Results 1 to 10 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

Threaded View

  1. #11
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like




    "சிவாஜி கணேசன்" எனும் காலத்தால் அழிக்கமுடியாத கலைஞன்.. உலகில் எவரோடும் ஒப்பிடமுடியாத நடிப்புத்திறமையோடு தமிழ் திரையுலகில் நடிகர் திலகமாக கோலோச்சிய மாபெரும் கலைப...்பொக்கிசம்... இவரின் நடிப்புத்திறமையை சாதாரண ரசிகனாக அமர்ந்து கைதட்டி ரசித்ததைவிட, திரைப்பட இயக்குநர் ஆனபின் அவர் படங்களைப்பார்க்கும்போது அவரின் நடிப்பின் பரிமாணம் அதற்கு அந்த கலைஞன் எடுத்திருக்கும் சிரத்தை (நவீன வசதிகள் எதுவுமே இல்லாத காலகட்டத்தில்) ஒரு பெரிய பிரமிப்பை உருவாக்குகிறது...
    ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் அவர் தனித்தனி பாவனைகளை, வசன உச்சரிப்புகளை, உடல்மொழியை பயன்படுத்தியிருக்கும் இந்த கலைஞன் எந்த உலகபயிற்சி வகுப்பிலும் தயார் செய்துகொண்டவர் அல்ல..
    தன்னைத்தானே செதுக்கி கொண்டு தன் திறமையை மட்டுமே நம்பி கடைசிவரை எந்த அங்கீகாரங்களையும் எதிர்பார்க்காமல் இன்றும் மக்கள் மனதில் வாழ்கிறார் என்றால் அதற்கு அந்த கலைஞனின் தொழில் பக்தியும் திறமையும் நேர்மையும் மட்டுமே காரணம்..
    இன்று கூட சென்னை ஶ்ரீனிவாசா திரையரங்கில் "சிவகாமியின் செல்வன்" 25வது நாள்...
    நானும் என் பால்ய நினைவுகளை எண்ணிக்கொண்டு சென்றேன்..
    அங்கே கண்ட காட்சி என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது...
    வரும் வழியெல்லாம் அதைப்பற்றியே நினைவு...
    ஆம்.. ஒரு கலைஞன் மறைவுக்கு பின் ஒரு நடிகரை நம் தேசம் என்றல்ல எந்த தேசத்திலும் ஓரிரு வருடங்கள் மட்டுமே நினைவு வைத்துக்கொள்வதும் கொண்டாடுவதும்.... ஆனால் சிவாஜி அவர்கள் மறைந்து 15 வருடங்கள் ஆகியும் இன்னும் அந்த கலைஞனை நினைத்து வாழும் அந்த ரசிகர் கூட்டம்... மாலைக்காட்சி கிட்டதட்ட அரங்கம் full... சிவாஜி திரையில் வந்ததும் விசில், கைதட்டல், ஆரவாரம், ஆரத்தி.... அய்யோ அப்படியே 70,80களுக்கு போனது போல... சரி முதல் காட்சிக்குத்தான்னா இல்லங்க படம் முழுவதும்.... இன்னும் அதே ரசனை... அதே பக்தி...
    படமும் எதோ இன்னைக்கி எடுத்தது போல இருக்கு... இன்னிக்கிம் அவர் நடிப்பு போர் அடிக்கல...
    இன்னும் அவரை தெய்வமாக நினைத்து இன்னும் அவர் தங்களோடுதான் வாழ்கிறார் என்று நினைத்து வாழும் அந்த ரசிகர்களே உலகின் மிகச்சிறந்த ரசிகர்கள் என தோன்றியது...
    அவரால் வளர்க்கப்பட்ட அந்த கண்ணியம் தெரிந்தது அவர்களிடம்..
    திறமை என்னதான் வலிமை என்றாலும் இங்கே பணமும் பகட்டும் திறமையை ஏறி அமுக்குகிறது என்பதற்கு சிவாஜி அவர்களின் வாழ்க்கை ஒரு பெரிய உதாரணம்... ஆனால் காலத்தின் முன் அந்த பணம் பகட்டு தோற்றுப்போகிறது என்பதற்கு இன்று கண்ட காட்சி உதாரணம்...
    மேலே உள்ள கருத்துகள் ஒரு நடிகர் திலகத்தின் நடிப்பாற்றலால் ஈர்க்கப்பட்ட ஒரு ரசிகரின் உள்ளத்தின் எண்ண ஓட்டங்கள்.
    அதனை படித்தபோது அந்த திரைப்படம் குறித்த எனது முந்தைய பதிவு ஒன்று நினைவில் நிழலாடியது. உங்களுடன் பகிர்கின்றேன்.
    சமீபத்தில் சிவகாமியின் செல்வன் திரைப்படத்தினை காணும்
    ஒரு வாய்ப்பு கிட்டியது. மிகவும்நடிகர் திலகத்துக்காகவே அமைக்கப்பட்டது போன்ற பொருத்தமான கதை. அந்த கால கட்டத்தில் பொருத்தமான ஒரு நடிகையாக இருந்த வாணிஸ்ரீ ஒரு கதாநாயகியாகவும் மற்றொரு நாயகியாக நடிகை லதா நடித்திருந்தனர்.
    அருமையான பாடல்களை உள்ளடக்கிய
    அழகான ஒரு பொழுதுபோக்கு படம். நடிகை லதா நடிகர் திலகத்துடன் நடித்த ஒரே படம் இதுதானோ..? கதை என்று கூறினால், விமான பைலட் ஆக பணிபுரியும் அசோக் சிவகாமியை காதலிக்கிறார், அவர்களின் உறவால் சிவகாமி கர்ப்பமுற, வந்து மணமுடிப்பேன் என செல்லும் அசோக் ஒரு விபத்தில் மரணமடைகிறார்.
    சிவகாமி உண்மை நிலையினை தனது தந்தையிடம் கூற அவர் அதிர்ச்சியில் மரணமுறசிவகாமி கஷ்டத்துக்கிடையே ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகிறார். குழந்தையை வளர்க்க சிரமபடுவதால் ஒரு பணக்கார குடும்பத்திடம் குழந்தையினை ஒப்படைத்து விட்டு, அங்கேயே வேலைக்காரியாக சேர்ந்து
    பணிபுரிகிறார், அந்த குடும்பத்தின் தலைவருக்கு இவளை பற்றிய உண்மைகள் தெரியும், ஆனாலும் வேறு யாருக்கும் தெரியவேண்டாம் என்று சிவகாமி கேட்டுக்கொண்டதற்கிணங்க...அவரும் அவர் மனைவியிடமும் உண்மையை கூறவில்லை. இதற்கிடையில் வீட்டுக்கார அம்மாவின் தம்பி ஆர்.எஸ் மனோகர் சிவகாமியை தன காம இச்சைக்கு பலியாக்க முயல அதுகண்ட சிவகாமியின் மகன் கத்தியால் மனோகரை குத்திவிட்டு கத்தியுடன் தப்பி ஓடிவிடுகிறான்.குற்றத்தை, தான் ஏற்றுக்கொண்டு சிவகாமி சிறைக்கு செல்கிறார். இதற்கிடையில் நடந்த உண்மைகளை அறிந்த வீட்டுக்கார அம்மா, தன் கணவரிடம் கூறி,சிவகாமியை விடுவிக்க ஏற்பாடு செய்கிறார். இருபதாண்டு சிறை வாசத்துக்கு பின் வெளியான சிவகாமி அந்த வீட்டுக்கு வருகிறார். அங்கிருக்கும் லதாவுடன் அன்புடன் பழக இருவருக்கும் நல்ல பாசம் ஏற்படுகிறது.
    தனது வருங்கால காதலனை வரவேற்க விமான நிலையத்துக்கு செல்லும் லதா, சிவகாமியையும் துணைக்கு அழைத்து செல்ல...
    அவளின் காதலனாக அங்கே வந்திருப்பதோ...சிவகாமியின் மகன்...
    அச்சு அசலாக தன் கணவனை உருவத்தை ஒத்து வந்திருக்கும் அவனை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள் சிவகாமி.
    ஆயினும் மகனுக்கு தன் தாயை சிறுவயதிலேயே பிரிந்ததால் அடையாளம் தெரியவில்லை,
    ஒருமுறை சிவகாமியின் டயரியை படிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அதில் இருந்த தன்னுடைய இளம் பருவ புகைப்படத்தில் உடன் இருக்கும் அம்மா சிவகாமி என்பதனை அறிகின்றான். உண்மையினை உணர்ந்து...தனது தாயினை தனக்கு விருது அளிக்கும் விழாவுக்கு அழைக்கிறான். தன் அப்பாவின் புகைப்படத்தையும் பார்த்துவிட்டு உண்மையை உணர்கிறான்.
    ஆங்கே விருது தன் தாயின் கைகளால் விருதை பெறுகிறான்.
    படத்தின் வெற்றிக்கு பக்க துணையாக இருப்பது.. நடிகர் திலகம்...நடிகை வாணிஸ்ரீ மற்றும் தேனாய் இனிக்கும் பாடல்கள்..ஆகா..கேட்க கேட்க..காதுக்குள் தேனை பாய்ச்சுகிறார்மெல்லிசை மன்னர் M.S.V. அவர்கள். ஏற்கனவே ஹிந்தியில் ஆராதனா என்று வெளியாகிஇருந்த மாபெரும் வெற்றிப்படத்தின் ரீமேக் என்றாலும் அந்தப்படத்தின் பாடல்களும் மிகவும் பிரபலமானது என்றாலும்...அதனை தொடாமல் M.S.விஸ்வநாதன் அவர்கள் தனக்கே உரிய பாணியில் அருமையான பாடல்களை வழங்கியுள்ளார்.
    வாலிபக்கவிஞர் வாலி அவர்களின் கைவண்ணத்தில், என் ராஜாவின் ரோஜா முகம், ஆடிக்குப்பின்னே ஆவணி, போன்ற பாடல்களை கம்பீரக்குரலோன் டி.எம்.சௌந்தர ராஜன் அவர்கள் தேனிசைக் குரலுக்கு சொந்தமுடைய திருமதி.சுசீலா மற்றும் தனித்துவமான கவர்ச்சிக் குரலுக்கு சொந்தமுடைய திருமதி. ஈஸ்வரி அவர்களுடன் இணைந்து பாட மற்றும் எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே..என்ற பாடலை அரிதாக தனது குரலை தேவைக்கேற்ப மட்டும் பயன்படுத்தும் எம்.எஸ்.வீ அய்யா அவர்கள் பாடியுள்ளார்கள்..
    கவிஞர் புலமைப்பித்தன் அவர்களின் கைவண்ணத்தில் ' எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது ' என்ற S.P. பாலசுப்பிரமணியம் அவர்களின் கவர்ச்சிக்குரலில் ஒரு பாடலும், உள்ளம் ரெண்டும் ஓடும் வேகம்... என்ற எக்ஸ்பிரஸ் வேகப்பாடல் மற்றும் இனியவளே என்று பாடி வந்தேன்...போன்ற பாடல்களை காந்தர்வக்குரலோன் சௌந்தரராஜன் அவர்கள் கானக்குயில் சுசீலாவுடன் இணைந்து பாடியுள்ளார்கள். இதே இணை, மேளதாளம் கேட்கும் காலம் விரைவில் வருக..வருக என்று பெண் பார்க்க வந்தேனடி... என்ற பாடலையும் கவியரசர். கண்ணதாசனின் கைவண்ணத்தில் பாடியுள்ளனர்.
    பாடல்களை கேட்கும்போது...தேனாற்றில் நீராடும் உணர்வு ஏற்பட்டது...
    அவ்வளவு இனிமை...இசையின் மேன்மை சொல்லி மாளாது.... ஆஹா...அற்புதம்... இரண்டு வேடங்களில் தனது பிரத்தியேக பாணியில் கலைக்குரிசில் கலக்கிய மற்றொரு அருமையான படம்...
    அவருக்கே உரித்தான குறும்புத்தனம், காதல் செய்யும் நேர்த்தி..என தனது பங்களிப்பினை முறையாக செம்மையாக செய்துள்ளார் செவாலியே அவர்கள்.
    இந்தப்படத்தில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு பாடல்...உள்ளம் ரெண்டும் ஓடும் வேகம்...
    பல்லவியின் இரண்டு அடிகளின் கடைசியிலும் இரட்டைக்கிளவிகள். தொடர்ந்த இரண்டு சரணங்களின் கடைசி அடிகளிலும் இரட்டைக்கிளவிகள். அவற்றின் முன்னே கச்சிதமாகப் பொருந்துகின்ற முதலடிகள். இப்படி நகாசு வேலையை திரைப்பாடலில்செய்துவைத்தவர் புலமைப்பித்தன்.
    ஜிகுஜிகு, ஜிலுஜிலு, குளுகுளு, கிளுகிளு இவையே அந்த இரட்டைக்கிளவிகள்.
    அது ஒரு குளிர்ப்பிரதேசம். கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் பசுமை படர்ந்திருக்க,அதனிடையே கோடு கிழித்தாற்போல இருப்புப்பாதை. இருப்புப் பாதையையொட்டி அதனுடன் இணையாகச் செல்லும் சாலை. அங்கே செல்லும் இரயிலின் வேகம் ஒன்றும் காற்றைக் கிழித்துப் பறப்பதாக இல்லை. சாலையில் செல்லும் எந்த வாகனமும் இரயிலின் வேகத்தோடு கூடவே செல்வதற்குத் தோதுவான வேகம்.
    இரயிலின் சன்னலின் ஓரத்தில் ஓர் ஒயில் அமர்ந்திருக்கிறாள். தடிமனான புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு புரட்டிக்கொண்டே வருகிறாள். புத்தகத்தை ஒயில் படித்தாளோ இல்லை படிப்பதாகப் பாவனை செய்தாளோ எவரும் அறியார். ஆனால்,இரயிலுடன் கூடவே சாலையில் வாகனத்தில் வந்த இளஞன் ஒருவன் ஒயிலைப் படித்துக்கொண்டே வந்தான். அவள் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டும்போது ஓரக்கண்ணால் அவனைப் பார்த்து அவனது மனதையும் புரட்டிப் போட்டாள். அவள் புரட்டிப் போட்டதில் அவனது மனதில் காதல் விழித்துக்கொண்டது. காதல் வந்தால் கவிதையும் கூடவே வரவேண்டுமல்லவா, வந்தது.
    உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று
    மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம் ஹே
    ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு ஹே!
    பெண்மை என்னும் தென்றல் ஒன்று
    என்னைத் தொட்டுக் கொஞ்சும் இன்பம் ஹே
    ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஹே!
    காத்திருந்தாள் ஒரு ராஜாத்தி - இரு
    கண்களில் மையெழுதி!
    கண்டுகொண்டாள் என்னை நெஞ்சில் நிறுத்தி - அவள்
    கோடியில் ஓரழகி!
    தொட்டுத் தொட்டு கட்டுக் கதை
    இட்டுச் சொல்லும் பட்டுக் கண்கள்! ஹோ!
    குளுகுளு குளுகுளு குளுகுளு ஹே!
    நேற்றிரவு நல்ல பால்நிலவு - எந்தன்
    நெஞ்சினில் ஓர் கனவு!
    வந்தவள் யார் இந்தத் தேவதையோ - இவள்
    வார்த்தைகள் தேன்மழையோ!
    செல்லக் கன்னம் வெல்லம் என
    மெல்லமெல்ல கிள்ளக்கிள்ள! ஹோ!
    கிளுகிளு கிளுகிளு கிளுகிளு ஹே!
    தமிழ்த் திரையில் இரயிலில் ஒயிலாகத் தோன்றியவர் வாணிஸ்ரீ. உடன் செல்லும் வாகனத்தில் சிவாஜியும் ஏ.வி.எம். ராஜனும். புத்தகத்தைப் பார்ப்பதும், சிவாஜியைப் பார்ப்பதும், பின்பு அலட்சியமாக முகத்தைச் சுழித்துவிட்டு மீண்டும் புத்தகத்தைப் படிப்பதுமான பாவனையில் துவங்கி, மெல்லமெல்ல பாடலில் ஒலிக்கும் வர்ணனைகளை ரசிக்கத் துவங்கி, இதழோரத்தில் தோன்றும் புன்னகையுமாக வாணிஸ்ரீ.
    ஆராதனாவில் ஷர்மிளா டாகூர் புத்தகத்தில் முகம் மறைத்து விளையாட்டுக் காட்டுவதைப் பார்த்தபின் சிவகாமியின் செல்வனைப் பார்க்க நேர்ந்தால், அந்தக் காட்சியின் நேர்த்திக்காக வாணிஸ்ரீ எத்தனை சிரமப்பட்டிருப்பார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
    அலட்சியமாகப் பார்க்கும் பார்வையை ஓரிரு வினாடிகள் வீசுவாரென்றால், அடுத்த வினாடி பொய்யான கோபப் பார்வையை வீசுவார்.பிறகு புத்தகத்தில் முகம் புதைத்துக்கொள்ளும் பாவனையில் சில வினாடிகளும், மெதுவாகப் புத்தகத்தை விலக்கி அவனது பாட்டில் இருக்கும் நாயகி தான்தானா என்னும் சந்தேகம் தன்னை ஆட்கொண்டது போன்ற முகபாவனையில் சில வினாடிகளாகளுமாக உட்கார்ந்த இடத்திலிருந்தே பல உணர்வுகளை வெளிப்படுத்துவார்.
    இப்படியான முகபாவங்கள் அன்று முதல் இன்று வரையில் தமிழ்த் திரையில் வந்துகொண்டே இருக்கின்றன. துவக்கத்தில் கொஞ்சம் விலகி நிற்கவேண்டுமென நினைப்பதும், பிறகு இணைந்துகொள்வதுமாக பார்க்கின்ற படங்களிலெல்லாம் ஒன்றிரண்டு காட்சிகள் வந்துபோனாலும் அலுப்புத் தட்டாமல் இருப்பதற்குக் காரணம் நமது மனதில் இயல்பாகவே வேர்விட்டிருக்கும் மென்மையான உணர்வுகளும்,திரையில் தோன்றுகின்ற நடிக நடிகையர் மேலிருக்கும் அபிமானமுமே.
    காட்சியில், திறந்த ஜீப்பினை ஓட்டிக்கொண்டு ஏ.வி.எம்.ராஜன் சிவாஜியின் நண்பராக அவ்வப்போது சிந்தும் புன்னகையுடன் வர, தனக்கே உரிய அற்புதமான உதட்டசைவில் சிவாஜி, புலமைப்பித்தன் - எம்.எஸ்.விஸ்வநாதன் கூட்டணிக்கு உயிரூட்டிக்கொண்டு வர, மூன்று நிமிடங்களில் பெரிய காதல் நாடகத்தையே திரையில் அரங்கேற்றிக் காட்டிய பாடலிது.
    படத்தினில் பங்கேற்றோர் அனைவருமே தனது பாத்திரங்களுக்கு உயிரூட்டி இருந்தனர்.. குறிப்பாக பழம்பெரும் நடிகர். S.V. ரங்காராவ் அவர்கள் தனது பாத்திரத்தினை மிக நேர்த்தியாக செய்திருப்பார்கள் . நடிகர் திலகத்தின் பல ஜனரஞ்சகப்படங்களை இயக்கிய இயக்குனர் சி.வி. ராஜேந்திரன் அவர்கள் விறுவிறுப்பாக படத்தினை இயக்கி உள்ளார்கள். உற்சாகமூட்டிய சிறப்பான காதல் இசை விருந்து என்றே கூறலாம்.
    (முகநூல் சிங்காரவேலு பாலசுப்ரமணியன்)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •