Page 189 of 400 FirstFirst ... 89139179187188189190191199239289 ... LastLast
Results 1,881 to 1,890 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #1881
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Thanks Russellmai thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1882
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கடவு(ள் )

    நின்னை இமய மலை என்போம்

    நடிப்பு கடல் என்போம்

    உன் மூச்சு காற்றே நடிப்பென்போம்

    உன் வீரம் ஆவேச நெருப்பென்போம்

    நீயிருக்கும் நிலத்திலே நிற்பதை கொடுப்பென்போம்.

    நடிப்பின் பிரம்மா என்போம்.

    சினிமா தொழிலையே காத்த விஷ்ணு என்போம்.

    வேடம் புனைந்ததால் நீயே சிவனென்போம்

    கலையில் சரஸ்வதி எடுத்த பிறவி என்போம்

    குரலில் நடையில் சிம்மம் என்போம்

    நடையில் யானை எருதென்போம்

    கட்டபொம்மன் என்போம்,சிதம்பரம் என்போம்,

    கர்ணன் என்போம் நாவுக்கரசர் என்போம்

    நீதியின் காவலன் என்போம், காவலர் என்போம்

    மருத்துவர் என்போம் ஆசிரியன் என்போம்

    திலகம் என்போம் அனைத்து மதங்களையும்

    நடித்து கடந்தவன் என்பதால் வசதி படி எண்ணி கொள்வோம்

    வெற்றியும் நீயே திறமையும் நீயே

    மேதைமையும் நீயே உழைப்பும் நீயே

    நேரத்தின் காலத்தின் காவலனும் நீயே

    காலம் கடந்த புகழின் காதலனும் நீயே

    அதிர்ஷ்டமும் நீயே தமிழகத்தில் பிறந்த

    துரதிருஷ்டத்தின் வடிவும் நீயே

    நடிப்பின் வடிவென்போம் வாழ்வில்

    நடிக்கவே தெரியா பேதையென்போம்

    எங்களின் நிரந்தர போதை என்போம்

    உன்னை கடவுள் மனிதன் பஞ்சபூதங்கள்

    குணங்கள் உருவ அருவ விவரணங்கள்

    தொழில்கள் என்று எங்கும் நீக்கமற

    நிறைந்திருக்கும் பரம் பொருளாய் தொழுவோம்

    ஆனால் உன்னதமான ஒன்றாய் நான் மதிப்பது

    அன்னை பிதா மனைவி மக்கள் இவர்களை மீறி

    உண்மை தமிழர் அனைவரின் கடவு சொல்லாய்

    நித்தமும் நிலைத்திருக்கும் கலை திலகமே

    நீயே கடவு சொல்லாயினும் ,உன்னை எண்ணியும்

    கடவா தினமாக இருபத்து ஒன்றை ஆக்கி

    தொப்புள் கொடி அறுத்த காலனை

    நண்பனென்று எண்ணி கூட போன

    எங்களின் நிரந்தர வாதையா நீ

    இரண்டை மறைத்து ஒன்றுக்கு காத்திருப்போம்
    Last edited by Gopal.s; 20th July 2016 at 10:27 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. #1883
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  6. Likes JamesFague, Georgeqlj, Harrietlgy liked this post
  7. #1884
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் பிறந்த தினத்தில் வெளியான ஒரே காவியம் துணை.(01/10)

    அவர் மறைந்த தினத்துக்கு வெகு அருகே வருவது தில்லானா மோகனாம்பாள்.(22/07)(Thenum Palum is another on 22/07)

    இரண்டுமே நம் மனதுக்கு அருகே வரும் உன்னத காவியங்கள்.

    இதோ தில்லானா மோகனாம்பாளுக்கு நமது பதிவர் பலரின் பங்களிப்பு.
    Last edited by Gopal.s; 20th July 2016 at 11:51 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  8. Likes KCSHEKAR liked this post
  9. #1885
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிக்கல் சண்முகசுந்தரம்.(By முரளிஶ்ரீநிவாஸ்)

    தமிழகத்தின் நெற்களஞ்சியம் மட்டுமல்ல கலைகளஞ்சியமும் தஞ்சை மாவட்டம் என்றே சொல்லலாம். தமிழகத்திற்கே உரித்தான பரதமும் நாதமும் கருக்கொண்டதும் உருப்பெற்றதும் தஞ்சை மாவட்டத்தில்தான். நாத பிரம்மம் என்றழைக்கப்படுகின்ற மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் பெருமை பாடும் திருவையாறு முதல் பரத நாட்டியத்தின் இரு பெரும் முறைகளாக சொல்லப்படுகின்ற பந்தநல்லூர் மற்றும் வழுவூர் ஆகியவை அமைந்திருப்பதும் பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்தில்தான். அதனால்தான் என்னவோ நாயகி மோகனா திருவாரூரை சேர்ந்தவளாக சித்தரிக்கப்படுகிறாள். நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள சிக்கல் எனும் ஊரை சொந்தமாக கொண்டவர் சண்முகசுந்தரம்.

    பொதுவாகவே திறமை வாய்ந்த கலைஞர்கள் சற்று முன் கோவம் கொண்டவர்களாகவும் தங்கள் திறமையின் மீது அசாத்திய நம்பிக்கை கொண்டவர்களாகவும் அதன் காரணமாகவே வித்யா கர்வம் [சாதாரண வார்த்தைகளில் சொன்னால் திமிர்] மிகுந்தவர்களாகவும் விளங்குவார்கள் என்பது பரவலான ஒரு நம்பிக்கை/கருத்து. அந்த கருத்துக்கு வலு சேர்பவர்கள்தான் சண்முகமும் மோகனாவும்.

    அதிலும் சண்முகம் உண்மையிலே மனதளவில் சிக்கலார்தான். தன் தொழிலின் மேல் அபார பக்தி, தன் திறமை மேல் அசாத்திய நம்பிக்கை, தன் தன்மானத்திற்கு ஊறு நேரும்போது யாராக இருந்தாலும் அவர்களுடன் மோத தயங்காத குணம், தான் காதலிக்கும் பெண் மீது வைக்கும் அதீத அன்பு, அவள் தனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் என்ற வெறி, பெரிய கலைஞனாக இருந்தாலும் ஒரு சாராசரி மனிதனுக்கு உள்ளது போன்ற பயம், சந்தேகம் இத்யாதிகள். மொத்தத்தில் ரத்தமும் சதையுமான ஒரு பச்சை மனிதன்.

    முதன் முதலாக கோவிலில் கச்சேரி செய்துக் கொண்டிருக்கும் போது வண்டியில் வந்து இறங்கும் மோகனாவை பார்த்தவுடன் பாலையாவிடம் அதை சுட்டிக் காட்டும் கண் அசைவு, தொடர்ந்து வேட்டு சத்தம் கேட்டவுடன் வரும் கோவத்தில் கச்சேரியை நிறுத்திவிட்டு வெளியேறுவது, வெளியில் நிற்கும் தன் மனம் கவர்ந்த பெண்ணிடம் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் நாத பரத கலைகளைப் பற்றி வாதம் புரிவது என்று அந்த முதல் காட்சியிலே கேரக்டர்-ஐ establish பண்ணி விடுவார்கள். காதல் கோவம் கர்வம் எல்லாம் அப்படியே அந்த முகபாவங்களில் ஜொலிக்கும்.

    முதலில் சொன்னது போல் சண்முகசுந்தரம் ஒரு அசாதாரணமான ஹீரோ இல்லை. சராசரி மனிதன். வெளியே வீம்புக்கு நாட்டியம் பார்க்க வரமாட்டேன் என்று சொல்லி விட்டாலும் தன் வாத்திய குழுவினரை போக கூடாது என விரட்டினாலும் மனதின் ஆசையை கட்டுப்படுத்த முடியாமல் கச்சேரிக்கு போய் மறைந்திருந்து பார்க்கும் ஒரு காதல் வயப்பட்ட மனிதனை எப்படி வெளிக் கொண்டு வருகிறார். அடுத்து தற்செயலாக ஒரே ரயிலில் சண்முகமும் மோகனாவும் பயணம் செய்யும் வாய்ப்பு. அத்தனை பேர் சூழ்ந்து இருந்தும் காதல் எப்படி பொங்கி பெருகிறது? பாலையா துணையுடன் விளக்கு அணைக்கப்பட்டு இருவருமே கண்களால் பேசிக் கொள்ளும் காட்சி. தமிழ் சினிமாவில் இதுவரை இடம் பெற்றுள்ள காதல் காட்சிகளுக்குள் தலையாய ஒன்று என்பதில் சந்தேகமில்லை.

    தஞ்சாவூரில் இறங்குகிறார்கள். சிங்கபுரம் மைனர் வீட்டு நிகழ்ச்சிக்கு கூட்டிப் போக வந்திருக்கும் வைத்தி, படியில் நிற்கும் மோகனாவைப் பார்த்துவிட்டு யாரு மோகனாவா என்று கேட்டுவிட்டு அங்கே போக முற்படும்போது அவள் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற possessiveness மீண்டும் சண்முகத்திடம் தலை தூக்க எங்களை பார்க்க வந்தியா இல்லை அவங்களை பார்க்க வந்தியா என்று முறுக்கும் சண்முகம், அங்கே மீண்டும் அந்த கதாபாத்திரத்தின் குணாதிசயங்களை அழகுற காட்சி வைக்கிறார் நடிகர் திலகம்.

    சிங்கபுரம் அரண்மனையில் சுய கெளரவம் மிக்க அந்த கலைஞ்னுக்கு ஏற்படும் அவமானம், கோவித்துக் கொண்டு வெளியேற உங்கள் கச்சேரியை கேட்கத்தான் வந்தோம் என்று திரண்டிருக்கும் பொது மக்கள் சொல்ல அந்த பெருமிதம் முகத்தில் ஒரு கனம் மின்னி மறைவதை என்னவென்று சொல்லுவது? வாசிப்பை கேட்டு வெளிநாட்டுக்காரர்கள் எல்லாம் வந்துவிட அவர்கள் இங்கிலீஷ் நோட்ஸ் வாசிக்க முடியுமா என்று கேட்க முதலில் அந்த ஆங்கிலம் புரியாமல் ஒரு கனம் குழப்பமாய் பார்க்க வைத்தி அது என்னவென்று விளக்க உடனே பாலையாவைப் பார்த்து கண் அசைவிலே ஓகே என்று சொல்லி அவர் வாசிக்கும் காட்சி அற்புதமான ஒன்று.

    திருவாரூர் சென்று மோகனாவைப் பார்க்க வேண்டும் என்ற அந்த ஆசையை வெளியில் தெரியாமல் மறைக்க முற்பட்டு ஆனால் பாலையாவிற்கு புரிந்து விட அந்த தர்மசங்கடத்தை கோவப்படுவது போல் வெளியில் காண்பிப்பது, சிங்கபுரம் மைனரின் கோச் வண்டியை பார்த்ததும் வரும் அதிர்ச்சி, ஆத்திரம். இவற்றிக்கு காரணமில்லாமல் இல்லை. அந்தக் காலத்தில் [அதாவது கதை நடப்பது சுதந்திரத்திற்கு முன் உள்ள காலகட்டம். அது படத்தில் சொல்லப்படவில்லை என்றாலும் கூட தொடர் கதையாக வந்த போது அப்படித்தான் சொல்லப்பட்டது] பொதுவாக நாட்டிய பெண்மணிகளைப் பற்றிய சமூகத்தின் பார்வை, பொதுமக்களின் கருத்து எல்லாம் தவறான கண்ணோட்டத்திலேயே அமைந்திருந்தன. அந்த சூழலில் வளர்ந்த சண்முகத்திற்கும் சந்தேகம் வந்ததில் ஆச்சரியமில்லை.

    படம் முழுவதும் வரக்கூடிய சண்முகத்திற்கும் ஜில் ஜில்லின் நாடகக் கொட்டகையில் இருக்கும் போது திரையில் தோன்றும் சண்முகத்திற்கும் வித்தியாசம் இருக்கும். அங்கே மட்டும்தான் அந்த கோபதாபம் இல்லாமல் சற்றே சிரிக்கும் சண்முகத்தைப் பார்க்கலாம்.

    நாடகம் பார்க்க வரும் மோகனா சண்முகத்தை சீண்டும் காட்சியெல்லாம் யாரும் எடுத்து சொல்லாமலே அற்புதமான காட்சி என்று அனைவருக்கும் தெரியும். ஒரு மனிதனுக்கு அதுவும் இயல்பிலே முன்கோபியான ஒருவனின் தன்மானம் சீண்டப்பட்டால் அந்த கோபத்தின் வெளிப்பாடு எப்படி இருக்கும் என்பதை இதில் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம். ஒரு ஆணுக்கு மற்றொரு ஆணுடன் அப்படி ஒரு வாக்கு வாதம் ஏற்படுகிறது என்றால் அங்கே கைகலப்பு ஏற்பட்டு விடும் ஆனால் சீண்டியவள் ஒரு பெண் என்பதனால் அதுவும் பத்து பேருக்கு முன்னால் தன்னை கேலி பேசி விட்டாள் என்று வரும் போது அது எப்படி அந்த உடல் மொழியில் வெளிப்படுகிறது. அடிவயிற்றிலிருந்து வரும் கோவத்தோடு அவள் சவாலை ஏற்று தில்லானா வாசித்து உன் காலை உடைக்கிறேன் என்று சவால் விட்ட பிறகும் கூட அந்த ஆத்திரம் தணியாமல் மீண்டும் மீண்டும் திரும்பி வந்து கோவத்தில் உதடுகள் துடிக்க வார்த்தை வராமல் அந்த துண்டை உதறியவாறே போகும் அந்த காட்சியெல்லாம் அது போல செய்வதற்கு மீண்டும் நடிகர் திலகமே பிறந்து வந்தால்தான் உண்டு.

    தில்லானா பட்டம் கொடுக்கும் காட்சியெல்லாம் பற்றி ஏற்கனவே பிரபு அருமையாக எழுதியிருக்கிறார் [சண்முகத்திற்கு மேடை புதியதல்ல ஆனால் மேடை பேச்சு புதிது]. ஆகவே அடுத்த கட்டம் என்றால் அவர் மருத்துவமனையில் நர்சின் பணிவிடையைப் பார்த்து தவறாக நினைத்து அதை தவிர்க்க நினைப்பதை சொல்ல வேண்டும். அடிப்படையில் பெண்களிடமிருந்து ஒதுங்கி இருக்கும் ஒரு கூச்ச சுபாவி. நர்ஸ் உரிமை எடுத்துக் கொண்டு தனக்கு பணவிடை செய்யும் போது தர்மசங்கடத்தில் தவிக்கும் அந்த உடல் மொழி ஒரு பரிமாணம் என்றால், ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் சத்தம் போட்டு விட, அந்த நர்ஸ் ஒரு அர்ப்பணிப்பு உணர்வோடு செய்ததாக சொன்னவ்டன் அவசரப்பட்டு தவறாக பேசி விட்டோமே என்ற வேறொரு தர்மசங்கடத்தில் தவிக்கும் போது காட்டும் உடல் மொழி அவரின் இன்னொரு பரிமாணம்.

    நலந்தானா பாடல் காட்சி எல்லாம் சொல்லவே தேவையில்லை. நான் பலரிடமும் சொல்வது எல்லா வரிகளையும் விட்டு விடுவோம் அந்த கண்பட்டதால் உந்தன் மேனியிலே புண்பட்டதோ அதை நானறியேன் என்ற வரிகளின் போது விழி சிவந்து கண்ணில் நீர் பெருக்கி ஒரு சின்ன தலையாட்டலில் உன் உள்ளத்தையும் அதில் என் மேல் உள்ள காதலையும் எனக்கு ஒன்று என்றால் நீ துடித்துப் போவதையும் நான் உணர்ந்திருக்கிறேன் என்ற புரிதலையும் அவர் வெளிப்படுத்தும் அந்த பாங்கு இருக்கிறதே அப்போது அவர் கன்னங்களில் மட்டுமா கண்ணீர் வழியும், காட்சியை காண்பவர் எல்லோர் கண்களிலும்மல்லவா கண்ணீர் வடியும்.

    மதன்பூர் செல்லும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடும் போது, படித்து பார்த்து விட்டு போடுங்கள் என்று ராஜன் சொல்ல அதிலே என்னடா இருக்கப் போகுது என்று சமாதானம் சொல்லி கையெழுத்து போட்டுவிட்டு பின்னர் தன்மானத்திற்கு ஊறு வரும் என்ற நிலையில் வாசிக்க மாட்டேன் என்று சொல்ல ஒப்பந்ததை காட்டி கேஸ் போடுவேன் என்று வைத்தி சொல்லும் போது அன்று கூட இருந்தவர்கள் சொன்னபோது கேட்காமல் போனோமே என்ற குற்ற உணர்வை கூட எவ்வளவு துல்லியமாக வெளிப்படுத்துகிறார்.

    இறுதியாக மதன்பூர் மகராஜாவின் அறையிலிருந்து வெளியே வரும் மோகனாவை தாறுமாறாக பேச அதற்கு அறிவு கெட்டதனமாக பேசாதீர்கள் என்று மோகனா சொல்ல கண் மண் தெரியாத கோவத்தில் பளாரென்று அறையும் சண்முகம் செத்து போ என்று சொல்லிவிட்டு போகும் அந்த உடல் மொழி, மறக்கவே முடியாது.

    கொஞ்சம் யோசித்துப் பார்தோமென்றால் தில்லானா அடிப்படையில் ஒரு காதல் கதைதான். காதலிக்கும் இருவர் அந்த காதல் வெற்றி பெற எதிர்கொள்ள வேண்டிய போராட்டங்கள்தான் கதை. ஆனால் கதையின் பின்புலம் இசையும் இசை சார்ந்த சூழலுமாக அமைக்கப்பட்டிருந்ததுதான் அந்தப் படத்தின் சிறப்பு.

    தில்லானா என்று எடுத்துக் கொண்டால் ஒருவரை கூட விட்டு விடாமல் பாராட்ட வேண்டும். ஆனால் இங்கே பாட்டுடை தலைவன் நடிகர் திலகம் பற்றிய அலசல் மட்டுமே இப்போது என்னால் எழுத முடிந்திருக்கிறது. பின்னொரு நாளில் மற்றவர்களைப் பற்றியும் எழுதலாம்.

    அன்புடன்
    Last edited by Gopal.s; 20th July 2016 at 12:02 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. Thanks Harrietlgy thanked for this post
    Likes KCSHEKAR, Georgeqlj, Harrietlgy liked this post
  11. #1886
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ப்ரிய சிக்கலாரைப் பற்றி சிறப்பான இடுகை திரு.முரளி----PR
    Quote Originally Posted by முரளி ஶ்ரீநிவாஸ்
    அதிலும் சண்முகம் உண்மையிலே மனதளவில் சிக்கலார்தான். தன் தொழிலின் மேல் அபார பக்தி, தன் திறமை மேல் அசாத்திய நம்பிக்கை, தன் தன்மானத்திற்கு ஊறு நேரும்போது யாராக இருந்தாலும் அவர்களுடன் மோத தயங்காத குணம், தான் காதலிக்கும் பெண் மீது வைக்கும் அதீத அன்பு, அவள் தனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் என்ற வெறி, பெரிய கலைஞனாக இருந்தாலும் ஒரு சாராசரி மனிதனுக்கு உள்ளது போன்ற பயம், சந்தேகம் இத்யாதிகள். மொத்தத்தில் ரத்தமும் சதையுமான ஒரு பச்சை மனிதன்.

    சில நாட்களுக்கு முன்பு ஜெய்-யுடன் இதைப் பற்றி தான் விவாதித்துக்கொண்டிருந்தேன். எத்தனை shadesஐ அசாத்தியமாக காண்பித்திருப்பார். அசுர சாதனை. அடங்கிய தொனியில் இருக்கும் காட்சிகளிலும்.

    "கோவந்தேன்..." என்று ஜில்லு சொன்னதும்
    "குறை இல்லாத மனுஷன் ஏது ஜில்லு.." என்று சொல்வார். இது ஞானியின் வார்த்தையோ, விரக்தியில் சொல்வதோ இல்லை. ஒரு மாதிரி tired and dry குரலில் சொல்வார்.

    Quote Originally Posted by முரளி ஶ்ரீநிவாஸ்
    முதன் முதலாக கோவிலில் கச்சேரி செய்துக் கொண்டிருக்கும் போது வண்டியில் வந்து இறங்கும் மோகனாவை பார்த்தவுடன் பாலையாவிடம் அதை சுட்டிக் காட்டும் கண் அசைவு,
    பிரமாதமான tag-team!
    அதற்கு லயித்து வாசித்துக் கொண்டிருக்கும் பாலையா விழித்து, கவனித்து, சிரிப்பது.
    தத்தம் கலைகளின் உச்சத்தில் இருக்கும் தருணத்தில் கூட இந்த இரு கலைஞர்கள் 'have some attention to spare' என்ற அளவுக்கு அந்த சித்தரிப்பிலேயே தெரிந்துவிடும்.

    Quote Originally Posted by முரளி ஶ்ரீநிவாஸ்
    ஆசையை கட்டுப்படுத்த முடியாமல் கச்சேரிக்கு போய் மறைந்திருந்து பார்க்கும் ஒரு காதல் வயப்பட்ட மனிதனை எப்படி வெளிக் கொண்டு வருகிறார்.
    அதுவும் அந்த 'ஷண்முகா'வுக்கு 'அடி!' என்று அந்த துடுக்குத்தனத்துக்கு react செய்யும் விதம்

    Quote Originally Posted by முரளி ஶ்ரீநிவாஸ்
    அடுத்து தற்செயலாக ஒரே ரயிலில் சண்முகமும் மோகனாவும் பயணம் செய்யும் வாய்ப்பு.
    தற்செயல் இல்லை. குழுவையே கடைசி ரயிலுக்காக காக்க வைப்பார். பாலையா காரணத்தை உடைக்கப்போக, வேறு வழியில்லாமல் அரைமனதுடன் கிளம்புவார். கனவானின் காதல் அல்லவா

    Quote Originally Posted by முரளி ஶ்ரீநிவாஸ்
    வைத்தி, படியில் நிற்கும் மோகனாவைப் பார்த்துவிட்டு யாரு மோகனாவா என்று கேட்டுவிட்டு அங்கே போக முற்படும்போது அவள் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற possessiveness மீண்டும் சண்முகத்திடம் தலை தூக்க எங்களை பார்க்க வந்தியா இல்லை அவங்களை பார்க்க வந்தியா என்று முறுக்கும் சண்முகம், அங்கே மீண்டும் அந்த கதாபாத்திரத்தின் குணாதிசயங்களை அழகுற காட்சி வைக்கிறார் நடிகர் திலகம்.
    இப்படியும் சொல்லலாம். நான் இதை வேறு மாதிரி நினைத்தேன். அந்த தருணத்தில் அவன் மகாகலைஞன். தன்னை வரவேற்க வந்தவன், தனக்கு உரிய மரியாதையைச் செய்யவேண்டுமே ஒழிய, இன்னொரு கலைஞரை சந்தித்துப் பேசி, தன்னை incidentalஆக வரவேற்றதாக இருக்கக்கூடாது என்ற பிடிவாதம் தெரிந்தது.

    Quote Originally Posted by முரளி ஶ்ரீநிவாஸ்
    உங்கள் கச்சேரியை கேட்கத்தான் வந்தோம் என்று திரண்டிருக்கும் பொது மக்கள் சொல்ல அந்த பெருமிதம் முகத்தில் ஒரு கனம் மின்னி மறைவதை என்னவென்று சொல்லுவது?
    முதலில் அந்த ஆங்கிலம் புரியாமல் ஒரு கனம் குழப்பமாய் பார்க்க வைத்தி அது என்னவென்று விளக்க உடனே பாலையாவைப் பார்த்து கண் அசைவிலே ஓகே என்று சொல்லி அவர் வாசிக்கும் காட்சி அற்புதமான ஒன்று.

    வைத்தி மொழிபெயர்த்ததும் "இவ்வளவு தானா எப்படி ஊதித் தள்ளுகிறோம் பார்" என்று இருவரும் முகபாவங்கள் மூலமாகவே காட்டி விடுவார்கள்.


    Quote Originally Posted by முரளி ஶ்ரீநிவாஸ்
    ஒரு ஆணுக்கு மற்றொரு ஆணுடன் அப்படி ஒரு வாக்கு வாதம் ஏற்படுகிறது என்றால் அங்கே கைகலப்பு ஏற்பட்டு விடும் ஆனால் சீண்டியவள் ஒரு பெண் என்பதனால் அதுவும் பத்து பேருக்கு முன்னால் தன்னை கேலி பேசி விட்டாள் என்று வரும் போது அது எப்படி அந்த உடல் மொழியில் வெளிப்படுகிறது. அடிவயிற்றிலிருந்து வரும் கோவத்தோடு அவள் சவாலை ஏற்று தில்லானா வாசித்து உன் காலை உடைக்கிறேன் என்று சவால் விட்ட பிறகும் கூட அந்த ஆத்திரம் தணியாமல் மீண்டும் மீண்டும் திரும்பி வந்து கோவத்தில் உதடுகள் துடிக்க வார்த்தை வராமல் அந்த துண்டை உதறியவாறே போகும் அந்த காட்சியெல்லாம் அது போல செய்வதற்கு மீண்டும் நடிகர் திலகமே பிறந்து வந்தால்தான் உண்டு.

    பிறந்து வரக்கூடும் என்ற நம்பிக்கையுமே மிகை. ஏனன்றால், அந்த காலகட்டத்தின் aesthetic, ஆண்-பெண் உறவுகள், மான-அவமான மதிப்பீடுகள் எல்லாவற்றையும் அத்தனை துல்லியமாக ரசிக்கக் கூடிய சூழலும் இன்று இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இது அங்கலாய்ப்பு அல்ல. காலப்போக்கில் இந்த வகை மாற்றங்கள் நடக்கத்தான் செய்யும்.

    இன்று ஒரு சரித்திரப் படம் எடுத்தாலும், உடை,சூழல் போன்ற வெளிப்பூச்சு விஷயங்களை சிறப்பாக கொண்டு வர முடியுமே தவிர, அந்த காலகட்டத்தில் உறவுகள்- 'இன்னின்ன வார்த்தை இத்தகைய மனிதர் மீது இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்' என்பதை எல்லாம் ஓரளவுக்கு மேல் கொண்டு வர முடியாது. நமது இன்றைய சட்டகத்தில் இருந்து தான் பார்க்க முடியும். அதற்கு மேல் அதை எல்லாம் உணர்ந்து, சிறப்பாக உள்வாங்கி வெளிக்கொண்டுவர இதைப் போன்ற அசாத்திய திறமை வேண்டும்.

    கோவத்துடன் மோகனாவைப் பார்ப்பதும், பேச்சுகொடுக்கும் வைத்தியை "சும்மார்ரா டேய்" என்று சொல்லி வாயடைக்க வைக்கும்போதும் 'கனன்றுகொண்டிருக்கும் சீற்றம், எந்நேரமும் வெடித்து வெளிவரலாம்' என்று நமக்குத் தெரிந்துவிடும். கோவத்திலும் இத்தனை நிறங்களா!

    தெய்வமகனின் : damn your hotel என்று சொல்லும்போது ஒரு disappointment கலந்த கோவம், தேவர் மகனில் பொறுப்பில்லாமல் எதிர்த்துப் பேசும் மகனிடம் 'தர்க்கம் பண்றீய?' என்ற சீற்றம், சில பக்கங்கள் முன் நாம் பார்த்த சத்ரபதி சிவாஜியின் கோவம்..இவையெல்லாம் பற்பல இடங்களில் பார்த்தவை. தில்லானாவில் ஒரே படத்தில்...ஏன் இந்த ஒரே காட்சியில்!!

    அந்த காட்சித்தொடரே சிறப்பாக வந்திருக்கும். Mood மாறுவது, மனமாற்றம் நிக்ழவது, ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பதட்டம். மைனருக்கு, வடிவு'க்கு...என்று ஏ.பி.என் masterclass.

    "வேறு ஆரு காப்பாத்துனாஹ"..என்று ஜில்லு நடுங்கும் அழுகுரலுடன் கேட்கும்போது அந்த குழந்தைத்தனம் நம்மை கிட்டத்தட்டநெகிழச்செய்யும்.

    சற்று முன்வரை இவர்கள் சண்டை மறந்து சேரக்கூடாதா என்று நினைத்துக்கொண்டிருந்த நாம், மோகனா வம்பிழுப்பதை, 'எத்தனை புத்திசாலி இந்தப் பெண்!' என்று ரசிக்கத் தொடங்கிவிடுகிறோம். APN makes the audience root for the exact opposite, within a matter of minutes!!

    தில்லானா பட்டம் கொடுக்கும் காட்சி

    இங்கொரு விஷயத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாடகக் கொட்டகைக்குப் பிறகு மோகனாவும்-சண்முகமும் இங்கு தான் சந்திக்கிறார்கள்.

    சிங்கபுரம் மைனர் திருந்திய விஷயம் எல்லாம் நமக்குத் தான் தெரியும். சண்முகத்துக்கு தெரிந்ததாக படத்தில் சொல்லப்படவில்லை. நாவலில் எப்படி என்று தெரியவில்லை.

    சண்முகம் காண்பதெல்லாம், குடும்பத்தோடு மைனர் போட்டியைப் பார்க்க திருவாரூருக்கு வந்திருக்கிறார் என்பது தான். வைத்தி ஏற்படுத்தும் இடையூறுகளை சபையிலிருந்து அகற்றுகிறார் என்பது தான். இதனாலேயே சண்முகம் போன்ற ஒரு சந்தேகப்பேர்வழிக்கு சந்தேகம் போய்விடுமா என்ன?

    அந்த ஆட்டத்தின் முடிவில் அந்த சந்தேகம் எங்கே இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது? முன்னைவிட ஆழமான ஒரு காதலை மட்டுமே அங்கே காண்கிறோம். இந்தக் கலைஞனுக்கு, மோகனாவின் கலையின் பரிமளிப்பு தன் சந்தேகத்தைத் தாண்டி செல்ல செய்துவிட்டது.

    ஒரு absurd foil கொடுக்கவேண்டும் என்றால்: பாலசந்தரின் டூயட்டை நினைத்துப்பாருங்கள். 'அந்த இசையைத் தான் நான் காதலித்தேன்' என்று ஒரு வசனம் வரும். எத்தனை அபத்தமான ஒரு வசனம். என்ன கோமாளித்தனமான ஒரு தருணம். ஒரு அழகான conceptஐ சொதப்பியிருபார்கள்.

    ஆனால் தி.மோ-வில் எத்தனை அழகாக காண்பித்திருப்பார்கள். கலைஞனின் கலையால் ஆகர்ஷிக்கப்படும்பொழுது, அந்த கலைஞனின் ஆளுமையை, personalityஐயும் சேர்த்தே உணர்ந்துவிட்டதாகத் தோன்றுவதையல்லவா அந்தக் கணம் காண்பிக்கிறது.

    இந்தி இயக்குனர்/நடிகர் குரு தத்'தின் ப்யாஸா'வில் கதாநாயகன் ஒரு கவிஞன். அவன் கவிதைகளைப் படிக்கும் கதாநாயகி வஹீதா ரஹ்மான் அவனை நன்கு அறிந்தவள் போல பேசுவாள். அவன் 'என்னைப் பற்றி உனக்கு எப்படித் தெரியும்?' என்று கேட்க. "உன் (ஆழ்மன வெளிப்பாடான) கவிதைகளையே நான் படித்துவிட்டேனே. இதற்குமேல் உன்னைப் பற்றி தெரிந்துகொள்ள வேறென்ன இருக்கிறது என்கிறாய்" என்பாள்.

    கிட்டத்தட்ட அதைத் தான் வார்த்தைகளின்று இக்காட்சியில் இசைமூலம் சாதித்திருப்பார்கள். நமது திரைப்பட வரலாற்றில் ஒரு அழகியல் மைல்கல் இப்படம்.

    அந்த உரை ஒரு wonder! தயக்கம், வார்த்தைகளைத் தேடித் துழாவிப் பேசுவது என்று. Spot improvisation என்று சொல்லலாம். ஆனால், சிவாஜியைப் பொருத்தவரை பல takeகள் இருந்தாலும் அதை அப்படியே திரும்ப பேசியிருப்பார் என்பது நமக்குத் தெரியும். பிரமிக்கவேண்டியது தான்.


    Quote Originally Posted by முரளி ஶ்ரீநிவாஸ்
    நர்ஸ் உரிமை எடுத்துக் கொண்டு தனக்கு பணவிடை செய்யும் போது தர்மசங்கடத்தில் தவிக்கும் அந்த உடல் மொழி ஒரு பரிமாணம் என்றால், ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் சத்தம் போட்டு விட, அந்த நர்ஸ் ஒரு அர்ப்பணிப்பு உணர்வோடு செய்ததாக சொன்னவ்டன் அவசரப்பட்டு தவறாக பேசி விட்டோமே என்ற வேறொரு தர்மசங்கடத்தில் தவிக்கும் போது காட்டும் உடல் மொழி அவரின் இன்னொரு பரிமாணம்.
    பலவகை நடிப்பு உள்ள காட்சி அது..
    அந்த காட்சியிலும் நகைச்சுவை இருக்கும் -தெர்மாமீட்டரை வாயில் வைத்துக்கொண்டு முழிப்பது
    ஜன்னலை மூடியதும் நடுக்கம், பணிவிடைகளை தட்டும்போது "கொஞ்ச்சம்" அதிகமாக கவனம் எடுத்துக்கொள்வதாய் தோன்றுவதைச் சொல்லும்பொழுது அந்த emphasis, கடைசியில் "சரிதான்..உங்களுக்கு நாதஸ்வரம் தவிர ஒண்ணும் தெரியாது போலயிருக்கு" எனும்போது வரும் நெகிழ்வு. முதல் சிலமுறை எனக்கு அந்த நெகிழ்வு கொஞ்சம் மிகையாகத் தான் தெரிந்தது.

    ஆனால் அந்த வரி சண்முகத்தை எப்படி எல்லம் குத்தியிருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ளமுடியும் தானே. நாதஸ்வரத்தைத் தவிர அவனுக்கு என்ன தெரியும்? கலைஞனுக்கே உரித்தான தீவிர உணர்ச்சிகளோடு தான் அவன் உறவுகளை அணுகுகிறான். இம்முனைக்கும் அம்முனைக்குமாக தாவுகிறான். அவன் காதல் எத்தனை தீவிரமோ, அத்தனை தீவிரம் அவன் கசப்புக்கும், வெறுப்புக்கும், கோபத்துக்கும். எல்லாம் தன் சின்னத்தனமான முன்முடிவுகளால், என்பதை இந்தச் சின்னப்பெண் எத்தனை லாவகமாக அவனுக்கு உணர்த்திவிடுகிறாள்!

    நலந்தானா பாடல் காட்சி எல்லாம் சொல்லவே தேவையில்லை.
    என்று சொல்லிவிட்டு அழகாக சொல்லிவிட்டீர்கள்!

    அந்த கண்ணீரிலும், இத்தனை கரிசனம் உள்ள தன் காதலியைப் பற்றிய பெருமிதமும் தெரியும்.

    பல்வகை உணர்வுகள் சங்கமிக்கும் தருணங்களை (moments of confluence of emotions) தெளிவாக பார்வையாளர்களுக்கு உணர்த்துவது ஒரு நடிகனுக்கு உச்சகட்ட சவால். அனேகம் பேர் அத்தகைய தருணங்களை எழுதவே மாட்டார்கள். ஏனென்றால் அதை தெளிவாக சித்தரிப்பது கஷ்டம். ஆனால் அவையே திரைப்படக்கலையின் உச்ச தருணங்கள்.

    ஒரு உணர்விலிருந்து இன்னொன்றுக்கும் அழகாக மாறுவதைச் சொல்லவில்லை. அதையும் பலமுறை செய்திருக்கிறார். பலரும் செய்திருக்கிறார்கள். That is also no mean task. ஆனால் நான் சொல்வது ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்துவதை.

    எழுத்தில் 'ஒரே நேரத்தில் நெகிழ்ச்சியும், பெருமிதமும்' என்று எழுதும் வாக்கியத்தில் கூட அவை அடுத்தடுத்து வரும் சொற்கள். Trivially true. நாம் படித்து, நம் புத்தியில் அவற்றைப் பிணைத்து ஒன்றாக்கிக் கொள்கிறோம். இசையில் simultaneity சாத்தியம் என்றாலும், இசைக்கும் அது ஏற்படுத்தும் உணர்வுக்கும் உள்ள உறவு விவரணை சட்டகங்களுக்கு அப்பார்ப்பட்டது (அதுவே அதன் சிறப்பு). மேலும் ஒருவருக்கொருவர் சற்றளவேனும் மாறக்கூடியது அந்த associations. ஆனால் நடிப்பில் தெளிவின்மை ஒரு தோல்வி. 'அவன் மனத்தெளிவில்லாமல் குழப்பமாக இருந்தான்' என்பதைக் கூட தெளிவாகக் காண்பிக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு கலையில் முற்றிலும் வித்தியாசமான இரண்டு உணர்வுகளை வெளிப்படுத்துவது என்பது எத்தனை அபாரமான ஒரு சாதனை என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் - and by the way, all this while incidentally happening to play the naadhaswaram flawlessly



    Quote Originally Posted by முரளிஶ்ரீநிவாஸ்
    அதிலே என்னடா இருக்கப் போகுது என்று சமாதானம் சொல்லி கையெழுத்து போட்டுவிட்டு
    சமாதானமே கிடையாது. ஒருதலைபட்ச முடிவுதான்.

    Permit me a digression here..இந்த தம்பி சொல் கேட்காத hot-headed அண்ணன் என்கிற archetype கிட்டதட்ட அப்படியே கம்பனில் வருகிறது.

    பல இடங்களில் இலக்குவன் தான் யோசித்து நல்ல முடிவு எடுப்பதாகக் காட்டுகிறார். ராமன், இலக்குவனை "பிள்ளாய் பெரியாய்" என்று விளிக்கிறான். (இளையவன் நீ, அதே சமயம் விவேகம் உள்ளவன் நீ!)

    மாறாக, ராமன் உணர்ச்சிப்பிழம்பாகவே காண்பிக்கப்படுகிறான்.தன் அண்ணனைக் கொல்ல ஒருவன் (சுக்ரீவன்) நினைக்கிறான், என்பதையே இலக்குவனால் ஜீரணிக்க முடியவில்லை. அண்ணனை எதிர்த்து பொதுவில் பேசக்கூடாது என்று மௌனம் காக்கிறான். தனிமையில் ராமன் அவன் கருத்தைக் கேட்டதும், இலக்குவன் ராமன் அவசரப்பட்டு கொடுத்த வாக்கை 'பிழை' என்று சொல்கிறான். ராமனுக்கு தான் பிழை செய்துவிட்டோம் என்று தெரிகிறது (தீயரே எனினும், உன்னோடு உற்றவர் எனக்கும் உற்றார் - சுக்ரீவா..உனது உற்றார் யாராவது தீயவர்களாகவே இருந்தாலும் கூட அவர்கள் எனக்கும் உற்றார்...என்று தனது வாக்கில் கூறுகிறான்).

    இலக்குவன் தன் பிழையை சுட்டிக்காட்டிவிட்டான் என்றதும் அவனைப் - தனக்காக தன் வாழ்வையே அழித்துக்கொண்டிருப்பவனைப்- பார்த்து, குத்தலாக ராமன் சொல்கிறான் 'நம் அண்ணன் தம்பிகளில், பரதன் தானே உயர்ந்தவன். எல்லோரும் ஒன்றா? அதுபோல எல்லா அண்ணன் தம்பிகளும் ஒரே மதிரியா, இந்த சுக்ரீவன் போன்றவர்களும் உண்டு' என்று சொல்லி தட்டி கழிக்கிறான்.

    இவற்றுக்கு தி.மோ-வுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாகச் சொல்லவில்லை. ஆனால் இத்தனை அற்புதமான கலைஞன், உணர்வுவேகத்தில் சின்னத்தனமாக நடக்கும் தருணங்களை நினைக்கும்போது ராமனின் க்ரூரம் நினைவுக்கு வந்தது.

    இவர்கள் எல்லாரையும் பாதிக்கும் ஒரு ஒப்பந்தத்தை படிக்காமல் கையெழுத்துப் போடுபவன் சண்முகம். அந்த அளவுக்கு தங்களை இவன்வசம் ஒப்படைத்தவர்களைப் பார்த்த அழகர் கோவிலில் என்ன வார்த்தை சொல்கிறான், 'உங்களுக்கு பணம் வேண்டும் என்றால் வேறெதாவது ஒரு நாதஸ்வர வித்வானுக்கு வாசித்துக்கொள்ளுங்கள்' என்று. How uncharitable!

    அன்று கூட இருந்தவர்கள் சொன்னபோது கேட்காமல் போனோமே என்ற குற்ற உணர்வை கூட எவ்வளவு துல்லியமாக வெளிப்படுத்துகிறார்.
    "நீ சொன்னே..நான் கேட்கலை" என்று வேகமாக சொல்லித் தாண்டி செல்ல முனைவதில் அந்த குற்ற-உணர்வைச் சிறப்பாக காண்பிப்பார்.


    "பணம் என்ன மகாராஜா பணம்..." என்று நம்பியாரிடம் பேசும் காட்சி.....திருவாரூரை நியாபகப்படுத்தும். உணர்வுகள், வார்த்தைகளை விஞ்சும்.

    A wondrous performance that is at once power-packed and highly layered and nuanced.

    நினைவுபடுத்தியதற்கு நன்றி திரு.முரளி.

    All BY PR
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  12. Thanks Harrietlgy thanked for this post
    Likes KCSHEKAR, Georgeqlj, Harrietlgy liked this post
  13. #1887
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Very much!

    நன்றி திரு. ராகவேந்திரன்.
    வட்டமெல்லாம் பலரும் நேற்று ரசித்தனர் நானும் ரசித்தேன். அவ்வளவு தான். பள்ளிக்கூடத்திலிருந்தே ஒரு பழமான front bencher

    பின்னால் சொல்லி சொல்லி ரசித்துக் கொண்டிருந்தார்கள் நுணுக்கங்களை முன்கூட்டியே anticipate செய்து பேசிக்கொண்டிருந்தனர் என்பதைப் பார்த்தேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் (இப்பொ 'ங்கொப்பராண வரும் பார்' , இப்பொ 'ஏய்' வரும் பார் - என்பவை எனக்கு கொஞ்சம் இடைஞ்சலாகத் தோன்றின...is it our Parthasarathy who I heard from the back-rows ), ஆனால் தாங்கள் ரசித்ததை உடன் வந்திருப்பவர்கள் தவரவிட்டுவிடக் கூடாது என்ற ஆவலின் வெளிப்பாடு தான் அது என்றும் புரிந்தது.

    பெரியதிரையின் வசீகரமே தனி. மறைந்த பேராசிரியர் T.G.வைத்யநாதன் - ஹிந்துவில் பத்தி எழுத்தாளர் - எழுதிய சினிமா பற்றிய கட்டுரைத் தொகுப்பின் தலைப்பு 'images in the dark' - இருளில் பார்வையாளன் கரைந்து larger-than-life பிம்பங்களால் ஆகர்ஷிக்கப்படும் அனுபவத்தைப் பற்றி அதில் சொல்லி இருப்பார். அந்தக் கனியிருப்ப Home-video காய்கவர்ந்தற்று ...என்று முற்றிலும் காய்திட மனம் வரவில்லை - காயின் ஊட்டச்சத்து இல்லை என்றால் நாங்களெல்லாம் எங்கே!

    VCR சகாப்தத்தில் தொலைக்காட்சியில் வந்த தில்லானைப் பதிந்து, பார்த்துப் பார்த்து தேய்த்தபின், வீட்டில் DVD Player வாங்கியதும் வாங்கிய முதல் படம் தில்லானா. சிரிக்கவைத்து, நெகிழவைத்து, ஆஹா-வித்து..முழுவதுமாக சுண்டியிழுக்கும் படம். சிவாஜி படங்களிலேயே அனேகமாக வசனங்களில் தாளகதி உட்பட எனக்கு அனேகமாக பரிச்சயமான படம் என்றால் இதுதான். அதை பெரிய திரையில் காண வேண்டும் என்ற என் நெடுநாள் ஆசை நேற்று நிறைவேறியது. மீண்டும் ஒரு நன்றி.

    நீங்கள் நகைச்சுவையாக சொல்வதுபோல நானும் 'அலைகடலென' கூட்டத்தை எதிர்பார்த்து ஐந்து மணிவாக்கிலேயே வந்து ஸ்கூட்டரை வைத்துவிட்டு, TTK சாலையில் ஒரு சிறு வேலை இருந்ததால் நடந்து போய்விட்டு ஆறு மணி சுமாருக்கு வந்தேன். (நேராக ஆறு மணிக்கு வந்தால், வண்டி நிறுத்த இடம் கிடைத்திருக்காது என்று நினைத்திருந்தேன்!)

    முரளிசாரை வாசலில் பார்த்தேன். ஃபில்ம்நியூஸ் ஆனந்தனின் கண்காட்சியை காட்டினார். பிறகு நன்றியுரையில் கூறியது போல இது மிகுந்த சிரத்தையுடன் தொகுக்கப்பட்ட exhibition என்று தெரிந்தது. சிவாஜி அத்தனை பிறமொழிப் படங்களில் பிரதான/முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார் என்றே எனக்குத் தெரியாது.

    திரு.ராகவேந்திரன், 'தாயே உனக்காக' படம் ருஷ்யமொழி க்ளாஸிக்கான 'Ballad of the Soldieரைத் தழுவி எடுக்கப்படதை எனக்குக் கூறினார். In the context of the function/location என்ன ஒரு சரியான தேர்வு! என் கல்லூரி நாட்களில், இதே ருஷ்ய கலாசார மையத்தின் அரங்கத்தில் தான் அந்தப் படத்தைப் பார்த்தேன் (அந்த நாள்.. ஞாபகம்.. ).

    ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் sesquicentennary (ஒன்றரை நூற்றாண்டு) விழா என்று அவர் புத்தகங்கள் சிலவற்றை கண்ணாடிப்பெட்டிக்குள் வைத்திருந்தார்கள. கிறுஸ்துவ தேவாலயங்களில் சாலையோரச் சுவற்றில் கண்ணாடிப்பெட்டிக்குள் விவிலியத்தின் பக்கத்தைத் திறந்து வைத்திருப்பது போல. படிக்காமல் கடந்துபோக முடியாது. அதுபோல அந்தப் பக்கங்களைப் படித்துக்கொண்டிருந்தேன். I feel too cruel to mention this now for Gopal to read இனிமையான தற்செயல்.

    திரு.ராகவேந்திரன் தயாரித்துக்கொண்ட உரையுடன் to-the-point நன்றாகப் பேசினார். ருஷ்யாவில் வகுக்கப்பட்ட நடிப்பு முறைகளையும் சுயம்புவாக வெளிப்படுத்தினார் சிவாஜி என்று அவர் சொன்னது - கடந்த சில பக்கங்களில் நாம் பேசிக்கொண்டிருப்பதின் ஒரு கூரை அந்த சபைக்குத் தக்கவாறு பேசியதாகத் தோன்றியது.

    திரு.முரளி தன் வழக்கமான சரளத்துடன் 'தில்லானா'வை contextualize செய்தார். அந்த அரசியல் சூழல், அக்கால சினிமா அழகியல் எதிர்பார்ப்புகளை எவ்வாறு அப்படம் ஏற்றுக்கொண்டது போலவே 'படம்' காண்பித்து ஆனால் சிறப்பாக மீறியது என்று சொன்னார். குறிப்பாக: 'பாட்டு உண்டு - ஆனால் ஹீரோவுக்கு இல்லை. சண்டை உண்டு - கதையில் அந்த நிகழ்வுக்கும் ஹீரோவுக்கும் ஸ்நாநப்ராப்தியே கிடையாது என்றார்.

    படத்தை இன்னும் ஆழ்ந்து ரசிக்க அது பலருக்கு உதவியிருக்கும் என்று நினைக்கிறேன்.

    ஹீரோவுக்கு பாட்டு கிடையாதா என்ன, வாய்ப்பாட்டு கிடையாது. APN ரசனை எதிர்பார்ப்புகளுக்கு 'on his own terms' தீனி போட்டார். என்றுமே ரசிகன் மீது பழியைப் போட்டு pander செய்ய வேண்டும் என்ற கீழ்நோக்குப் பார்வை இல்லாமல், தான் நினைத்ததை சிரத்தையோடும், நயத்தோடும் செய்யும் கலைஞர்கள் தான் ரசிகர்களைக் கவர்கிறார்கள்.

    நினைத்துப் பாருங்கள், அந்த சண்டை பற்றி ஒரே இடத்தில் தான் அவனிடம் வசனமாக சொல்லப்படுகிறது - அதற்கு அவன் எத்தனை ஈவிரக்கம் இன்றி பதில் சொல்கிறான் - அவன் ஹீரோ இல்லை - 'குறை இல்லாத மனுஷன் ஏது ஜில்லு' என்று தானே சொல்லும் மனிதன்.

    அதே சமயம் ஹீரோ'வுக்கான punch-dialogueகள் இல்லாமல் இல்லை. கலையில் ஒப்பற்றவன் என்றவாறு வரும் எல்லா வசனங்களும் சண்முகத்தை மட்டும் குறிப்பவை அல்ல என்று குழந்தைக்குக் கூட தெரியும். Punch-வசனங்களில் தன்மையே அது தானே. அந்த வேடத்தை விட்டு விலகி நாயகனின் பிம்பத்தைக் கொண்டாடும் தருணங்கள் அவை. முப்பக்கம் மூடிய மேடையில், நாலாவது சுவராக இருப்பது கலைஞர்கள் வாழும் அந்தக் கதையின் உலகையும், இப்பக்கம் அமர்திருக்கும் ரசிகர்களின் உலகையும் பிரிக்கும் ஒருவித ஒப்பந்தம் மட்டுமே. அந்த ஒப்பந்தத்தை மீறும் தருணங்கள் அவை. அதை படத்தின் சமநிலை குறையாமல் செய்துகாட்டினர் (நாகலிங்கத்துக்கு தண்டனை என்று வைத்தி சொன்னதும் சண்முகம் பேசும் பதில் வசனம்)

    படத்தைப் பற்றி இப்போது எழுதப் போவது இல்லை. திங்கட்கிழமை காலை அதுவுமாக தில்லானா பற்று பேச ஆரம்பித்தால், வேலை செய்தது மாதிரிதான்
    இன்னும் கோபாலின் தொடரின் கடைசி பகுதிகள் வேறு படிக்க backlog இருக்கிறது. I will catch up later this week.

    once again for the memorable show.

    PS1: As I was telling Mr.Murali, there were a couple of cuts and jumps in the DVD and some resolution issues in long-shots. The DVD I have is clearer and complete- so let me know the next time whenever you plan to screen this. 300 படம் சுழற்சிமுறையில் மீண்டும் இதன் முறை 2038ல வரும்னு நினைக்கிறேன்

    PS2: It was nice to meet Parthasarathy again and also great to meet in person the archivist non-pareil Pammalar. Too bad the movie ended too late to leave much time for a catch-up after that.

    PR
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  14. Thanks Harrietlgy thanked for this post
    Likes KCSHEKAR, Georgeqlj, Harrietlgy liked this post
  15. #1888
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like


    By Ganpat


    அப்பப்போ அடிக்கும் காலிங் பெல்,டெலிபோன் மணி,பார்க்கும் ஓவ்வொருவரின் விருப்பதிற்கேற்ப, இடைவேளை விடுதல்(கொஞ்சம் pause செய்.இப்போ வந்துடறேன்).
    வராத விருந்தாளிகளின் திடீர் வருகை,அவர்கள் அடிக்கும் அதிகப்ப்ரசங்கித்தனமான comments,எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டாக வேண்டும்.

    (ஆனா இப்போ தியேட்டரிலும் தொல்லை அதிகம்..சமீபத்தில் படம் ஆரம்பித்து இரண்டு நிமிடங்கள் கழித்து திருதிராஷ்டிரன் போல தட்டித்தடவி ,போய் D18,D19 அமர்ந்தால்,உடனே டெலிபோனின் உரத்த சிணுங்கல்.கூடவே "ஆமா தேவராஜ்தான் பேசுகிறேன் !” என்ற கட்டை குரல்..”என்னங்க! படத்தில் கமல் பேரு விசுவநாதன் இல்லையோ?” என்ற இல்லாளின் சந்தேகத்தை நிவர்த்திப்பதற்குள் அதே குரல் “நான் இப்போ தேவி தியேட்டரில் விஸ்வரூபம் பார்த்துக்கிட்டு இருக்கேன்.ஆங்..படம் ரொம்ப நல்லா இருக்கு..ம்ம்ம் அப்றம் பேசறேன்!” ன்னு ஒரு சுய வாக்குமூலம் கொடுத்து, காலை கட் செய்ய ஒரு பத்து பேர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.(இடைவேளை போதுதான் பார்த்தேன்.அந்த நபருக்கு பொன்னம்பலம் போல உடல்வாகு.)

    இப்படி சினிமா, கச்சேரி நடுவே, போன் attend செய்து disturb செய்யாதே என சொல்வது
    ,”சுவற்றில் எழுதாதீர்” எனும் அறிவிப்பிற்கு கீழே “சரி” என்று எழுதுவதைப்போல ஆகும் எனபதே பலருக்கு தெரிய மாட்டேன் என்கிறது.

    சரி இனி படம்...

    தமிழில் வந்த மிக சிறந்த ஆறு படங்களை பட்டியலிட்டால் தில்லானா மோகனாம்பாள்(தி.மோ) மற்ற ஐந்திற்கும் மேலே இருக்கும்.

    பூரணம், உன்னதம் எனும் இரு சொற்களுக்கான எடுத்துக்காட்டு தி.மோ.

    இந்தப்படத்தின் உன்னதம் திரு ஏபிஎன். பிள்ளையார் சுழி போடும்போதே ஆரம்பமாகிறது..

    விகடன் அதிபர் திரு வாசனை,ஏபிஎன் சந்தித்து தி.மோ படம் எடுக்க தான் விரும்புவதை சொல்லி ஆசி பெற்று கூடவே அதற்கான காப்புரிமையையும் சுமார் ரூ.ஐயாயிரம் கொடுத்து அவரிடமிருந்து பெறுகிறார்.
    என்னதான் சட்டப்படி விகடன் நிறுவனத்திடமிருந்து உரிமையை பெற்றாலும் அதை ஆக்கியோன் எனும் விதத்தில் திரு கொத்தமங்கலம் சுப்புவிற்கும் மரியாதை செய்ய விரும்பி, அடுத்த நாள் அவர் இல்லம் சென்று விவரம் சொல்லி சில ஆயிரங்களையும் சன்மானமாக கொடுக்கிறார்,அதை பின்னவர் மறுத்து "நேற்றே திரு வாசன் என்னிடம் இதைக்கூறி நீங்கள் கொடுத்த பணத்தையும் தந்து சென்றார்" என சொல்கிறார்.....இது உன்னதம் # 1

    மேதை கோபுலு எப்படி படம் வரைந்தாரோ அதை நிஜமாக்குவதைப்போல,
    ஒவ்வொரு பாத்திரமும் பத்தாண்டுகள் கழித்து படத்தில் நடமாடினார்கள்.இது உன்னதம் #2

    தலைவரை விடுங்கள்.அவர் கடவுள் !

    ஒரு பாலய்யா,ராஜன்,ck சரஸ்வதி,??
    ஒரு தங்கவேலு,ராமதாஸ்,பாலாஜி??
    ஒரு நாகேஷ்,மனோரமா?
    அச்சு அசலாக அப்படியே பாத்திரங்கள் வந்து இறங்கவில்லையா?இது உன்னதம் # 3

    பிரபுராம் சவடால் வைத்தி பற்றி சொன்னார்.
    என்ன ஒரு fluency ,timing and wit?
    என்னப்பா சிக்கல்! எல்லாரும் அவாவா வாத்தியத்தை எடுத்துண்டு கிளம்புங்கோ!
    மகராஜா எழுந்துகொள்ளும்பொது திருப்பள்ளி எழுச்சி வாசிக்கணும்.!!

    “நாங்க கோவிலில் மட்டும் தான் திருப்பள்ளி எழுச்சி வாசிப்போம்”.

    “அதுக்காக ராஜா கோவிலில் போயா படுத்துக்க முடியும்?”

    இந்த timing, மவனே உலகத்தில் எவனுக்குயா வரும்?

    ck சரஸ்வதியிடம்..”இவ்வளவு பெரிய கழுத்து!! எவ்வளவு காலியா இருக்கு?
    ஒரு அட்டிகை போட்டா எவ்வளவு நன்னா இருக்கும்” என tempt செய்வதில் உள்ள wit

    "யாரிந்த பொண்ணு? அரையும் குறையுமா?"
    "shut up! she is the maharani of madanpur!"
    “நினைச்சேன்! நினைச்சேன்!! இப்படி மகாலக்ஷ்மி மாதிரி ஒரு பெண்ணை
    பார்க்கும்போதே நினைச்சேன்!” என்று சொல்வதிலுள்ள fluency

    இந்த யானையை அடக்குவாரே நம் யானைப்பாகன்!

    ஒரு பதரை பார்ப்பது போலல்லவா இவரைப் பார்ப்பார்!

    இந்த பதர் எனும் சொல் இடம் பொருள்,ஏவலுகேற்ப மாறும்.

    பின்னால் மோகனாம்பாள் ஒரு இடத்தில் ஷண்முகம் நடத்தைக்கண்டு கொதித்து,
    அவரையும் ஒரு பதரைப்போலத்தான் பார்ப்பாள்.ஆனால் அது
    காதல் கலந்த தற்காலிக கோபமான பார்வை! காதல் பதர் உடனே மறைந்து விடும்.
    ஆனால் வைத்தியோ ஒரு நிரந்தர பதர்.

    சரி! தலைவரின் நாதஸ்வர வாசிப்பு..??
    அதில் ஒரு முக்கால் பங்கை, நாட்டில் உள்ள அத்தனை வித்வான்களும் கண்டு மகிழலாம்.மீதியை..??
    அவர்கள் பாடமாக வைத்துக்கொண்டு அதன்படி தாங்களும் நடை உடை பாவனைகளை மாற்றிக்கொள்ள வேண்டும்.

    இறைவனுக்கு நன்றி..
    திரு.ஏ.பி.என் னை படைத்ததிற்கு

    திரு.ஏ.பி.என் நிற்கு நன்றி தி.மோ.வை படைத்ததிற்கு

    ஹிந்தி பட அதிபர்களுக்கு நன்றி..
    இதை ஒரு ஷேனாய் வித்வான் படமாக ஹிந்தியில் எடுக்காததிற்கு.

    தற்கால தமிழ் பட அதிபர்களுக்கும் நன்றி,
    தி.மோ வை ரீமேக் செய்யாமல் இருப்பதற்கு.

    நண்பர்கள் முரளி, கோபால்,ராகவேந்தர்,பிரபுராம்,வாசுதேவன் ஆகியோருக்கு என் அன்பு மற்றும் நன்றி,
    for inspiring me to write..

    (



    PR


    Jokes apart, அந்தக் கதைக்களன்/காலம் நடனக்கலைஞர்களின் அன்றைய சமுதாய நிலை இன்னைக்கு நிறைய பேருக்கு முழுசா புரியாது இல்லை?

    வடிவாம்பாள் ஒரு முன்னாள் கலைஞர்னு கேள்விப்படுறோம்.
    "இப்படி போகுற இடத்துல எல்லாம் பகையை சம்பாதிச்சுக்கிறியேம்மா....நமக்கு நாலு பெரிய மனுஷாலோட தயவு தேவை"ன்னு உண்மையா நினைக்குறா. மோகனா நடனத்துல பெரிய ஆளா வரணும்னும் ஆசைப்படுறா.

    அந்த கதைக்காலம் ஒரு cusp of eras (இருவேறு காலகட்டங்கள் சந்திக்கும் நேரம்).

    பிரபுக்களின் - அதாவது தனவான்களின் - ஆதரவில் கலைஞர்கள் தழைக்கும் காலம் மறைந்து. கச்சேரிக்கு காசு, சபாக்கள் என்று கலைஞர்கள் மக்களிடம் (கிட்டத்தட்ட) நேரடியாக பணம் பெற்று சம்பாதிக்கும் காலம்.

    இது மாபெறும் மாற்றம். சமூக சரி/தப்பு'கள் இங்கங்கென மாறு காலம் (an era of flux in the economic order and thus the attendant social values).

    பலநூறு வருடங்களாக இயங்கும் விதம் மாறுகிறது

    (will make one digressive post next to emphasize this point)



    This post is admittedly a bit digressive. The purpose is to give the social context of the time-are of ThillAna.
    Most of you are well aware of this, but I feel the youngsters who watch the movie now may receive it a tad too simply and thus under-appreciate the setting. Hence this post.

    புறநாற்றில் ஒரு புலவர்

    கை அது கடன் நிறை யாழே
    மெய் அது புரவலர் இன்மையின் பசியே

    புரவலர் இல்லை என்றால் பசி தான்.

    ஒரு அரசனை ஒரு புலவர்: 'பாண் பசிப் பகைஞன்' என்கிறார் (பாணர்களின் பசிக்கு பகைவனாம்)

    (முதல்) ஔவையார் ஒரு மன்னன் இறந்ததைப் பாடும்போது பாணர்களின் பாத்திரத்தில் துளை விழுந்துவிட்டது என்று பாடுகிறார்.

    பலநூறு வருடங்களாக இப்படித் தான் கலைஞர்கள் வாழ்ந்தார்கள்.

    நொபேல் பரிசுபெற்ற ப்ரித்தானிய தத்துவ எழுத்தாளர் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் : "பிரபுக்களுக்கு கலை எவ்வளவு கடன்பட்டது என்பதை நாம் இன்றைய ஜனநாயகக் காலகட்டத்தில் மறக்க அனேக வாய்ப்புண்டு" என்றார் (in these days of democracy, one is apt to forget the debt art owes to aristocracy).

    நாம் இன்றைய சமூக அமைப்பில் நின்று கொண்டு அன்றைய சமூக நிலைகளை நினைத்து, மேலோட்டமாக தீர்ப்பு வழங்கும் வேலையை எவ்வளவு எளிதாகச் செய்கிறோம்!

    இந்த அமைப்பு எவ்வளவு தூரம் தொடர்கிறது. 20 ம் நூற்றாண்டு வரையிலும் கூட.

    இந்தக் கால மாற்றத்தில் சிக்கிக்கொண்ட இன்னொருவர் பாரதியார்! எட்டயபுரம் ஜமீந்தாரை (மகாராஜா!) அண்டி இருந்தார். அவருக்கு புகழ்பாட்டுக்கள், சீட்டுக்கவிகள் எழுதிப் பிழைத்தார்.அவர் சுபாவத்துக்கு அது சரிவரவில்லை. விலகி அவரை (மறைமுகமாகத்) திட்டி எழுதினார். பிறகு மறுபடியும் வழியின்றி அவரிடமே போய் நிற்க வேண்டிய நிலைமை (தன் வாழ்நாளில் இருண்ட காலமாக இதைப் பற்றி எழுதுகிறார்).

    மதுரை சேதுபதி பள்ளியில், சுதேச மித்திரன் பத்திரிகையில் என்று பிழைப்புக்கு ஏதாவது செய்யவேண்டிய நிலைமை. எதுவும் சரிவரவில்லை.

    பாஞ்சாலி சபதம் சமர்ப்பணத்தில் கூட இப்படி எழுதுகிறார்.

    தமிழ்மொழிக்கு அழியாத உயிரும் ஒளியும் இயலுமாறு இனிப் பிறந்து காவியங்கள் செய்யப்போகிற வரகவிகளுக்கும் அவர்களுக்குத் தக்கவாறு கைங்கரியங்கள் செய்யப்போகிற பிரபுக்களுக்குமா இந் நூலைப் பாதகாணிக்கையாகச் செலுத்துகிறேன்.


    பிரபுக்களின் காலம் முடிந்துவிட்டது என்று பாரதியாராலேயே கூட முழுவதுமாகப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் பாருங்கள். அப்படிப்பட்ட ஒரு காலமாற்றம் நிகழ்கிறது.

    ('ச்சே மகாகவியை இந்த சமூகம் இப்படி பண்ணிடுச்சே' என்று மேலோட்டமாக அங்கலாய்த்து நகர்ந்துவிடுகிறோம். ஆனால் அந்தக்கால சமூக மாற்றங்களைப் பொதுவாக நாம் ஆராய்வதில்லை. சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தைச் (Madras Institute of Development Studies) சேர்ந்த பேராசிரியர் வெங்கடாசலபதி பாரதியாரின் காலம் பற்றி ஒரு நல்ல கட்டுரை எழுதியிருக்கிறார் - அதில் தான் இந்தக் கோணத்தைப் படித்தேன்.)

    Now coming to ThillAnA

    வடிவாம்பாள் நினைப்பதில் என்ன தவறு?

    அவள் பார்த்து வளர்ந்த உலகம் அது. இன்று கச்சேரிக்கு சம்பளம் பேசி 'லேசில் கையெழுத்து'ப் போடாத கெட்டிக்காரி அவள். ஆனாலும் இந்தப் 'புது உலக'த்தின் நியாய/அநியாயங்கள் அவளுக்கு முழுவதுமாகப் புரியவில்லை.

    ஜில்ஜில்-லையும் நினைத்துப் பாருங்கள். என்ன ஒரு அசாத்திய திறமைக்காரி, தன்னம்பிக்கை உள்ளவள். ஆனாலும் முறையான திருமணம் என்பது அவளுக்கு இல்லை. 'உங்க ஆளு சண்டியன்' என்று சண்முகம் குறிப்பிடும் அந்த நாகலிங்கம் 'திருந்தி வருவான்' என்று அவள் நம்புவதாகப் படம் முடிகிறது. நெஞ்சை அறுக்கிறது அல்லவா அவள் நிலை?

    digression within digression

    மோகனாவும், சண்முகமும் எவ்வளவு எளிதாகத் துவண்டு விடுகிறார்கள். தன் சுயநலத்துக்காக சண்முகம் எத்தனை அசட்டையாக கையெழுத்துப் போடுகிறான். ஜில்ஜில் வாழ்க்கையை விடவா இவர்களுக்கு இடர்களும், சவால்களும்? சொல்லியும் சொல்லாமலும் பல ஏமாற்றங்கள். அவற்றை எவ்வாறு சமாளிக்கிறாள். இத்தனைக்கும் அவள் கலை 'உயர்ந்தது அல்ல' என்ற கீழ்நோக்குப் பார்வை வேறு. சகலகலாவல்லி என்று சண்முகம் அவளை அறிமுகப்படுத்திகிறான், ஆனால் அவளை நாம்கூட இரண்டாம்பட்சமாகத் தானே நினைக்கிறொம்.அதை நாமும் கூட கேள்வி கேட்பதில்லை. சண்முகத்தின் கத்திகுத்துக்கு பதறுகிறோம். சகலகலாவில்லி'க்கு பல் உடைந்தால் சிரிக்கிறோம்.

    கொட்டகையில் அவள் சண்முகத்தை ஆழ்ந்து ரசித்ததை விடவா யாரும் ரசித்துவிடப் போகிறார்கள் ('ஆமாம் ராசா'). அவளுக்கு வாசித்ததை விட படம்நெடுகிலும் சண்முகம் யாருக்காகவாவது அத்தனை ஆத்மார்த்தமாக வாசித்தானா?


    Back to வடிவாம்பாள்

    தன் மகளை, ஒரு முன்னனிக் கலைஞனுக்கு வாழ்க்கைப்படுவதை விட ஒரு தனவந்தனின் ஆசைநாயகி ஆக்க இந்த அம்மாள் விரும்பிகிறாரே - என்று மட்டும் மேலோட்டமாகப் பார்க்கக் கூடாது. கலைஞர்கள் யாரையாவது சார்ந்தே வாழவேண்டியவர்கள் என்பதே அவள் காலம் அவளுக்குப் போதித்த வாழ்க்கைமுறை.

    தன் மகள் நல்ல நாட்டியக்காரியாக பெயர் பெற வேண்டும் என்பது எந்த அளவு உண்மையோ அதே அளவு உண்மை அவள் ஒரு பெரிய மனுஷனின் 'ஆதரவு' கிடைக்க வேண்டும் என்று அவள் நினைப்பது.

    இதில் ஒன்று உயர்ந்த நோக்கம் என்றும், இன்னொன்று தாழ்வானது என்றும் நாம் நினைப்பது - இன்றைய மனநிலையில் இருந்தே. அந்தத் தாய்க்கு இரண்டும் ஒன்றே.

    அந்தக் காலத்து நாட்டியக்காரி, தனக்கு சரிவர அப்படி ஒரு ஆதரவு கிடைக்கவில்லை, அது தன் குழந்தைக்கு நிகழ்ந்துவிடக் கூடாது என்று அவள் நினைக்கிறாள் என்றும் கொள்ளலாம்.

    "என் கண்ணு! நீ ஒருத்தி கஷ்டப்படுற, உன்னால நாங்க எல்லாம் சுகப்படுறோம்" என்று ஒரு வசனம் வரும் (ஞாயிறு ஸ்க்ரீனிங்கில் இது கட்!) - அவளை மகாராஜாவின் 'தங்கையை' பார்க்க அனுப்பும் ஆயத்தக் காட்சி. அவள் நோக்கம் வேறு என்றாலும் அந்த வாஞ்சை பொய் அல்ல என்றே நினைக்கத் தோன்றும்.

    தனக்குத் தெரிந்த நல்வழியில் குழந்தையைச் செலுத்தவும்,தனக்கு கைகூடாதவை அவளுக்குக் கிடைக்கவேண்டும் என்று அவள் விரும்புவது இயல்புதானே.


    ஆனால் (தனியாக வாத்தியார் வைத்து இங்க்லீஷ் சொல்லிக்கொடுக்கப்பட்ட) மோகனா காலமாற்றத்தை உணர்ந்தவள். பழைய சட்டகத்தை முற்றிலும் நிராகரித்து முன்செல்ல முடியும் என்ற நம்பிக்கை உடையவள். அது தான் சண்டை.

    சண்முகமும் வடிவாம்பாள் போல சிந்தனை உடையவன் தான். அவன் சந்தேகப்பேர்வழி, அவசரக்காரன், (மேரி சொல்வது போல) 'நாதஸ்வரம் தவிர ஒன்றும் தெரியாதவன்' என்பதெல்லாம் வாஸ்தவம். ஆனால் அந்தக் காலச் சூழலில் நாட்டியக் கலைஞர்களின் வாழ்க்கைத் தேர்வுகள் இவ்வாறு தான் இருக்கும் என்றே பொதுவான கருத்து. அதனால் தான் சிறு விஷயங்களைக் கூட அவன் சந்தேகிக்கிறான். அவனாலும் மோகனாவின் தீர்க்கமான மனநிலையை முழுவதுமாக புரிந்துகொள்ள முடியவில்லை.

    பாவம் மோகனா - தன் காலத்தைத் தாண்ட முனைபவர்கள் அனைவரும் படும் சிரமங்களில் மிகக் காட்டமான - 'நேசர்களின் புரிதலின்மை'யை அனுபவிக்கிறாள்.

    இவற்றைக் கருத்தில்கொண்டு பார்த்தால், இந்தக் கதையை இன்னும் நன்றாக ரசிக்கலாம் என்று தோன்றுகிறது.

    ஜில்ஜில் பற்றியும், நாகப்பட்டினம் கொட்டகையை ஏபிஎன் காட்டிய விதத்தையும் இன்னும் விரிவாக எழுதலாம்...பிறகொருமுறை
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  16. Thanks Harrietlgy thanked for this post
    Likes KCSHEKAR, Georgeqlj, Harrietlgy liked this post
  17. #1889
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like

    Ganpat


    கலைஞர்கள் புரவலர்கள் பற்றிய கருத்து பரிமாற்றங்கள்..

    19ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து தோன்றி வரும் தலைமுறைகள் பட்ட /படும் அவதி மனித இனத்தில் வேறு எப்பொழுதும் நடந்திருக்க வாய்ப்பில்லை.

    முதலில் கலாசார மாற்றம்
    .பிறகு ஆட்சி முறை மாற்றம்.
    பிறகு விஞ்ஞான மாற்றம்.
    பிறகு தொழில் நுட்ப மாற்றம்
    தற்பொழுது பொருளாதார மாற்றம் ..
    இதனூடே பின்னிப்பிணைந்துள்ள கலாசார மாற்றம்.
    என ஒரு நூற்றிருபது ஆண்டுகளுக்குள் சுனாமி போன்ற மாற்றங்கள்..

    பல தலைமுறைகளாக கலைஞர்களை ஆதரிப்பது எனும் பெயரில் நாட்டிலுள்ள செல்வந்தர்கள் அவரவர் வசதிக்கேற்ப பெண்களை சீரழித்து வந்தனர்.இது ஒரு வடிகட்டிய அயோக்கியத்தனம்.இதற்கு தேவதாசி எனும் ஒரு இனிப்பு தடவிய பெயர் வேறு!!இது தேவரடியார்கள் என மருவி மேலும் என்னென்னவோ ஆகி, இவ்வினத்தவர் ஆண்களுக்கு இசைந்தால் இசைசொல்லாகவும்,மறுத்தால் வசை சொல்லாகவும் ஆகிப்போனது.1920 களில் இதை எதிர்த்து,ஒழிக்க கோரி சென்னை சட்ட சபையில் ஒரு சரித்திர புகழ் பெற்ற விவாதம்.Dr.Muthulakshmi Reddy அம்மையார் கடுங்கோபத்துடன் விவாதம் செய்ய காங் தலைவர் திரு சத்யமூர்த்தி அவர்கள் தேவதாசி முறை சமுதாய சுமுகமான போக்கிற்கு அத்தியாவசியமானது அதை நீக்குவது பேராபத்து என்றும் பேச,எழுந்தார் அம்மையார்.."மதிப்பிற்குரிய சத்யமூர்த்தி அவர்கள் தங்கள் குடுமபத்திலிருந்து ஒரு பெண்ணை இந்த நல்ல முறைக்கு நாட்டின் நன்மை கருதி அனுப்பி வைக்க இசைந்தால் இந்த மசோதாவை நான் வாபஸ் பெறுகிறேன் என கர்ஜிக்க முன்னவர் முகத்தில் ஈயாடவில்லை.அந்த மசோதா நிறைவேற்றப்பட்டு தேவதாசி முறையும் ஒழிந்தது.

    சரி இனி மோகனாவின் கதை.
    அவள் ஒரு குணவதி.தன் இனத் தொழிலை வெறுப்பவள்.சண்முகத்திடம் ஒரு நல்ல மனிதன் மற்றும் கலைஞனைக்கண்டு அவனை நேசிக்கிறாள்.அவனும் அப்பாவி.மோகனாவின் நிலை அறிந்து அவளை நேசிக்கிறான்.
    ஆனால் இயல்பு காரணமாக அவ்வப்பொழுது சந்தேகம் தலை தூக்குகிறது.அதன் அடிப்படையில் அமைந்தது தான் இந்த திரைக்கதை.இதில் வடிவு எனும் பாத்திரம் மோகனாவை சண்முகத்திடமிருந்து தூர எடுத்து செல்லவும்,ஜில் ஜில்
    எனும் பாத்திரம் மோகனாவை சண்முகத்தின் அருகே கொண்டு வரவும் மட்டுமே கதை மாந்தர்களாக தோன்றுகின்றனர்.
    வடிவு தன மகளின் அழகையே மூலதனமாக பார்க்கிறாள்.அவள் கலையைப்பற்றி அவ்வளவு அக்கறையில்லை.ஆனால் மகளின் மனதை மாற்ற அவள் நேசிக்கும் கலையையே ஒரு tool ஆக பயன் படுத்தி அவளை வெற்றிகொள்ள பார்க்கிறாள் முடிவில் தோல்வி அடைகிறாள்.அவளுக்கு தன survival மட்டுமே top priority.

    இதற்கு மாறாக ஜில் ஜில்..மிக நல்லவள்.கலையை நேசிப்பவள்..மோகனாவின் திறமையை புரிந்து கொண்டவள்.ஆனால் இவள் தன்னையும் ஒரு நடனமாது என நினைத்துகொண்டிருப்பது ஒரு நகை முரண்.(இதே தவற்றை சங்கமம் என்ற படத்தில் மணிவண்ணனும் செய்வார்..விஜயகுமாரிடம் மானபங்கம் செய்யப்படுவார்)

    எனவே வடிவு எனும் பாத்திரம் ஒன்றும் போற்றத்தக்க ஒன்றல்ல.சுயநலம் மிகுந்து தன மகளின் வாழ்வும் தன் வாழ்வு போல ஆவதில் தவறில்லை என நினைக்கும் தாய்.இந்தப்போக்கை,சண்முகம் எனும் ஒரு அற்புத கலைஞனை ,சுந்தர புருஷனை பார்ப்பதற்கு முன் வேண்டுமெனில் ஓரளவு நியாயப்படுத்தலாம்.ஆனால் தன மகள் அவனுடன் மனைவி எனும் பெருமையுடன் இணைவதை விட ,ஒரு செல்வந்தனுடன் தாசி எனும் பட்டத்துடன் இணைவதே தனக்கு நல்லது எனும் கருத்தில் செயல்பட்ட அவள் ஒரு வில்லியே!
    PR

    Quote Originally Posted by Ganpat View Post
    இதற்கு மாறாக ஜில் ஜில்..மிக நல்லவள்.கலையை நேசிப்பவள்..மோகனாவின் திறமையை புரிந்து கொண்டவள்.ஆனால் இவள் தன்னையும் ஒரு நடனமாது என நினைத்துகொண்டிருப்பது ஒரு நகை முரண்.(இதே தவற்றை சங்கமம் என்ற படத்தில் மணிவண்ணனும் செய்வார்..விஜயகுமாரிடம் மானபங்கம் செய்யப்படுவார்)
    ரமாமணியாரின் சுய-அபிப்ராயத்தில் தவறென்ன கண்டீர்?
    கலையில் மேல்-கீழ், உயர்ந்தது/தாழ்ந்தது என்ற தீர்மானங்கள் எங்கிருந்து வருகின்றன?

    கர்நாடக சங்கீதத்தோடும், பரநாட்டியத்தோடும் ஒன்றி ரசிக்க முடியாதவர்களுக்கு ஒரு உலகமே இருந்தது என்று ஏபிஎன் சிறப்பாக பதிவு செய்கிறார். குதிர குதிர பாய்ச்சலு...இங்கே கொட்டாயில கூச்சலு

    அவளை ரசிக்க சனம் உண்டு: அவுஹ ஆடுனாத்தான் பாப்பாஹளா, நான் ஆடுனா கண்ணை மூடிக்குவாஹளா

    படாடோபம் மிக்க உயர்குடிகள் அங்கு வருவதே இழிவாக நினைக்கிறார்கள். மாமனார் கடம்பவனம் மருமகன் 'ஏன் அங்கே வந்திருக்கிறான்' என்பதை அங்கு வரும்வரை முழுவதுமாக அறியவில்லை என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டியது. கோச்சுவண்டி அங்கு வந்து நிற்பதே, சிங்கபுரம் மைனர் கூத்தாடும் இடத்துக்கு வந்ததே அவருக்கு அசூயை ஏற்படுத்துகிறது!

    "வருசாவருசம் இங்கன நான்தான் ஆடிக்கிட்டு கிடந்தேன்...இந்த வருசம் என்ன நினைச்சாரோ செட்டியாரு திருவாரூர்லேர்ந்து புதுசா ஒரு செட்டைக் கொண்டுவந்து இறக்கிட்டார்..ஏஏன்" என்று வெகுளியாக இழுத்துக் கேட்கிறாள்

    "அந்த மோகனாங்கி என்னமாத்தான் ஆடுறாஹன்னு பார்த்துட்டு வாரேன்" என்று வீம்பாக சொல்லிச் செல்கிறாள்

    I find it moving. நினைத்துப் பாருங்கள்: மோகனாவுக்கும் பலகண்ணாடி அலங்கார முதல் ஃப்ரேம்...ரமாமணி'க்கும் அலங்காரம் செய்துகொண்டு தயாராகும் முதல் ஃப்ரேம்! மேடையில் ஆட ஆயத்தமாக இருக்கும் அலங்காரங்களுடன் சென்றவள்- கசப்பின் சுவடே தெரியாமல் பூரணமாக ரசிக்கத் துவங்கிவிடுகிறாள்!

    என்ன ஒரு உயர்ந்த ஜீவன்!
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  18. Likes KCSHEKAR, Georgeqlj, Harrietlgy liked this post
  19. #1890
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  20. Thanks Russellmai thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •