலன். இன்றைய தகவல் தொழில் நுட்ப யுகத்தில், வலை தளங்களில் வேண்டாதவை முக்கிய விவாதம் பெறுவதுடன்,வரலாறுகள் தப்பும் தவறுமாக திரிக்க படுகின்றன. பத்திரிகை துறையில் ,எழுத்து திறனோ ,பகுக்கும் திறனோ,இல்லாத கீழ்நிலை மக்கள் பிழைப்புக்காக ,பத்திரிகை தர்மம் புரியாமல் செயல் படுகின்றனர். புத்திசாலிகள்,படிப்பாளிகள்,பகுத்தறிவாளர்கள் வேறு துறைகளை நாடி சென்று விட , முக்கியமான துறைகள்,சராசரிக்கும் கீழானவர்களால் நிர்வகிக்க படுகின்றன.

    நா.முத்துக்குமார் சமீபத்தில் வந்த நல்ல கவிஞர் என்பதை ஒப்பு கொள்வோம். அவர் சில வேண்டாத பழக்கங்களால் கஷ்டத்தை தருவித்து கொண்டு, தனது பொருளாதாரத்தை வளப்படுத்தி, குடும்பத்துக்கு திட்டமிடாததை, தேசிய பிரச்சினை போல பேசுவது மடமை. அவருக்கு சுருக்கமான இரங்கல் தெரிவித்து முடிக்க வேண்டியதை ,இவ்வளவு வளர்த்துவானேன் என்று சினிமா,பத்திரிகை மீது அருவருப்பே தோன்றுகிறது.

    சமீபத்தில் விருதுகள் விரிவடைந்து,எல்லோருக்கும் ஒரு விருது நிச்சயம் என்ற நிலைமை. (வைக்க இடமில்லாமல் திருப்பி கொடுக்கும் நிலைமை)

    இந்தியாவிலேயே உன்னதம் தொட்ட சிவாஜி,கண்ணதாசன்,விஸ்வநாதன் போன்றோருக்கு எந்த விருதும் தர வக்கில்லாத அரசு,இன்று எல்லோருக்கும் ஜனநாயக முறையில் வாரி வழங்கி அதன் மதிப்பை குறைத்து வருகிறது. மொத்தம் 28 நிறுவனங்கள் விருதுகளை வழங்கி ,குத்து பாட்டுக்கள் ஆடி தீர்க்கின்றன. இதில் துபாய்,மலேஷியா,அமெரிக்கா,கனடா என்று நிறைய அனாமதேயங்கள்.

    தமிழர்கள் பிளவு பட்டு, ரசனை கெட்டு ,பாழ்பட்டு நிற்பது, நமது மண்ணுக்கு உரிய பெருமையை, உரிமையை மீட்டு கொடுப்பதாய் இல்லை.

    படித்தவர்கள் நிறைந்த பூமி என்றால் ,ஏன் அன்பே சிவம், விருமாண்டி, நான் கடவுள்,அஞ்சாதே, குற்றம் கடிதல்,விசாரணை போன்ற படங்கள் உலக சாதனை புரியாமல் நிற்கின்றன?

    என்றுமே, ரசனை கேடுகள் தலை விரித்து ஆடும் ,நாம்தான் கண்ணை மூடிக்கொள்ள வேண்டும் போல.
    Last edited by Gopal.s; 18th August 2016 at 09:42 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. Likes Harrietlgy liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2082
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    1985 இல் எனது மனைவியுடன் திருமணமான புதிதில் எனது சுதந்திர தினத்தை , இனிதாக்கிய (கோவை அர்ச்சனா) முதல் மரியாதை. நடிகர்திலகத்துக்கு எதிராக ஜெயா பச்சன் (m p விஷயம்)சதிசெய்து சிறந்த நடிகர் என்று தேர்ந்தெடுத்த பிறகு மாற்றினார். (ஆதாரம்- இதில் தேர்வு உறுப்பினராக இருந்த கோமல் ஸ்வாமிநாதன் சுபமங்களாவில் எழுதியது)

    முதல் மரியாதை- 1985-

    திரையில் விரியும் ஆழமும்,அழுத்தமும் கொண்ட கவிதை,மிதமான ஆனால் அபாரமான sensitivity யோடு ,மற்ற வழக்கமான கிராம கதைகளின் பழி வாங்கல்,வன்முறை அம்சங்களே இல்லாமல், அருவியின் ஓசை ,குருவிகளின் இசை, நதியின் சலனம் இவற்றினோடு, அந்த கிராம மனிதர்களின் சிரிப்பு,மகிழ்ச்சி,வலி,மனகிலேசம்,வைராக்கியம், தியாக உணர்வு அனைத்தையும் , நம் மனதை பிசையும் வகையில்,ஒரு அப்பாவி தனம் தொனிக்கும் deceptive simplicity யோடு,சாதாரண நிகழ்வுகளை கொண்டே ஒரு iconic moments அளவு பிரமிப்பை தந்த காவியம் முதல் மரியாதை.

    நடிகர்திலகம்,பாரதிராஜா,செல்வராஜ்,கண்ணன்,வைரமு த்து, இளையராஜா,ராஜகோபால் இணைவில் , rhythmic என சொல்லப்படும் ஒத்திசைவோடு,எண்ண எழுச்சி,கிராம அழகியல்,Rustic sensitivity யோடு,மனித மனங்களை ஊடு பாவாகி நெய்த அழகிய அதிசயம்.

    நடிகர் திலகத்தின் நடிப்பின் வீச்சை,வீரியத்தை,புதுமையை ,பசுமையை அன்றைய(இன்றைய) இளைய தலைமுறையினர்க்கு கல்வெட்டாய் உணர்த்திய படம்.

    மலைச்சாமி(தேவர்) என்ற கிராமத்து பெரியவர்,ஒரு நதியோர குடிசையில் தன் இறுதி நாட்களை எண்ணி கொண்டிருப்பதிலும்,(நெஞ்சு குழிக்குள்ளே ஏதோ ஏக்கம்),காத்திருக்கும் சுற்றத்தார் நண்பர்கள் உரையாடலில் தொடங்கும் கதை பின்னோக்கி பயணிக்கிறது.

    மலைச்சாமி ,ஊருக்கு நாட்டாமையாய் மதிப்போடு வாழும் பெருந்தன நடுத்தர வயது காரர். (கல்யாணம் ஆகி இருபது வருடம் ஆன)ஆனால் வீட்டிலே மனைவியால் அவமரியாதையாய் (துரட்டு கம்பு,இருபது ஆடுகளுடன் பஞ்சம் பிழைக்க வந்து,தன்னை மணந்ததால் அந்தஸ்து பெற்றவர் என்று குறிப்பிட்டு ) ,இடித்து பழித்து கொண்டு ,சுருதி-பேதமாய் உறவு நிலை பேதலித்து கிடக்கிறது.நாடோடியாய்,ஊருக்கு பஞ்சம் பிழைக்க வரும் குயில் என்ற இளம் பெண்ணிடம்,வேடிக்கையாய் தொடங்கும் உறவு,பிறகு ஆதரவு தரும் நிலையாகி,ஈர்ப்பு,உணர்ச்சி (உணவும்தான்)பரிமாறும் நிலைக்கு உயர்ந்து, ஊராரால் கவனிப்பு பெரும் நிலைக்கு உயர்கிறது.இதற்கிடையில்,மலைசாமியின் தங்கை மகன்(அத்தையால் அதே முறையில் கேவலமாய் நடத்த படும் இன்னொரு துறட்டு கம்பு,ஆடு கேஸ்)செல்ல கண்ணு,அந்த ஊரில் வாழும் செங்கோடன் என்ற செருப்பு தைப்பவர் மகள் செவளியை காதலிக்க, முதலில் எதிர்க்கும் மலைச்சாமி,குயிலின் ஆவேச வேண்டுகோளுக்கு செவி சாய்த்து,காதலர்களை சேர்த்து வைக்கிறார்.ஆனால் விதிவசமாய்,நகைக்கு ஆசைப்பட்டு ஒருவன் செவளியை கொன்று விட,தடயங்களை வைத்து,தனது மகள் ராசம்மாளின் கணவனே (ஊதாரி,குற்ற செயல்களுக்கு அஞ்சாத பெண் பித்தன்,பொய்யன்,)என்றறிந்து,காவலர்களுடன் பிடித்து கொடுக்கிறார்.செல்லகண்ணுவும் செவளியை மறக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான்.வீட்டில் வாய் பேச்சு முற்றும் போது ,பொன்னாத்தா ஒருவனோடு ஓரிரவு படுத்து,வயிற்றில் பிள்ளை சுமந்த நிலையில்,தன் மாமனின் மனம் திறந்த வேண்டுகோளுக்கு செவி சாய்த்து பொன்னாத்தாளை மணந்ததையும்,அவளோடு தாம்பத்ய வாழ்க்கையில் ஈடு படாததையும் குறிப்பிட்டு,ராசம்மா தனக்கு பிறந்தவள் இல்லையென்றாலும்,ஏழேழு ஜென்மத்திற்கும் அவள்தான் தனது மகள் என்று நெகிழ்கிறார்.
    ஊரிலுள்ள ஒரு கயிறு திரிக்கும் தொழிலாளி,தற்செயலாய் குயிலுடன் மலைச்சாமி சந்தையில் எடுத்து கொண்ட photo ஐ பொன்னாத்தாளிடன் காட்ட,பஞ்சாயத்து கூட்ட பட்டு,கேள்வி(கேலி?)களால் துளைக்க படும் மலைச்சாமி,ஆமா,அவளை நான் வச்சிருக்கேன்,என்ன முடியுமோ செஞ்சிக்கங்க என்று சொல்லி,குற்றவுணர்வுடன்(நிறைவுடன்?)குயில் வீட்டிற்கு செல்கிறார்.அங்கு தன மனம் திறக்கும் குயிலுடன் கோபித்து வீட்டிற்கு வருபவர்,பொன்னாத்தாள் தாய் வழி உறவுகளை துணைக்கழைத்து ,குயிலை விரட்ட(கொல்ல ?) திட்டமிட,அவர்களிடம் கோபித்து,சவால் விட்டு குயில் குடிசைக்கு வரும் மலைச்சாமி,அவள் அங்கு இல்லாததை கண்டு திகைக்கிறார்.

    பின் ஒரு கொலை குற்றத்திற்காக சிறை செல்லும் குயில்,தான் கொன்றது பொன்னாத்தாளிடன் ஓரிரவு தகாத உறவு கொண்ட,குழப்பம் விளைவிக்க ஊருக்கும் வரும் ,மயில் வாகனன் என்ற மிருகத்தையே என்றும்,மலைச்சாமி குடும்ப மானம் காக்கவே அவ்வாறு செய்ததாக சொல்லி,இதை கோர்ட் இல்,வெளியிட கூடாது என்று சத்தியம் வாங்குகிறாள்.மலைச்சாமி,தன மனிதில் இருப்பவள் குயில் ஒருவளே என்று மனம் திறக்கிறார்.
    முதல் காட்சியின் ,தொடர்பாக, போலீஸ் காவலில் வரும் குயிலை கண்டதும், சிலிர்த்து மலைச்சாமி உயிர்துறக்க, குயிலும் செல்லும் வழியில் உயிர் துறக்கிறாள்.

    பற்பல யூகங்களுக்கு இடமளித்து,பார்வையாளர்களின் புத்திசாலித்தனத்திற்கு தீனி போட்ட திரைக்கதைகள்,அகில இந்திய ரீதியில் அலசினாலும்,சொற்பமே மிஞ்சும்.அவற்றுள் ,முக்கியமான ஒன்று செல்வராஜும்,பாரதி ராஜாவும் இணைந்து
    அளித்த இந்த அற்புதம்.ஆண் -பெண் உறவுகளின் எதிர்பார்ப்புகளை,ஆசைகளை,முரண்களை,நிராகரிப்புக ளை,சி தைவுகளை , இதை விட அழகாய் சொன்ன படங்கள் வெகு சிலவே.

    Carl Jung psycho -analysis முறையில், உணர்வுகள்,எண்ண நீட்சிகள்,அனைத்திலும், தன்னுணர்வற்ற(sub conscious )உள் நினைவுகளிலும், தன நிலை,இருப்பு இவைகளில் பாதுகாப்பின்மை ,தாழ்மையுணர்வு,உளவழுத்த நெருக்கடி,அதனால் விளையும் உறவின் சீர்கேடு ,இவற்றை நன்கு உள்வாங்கி, பூடக (suggestive )முறையில் அமைந்த திரைகதை வசனம் , Film -institute இல் பாடமாகவே வைக்கலாம்.பெண்களுக்கு அவர்களின் பெண்மையை உதாசீனம் செய்து மதிக்காதோரிடம் ,எந்த நிலையிலும் காதல் உணர்வு வராது என்பது உண்மையோ,அதைப்போல,ஆண்களுக்கு,visual arousal and provider 's pride என்பது காதல் உணர்வுக்கு அவசியம்.

    மலைசாமியோ, தன் நிலை பற்றிய தாழ்மையுர்வை சுமந்து திரிபவன் .தன் மாமன் சுய நலம் கருதி காலில் விழுந்ததற்கே ஆயுளுக்கும் செருப்பு போடாமல் திரிபவன்.தன் நிலைக்கு தான் என்றுமே அடைய முடியாத மாமன் மகளை, அவள் சமூக அறத்திற்கு புறம்பாக நடந்து பிடியும் பட்டதால்,அடைந்து விட்டாலும் ,அவளை ஆண்டு அனுபவிக்காமல்(சொத்து அந்தஸ்தை அனுபவிக்க தவறவில்லை)அதற்கு தன் தாழ்மையுணற்சியே காரணம் என்ற உண்மையை வசதியாக மறந்து(மறைத்து),மனைவியின் பழைய தவறை சொல்லாமல் சொல்லி தினமும் அவள் பெண்மையை அவமதித்து,செருப்புக்கு சமமாகவே நடத்துகிறார்.(செருப்பையும் அணியவில்லை.இந்த செருப்பையும் அணையவில்லை)
    படம் முழுவதும் ,கணவன் என்ற உரிமையை நிலை நாட்டாமல் ,தானும் தன சொந்தங்களும்(தங்கை மகனையே இழி பட விடுபவன் என்ன தலைவன்?)இழிவு படுத்த படும் போது வாய் திறக்காமல் சகித்து,கெட்டு போன வரலாற்றை சொல்லி உதைக்கும் அளவு செல்வது,பல கோடி மௌன கதைகள் பேசவில்லையா?மனைவிடமும் இச்சையை தீர்த்து கொள்ளாமல்,தன் sexual frustration ஐ ,தன் நிலைக்கு தாழ்வான வறிய பெண்களிடம்வேவ்வேறு நிலைகளில் வெளி காண்பிக்கிறார்.(வார்த்தைகளில்,கிண்டலாய்,வம்பு க்கிழ த்து தொட கூடாத இடங்களில் தொடுவது உட்பட)அவருடைய interraction முழுக்கவே ,நிலை தாழ்ந்தவர்களிடன் மட்டுமே(திருமணத்திற்கு பின் இவர் நிலை உயர்ந்து விட்ட போதிலும்).பஞ்சாயத்து காட்சியில் அந்த நிலை தாழ்ந்தவர்களே ,இவர் அற வீழ்ச்சியால் உயர் நிலை அடையும் போது அவர்களை எதிர் கொள்ளவே துணிவில்லை இந்த தலைமை நாட்டாமைக்கு?தன் சொந்த மனைவியிடமும், மற்ற பெண்களிடமும் நிரூபிக்க இயலா ஆண்மையை, கல்லை தூக்கி குயிலிடம் பௌருஷத்தை காட்டும் பரிதாப பாத்திரம் இந்த மலைச்சாமி.

    தன்னை சார்ந்தே இயங்கும்,தன்னையே உலகமாக்கி வாழும்(அப்பா கூட weak ஆன ஒப்புக்கு சப்பாணி)குயிலிடம் ஈர்க்க படுவதில் என்ன அதிசயம்?குயில் அவருடைய இடத்தை அவருக்கு அளிக்கிறாள். கேலி கிண்டலால் அவரின் தகைமையை ,இளமையை திருப்புகிறாள்.அவரை விட தாழ்ந்தவள் என்று ஒவ்வொரு கணமும் மலைசாமியின் weak ஆன ego விற்கு தீனி கொடுக்கிறாள். தன் சம்மதம் கேட்க கூட அவசியமின்றி வெச்சிருக்கேன் என்று சொல்லும் உரிமையை, dominance வழங்கும் இந்த உறவு மலைசாமிக்கு இனிக்காதா பின்னே?குயில் வாழ்க்கை நிலையாமையில் உழலுவதால் ,வலிமையான துணையின்றி (தகப்பனும் பலவீனன்) ஏற்படும் electra complex , மலைசாமியின் நிலையறிந்து ,அடைவதும் சாத்தியம் என்ற கைகெட்டும் தூரத்தில் பழுத்த காதலை,அதனால் ஏற்படும் குற்ற உணர்வை,தியாகத்தால் மெழுகுகிறாள் .

    பொன்னாத்தா ,தன் தகுதிக்கு குறைந்த அத்தை மகனை மணந்தாலும்,அவன் உதாசீனத்தால்(பெண்மை, மனைவி என்ற ஸ்தானம் மதிப்பு) அவளின் அற வீழ்ச்சியை வைத்து நகையாடி கொண்டிருக்கும் கணவனை, தன் பண செருக்கையும்,provider role கூட செய்ய முடியாத கணவனை ,எதிர் கொண்டு ,மூர்க்கத்தால் தற்காலிக வெற்றிகளை சுவைத்து,பெரும்துக்கங்களை கரைக்கிறாள்.(பின் என்ன sexual frustration ஐ மலைச்சாமி போல் ,இந்த பெண் ஜன்மத்தால் demonstrate செய்ய முடியாதே?).தன்னை மதியாத கணவன் முன் அழகாகவும்,சுத்தமாகவும் இருந்துதான் என்ன பயன்?ஆனாலும்,கணவனின் அற செருக்கில் பெருமையும்(ஜனகராஜிடம் வெளியிடுவார்),அவன் வேறொரு பெண்ணிடம் காட்டும் ஈடுபாட்டை அறிந்ததும் சீறும் possessiveness உம் ,அவளுக்கு மலைசாமியுடன் உள்ள மிச்சமிருக்கும் காதலை உணர்த்துகிறதே?(மலைசாமியிடம் மருந்துக்கும் காண படுவதில்லை).உலகத்தின் பார்வையில் தன் ஒழுக்கங்கெட்ட முத்திரையை மறைக்க இந்த பத்ரகாளி வேஷம் அவசியமா?(மயில் வாகனன் விவரிக்கும் பொன்னாத்தாள் அவ்வளவு பிடாரியல்லவே!!)தன் கணவனின் குற்றத்தை பஞ்சாயத்திடமும்,உறவுகளிடமும் தம்பட்டம் அடிப்பதில்,தன் பழைய களங்கத்தை கரைக்கிறாளா?

    இந்த முக்கோண ஆண் -பெண் விவரிப்பில்,அழகான திரைகதை,மௌன காட்சி(சாட்சி?),ஒன்றிரண்டு வசன குறிப்புகள்,பார்வையாளர்களின் இட்டு நிரப்பும் பயிற்சிக்கு சவால் விடுகிறது.


    கேமரா வழியாக கதை சொல்ல தெரிந்த ,திரைகதையில் பயணிக்க தெரிந்த,நடிப்பின் பலம் அறிந்த இயக்குனர்,உன்னத உலக நடிகன் இணைவில்,மற்ற கதாபாத்திரங்களும் உணர்ந்து நடித்ததால்,நடிகர்திலகத்தின் வீச்சு பல மடங்கு ஜொலிப்பதில் ஆச்சர்யம் என்ன? அவரின் tired looking தோற்றத்தில், மின்னி மறையும் வலுகட்டாய மகிழ் மலர்ச்சியில்,ஓராயிரம் மடங்கு இந்த melancholic பாத்திரம் மெருகேறியது,ஒரு தன்னிகழ்வு.

    தனியாக,குடிசையில் குயிலை எதிர் பார்த்து,அவளுக்காக உயிரை பிடித்து வைத்திருப்பதில் தொடங்கி,(நெஞ்சு குழிக்குள் ஏக்கத்தை பிரதிபலிப்பார்),வீட்டில் ,ஈரமில்லா மனைவியின் நடத்தையை தளர்வான ஏக்க சோர்வோடு எதிர் கொள்பவர்,சிட்டு குருவிகளை கூட கட்ட அழைத்து சுதந்திர உணர்வு கொள்வார்.பெண்களை வம்புக்கிழுக்கையில் 75% நட்பு,25%sex உணர்வை(தட்டுமிடம் அப்படி)அழகாய் வெளிகொணர்வார்.(உலகத்திலேயே எந்த நடிகனாலும் முடியாத சாதனை)குயிலிடம் ஒரு சிறுவனை போல் மந்தகாசம் காட்டி,இளகி சிரிப்பார்.வரப்பு மேட்டில், நெல் புடைக்கையில்,கையை சொரிந்து விட்டு கொண்டு கூலியாட்களிடம் காட்டும் வாஞ்சை,ராசம்மா புருஷனிடம் அவனை திருத்தவே முடியாது என்ற பாவனையில் காட்டும் அலட்சிய ஏமாற்றம்,சந்தை காட்சியில் படி படியாய் இறுகும் நட்பு,மீன் பிடிக்கையில் செல்ல அதட்டலோடு காட்டும் அன்னியோன்யம்(உன் முந்தானையே என்கிட்டே கொடுக்கிறவ )காட்டி தன துண்டை கொடுத்து,தங்கள் இணைவின் அதிர்ஷ்டத்தை ரசிக்கும் அழகு,பூங்காத்து பாட்டில் எனக்கொரு தாய் மடி கிடைக்குமாவில் காட்டும் தீரா ஏக்கம் ,மெத்தை வாங்கி தூக்கத்தை வாங்காத இயலாமை சோகம்,பெண் குயிலை பார்த்ததும் இன்ப அதிர்வு,குயிலின் சவாலை ஏற்று கல்லை தூக்கியதும் ,அவள் பார்த்து விட்ட கூச்சத்தில்,கல்லை ஏடா கூடமாய் விடும் தடுமாற்றம்,மீன்குழம்பு காட்சியில் விளையாட்டாய் துவங்கி,தன் தாயின் அன்பு கலந்த அன்னத்துடன் ஒப்பீடு செய்து ,செல்லமான வேறுபாட்டை சொல்லி நெகிழ்வது,தன் மாப்பிள்ளையை பிடித்து கொடுத்து விட்டு,பேரனிடம் பேசுவது போல் மகளுடன் மன்றாடும் சோக நெகிழ்வு,குயிலிடம் மனதை பறி கொடுத்தாலும் தனக்கு தானே நொண்டி சமாதான denial ,மனைவியை காலால் உதைத்து ,அவள் குறையை குத்தி, செருப்புக்கு சமம் என்று சொல்லும் தன்னிரக்கம் கலந்த குரூர கோபம் ,ஊர் பஞ்சாயத்தில் வச்சிருக்கேன் என்று பலவீனமான வீம்புடன் சொல்லி விட்டு,குயில் காதலை வெளியிட,போலியாய் பம்மும் பாங்கு,உறவு கார்களால் சீண்ட பட்டு குடிசைக்கு சீற்றத்துடன் வந்து அவள் இல்லாததை கண்ட அதிர்ச்சி ஏமாற்றம் என சொல்லி கொண்டே போனாலும்,நடிகர்திலகத்தின் high light மரண காட்சியே. நாட்டிய சாத்திரத்தில் சொல்லிய படியே அந்த மரணத்தை நிகழ்த்தி காட்டுவார். உயிர் போவதை அப்படியே காணலாம். ஒரு தேர்ந்த நாட்டிய விற்பன்னர் கூட இதை இவ்வளவு perfect ஆக செய்ததில்லை(வேறு யாராலும் இது சா த்திய படாது)

    வடிவுக்கரசி பொன்னாத்தாள் பாத்திரத்தில், அதற்கு தேவைப்படும் greyish black shade இல் பின்னியிருப்பார்.இவரின் நடிப்பு, நடிகர்திலகத்திற்கு இன்னும் ஏதுவாய் ,தூக்கி கொடுக்கும்.குயில் சுலபமான பாத்திரம்.ராதாவும் குறை வைக்கவில்லை(ராதிகா குரல் அருமை).எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் வீராசாமி,ஜனகராஜ்,அருணா, ரஞ்சனி ,தீபன் எல்லோருமே பாரதி ராஜா என்ற ring -master இனால் நன்கு பயன் படுத்த பட்டுள்ளார்கள்.

    இளைய ராஜாவுக்கு அல்வா சாப்பிடுவது போல்.தோதாய் பின்னியிருப்பார்.ஏரியிருக்கு ,குருவி குருவி,ஏறாத மல மேல,பூங்காத்து, அந்த நிலாவத்தான்,ராசாவே என்ற நல்ல பாடல்களுடன், re -recording இலும் பின்னணி யிசையும்,rustic melody ,natural sounds ,ஆகியவை கலந்து joy ,melancholy கலந்த counter -point ஆக தொடுத்திருப்பார்.
    வைரமுத்துவும்,வேஷம் மாறி சாமிக்கு மகுடம் ஏற விழைந்திருப்பார்.ஆனால் மத்திய அரசின் வேஷம் மாறவில்லை.
    பாரதிராஜாவும்,கண்ணனும் சில shotகள் உலக பட தரத்தில் பண்ணியிருப்பார்கள்.(முக்கியமாய் ஆரம்ப சில காட்சிகள்)

    கி.ராஜ் நாராயணின் ,கோபல்ல கிராமத்திலிருந்து உருவி, செல்லகண்ணு-செவளி துணை கதையில் அழகாக,முக்கிய கதை போக்கு கெடாமல் உபயோகித்திருப்பார்கள்.செல்வராஜின் கிழக்கே போகும் ரயிலை பார்த்து, அடடா,இவர் சிவாஜிக்கு எழுதினால்...என்று ஏங்கிய ஏக்கம் போக்க,அதை விட சிறப்பாகவே சிவாஜிக்கு இப்படத்தை தந்திருக்கிறார்.தமிழிலேயே மிக மிக சிறப்பான வசனம் கொண்ட படம் என்று இதைதான் நான் தேர்வு செய்வேன்.ஒரு அட்சரம் கூட எடுக்கவோ,மாற்றவோ,சேர்க்கவோ முடியாத ஒரு கச்சிதம்.அழகுணர்ச்சி,யதார்த்தம்,மனோதத்துவம்,ஜ னரஞ்ச கம் எல்லாம் சரி-விகிதமாய், அறிவும்-உணர்ச்சியும் சரிக்கு சரி கலந்த அதிசயம்.(ஜானகிராமன் மோக முள் கதை போல)

    பாரதிராஜாவின் மிக சிறந்த படைப்பு இதுதான்.அனைத்து நல்ல சினிமா ரசிகர்களின் சிறந்த பத்தில் நிச்சயம் இடம் பெரும் உலக-தரமான திரை படம்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. Likes Harrietlgy liked this post
  6. #2083
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தேசியவாதியாக நடிகர்திலகம் நேசிக்கும் சுதந்திர திருநாளில் வெளியான நடிகர்திலகத்தின் மற்ற காவியங்கள்.( முதல் மரியாதை தவிர)

    சாரங்கதாரா.

    ராமன் எத்தனை ராமனடி.

    எழுதாத சட்டங்கள்.

    ஒரு யாத்ரா மொழி.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. Likes Harrietlgy liked this post
  8. #2084
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    Great Achievement..

    That too in Mayyam website.

    Eleven Lakhs viewers and still going strong ... Nadigar Thilagam Sivaji Ganesan ... Part 9 ....
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #2085
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 140 – சுதாங்கன்.



    ஏவி.எம். சரவணன், புதிய கதாசிரியர் ஏ.சி. திருலோகசந்தர் சொன்ன கதையை அப்படியே அவரிடம் திருப்பி சொன்னார். அதற்குப் பிறகுதான் திருலோகசந்தருக்கு திருப்தி ஏற்பட்டது. அவர் சொன்ன கதையின் தலைப்பு `அவள் தந்த வாழ்வு.’ கதை ஏவி.எம். சரவணனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. தன் தந்தையிடம் போனார்.
    `அப்படியா!’ என்று கேட்டுவிட்டு அந்த கதை பைலை வாங்கி தன்னிடம் வைத்துக்கொண்டார். சில நாட்கள் கழிந்தன. ஏவி.எம்.மின் தொழில் நண்பர் பசவராஜ் ஏவி.எம்.செட்டியாரை சந்திக்க வந்தார். ஏவி.எம்முடன் சேர்ந்து `பேடர் கண்ணப்பா’ படத்தை எடுத்தவர் பசவராஜ்.
    இந்த படத்தின் மூலமாகத்தான் கன்னடத்தின் மிகப்பெரிய நடிகரான ராஜ்குமார் திரையுலகிற்கு அறிமுகமானார்.
    `பேடர் கண்ணப்பா’ படத்தில் ஏவி. எம்முடன் இணைந்த பசவராஜ், அப்போது இன்னொரு படம் எடுக்கவே ஏவி.எம்.செட்டியாரை சந்திக்க வந்தார்.
    திருலோகசந்தர் சொன்ன `அவள் தந்த வாழ்வு’ கதையை அவரிடம் கொடுத்தார் செட்டியார். அந்தக் கதை பசவராஜுக்கும், இயக்குநர் பீம்சிங்கிற்கும் மிகவும் பிடித்துப் போனது. அவர் சரவணனை சந்தித்து `அவள் தந்த வாழ்வு’ கதையை செட்டியார் சொன்னதால் தான் எடுக்கப்போவதாகச் சொன்னார். ஆனால், சரவணனுக்கு அதில் உடன்பாடில்லை. பங்குதாரர்களாக ஏவி.எம். இருந்தாலும், அப்படி எடுக்கும் படங்களில் ஏவி.எம். பேனரின் பெயர்கள் வராது. அதனாலேயே சரவணனுக்கு பிடிக்கவில்லை. தந்தையிடம் வாதாடியதால் `அவள் தந்த வாழ்வு’ ஏவி.எம். பேனரில் ‘பார்த்தால் பசி தீரும்’ படமாக வந்தது!
    உண்மையில் அந்த படத்தை ஏ.சி. திருலோகசந்தர் இயக்க வேண்டுமென்பதுதான் சரவணனின் விருப்பம். ஆனால் பங்குதாரரின் விருப்பப்படி பீம்சிங் அந்த படத்தை இயக்கினார். பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த படம் அது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி, சவுகார் ஜானகி, சரோஜாதேவி என்று அன்றைய முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் நடித்த படம் இது! படம் முடிந்து டைட்டில் போடும்போது யார் பெயரை முதலில் போடுவது என்பதில் பிரச்னை வந்தது!
    `என் பேர்தானே மொதல்ல வரணும்?’ என்று கேட்பார் சரோஜாதேவி.
    `நான்தானே சீனியர்? என் பெயர்தானே முதலில் வரவேண்டும்?’ என்பார் சாவித்திரி.
    எல்லோருக்கும் சீனியர் நடிகை சவுகார் ஜானகி.
    `எல்லோருக்கும் திருப்தி ஏற்படும் வகையில் நான் டைட்டில் போடுகிறேன்’ என்று சொல்லி பிரச்னையை தீர்த்து வைத்தவர் பீம்சிங்!
    `என்ன செய்யப்போகிறார்?’ என்று எல்லோரும் ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். இறுதியில் இயக்குநர் பீம்சிங் ஓர் அருமையான ஐடியா செய்தார்.
    `உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிக்கும்’ என்று போட்டு எல்லோர் படத்தையும் ஒட்டிவிட்டார். `பார்த்தால் பசி தீரும்’ படத்தை பொறுத்தவரையில் சரவணனுக்கு ஒரு மனக்குறை இருந்தது. திருலோகசந்தர் மிக அருமையாக திரைக்கதை எழுதியிருந்தார். ஆனால், அந்த கதையை படமாக்கிய போது சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த மாற்றங்கள் சரியாக இல்லை. அதனால் சரவணனுக்கு அது பிடிக்கவில்லை. மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையாவிட்டாலும் அந்தப் படம் ஓரளவு ஓடியது. இந்த தகவல்களை ஏவி.எம். சரவணன் தன்னுடைய `ஏவி.எம். 60’ என்ற புத்தகத்தில் தெரிவித்திருக்கிறார்.
    அதே போல் அடுத்து வந்த `பாவமன்னிப்பு’ படத்தை பற்றியும் சில தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
    1960ம் வருடம் ஜனவரி மாதம் 20ம்தேதி `பாவமன்னிப்பு’ படத்திற்கு பூஜை போடப்பட்டது. இந்தப் படத்தை ஏவி.எம். நிறுவனம், பீம்சிங்கோடு சேர்ந்து தயாரித்தது. கோல்டன் ஸ்டூடியோவில் பீம்சிங் சந்திரபாபுவை வைத்து `அப்துல்லா’ என்ற திரைப்படத்தை இயக்கிக்கொண்டிருந்தார்.
    கிட்டத்தட்ட இரண்டாயிரம் அடி வரை படம் வளர்ந்திருந்தது. ஒரு நாள் பீம்சிங், ஏவி.எம். சரவணனை அழைத்து எடுத்த வரையில் படத்தை போட்டுக்காட்டினார். அந்தக் கதை சந்திரபாபு எழுதிய கதை. ஒருவன் இந்துவாக பிறந்து, ஒரு முஸ்லீமால் வளர்க்கப்பட்டு, ஒரு கிறித்தவ பெண்ணை திருமணம் செய்து கொள்வது போல் கதை அமைந்திருந்தது.
    `எவ்வளவு பண்ணியும் படம் சரியாக அமையலே. முழுவதையும் மறுபடியும் ரீ-டேக் பண்ணனும் போலிருக்கு’ என்று சற்று சலிப்பாகப் பேசினார் பீம்சிங்!
    அந்தக் கதை ஏவி.எம். சரவணனுக்கு பிடித்திருந்தது.
    `இந்த கதை புது விஷயமா இருக்கு. நாம பார்ட்னர்ஷிப்பில் செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது’ என்று தன் தந்தையிடம் சொன்னார் சரவணன்.
    `சரி! பீம்சிங்கை அழைத்து வா’ என்றார் அவருடைய தந்தையான செட்டியார். எல்லோரும் கலந்தாலோசித்தார்கள்.
    ` எவ்வளவு செலவாகும்?’ என்று கேட்டார் செட்டியார்.
    `நாலரை லட்சம் ஆகும்’ என்றார் பீம்சிங்.
    `சரி! நான் பைனான்ஸ் பண்றேன். வர்ற லாபத்தை பாதியா பிரிச்சுக்குவோம்’ என்றார் செட்டியார். ஒப்பந்தம் கையெழுத்தானது.
    திரைக்கதை அமைக்கும் முயற்சியில் பீம்சிங் தீவிரமாக ஈடுபட்டார். எப்போதும் அவர் தன்னுடன் ஓர் எழுத்தாளர் குழுவையே வைத்திருப்பார். இறைமுடிமணி அரங்கண்ணல், வலம்புரி சோமநாதன் போன்றவர்கள் அவருடன் இருப்பார்கள்.
    திரைக்கதையை அவரவர் பாணியில் ஒவ்வொருவரும் அலசுவார்கள்.
    மொத்தக் கருத்தையும் திருமலை என்பவர் ஒரு ஷேப்புக்கு கொண்டு வருவார்.
    இப்படி பலரது முயற்சிகள் திரைக்கதை, வசனம் எழுதி அது ` வசனம்– சோலமலை’ என்ற பெயரில் வெளிவரும்.
    இதுதான் பீம்சிங்கின் வேலை பாணி!
    ‘அப்துல்லா’ கதையும் அப்படித்தான் விவாதிக்கப்பட்டது.
    அப்போது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தம்பி சண்முகம் திருமணம் சென்னை ஆபட்ஸ்பரியில் நடந்தது (இந்த இடம் சென்னை அறிவாலயத்திற்கு பக்கத்தில் தற்போது இருக்கும் ஹயாத் ரெசிடென்சி ஓட்டல்).
    அந்த திருமணத்திற்கு பீம்சிங்கும் வந்திருந்தார்.
    `அப்துல்லா’ படத்தின் கதை எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?’ என்று அந்த திருமணத்தில் பீம்சிங்கை சந்தித்த சரவணன் கேட்டார்.
    `ரொம்ப அருமையாக வந்திருக்கிறது. ஹீரோ காரெக்டர் பிரமாதமாக ஷேப் ஆகியிருக்கு. ஆனால் அதை சந்திரபாபு தாங்கமாட்டார். நாம் சிவாஜி பாயைத்தான் வெச்சு எடுக்கணும்’ என்றார் பீம்சிங்.
    அவர் எப்போதும் நடிகர் திலகத்தை ‘சிவாஜி பாய்’ என்றுதான் அழைப்பார்.
    அதே போல் சிவாஜி இவரை `பீம்பாய்’ என்றுதான் அழைப்பார்.
    `அதைப் பத்தி ஒண்ணுமில்லே!ஆனா கதை சந்திரபாபுவுடையது என்று சொன்னீங்க. ஆனால் அதிலே அவர் நடிக்கப்போறதில்லேங்கிற விஷயத்தை அவர் கிட்ட சொல்லணுமில்லே?’ என்று கேட்டார் சரவணன்.
    `நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன்’ என்றார் பீம்சிங்! ‘ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது’ என்றார் பீம்சிங்!
    அது என்ன சிக்கல்?
    (தொடரும்)

  10. #2086
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர் கமலஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் செவாலிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. செவாலிய விருதை பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் கலாச்சாரத்துறை அமைச்சகம் விருது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிறந்த நடிப்பாற்றலுக்காக இந்து விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

  11. #2087
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    Congratulations Kamal Hassan. Follow the footsteps of our Thalaivar NT and you are bound to reach more heights.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  12. #2088
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நான் ஏற்கெனெவே பலமுறை எழுதியது. கமலும் பலமுறை பல்வேறு சூழ்நிலைகளில் சொன்னது. இன்றைய முன்னணி கதாநாயகர்கள் இருவரும் பாலச்சந்தரால் அறிமுகம் செய்விக்க பட்டாலும் ,நடிகர்திலகத்தை குருவாக பாவித்து ,அவருடைய நடிப்பின் நிழலை தொடருபவர்கள்.நடிகர்திலகமும் ,தன சிஷ்யர்களுடன் இணைந்து நடித்து அவர்களை ஆரம்ப நிலையிலிருந்து ஊக்குவித்துள்ளார்.

    நடிகர்திலகத்திடமிருந்து திரை ஆளுமை,ஆண்மை ,ஸ்டைல்,இவற்றை ரஜினி கவர, படத்துக்கு படம் வித்தியாச கதைக்களன்,பாத்திரங்கள்,ஒப்பனை மாற்றம்,சோதனை முயற்சி இவற்றை கமல் கவர, இருவரும் நமது ஒரே கடவுளின் இரு வடிவாக திகழ்கிறார்கள்.

    கமல் ஒரு பன்முக திறமையாளர்.. புதுமை விரும்பி. அவருக்கு, நடிகர்திலத்தின் வழியில் chevaliar கிடைத்ததில் மகிழ்கிறோம். வாழ்த்துகிறோம்.

    வாழ்த்தின் ஒரு பகுதியாக, P_R எழுதிய தேவர் மகன்.குரு சிவாஜி என்ற நடிகருக்கும், சிஷ்யன் கமல் என்ற creator இவர்களுக்கு அற்புதமான tribute .
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  13. #2089
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தேவர் மகன்- 1992 (By P_R)

    மேதை என்ற சொல்லை நாம் தண்ணியைப் போல செலவிடுகிறோம். பட்டங்களும் ஸ்துதிகளும் நிறைந்த நம் தமிழ் சினிமாவால் கோடம்பாக்கத்தில் ஒரே மேதை நெரிசல். துதிக்கப்படுகிறவர்களைப் பற்றி ஏதாவது தெரிந்திருந்தால் பிழைத்தோம். வெறும் துதிகளை வைத்து மதிப்பீடுகளை உருவாக்க முனையும்போது படுதோல்வி தான். சக்ரவர்த்தியின் புத்தாடைகள் ஜொலிப்பதைக் காணும் ஆரவாரம் தான்.

    இச்சூழலில் உண்மையான மேதமைக்கு மதிப்பு குறைந்து போவது இயற்கை. அவ்வாறு ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகங்கள் எழும் சூழல். இத்தகைய சூழலில் பிரமிக்கவைக்கும் திறமையாளன் நிகழ்த்துவது என்னவென்றால் அவன் மீது ஏற்படுத்தும் மதிப்பு மட்டுமல்ல, அவன் துறை மீதே ஏற்படுத்தும் ஒரு மதிப்பு நம்பிக்கை. கிட்டத்தட்ட உண்மை மீதே நம்பிக்கை வரவழைப்பதைப் போல.

    இத்தகைய ஒரு அதிசய நடிப்பு தான் சிவாஜி கணேசன் 'தேவர் மகன்' படத்தில் நிகழ்த்தியது. ஓடாய் தேய்ந்து போய் ராஜ் டிஜிடல் ப்ளஸ்ஸில் மட்டுமே காண்பிக்கப்படும் தமிழ் படங்களைக்கூட பரவலாகப் பார்த்தவன் என்ற முறையில் கொஞ்சம் அழுத்தமாகவே சொல்கிறேன்: "நான் பார்த்ததிலேயே சிறந்த நடிப்பு" என்றால் இதைத்தான் சொல்ல வேண்டும்.

    இது என் விருப்பத்தில் மிகையான வெளிப்பாடு மட்டும் அல்ல.
    இது ஒரு 'அப்ஜெக்டிவ்' (இதற்கு தமிழ் என்ன ?) உண்மை என்று பின்வரும் பதிவுகளில் நிருவ முயல்வேன்.


    நடிப்பு என்பது என்ன ?

    ஐரிஷ் எழுத்தாளர் ஆஸ்கர் வைல்ட் கலையின் தன்மையைப் பற்றிய தனது குறுங்கட்டுரையில் சொல்கிறார்:

    'உணர்ச்சி' என்பதை பொறுத்தவரை நடிகனின் வித்தையே , கலைகளுக்கு முன்மாதிரி: From the point of view of feeling, the actor's craft is the type (of all art).

    இது வைல்டின் குறும்பு. ஏன் ? நடிகனின் வித்தையின் மகிமையே அவன் நிகழ்த்திக்காட்டும் உணர்ச்சிகள் எல்லாமே பொய் என்பது தானே. இங்குதான் 20ம் நூற்றாண்டின் நடிப்பியல் வரலாற்றில் முக்கியமான இரு வாதங்கள் இதைச் சுற்றியே இருக்கின்றன.

    ஒன்று: பாத்திரத்தோடு முழுவதுமாக இணைவது. இதை ரஷ்ய நிபுணர் ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் முறை (மெதட் ஆக்டிங்) என்று சொல்வார்கள். பாத்திரத்தின் உந்துதல்கள், மனநிலை, பேசும் முறை எல்லாவற்றையும் புரிந்துகொண்டு பாத்திரமாகவே மாறிவிடுவது - தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் அர்த்தம் நீங்க அடித்துத் துவைக்கப்பட்ட ஒரு சொல்லாடல் இது

    இதற்குமேல் இங்கு நிகழ்வது நடிப்பு என்று கூறுவதே கடினம். கொடுக்கப்பட்ட சூழ்நிலையில் அப்பாத்திரம் எவ்வாறு பேசும், பிரதி-வினைக்கும் (ரியாக்டுக்கு மோசமான மொழிபெயர்ப்பு - மேலான சொல் இருந்தால் கூறவும்) என்பதை அவ்வாறு வாழ்வது தான் நிகழ்கிறது.

    இதிலிருந்து பிரிந்த கிளை நடிப்பியல்களின் (உம். லீ ஸ்ட்ராஸ்பெர்க் என்ற நிபுணரின் முறைகள்) மாணவர்கள்/விர்ப்பன்னர்கள் அமெரிக்காவின் தலைசிறந்த நடிகர்களான பிராண்டோ, டி நீரோ, ஹாஃப்மன் யாவரும்.

    இன்னொரு முறை: பாத்திரத்திற்கு வெளியே நின்றுகொண்டு அதை ஆழ்ந்து கவனித்து நடிப்பது. இதில் நடிப்பது என்பது மிகுந்த பிரக்ஞையுடன் நிகழ்வது. சொடக்கிட்ட நொடியில் நிஜ உலகுத்துக்கும் நடிப்புலகத்துக்கும் பாய முடிய வேண்டும். வேறு பெயர்கள் இல்லாதலால் இதற்கும் வைல்ட் பெயரையே வைத்துக்கொள்ளலாம் ("என் மேதமையை என் வாழ்க்கையில் செலவிடுகிறேன், என் படைப்புகளில் என் திறமையை மட்டுமே பயன்படுத்துகிறேன்"...I reserve my genius for my life, I only use my talents in my works )

    இது பெரும்பாலும் லாரென்ஸ் ஒலிவியெ போன்ற பிரட்டிஷ் நடிகர்கள் கையாண்ட உத்தி. இரு சாராரும் சந்தித்துக் கொள்வதைப் பற்றிய சுவாரஸ்யமான பல தகவல்கள் உண்டு.

    காட்டாக: மாரதான் மான் என்ற அமெரிக்கப் படம். ஒலிவியேவும் (வைல்ட் பள்ளி) டஸ்டின் ஹாஃப்மனும் (ஸ்ட்ராஸ்பெர்க் பள்ளி) இணைந்து நடிக்கும் ஒரு காட்சி. அதில், மூன்று நாட்களாக தனியறையில் அடைக்கப்பட்ட ஹாஃபமனைக் காண வில்லன் ஒலிவியெ வருகிறார்.

    அக்காட்சிக்குத் தன்னை தயார் செய்து கொள்வதற்காக ஹாஃப்மன் மூன்று நாட்கள் உண்ணாமல் இளைத்து கண்ணின் கீழ் கருவளையங்கள் வந்து சோர்ந்து கிடந்தாராம். படப்பிடிப்புக்கு வந்த ஒலிவியெ ஹாஃமனைப் பார்த்தார். அவர் உடல்நலத்தைப் பற்றி இயக்குனர் ஜான் ஷ்லெசிங்கரிடம் விசாரித்தபோது, ஹாஃப்மனின் "உடல்வருத்த முயற்சிகளைப்" பற்றி அவர் (சற்று பெருமையாக) சொல்லியிருக்கிறார். ஒலிவியெவின் பதில் " ஓ...அந்த தம்பி "நடிப்பு" என்பதைப் பற்றி கேள்விப்பட்டதில்லையா ?" (Hasn't the young boy heard of acting)

    கலைஞன் கலைக்காக செய்யும் முயற்சிகளை ஒதுக்கிவிட்டு, படைப்பை மட்டுமே ரசிக்க முடிந்துவிட்டால் (ஊடகங்களின் செய்திப்பொழிவால் இது கடினமாகிக்க்கொண்டே வருகிறது), மாமேதமையின் அடையாளம் வைல்ட் பள்ளியிலேயே என்று தோன்றுகிறது. பல வகை நடிப்புக்குச் சொந்தக்காரர்களாக, ஒரே சமயத்தில் ஒரே சூழ்நிலைக்கு நினைத்த மாத்திரத்தில் பலவகை பாணிகளை நிகழ்த்திக்காட்டவல்லவர்களாக அவர்கள் தான் இருப்பார்கள்.

    எனக்கு புரிந்தவரை சிவாஜி இவ்வகை தான். ஆழமான கவனிப்பும், அபாரமான உள்வாங்குதலும், அதிசயமான திறமையும் இணைந்த ஒரு நடிப்பே பெரிய தேவரை உருவாக்கியது.

    தேவர் மகன் கமல்ஹாசன் எழுதிய காட்ஃபாதர்.

    நியூயார்க்கின் இத்தாலிய மாஃபியா குடும்பங்களில் ஒன்றான கொர்லியோன் குடும்பத்தின் தலைவன் விடோ கொர்ர்லியோன்.
    தன் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சான்டினோ , ஃப்ரெடோ என்ற தனது இரு மகன்களையும்விட தன் இளைய மகனான மைக்கேல் மீதே அவருக்கு நம்பிக்கை, பிரேமை. ஆனால் மைக்கேலோ எதிர் தரப்பு அடையாளங்களைத் தேடுகிறான். ராணுவத்தில் சேர்கிறேன், ப்ரோடஸ்டன்ட் பெண்ணைக் காதலிக்கிறான் (இத்தாலிய-அமெரிக்கர்கள் பெரும்பாலும் குடும்ப உறவுகளையும், கத்தோலிக்க மதத்தையும் பெரிதும் மதிப்பவர்கள்), குடும்பத் தொழிலிலிருந்து எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ செல்ல முயல்கிறான். சூழ்நிலைகளின் மாற்றங்கள் எவ்வாறு அவனை தன் இயல்பான அடையாளங்களிடம் கொண்டு போய் சேர்த்துவிடுகின்றன என்பதுதான் கதை. காட்ஃபாதர் என்ற பட்டம் மைக்கேலை(யும்) குறிக்கக்கூடும் சாத்தியங்களைப் படம் வளர வளர வலுப்படுத்துகிறது.

    தேவர் மகன், இந்த எலும்புக்கூட்டை எடுத்துக்கொண்டு வரையப்பட்டது. தமிழ் சினிமா வரலாற்றில் மிகக் கச்சிதமாக ஏழுதப்பட்ட திரைக்கதைகளில் தேவர் மகன் முன்னணி வகிக்கிறது. நம் அடையாளங்களை நாம் மறுக்க முடியுமா ? கல்வி, அன்னிய (உயர் ?) கலாசார பரிச்சயத்தால் நம் சூழலிலிருந்து விடுவித்து கொள்ள முடியுமா ? இல்லை நம் கலாசார அடையாளங்களை, அவற்றின் அழுக்குகளோடு ஏற்றுக்கொண்டு உள்ளிருந்து மட்டுமே மாற்ற முயல முடியுமா ? கடைசியில், மிக முக்கியமாக: நமது அடையாளங்கள் நமது இயல்புகளில் பிரிக்கமுடியாதவாறு பிணைந்திருக்கின்றனவா ? (தேவர் மகன் தேவரா ?) இத்தகைய கேள்விகளை அழகாக எழுப்பும் படம். இந்தியச் சூழலில் இவை எல்லாம் மிக முக்கியமான சமூகக் கேள்விகள். காட்ஃபாதருக்கு இப்படி ஒரு (இந்திய) சமகோடு யோசித்ததே சாதனை தான்.

    சூழ்நிலைகள் ஒப்பிடத்தக்கவை என்றாலும் விடோ கொர்லியோனும் பெரிய தேவரும் முற்றிலும் வேறுபட்ட மனிதர்கள். நியாய தர்மம் பற்றியா விவாதங்கள், கடமை/பொறுப்பு ஆகியவற்றை பற்றிய உரையாடல் எல்லாம் டான் விடொ செய்ய மாட்டார். மைக்கேலிடம்: " உன்னைத் தானே நம்பணும்..வேற யாரு இருக்கா நம்புறதுக்கு ?" என்ற உருக்கமான கேள்வியை கேட்க மாட்டார்.தேவர் மகனில் அந்த மையக் காட்சி தான் பெரிய தேவரின் முழு சித்திரத்தை நமக்கு அளிக்கிறது. இருந்தாலும்...அகர வரிசையில் வருவோம்.

    படத்துவக்கத்தில் மகன் சக்தியை பற்றிய எதிர்பார்ப்பு, ஆனால் இளைக்காத தற்பெருமை ("எல்லாம் பழைய முறுக்குத்தேண்டி"). மகனைக் கண்டதும் அவர் காட்டும் பெருமிதம். அதன் பின் சக்தி காரை நோக்குவதால் 'அங்கு என்ன இருக்கிறது' என்ற ஆர்வப்பார்வை. பானுவைப் பார்த்ததும் வரும் இயல்பான தயக்கம் (கிட்டத்தட்ட வெறுப்பு). இதுவரை அந்தக் காட்சியில் வசனம் இல்லை என்பதே பார்ப்பவர்கள் உணர வாய்ப்பில்லை. "ஆரு இவுக ?" என்ற கேள்வியின் தொனியும் "வாங்க" என்பதில் உள்ள வரவேற்பின்மையுமே கதைகள் சொல்லும். நடிகனின் குரல் செய்ய வேண்டியவற்றை இதற்கு இணையாக சுறுக்கமாக காட்ட இயலாது.

    பானுவைப் பற்றிய ஆவலை, மிடுக்கு குறையாமல் கேட்பது அடுத்த காட்சி.

    "சீராலா""என்ன.......ளா ?" என்பதில் அந்த எள்ளலின் ஆரம்பம்.

    வட்டார வழக்கையும், பேச்சு வழக்கங்களையும் பரிபூரணமாக உள்வாங்கிக்கொண்டு பேசப்பட்டது: "ங்கொண்ணேன் ஸ்டேஷ்னுக்கு வந்தாரா ?"
    தனது ஃப்ரெடோ குடிகாரனாக இருப்பதைப் பற்றிய வருத்தத்தை இக்காட்சியிலேயே பதிவு செய்கிறார். சிரிப்பில் !
    இதைப் பற்றிய கோபம் இரண்டு இடங்களில் வருகிறது, ஒரு இடத்தில் கிண்டலாக, ஒரு இடத்தில் உக்கிரமாக :

    "ச்சாப்டர ஓட்டலா ....அட போடா....அம்மூர்ல எவன்டா ஓட்டல்ட ச்சப்டுவியான்.....ங்கொண்ணென் மாதிரி எவனாச்சும் இருந்தா அவன் ச்சப்டுவியான்"

    "என்ன ஐயா, கண்ணை மூடி திறக்கிறதுக்குள்ள வேலியை போட்டுப்புட்டாய்ங்க"
    "நீங்க ஏன் கண்ணை மூடுறீய ? திறந்துகிட்டே இருக்கணும்......நாம தான் கண்ணை திறந்திட்டிருக்க நேரம் ரொம்ப குறைச்சல் ஆச்சே"

    இதுபோன்ற கலைஞர்களுக்காக நாம் கண்னை திறந்திருக்கும் நேரம் குறைச்சல் தான்

    எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முக்கியமான பாத்திரங்க்களை பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்திவிடவேண்டும் என்பது ஒரு திரைக்கதை நியதி. நாவலாசிரியரைப்போல "அவர் கொஞ்சம் பழமைவாதி, ஆனால் பாசக்காரர், சர்காஸ்டிக்,..." என்று ஒரே வரியில் சொல்லிவிட்டு விரல் சொடக்கிக்கொண்டுவிடும் வசதி திரையெழுத்தாளனுக்கு இல்லை. காட்சிகளில் நீட்டிக் காட்டவேண்டும். சம்பவங்களை உருவாக்க வேண்டும். அப்படியும் அவை உதாரணங்களாகவே இருக்கும். ஒரே காட்சியில் அதிக பரிமாணங்களைக் காட்டுவது கஷ்டம்.அவற்றைத் தெளிவாக பார்வையாளனைக் குழப்பாமல் கொண்டுபோய் சேர்ப்பதும் எளிதல்ல.

    'போற்றிப் பாடடி' பாடலில் காட்சித்தொகுப்புகளில் பல அழகான இடங்கள். வசனங்கள் எல்லாம் யாருக்குத் தேவை என்பது போல. மனநிறைவுடன் திருமணம் நடத்தி வைப்பது, தான் கடந்து போகும்போது எழுந்துகொள்ளும் சாப்பிட்டுக்கொண்டிருப்பவார்களை கையசைத்து அமரச் சொல்வது, கம்பீரமாக உட்கார்ந்து துதிப்பாடலைக் கேட்பது இவையெல்லாம் சிவாஜி தூக்கத்தில் கூட செய்வார்.

    படிக்கக் கொடுத்துவிட்டு குறுக்கே பேசிக்கொண்டிருக்கும் மகனை "படிக்க விடு" என்று சைகை செய்வார். சந்தோஷமாக துணி வழங்கிக்கொண்டிருப்பரை பானு படம்பிடிக்க "என்ன இது" என்பதைப்போல் பானுவையும் "வேண்டாம் என்று சொல்" என்று சக்தியையும் சொல்வார். அதன் பிறகு முகத்தில் ஒரு இறுக்கம் குடிகொள்ளும். இவையெல்லாம் 2-3 நொடிகளில், வசனமில்லாமல். பாடல் முடிந்ததும் இந்த மனிதரை நமக்கு பல நாட்களாக தெரிந்தது போன்ற பிரமையை எழுத்தாளரும் நடிகரும் சேர்ந்து உருவாக்கிவிடுகிறார்கள்.

    புரிந்துகொள்ளப்படுவது ஒரு சொகுசு (It is a luxury to be understood) என்று அமெரிக்க கவிஞர் எமர்ஸன் சொல்கிறார்.நமக்கு பிரியமானவர்கள் நம்மை புரிந்துகொள்ளவேண்டும் என்பது ஒரு ஆதாரமான எதிர்பார்ப்பு. அவர்களிடம் தன்னை 'நிரூபித்து'க் கொள்ள வேண்டிய நிலைமை, சொல்லிப் புரியவைக்கப்படவேண்டிய நிலைமையே வருத்தமனாது. பெரிய தேவர் தன் மகனால் கூட புரிந்துகொள்ளப்படவில்லை என்ற வருத்தத்தைத் தெளிவாக்கும் காட்சி அந்த உணவருந்தும் காட்சி.

    பானுவின் மீது தனக்கிருக்கும் அதிருப்தியை பெரிய தேவர் பதிவுசெய்வதாக காட்சி ஆரம்பிக்கும்.

    ஐயயே.... உங்களைப் பொம்பளையாவே நினைக்கலீங்களே......இந்த வீட்டுக்கு வந்திருக்கிற விருந்தாளியாத்தான் நினைக்கிறேன்.
    அரைச் சிரிப்புடன் சொல்லும் அழுத்தமான வார்த்தைகள்.

    தன் மகன் இவ்வூரில் (இவ்வுருக்கு) எதுவும் செய்வதாக இல்லை, செய்ய முனையும் வியாபாரம் எல்லாம் வெளியூரில் என்பதே அதிர்ச்சியாக இறங்குகிறது. ஆனால் ஆச்சர்யமாக வெளிப்படுகிறது:

    "நீ எப்பிடி செய்வே ?"

    "....பானுவோட அப்பா ஹொடேலியர்....அவருக்கு இதெல்லாம் நல்லாவே தெரியும்.."

    "ஓ...அவருக்கு எல்லாம் தெரியுமோ.....இந்தப் பொண்ணு இங்க உன் கூட வந்திருக்கிறதும் தெரியுமோ ?"
    இந்த கடைசி வரியில் சிவாஜி காட்டும் விஷமமும், கிண்டலும், அதிருப்தியும் விவரணைக்கு உட்பட்டவை அல்ல.

    தான் தேர்ந்தெடுத்த பெண்ணை தந்தையின் கண்களில் உயர்த்த சக்தி அவர்கள் குடும்பத்தைப் பற்றி பேசுவான். இதில் தான் அவன் தன் தந்தையை கொஞ்சம் கூட புரிந்துகொள்ளவில்லை என்று புலப்படும். ஜாதி, செல்வ அந்தஸ்து போன்ற விஷயங்களுக்காகவே பானுவை அவர் நிராகிரப்பதாக நினைக்கிறான்.

    "...பெரிய பணக்காரங்க...அங்க ராஜூன்னு சொல்வாங்க....நம்ம தேவர்-க்கு இணையான கேஸ்ட் தான் யா"
    பணத்தைப் பற்றி கமல் சொன்னதும், சிவாஜி புருவத்தை உயர்த்தி "அடேங்கப்பா" என்பதுபோல பாசாங்கு செய்வார்.

    ஜாதி பற்றி கேட்டதும் முகத்தை சுளிப்பார்.இதை கமல் பேசும்போது படக்கட்டத்தில் (frame) முன்னால் இருக்கும் சிவாஜி ஃபோகஸில் இருக்க மாட்டார். ஆனால் அவர் முகபாவனைகள் தெளிவாகப் புரியும்படி இருக்கும்.

    தன் ஆரம்பகால படம் ஒன்றில் புகை மலிந்த நிழலுருவிலேயே (silhoutte) பாவனைகள் தெரியும்படி நடித்தவரல்லவா !
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  14. Likes Harrietlgy liked this post
  15. #2090
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தேவர் மகன்- 1992 -தொடர்ச்சி

    என் குழந்தைகளிடத்தில் எனக்கு ஒரு பலவீனம் உண்டு. அவர்களுக்கு நான் அதிகமாக செல்லம் கொடுப்பதைத் தான் பார்க்கிறீர்களே....செவிசாய்க்க வேண்டிய நேரத்தில் அவர்கள் பேசுகிறார்கள். (I have a sentimental weakness for my children, and I spoil them as you can see; they talk when they should listen. )

    இது காட்ஃபாதரில் பெரியவர், விடோ கொர்லியோன், பேசும் மிக அழகான வசனம். தவறு செய்த மகன் சான்டினோவை வெளியாட்கள் முன்னிலையில் கடிந்து கொள்ளும் இடத்தில் வரும் வசனம். அம்மனிதரின் கோபம் அவர் ஸ்டைலை இழக்கச் செய்யவில்லை. வெளி மனிதர்கள் சென்றபின் "உன் மூளை பழுதாகிவிட்டதா ?" என்றே திட்டுவார். ஆனாலும் மிதமாகவே.

    பெரிய தேவர் அப்படி அல்ல. பெரிய தேவருக்கு சக்தி வந்ததிலிருந்தே ஏமாற்றம் தான். தெலுங்குப் பெண்தோழி, நகரத்துக்கு புலம்பெயர்ந்துவிட அவன் திட்டம் என்று. ஆனால் ஊரில் சக்தியால் பிரச்சனை கிளம்புகிறபோது கோபம்-ஏமாற்றத்துடன் சேர்ந்துகொள்கிறது.

    அழைக்கப்பட்ட சக்தி அவருக்கு முன் நிற்காமல் பக்கவாட்டில் நின்று, அப்பாவிக்கு பின் நிற்கும். கணக்குப்பிள்ளையிடம் "எதற்காக அழைத்திருக்கிறார்" என்று சைகையில் கேட்டுக்கொண்டிருப்பான். பெரிய தேவர் ஒரு சாய்வு நாற்காலியில் சாயாமல் அமர்ந்திருப்பார். கைபனியனுக்குமேல் துண்டு போர்த்தி. "முன்னால் வா" என்று வலது கையால் சைகை செய்வார், எதன் மீதும் குறிப்பாக பார்வையை செலுத்தாமல்.

    அவர் ஏன் கூப்பிட்டார் ? கோபமாக இருக்கிறா ? ஏன் ? இதுவரை நடந்தவற்றில் ஏதாவது அவரை கோபப்படுத்தியதா ? இவை சக்தி மனதில் மட்டும் இருக்கும் கேள்விகள் அல்ல. பார்வையாளர்கள் மனத்திலும். இந்த காட்சியில் ஓரிரு காமிரா கோணங்கள் இதை உணர்த்தும் வகையில் சக்தியின் நோக்கில் இருக்கும் (point of view shots)

    அதனால் பெரிய தேவர் மீதே முழுக்கவனமும். இங்கு அவர் கதைமாந்தர் மட்டுமல்ல கிட்டத்தட்ட கதைசொல்லி.

    "ஏன் போனீய ?" என்று கேட்கும்போது பார்வை நேராக யாருமில்லாத இடத்தில் பாயும்.

    "கோவில் கும்பிடத்தானேய்யா" என்று பொறுப்பில்லத பதில் வந்த மாத்திரத்தில் ("ஐயோ" என்பதுபோல வாயை தட்டிக் கொள்ளும் கணக்குப்பிள்ளை) பெரிய தேவர் முதல் முறையாக மகனைப் பார்த்து "தர்க்கம் பண்றீய ?" என்பார்.

    பானுவை காரணம் சொல்ல முயன்று, அது தவறை விட மோசமான காரணம் என்று சக்தி உணர்வதற்குள்
    "பானு....பானு கோவில் பாக்கணும்னா பூட்டை உடைக்கணுமா ?" என்று கேட்டுவிட்டு மகனை கூர்மையாகப் பார்ப்பார். அவன் கூறும் பதிலை அளந்துகொண்டு. ஒரு தலைவனுக்கான பொறுப்பின் சுவடே இல்லாமல் அவன் இசக்கியை பழி சொல்ல.....

    "ஓஹோ அப்பொ உங்க தலைமையில இசக்கி பூட்டை உடைச்சிறுக்கார். அப்பிடித்தானே ?" என்ற கேள்வியில் கடுங்கோபத்திலும் அவரிடமிருந்து பிரிக்கமுடியாதபடி கலந்திருக்கும் கிண்டல். சுட்டெரிக்கும் பார்வையில் தெளிவாகத் தெரியும் ஏமாற்றம். கண்ணில் நீர் கோர்த்துக்கொண்டதுபோலக் கூட இருக்கும்.

    சக்தி:"என் தப்புத்தேன் யா"
    கவனிக்கப்படவேண்டிய வசனம், பின்னர் ஒரு முறை படத்தில் வரும். அப்போது தான் சக்தி அதை மனமுணர்ந்து சொல்வான். அப்போது தான் அவன் தலைவன் ஆனது - சொக்காய் மாற்றிக்கொண்ட போது அல்ல.

    இம்முறை இது இப்போதைய பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க சொல்லப்படும் வாய்வார்த்தை. அதை நன்கு உணர்ந்த பெரிய தேவர்:
    "அப்பா ...ஒத்துக்கிட்டாகப்பா....உங்க தப்பில்லையா...என் தப்பு..
    .....எலேய் அந்தப் பயகள எந்த வம்பு தும்புக்கும் போகாம இருக்கச் சொல்லு.........பஞ்சாயத்தில வேணா நான் மன்னிப்பு கேட்டுக்கிர்றேன்...என்ன பண்ண முடியும்"

    முதல் பாதியில் உத்தரவு பிறப்பிக்கும் தலைவனின் தொனி. இரண்டாவது பாதியில், வரவிருக்கும் அவமானத்தை இப்போதே அநுபவிப்பதுபோல கூனிக்குறுகும் தொனியும் உடல்மொழியும் (''என்ன செய்ய முடியும்' என்பது கையே பேசிவிடும்).

    "எசக்கி மன்னிப்பு கேட்கட்டும் ? எங்கே எசக்கி ?" என்று , நமக்குத் தெரிந்த அளவே தெரிந்த சக்தி கேட்க,

    "எலே....ஒண்ணும் தெரியாம திர்ரவென் !" என்று வெடிப்பார்.

    பானுவின் வருகையால் ஒரு பொய்யான இடைப்பட்ட அமைதி நிலவும். சக்தி கணக்குப்பிள்ளை பூசினாற்போல சொல்லும் அறிவுரையை எதிர்த்து வாதிட "அவுக சொல்றாஹல்ல ?.....கேட்டா கௌரவம் குறைஞ்சிரும் உங்களுக்கு..." என்றுவிட்டு...."போங்க" என்பார்.

    பானு வந்த நொடி அமைதிக்குப் பிறகும் அவள் குரல் சன்னமாகவே ஒலிக்கும். மறுமுறை சொல்லும்படி ஆகும். இம்முறை காலில் விழும்போதும் கண்டுகொள்ளவில்லை தான். ஆனால் இது முற்றிலும் வேறு மாதிரி தொனிக்கும் நிராகரிப்பு.

    உட்கார்ந்த இடத்தில் இருந்துகொண்டு ஆதங்கத்தையும், கடுஞ்சினத்தையும், நெஞ்சறுக்கும் ஏமாற்றத்தையும் உணர்வடிவத்தில் (palpable) ஒரு நடிப்பு நான் பார்த்ததில்லை.


    பெரிய தேவர் ஒரே ஒரு முறை தான் மூக்குக்கண்ணாடி அணிந்து காணப்படுகிறார். 'போற்றிப் பாடடி' பாடலில். அவ்ர் இறந்தபின் அந்த கண்ணாடி காண்பிக்கப்படும். சக்தி உடைமாற்றிக்கொண்டு வரும் இடைவேளிக் காட்சியில். பெரியாருடன் பெரிய தேவர் இருக்கும் புகைப்படத்திற்கு முன் ஒரு பகவத் கீதை (!). அதன் மேல் அவர் கண்ணாடி. ஒரே படக்கட்டதுள் அவர் பார்வையைப் பற்றி சொல்கிறார்கள்.

    வெத வெதச்சதும் பழம் ச்சாப்டரணும்னு நெனைக்க முடியுமோ....இன்னிக்கு நான் வெதைக்கிறேன்.....நாளைக்கு நீ சாப்டுவ....அப்புறம் உன் மயென் ச்சப்டுவியான்....அப்புறம் அவன் மயென் ச்சப்டுவியான்.....இதெல்லாம் இருந்து பார்க்க நான் இருக்கமாட்டேய்ன்....ஆனா வெத நான் போட்டது....இதெல்லாம் என்ன பெருமையா..ஹான் ? கடமை.....ஒவ்வொருத்தன் கடமை.

    கீதையை மிக மேலோட்டமாக (என்னைப்போல!) படித்தவர்களுக்குக் கூட மேற்சொன்ன வார்த்தைகளின் மூலம் கீதையில் உயர்த்திச் சொல்லப்படும் 'பலனை எதிர்பாராத கடமையாற்றல்' என்று புலப்படும். இதை சமூக சிந்தனையுடன் எளிமையாக சொல்ல முடிந்ததுதான் பெரியாரின் தாக்கமோ என்றெல்லாம் யோசிக்கவைத்த அந்த ஒரு படக்கட்டம் எழுத்தாளர்-இயக்குனருக்கு வெற்றி.

    உபதேசம் சினிமாவின் மொழிக்கு அப்பார்ப்பட்டது. ஆனால் உபதேசக் காட்சிகள் தமிழ் சினிமாவில் தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கின்றான. உணர்ச்சியும், அறிவும் ஒன்றுபட இயங்கும் காட்சி பெரிய தேவரும் -சக்தியும் மழைக்கு இடையில் பேசும் காட்சி.

    பிராண்டோ வசனத்தை முணுமுணுப்பவர் என்று சொன்னபோது, 'நிஜத்தில் யாரும் முழு சொற்றொடர்களை, ஒரே தொனியிலோ, அதன் பொருளுக்கு ஏற்ற ஏற்ற-இறக்கத்துடன் பேசுவதில்லை' என்றாராம். மேடையில் தான் முழங்கவேண்டிய நிர்பந்தங்கள். சினிமா முணுமுணுப்பையும் உணர வல்லது.

    கோவில் கும்புடத்தான்னு பேசுநீயளே...இப்பொ இந்த ஊரோட நிலைமை உங்களுக்குப் புரிஞ்சதா ?

    இதைச் சொல்லும் போது அந்த நாற்காலியில் புரண்டு படுப்பார் பெரியதேவர். அந்த அசைவிற்குத் தோதாக வசன உச்சரிப்பின் தொனி மாறும். இதை நேரொலியில் பதிவுசெய்திருந்தார்கள் என்றால் (live-recording) இது மிக நுணுக்கமான கவனிப்பின் வெளிப்பாடு எனலாம். ஒருவேளை இது பின்னணியில் தனியாக பேசப்பட்டது (dubbing) என்றால் பிரமிப்பு ஏற்படுகிறது.

    சக்தி ஊரை விட்டுப் போகிறேன் என்றதும் சாய்வில் இருந்து உடனே முன்னால் வருவார். அதிர்ச்சியை மறைக்க ஒரு பொய்ச்சிரிப்பு. பொறுப்பு என்பது தான் இல்லை, பொறுப்பிற்கு அடித்தளமாக இருக்கும் வீரம் இருக்கிறதா என்பதை கிளரும் வகையில், சக்தியை கோழை என்பார். வீரத்தின் அடிக்கோல்கள் பிழையாக இருக்கிறதாக, வெளிநாட்டில் படித்த சக்தி சற்று காட்டமாகவே சொல்வான்.

    "...இந்த காட்டுமிராண்டிப்பய கூட்டத்துல் ங்கொப்பனும் ஒருத்தந்தேய்ங்கறத மறந்துறாத" என்று சொல்வார் நெற்றியைத் தடவியபடி.

    படத்தின் சாரமான வசனம் அதன்பிறகு தான்: "அப்படிப்பார்த்தா நானும் ஒருத்தந்தான்யா......ஆனா அத நெனச்சுப் பெருமப்பட முடியல". இதைத் தொடர்ந்தே உபதேசம் துவங்குகிறது. மரணத்தை வழக்கமாக வயசாளிகள் போல அல்லாமல், மிக யதார்த்தமாக எதிர்நோக்குவார் (போ....செத்துப்போ.....எல்லா பயபுள்ளையும் ஒரு நாளைக்கு போக வேண்டியது தேன்). கொஞ்சம் கடுமையாக பேசிவிட்டோமோ என்பதுபோல அடுத்த வரி சிறுபிள்ளையுடன் பேசுவதுபோன்ற எளிமையோடும், கனிவான தொனியிலும் வ்வரும் (வாழறது முக்கியந்தான்....இல்லைங்கல...).

    கனிவும், பகுத்தறியும் பேச்சும் சக்தியின் முரட்டுத்தனமான முன்தீர்மானத்துடன் மோதி மோதி தோற்பதைக் கண்டு சட்டையை கொத்தாக பிடித்து முறைக்கும் நிலை வரும். அது அத்துமீறலா, இதுவரை மரியாதையுடன் நடத்தியதால் அப்படித் தோன்றுகிறதா என்ற குழப்பமும்-கோபமும் கலந்த பிரமாதமான பாவனை கமல் முகத்தில்.

    அத்துமீறல்,உரிமை என்பது இவ்வுறவில் வயது சார்ந்தது என்பது ஒரு வலி கலந்த உண்மை. அந்தக் கணத்தில் அதை உணர்ந்துவிட்டதால் : "தாடியும், மீசையும் வச்சுகிட்டு...ஐயாவை நெஞ்சுநிமித்தி பேசுற வயசுல்ல" என்று காட்சியில் முதல்முறை தளர்வார் பெரிய தேவர்.

    உணர்ச்சி கூட சக்தியிடம் தோற்க கணக்குப்பிள்ளையை பொறுமையில்லாமல் கத்திக் கூப்பிடுவார்: "ஏய்...யார்ராவென்....எங்க கணக்குப்புள்ள"

    "டிக்கெட்ட ஒரு பத்து நாள் சென்டு எடுக்கட்டுங்களா ?"சக்தி, "ஏனய்யா இக்கட்டில் மாட்டி விடுகிறீர்" என்று சமிக்ஞை செய்வதை பார்த்துவிடும் பெரிய தேவர் "ஏம்ப்பு பத்து நாள் இருக்க மாட்டீயளா ?" என்று இருக்கமாக கேட்டுவிட்டு, தானே பதிலாக கையசைத்து கணக்குப்பிள்ளையை அனுப்புவார்.

    அனுப்பிவிட்டு சக்தியை அருகில் அழைத்து தன் மகனை அருகில் வைத்துப் பார்க்க விழைவதை நெகிழ்வாகச் சொல்வார். வெளியாள் முன்னிலையில் உக்ரமாக மகனை திட்ட மறுக்கும் டான் விடோ போல அல்லாமல், கணக்குப்பிள்ளையிடமிருந்து தேவர் மறைக்க நினைப்பது தன் மென்மையைத் தான்.

    "உங்களைத் தானே நம்பணும்....வேற யாரு இருக்கா இங்க நம்புறதுக்கு" என்கிறபோது முழுமையாக உடைந்து போன ஒரு பெரிய மனிதனை அவன் உள்பயங்களும் மனதை உருக்குவதைப் போல தெரியும்.

    என் ஞாபகத்தில் இந்தக் காட்சியில் பாத்திரக் கோண படக்கட்டங்கள் மிகக் குறைவு, அல்லது முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டிருக்கிறது. குழுவாகப் பாடும் 'ஆ' காரத்தை ஒரு இசைக்கருவி போல் பயன்படுத்தும் மேல்நாட்டு இசை உத்தியை இளையராஜா இந்தப் படத்தில் சில இடங்களில் கையாண்டிருப்பார். இந்தக் காட்சியில் குழு வயலின்களும், கம்பீரமாக ஒலிக்கும் அடிக்கட்டை பேஸ் வாத்தியங்களும் மிகச்சரியான இடங்களில் ஒலித்து (உம். ஊரை விட்டு வெளியே வர பெரிய தேவர் மறுக்கும்போது) காட்சியை மெருகேற்றும்.

    இதற்கு மேல், கிட்டத்தட்ட, பெரிய தேவரை புரிந்துகொள்ளுவதற்கு புதுத் தகவல்கள் படத்தில் இல்லை எனலாம். பாசம், கோபம், (மிகையான) மான/அவமான மதிப்பீடுகள், தலைமை குணங்கள் என்று எல்லாமே இக்காட்சியில் அடக்கம். இதற்குப் பிறகு நடப்பதெல்லாம் நமக்கு மிக நெருக்கமாகத் தெரிந்தவருக்கு நடப்பவை. கதையின் போக்குக்கும், பார்வையாளர்கள் பெரியவரின் உள்பயங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்வதற்கும் இந்தத் தன்னிலை-விளக்கக் காட்சி மிக முக்கியமானது.

    பல உணர்ச்சி நிலைகளும், நிலைத்தடுமாற்றங்களும் காண்பிக்கப்படும் மிகக் கடினமானக் காட்சி. நன்கு எழுதப்பட்டிருந்தாலும் வெகு சுலபமாக நம் சினிமாவின் வழக்கமான உணர்ச்சிச் சுழலில் சிக்கி ஒரு சாதாரண மிகையுணர்ச்சி/உபதேசக் காட்சியாக மாறிய்யிருக்கும்.மிக இயல்பாக வெளிவந்து மக்களை கவர்ந்திழுத்தற்கு பெருங்காரணம் சிவாஜியின் அசாத்தியத் திறமை தான்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  16. Likes Harrietlgy liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •