Page 110 of 400 FirstFirst ... 1060100108109110111112120160210 ... LastLast
Results 1,091 to 1,100 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #1091
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சிவகாமியின் செல்வன் பற்றிய பதிவுகளை பாராட்டிய பெரியவர்கள் கோபு சார், ராமஜெயம் சார், சிவா சாருக்கு நன்றி!

    பதிவை விரும்பி லைக் அளித்த ஆதிராம், வாசு, கோபால், சின்னகண்ணன், பரணி, சித்தூர் வாசு, ராகவேந்தர் சாருக்கு நன்றி!

    பதிவை பாராட்டிய இளையதலைமுறையை சேர்ந்த mappi என்ற கார்த்திக்கிற்கு நன்றி!

    அலைபேசியில் அழைத்து பாராட்டியதோடு மட்டுமல்லாமல் இந்த பதிவுகளை whatsapp group-லும் பகிர்ந்த கவி திலகம் ஆதவனுக்கு நன்றி!

    whatsapp -ல் படித்து பாராட்டிய ஷர்மிளா மேடம் மற்றும் நண்பர் ஸ்ரீராம், ராமஜெயம் (சாந்தி) ஆகியோருக்கும் நன்றிகள் பல!

    கோபால்,

    நீங்கள் ஜூலையில் வரும்போது நிச்சயமாக நீங்கள் பார்க்க ஏற்பாடு செய்துவிடலாம்.

    வாசு,

    அருமையான ஸ்டில்- களை பதிவு செய்து அதுவும் நான் எழுதிய காட்சிகளுக்கு support-ஆக பதிவு செய்திருப்பது மிக நன்றாக வந்திருக்கிறது. குறிப்பாக நான் குறிப்பிட்ட கோவில் காட்சிக்கு அடுத்ததாக வரும் ஜீப்பில் பயணம் செய்யும் காட்சி அதற்கு முன்னரே கோவிலில் வைத்து நடிகர் திலகம் அணிந்திருக்கும் வேட்டி சட்டையை சுட்டிக் காட்டி இந்த டிரஸ்சோடவா ஜீப் ஓட்டப் போறே என்று சகஸ்ரநாமம் கேட்க இல்லே டிரஸ் மாத்திட்டு வந்துறேன் என்று போகும் நடிகர் திலகம் யூனிபார்மிற்கு மாறி நடந்து வருவாரே! பட்டு வேட்டி சட்டையில் அவ்வளவு அம்சமாக இருப்பவர் யூனிபார்ம் அணிந்தவுடன் கம்பீரமாக மாறும் அதிசயத்தை எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்பதில்லை.

    ஜீப் ஓட்டும்போது சொந்த ஊர் தஞ்சாவூர் பக்கத்திலே சூரக்கோட்டை என்பார். அடுத்து மற்றொன்றும் சொல்வார் கீழே இருக்கும்போதுதான் இது உன் ஊரு என் ஊரு-ங்கறதெல்லாம். வானத்திற்கு மேலே போய்ட்டா எல்லாமே நம்ம ஊருதான். இது அன்றைய நாட்களில் அரசியல் ஆதாயத்திற்காக சுயாட்சி என்றெல்லாம் வெற்று கோஷங்கள் எழுப்பப்பட்டுக் கொண்டிருந்ததை சுட்டிக் காட்டும்வண்ணம் எழுதப்பட்ட ஒன்று.

    மேள தாளம் பாடலில் வரும் அனைவருக்கும் பிடித்த அந்த ஸ்டில் படத்தில் பார்க்கும்போது இன்னும் நன்றாக இருக்கும். இருவருக்கும் இடையே இருக்கும் கெமிஸ்ட்ரி அந்த காட்சியில் அழகாய் வெளிப்படும். படத்தில் இந்த ஒரே ஒரு பாடல் மட்டும்தான் கவியரசர் என்றபோதிலும் வார்த்தை விளையாட்டு விளையாடியிருப்பார்.

    ஆனந்த் ரோலிற்கு நீங்கள் போட்டிருக்கும் ஸ்டில்ஸும் அட்டகாசம். லதாவை அழைத்துப் போக வரும்போது விசிலடித்துக் கொண்டே வரும் அந்த நடை! விஎஸ் ராகவனிடம் ரொம்ப உரிமை எடுத்துக் கொண்டு பக்கத்தில் போய் உட்கார்ந்து பேசிவிட்டு அவர் முறைத்தவுடன் பம்மி தன்னுடைய சீட்டிற்கு திரும்புவது என்று ஜாலியாக செய்திருப்பார்.

    இப்படி எழுத ஆரம்பித்தால் ஒவ்வொரு காட்சியையும் எழுதிக் கொண்டே போக வேண்டியதுதான். அந்தளவிற்கு படத்தில் மெரிட் இருக்கிறது.

    மீண்டும் அனைவருக்கும் நன்றி!

    அன்புடன்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1092
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    முரளி சார் தேதி சொன்னால் மிகவும் சந்தோசம். நானும் ஜூலையில் வருகிறேன். உங்கள் மொபைல் எண்ணை பிரைவேட் மெயிலில் அனுப்பவும், நான் உடனே பேசுகிறேன் நன்றி.

  4. #1093
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    From Sudhangan FB,


    1968ம் ஆண்டு வந்த முதல் சிவாஜி படம் ‘ திருமால் பெருமை’தான்! ஆனால், அந்த படத்தைப் பற்றி கொஞ்சம் விரிவாக எழுத வேண்டும்! அதனால் அந்த வருடம் வந்த படங்களை வரிசைப்படுத்தாமல் எழுதுகிறேன்!
    காரணம், அந்த வருடம்தான் என்னைப் பொறுத்தவரையில் சிவாஜியின் மகுடத்தில் வைத்த இன்னொரு சில வைரக் கற்கள் உருவாகின! பல வித்தியாசமான திரைப்படங்களும் வந்தன! அந்த வருடம் வந்த படங்கள் எனக்குள் சிவாஜியைப் பற்றி பல பிரமிப்புகளை ஏற்படுத்துகின்றன!
    அத்தனை வித்தியாசமான படங்கள்! இப்படி ஒரு நடிகன் ஒரே வருடத்தில் இத்தனை வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க முடியுமா? உலகத்தில் எந்த நடிகனாவது இத்தனை வேறுபட்ட கதாபாத்திரங்களில் ஒரே வருடத்தில் நடித்திருக்கிறானா? ஏன் இவனது சாதனையைப் பற்றி யாரும் பேச மறுக்கிறார்கள்?
    காரணம், இந்த கலைஞன் கலையோடு மட்டுமே வாழ்ந்துவிட்டான்! அந்த வருடம் வந்த படம்தான் ‘உயர்ந்த மனிதன்’! இது ஏவி.எம். தயாரிப்பு! இதில் பணக்கார இள, நடுத்தர, வயோதிக வேடம்! முதலில் இந்தப் படத்தின் கதையை சொன்னபோது சிவாஜி அதை ஏற்றுக்கொள்ள மறுத்தார்! பிறகு திருத்தி அமைக்கப்பட்ட கதைக்குத்தான் உடன்பட்டார் அவர்!
    இந்தப் படத்திற்கான திரைக்கதை – வசனத்தை ஜாவர் சீதாராமன் எழுதியிருந்தார்! சிவாஜி ஒரு பணக்கார வீட்டு பிள்ளை! அவருடைய தந்தை எஸ்.வி. ராமதாஸ்!
    சிவாஜி ஓர் ஏழைப்பெண்ணைக் காதலிப்பார்! அவளோடு உறவும் கொண்டு விடுவார்! அந்தப் பெண் கர்ப்பமாக இருக்கும்போது அவள் தனியே தந்தையுடன் வீட்டில் இருக்கும் போது சிவாஜியின் தந்தை தீ வைத்து கொளுத்திவிடுவார்!
    குழந்தை என்ன ஆனது? குழந்தை பிழைக்கும். தாய் இறந்து போவாள்! வருடங்கள் கடக்கும்! சிவாஜி இப்போது ஒரு நடுத்தர மிகப்பெரிய தொழிலதிபர்!
    அவருடைய மனைவி சவுகார் ஜானகி! திருமணமாகி வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை! இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போதுதான் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது! இந்த சம்பவத்தை எனக்குச் சொன்னவர் சவுகார் ஜானகி! இந்தப் படத்தின் முக்கால்வாசி பகுதி முடிந்துவிட்டது!
    அப்போது திடீரென்று ஏவி.எம்மில் ஒரு தொழிலாளர் போராட்டம்! ஸ்டூடியோ மூடப்பட்டுவிட்டது! இந்த இடைப்பட்ட காலத்தில் சிவாஜிக்கும், சவுகாருக்குமிடையே ஒரு பொதுமேடையில் வைத்து கருத்து வேறுபாடு!
    கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து மீண்டும் படப்பிடிப்பு! சிவாஜி-– சவுகார் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் ஒன்றாக நடிக்க உடன்படவில்லை! இருவரையும் சம்மதித்து நடிக்க வைத்தனர்! நடிப்பில் மட்டும்தான் இருவருக்கும் பேச்சுவார்த்தை!’ படப்பிடிப்பில் ஒரு‘ஹலோ’ கூட கிடையாது! மீண்டும் ஒரு வருடம் கழித்து படப்பிடிப்பு!
    ஏற்கனவே எடுக்கப்பட்ட காட்சியின் தொடர்ச்சி! அதாவது முதல் வருடம் சவுகார் உள்ளே வருவது மாதிரி காட்சி! இப்போது அவர் உள்ளே வந்து கூடத்தில் வந்து உட்கார வேண்டும்! சிவாஜிக்கும் சவுகாருக்கும் பேச்சுவார்த்தை கிடையாது!
    திடீரென்று அதற்கு முந்தைய வருடம் படப்பிடிப்பு பாதியில் நின்றதால், தொடர்ச்சி காட்சிக்கான புகைப்படங்கள் அதாவது ஸ்டில்ஸ் எடுக்கப்படவில்லை! இப்போது சவுகார் உள்ளே உடையோடு படப்பிடிப்புக்கு தயாரான நிலையில் வருகிறார்! சிவாஜி ஏற்கனவே தயார் நிலையில்! சவுகார் வந்த உடையை கண்டதும் சிவாஜி முகத்தில் ஒரு கலவரம்! அதை சவுகாரிடம் சொல்ல முடியாது!
    காரணம், இருவருக்கும் பேச்சுவார்த்தை கிடையாது! இருவருக்கும் தூது, உதவி இயக்குநர்கள்தான்! சிவாஜி உதவி இயக்குநரை அழைத்தார்! ‘அந்தம்மாவின் உடை சரியில்லை! போன முறை ஒரு வருடத்திற்கு முன்பு எடுத்த காட்சியில் அவர் கறுப்பு சேலை அணிந்திருந்தார். இப்போது சேலை நிறம் மாறியிருக்கிறது’ என்றார் சிவாஜி! இதை உதவி இயக்குநர்கள் சவுகாரிடம் போய் சொன்னார்கள்!
    சவுகார் படித்தவர்! தனக்கென ஒரு கவுரவத்தையும், தன்னம்பிக்கையையும் வைத்துக்கொண்டிருக்கும் குணாதிசயம் கொண்டவர்!
    ‘அதெல்லாம் கிடையாது! படம் நின்னு போய் ஒரு வருடம் ஆச்சு! இதே புடவையைத்தான் நான் கட்டியிருந்தேன். இந்த ஒரு வருடம் அவர் நடுவில் எத்தனை படங்கள் நடித்திருப்பார். வேறு படத்தின் நினைவில் சொல்கிறார்! வேணும்னா கண்டினியூடி அதாவது தொடர்ச்சிக்காக எடுக்கப்பட்ட புகைப்படங்களை எடுத்துப் பாருங்கள்’ என்றார் சவுகார்!
    ‘மேடம்! ஸ்டில்ஸ் எடுக்கிறதுக்குள்ள தான் படப்பிடிப்பு நின்னு போச்சே!’
    ‘அப்ப என்னால புடவையை மாத்த முடியாது–’ இது சவுகார்!
    சிவாஜியிடம் போய் சொன்னார்கள் உதவியாளர்கள். அந்தப் படத்தின் இயக்குநர்கள் கிருஷ்ணன் – பஞ்சு! இவர்கள்தான் சிவாஜியின் முதல் படமான ‘பராசக்தி’ படத்தை இயக்கியவர்கள்!
    சிவாஜி தன் குருநாத இயக்குநர்களிடம் விஷயத்தை சொல்லிவிட்டு, ‘வேண்டுமானால் நீங்கள் ‘ரஷ்’ போட்டு பாருங்கள். நான் சொல்வது சரியில்லையென்றால் நான் நடிக்கிறேன்’ என்றார் சிவாஜி! வேறு வழியில்லாமல் ‘ரஷ்’ பார்க்க முன்பார்க்கும் ( பிரிவியூ) திரையரங்கும் தயாரானது!
    படம் பார்க்க சிவாஜி – சவுகாரை அழைத்தார்கள்! சிவாஜி வர மறுத்துவிட்டார்! சொன்ன காரணம் ‘எனக்கு சந்தேகமில்லை! தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் பார்க்கட்டும்’ என்று சொல்லி தன் ஒப்பனை அறைக்குப் போய் விட்டார்! படத்தை பார்த்தார்கள்! சவுகாரும் பார்த்தார்! பார்த்த மாத்திரத்தில் அந்த அரங்கை விட்டு வெளியே ஓடினார் சிவாஜி இருந்த ஒப்பனை அறையை நோக்கி,
    அப்போது இருவருக்குமிடையே பேச்சுவார்த்தையில்லாத சமயம்! நேராக கதவைத் திறந்து உள்ளே நுழைந்தார் சவுகார்! கண்ணீர் மல்க சிவாஜி எதிரே ஒரு வினாடி நின்று அப்படியே காலில் விழுந்தார்!
    ‘எப்படிங்க இது! ஒரு வருடத்திற்கு முன்னாடி நின்னு போன படம்!
    நடுவிலே எத்தனை படம் நடிச்சிருப்பீங்க! எப்படி நான் இந்தக் காட்சியில நடிச்ச புடவை நிறம் கூட நினைவில் வெச்சிருக்கீங்க!! நீங்க அபாரம்! என்ன கோபமிருந்தாலும் மன்னிச்சுக்குங்க’ என்றார் சவுகார்.
    அவரை கைதூக்கிவிட்டபடி சிவாஜி சொன்னார்! ‘என் சுபாவம், கவனம் எல்லாமே நடிப்புத்தானேம்மா! இந்தப்படத்துக்கு வந்தால் இந்த கதாபாத்திரம்! அடுத்த படப்பிடிப்புக்கு போய் மேக்கப் போட்டால், அடுத்த கதாபாத்திரம்! இதுதானே என் பழக்கம்?’ என்றார் சிவாஜி!
    சிவாஜியின் தொழில் அர்ப்பணிப்பும், அதை புரிந்து கொண்ட சவுகாரும் பழைய தற்காலிக கோபத்தை மறந்தார்கள். அதுதான் அந்த காலத்து நட்சத்திரங்களின் தொழில் அர்ப்பணிப்பு! அந்த காலத்தவர்களுக்கும் பணம் தேவைதான்! ஆனால் அதையும் மீறி ஒரு தொழில் அர்ப்பணிப்பு இருந்தது!

  5. Thanks eehaiupehazij, Russellmai, RAGHAVENDRA thanked for this post
    Likes KCSHEKAR, Russellmai liked this post
  6. #1094
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    From Sudhangan FB

    திருவருட்செல்வர்’ படம் வந்த அதே வருடம் சிவாஜிக்கு கிடைத்த ஒரு வித்யாசமான படம் என்பது இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த கறுப்பு வெள்ளைப் படம்!
    ஸ்ரீதருக்கும் முக்கோண காதல் கதைக்கும் மிகுந்த உறவு உண்டு.
    அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.
    ஏமாற்றமும் அடைந்திருக்கிறார்.
    அப்படி ஸ்ரீதருக்கு ஏமாற்றம் தந்த படம்தான் சிவாஜி நடித்த ‘நெஞ்சிருக்கும் வரை.’
    இந்த படத்தில் பலரும் மேக்கப் இல்லாமலேயே நடித்திருந்தார்கள்.
    சிவாஜி இந்த படத்தில் ஓர் ஏழைத் தொழிலாளி!
    அவருக்கு இரண்டு நண்பர்கள்.
    அந்த நண்பர்கள் வேடத்தில் முத்துராமனும், வி.கோபாலகிருஷ்ணனும் நடித்திருப்பார்கள்.
    தனக்கு அடைக்கலம் கொடுத்தவர் வீட்டுப்பெண்ணான கே. ஆர்.விஜயாவை விரும்புவார்.
    ஆனால் கே.ஆர். விஜயாவோ முத்துராமனை விரும்புவார்.
    உடனே, அனாதையாகிவிட்ட அந்த பெண்ணுக்கு ஓர் அண்ணனாகவே மாறி தன் நண்பன் முத்துராமனுக்கு திருமணம் செய்து கொடுப்பார்.
    இந்த படம் சிவாஜிக்கும், ஸ்ரீதருக்கும் ஏமாற்றத்தைக் கொடுத்தாலும், இந்த படத்தை மீண்டும் மீண்டும் ரசிகர்கள் பார்த்ததற்கு காரணம் இசைதான்.
    இந்தப் படத்தின் உண்மையான நாயகர்கள் எம்.எஸ். விஸ்வநாதனும், கவியரசு கண்ணதாசனும்தான்!
    இசை மிஞ்சியதா அல்லது இசைத்தமிழ் மிஞ்சியதா என்கிற மாதிரி அத்தனை அற்புதமான பாடல்!
    தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய ‘நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கும் வாழ்ந்தே திருவோம்.’
    அதே போல் சிவாஜி கனவில் கே.ஆர். விஜயாவோடு பாடுவதாக அமைந்த டூயட் பாட்டான ‘முத்துக்களோ கண்கள், தித்திப்பதோ கன்னம், சந்தித்த வேளையில் சிந்திக்கவேயில்லை தந்துவிட்டேன் என்னை’ பாடலுக்கு இன்னும் உலகமெங்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
    சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இரவு விடுதிகளில் தமிழ் மெல்லிசை கச்சேரி நடக்கும்.
    அதில் தவறாமல் இந்த பாடல் இடம்பெறும்!
    ஒரு நாளிதழை கொடுத்தால் அந்த செய்திக்கு கூட எம்.எஸ். விஸ்வநாதன் டியூன் போட்டு விடுவார் என்பார்கள்.
    அதற்கு உதாரணம் இந்தப் படம்தான்!
    ஒரு திருமண பத்திரிகைக்கு பாடல் அமைத்த ஒரே இசையமைப்பாளர் உலகத்திலேயே விஸ்வநாதனாகத்தான் இருப்பார்.
    இந்த படத்தில் கே.ஆர்.விஜயா – முத்துராமனின் திருமண பத்திரிகையை வைத்துக்கொண்டு சிவாஜி பாடுவதாக அமைந்த இந்தப் பாடல் இன்றும் பல திருமண வீடுகளில் ஒலிப்பதைக் கேட்கலாம்!
    அந்த பாடல்தான் ‘ பூ முடிப்பாள் இந்த பூங்குழலி’ பாடல்!
    ஓர் அழைப்பிதழில் தொடங்கி, அப்படியே திருமணத்தில் மணப்பெண் எப்படி நடந்து வருகிறாள் என்பதை வர்ணித்து, திருமணத்திற்கு பிறகு அந்தப் பெண்ணை வாழ்த்தி அந்த பாடல் முடியும்.
    என்னவொரு கற்பனை கண்ணதாசனுக்கு?
    ‘மாதரார் தங்கள் மகளென்று பார்த்திருக்க, மாப்பிள்ளை முன் வந்து மணவறையில் காத்திருக்க காதலாள் மெல்ல கால் பார்த்து நடந்து வர கன்னியவள் கையில் கட்டி வைத்த மாலை பெற கொட்டியது மேளம் குவிந்தது கோடி மலர் கட்டினான் மாங்கல்யம்
    மனை வாழ்க! துணை வாழ்க! குலம் வாழ்க!’ இந்த வரிகளை ரசிக்காத ரசிகர்களே அப்போது இல்லை என்றே சொல்லலாம்.
    இந்த படத்தை இன்று ரசிகர்கள் நினைவில் வைத்திருந்தால் அதற்குக் காரணம் பாடல்கள்தான்.
    அதே போல் சிவாஜியின் மிகையில்லாத நடிப்பு இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ்பாயிண்ட்!
    அடுத்து அதே வருடம் வந்த இன்னொரு சிவாஜி படம் ‘பாலாடை.’
    பீம்சிங் இயக்கத்தில் வந்த இன்னொரு ‘பா’ வரிசை படம் இது!
    தனக்கு பிள்ளை பிறக்கவில்லை என்பதற்காக தன் தங்கை கே.ஆர்.விஜயாவுக்கே தன் கணவர் சிவாஜியை திருமணம் செய்து வைப்பார் பத்மினி!
    மிகவும் சிக்கலான கதைக் களம் இந்த படத்திலும் பாடல்கள் எல்லாமே மிக இனிமையாக அமைந்திருந்தன!
    1968–ல் பல படங்கள் வெற்றி பெற்றன. இந்த வருடம் முதலில் வந்த சிவாஜி படம் ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் வந்த ‘திருமால் பெருமை!’
    இது பன்னிரண்டு ஆழ்வார்களில் சில ஆழ்வார்களை மட்டுமே எடுத்துக் கொண்டு எடுக்கப்பட்ட படம்!
    முந்தைய ஆண்டு சைவர்களுக்காக ‘திருவருட்செல்வர்’ கொடுத்த நாகராஜன், அடுத்த ஆண்டு வைணவர்களுக்காக கொடுத்த படம்தான் ‘திருமால் பெருமை.’
    அடுத்து வந்த படம் முற்றிலும் வித்தியாசமான ஒரு காமெடி படம்.அதுதான் ‘கலாட்டா கல்யாணம்’.
    ஒரு நட்சத்திர கலைவிழாவிற்காக சித்ராலயா கோபு எழுதிய ஒரு பதினைந்து நிமிட நாடகம்தான் ‘கலாட்டா கல்யாணம்’ கதை!
    அந்த நாடகத்தின் கரு சிவாஜிக்கு பிடித்திருந்தது.
    உடனே சிவாஜி பிலிம்ஸின் இன்னொரு நிறுவனமான ராம்குமார் பிலிம்ஸ் பேனரில் எடுத்த படம்தான் இது!
    தன் முதல் படமான ‘அனுபவம் புதுமை’ படத்தை எடுத்திருந்து தோல்வியில் இருந்தார் இயக்குநர் சி.வி. ராஜேந்திரன்!
    அவர் இயக்குநர் ஸ்ரீதரின் நெருங்கிய உறவினர்!
    அதே சமயம் அவருடன் ‘வெண்ணிற ஆடை’ படக் காலத்திலிருந்து அவருக்கு உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் உண்டு!
    ‘வெண்ணிற ஆடை’ படம்தான் ஜெயலலிதாவின் முதல் படம்!
    ‘கலாட்டா கல்யாணம்’ படத்தை சி.வி. ராஜேந்திரன்தான் இயக்க வேண்டுமென்று சிவாஜி உறுதியாக இருந்தார்.
    உடனே சி.வி. ராஜேந்திரன் சிவாஜியிடம் ‘இந்தப் படத்தில் ஏன் உங்களுக்கு ஜோடியாக ஜெயலலிதாவை நடிக்க வைக்கக்கூடாது ?’ என்று கேட்டவுடன் சம்மதித்தார் சிவாஜி!
    இந்த படம்தான் சிவாஜி – ஜெயலலிதா ஜோடி சேர்ந்த முதல் படம்!
    அதற்கு முன்பு வந்த ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ படத்தில் சிவாஜியின் மகளாக நடித்திருந்தார் ஜெயலலிதா!
    இந்த படத்தில், டைட்டில் வருவதற்கு முன்பே படம் ஒரு பாடலோடுதான் துவங்கும். சி.வி. ராஜேந்திரனும், ஜெயலலிதாவும் நல்ல நண்பர்கள். சி.வி. ராஜேந்திரன் பெரிய இயக்குநராக வருவார் என்ற நம்பிக்கை ஜெயலலிதாவிற்கு உண்டு!
    அதனால் படத்தின் முதல் காட்சியே ஒரு நல்வரவு பலகையோடு கேமரா பின்னோக்கி வரும்!
    கேமராவை நோக்கி ஜெயலலிதா ஓடிவந்து சாத்தனூர் அணைக்கட்டின் மேல் படிக்கட்டில் இருக்கும் சிவாஜியை நோக்கி ஓடிப்போவார்!
    அவரை அப்படியே அணைத்து அவர் முதுகுக்குப்புறமாக கேமராவை பார்த்து ‘ வந்த இடம் நல்ல இடம்! வரவேண்டும் காதல் மகராணி’ என்று ஆரம்பித்தவுடன், அது ஜெயலலிதா தன்னுடன் ஜோடி சேர்ந்ததற்கான வரவேற்பு என்பதை புரிந்து கொண்டு ரசிகர்களின் விசில்கள் பறக்கும்.
    இந்த படத்தில் எல்லா பாடல்களையும் எழுதியிருந்தவர் வாலி!
    இந்த வருடம் வந்த முதல் படம் புராணம் என்றால், அடுத்த படம் முற்றிலுமாக மாறியிருந்த படம்தான் ‘கலாட்டா கல்யாணம்’!

  7. Thanks eehaiupehazij, Russellmai, RAGHAVENDRA thanked for this post
    Likes KCSHEKAR, Russellmai liked this post
  8. #1095
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    From Sudhangan FB,

    தனக்கு திருநாவுக்கரசர் பாத்திரம் கிடைத்தது கூட பரமாச்சார்யாளின் அருள்தான் என்று சிவாஜி நெகிழ்ந்து சொன்னார்.
    அந்த திருநாவுக்கரசர் வேடத்தில் சிவாஜி திரையில் தோன்றிய போது எழுந்த கைதட்டல்களை எண்ணவே முடியாது.
    ஒவ்வொரு நடைக்கும், ஒவ்வொரு அசைவிற்கும் கைதட்டல்கள்தான்!
    அப்பூதி அடிகள் வீட்டுக்கு வந்து அந்த வீட்டு திண்ணையில் அவர் உட்காருகிற பாணிக்கே தனியாக கைதட்டுவார்கள்.
    அன்றைய இயக்குநர்களுக்கு சிவாஜி என்பவர் ஓர் அட்சய பாத்திரம்!
    அந்த பாத்திரத்தில் எத்தனை கதாபாத்திரங்களை வேண்டுமானாலும் அள்ளிக் கொள்ளலாம்!
    சிவாஜி எந்த கதாசிரியரை பார்த்தாலும் முதலில் கேட்பது ‘ ஏம்பா! எனக்கெல்லாம் கதை சொல்ல மாட்டியா?’ என்பதுதான்.
    அதே சமயம், சக நடிகர்களை மதிக்கும் பாங்கை அவரிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும்.
    லட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் ராஜ்ய சபா உறுப்பினர் ஆனார். இங்கே இன்னொன்றையும் பதிவு செய்ய வேண்டும். உலகத்திலேயே முதன்முதலாக ஒரு நடிகன் சட்டமன்றத்தில் நுழைந்தது எஸ்.எஸ். ஆர். மூலமாகத்தான். 1962ல் பெரியகுளம் தொகுதியிலிருந்து அவர் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
    அதற்குப் பிறகுதான் அமெரிக்க அதிபர் ரீகன் நடிகராக இருந்து ஜனாதிபதியானார். இதே எஸ்.எஸ். ஆர். ராஜ்யசபா உறுப்பினர் ஆனதும் சிவாஜி அவருடைய வீட்டுக்குப் போனார்.
    ‘ ஏண்டா ராஜு! நீயெல்லாம் டில்லிக்கு போய்ட்டா நான் யார் கூட நடிக்கிறது? நீ என்னோடு நடிக்கும்போதுதாண்டா என் நடிப்புக்கே ஒரு மதிப்பு வருது’ என்று வெளிப்படையாக சொன்னவர் சிவாஜி.
    இதை சிவாஜி என்னிடம் சொல்லவில்லை. எஸ்.எஸ். ஆர். ‘நான் வந்த பாதை’ என்ற அவருடைய சுயசரிதையில் சொல்லியிருக்கிறார்.
    ஆனால் சிவாஜி ஒரு விஷயத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.
    ‘ என்னை எல்லோரும் பெரிய நடிகன்னு சொல்றாங்க. ஆனால் நான் நடிக்க பயப்படுற பல நடிகர்கள் நம்ம தமிழ் சினிமாவில் இருக்காங்க. உதாரணமாக எஸ்.வி. ரங்காராவ், எம்.ஆர். ராதாண்ணேன், எஸ்.வி. சுப்பையா, டி.எஸ். பாலையா, சந்திரபாபு, நாகேஷ், அதே மாதிரி நடிகைகள்ள கண்ணாம்பா, பானுமதி’ என்றார்.
    மற்ற நடிகர்கள் நன்றாக நடித்தால்தான் அதை மிஞ்சி நாம் நடிக்க முடியும் என்பதில் உறுதியாக இருந்தவர் சிவாஜி!
    தன்னுடைய பல படங்களில் மற்றவர்களின் நடிப்பை ரசித்து பாராட்டியவர் சிவாஜி!
    தமிழில் சிவாஜி நடித்த பல படங்கள் வேற்று மொழிகளில் எடுக்கப்பட்டிருக்கின்றன.
    பல உலகப்புகழ் இந்தி நடிகர்கள் சிவாஜி நடிப்பை கண்டு வியந்து சில கதாநாயகர்கள் எங்களால் இப்படி நடிக்க முடியாது என்று சொல்லி அதனால் அந்தப் படங்களை நிராகரித்த கதாநாயகர்கள் உண்டு! சிவாஜியிடம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் ஒன்று உண்டு. அதுதான் அவரது உச்சரிப்பு!
    தமிழை அவர் உள்வாங்கிக்கொண்டு பேசும் வசனங்கள், அதே மாதிரி கரடுமுரடான தமிழ் பாடல்களை, பாசுரங்களை, தேவார பதிகங்களை அவரைப் போல் உள்வாங்கி வாயசைப்பவர்கள் உண்டா என்பது சந்தேகம் தான்.
    உதாரணமாக, இந்த திருநாவுக்கரசர் வேடத்தையும் எடுத்துக்கொள்ளலாம்.
    சிவாஜி வசனம் பேசுவது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்!
    ஆனால், கடினமான பாடல்களுக்கு அப்படியே ஏதோ இவரே திரையில் பாடுவதைப் போல உணர்ச்சி பொங்க வாயசைப்பதுதான் அவருடைய மிகப் பெரிய சிறப்பு என்றே சொல்லலாம்.
    முதலில், பெரிய புராணத்தில் திருநாவுக்கரசர் எப்படி இருந்தார் என்பதை தெரிந்து கொண்டால்தான் சிவாஜியின் மேன்மையை புரிந்து கொள்ள முடியும்.
    ஒரு சமண மன்னனை சைவத்திற்கு மாற்றியவர் திருநாவுக்கரசர்! அவர் நம் சமண மதத்தை இழித்துப் பேசுகிறார் என்றெல்லாம் பல்லவ மன்னனிடம் போய் சொல்வார்கள்!
    திருநாவுக்கரசரை இழுத்து வரச்சொல்வான் மன்னன்!
    மன்னனின் படைகள் திருநாவுக்கரசரை சூழ்ந்து கொள்ளும்.
    ஓரமைச்சன் திருநாவுக்கரசர் அருகே சென்று, ‘நம் அரசர் உம்மை அழைத்து வருமாறு எங்களை அனுப்பினார். வாரும்’ என்றான்.
    அஞ்சுதல் இல்லாத திருநாவுக்கரசு அடிகள் அரசன் ஆணை வழி வந்த அமைச்சனை நோக்கி,
    ‘நாமார்க்கும் குடியல்லோம்
    நமனை யஞ்சோம்
    நரகத்தி லிடர்ப்படோம்
    நடலை யில்லோம்
    ஏமாப்போம் பிணியறியோம்
    பணிவோ மல்லோம்
    இன்பமே எந்நாளும்
    துன்பமில்லை
    நாமார்குங் குடியல்லாத்
    தன்மை யான
    சங்கரனற் சங்கவெண்
    குழையோர் காதிற்
    கோற்கே நாமென்று
    மீளா ஆளாய்க்
    கொய்ம் மலர்ச்சே
    வடியிணையே குறுகினோமே’
    என்று தொடங்கும் பதிகத்தை பாடினார். இத்தனை கடினமான பாடல்களை பாடியவர் திருநாவுக்கரசர்.
    இவருடைய ஒரு பாடலை, ‘திருவருட்செல்வர்’ படத்தில் வைத்திருப்பார்கள்.
    அதற்கு கே.வி. மகாதேவன் அருமையாக இசையமைத்து டி.எம்.எஸ். பாடியிருப்பார்.
    ஆனால் இந்த பாடல் பதிவு என்பது ரிக்கார்டிங் தியேட்டரில் நடந்தது! ஆனால், சிவாஜி விஷயம் அப்படியில்லை! வெளிப்புற படப்பிடிப்பு! பலர் பார்க்க பின்னால் வரும் பாடலுக்கு திருநாவுக்கரசரான சிவாஜி வாய் அசைக்க வேண்டும்! அதைப் படத்தில் பார்க்கும்போது சிவாஜியே பாடுவது மாதிரி இருக்கும்!
    அந்த பாடல் இதுதான்!
    ‘மாசில் வீணையும் மாலை மதியமும்
    வீசு தென்றலும் வீங்கள வேனிலும்
    மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
    ஈசன் எந்தை இணையடி நீழலை!’
    இத்தனை கடுமையான வரிகளுக்கு சிவாஜி கொடுத்த வாயசைப்பெல்லாம் பலரை அன்று பிரமிக்க வைத்தது!
    திருநாவுக்கரசர் வாழ்க்கையை பெரிய புராணத்தில் படித்தால் பல சாகசங்கள் இருக்கும்!
    ஆனால், அதையெல்லாம் கொண்டு வந்தால் சிவாஜிதான் தெரிவார்!
    ஆனால், அப்பரான திருநாவுக்கரசர் பாத்திரம் சிவாஜி மூலமாக ரசிகர்கள் மனதில் நிலைக்க வேண்டும் என்பதால் ஏ.பி.நாகராஜன் அந்த சாகச சம்பவங்களை தவிர்த்து விட்டு, திருஞான சம்பந்தர், அப்பர், அப்பூதியடிகள் சம்பவங்களை மட்டுமே வைத்து படத்தை மிகப்பெரிய வெற்றியாக்கினார்.
    சிவாஜி சொன்னார், ‘பாசமலர்’ படத்திற்கு பிறகு நானும் சாவித்திரியும் ஜோடியாக நடித்தால் எப்படி மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லையோ, அதே போல் இந்த திருநாவுக்கரசர் பாத்திரம் ஏற்று நடித்த பின் என்னை சமூக படங்களில் ஏற்றுக்கொள்வார்களா என்று நான் பயப்படும் அளவிற்கு இந்த கதாபாத்திரத்தை அப்படி ரசித்தார்கள்.’
    ஆனால் ‘ பாசமலர்’ அனுபவம் அவருக்கு ‘திருவருட்செல்வ’ரில் தொடரவில்லை.
    அதற்கு பிறகு அவர் பல வித்தியாசமான வேடங்களில், சமூக படங்களில் கலக்கினார் என்பதுதான் திரை சரித்திர உண்மை.
    அதற்கு சிறந்த உதாரணம் ‘திருவருட்செல்வர்’ படம் வந்த அதே வருடத்தில் வந்த இன்னொரு மிக வித்தியாசமான சிவாஜி படம்.
    அது என்ன படம் ?

  9. Thanks Russellmai, RAGHAVENDRA thanked for this post
    Likes KCSHEKAR, Russellmai liked this post
  10. #1096
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    பச்சை விளக்கு- எழுத்துப் பயணம் -1


    அணிந்திருக்கிற கருப்புத் தொப்பி தலையோடு அழகாகப்
    பொருந்தி விடுவதைப் போலவே, அந்த "சாரதி" வேடமும் நடிகர் திலகத்தோடு
    "கிச்"சென்று பொருந்தி விடுகிறது.

    நடிகர் திலகம் என்ற உயரிய
    நடிப்புக் கலைஞனும், பீம்சிங்
    என்கிற இயக்குநரும் கொண்டிருந்த புரிதல் மிகுந்த
    நட்பு, திரையிலும் பார்த்துணர
    முடிகிற புனிதமாயிருக்கிறது.

    வைத்தியமில்லாத ஒரு கொடிய வியாதிக்கு அன்னையைப் பறிகொடுத்துப்
    பரிதவித்து, தாயன்போடு
    நெருங்கும் வேலைக்காரியை
    அன்னையாக்கிக் கொண்டு,

    அந்த வேலைக்காரியின்
    சின்னஞ்சிறு மகளைத் தன்
    தங்கையாக்கிக் கொண்டு,

    குடும்பம் விளங்க ஒரு குணவதியைத் தன் இல்லாளாக்கிக் கொண்டு,

    புத்தம் புதிய வாழ்க்கைக்குள்
    நுழைகிற புது நாளில் பெற்றவளைப் போல பேணி
    வளர்த்த இரண்டாம் தாயும்
    இறந்துபடும் கொடுமைக்கு
    கதறிக் கொண்டு,

    அழுதுறங்கும் உடன்பிறவாத் தங்கையை சாவுகளைச் சாகடிக்கிற ஒரு மருத்துவராக்க வேண்டும் என்கிற இலட்சியம் கொண்டு,

    தன் இலட்சியம் நிறைவேறிக்
    கனியும் வரைக்கும் கட்டில்
    சுகம் வேண்டாமென்று
    மனைவியிடம் கெஞ்சிக் கொண்டு,

    உடலாலும், உள்ளத்தாலும் தனக்கும், தன் நல்லது கெட்டதுகளுக்கும்
    பக்கத்திலேயே இருக்கிற
    நண்பன் ஜோசப்பிடம் உயரிய
    நட்புக் கொண்டு,

    வயதான தந்தை, ஒற்றைத் தம்பி, பண்பின் இருப்பிடமான மனைவி, உயிரின் உயிரான
    தங்கை எல்லோரின் மீதும்
    உண்மையான அன்பு கொண்டு,

    நல்லவற்றிற்கும் தனக்கும்
    கொள்ளை தூரம் வைத்திருக்கிற உதவாக்கரை
    சித்தப்பா மேல் நிறைய கோபம்
    கொண்டு,

    ஒழுக்கமான வளர்ப்பு கொண்டு,

    தங்கள் குடும்பத்தின் மீது
    அக்கறை மிகக் கொண்ட
    பெரியவர் பொன்னம்பலத்தின்
    மீது மட்டற்ற மரியாதை
    கொண்டு,

    மருத்துவருடையில் பார்க்கத்
    துடித்திருந்த தங்கையை,
    மணக்கோலத்தில் பார்க்க
    வேண்டிய சூழலுக்காக வருந்திக் கொண்டு,

    தங்கையை மணந்தவன்
    நல்லவனென்பதால் அவன்
    மீது பேரன்பு கொண்டு,

    தங்கை மீண்டும் படிக்க அவள்
    கணவனே சம்மதித்தது கண்டு
    ஆனந்தம் கொண்டு,

    தங்கையின் அப்பாவிக் கணவன் பொல்லாதவர்களின்
    சூழ்ச்சியால் சிறை செல்வது
    கண்டு கலங்கிக் கொண்டு,

    இரண்டு உயிர்களைப் பழிவாங்க, எண்ணற்ற உயிர்களைச் சுமந்து செல்லும்
    ரயிலுக்கு வெடி வைக்கும்
    தீயவர்களின் சதி முறிக்கும்
    கடமை கொண்டு,

    விரதம் முடித்து மழலைச் செல்வம் தர மனைவி வலியோடு துடித்திருக்க..
    தன்னுயிரைப் பெற்றுத் தரும்
    மனைவியையும் விட்டு விட்டு
    ஏராளமானோரின் இன்னுயிரே
    முக்கியமென்று வேகம் கொண்டு,

    தீமை தடுத்து, தேசம் காக்கும்
    திடம் கொண்டு,

    அழிக்கச் சிதறிய வெடிக்குத்
    தன் தியாகத் திருவுருத்தையே
    சிதைத்துக் கொண்டு...

    நொடிக்கு நொடி மாறும் ஆயிரம் பாவங்களுக்கும்
    உரியதாய் தன் முகத்தை மாற்றிக் கொண்டு,

    இத்தனை அற்புதமாய் எங்கள்
    நடிகர் திலகம் போல் நடிக்க
    யாருண்டு... ரயிலோடு எங்கள்
    கவலைகளையும் ஓட்டும்
    சாரதியாய் வேடங் கொண்டு?

    ( ...தொடரும்... )

  11. Thanks eehaiupehazij, Russellmai, RAGHAVENDRA thanked for this post
  12. #1097
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    From Sudhangan FB

    திருவருட்செல்வர்’ படத்தில், அடுத்த காட்சியாக ஏ.பி. நாகராஜன் நாயன்மார் கதைகளில் தேர்ந்தெடுத்த கதாபாத்திரத்தில்தான் அவருடைய மேன்மைத்தனம் பளிச்சிடும்.
    குழந்தையாக இருந்த போது பார்வதிதேவியிடம் ஞானப்பால் பருகிய குழந்தை, திருஞானசம்பந்தர்!! இவரை திருவிளையாடற்புராணத்தில், ஆளுடைப் பிள்ளையார் என்று அழைக்கப்பட்டார். அதே போல் திருவிளையாடற் புராணத்தில் இன்னொரு முக்கியமானவர், திருநாவுக்கரசர்! இவருடைய இயற்பெயர் மருனீக்கியார்! ஒரு பல்லவ மன்னனால் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளானார்!
    சுண்ணாம்பு கொப்பரையில் போடப்பட்டார்! யானையை விட்டு மிதிக்க சொன்னார்கள்! விஷம் கொடுத்து பார்த்தார்கள்! ஆனால் சிவனின் அருளால் அவர் உயிர் பெற்றார்.
    வயதில் முதிர்ந்த திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் இருவரையும் இணைத்தே காட்சிகளை அமைத்திருந்தார் ஏ.பி. நாகராஜன்!
    இதில் நன்றாக கவனித்தால் ஏ.பி. நாகராஜன் தன் ஆரம்பகால படங்களிலிருந்தே சிவாஜி கணேசன் என்கிற ஒரு சகலகலாவல்லவ நடிகரை நம்பிய தன் திரைவாழ்க்கையை நகர்த்திச் சென்றது தெரியவரும்!
    ஆரம்ப காலத்தில் சிவாஜி நடித்த படம் ‘சம்பூர்ண ராமாயணம்’. இந்த படத்தில் ராமராக நடித்தவர் என்.டி. ராமாராவ்!
    ஆனால் படத்தில் பரதன் வேடத்திற்கு சிவாஜிதான் பொருத்தமானவர் என முடிவு செய்தார் ஏ.பி. நாகராஜன்!
    அந்த படத்திற்கு திரைக்கதை –வசனத்தை நாகராஜன்தான் எழுதியிருந்தார். அதே போல் ‘மக்களைப் பெற்ற மகராசி’ என்கிற சமூகபடத்தில் சிவாஜி கணேசனை கொங்கு தமிழ் பேசி நடிக்க வைத்தவரும் ஏ.பி. நாகராஜன் தான்!
    அதே போல், அவர் புராணப்படங்களுக்கு கதையை யோசிக்கும் போதே சிவாஜியை வைத்துத்தான் ஆரம்பிப்பார்! அந்த சிந்தனையின் உச்சக்கட்டம்தான் ‘திருவருட்செல்வர்’ படம்.
    இதில் திருகுறிப்புத் தொண்டன், சுந்தரமூர்த்தி நாயனார், சேக்கிழார், அப்பர் சுவாமிகள் என்று நான்கு கதாபாத்திரங்கள் சிவாஜிக்கு!
    எல்லா பாத்திரங்களிலும் அவர் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தாலுமே, இந்த திருநாவுக்கரசர் வேடத்தை பார்த்த அந்த நாளில் வியக்காதவர்கள் இல்லை!
    அந்த ஒப்பனையோடு அவரை பார்த்தவர்கள் அவரை திருநாவுக்கரசராக பார்க்கவில்லை.
    காஞ்சி மகா பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளாகவே கண்டார்கள்.
    அந்த ஒப்பனை, அவர் அந்த பாத்திரத்திற்காக எடுத்துக் கொண்ட சிரத்தை, ஒரு வயோதிகர் எப்படி நடப்பார் என்பதற்கு உதாரணம் காட்டிய ஒரு கதாபாத்திரம் அது!
    கமல்ஹாசன் பின்னாளில் பத்து வேடங்கள் ‘தசாவதாரம்’ படத்தில் நடித்தார்.
    கமல் காலத்தில் ஒப்பனைக்கலை நன்றாக வளர்ந்திருந்த காலம்.
    மேலும், வெளிநாட்டிலிருந்து புகழ் பெற்ற ஒப்பனைக் கலைஞர்களை கொண்டு வர முடியும்.
    சிவாஜி அப்பராக நடித்த காலத்தில் அந்த வசதி கிடையாது!
    ‘திருவருட்செல்வர்’ படத்தில் ஒரு சூரியோதய காட்சி– அதுவும் கடற்கரையில் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் அதிகாலையில் நிற்பதாக காட்சி!
    இந்தப் படத்தைப் பற்றி 1986ம் வருடம் நான் ஜூனியர் விகடன் பத்திரிகையில் அவரை எடுத்த பேட்டியில் ஒரு விஷயத்தை குறிப்பிட்டிருந்தார்.
    இந்த திருநாவுக்கரசர் வேடத்திற்கு ஒப்பனை செய்ய 4 மணி நேரமாகுமாம்!
    அப்படியானால், அந்த அதிகாலை காட்சி வருகிறதே?
    ‘ஆமாம், ராத்திரி ஒரு மணிக்கு மேக்கப் போட உட்காருவேன்.
    முழு மேக்கப்போடு அந்த காவி துணியை கட்டிக்கிட்டு கடற்கரையில் சூரியோதயத்திற்கு முன்பாக முதல் ஆளாக இருப்பேன்’ என்றார்.
    சரி, இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தங்களுக்கு உந்துசக்தியாக இருந்தது யார்? ‘காஞ்சி பரமாச்சாரியாள் என்று ஒரு முறை குறிப்பிட்டிருந்தீர்கள்?’
    ‘நான் முன்பே சொல்லியிருக்கிறேன், ஒரு நடிகனுக்கு நிறைய கவனிக்கும் திறமை (observation) வேண்டும் என்று. நான் என்னைச் சுற்றியுள்ள மனிதர்கள் சூழ்நிலை எல்லாவற்றையும் நன்கு கவனிப்பேன். நான் அப்பராக வேடம் போடும் போது ஒரு வயதான சிவனடியாருக்குரிய தோற்றம், நடையுடை பாவனை போன்றவற்றை என் நடிப்பில் காட்ட வேண்டுமல்லவா?
    எனக்கு ‘காஞ்சி பரமாச்சாரியாள்’ மீது மதிப்பும், பக்தியும் உண்டு. அதற்கு ஒரு காரணம் உண்டு. அது ஒரு முக்கியமான சம்பவம். ஒரு நாள், காஞ்சி முனிவர் பரமாச்சாரியாள் கூப்பிட்டு அனுப்பியதாக சங்கர மடத்திலிருந்து ஒரு செய்தி வந்தது. அவர் மைலாப்பூரில் இருந்த ஒரு மடத்தில் தங்கியிருந்தார்.
    நான், எனது தாயார், எனது தந்தையார், எனது மனைவி, நான்கு பேரும் சென்றோம். எங்களை உள்ளே ஓர் அறையில் உட்கார வைத்தார்கள். நாங்கள் ஓர் அரை மணி நேரம் உட்கார்ந்திருந்தோம். காஞ்சி முனிவர் அங்கே மக்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று விளக்கெல்லாம் அணைந்துவிட்டது. அவர் கையில் ஒரு சிறு குத்துவிளக்கை எடுத்துக்கொண்டு, மெதுவாக பார்த்துக்கொண்டே வந்தார். மெல்ல கீழே உட்கார்ந்து, கையை புருவத்தின் மேல் வைத்து எங்களைப் பார்த்தார்.
    ‘நீதானே சிவாஜி கணேசன்?’ என்றார்.
    ‘ஆமாங்கய்யா! நான்தான்’ என்று காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினேன்.
    என் குடும்பத்தினரும் அவரை வணங்கினார்கள்.
    அப்போது அவர் ‘உன்னை பார்த்ததில் எனக்கு மிகுந்த சந்தோஷம். திருப்பதி சென்றிருந்தேன். அங்கு ஒரு யானை எனக்கு மாலை போட்டது. ‘யானை நன்றாக இருக்கிறதே ? யாருடையது?’ என்றேன்.‘சிவாஜி கொடுத்தது’ என்றார்கள்.
    திருச்சி சென்றிருந்தேன்.
    அங்கு திருவானைக்கா கோயிலுக்குப் போனேன்.
    அங்கும் யானை மாலை போட்டது!
    ‘யானை அழகாக இருக்கிறது! யாருடையது?’ என்றேன்.
    ‘சிவாஜி கணேசன் கொடுத்தது’ என்றார்கள்.
    தஞ்சை புன்னை மாரியம்மன் கோயில் சென்றிருந்தேன்.
    அங்கேயும். யானை மாலை போட்டது.
    ‘இது யாருடையது?’ என்றேன்.
    ‘சிவாஜி கணேசன் கொடுத்தது’ என்றார்கள். நாட்டில் பணக்காரர்கள் பல பேர் இருக்கிறார்கள்.
    அவர்கள், பப்ளிசிட்டிக்காக சில சமயம், கோயில்களுக்கு பணம்தான் நன்கொடையாக கொடுப்பார்கள்.
    ஆனால் யானையை கொடுப்பதற்கு பெரிய மனசு வேண்டும். அந்த மனசு உனக்கிருக்கிறது. அதனால் உன்னைப் பெற்றவர்கள் பெரும் பாக்கியசாலிகள். அவர்களுக்காக நான் பகவானை பிரார்த்தனை செய்கிறேன்,
    என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.
    அப்போது என் மனம் எப்படி இருந்திருக்கும்? எத்தனை அனுக்கிரகம்! நினைத்துப் பாருங்கள் (சொல்லும்போதே சிவாஜியின் கண்களில் நீர் முட்டியது.) அந்த கண்ணீரில் நடிப்பில்லை.
    பொதுவாக எனக்கு வாழ்க்கையில் பயமே கிடையாது. காஞ்சி சங்கராச்சாரியார் போன்ற பெரிய முனிவர்களின் ஆசி எனக்கு இருக்கும் போது நான் ஏன் பயப்பட வேண்டும்? இந்தச் சம்பவம் என் மனதில் ஆழமாக பதிந்து போனது. இந்த சந்திப்பைப் பற்றியே நான் பல நாட்கள் யோசித்துக்கொண்டிருந்தேன்.
    இந்த திருநாவுக்கரசர் பாத்திரத்தை என்னை நம்பி இயக்குநர் ஒப்படைத்தது கூட அவர் ஆசிதானோ?

  13. #1098
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பரணி
    சுதாங்கன் அவர்களின் நடிகர் திலகம் பற்றிய தொடர்களுக்கு உளமார்ந்த நன்றி.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  14. Thanks Harrietlgy thanked for this post
  15. #1099
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பரணி சார்
    தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  16. Thanks Harrietlgy thanked for this post
  17. #1100
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஆதவன் ரவி
    உங்களை எப்படிப் பாராட்டுவது என்கிற வித்தையையும் தாங்கள் தான் எங்களுக்குக் கற்றுத் தரவேண்டும்.
    வார்த்தை முட்டுகிறது..
    எனினும் உளமார்ந்த பாராட்டுக்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  18. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •