அடையார் சம்பவம்: பாதிக்கப்பட்ட பெண்ணின் 'ட்வீட்'டும் சூர்யாவின் நெகிழ்ச்சியும்

அடையாறில் உண்மையில் நடைபெற்றது என்ன என்று தனது ட்விட்டர் பக்கத்தில் விவரித்திருக்கிறார் புஷ்பா கிருஷ்ணசாமி. அடையாரில் ஒரு பெண்ணிடம் பிரச்சினை பண்ணிய கால்பந்து வீரர் பிரேம்குமாரை நடிகர் சூர்யா தாக்கினார் என்று சர்ச்சை எழுந்தது. இது குறித்து சூர்யா மீது புகார் அளித்த பிரேம்குமார், அடுத்த நாளே அப்புகார் வாபஸ் பெற்றார். உண்மையில் சம்பவ இடத்தில் என்ன நடந்தது என்பது தெரியாமலே இருந்தது.

இப்பிரச்சினையில் குறிப்பிடப்பட்ட பெண்ணின் பெயர் புஷ்பா கிருஷ்ணசாமி. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யாவின் ட்விட்டர் பக்கத்தை குறிப்பிட்டு தன்னை காப்பாற்றியதற்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் "என்னை திட்டிக் கொண்டும், பயமுறுத்தியவாறும் இருந்த இரண்டு இளைஞர்களிடம் இருந்து என்னை காப்பாற்றியதற்கு மிக்க நன்றி. அவர்கள் இருவரும் என்னுடைய கார் கண்ணாடியை உடைத்துவிடுவோம் என்று மிரட்டி, காருக்குள் ஏறவிடாமல் என்னைத் தடுத்தனர்.

என்னிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்தனர். பயமுறுத்திய இரு இளைஞர்களுக்கும், வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்துக்கும் மத்தியில் நான் தனியாக நின்றுகொண்டிருந்தேன். அவர்கள் யாருக்கோ போன் செய்து, எனக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் சொன்னார்கள். அந்த நேரத்தில் உங்களின் வண்டியை நிறுத்தினீர்கள். அவர்களிடம் பெண்ணைத் தொடக்கூடாது என்று அறிவுரை கூறினீர்கள். உங்களின் தலையீடு சரியான நேரத்துக்கு கிடைத்தது" என்று தெரிவித்திருக்கிறார் புஷ்பா.

அதற்கு சூர்யா "நடந்த நாடகத்துக்கு நடுவில், உண்மை செய்தியை வெளியிட்ட உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன். நன்றிகள். டேக் கேர், அனைவருக்கும் நன்றி" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.